Saturday 14 December 2013

நெல்லை, வீ.கே.புதூர்-தென்காசிக்கு நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2013,01:59 IST

வீரகேரளம்புதூர்: நெல்லையிலிருந்து வீரகேரளம்புதூர், சுரண்டை, ஆய்க்குடி வழியாக தென்காசிக்கு இயக்கப்பட்ட அதிகாலை நேர பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
நெல்லை அரசுப் போக்குவரத்துக் கழக தாமிரபரணி பணிமனையிலிருந்து வீரகேரளம்புதூர், சுரண்டை வழியாக தென்காசிக்கு எஸ்.எப்.எஸ்., பஸ் கடந்த நான்கு ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. வீரகேரளம்புதூர் வழியாக இயக்கப்பட்ட முதல் எஸ்.எப்.எஸ்., என்ற பெயரைப் பெற்று பொதுமக்களின் வரவேற்பையும் பெற்றிருந்த இந்த பஸ் அதிகாலை 5.10 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு வந்தது.இதனால் கோவையில் இருந்தும், சென்னையிலிருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் வீரகேரளம்புதூர் தாலுகாவைச் சேர்ந்த பயணிகள் பெரும் பயனடைந்து வந்தனர். ஆனால் கடந்த இரண்டு வார காலமாக இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அதிகாலை நேர பஸ் இல்லாமல் முதியோர்கள், பெண்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதற்கு அடுத்ததாக இயக்கப்படும் பஸ் சரியான நேரத்திற்கு வரவில்லை எனில் சுமார் ஒன்னரை மணி நேரம் பஸ் ஸ்டாண்டில் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து, நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டுமென வீரகேரளம்புதூர் தாலுகா பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Saturday 7 December 2013

போகர்

அகஸ்திய முனிவர் போக சித்தரை சீன தேசத்தவர் என்று கூறுகிறார். புலிப்பாணியின் குரு என்றும் இவருடைய தாய் தந்தையர் சீனாவில் பெண்களுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தனர் என்றும் அகத்தியர் கூறுகிறார்.
போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய வரலாறு பேசப்படுகிறது.

போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார்.
அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.

1. போகர் – 12,000
2. சப்த காண்டம் – 7000
3. போகர் நிகண்டு – 1700
4. போகர் வைத்தியம் – 1000
5. போகர் சரக்கு வைப்பு – 800
6. போகர் ஜெனன சாகரம் – 550
7. போகர் கற்பம் – 360
8. போகர் உபதேசம் – 150
9. போகர் இரண விகடம் – 100
10. போகர் ஞானசாராம்சம் – 100
11. போகர் கற்ப சூத்திரம் – 54
12. போகர் வைத்திய சூத்திரம் – 77
13. போகர் மூப்பு சூத்திரம் – 51
14. போகர் ஞான சூத்திரம் – 37
15. போகர் அட்டாங்க யோகம் – 24
16. போகர் பூஜாவிதி – 20

இவைகளில் போகர் 12000 மற்றும் இரண வாகடம் நூல்கள் கிடைக்கவில்லை. போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர்.

இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் தந்தனர். போகரும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார்.

“தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு அவர்களை நீண்ட காலம் வாழவை. மரணமடைந்தவர்களுக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாதே” என்று அறிவுரை கூறினர். அதுவரையில் போகர் அறிந்திராத காய கல்ப முறைகளையும் கற்றுக் கொடுத்து மறைந்தனர்.

போகர் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு புற்றிலிருந்து ஒளிக் கற்றை ஒன்று புலப்பட்டது. அந்த ஒளியை தொடர்ந்து புற்றின் முன் போய் நின்றார். யாரோ ஒரு சித்தர் இந்தப் புற்றின் உள்ளே தம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போகர், அந்தப் புற்றை வலம் வந்து அதன் அருகிலேயே ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் ஆனது, போகரின் தியானத்தால் புற்றில் இருந்த சித்தரின் தியானம் கலைந்தது. உடனே அவர் புற்றை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.

போகர், “தங்களை தரிசித்ததில் வாழ்வின் பெரும்பயனை அடைந்தேன்” என்று கூறினார். சித்தர் அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி “போகா! அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காது, முடி நரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.

சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார். அந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரில் தோன்றவே “போகா! இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கி விட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், போகருக்கு உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும் விட்டது.

பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு உணவு சமைத்து உண்ட பின் நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார்.

“யார் நீ! அப்பாலே போ! அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது” என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொட்ங்கியது.

அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். “ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டனர்.

போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார்.

போகர் தவம் செய்து முடித்த இரச மணிக் குளிகைகளின் ஆற்றல் கண்டு மிகவும் வியப்படைந்தார். அதே போல குளிகைகளைச் செய்து மற்ற சித்தர்களுக்கும் அளிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.

அதற்காக ரோமாபுரி சென்று மிகத் தூய்மையான ஆதி ரசம் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார். உடனே குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரியில் தோண்றி அங்கு இருந்த இரசக் கிணற்றைத் தேடிப் பிடித்தார். இரசத்தை சுரைக் குடுவையில் நிரப்பிக் கொண்டு விண்ணில் தாவினார்.

அதன்பிறகு ஆதிரசத்துடன் விண்மார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.

தஞ்சையில் பிரகதீசுவரர் ஆலய லிங்கப் பிரதிஷ்டைக்காக காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பினார். கருவூரானும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார்.

போகர், தட்சிணா மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணவர்களுக்கு உபதேசித்தார். மற்ற சித்தர்கள், “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது குற்றம்” என்று கூறி இத்தகைய செயலை அவர் உடனே நிறுத்தியாக வேண்டும்” என்று தட்சிணாமூர்த்தியிடம் முறையிட்டனர்.

தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். “போகரே! நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்தீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுது அரசனாக்கினீர், மேருமலைக்குச் சென்று தாதுக்களைக் கொண்டு வந்தீர், ரோமபுரி சென்று ஆதிரசம் கொண்டு வந்தீர், இதையெல்லாம் விட நாம் உமாதேவிக்கு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீராமே! நீர் செய்த நூலைச் சொல்வீராக” எனக் கேட்டு போகரின் நூலாழத்தினையும் பொருட்சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்து வாழ்த்தினார்.

போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர்முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம், முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார்.

போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது.

இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே
இமயமலையில் தவம் செய்த முனிவர்களுக்கும், சித்தர்களுக்கும் அவர் தங்கம் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுத்தார். பொருள் என்பது தக்கவர்களிடம் இருக்க வேண்டும். முனிவர்களுக்கு அதிகப் பொருள் தேவையில்லை. பொருளை வெறுக்கும் அவர்கள், நிச்சயமாக உலக மக்களின் நன்மைக்கே அதைச் செலவிடுவார்கள் என்பதால் போகர் இந்த ஏற்பாட்டைச் செய்தார்.இமயமலையில் அவர் தங்கியிருந்த போது பல மாணவர்கள் அவரைச் சந்தித்தனர். அவரது திறமையை அறிந்த அந்த மாணவர்கள் போகரின் சீடர்கள் ஆயினர். அவர்களில் புலிப்பாணி, கருவூரார், சட்டைமுனி, இடைக்காடர் உள்ளிட்ட 63 பேர் இருந்தனர்.

மனிதர்களை ஒரே ஒரு ஆணவ குணம் இன்று வரை வாட்டி வதைக்கிறது. அதாவது, தனக்கு தெரிந்த நல்ல விஷயங்களை பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. இந்த போக்கை போகர் அறவே வெறுத்தார். தனக்கு தெரிந்த நல்ல சித்து வேலைகளை தன் சீடர்கள் 63 பேருக்கும் சொல்லிக் கொடுத்து, பாரததேசத்திலுள்ள மக்கள் அனைவரும் அதனால் பயன்படும் ஏற்பாட்டைச் செய்தார். வானில் பறப்பது, நீரில் மிதப்பது, காயகல்பம் எனப்படும் உடலை நீண்ட நாள் ஆரோக்கியமாக வைத்திருக்கும் மருந்துகளைத் தயாரிப்பது உள்ளிட்ட பல விஷயங்களை சீடர்களுக்கு கற்றுத் தந்திருந்தார்.
அவர்களுக்கு தேர்வும் வைத்தார். தேர்வில் அனைவரும் வெற்றி பெற்றனர்.பின்னர், அந்த சீடர்கள் தேசத்தின் பல திசைகளுக்கும் சென்றனர். தங்கள் சித்துவேலைகளை மக்களிடம் கற்றுக் கொடுக்க முயன்றனர். அறியாமையில் தவித்த மக்களோ, அவற்றை அவர்களிடம் கற்றுக் கொள்ள முன்வரவில்லை. இதையறிந்த போகர் வருத்தப் பட்டார்.இருந்தாலும், அவர் மனம் தளரவில்லை.

இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரத்தை மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலம், அவர்கள் சித்து வித்தைகளை கற்று நன்மை பெற வேண்டும் என உறுதியெடுத்தார். இமயமலையில் பல மூத்த சித்தர்களையும் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவித்த போது, இந்தக் கதையின் துவக்கத்தில் எழுதப்பட்டுள்ள உரையாடல் சித்தர்களுக்கும், போகருக்கும் இடையே நிகழ்ந்தது. சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுத்தர மூத்த சித்தர்கள் மறுத்துவிட்டதால், உலக மக்களின் சாவுப்பிணியை தீர்க்க முடியாமல் போனது குறித்து போகர் வருந்தினார். மக்களைக் காப்பாற்ற முடியாத நான்உலகில் வாழ்ந்து பயனில்லை. நான் சாகப்போகிறேன் எனச் சொல்லி தரையில் புரண்டு அழுதார்.மற்ற சித்தர்கள் அவரைத் தேற்றினர்.போகா, நீ எடுத்த முடிவு சரியல்ல. நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதற்காக, உயிரை விட்டால், உலகில் யாருமே மிஞ்சமாட்டார்கள். நினைப்பது எதுவும் நடப்பதில்லை. மரணம் என்பது உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் வகுத்த நியதி.

இறைநியதியை மீறுவது நல்லதல்ல. மேலும், நீ அவரது கோபத்திற்கு ஆளாவாய். உன் தற் கொலை எண்ணத்தை மாற்றிக் கொள். நீ காயகல்பம் உள்ளிட்ட மருத்துவ முறைகளைக் கற்றவன். அதைக் கொண்டு, மக்களுக்கு தீர்க்காயுள் தர முயற்சிக்கலாமே தவிர, நிரந்தர வாழ்வு தரும் எண்ணத்தை விட்டு விடு. நடக்காததைப் பற்றி சிந்திக்காதவனே ஞானி, என்று அறிவுரை கூறினர்.போகர் அரை மனதுடன் அங்கிருந்து கிளம்பி மேருமலைக்குச் சென்றார். அங்கே காலங்கிசித்தரின் சமாதி இருந்தது. அதை வணங்கியபோது, அவர் முன்னால் பல சித்தர்கள் தோன்றினர்.

போகரே! நாங்கள் காலங்கி சித்தரின் சீடர்கள். ராமன், பாண்டவர்கள், திருதராஷ்டிரன், அரிச்சந்திரன், ராவணன் போன்றவர்களெல்லாம் இப்போது நாங்கள் தங்கியிருக் கும் இடத்திற்கு வந்து, தாங்கள் படித்த வித்தைகளை சோதித்து பார்த்தனர். அந்தக்காலம் முதலே இங்கு தங்கியிருக்கிறோம். உனக்கு என்ன வேண்டும்? என்றனர்.


உலகத்தில் பிறந்த எவரும் இறக்காத சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொள்வதே தனது நோக்கம் என்பதை போகர் அவர்களிடம் பணிவுடனும், கருணை பொங்கவும் கேட்டார். அந்த சித்தர்கள் போகரிடம், மகனே! இதோ, அங்கே பார் என ஓரிடத்தைச்சுட்டிக்காட்டினர். போகர் வியந்தார். அங்கே ஏராளமான நவரத்தினங்கள் மலை போல் குவிந்து கிடந்தன. இன்னொரு இடத்தை அவருக்கு காட்டினர். அங்கே தங்கம் குவிந்து கிடந்தது. எங்கும் பிரகாச மயம்! போகரின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அந்நேரத்திலும் மக்களைப் பற்றிய சிந்தனையே அவர் உள்ளத்தில் எழுந்தது. சாதாரண மனிதனாக இருந்தால் என்ன செய்திருப்பான்? இது அத்தனையையும் வெட்டியெடுத்து, உலகின் முதல் பணக்காரன் என்ற அந்தஸ்தைப் பெற்று, பெருமையடிக்கலாம் என்ற எண்ணம் கொண்டிருப்பான்.

போகரோ, அந்த சித்தர்களிடம், சித்தர்களே! இது இங்கே வீணாகக் கிடக்கிறதே. உலக மக்கள் அனைவருக்கும் இதை அள்ளிக்கொடுத்தாலும் கூட, மிஞ்சும் போல தெரிகிறதே. எல்லோரும் வளமுடன் வாழ்வார்களே! இது இங்கிருந்தும் மக்களுக்கு கொடுக்காமல் வீணடிக்கிறீர்களே! என்றார். சித்தர்கள் வேதனையுடன் சிரித்தனர். போகா! எதற்காக இந்த மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறாய்? நம்மைப் போன்ற ஆன்மிக சிந்தனையுள்ளவர்களை அவர்கள் மதிப்பதும் இல்லை; இறையருளை நாடுவதுமில்லை. நிஜமான இன்பத்தை பற்றி நாம் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் புரிவதில்லை. அந்த நன்றிகெட்ட ஜனங்களுக்கு இதெல்லாம் போய் சேர வேண்டும் என எண்ணுகிறாயே! அவர்கள் இந்த செல்வத்தை அனுபவிக்க தகுதியில்லாதவர்கள், என சொல்லிவிட்டு, போகரின் பதிலுக்கு காத்திராமல் மறைந்தனர்.

ஐயையோ! இந்த சித்தர்கள் திடீரென மறைந்து விட்டார்களே! இந்த செல்வத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவசரத்தில், அவர்களை நிரந்தரமாக வாழ வழி செய்யும் மந்திரம் பற்றி பேச மறந்து விட்டேனே! இந்த செல்வம் தான் மனங்களை எப்படி மாற்றி விடுகிறது! கொண்ட கடமையையே மறக்கச் செய்து விடுகிறதே, என வருந்திய போகரை நோக்கி ஏதோ ஒரு ஒளி பாய்ந்தது. அது அவரது கண்களை கூசச் செய்தது.
போகர் தன் கைகளை மடக்கி, கண்களை மறைத்தபடியே, ஒளி வந்த திசையை நோக்கினார். ஆள் அளவு உயரமுள்ள ஒரு புற்றில் இருந்து அந்த ஒளி பாய்ந்து வந்தது. அந்த புற்றை நோக்கி நடந்தார் போகர். புற்றுக்குள்ளிருந்து மூச்சு வந்தது. இது பாம்புகளின் மூச்சு போல இல்லையே! யாரோ ஒருவர் புற்றுக்குள் அமர்ந்திருக்கிறார் போல் தெரிகிறதே, என கணித்த அவர், உள்ளிருப்பவர் மகா தபஸ்வியாகத்தான் இருக்க வேண்டும். இவர் மூலமாக சஞ்சீவினி மந்திரத்தை கற்று விடலாம் என்ற ஆர்வத்தில், அவர் வெளியே வரும் வரை காத்திருப்பது என முடிவு செய்து, உள்ளிருக்கும் முனிவரை மனதில் எண்ணி தவம் செய்யத் தொடங்கி விட்டார்.இவரது தவத்தின் வெப்பம் உள்ளிருந்த முனிவரைத் தாக்கியது. அவர் புற்றில் இருந்து வெளியே வந்தார்.


அந்த முனிவர் கடந்த காலத்தில் நிகழ்ந்ததையும், எதிர்காலத்தில் நிகழப்போவதையும் அறிந்த மகாஞானி. அவர் தவமிருந்த போகரை எழுப்பி, போகரே! என ஆரம்பித்ததும், சுவாமி! என் பெயர் தங்களுக்கு எப்படி தெரியும்? என வியப்புடன் கேட்டார். எல்லாம் அறிந்த அந்த சித்தர் சிரித்துக் கொண்டார். போகரே! தவ சித்தர்கள் அனைவருக்கும் ஒருவரை அடையாளம் கண்டுபிடிப்பது கடினமல்ல, என்ற சித்தரிடம், சித்தரே! தாங்கள் எவ்வளவு காலமாக இங்கே தவம் செய்கிறீர்கள்? என்றார் போகர். இப்போது எந்த ஆண்டு நடக்கிறது? என சித்தர் கேட்கவே, சித்தரே! இது கலியுகம் துவங்கி சில ஆண்டுகள் ஆகிறது, என்றதும், ஆஹா...காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது.


நான் துவாபராயுகத்தின் துவக்கத்தில் இருந்து இங்கே தவமிருக்கிறேன். ஒரு யுகமே முடிந்து விட்டதா? என்ற சித்தர், போகனே! உன் குறிக்கோளையும் நான் அறிவேன். முதலில், அதோ தெரிகிறதே! அந்த மரத்திலுள்ள பழத்தை சாப்பிட்டு பசியாறு. பிறகு பேசலாம், என்று சித்தர் சொன்னதும், போகர் அந்த மரத்தை நோக்கி நடந்தார். அதிலுள்ள கனியைப் பறித்து சாப்பிட்டதும், எங்கோ மிதப்பது போல் இருந்தது. தன்னை மறந்த நிலையில் ஓரிடத்தில் அமர்ந்து விட்டார். புற்றில் இருந்து வந்த சித்தர், அவரிடம் ஒரு மூலிகை பொம்மையைக் கொடுத்து, போகா! இந்த பதுமை உன் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும், என சொல்லிவிட்டு, மீண்டும் புற்றுக்குள் போய் விட்டார்.

போகர் அந்த பதுமையிடம், இறப்புக்குப் பின் உயிர் வாழும் வித்தை பற்றி கேட்டார். அந்தப் பொம்மையோ, பிறந்தது முதல் இறக்கும் வரை உள்ள விஷயங் களை பேசியதே அன்றி, அந்த வித்தையும், அதற்குரிய மூலிகைகளும் தனக்குத் தெரிந்தாலும், உலக நியதிப்படி அதைச் சொல்லித் தர முடியாது எனச் சொல்லி மறைந்து விட்டது.எவ்வளவு முயன்றாலும், இந்த ஒரு விஷயம் மட்டும் நடக்க மறுக்கிறதே என கலங்கிய போகசித்தர், தன் முயற்சியை விட்டாரில்லை. முயற்சி உடையவனுக்கு அவன் முயலுவது கிடைக்காமல் போனதில்லை. சித்தருக்கும் அந்த நல்ல நாள் வந்தது.அவர் ஒருமுறை, மேருமலை உச்சியில் ஏறினார். அந்த மலையில் சித்தர்கள் பலர் வசித்து, பல்வேறு மூலிகைகளைப் பயன்படுத்தியதன் விளைவாக தங்கப் பாறைகள் நிறைந்ததாக இருந்தது. ஓரிடத்தில், தங்கத்தின் ஒளி கண்ணைப் பறிக்கவே, அதன் பிரகாசம் தாங்க முடியாமல், போகர் தடுமாறி கீழே விழுந்தார். அவரை சில சித்தர்கள் தாங்கிப் பிடித்தனர்.


போகனே! நாங்கள் நான்கு யுகங்களாக இங்கே வசிப்பவர்கள். உலகை வாழ வைக்க வேண்டுமென்ற உன் விடாமுயற்சியைப் பாராட்டுகிறோம். வா எங்களுடன்!இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மூலிகை இந்த மலையிலுள்ள ஒரு குகைக்குள் இருக்கிறது. அதை உனக்கு காட்டுகிறோம். சஞ்சீவினி மந்திரத்தையும் போதிக்கிறோம், என்றதும், போகரின் கண்கள் மகிழ்ச்சியால் விரிந்தன. குகைக்குள் சென்றதும், பச்சை பசேலென பல மூலிகைச் செடிகள் காணப்பட்டன. அவற்றில் யாரும் கை வைக்காததாலும், தூசு பட வழியே இல்லாததாலும், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் தெய்வத்தன்மை வாய்ந்ததாலும் பளபளவென மின்னின.

போகரை அழைத்துச் சென்ற மற்ற சித்தர்கள் அந்த மூலிகைகளின் தன்மை, அதைப் பயன்படுத்தும் முறை ஆகியவற்றை பற்றி விளக்கமாக எடுத்துச்சொன்னார்கள். பிறந்த பலனை அடைந்த மகிழ்ச்சியில் போகரின் நெஞ்சு ஆனந்தத்தால் விம்மியது. உணர்ச்சிக்கடலாக மாறிப்போன அவர், தனக்கு தகவல் தந்த சித்தர்களின் பாதங்களில் பணிந்து வணங்கி, இனி, இவற்றைக் கொண்டு உலகில் இறப்பில்லாமல் செய்வேன் எனச் சொல்லி அவர்களிடம் விடை பெற்றார். மனிதனுக்கு கிடைக்காத ஒன்று கிடைத்து விட்டால், அவன் ஆனந்தக் கூத்தாடுகிறான். ஆட்டம் பாட்டம் கும்மாளம் தான். போகரைப் போன்ற சித்தர்கள் கூட, இதற்கு விதிவிலக்கல்ல போலும்! மிதமிஞ்சிய கவலையும் ஆபத்து, மிதமிஞ்சிய மகிழ்ச்சியும் ஆபத்தான விஷயம் தான்! எதற்கும் ஒரு அளவு வேண்டும்.

போகர், தனக்கு கிடைக்காத ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் குகையை விட்டு வெளியே வந்து துள்ளித் துள்ளி குதித்தார். ஆட்டம் என்றால் அப்படி ஒரு ஆட்டம்! அவர் ஆடிய ஆட்டத்தில் பூமியே அதிர்ந்தது. அப்போது, அப்பகுதியில் தவமிருந்த கண்ணுக்குத் தெரியாத சித்தர்கள் பலர் அவர் முன்பு தோன்றினர். போகா! என்ன இது! மகிழ்ச்சியின் போது தான் மனிதன் அடக்கத்துடன் இருக்க வேண்டும். உன் நடனத்தால், கலையாத எங்கள் தவத்தைக் கலைத்து விட்டாய். பல யுகங்களாக நாங்கள் செய்த தவம் வீணாகிப் போய் விட்டது. இதற்கு கடும் தண்டனையை உனக்கு அளிக்கப் போகிறோம். ஒருவர் செய்த வினையின் பலனை அனுபவித்தே தீர வேண்டும்.

எங்கள் நீண்ட கால தவம் எப்படி பயனற்றுப் போனதோ, அதே போல நீ இங்கே பார்த்த சஞ்சீவினி மூலிகைகளை பயன்படுத்தி உயிர்களைக் காக்க நினைத்த உங்கள் நீண்ட நாள் முயற்சி பயனற்றுப் போவதாக! இந்த மூலிகைகளை நீ பறித்துச் சென்றாலும், நீ அதைப் பயன்படுத்தும் போது அதற்குரிய மந்திரம் உனக்கு மறந்து போகும் என சாபமிட்டனர். போகர் அலறித்துடித்தார்.
சித்தர் பெருமக்களே! செய்தற்கரிய தவறு செய்து உங்களின் சாபத்தை அடைந்தேனே! வேண்டாம்.... வேண்டாம்... இந்த உலகைக் காக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதல்லவா! நமக்குள் நடந்த இந்த விவாகரத்துக்காக உலகத்தை பழி தீர்த்து விடாதீர்கள். மன்னியுங்கள், மன்னியுங்கள், என கண்களை மூடிக்கொண்டு கதறினார்.

அவரது கதறலைக் கேட்க அங்கே சித்தர்கள் இருந்தால் தானே! அவர்கள் காற்றில் கரைந்தது போல மறைந்து விட்டனர். ஐயோ! என் வாழ்க்கை லட்சியம் அழிந்ததே! இனி இந்த மக்கள் மரணத்தின் பிடியில் இருந்து எப்படி மீள முடியும்? இறைவா! என்னை சோதித்து விட்டாயே, என புலம்பியவர், வேறு வழியின்றி அப்படியே மயங்கி சாய்ந்து விட்டார். எதுவும் காரணத்துடனேயே நடக்கிறது. வந்தவரெல்லாம் தங்கி விட்டால், இந்த உலகம் தாங்காது. உலகத்திற்கு வருபவர்களெல்லாம் பிழைத்திருக்க வேண்டுமானால், அவர்களை வழி நடத்துவது யார்?

இயற்கைக்கு இறைவன் விதித்திருக்கும் கட்டளைகளில் மிக முக்கியமானது மரணம். அதை இயற்கை எப்படி மீறும்? அதனால் தான், இறைவன் இப்படி ஒரு லீலையை சித்தர்கள் மூலமாக நிகழ்த்தியிருக்கிறான். அப்படியானால், அவன் ஏன் சஞ்சீவினி போன்ற மூலிகைகளைப் படைத்திருக்க வேண்டும் என்றால், அது தான் தெய்வ ரகசியம். தெய்வத்தின் சூட்சுமங்கள் முழுவதுமாக நமக்கு புரிந்து விட்டால், அதெப்படி தெய்வமாக இருக்க முடியும்? மயங்கிக் கிடந்த போகரை நோக்கி ஒரு பறவை வந்தது. அந்தப் பறவையை கண்டப் பேரண்டம் என்பார்கள். அது, குகைக்குள் சென்று ஒரு மூலிகையைப் பறித்து வந்து போகரின் மூக்கருகே நீட்டியது. போகர் மயக்கம் தீர்ந்து எழுந்தார்.

போகரே! நடந்ததை நினைத்து வருத்தப்படக்கூடாது. இங்கே லட்சக்கணக்கான சித்தர்கள் தங்களை மறந்த நிலையில் தவமிருந்து வருகின்றனர். உன் நடமாட்டம் அவர்களை விழிக்கச் செய்து விடும். இப்போது கற்ற வித்தைகளே போதும்! இதைக் கொண்டே நீ உலகிலுள்ளோரின் ஆயுளை விருத்தி செய்து, தீர்க்காயுளுடன் வாழ வழி செய்யலாம். இங்கிருக்கும் மற்ற சித்தர்களையும் விழிக்கச் செய்து, இருப்பதையும் இழந்து விடாதே. இருப்பதைக் கொண்டு திருப்தியடைபவனே புத்திமான், என அறிவுரை கூறியது. போகரும் அங்கிருந்து கிளம்பி ஆகாயமார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார். தியானத்தில் ஆழ்ந்த அவருக்கு அன்னை உமையவள் காட்சி தந்தாள்.போகா! வருந்தாதே! உலகை அழிப்பதும், காப்பதும் எனது பணி. நீ இங்கிருந்து பழநிமலைக்குச் செல். அங்கே என் மகன் முருகனை வழிபடு, என்று கூறி மறைந்தாள். அன்னையின் கட்டளையை ஏற்று போகர் பழநிக்கு வந்தார். கடும் தவமிருந்தார். அவர் முன்னால் முருகப்பெருமான் கோவணத்துடன், தண்டாயுதபாணியாகக் காட்சி தந்தார். போகரே! நீர் நவபாஷாணத்தால் எனக்கு சிலை வடிக்க வேண்டும்.

நான் சொல்லும் வழி முறைகளின் படி வழிபாட்டுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும், எனக்கூறி அதுபற்றி தெளிவாகச் சொன்னார். போகரும் மனம் மகிழ்ந்து நவபாஷாணத்தால் சிலை வடித்தார். முருகப்பெருமான் அருளியபடியே அதை பிரதிஷ்டை செய்து அபிஷேகமும் பூஜையும் செய்து வந்தார். அந்த அபிஷேகப் பிரசாதத்தைப் பெற்றவர்கள், நோய்கள் நீங்கி, சுகவாழ்வு பெற்று, தீர்க் காயுளுடன் வாழ்ந்தனர். இதனால் தான் இன்றைக்கும் பழநிமலைக்கு மக்கள் ஏராளமாக வருகின்றனர். தமிழகத்திலேயே அதிக வருமானம் உள்ள கோயிலாகவும் இது விளங்குகிறது. போகர், நாமக்கல் அருகிலுள்ள திருச்செங்கோடு சென்றார். அங்கிருக்கும் அர்த்தநாரீஸ்வரரையும் நவபாஷாணத்தில் வடித்தாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

அண்டை நாடான சீன தேசமும், நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது.

அங்கே, 'போ யாங்' என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள், கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து, சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு.

சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம்,
புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பல சுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக்கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் 'ரஜோலி' என்னும் யோக முறையும் ஒன்று.

போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும்போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டு இந்தியா திரும்பினார் என்றும் சொல்வர்.

அதன்பின் குருவுக்கே அவரிடம் கற்றதை உபதேசித்து, அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தார். ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து, முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதால்,புலிப்பாணி, போகரின் தண்டத்திற்கு உபதேசிப்பது போல போகருக்கு உபதேசித்து போகரை மீண்டும் நிலை நிறுத்தினார். அதன்பின், போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார். கொங்கணர், இடைக்காடர், கமலமுனி, மச்சமுனிவர், நந்தீசர் ஆகிய சித்தர்களும் இவரது சீடர்களாக இருந்தவர்களே! சீனாவில் இருந்து திரும்பி, பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகிவிட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் 'நவநாயகர்' என்றும் கூறலாம்.

Sunday 1 December 2013

வீரகேரளம்புதூர் சவேரியார் ஆலய திருவிழா துவக்கம்

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.பாளை. மறைமாவட்டத்தில் பிரசித்திபெற்ற வீரகேரளம்புதூர் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குத்தந்தை வர்க்கீஸ் திருப்பலி நிறைவேற்றி, கொடியேற்றினார். அருட்தந்தைகள் மைக்கேல் ராஜ், வியாகப்பராஜ் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஊர்த்தலைவர் சேசுராஜன் தலைமையில் இறைமக்கள் பங்குத்தந்தைக்கு முதல் மரியாதை அளித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.கொடியேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து தினமும் மாலையில் திருப்பலி, மறையுரை வழங்கப்படுகிறது.இன்று (28ம் தேதி) புதுவாழ்வு தியாகனக்குழுவினரின் தியானமும், 30ம் தேதி இரவு ஆர்.சி.துவக்கப்பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் வீரை இளையோர் மற்றும் அன்பியங்கள் இணைந்து வழங்கும் கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.வரும் டிசம்பர் 1ம் தேதி மாலை 6 மணிக்கு நற்கருணை பவனி நடைபெறுகிறது. 2ம் தேதி இரவு 9 மணிக்கு புனிதரின் திருவுருவ தேர்ப்பவனி நடக்கிறது. 3ம் தேதி காலை 8 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலியும், புதுநன்மை விழாவும் நடைபெறுகிறது.ஏற்பாடுகளை தலைவர் சேசுராஜன் தலைமையில் செயலாளர் மரியசுந்தரம், பொருளாளர் அருளானந்தம், உறுப்பினர்கள் சேசு, ஆரோக்கியராஜ், மிக்கேல், ஞானசாமி, ராயப்பன் மற்றும் அருட்சகோதரிகள், இறைமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.