Pages

Thursday, 29 August 2013

வீரகேரளம்புதூர் ஸ்ரீ உச்சி மாகாளி அம்மன் கோவில் கொடை விழா

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2013,06:37 IST

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் ஸ்ரீ உச்சி மாகாளி அம்மன் கோவில் கொடை விழா நடந்தது.

வீரகேரளம்புதூர் சேனைத் தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 2ம் தேதி காலை 8 மணிக்கு கால் நாட்டு விழாவுடன் துவங்கியது. அன்று இரவு 8 மணிக்கு கும்மிப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. 23ம் தேதி மாலை 5 மணிக்கு திருவிளக்கு வழிபாட்டுக்குழு தேதி மாலை 5 மணிக்கு திருவிளக்கு வழிபாட்டுக்குழு மற்றும் விவேகானந்தா நற்பணி மன்றத்தில் சார்பில் 508 திருவிளக்கு பூஜை நடந்தது. இரவில் கும்மிப்பாட்டு மற்றும் கோலாட்டம் நிகழ்ச்சி நடந்தது. 24ம் தேதி மாலை 6 மணிக்கு அம்மனுக்கு வருஷாபிஷேகம் நடந்தது. நண்பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற வீரகேரளம்புதூர் சேனைத் தலைவர் சமுதாய மாணவ, மாணவியருக்கு பாராட்டும், பரிசும் வழங்கப்பட்டது. இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முழுக்காப்பு சாத்தி தீபாராதனை நடந்தது.

28ம் தேதி காலை 9 மணிக்கு சமுதாய மண்டபத்திலிருந்து பால்குடம், கன்னியாகுமரி தீர்த்தம் எடுத்து ஊர்பவனி வரும் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பால், தீர்த்த அபிசேகங்களுடன் தீப ஆராதனையும், சிறப்புப் பூஜைகளும் நடந்தன. இரவு 9 மணிக்கு பக்தர்கள் விரதமிருந்து அக்னி சட்டி ஏந்தி ஊர்பவனி வந்து காணிக்கை செலுத்தினர். இரவு 12 மணிக்கு அம்மன் சிங்க வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார். தொடர்ந்து கிடாய் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

மறுநாள் காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டும், முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்கள் முளைப்பாரியும் ஊர்வலம் வந்து அதனை ஆற்றில் கரைத்தனர். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரங்களும், ஆராதனையும், பூஜைகளும் நடந்தன. விழா ஏற்பாடுகளை வீ.கே.புதூர் சேனைத் தலைவர் சமுதாயத்தினர் செய்தனர்.

Saturday, 17 August 2013

பேராசிரியர்.முனைவர்.இரா.மாதவன்

சுவடிகள் ஆய்வுகள் பற்றி இவர் வழங்கிய பல தகவல்கள் இப்பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.  ஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்.முனைவர்.இரா.மாதவன் சுவடிகள் ஆய்வுகள் பற்றி பல தகவல்கள்.


பாகம் 01 - தஞ்சை தமிழ் பல்கலைக்கழக சுவடிப்புலம் - அறிமுகம், நோக்கம், நடவடிக்கைகள், நடைபெற்று வரும் ஆய்வுகள், துறை பேராசிரியர்கள் பற்றிய விவரங்கள்.

பாகம் 02 - பதிப்பிக்கப்பட்ட நூல்கள், துறை அறிஞர்களுக்கான தகுதிகள், ஓலைகள் பதிப்புக்கும் முறைகள்

பாகம் 03 - ஓலைசுவடி அச்சிடும் முறை, அச்சுப் பதிப்பில் வந்த ஆரம்பகால நூல்கள், பதிப்பாசிரியர்கள்

பாகம் 04 - மின்பதிப்பாக்கம் ஏன் தேவை, ஓலைச்சுவடிகளை ஏன் பாதுகாக்க வேண்டும், தமிழின் தொன்மை

பாகம் 05 - மொழிகளின் தொன்மை, தமிழின் தொன்மை, ஓலைச்சுவடிகள் எப்படி படி எடுத்து பாதுகாக்கப்பட்டன, ஓலையில் எழுதும் முறை, எழுத்துக்கள், சுவடி எழுத்துப் பயிற்சி

பாகம் 06 - சுவடியில் எழுத்துக்கள், சுவடி எழுத்துக் கலை

பாகம் 07 - சுவடியில் உள்ள விஷயங்கள், சித்த மருத்துவ சுவடிகள், மருத்துவ முறை விளக்கம் சொல்லும் சுவடிகள், சுவடிகளில் கண் மருத்துவம்

பாகம் 08 - ஓலைச் சுவடிகளின் அழிவுக்கு எது காரணம்?, எப்படி சுவடிகளை பாதுகாப்பது?

பதிப்பித்துள்ள நூல்கள்

1.கண்மருத்துவம் - சுவடிப்பதிப்பு 1982ஆம் ஆண்டிற்கான் தமிழக அரசின் சிறந்த மருத்துவ நூலுக்கான முதற்பரிசு பெற்றது.
2.சித்திரக்கவிகள் - ஆய்வுப்பதிப்பு 1983 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த மொழி இலக்கியம் பற்றிய ஆய்வு நூலுக்கான முதற்பரிசு பெற்றது.
3.மீனாட்சியம்மன் திருப்புகழ் - சுவடிப்பதிப்பு
4.விராலிமலை வேலவர் குறபவஞ்சி - சுவடிப்பதிப்பு
5.Siddha medical Manuscripts in Tamil
6.Heritage of Tamils - Siddha Medicine
7.Heritage of Tamils - Education and Vocation
8.தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை - முதல் தொகுதி
9.தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை - இரண்டாம் தொகுதி
10.தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை - மூன்றாம்் தொகுதி
11.தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை - நான்காம் தொகுதி
12.வைத்தீசுவரன் கோயில் பதிகங்கள் - சுவடிப்பதிப்பு
13.திருவேங்கடவன் திருப்பாமாலை - சுவடிப்பதிப்பு
14.வருமைக்கு விடைகொடுத்த ஏழேழு வெண்பா மாலை - சுவடிப்பதிப்பு
15.வேலூர் பதிகங்கள் - சுவடிப்பதிப்பு
16.நலம் தரும் நாராயண கவசம்.
17.வீரகேரளம்புதூர் நவநீதகிருட்டிணன் கலம்பகம் - சுவடிப்பதிப்பு
18.திவ்விய தம்பதியர்புகழ்மாலை - சுவடிப்பதிப்பு
19.அகத்தியர் வைத்திய காவியம்-1500 - சுவடிப்பதிப்பு
20.சென்னை கந்தகோட்ட முருகன் ஆறாறு மாலை
21.அருள்மிகு பல்கலை விநாயகர் போற்றி மாலை
22.தஞ்சை கோயிற் பாடல்கள் - சுவடிப்பதிப்பு
23.அருள்மிகு சந்தான ஈஸ்பவரி திருப்பள்ளியெழுச்சி
24.அருள்மிகு சந்தான ஈஸ்பவரி 1008 நாமாவளி
25.அருள்மிகு சந்தான ஈஸ்பவரி சதகம்
26.அருள்மிகு கிழத்தெரு மாரியம்மன் போற்றி மாலை
27.தமிழில் பதின்மர் சிவார்ச்சனை
28.சேக்கிழார் நூற்றந்தாதி - சுவடிப்பதிப்பு
29.வத்திய சிந்தாமணி - சுவடிப்பதிப்பு
30.குழந்தைகள் மகளிர் மருத்துவம் - சுவடிப்பதிப்பு
31.தன்வந்திரி வைத்தியக்கும்மி - சுவடிப்பதிப்பு
32.தணிகைவேள் பாரதியார் பிரபந்தத்திரட்டு - சுவடிப்பதிப்பு
33.டாக்டர்.உ.வே.சா செவ்வைச்சூடுவார் பாகவதப் பதிப்பு
34.தமிழில் தலபுராணங்கள் - முதல் தொகுதி
35.தமிழில் தலபுராணங்கள் - இரண்டாம் தொகுதி
36.தமிழில் தூது இலக்கியம்
37.தண்டபாணி சுவாமிகள் ஆய்வு மாலை - முதல் தொகுதி
38.தண்டபாணி சுவாமிகள் ஆய்வு மாலை - இரண்டாம்் தொகுதி
39.குமரகுருபரர் ஆய்வு மாலை - முதல் தொகுதி
40.குமரகுருபரர் ஆய்வு மாலை - இரண்டாம் தொகுதி
41.குமரகுருபரர் ஆய்வு மாலை - மூன்றாம்் தொகுதி
42.மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆய்வுமாலை - முதல் தொகுதி
43.மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆய்வுமாலை - இரண்டாம் தொகுதி
44.பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
45.நான்மணிக்கடகை - மூலமும் பயழையவுரையும் - சுவடிப்பதிப்பு
46.சுவடிப்பதிப்பியல்

வீரகேரளம்புதூர் நவநீதக்கிருஷ்ண கலம்பகத்தை வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றினார்.முனைவர் வே.இரா.மாதவன் அவர்கள் ஓலைச்சுவடியில் இருந்த வீரகேரளம்புதூர் நவநீதக்கிருஷ்ண கலம்பகத்தை பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

வீரகேரளம்புதூர் அருகே இரு தரப்பினர் மீண்டும் மோதல்

பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 11, 5:58 PM IST

ஆலங்குளத்தை அடுத்த வீரகேரளம்புதூர் அருகே உள்ளது கழுநீர்குளம் கிராமம். இங்கு இரு பிரிவு மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதியைச் சேர்ந்த ஆண்டபெருமாள் மனைவி இசக்கியம்மாள் கடந்த வாரம் இறந்தார். அவரது உடலை ஒரு தரப்பினர் வசிக்கும் தெரு வழியாக எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ரோட்டில் திரண்டனர். எதிர்தரப்பினரும் ரோட்டில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு நடத்தினர். இந்த பிரச்சினை தொடர்பாக நாளை மறுநாள் அதிகாரிகள் சமரச கூட்டம் நடத்த உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை கழுநீர் குளம் கீழதெருவை சேர்ந்த முத்தையா என்பவர் இறந்துவிட்டார். அவரது உடலையும் பிரச்சினைக்குரிய இடத்தின் வழியே கொண்டு செல்ல சிலர் திட்டமிட்டதாக தெரிகிறது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

ஏ.டி.எஸ்.பி மகேந்திரன் தலைமையில் ஆலங்குளம் டி.எஸ்.பி லயோலா இக்னேசியஸ், இன்ஸ்பெக்டர்கள் ஆலங்குளம் சுரேஷ்குமார்,பாவூர்சத்திரம் விஜயகுமார்,சுரண்டை ஜமால்,வீரகேரளம்புதூர் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் 150க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

கலவரம் ஏற்பட்டால் தடுக்க வஜ்ரா வாகனம் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

Monday, 12 August 2013

தமிழ் தோன்றிய இடம்

தமிழ் வரலாறு:1:மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் :பதிப்பாசிரியர் :புலவர் அ.நக்கீரன்

தமிழ் தோன்றிய இடம்:

தமிழன் பிறந்தகம் முழுகிப்போன குமரிக்கண்டம் என்பது, முக்கழக (முச்சங்க) வரலாற்றாலும். சிலப்பதிகார அடியார்க்குநல்லாருரையாலும், (P.T.) சீநிவாசையங்கார், சேசையங்கார், இராமச்சந்திர தீட்சிதர் முதலியோர் எழுதிய வரலாற்று நூல்க ளாலும், என் ‘முதற்றாய் மொழி‘ முன்னுரையாலும் தெள்ளத் தெளியத் தெரிந்திருந்தும், சில தமிழ்ப் பகைவரும் கொண்டான் மாரும், தமிழை வடமொழி வழிய தெனக் காட்டல் வேண்டித் தமிழர் வடக்கேயிருந்து வந்தனரென்று பிதற்றி வருகின்றனர்.

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டமே என்பதற்குச் சான்றுகளாவன:

(1) தமிழும் அதனொடு தொடர்புள்ள திரவிட மொழிகளும் நாவலந் தேயத்திற்குள்ளேயே வழங்குதலும்; தென் மொழி வடக்கே செல்லச் செல்லத் திரிந்தும் ஒடுங்கியும் இலக்கியமற்றும் இடையீடு பட்டும், தெற்கே வரவரத் திருந்தியும் விரிந்தும் இலக்கியமுற்றும் செறிந்தும் இருத்தலும்.

(2) நாவலந் தேயத்திற்கு வெளியே திரவிட மொழியின்மையும், மேலை மொழிகளிலுள்ள தென் சொற்கட்கெல்லாம் தமிழிலேயே வேரிருத்தலும்.

(3) முழுத்தூய்மையுள்ள தமிழ் தென்னாட்டில் தென் கோடியில் வழங்குதல்.

(4) தமிழ்நாட்டுள்ளும் தமிழ் தெற்கே செல்லச் செல்லத் திருந்தியும் சிறந்தும் இருத்தல்.

("திருத்தக் கல்லிற்குத் தெற்கிட்டுப் பிறந்தவன்" என்னும் வழக்கும் இதை உணர்த்தும்.)

(5) வடநாட்டு மொழிகளிலும் தெலுங்கு முதலிய திரவிட மொழிகளிலுமுள்ள வல்லொலிகள் தமிழிலின்மையும், எட்டும் பத்தும் பன்னிரண்டுமாக மெய்யொலிகள் கொண்ட மொழிகள் ஆத்திரேலியாவிலும் அதனையடுத்த தீவுகளிலும் வழங்குதலும்.

(6) தமிழ் முழுவளர்ச்சியடைந்து முத்தமிழானபின் ஏற்பட்ட தலைக்கழகம், குமரிக்கண்டத்தின் தென் கோடிப் பஃறுளி யாற்றங்கரை மதுரையில் இருந்தமையும், குமரிக்கண்டத் தோற்றத்தின் எண்ணிற்கு மெட்டாத் தொன்மையும்.

(7) தென்னைமரம் ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிற தென்கிழக்குத் தீவுகட்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப் படுவதும், குமரிக் கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந் தமையும், தென் என்னுஞ் சொல் தென்னை மரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தலும்.

(8) பண்டைத் தமிழ்ச் செய்யுள்களிற் கூறப்பட்டுள்ள நீர்நாயும், உரையாசிரியராற் குறிக்கப்பட்டுள்ள காரோதிம மும் (காரன்னம்) ஆத்திரேலியாவிற்குத் தெற்கிலுள்ள தாசுமேனியத்(Tasmania) தீவில் இன்றுமிருத்தல்.

(9) வணிகத்தால் வந்த இரண்டோர் அயல்நாட்டு விலங்கு களும் நிலைத்திணை (தாவர) உயிர்களுந் தவிர, மற்றல்லாக் கருப் பொருள்களும், காலவகைகளும் நிலவகைகளு மாகிய முதற் பொருளும், தென்னாட்டிற்குச் சிறப்பாக உரியவையே பண்டைத் தமிழிலக்கியத்திற் கூறப்பட்டிருத்தல்.

(10) மக்களின் நாகரிகத் தொடக்கத்தையுணர்த்தும் ஐந்திணை மக்கட் பாகுபாடும், குறிஞ்சி மகளிர் தழையுடையும், நாட்டாட்சிக்கு முற்பட்ட ஊராட்சியும், அகப்பொருட் செய்யுள்களிற் புலனெறி வழக்கமாகக் கூறப்பட்டிருத் தலும், ஐந்திணை நிலப் பாகுபாடு தமிழ் நாட்டிற்போல் வேறெங்கும் அடுத்தடுத்து அமைந் திராமையும்.

(11) தமிழ்மக்கள் பழங்கற்காலத்திலிருந்து தென்னாட்டி லேயே தொடர்ந்து வாழ்ந்து வந்திருத்தலும், அவர்க்கு வந்தேறிக் கருத்தின்மையும்.

(12) தமிழர் பிற நாட்டிலிருந்து வந்தாரென்பதற்குப் பண்டைத் தமிழிலக்கியத்தில் ஒருசான்று மின்மை.

(13) தென்னாடு, தென்னர்(தென்னாட்டார்), தென் மொழி, தென்றமிழ். தென்னவன் (பாண்டியன்), தென்கலை என்னும் பெயர்கள் தொன்றுதொட்டு வழங்கி வந்துள்ளமை.

(14) பண்டைத் தமிழர் தம் முன்னோரைத் தென்புலத்தார் என்றழைத்தமையும்; இறந்த முன்னோரிடம் தென் புலம், தென்னுலகு என்றும், கூற்றுவன் தென்றிசைக் கிழவன், தென்றிசை முதல்வன், தென்புலக்கோன் என்றும் பெயர் பெற்றிருத்தலும்.

(15) தெற்கு வடக்குத் தெரியாதவன், தெற்கும் வடக்குமாய்த் திரிகின்றவன், தென்வடல், தென்பல்லி, வடபல்லி (அணிகள்) முதலிய வழக்குகளில், தென்றிசை முற்குறிக்கப் பெறுதல்.

இவற்றை இன்னும் விளக்கமாக அறிய விரும்புவார் Stone Age in India, Pre-Aryan Tamil Culture, History of the Tamils, Dravidian India, Pre-Historic South India, Origin and Spread of the Tamils, Tamil Indiaமுதலிய ஆங்கில நூல்களைப் பார்க்க.

பாண்டிநாட்டுத் தமிழ்ச் சிறப்பு

கடைக்கழகம் கலைந்து பல நூற்றண்டு கடந்த பின்பும், பாண்டியவரசின் தலைமைபோய்ப் பன்னூற்றாண்டு சென்ற பின்பும். பாண்டியனைத் தமிழ்நாடனென்று திவாகரம் சிறப்பித்ததற்கும்,

"நல்லம்பர் நல்ல குடியுடைத்து சித்தன்வாழ்(வு)
இல்லந் தொறுமூன் றெரியுடைத்து - நல்லரவப்
பாட்டுடைத்து சோமன் வழிவந்த பாண்டியநின்
நாட்டுடைத்து நல்ல தமிழ்"

என்னும் பழஞ் செய்யுட்கும் ஏற்ப, பாண்டிநாட்டுத் தமிழ் இன்னும் கீழ்க்காணும் பலவகையிலுஞ் சிறந்துள்ளது.

1. பாண்டிநாட்டுப் பழங்குடி மக்கள், சிறப்பாக நாட்டுப் புறத்திலுள்ளவர், தமிழ் வல்லின மெய்யொலிகளைத் திரவிட ஆரிய மொழிகளிற்போல் மிக வலித்தும் எடுத்தும் ஒலிக்காது, பழைய முறைப்படியே பலுக்கி(உச்சரித்து) வருகின்றனர். வடசொற்களி லுள்ள வல்லொலிகளும் பொலிவொலிகளும் அவர் வாயில் நுழைவதில்லை.

எ-டு: சாக்ஷி- சாக்கி, ஜாதி - சாதி

2. சொற்றூய்மை பாண்டிநாட்டுத் தமிழ்ச் சிறப்புகளுள் ஒன்றாகும்.

எ-டு: சிகிச்சை (வ.) - பண்டுவம் (த.)

சுத்தம் (வ.) - துப்புரவு (த.)

பாண்டிநாட்டார் சைக்கிள் (Cycle) என்பதை மிதிவண்டி என்றும், நாஞ்சில்நாட்டார் புனல் (funnel)என்பதை வைத்தூற்றி என்றும், தூய தமிழ்ச்சொல்லால் வழங்குகின்றனர்.

3. நீ, நீர் என்னும் முன்னிலைப் பெயர்களின் முந்திய வடிவான நீன், நீம் என்பவை, தென்பாண்டி நாட்டிலேயே வழங்கு கின்றன. நாமம் என்னும் திருமாலிய(வைணவ)க் குறிப்பெயரின் மூலமான இராமம் என்பதும், அங்குத்தான் வழங்குகின்றது. திருமண் காப்பு இராமவணக்கம் பற்றி இராமம் என்றும், கோபால வணக்கம்பற்றிக் கோபாலம் என்றும் பெயர் பெற்றுள்ளது. கோபாலம் என்பது கோப்பாளம் எனச் சிதைந்து வழங்குகின்றது. இதுவும் தென்பாண்டி வழக்கே.

4. தொல்காப்பியத்திற் குறிப்பிட்டுள்ளபடி, படியை நாழி என்பதும், அரைப்படியை உரி என்பதும், காளையையும் ஆவையும்விரவுப்பெயரால் சாத்தன் சாத்தி யென்றழைப்பதும், இன்றும் தென்பாண்டி வழக்காம்.

5. பாண்டிநாட் டுலகவழக்கில் வேறெங்கும் வழங்காத தூய தென்சொற்களும், மரபுகளும் (Idioms), வழக்காறுகளும் (Usages), இணைமொழிகளும் (Words in Pairs), தொடர் மொழிகளும் (Phrases), பழமொழிகளும் (Proverbs) ஏராளமாய் வழங்குகின்றன.

காடைக்கண்ணி குதிரைவாலி முதலிய தவசங்களும் கரம்பைப் பயறு, கற்பயறு முதலிய பயறுவகைகளும், அங்குத்தான் விளைக்கப் பெறுகின்றன.

இளத்தல், உணத்துதல், இளவட்டம், ஏத்தாப்பு, கரட்டை, காணம், காயல், காம்புதல், கிண்ணுதல், கிளியஞ் சிட்டி, குடிமகன், குண்டடியன், குணட்டுதல், குதாவடை, குந்தக்கம், கெந்தளிப்பு, சவங்கல், சவுத்தல், சில்லான், சிலையோடுதல், சீயான், சேடா, தக்கனை, தடையம், தவ்வல், தவத்துதல், தாயமாட்டம், திகைதல், துப்புரவு, தேரி, நலவு சொல்லுதல், நோங்குதல், பண்ணையார், பத்தநடை, பதவல், பரிதல்(ஓடுதல்), பரும்பு பறம்புதல், பாடுபடுதல் (பயிரிடுதல்), புதுநிறம், புல்லை, பூட்டன், பொண்டான், மயிலை, மானை, மெத்துதல், வடலி, வதியழிதல், வள்ளிதாய்(முழுதும்), வாழ்க்கைப்படுதல், வாழ்வரசி என்பன போன்ற நூற்றுக் கணக்கான சொற்கள் நெல்லை வழக்கிற்குச் சிறப்பாகும். ஆதலால், தமிழைச் செவ்வையாய் அறியவேண்டின் பாண்டி நாட்டுலகவழக்கை ஆராய்தல் வேண்டும். இற்றைத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் சென்னைத் தமிழையும் சோழ கொங்கு நாட்டுத் தமிழையுமே அறிந்ததினால், செந் தமிழைப் பிறழவுணர்ந்துள்ளனர்.

தமிழர் குமரிக்கண்டப் பழங்குடி மக்கள் என்பதற்குப் பண்டைத் தமிழிலக்கியச் சான்றுகள்:

(1) (தென்)மதுரை

தலைக்கழகம் இருந்த இடம் தென்மதுரை யென்னும் தொன் மதுரையாகும்.

"தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கமென மூவகைப் பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள். அவருள் தலைச் சங்க மிருந்தார் ........தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்ப" என்பது இறையனாரகப்பொருளுரை (ப.6).

இதில் ‘தமிழ்வளர்த்தது‘ என்றிராது ‘தமிழாராய்ந்தது’ என்றிருப்பது ஊன்றிக் கவனிக்கத்தக்கது. "இடைச்சங்கமிருந்தார்....... தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப "கடைச் சங்கமிருந்து தமிழா ராய்ந்தார்.... நாற்பத்தொன்பதின்மர் என்ப... அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரையென்ப" என்று, இடை கடைக் கழகங்கள் போன்றே தலைக்கழகமும் தமிழாராய்ந்ததாகச் சொல்லப்பட்டிருப்பதால், தலைக் கழகத்திற்கு முன்பே தமிழிலக்கிய விலக்கணங்கள் பேரளவு தோன்றி யிருந்தமை பெறப்படும்.

(2) பஃறுளியாறு

பனிமலை (இமயம்) போலும் குமரி மாமலைத்தொடரில் தோன்றித் தலைக்கழகப் பாண்டியர் தலைநகராகிய (தென்) மதுரையைத் தன் கரையிற்கொண்டு, குமரிக்கண்டத் தென் கோடியடுத்த பழந்தென்பாண்டி நாட்டை வளம்படுத்திய, கங்கைபோலும் பேரியாறு பஃறுளியாம்.

"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம். 9)

என்பது புறப்பாட்டு.

(3) குமரிமலை

"அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி" (சிலப். 11:17-22)

என்பது சிலப்பதிகாரம்.

"அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி" என்பதால், தலைக் கழகக் காலத்திலேயே ஒரு பாண்டியன் சாவம் (Java) என்னும் சாலித்தீவைத் தன்னடிப்படுத்தி, அவன் கடற்கரையில் கடலலை கழுவுமாறு தன் பாதத்தைப் பொறித்துவைத்தான் என்பதும்; "பஃறுளி யாற்றுடன் .....இமயமுங் கொண்டு" என்பதால் குமரிமலை பனிமலையும் பஃறுளியாறு கங்கையாறும் போன்றன என்பதும்; "வடதிசைக் கங்கையும் ... தென்னவன் வாழி" என்பதால் பிற்காலத் துப் பனிமலை கொண்ட கரிகாலச் சோழனும் கங்கைகொண்ட இராசேந்திரச் சோழனும் போன்று, முற்காலத்துப் பாண்டிய னொருவன் பனிமலையைக் குமரிமலைக் கீடாகக் கொண்டு நாவலந்தேய முழுதும் தன் ஆட்சியை நாட்டினான் என்பதும்அறியப்படும். கடைக்கழகக் காலத்தில், "குமரியோடு வடவிமயத் தொருமொழிவைத் துலகாண்ட சேரலாதன்"1 ஆட்சியும், "ஆரிய நாட்டரசோட்டி அவர் முடித்தலை யணங்காகிய பேரிமயக் கற்சுமத்திப் பெயர்ந்து போந்து நயந்தகொள்கையிற் கங்கைப்பேர் யாற்றிருந்து நங்கை தன்னை நீர்ப்படுத்தி"1 வந்த செங்குட்டுவன் செயலும், தலைக்கழக இடைக்கழகப் பாண்டியரின் பேரரைய வாற்றலைப் பெரிதும் வலியுறுத்தும்.

(4) குமரிக்கண்டத் தமிழ்நாடுகள்

"தொடியோள் பௌவம்"2 என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்குநல்லார் உரைத்துள்ள விரிவுரையாவது:

"தொடியோள்"2 பெண்பாற்பெயராற் குமரியென்பதாயிற்று, ஆகவே, தென்பாற்கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம்.... முதலூழி யிறுதிக்கண், தென்மதுரையகத்துத் தலைச்சங்கத்து.... நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து, நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீஇயினார், காய்சினவழுதி முதற் கடுங்கோன் ஈறாயுள்ளார் எண்பத் தொன்பதின்மர்....அக்காலத்து, அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத் தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின் காறும், கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்று ணர்க..." என்பது.

பண்டைத் தமிழிலக்கியத்திற் சொல்லப்பட்டுள்ள கடல் கோள்கள் மொத்தம் நான்கு. அவற்றுள், முதலது தலைக்கழக இருக்கையாகிய தென்மதுரையைக் கொண்டது; இரண்டாவது "நாகநன்னாடு நானூறியோசனை" கொண்டது(மணிமே. 9:21); மூன்றாவது இடைக்கழக இருக்கையாகிய கபாட புரத்தைக் கொண்டது; நான்காவது காவிரிப்பூம்பட்டினத்தையும் குமரியாற் றையுங் கொண்டது. குமரி என்பது, குமரிக் கண்டத்தின் தென் கோடியடுத்திருந்த ஒரு பெருமலைத் தொடர்க்கும், அதன்

1. சிலப்: வாழ்த்துக்காதை, உரைப்பாட்டுமடை
2. சிலப். 8: 1
வடகோடியடுத்துக் குமரிமுனைக்குச் சற்றுத்தெற்கிலிருந்த ஒரு காவிரிபோலும் பேராற்றிற்கும், பொதுப்பெயராம். காவிரிப் பூம்பட்டினம் முழுகியபின்பும் காவிரியாறிருப்பதுபோல், கபாட புரம் முழுகியபின்பும் குமரியாறிருந்தமை "வடவேங்கடந் தென் குமரி" என்னும் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரஅடியாலும்,

"தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"

"குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி" (புறம். 6 : 67)

என்னும் புறப்பாட்டடிகளாலும் அறியப்படும். அடியார்க்கு நல்லார் உரையில் "தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின் காறும்" என்பது, அகன்ற நீர்ப்பரப்பையுடைய குமரியாற்றின் வடபெருங் கரைவரை, என்று பொருள்படுவது. ஆகவே, முக்கடல்கோளாலும் முழுக்கப்பட்ட தமிழ் நிலப்பரப்பை யெல்லாம் தொகுத்துக் கூறுவது அவருரையென்றறிக.

இங்ஙனம், மறுக்கவொண்ணாத தெளிவான பண்டைத் தமிழிலக்கியச் சான்றுண்மையால், குமரிக்கண்டத்தில் தமிழ ரிருந்த தில்லையென்றும் அவர் வடக்கிருந்து வந்தவ ரென்றும், சில தமிழ்ப் பகைவரும் போலித்தமிழருங் கூறுவதைப் பொருட்படுத்தற்க.

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்"(கலித். 104)

என்னும் கலித்தொகை அடிகளும் குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழம் பாண்டிய நாட்டைக் கடல் கொண்டதையும்; இடைக் கழக விருக்கையாகிய அலைவாயையும்(கபாடபுரத்தையும்) கடல் கொண்ட பின், அதற்குத் தப்பிய பாண்டியன் நெல்லை மதுரை முகவை மாவட்டங்களாகிய பிற்காலப் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி யாண்டதையும் உணர்த்தும்.

மேற்காட்டிய இலக்கியச் சான்றுகளால், முதற்காலத்தில் நாவலந்தேயம் முழுவதையும் பாண்டியன் ஒருவனே ஆண்டான் என்பதும் குமரிக்கண்டம் முழுகாத பிற்காலத்தில், பாண்டியன் குமரிக் கண்டத் தமிழ் நிலத்தையும் சேர சோழர் அதற்கு வடக் கிலுள்ள நாவலந்தேயப் பகுதியின் மேல்பாகங்களையும் ஆண்டார் என்பதும் உணரப்படும்.

தமிழனின் பிறந்தகம் குமரிநாடென்பதை அறியாத மேலை யறிஞர், ஆரியத்தையும் அதன் முதிர்ச்சியான சமற்கிருதத்தையும்
அடிப்படையாக வைத்தாராய்ந்து, தமிழர் நண்ணிலக் கடற்கரை யினின்று வந்தவர் என்னும் தவறான முடிவு கொண்டுள்ளமையால் இற்றை யிந்தியாவிலுள்ள மலைவாணரெல்லாம் திரவிடப் பழங்குடி மக்களென்று மயங்கிக் கூறுகின்றனர். திரவிடரைத் தோற்றுவித்த தமிழரின் முன்னோர் குறிஞ்சிநிலத்தில் வாழ்ந்த நாகரிகத் தொடக்கநிலை முழுகிப் போன குமரிக்கண்டத்தின் தென் கோடியிலேயே கழிந்துவிட்டது. இன்று மலைவாணராயுள்ள தமிழரும் திரவிடரும் சிலபல நூற்றாண்டிற்குமுன் போர், கொள்ளை, கொள்ளைநோய், பஞ்சம், கொலைப்பழி மதத் துன்புறுத்தம் முதலியவற்றிற்குத் தப்பி மலையேறிப் பிழைத்த மக்களின் வழியினரே.

தமிழ்நாட்டில் இன்றுள்ள மலைவாழ் குலத்தாருள் மிகப் பழமையானவர், நீலமலை உச்சியிலுள்ள துடவரே. அவரும், அவர்தம் முன்னோர் அங்கு முதன்முதற் குடியேறியவர் என்றே கூறுகின்றனர். அவர் மொழியும் செந்தமிழின் சிதைவான ஒருவகைக் கொடுந்தமிழே என்பது வெள்ளிடைமலை. அவர் எருமை மந்தையை வைத்துப் பிழைப்பதனால், அவரது ஒவ்வொரு குடியிருப்பும் மந்து எனப்படுகின்றது. அவர் குடும்பத்தை மன் (மனை) என்றும், தெய்வத்தைக் கடவுள் என்றும், வழிபாட்டு மனையைக் கோயில் என்றும், சொல்கின்றனர். அவர் மொழியின் கொடுந்தன்மையையும் கொச்சைத் தன்மையையும் கீழ்வரும் சொல் வரிசைகளாற் கண்டுகொள்க.

சோழ பாண்டி நாட்டின் நிலமட்டம் நோக்கி, பள்ளமான திசை கிழக்கு(கீழ்-கீழ்க்கு-கிழக்கு) என்றும், மேடான திசை மேற்கு (மேல்-மேற்கு) என்றும் பெயர் பெற்றன. நீலமலை யுச்சியில் வாழும் துடவரும் மேற்றிசையை மேக்(மேற்கு) என்கின்றனர். இத்தகைய சொல் ஒன்றிரண்டே, அவரின் முன்னோர் கீழிருந்து சென்றனர் என்று காட்டவும் நாட்டவும் போதுமாயினும், எவரும் எளிதில் ஐயந்திரிபற அறிதற்பொருட்டுப் பல்வேறு சொல்வரிசை கள் கீழ்க் காட்டப் படுகின்றன. எட்கார் தரசத்தன், ஐயப்பன் முதலியோர் தென்னாட்டு மலைவாழ் வகுப்பாரைப் பற்றி எழுதியிருப்பதையும் காண்க.

துடவச் சொற்கள்

முறைப்பெயர்

தமிழ் :துடவம்

தாய்:தோய்
அவ்வை(தாய்) :அவ்

நம்மொழி பயனற்றதா?

மேற்கத்தியர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் மொழியற்று காட்டுவாசிகளாய் இருந்த போதே இங்கே கலாச்சாரம் தோன்றி சிலப்பதிகாரமும், குறளும் இயற்ற பட்டு விட்டன


உயர்தனிச்செம்மொழி-தமிழ்!!!

தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கோர் குணமுண்டு
அமிழ்தம் அவனுடைய மொழியாகும்
அன்பே அவனுடைய வழியாகும்


காப்பிய நூல்களை எழுதிய பெருமையும், திருக்குறள் யாத்த சிறப்பும், பக்திப்பாடல்களின் புகழும், புதுமையாய்க் கவிதை யாத்த பாரதியின் பாக்களும் தமிழ்மொழிக்கு மணிமகுடம் சூட்டக் கூடியவை.
நம் மொழி அமிழ்தம்.ஆனால்,
"இவ்வுலகில் குரங்குகள் வந்து பத்துலட்சம் வருடங்கள் ஆகிறது,மனிதர்கள்தோன்றி இரண்டுலட்ச வருடங்கள் ஆகிறது.தமிழும் அதேமாதிரி தான் முன்ன இருந்தே இருக்கிறது ஆனா no use". ஏழாம் அறிவின் இந்த வசனங்கள் எதை சொல்கிறது.நம் மொழி பயனற்றதாம்.நாம் ஏன் பயனற்றவர்களாய் ஆனோம்.

கவிப்பேரரசு வைரமுத்து சொல்கிறார்,பார்ப்போம்:
"தமிழை வளரவிடாமல் பார்த்துக்கொள்ளத் தமிழர்கள் இரண்டு கத்திகள் வைத்திருக்கிறார்கள்.
தொல்காப்பியத்தோடு தமிழ் முடிந்துவிட்டது அல்லது திருக்குறளோடு தீர்ந்துவிட்டது என்பவர்களின் கையில் துருப்பிடித்த கத்தி.
தமிழில் என்ன இருக்கிறது…. விஞ்ஞானம் மனிதனுக்கு இறக்கைகள் தயாரித்துக்கொண்டிருக்கும் போது இந்த தமிழ் என்னும் தள்ளுவண்டியால் யாது பயன் என்று சலித்துக்கொள்கிறவர்களின் கையில் சாணைபிடித்த் கத்தி.

இந்த இரண்டு கத்திகளுமே பயங்கரமானவை. பறிமுதல் செய்யப்பட வேண்டியவை.
துருப்பிடித்த கத்தியைத் தூக்கி நிற்பவர்களே! உங்களைக் கேட்கிறேன்- தமிழுக்கு ஏன் தாழ்பாள் போடுகிறீர்கள்?
வானத்துக்கு ஏன் வரப்பு கட்டப் பார்க்கிறீர்கள்?
வைர வைடூரியங்கள் வைத்திருக்கும் தமிழின் கருவூலத்தில் ஒரு கம்யூட்டர் வைக்க இடமில்லையா?
‘எல்லாப் பொருளும் இதன் பாலுள“ என்று நாம் திருக்குறளைச் சொல்லியதையே திருத்தியாகவேண்டும்.
“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி“ என்ற மேற்கோளை வைத்து அணுவை அப்போதே துளைத்தாகிவிட்டது என்று ஆனந்தங்காணுகிறவர்களே!
துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி… என்ற குறளை வைத்து, ஏகே 47 அப்போதே இருந்தது என்று இருமாந்து போகிறவர்களே!
“வலவன் ஏவா வான ஊர்தி“ என்பதை வைத்து ஏவுகளயுகத்தைத் தமிழன் எப்போதோ துவங்கிவிட்டான் என்று இன்பக்களி கொள்கிறவர்களே!
உங்களைக் கேட்கிறேன் -

தொப்பையே கர்ப்பமென்று எண்ணி மகிழ்ந்திருந்தால் நம் வீ்ட்டில் தூளியாட முடியுமா?
தமிழ் பக்தியாளர்களே!
நீங்கள் கோபுரங்களிலேயே குடியிருக்க முடியாது ; இறங்கி வாருங்கள்!
நம்மை விட்டுவிட்டு பூமி விரைவாய் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு விளங்கிவேயில்லை.
உலகத்தின் எல்லாக் கரைகளிலும் அறிவியல் சமுத்திரத்தின் அலைகள் அடிக்க ஆரம்பித்துவிட்டன.
நமது இனமும் அலையில் காலை நனைத்திருக்கிறது் என்று கூட சொல்லமாட்டேன்.
அடித்த அலையின் வேகத்தில் நமது இனமும் கொஞ்சம் நனைந்திருக்கிறது. என்று சொல்லுவேன்.
உலக விஞ்ஞானம் மண்ணைத் துழாவியும் வி்ண்ணை அளாவியும் காலத்தின் தேவைகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறது.
நாம் குறைந்தபட்சம் அந்தப் பொருள்களின் பெயர்களையாவது தமிழில் கண்டுபிடித்தோமைா?
தமிழைக் காவியமொழி என்று சொல்லியே கழித்துவிடாதீர்கள்
தமிழை நீதி மொழி என்று சொல்லியே நிறுத்திவிடாதீர்கள்.
தமிழ் நீட்சி கொண்டது நீங்கள் தான் நீட்டிக்கத் தயாராக இல்லை.
சற்றே தமிழுக்குச் சுதந்திரம் கொடுங்கள்.

தமிழன்னைக்குக் காதில் குண்டலகேசியும், கழுத்தில் சிந்தாமணியும், கையில் வளையாபதியும், இடுப்பில் மணிமேகலையும், பாதத்தில் சிலம்பும் மட்டும் போதாது.



அவள் சிரசில் கம்யூட்டர் மகுடம் ஒன்று கட்டாயம் சூட்டுங்கள்.
துருப்பிடித்த கத்தியைத் தூர வீசுங்கள்.


தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்டு ஆங்கிலத்திற்கு வயிற்றை விற்றுவிட்ட அறிவுஜீவிகளே!

நீங்கள் தமிழை வாசிக்கவுமில்லை.தமிழில் யோசிக்கவுமில்லை.
முற்றிய மரத்தில் வைரம் பாய்ந்திருப்பது போல நமது மூத்த மொழியும் வைரம் பாய்ந்திருக்கிறது.

நமக்குத் தாய்மொழியாய்த் தமிழ் அமைந்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான்.
ஆனால், அப்படியொரு வாய்ப்புக் கிட்டியதற்காகவே நாம் வாழ்நாள் முழுவதும் கர்வப்படலாம்.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வங்காள மொழியில் காவியம் என்ற அங்கமே இல்லை.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலம் அழுக்குத் தீரக் குளிக்கவே இல்லை.
பல மொழிகளுக்குச் சில நூற்றாண்டுகள் வரை சொந்தமாய் லிபிகள் இல்லை.
ஆனால் உலகத்தில் விரல்விட்டுச் சொல்லக்கூடிய மொழிகளில் குரல்விட்டுச் சொல்லக்கூடியது தமிழ்.
ஊர்ச்சொற்கள் அனைத்திற்கும் வேர்ச்சொற்கள் வைத்திருப்பது தமிழ்.
பக்தி இலக்கியத்திலும் கூட விஞ்ஞானத்திற்குப் பங்களிப்பு செய்யக்கூடியது தமிழ்.
ஆரவாரமில்லாத பழமைதான் நிகழ்காலத்திற்கும் அஸ்திவாரம்.
வளர்வதற்குத் தமிழ் தயாராக இருக்கிறது வளர்ப்பதற்குத் தான் தமிழன் தயாராகயில்லை. இடைக்காலத்தில் தமிழுக்கு நேர்ந்த சுளுக்கு இன்னும் எடுக்கப்படவேயில்லை.
அய்யகோ மாறாத மரபாளர்களே!

இன்னும் எத்தனை நாளைக்குத் தான் திருக்குறளையும், தேவாரத்தையும் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டே இருப்பீர்கள்?
இன்னும் எத்தனை நாளைக்குத் தான் “கொல்“ “அரோ“ என்னும் செத்துப்போன அசைச்சொற்களை பெய்த தகவல் பலகைகலாய் அகவல் எழுதுவீர்கள்?
சோதனைக் குழாய்க் குழந்தைக்குமா நீங்கள் பிள்ளைத்தமிழ் பாடுவீர்களா?
நமக்குக் கனவுகாணக் கூடத் தெரியவில்லை.
நம்பிக்கையின் மீது கூட நம்பிக்கையில்லை.

கம்பன் மறைந்தபோது சரஸ்வதி இன்றோடு மங்கல நூல் இழந்து போனாள் என்று ஒரு புலவன் புலம்பியதை நயமாகக் கொள்ளமுடியுமே தவிர நியாயமாகக் கொள்ளமுடியாது.

தமிழ் யாரோடும் முடிந்துவிடுவதில்லை.
மேதைகளும்,ஞானிகளும், யோகிகளும், அறிஞர்களும், கவிஞர்களும், சேமித்துவைத்த தமிழை நாம் செலவு செய்யவேண்டும்.
அந்தச் செலவிலிருந்து புதிய வரவு காணவேண்டும்.
இந்தச் சூளுரையோடு திரும்பிப்பார்க்கிறேன்.
மனசு சுருங்கிப் போகிறது.
அறிவியலுக்கென்று தமிழில் எல்லோரும் அறியும் ஏடுகள் இல்லை.
சில ஏடுகள் தவிர, அறிவியலுக்குப் பக்கங்கள் ஒதுக்கப் பத்திரிக்கைகள் இல்லை.

அழுத்துப் போன கருத்துக்களுக்கும், புழுத்துப்போன விருத்தங்களுக்குமே பரிசு கிடைக்கிறது.

நம்மவர்கள் ஒரு கருத்தை மொழிபெயர்த்து முடிப்பதற்குள் அதன் முடிவே மாறிவிடுகிறது.
பழைய தமிழில் நாரெடுத்து புதிய விஞ்ஞானத்தில் பூத்தொடுத்து இந்த இனத்தின் தோளுக்கு அணிவிக்கிற நாளுக்கு ஏங்குகிறேன்.
நம் வரலாறு வணக்கத்திற்குரியது
உலகப் பண்பாட்டுக்கு அள்ளிக்கொடுத்தோம். உலகுக்கு நாகரீகம் சொல்லிக்கொடுத்தோம்.
அவர்களுக்கு இல்லாததை நாம் கொடுத்தோமே.. நமக்கு இல்லாத நவீன உலகத்தை நாம் இறக்குமதி செய்தோமா?
முத்துக்களையும் மிளகையும் ஏற்றுமதி செய்த இனம் இன்று போதை மாத்திரைகளை இறக்குமதி செய்வதா?

ஒன்று சொல்கிறேன்
ஓடிக்கொண்டே இருக்கிற உலகம் நம்மைத் திரும்பிப்பார்க்காது.
திரும்பிப்பார்த்தாலும் அதற்குத் தெரிகிற தூரத்தில் இப்போது நாம் இல்லை.
இனி ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் விஞ்ஞான விளக்கை ஏற்றிவையுங்கள்.
துருப்பிடித்துப்போன படைப்பிலக்கியங்கள் விஞ்ஞானத்தில் தம்மைத் துலக்கிக்கொள்ளட்டும்.
புலன்களை நீவிவிடுகிற பொழுதுபோக்கிலிருந்து விஞ்ஞான சாதனங்கள் சற்றே விடுபடட்டும்.

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,

இன்னும் இரண்டு மூன்று கடற்கோள்களுக்குத் தேவையான குப்பைகள் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன.
ஆனால் இந்த நூற்றாண்டின் தேவைக்குக்கூட அறிவும் உணர்வும் இன்னும் ஆக்கப்படவில்லை.

நம்வாழ்க்கை வாக்கியம் இனி இதுவாகத்தான் இருக்கவேண்டும்

“ஓ விஞ்ஞானமே!
அறிவு கொடு!
ஏ தமிழா!
உணர்வு கொடு!"

கடலுக்கடியில் உறங்கும் தமிழனின் தொன்மை வரலாறு!

தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு. தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.

புதிய இந்த ஆய்வுக் கருத்துகளை நாம் அறிந்து கொள்ளும் முன். நம் நாட்டிலேயே மிகவும் பழமை வாய்ந்த சிந்துவெளிக்கும் பழந்தமிழருக்குமுள்ள நெருக்கமான உறவை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனரே. இவற்றையாவது முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா? அறிஞர்கள் கூறுவது என்ன என்பதைக் காண்போம்.

சிந்துவெளி நாகரிகம்:

சிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள் பல வெளிப்படுத்தி வருகின்றன.

நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சிந்துவெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளது.

சிந்துவெளி நாகரிகம் பற்றி அவர் கூறுவன:

1. ஆரியர் நகர வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர். நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர்.கிணறு, குளியலறை, கழிவு நீர் வடிகால் உள்ள வீடுகளால் அவர்கள் நகரம் நிறைந்திருந்தது.

2. ரிக் வேதத்தில் இரும்பு பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துவெளியில் வெள்ளி உபயோகத்தில் இருந்தது. கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இரும்பு பயன்பாட்டில் இல்லை.

3. வேதங்கள் மூலம் வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களும் தலைக் கவசங்களும் பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துசமவெளியில் ஆயுதங்கள் இருந்தன. ஆனால் தற்காப்புக் கருவிகள் காணப்படவில்லை.

4. மீன் பற்றி வேதங்களில் அதிக அளவில் குறிப்பிடப்படவில்லை. சிந்து சமவெளியில் மீன் அதிக அளவில் உள்ளது.

5. வேதங்களில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை சுட்டப்பட்டுள்ளது; சிந்துசமவெளியில் குதிரை ற்றிய ஆதாரம் கிடைக்கவில்லை.

6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது.

7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது. சிந்துவெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

8. சிந்துவெளி கடவுளர் கொம்புகளுடன் காட்டப்பட்டுள்ளனர்; ஆனால் வேதங்களில் அப்படி காணப்படவில்லை.
(Sir John Marshall. Mohenjo-daro and the Indus Civilization.Vol.I. 1973. Pp.109- 112. Mr. I. Mahadevan. Indian Express. August 1994.)

9. சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை வேதங்களில் இழிவாகச் சொல்லப்படுகின்றன.

10.சிந்துவெளியில் காணப்படும் களிமண் முத்திரையில் உள்ள வண்டிகளில் ஆரங்களுடன் கூடிய சக்கரங்கள் காணப்படவில்லை. ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன. (Mr. I. Mahadevan. ‘Review - An Encyclopaedia of the Indus Script’ by Asco Parpola. Internation Journal of Dravidian linguistics. Vol.XXVI number 1. January 1997. P.110 )

11. சிந்துவெளியில் சுவத்திக (Swastik) அடையாளம் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது.ஆனால் வேதங்களில் அதைப் பற்றிய குறிப்புகள் கூட காணப்படவில்லை.

12. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர். ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றுள்ளனர்.

‘சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல். ஹீராஸ். கமில்சுவலபில் மற்றும் இரஷிய, பின்லாந்து, அமெரிக்க அறிஞர்கள் பலர் இது ‘திராவிட நாகரிகம்’ எனக் கூறியுள்ளனர்.

கணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்கிறார் ஐராவதம் மகாதேவன். (Indian Express - Madras - 5 August 1994).

சிந்துவெளி மொழி குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த அறிஞர் அஸ்கோ பர்ப்போலா இது திராவிட மொழி என்று விளக்குவது குறிப்பிடற்குரியது.

அண்மைக் காலங்களில் டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்துள்ளனர்.

சிந்துவெளி நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்று கூறும் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளியின் காலம் ‘ரேடியோ கார்பன் ஆய்வுப்படி’ (Radio carbon dating) கி.மு. 7000க்கு முற்பட்டது எனக் கூறியுள்ளார். (indian Express - Madras - 5 August 1994)

Fr. ஹீராஸ் ‘Studies in Proto - Indo - Mediterranean Culture’ எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடற்குரியது. (Rev. Fr. Heras. Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953). 1953இல் வெளியிடப்பட்டுள்ள அவருடைய Studies in Proto Indo Mediterranean Culture’ எனும் இந்த நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.

தமிழர்கள் உலகில் எங்கு சென்றாலும் தம்முடைய தொன்மையான வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் வழிபாட்டையும், ஆன்மீகக் கருத்துகளையும் எடுத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றனர் என்பதை அவர்கள் பரவியுள்ள நாடுகளிலும் இடங்களிலும் உள்ள பெயர்களும் சொற்களும் வெளிப்படுத்துவதை. 'சொல்லாய்வு', 'பெயராய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

சிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றபோதிலும் பூம்புகார் குறித்த ஆய்வு தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.

பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ. விக்டர் அவர்களின் எழுத்துகளும் உலக நாடுகளில் காணப்படும் தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகளும் தமிழின், தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளப் பெருந்துணை புரிகின்றன. அவர்களுடைய ஆய்வுகளை முழுவதும் படிப்பதற்கு முன்னோட்டமாக அவர்கள் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்) அவர்கள் 'சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

1. சிந்துவெளி மற்றும் ஹரப்பாவில் ''கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்” புலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும்

'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.

சிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.


புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.

சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும். அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும்.

எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.

சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்

பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.

பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது. கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும்.

எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ...ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.

நதிகள், மலைகளின் பெயர்கள்

நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.

கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பஃறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.

பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.

தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.

இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.

இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும் பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.

தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ள பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்’ என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ.விக்டர் அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

2 - பூம்புகார்

பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.

''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.

இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ''மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.

கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ''தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.

இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன ''ட” வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.


இத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.

இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த ''சானல் 4” என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ''லர்னிங் சானல்” என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ''சைடு ஸ்கேன் சோனார்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.

இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்” எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.

இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.

சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.



மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ''அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.
அந்த ''அண்டர்வேர்ல்ட்” தொலைக்காட்சித் தொடரை தேன்மழையில் இங்கு காணலாம்-[விழிய இணைப்பு]

மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்

1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.

2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.

3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.



4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)

5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.

6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.

7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.

8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.

9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.

10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.

11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.

12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.

13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆய்வுகளின் நம்பகத் தன்மை:

1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.

ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:

1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.

10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.

11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.

13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.

14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.

15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.

16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.

17. பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.

18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).

19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.
(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)

இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.

ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.

ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.

மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

நன்றி: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011

மேலும் அறிந்துகொள்ள:

தமிழ் வரலாறு : மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்

Friday, 9 August 2013

தமிழர் வாழ தமிழ் போதுமா..?


தமிழுக்கு மிகுந்த சோதனைகள் வாய்த்துள்ளதாகத் திரும்பத் திரும்பக் குரல் எழுப்பப்பட்டு வருகிற ஒரு காலகட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். தமிழுக்கு அப்படி என்னதான் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்று பார்ப்போம். ஒரு வகையில் பார்த்தால் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் தமிழ் பல ஏற்றங்களைக் கண்டிருக்கிறது. உலகெங்கிலும் சுமார் எட்டு கோடித் தமிழர்கள் இன்று வாழ்கிறார்கள். இவர்கள் அனைவருமே தமிழ் பேசத் தெரிந்தவர்கள். பல தலைமுறைகளாக வெளிநாடுகளில் தங்கி அந்நாட்டு மொழியையும் வேறு மொழிகளையும் கற்றுக் கொண்டுவிட்டு, தமிழைப் பயன்படுத்தவே முடியாத சூழலில் தமிழ் பேசாத தமிழர்களும் இருக்கிறார்கள். அவர்களின் மொத்த எண்ணிக்கை சில ஆயிரங்களைத் தாண்டாது என்று கொள்ளலாம். இப்படியொரு அதிக அளவில் தமிழ் பேசத் தெரிந்தவர்கள் தமிழினம் தொடங்கிய காலம் முதல் இப்போதுதான் இருக்கிறார்கள். உலக மக்கள் தொகை பெருக்கத்தின் நேரடி விளைவாகவும் இதனைப் பார்த்தால் இதற்கு தனிச்சிறப்பு இருப்பதாகவும் கொள்ளமுடியாது. ஆனால் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கையும் இப்பொழுது உள்ள அளவிற்கு இதுநாள்வரை இருந்ததில்லை என்பதை ஒரு பலமாகவும் பார்க்கலாம்.

தமிழில் பத்திரிகைகள், புத்தகங்கள் எண்ணற்ற அளவில் ஆண்டுதோறும் பிரசுரமாகின்றன. தமிழ்புத்தகங்களின் மொத்த ஆண்டு விற்பனைத் தொகை ரூ.80 கோடியைத் தாண்டிவிட்டது. எட்டு கோடி தமிழர்களின் புத்தகச் செலவு இதுதான் என்று பார்க்கும் பொழுது இந்த தொகை அவ்வளவு பொருட்படுத்தத்தக்கதாக இல்லை என்று கூறலாம். ஆனால் இவர்களில் ஆறரை கோடித் தமிழகத் தமிழர்கள்தான் புத்தகங்களை அதிகம் வாங்கியவர்கள். அது சுலபமான யூகம்தான். தமிழகத் தமிழர்களிலும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இருபது சதவிகிதத்தினருக்கு மேற்பட்டவர்கள். எழுதப் படிக்கத் தெரிந்தவர்களில் பலரும் புத்தகம் வாங்கும் பழக்கத்தை இன்னமும் கைக் கொள்ளாதவர்கள் என்றெல்லாம் பார்க்கும் பொழுது புத்தக விற்பனையின் ஏறுமுகம் நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது. நூலகங்கள் தவிர ஒரு சிறுபான்மையினரே புத்தகங்கள் வாங்குகின்றனர் என்றாலும் தமிழ்ப் புத்தகம் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் பெருகி வருவதைக் கண் கூடாகப் பார்க்கலாம். தமிழ் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்துள்ளது. கணினியிலும் தமிழ் காலந்தாழ்த்தாது நுழைந்து விட்டது.

ஆனால் தமிழைக் கல்வி நிலையங்களில் கற்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இளைஞர்கள் விருப்புடன் தமிழைக் கற்பதில்லை. மேடைகளில், தொலைக்காட்சிகளில் தமிழ் நிகழ்ச்சி நடத்துபவர்கள் தமிழ் சொற்களைச் சரியாக உச்சரிப்பதில்லை. ஆங்கிலத்தை விரும்பி உபயோகிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இரண்டு தமிழர்கள் சந்தித்தால் அவர்கள் ஆங்கிலத்தில் உரையாடவே விரும்புகிறார்கள். தமிழ் மத்தியில் ஆட்சி மொழியாகவில்லை. தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்களில் தமிழ் போதிக்கப்படுவதில்லை. அவ்வாறே போதிக்கப்படும் இடங்களிலும் மேல்நிலை வகுப்புகளில் தமிழ் இடம்பெறுவதில்லை. அங்கெல்லாம் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. குழந்தைகள் அப்பா அம்மா என்றெல்லாம் அழைக்காமல் டாடி, மம்மி என்று அழைக்கின்றனர். சுருங்கக் கூறினால் தமிழின் மிகப் பெரும் அச்சுறுத்தலாக ஆங்கிலம் கருதப்படுகிறது.

தனித்தமிழை வேண்டியவர்கள் வடமொழி மீதுதான் வெறுப்பு கொண்டிருந்தனர். ஆங்கிலத்தின் மீது அல்ல. இப்பொழுது குறைந்த அளவில் மட்டுமே வடமொழி தமிழுக்கு ஊறு விளைவிக்கும் மொழியாகக் கருதப்படுகிறது. வடமொழிச் சொற்களைத் தமிழில் கலக்கக்கூடாது என்பது பலரின் வேண்டுகோள். இந்த வேண்டுகோள் பெருமளவில் நிறைவேற்றப்பட்டதாகவே கொள்ளலாம். மணிப்பிரவாள நடை வழக்கொழிந்து போய்விட்டது. வட மொழிச் சொற்களுக்கு மாற்றான தமிழ்ச் சொற்களைப் பலரும் விருப்புடன் எடுத்தாளத் துவங்கிவிட்டனர். வட மொழியினால் தமிழுக்கு அபாயம் எதுவும் இல்லை. ஏனெனில் தமிழும் வடமொழியும் தனித்தனியேயான உள்ளார்ந்த குணங்கள் கொண்டவை. வடமொழியில் இதிகாசங்களும் வேதங்களும் வளர்ந்தன. தமிழில் இலக்கியங்களும் நீதி நூல்களும் படைக்கப்பட்டன. பக்தி இலக்கியங்கள் தோன்றும்வரை இந்த நடைமுறை இருந்திருக்கிறது. வட மொழி வழக்கொழிந்து போனதற்கும் தமிழ் இன்றளவும் மக்கள் மொழியாக இருப்பதற்கும் இவையும் கூட காரணங்கள் எனலாம்.

ஆனால் தமிழர்கள் தங்களுக்கு வைத்துள்ள பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இருக்க வேண்டும் என்பதில் கருத்து வேற்றுமைகள் உள்ளன. இந்து சமயத்தைச் சேர்ந்த தமிழர்கள் இந்துக் கடவுள்களின் மற்றும் மகான்களின் பெயர்களைத் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் வைப்பதால் அவை தமிழ்ச் சொற்களாக இருப்பதில்லை. பெரும்பாலும் அவை வடமொழி சார்ந்தவை. ஆனால் அப்பெயர்களை வைப்பவர்கள் சமய இறையுணர்வு காரணமாகச் செயல்படுகிறார்களேயன்றி அவர்கள் தமிழ் உணர்வற்றவர்கள் என்று கொள்வது தவறான கற்பிதம். தமிழர்களான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள் போன்றோரும் தங்கள் இறைவழிபாட்டு பண்பினையொட்டி சமயப் பெயர்களைச் சூட்டுகிறார்கள். அப் பெயர்களும் அந்நிய மொழியிலிருந்து பெறப்பட்டவை. அவற்றுக்கும் மூலம் தமிழ் கிடையாது. கார்ல் மார்க்ஸ், சாக்ரடீஸ், இங்கர்சால் போன்ற அறிஞர்களின் பெயர்களை விரும்பி வைத்துக் கொள்பவர்களும் உள்ளனர். அப்பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல. எனவே இந்துக்கள் மட்டும் தங்கள் இறை நம்பிக்கை அடிப்படையில் அமைந்த பெயர்களை அவை வடமொழி மூலம் கொண்டிருக்கின்றன என்கிற காரணத்தால் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறுவது எவ்வகையிலும் நியாயமானதல்ல.

அது போன்றே ஷ,ஜ,ஸ ஆகிய எழுத்துகள் வந்தால் அவற்றுக்குப் பதிலாக ச என்ற எழுத்தையும் ஹ வந்தால் அதற்குப் பதிலாக அ என்ற எழுத்தையும் போட்டு எழுதுகிற பழக்கம் தமிழ்ப் பற்றை நிரூபிப்பதாகக் கொள்வது. வடமொழியில் மட்டும் இன்றி இந்த எழுத்துகள் பாரசீகம், அரபு, ஆப்ரிக்க மற்றும் ஐரோப்பிய மொழிகளிலும் காணப்படுகின்றன. எனவே பிறமொழிச் சொற்கள் கொண்டுள்ள ஒலியினை வரி வடிவத்தில் தமிழில் தர வேண்டும் என்றால் இந்த எழுத்துகளைக் கட்டாயமாக நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இதை மொழி பெயர்ப்பு இலக்கியம் அசட்டை செய்ய இயலாது. ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்று எழுதுவதால் என்ன பயன்? இவரல்ல அவர் என்கிற முடிவிற்கு வருவதைத் தவிர? ஒருவரது பெயரையே ஒப்புக்கொள்ளாதவர்கள் அவருடைய படைப்புக்கு எத்தகைய நியாயத்தை வழங்கி விட முடியும்? நம் மொழிக்குப் பிறர் இத்தகைய சிதைவுகளைச் செய்தால் நாம் மனம் ஒப்புவோமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆங்கிலேயர்கள் நம் ஊர் பெயர்களைச் சிதைத்ததை நாம் மீட்டெடுக்க முயற்சிக்கிறோம். தனித்துவம் மிக்க ழ என்கிற தமிழ் எழுத்து ஆங்கிலத்தில் LA என்று எழுதப்படுவதைவிட zha என்று அதன் உச்சரிப்பு கெடாமல் வரவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இதே ஆற்றலை நாம் மற்ற மொழிகளுக்கும் தர வேண்டுமல்லவா? வடமொழி உள்ளிட்டு எந்த மொழி மீதும் வெறுப்பினை வளர்த்துக் கொள்ளக் கூடாது. மொழிகள் பரஸ்பரம் கொள்கிற பாதிப்புகள் நாகரிகத்தின் அடையாளம். "பிற மொழிகள் மீது பகைமை கொள்ளாதே பாப்பா" என்கிற வரியையும் பாப்பா பாட்டில் சேர்த்துப் படிக்க வேண்டும்.

ஆங்கிலத்தைப் பொறுத்தவரை அதன் மீதான எதிர்கொளல் சிந்தித்துச் செயல்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. ஆங்கிலத்தை விரும்பிக் கற்பவர்களாயும் அதைப் பயன்படுத்துபவர்களாயும் உள்ள தமிழர்களை ஆங்கில மோகிகள் என்று வர்ணிப்பது பிழை. மோகம் என்பது பயனற்ற அர்த்தமற்ற விளைவுக்கு இட்டுச் செல்கிற மனோபாவத்தைக் குறிக்கும். தேர்ச்சி பெறுவதென்பது காலத்தின் இன்றியமையாமை ஆகும். ஆங்கிலத்தில் இரண்டு தமிழர்கள் ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் உரையாடுவது தவறு என்று பேசப்பட்டு வருகிற காலம் இது. ஆங்கிலத்தில் உரையாடினால் தமிழ் மெல்லச் சாகும் என்று சொல்லுமளவுக்குத் தமிழ் பலவீனமான மொழி அல்ல. தமிழர்களும் தமிழைத் தவிக்க விடுவதற்காக ஆங்கிலம் பேசுவதில்லை. தேவை கருதியும் தன்னம்பிக்கையின் அடையாளமுமாயும்தான் அவர்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள். அவர்கள் முழுதும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருப்பதில்லை என்பதையும், அது இயலாத ஒன்று என்பதையும் கூட கவனிக்க வேண்டும். இன்று தமிழர்களின் சமூக, பொருளாதார நிலை உயர்ந்திருக்கிறதென்றால் அதற்கு மிக முக்கிய காரணம் ஆங்கிலக் கல்வி. தமிழர்களின் வாழ்வில் வளம் சேர்ப்பது ஆங்கிலம்தான். தமிழர்களாகிய நாம் நம்மிடையே உள்ள பிற வளங்கள் என்ன என்பதைப் பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும். நம்மிடம் இயற்கை வளங்கள் குறைவு. வற்றாத நதிகள் என்று எதுவும் இல்லை. குடிநீருக்கே பிற மாநிலங்களை யாசிக்க வேண்டிய நிலை. ஏற்றுமதி செய்யத்தக்க கனிமப் பொருட்களோ நுகர் பொருட்களோ கணிசமான அளவில் இங்கு கிடையாது.
நாடு என்ப நாடாவளத்தன நாடல்ல / நாட வளம் தரும்நாடு என்றார் வள்ளுவர். நமக்கே இயற்கையாக வாய்க்கப்பெற்ற வளம்தான் நம்முடையது என்னும் பட்சத்தில் நம்மிடம் இருப்பதெல்லாம் மனித வளம்தான். நாம் மற்றவரிடமிருந்து எதையாவது பெறவேண்டுமென்றால் நாம் எதையாவது அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமல்லவா? நம்மால் கொடுக்க முடிவது மனித வளத்தைத்தான். காலம் காலமாகத் தமிழர்களாகிய நாம் நம் உழைப்பைத்தான் மற்றவர்களுக்குக் கொடுத்து வந்திருக்கிறோம். பிஜி, ஆப்ரிக்கா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்குக் கூலி வேலை செய்பவர்களைத் தருபவர்களாக தமிழகம் இருந்திருக்கிறது. ஆனால் இன்று அந்த அவல நிலை மாறி பிற நாடுகளுக்கு நாம் அறிவு சார்ந்த துறைகளில் வேலை செய்வதற்காக தமிழர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் ஆங்கில அறிவுதான். ஆங்கிலத்தில் நம்மவர்கள் பேசவும் எழுதவும் பெற்ற தேர்ச்சியின் விளைவே இது.
இந்தத் தேர்ச்சியை நாம் எவ்வாறு பெற்றோம்?


பல வருடங்களாக ஆங்கிலம் கற்றுப் பேசி எழுதிப் பெற்ற தேர்ச்சி இது. எனவே ஆங்கிலத்தில் பேச தேர்ச்சி பெற வேண்டுமென்றால் தமிழர்கள் பிற தமிழர்களிடம்தான் பேச வேண்டும். தமிழ் தெரியாதவர்களிடம் மட்டுமே ஆங்கிலம் பேச வேண்டுமென்றால் இந்தத் தேர்ச்சி வந்திருக்காது. சிறு வயது முதல் ஆங்கிலம் படித்தாலும் ஆங்கிலமே பேசியிராதவர்கள் இருபது வயதுக்கு மேல் வேலை நிமித்தமாக திடீரென சரளமாக ஆங்கிலத்தில் உரையாட முடியுமா? மொழிப் பயிற்சி சிறு வயதிலிருந்தே வருவது நல்லது.


நான் மம்மி என்று கூப்பிடுகிறேன். அதனால் நீ கவுன் அணிந்து முள் கரண்டியால் எனக்கு ரொட்டியை ஊட்டு என்றெல்லாமா அக்குழந்தை தன் தாயிடம் கேட்கிறது? தமிழ் உணர்வுடன் பண்பாட்டுடன்தான் அக்குழந்தை பேசுகிறது. மம்மி என்பது அக்குழந்தையின் ஆங்கில மழலை. நீ எனக்கு அம்மா என்ற சொல்லைக் கற்றுக் கொடுத்தாய், நான் மம்மி என்ற சொல்லைக் கற்று வந்திருக்கிறேன் பார் என்று அது பெருமிதத்துடன் சொல்வதைத் தமிழுக்கு எதிரான செயலாகப் படம் பிடித்துக் காட்டுவதும் ஆங்கிலத்தை விட்டுத் தமிழில் பேசுகிற குழந்தைகளுக்கு அபராதம் போடுகிற ஆங்கில வழிக் கல்வி தரும் பள்ளி ஆசிரியர்களின் கொடூரமும் மொழி பற்றிய புரிதலின்மை என்கிற ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும். மம்மி, டாடி என்பதெல்லாம் சரி, நீ அம்மா அப்பா என்றுதான் கூப்பிட வேண்டும் என்று அன்பாகக் கூறினால் அக்குழந்தை ஒரே நொடியில் தன்னை மாற்றிக் கொள்ளும்.


ஆங்கிலம் தமிழ்ச் சமூகம் வளர்ந்துள்ளது. ஆங்கிலம் போன்ற ஒரு மொழியின் வளத்தையும் உபயோகத்தையும் அம்மொழி தரும் வாய்ப்புகளையும் தமிழ் தரவேண்டுமென விரும்பும் நாம் ஆங்கிலத்தை ஒதுக்கி வைப்பது கூடாது. இந்தியாவின் எதிர்காலத்தை தொலைநோக்குடன் பார்த்த காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார் போன்றோர் நம்மை அடிமைப்படுத்தியவன் ஆங்கிலேயன் என்ற ஒரு காரணத்திற்காக ஆங்கிலத்தைப் பகைத்துக் கொள்ளுமாறு போதிக்கவில்லை. தலித் மக்களுக்கு ஆங்கிலக் கல்வி அவர்களது பின்தங்கிய நிலைகளிலிருந்து விடுதலையை அளிக்கும் என்று நம்பினார் அம்பேத்கர்.

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான பாரதிக்கு மட்டும் ஏனோ அச்சிறப்பு மிக்க கண்ணோட்டம் வாய்க்கவில்லை. ஆங்கிலக் கல்வியையும் ஏன், தன்னிடம் ஆங்கிலம் பேச வந்த தமிழர்களையும் சினந்தார் பாரதி. ஆங்கிலத் தேர்ச்சி மற்றும் பெற்றிராவிடில் பாரதி நவயுகத்தின் மகாகவியாக ஆகியிருக்க முடியாது என்பது நிச்சயம். ஷெல்லி, வால்ட் விட்மன் ஆகியோரின் நேரிடையான பாதிப்புகளுக்கு மட்டுமின்றி அவரது கவிதைகளில் இடம்பெற்ற முன்னோடியான சிந்தனைகளுக்கும் அவரது ஆங்கில அறிவே காரணம். கவிஞராக மட்டுமல்ல, ஒரு பத்திரிகையாளராக பாரதி ஆங்கில அறிவினால் அடைந்த பயன்களும் ஏராளம். ஆனால் பாரதி உட்பட அனைத்துத் தமிழர்களும் புத்திசாலிகள். அவர்கள் ஒருபோதும் மெய்யாக ஆங்கிலத்தைப் பகைத்துக் கொள்வதில்லை. தலைவன் முதல் தொண்டன்வரை ஆங்கிலத்திற்கு எதிராகப் பொது வெளிகளில் பேசுகிற அனைவரும் ஆங்கிலம் மீது விருப்பு கொண்டவர்கள். தங்கள் பிள்ளைகள் நன்கு ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதில் உறுதியானவர்கள். ஒரு பக்கம் வாழ்க்கை வெற்றிக்குத் தேவையான ஆங்கில அறிவை அடையும் முயற்சி. இன்னொரு பக்கம் தமிழ் பின்தங்கிவிடக்கூடாது என்று எண்ணிச் செயல்படுகிற தவிப்பு. இவைதான் தமிழனின் இன்றைய நிலை.


தமிழ் அசாதாரணமானதும் அற்புதமானதுமான ஒரு மொழி என்பதில் சந்தேகம் இல்லை. இத்தனை ஆயிரம் வருடங்களாக அது எத்தனையோ இடர்களைக் கடந்து இன்றும் இளமையுடன் தோன்றுகிறது. உலக ஓட்டத்துடன் தமிழ் தன்னைச் சளைக்காமல் இணைத்துக் கொள்கிறது. எந்த மொழியில் புதிய சொல்லாக்கங்கள் ஏற்பட்டாலும் அதற்குத் தமிழில் தக்க ஒரு சொல்லை உருவாக்கிவிட முடிகிறது. ஆனால் இதனால் நாம் எதையோ இழக்கிறோமோ என்றும் தோன்றுகிறது. ஆங்கில வழியில் வரும் சொற்கள் தான் தமிழில் மிகுதியாக இவ்வாறு மறு ஆக்கம் செய்யப்படுகின்றன. ஆங்கிலப் பதங்களுக்கு தமிழ்ச் சொற்களை உருவாக்குவது என்றில்லாமல் சுயமாக ஒரு கருத்துக்குத் தமிழில் சொல்லாக்கம் செய்வது என்பது அரிதாக உள்ளது. அவ்வாறு சமீபத்தில் வெற்றிகரமாகப் பெறப்பட்ட ஒரு சொல் திருநங்கை. நேரிடையாக பல ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் சொற்கள் உருவாக்கப்படுகின்றன. குதிரை பேரம், பங்குச் சந்தை வார்த்தைகளான கரடி, காளை, தொங்கு பாராளுமன்றம், ஓடு தடம், மென்பொருள், அலை வரிசை, கறுப்பு ஆடு, நீர்வீழ்ச்சி, தொலைக்காட்சி இப்படி ஏராளமான சொற்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனை நேரிடையாக இல்லாமல் பொருளை உள்வாங்கி உருவாக்கப்படும் சொற்களும் உள்ளன. நகை, முரண், புகைப்படம், பேருந்து, காசோலை, கணினி, வானொலி போன்ற பல சொற்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
அவ்வாறு இருவகையிலும் உருவாக்கப்பட்ட சொற்கள் கலைச் சொற்கள் போன்றவை. தமிழ் எழுத்து நடையில் இத்தகைய சொற்கள் நாளும் பெருகி வருவதைப் பார்க்க முடிகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இத்தகைய சொற்களின் வரத்து அதிகமாகி எழுத்து தமிழ் உருவாக்கப்பட்ட சொற்களின் கோவையாக விளங்கக்கூடும். பேச்சுத் தமிழுக்கும் எழுத்து தமிழுக்கும் மேலும் இடைவெளி இதனால் அதிகமாகும் என்பதோடு மட்டுமின்றி, இது நாள் வரை தமிழ் மொழி என்பது வாழ்விலிருந்து பெறப்பட்டது என்கிற வழக்கிலிருந்தும் மாறுபட்டதாகி தமிழுக்கு செயற்கைத் தன்மை வந்து சேரும். இது தமிழ் மட்டுமின்றி பிற இந்திய மொழிகளுக்கும்கூட பொருந்தும்.


இதற்கெல்லாம் காரணம் தமிழர்களாகிய நாம் உலகை ஆள்வதில் பங்கேற்பதில்லை என்பதுதான். பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் முன்னோடி அங்கம் ஏற்பதில்லை என்பதில் மட்டுமல்ல, அறிவு சார்ந்த இயக்கங்களையும் நாம் உருவாக்குவதில்லை. தமிழில் இலக்கியம் தவிர புதிதாக எதுவும் படைக்கப்படுவதில்லை. கண்டுபிடிப்புகள், கருத்தாக்கங்கள் அனைத்தும் நமக்கு மேற்கிலிருந்து வருகின்றன. நாம் அவற்றை நம் மொழியில் செவ்வனே பொருத்திக் கொள்கிறோம். அதற்கேற்ப மாற்றுச் சொற்களை உருவாக்கிக் கொள்கிறோம். சுயமாக கண்டுபிடிப்புகளும் கருத்தாக்கங்களும் தமிழர்களால் செய்யப்பட்டு அவை தமிழில் பதிக்கப்படும் வரை இந்த வறுமை நீடிக்கும். அதுவரை கோடிக்கணக்கானவர்களின் அன்றாட மொழியாகத் தொடர்ந்தாலும் தமிழ், மொழி சார்ந்த பெருமையில்தான் திளைக்க வேண்டியிருக்கும்.

நோபல் பரிசு பெற்ற தமிழ் விஞ்ஞானிகளான சி.வி.ராமன், எஸ்.சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் ஆய்வுகளைத் தமிழிலும் எழுதி வெளியிட்டிருந்தார்களேயானால் இந்த நிலைமை மாறியிருக்கும். இனிவரும் காலங்களில் பல்துறை சார்ந்த தமிழ் அறிஞர்கள் தங்கள் ஆய்வுகளை ஆங்கிலத்தில் வெளியிடுகிற அதே சமயத்தில் சற்றும் காலம் தாழ்த்தாது தமிழிலும் வெளியிட்டால் அது ஒரு முன் மாதிரியான முயற்சியாகத் தமிழை உலகத்திற்கு எடுத்துச் செல்கிற செயலாக இருக்கும். இவ்வாறு செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை, விருது என்றெல்லாம் எதுவும் தரப்பட வேண்டியதில்லை. இயல்பான தமிழ் உணர்வு எல்லா தமிழர்களிடமும் செயல்பட வேண்டும்.
தமிழை மற்ற மொழிகளுடன் குறிப்பாக, ஆங்கிலத்துடன் போட்டியிடும் மொழியாகப் பாவிப்பதனால் தான் பல பிரச்சினைகள் எழுகின்றன. வேலை வாய்ப்புக்கும் வெளி உலகத் தொடர்புக்கும் தமிழ் உபயோகமாக இருக்குமா என்ற கோணத்தில் தமிழைப் பார்க்கக்கூடாது. அவ்வாறு தமிழ் இல்லாத பட்சத்திலும் தமிழ் நம் மொழி, அதை நன்கு கற்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர வேண்டும். தமிழ்நாட்டிற்குள் மட்டும் செயல்படுகிற நீதிமன்றங்கள், அரசு நிர்வாகங்கள் ஆகியன தமிழில் இருக்க வேண்டும்.


வருங்கால சந்ததியினருக்கு தமிழின்பால் தன்னார்வத்தை தூண்டுமாறு இன்றைய தலைமுறையினர் செய்யவேண்டும். தமிழ் படிக்க வரும் மாணவர்களை வேதனைப்படுத்தக்கூடாது. கடினமான தமிழைப் படிப்பதைவிட பிரெஞ்சு, வடமொழி ஆகியவற்றைப் படித்தால் சுலபமாக மார்க் வாங்கிவிடலாம் என்ற யதார்த்தத்தை மாற்றும் வகையில் தமிழ் படிப்பும் சுலபமாக இருக்க வேண்டும். தமிழை வைத்து தமிழ் மாணவர்களையே மிரட்டினால் பின்னர் அதைப் படிக்க வேறுயார் வருவார்கள்? பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இன்று இருப்பது போல் வெறும் இலக்கிய, இலக்கணப் படிப்பாக மட்டும் தமிழ் இருக்கக் கூடாது.

தமிழ் அதிகாரப்பூர்வ செம்மொழியாகி விட்டபடியால் உலகெங்கிலுமுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதை அரசாங்கம்தான் செய்ய வேண்டும் என்றில்லாது வசதி படைத்த தனியார்களும் செய்ய விரைந்து முன்வரலாம். தமிழைப் பரப்புவது என்பது தமிழைத் தமிழர்களின் எல்லைக்கு அப்பால் கொண்டு செல்வதாகும். தமிழைத் தமிழர் மட்டுமே படிப்பது, எழுதுவது என்றில்லாது தமிழைத் தமிழ் அல்லாதோரும் அறிந்து கொள்ளுமாறு செய்யவேண்டும். அதுவே தமிழருக்கும் தமிழுக்கும் பெருமை!.

மொழிப்போர்...

ஓரினம் தனது அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு பல வழிகளிலும் போராடத்தான் வேண்டியிருக்கிறது. நாடு, எல்லை என தனக்கான தன்னாட்சி உரிமையைப் பெறுவதற்கும், அதனை தொடர்ச்சியாகத் தக்க வைப்பதற்குமான கலகங்களும், சச்சரவுகளும் உலகெங்கும் நடைபெற்ற வண்ணமிருக்கின்றன. இதில், அவ்வின மொழியின் இருப்பும், முதன்மை பெறுகிறது. "ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அது பேசுகின்ற மொழியை முதலில் அழித்துவிடு" எனும் வல்லாதிக்க சித்தாந்தத்தை எதிர்கொண்ட மொழிகளுள், தனிச்சிறப்பிற்குரிய இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது தமிழ்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழியின் மீது நடத்தப்படுகின்ற, அழித்தொழிப்புப் பணியில் தற்போது வரை தப்பிப் பிழைத்திருக்கிறது என்றால், அது தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அணியப்படுத்திக் கொண்ட கழக இலக்கியங்களும், காப்பியங்களுமே முதன்மைக் காரணமாகும். எத்தனையோ வடிவங்களில் நடைபெற்ற, எவ்வளவோ அழிவுச் செயல்பாடுகளுக்கு இடையிலும் தமிழ் மொழியின் தலைநிமிர்ந்த நன்னடை, பெருமைக்குரியதாக இருக்கிறது. ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இன்று கணினியில் மாபெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கும் தமிழ்மொழியின் வரலாற்று வழித்தடம், அண்மைக் காலம் வரை கரடுமுரடாய்த்தான் இருந்திருக்கிறது. இப்போதும் அது போன்ற தடத்திலேதான் பயணம் செய்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.

சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்பாகவே தமிழ்ச்சமூகம், பரந்து பட்ட அளவில் கல்வியறிவு பெற்றிருந்ததை, மதுரைக்கு அருகிலுள்ள ஆண்டிப்பட்டி புள்ளிமான் கோம்பையில் கிடைத்த நடுகற்கள் சான்றாய் நின்று பகர்கின்றன. கோவையில் கிடைத்த சூலூர் மண் தட்டில் காணப்படும் குறியீடுகளும், சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகளும் ஒத்ததாய் அமைந்திருப்பது, தமிழ்ப்பண்பாட்டின் நாகரிகம் எவ்வளவு பழமை வாய்ந்தது என்பதை உரக்கத் தெரிவித்துள்ளது. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு மேலும் பல வரலாற்றுத் தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளது. "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று அறிவுச் செருக்கோடு உலகத்திற்கே வாழ்வியல் எதார்த்தத்தை வழங்கிய தமிழ் மொழி, இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறையவே உள்ளது. இதற்கிடையே, நேற்றுப் பிறந்த மொழிகளோடும், அதற்கு முந்தைய நாள் பிறந்த மொழிகளோடும் ஒப்பிட்டு, தமிழின் செம்மொழிப் பெருமையைக் கீழிறக்கும் செயல்களும் நம் கண் முன்னே அரங்கேற்றப்படுகிறது என்பதையும் நாம் கணக்கிலே கொண்டாக வேண்டும்.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற மொழிப்போர் குறித்து இப்போதுள்ள இளந்தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. கல்லூரி மாணாக்கர்கள், போர்க்குணத்துடன் தாங்கள் எண்ணிய இலக்கு ஈடேறுவதற்காக, மண்டை உடைந்து, கை கால் ஒடிந்து, குருதி சொட்ட, உயிர் ஈகம் செய்த வரலாறு, தமிழகத்தின் கருஞ்சிவப்புப் பக்கங்களாகும். 1965ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராய் இருந்த காங்கிரஸ் கட்சியின் பக்தவச்சலம், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தன்னெழுச்சியாய் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, அதில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை கதறக் கதற லத்தியால் அடித்த அடியை எவராலும் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது. அன்று அடி வாங்கிய பெரும்பாலான மாணவர்கள் இன்று திராவிடக் கட்சிகளின் பல்வேறு பொறுப்புகளிலும், பல தமிழ்த் தேசிய அமைப்புகளிலும் வாழும் சான்றாக தற்போதும் உயிருடன் இருக்கிறார்கள். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணா தலைமையில் இப்போராட்டத்தை முன்னின்று நடத்திய திராவிட முன்னேற்றக் கழகம், அப்போது மொழியுணர்வோடும், இனவுணர்வோடும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நாடு விடுதலையடைவதற்கு முன்பாக அப்போதைய சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த இராஜகோபாலாச்சாரியார், 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாள் முதன் முதலாக இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து பெரியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ மற்றுமுள்ள தமிழறிஞர்களும் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். தொண்டர்களும், தலைவர்களுமாக பல்லாயிரக்கணக்கானோர் இப்போராட்டத்தில் திரண்டனர். இதற்கிடையே முதலமைச்சரின் வீட்டிற்கு முன்பாக உண்ணாநோன்பிருந்த பல்லடம் பொன்னுசாமி என்பார் இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில் முதல் நபராகக் கைதானார். அதே ஆண்டு டிசம்பர் 5ஆம் நாள் இந்தி மொழி எதிர்ப்பிற்காக நடராசன் கைது செய்யப்பட்டார். சிறையில் கடும் தாக்குதலுக்கு ஆளான நடராசன், 1939ஆம் ஆண்டு சனவரி 15ஆம் நாள் இறந்துபோனார். இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் ஈகம் செய்த முதல் போராளி இவர். தர்மாம்பாள், நாராயணி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உள்ளிட்ட பெருமளவிலான பெண்களும் இப்போராட்டத்தின் விளைவாக கைது நடவடிக்கைக்கு ஆளாயினர்.
இந்தித் திணிப்பிற்கு ஆதரவான அரசின் முயற்சிகளுக்கு 1938ஆம் ஆண்டு இராஜாஜி வித்திட்டாரென்றால், அதற்கு எதிரான போராட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தவர் பெரியார் ஈ.வெ.ரா. இந்தி மொழிக்கு எதிரான போராட்டத்தில் இறந்துபோன நடராசனின் இறப்பை இராஜாஜி, பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்தார். இரண்டாவது மொழிப் போராட்டமாய்க் கருதப்படும் 1948ஆம் ஆண்டிலும் அதே காங்கிரஸ் அரசு, முதல்வராய் அமர்ந்த ஓமந்தூர் இராமசாமி மூலம் இந்தித் திணிப்பை மேற்கொண்டது. அப்போதும் பெரியார் தலைமையில் அறிஞர் அண்ணா, திரு.வி.க., பாரதிதாசன், தருமாம்பாள் என பல்வேறு தலைவர்களும், அறிஞர்களும் போராட்டங்கள் பல நடத்தி சிறை புகுந்தனர்.
வெள்ளை ஏகாதிபத்தியத்திடமிருந்து நாடு விடுதலை பெற்ற பின்னர், இந்தியா தனக்கென்று அரசியல் அமைப்பை உருவாக்க முடிவு செய்தது. இதற்கென்று உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புக் குழு இந்தியாவின் ஆட்சி மொழி குறித்த கலந்துரையாடலை 1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தியது. அரசியலமைப்பு அவையில் இருந்த காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், தனியே நடத்திய கூட்டத்தில் ஆட்சி மொழி வாக்கெடுப்பை நடத்தினர். இதில் இந்திக்கு ஆதரவாக 77 வாக்குகளும், ஆங்கிலத்திற்கு ஆதரவாக 77 வாக்குகளும் கிடைத்தன. அப்போது அந்தக் கூட்டத்தின் தலைவராக இருந்த பட்டாபி சீதாராமய்யர் தனது ஓட்டை இந்திக்கு ஆதரவாகப் பதிவு செய்ததால் ஒரு வாக்கு வேறுபாட்டில் இந்தி மொழி வெற்றி பெற்றது. இதற்குப் பிறகு இந்தி மொழியை, அதனைப் பேசாத பிற மாநிலங்களில் திணிப்பதற்கு காங்கிரஸ் பெரும் முயற்சி எடுத்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் விரும்பாத நிலையில் இந்தித் திணிப்பு விரைவுபடுத்தப்பட்டது. 1950 சனவரி 26ஆம் நாள் இந்திய அரசியலமைப்பு சட்டம் 17ஆவது பிரிவின் கீழ் இந்தி, நடுவணரசின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.


இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான போரில் முளைத்த திராவிட முன்னேற்றக் கழகம், தொடர்ந்து பல்வேறு பேராட்டங்களை நடத்தியது. அக்கட்சியின் இதழ்களிலும், வேறு பல ஏடுகளிலும் இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பு அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவின் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இதன் விளைவாக 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் நாள் மக்களவையில் பிரதமர் நேரு, "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்கும்" என்று உறுதியளித்தார். இதனையடுத்து தற்காலிகமாக மூன்றாவது மொழிப்போர் முடிவுக்கு வந்தது. ஆனால் 1963ஆம் ஆண்டிலிருந்து 1965ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நான்காவது மொழிப்போர், இரத்தம் சிந்திய போராட்டமாக அமைந்துவிட்டது. அப்போதும் காங்கிரஸ் கட்சியே இந்தித் திணிப்பை முன்னெடுத்தது. நடுவண் உள்துறை அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி 1963ஆம் ஆண்டு, ஏப்ரல் 13ஆம் நாள் கொண்டு வந்த ஆட்சி மொழி குறித்த சட்ட முன்வரைவு, பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பின. இதன் விளைவாக ஒட்டு மொத்த தமிழகமே கொந்தளித்தது. அண்ணா தலைமையில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் தமிழகம் முழுவதும் பரவின.
கல்லூரி மாணவர்கள் அனைவரும் இந்தித் திணிப்பிற்கு எதிரான பெரும் போரில் சிறிதும் தயக்கமின்றி குதித்தனர். காங்கிரஸ் தலைமையிலான பக்தவச்சலம் அரசு மிக மோசமான ஒடுக்குமுறைகளைக் கையாண்டது. தமிழகக் காவல்துறை, மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக்குள் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக அடித்தத் காங்கிரஸ் தொண்டர்களைத் தயார் செய்து, ஆங்காங்கே மாணவர்கள் மீது உருட்டுக் கட்டைகளால் தாக்கியது என வரலாறு காணாத அளவில் பெரும் வன்முறைக் காடாக தமிழகத்தை மாற்றிக் காட்டியது பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இந்த நெடும் போராட்டத்தில் தான் வெறும் 21 வயதே ஆன கீழப்பழுவூர் சின்னச்சாமி, திருச்சி தொடர்வண்டி நிலையத்திற்கு முன்பாக "இந்தி ஒழிக, தமிழ் வாழ்க!" என்று முழக்கமிட்டு, தன் உடலுக்குத் தீ வைத்துக் கொண்டு இறந்து போனார்.


மதுரையில் நடைபெற்ற கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில், திட்டமிட்டு வன்முறையைத் தூண்டிய காங்கிரஸ் அரசு, மாணவர்களை ஓட, ஓட அடித்து விரட்டியது. அதில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். 1965 சனவரி 26ஆம் நாள் சிவலிங்கம் என்ற திமுக தொண்டர், சென்னை கோடம்பாக்கத்தில் தீக்குளித்து இறந்து போனார். மொழிக்காக உயிரை ஈந்த இத்தியாகப் போராட்டத்தை பக்தவச்சலம், சட்டமன்றத்தில் மிக இழிவாகப் பேசினார். பிறகு பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் தீக்குளித்து இறத்தல் தொடர்கதையாகின. 1965ஆம் ஆண்டு ஐம்பது நாட்கள் நடைபெற்ற நான்காவது மொழிப் போராட்டத்தில், காங்கிரஸ் அரசால் நடத்தப்பட்ட வன்முறையின் காரணமாய் சற்றேறக்குறைய 500 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமுற்றனர்.


இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நடந்த போராட்டங்கள் அனைத்தையும் அப்போதிருந்த இளைஞர்களும், மாணவர்களுமே பெரும் எழுச்சியோடு நடத்தினர். நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்து தமிழ் மொழியைக் காப்பாற்றினாலும் கூட, நடுவணரசின் மறைமுக வேலைத்திட்டமும், மாநிலக் கட்சிகளின் கையாலாகாத்தனமும் இந்தியை கொஞ்சம், கொஞ்சமாய் தமிழகத்திற்குள் தற்போது கொண்டு வந்து கொண்டிருக்கிறது. "அனைவருக்கும் கல்வி" என்பதைக் காட்டிலும் "சர்வ சிக்ச அபியான்" வெகு இயல்பாக புழங்கப்படுகிறது. தமிழகத்திலுள்ள நடுவண் அரசின் அனைத்துத் துறைகளும் இந்தியை மெல்ல மெல்ல புகுத்தி வருகின்றன. நடுவண் அரசின் காப்பீட்டுத் திட்டங்களும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் இந்தித் திணிப்பை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அறிஞர் அண்ணா, "மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக எப்போது அறிவிக்கப்படுகிறதோ, அப்போதுதான் இந்த மொழிப்போர் முடிவிற்கு வரும்" என்றார். அந்த நிலை அய்யாவால் சாத்தியமாகுமா..? அல்லது அம்மாவால் சாத்தியமாகுமா..? என்பது இன்னமும் விளங்காத புதிர்.


மொழிப் போராட்டத்தை கையிலெடுத்து, ஆளும் உரிமையைப் பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் மொழி, இன உணர்வைக் காப்பாற்ற தன்மரியாதையோடு செயல்படத் தொடங்கும் நாள் எந்நாளோ? இரு கழகங்களின் ஆட்சியில் தான் ஆங்கில வழியிலான நர்சரிப் பள்ளிகள் வெகு வேகமாக வளர்ந்தன. தமிழ் உரையாடல்கள் அவ்வப்போது தலைகாட்டும் வண்ணம் தமிழ்த் திரைப்படங்களின் வளர்ச்சி விரைவடைந்ததும் கழகங்களின் காலத்தில்தான். தற்போது கிரந்த எழுத்துக்களைக் கொண்டு தமிழ்மொழியின் கணினிப் பயன்பாட்டு வளர்ச்சியைத் தடை செய்கின்ற முயற்சியும் திமுகவின் காலத்தில்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு தலைமுறையே தமிழ் மொழியை உச்சரிக்கும் திறனற்று, ஆங்கில மோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் மனநிலையை ஊக்குவித்தது திமுகவும் அதன் அரசியல் எதிரியான அதிமுகவும்தான்.
தமிழ்வழியில் பயின்றோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற திமுக அரசின் அறிவிப்பிற்கு நீதிமன்றம் சென்று தடையாணை பெறுகின்ற அளவிற்கு தமிழ் மொழிக்கெதிரான செயல்பாடுகள் அப்பட்டமாகவே தமிழகத்தில் நடைபெறுகின்றன. இதற்கெல்லாம் தமிழகத்தை ஆளுகின்ற, ஆளப்போகின்ற கழக அரசுகள் என்ன சொல்லப் போகின்றன? அண்டை மாநிலங்களான மராட்டியமும், கன்னடமும், மலையாளமும் தனது தாய்மொழியின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் பங்காற்றுகின்ற போது, தமிழகத்தால் மட்டும் இயலாமற்போனது ஏன்? மொழி வழி தேசியம் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டு, அண்டைத் தேசிய இனங்கள், அதனதன் மாநிலத்திற்குள் ஒன்று சேரும்போது தமிழகத்தில் மட்டும் அவ்வாறு இயலவில்லையே என்ன காரணம்? முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி போன்ற உயிராதாரச் சிக்கல்களில் கூட தமிழர்களால் ஒன்று பட இயலாமற் போனதற்கு யாரைக் குற்றம் சாட்டுவது? இவையனைத்திற்கும் காரணம் தன்னல அரசியலன்றி வேறு எது?

முதல் பத்து இடத்தில் தமிழ்மொழி!

உலகின் மிகப் பிரபலமான அகரமுதலிகளுள் முதன்மை இடத்தை வகிக்கும் விக்கி அகரமுதலி தனது அடையாள முத்திரையில் தமிழையும் இடம் பெறச் செய்துள்ளது. தற்போது விக்கி அகரமுதலியில் (http://www.wiktionary.org/) மட்டும் ஒரு இலட்சத்து 92 ஆயிரம் சொற்கள் இடம்பெற்று முதல் பத்து இடங்களுக்குள் தமிழ் இடம் பெற்றுள்ளது (http://meta.wikimedia.org/wiki/Wiktionary#Statistics). இந்திய மொழிகளுள் எவையும் இந்த இடத்தைப் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் பேச உறுதியேற்போம்!

இன்று கணினியில் தமிழ் கோலோச்சுவதற்கு புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களும், ஈழத் தமிழர்களுமே மிக முக்கியக் காரணம். மொழிப் போராடத்தை தீவிரமாக நடத்திக் காட்டிய தமிழ் மண்ணில் பிறந்தோர் தற்போது ஒரு சொற்றொடரைக் கூட முழுமையாகத் தமிழில் பேச இயலவில்லை. இதற்கெல்லாம் காரணம் நம்மை ஆளுகின்ற அரசுகளின் பலவீனமே! இந்தி மொழிப்போர் ஈகியர் நாளிலாவது நாம் அனைவரும் தாய்மொழியில் உரையாட உறுதியேற்போம்.

ஆய கலைகள்


விகடனில் கவிஞர் வைரமுத்துவின் பதில்கள் பகுதியில் "ஆய கலைகள் அறுபத்தி நான்கு எவை?' என கூறியுள்ளார்.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
1) ஆடல்
2)இசைக்கருவி மீட்டல்
3)ஒப்பனை செய்தல்
4)சிற்பம் வடித்தல்
5)பூத் தொடுத்தல்
6)சூதாடல்
7)சுரதம் அறிதல்
8)தேனும், கள்ளும் சேகரித்தல்
9)நரம்பு மருத்துவம்
10)சமைத்தல்
11)கனி உற்பத்தி செய்தல்
12)கல்லும் பொன்னும் பிளத்தல்
13)கரும்புச் சாற்றில் வெல்லம் எடுத்தல்
14)உலோகங்களில் மூலிகை கலத்தல்
15)கலவை உலோகம் பிரித்தல்
16)உலோகக் கலவை ஆராய்ந்து அறிதல்
17)உப்பு உண்டாக்குதல்
18)வாள் எறிதல்
19)மற்போர் புரிதல்
20)அம்பு தொடுத்தல்
21)படை அணி வகுத்தல்
22)முப்படைகளை முறைப்படுத்தல்
23)தெய்வங்களை மகிழ்வித்தல்
24)தேரோட்டம்
25)மட்கலம் செய்தல்
26)மரக்கலம் செய்தல்
27)பொற்கலம் செய்தல்
28)வெள்ளிக்கலம் செய்தல்
29)ஓவியம் வரைதல்
30)நிலச் சமன் செய்தல்
31)காலக் கருவி செய்தல்
32)ஆடைக்கு நிறமூட்டல்
33)எந்திரம் இயற்றல்
34)தோணி கட்டல்
35)நூல் நூற்றல்
36)ஆடை நெய்தல்
37)சாணை பிடித்தல்
38)பொன்னின் மாற்று அறிதல்
39)செயற்கை பொன் செய்தல்
40)பொன்னாபரணம் செய்தல்
41)தோல் பதனிடுதல்
42)மிருகத் தோல் உரித்தல்
43)பால் கறந்து நெய்யுருக்கல்
44)பொன் முலாமிடுதல்
45) தையல்
46)நீச்சல்
47)இல்லத் தூய்மையுறுத்தல்
48)துவைத்தல்
49)மயிர் களைதல்
50)எள்ளில் இறைச்சியில் நெய் எடுத்தல்
51)உழுதல்
52)மரம் ஏறுதல்
53)பணிவிடை செய்தல்
54)மூங்கில் முடைதல்
55)பாத்திரம் வார்த்தல்
56)நீர் கொணர்தல், நீர் தெளித்தல்
57)இருபாயுதம் செய்தல்
58)மிருக வாகனங்களுக்குத் தவிசு அமைத்தல்
59)குழந்தை வளர்ப்பு
60)தவறினை தண்டித்தல்
61)பிற மொழி எழுத்தறிவு பெறுதல்
62)வெற்றிலை பாக்கு சித்தப்படுத்தல்
63)மேற்கூறிய கலைகளை உள்வாங்கும் விரைவு
64)வெளிப்படுத்தும் நிதானம்

சுக்கிர நீதி சொல்லும் ஆய கலைகள் அறுபத்தி நான்கும் இவைதான்.

வேறொரு பட்டியல்


இலக்கம் கலை தமிழ் விளக்கம்
1. அக்கர இலக்கணம் - எழுத்திலக்கணம்
2. லிகிதம் (இலிகிதம்) - எழுத்தாற்றல்
3. கணிதம் - கணிதவியல்
4. வேதம் மறை - நூல்
5. புராணம் - தொன்மம்
6. வியாகரணம் - இலக்கணவியல்
7. நீதி சாஸ்திரம் - நய நூல்
8. சோதிடம் - கணியக் கலை
9. தரும சாஸ்திரம் - அறத்து பால்
10. யோகம் - ஓகக் கலை
11. மந்திரம் - மந்திரக் கலை
12. சகுனம் - நிமித்தக் கலை
13. சிற்பம் - கம்மியக் கலை
14. வைத்தியம் - மருத்துவக் கலை
15. உருவ சாஸ்திரம் - உருப்பமைவு
16. இதிகாசம் - மறவனப்பு
17. காவியம் - வனப்பு
18. அலங்காரம் - அணி இயல்
19. மதுர பாடனம் - இனிது மொழிதல்
20. நாடகம் - நாடகக் கலை
21. நிருத்தம் - ஆடற் கலை
22. சத்த பிரமம் - ஒலிநுட்ப அறிவு
23. வீணை யாழ் - இயல்
24. வேனு - குழலிசை
25. மிருதங்கம் - மத்தள நூல்
26. தாளம் தாள - இயல்
27. அகத்திர பரீட்சை - வில்லாற்றல்
28. கனக பரீட்சை - பொன் நோட்டம்
29. இரத பரீட்சை - தேர் பயிற்சி
30. கஜ பரீட்சை - யானையேற்றம்
31. அசுவ பரீட்சை - குதிரையேற்றம்
32. இரத்தின பரீட்சை - மணி நோட்டம்
33. பூ பரீட்சை - மண்ணியல்
34. சங்கிராமஇலக்கணம் - போர்ப் பயிற்சி
35. மல்யுத்தம் - கைகலப்பு
36. ஆகர்ஷணம் - கவிர்ச்சியல்
37. உச்சாடணம் - ஓட்டுகை
38. வித்து வேஷணம் - நட்பு பிரிக்கை
39. மதன சாஸ்திரம் - மயக்குக் கலை
40. மோகனம் - புணருங் கலை (காம சாத்திரம்)
41. வசீகரணம் - வசியக் கலை
42. இரசவாதம் - இதளியக் கலை
43. காந்தர்வ விவாதம் - இன்னிசைப் பயிற்சி
44. பைபீல வாதம் - பிறவுயிர் மொழி
45. தாது வாதம் - நாடிப் பயிற்சி
46. கெளுத்துக வாதம் - மகிழுறுத்தம்
47. காருடம் - கலுழம்
48. நட்டம் - இழப்பறிகை
49. முட்டி - மறைத்ததையறிதல்
50. ஆகாய பிரவேசம் - வான்புகுதல்
51. ஆகாய கமனம் - வான் செல்கை
52. பரகாயப் பிரவேசம் - கூடுவிட்டு கூடுபாய்தல்
53. அதிரிச்யம் - தன்னுறு கரத்தல்
54. இந்திர ஜாலம்- மாயம்
55. மகேந்திர ஜாலம் - பெருமாயம்
56. அக்னி ஸ்தம்பம் - அழற் கட்டு
57. ஜல ஸ்தம்பம் - நீர்க் கட்டு
58. வாயு ஸ்தம்பம் - வளிக் கட்டு
59. திட்டி ஸ்தம்பம் - கண் கட்டு
60. வாக்கு ஸ்தம்பம் - நாவுக் கட்டு
61. சுக்கில ஸ்தம்பம் - விந்துக் கட்டு
62. கன்ன ஸ்தம்பம் - புதையற் கட்டு
63. கட்க ஸ்தம்பம் - வாட் கட்டு
64. அவத்தை பிரயோகம் - சூனியம்

Wednesday, 7 August 2013

வீரகேரளம்புதூர் அருகே இறந்தவரின் உடலை எடுத்து செல்வதில் பிரச்னை ஆலங்குளம் டிஎஸ்பி., சமரச பேச்சுவார்த்தை

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2013,06:55 IST
கருத்தை பதிவு செய்ய
வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் அருகேயுள்ள கழுநீர்குளம் கிராமத்தில் இறந்தவரின் உடலை எடுத்து செல்வதில் இரு சமயத்தினரிடையே பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அனைத்து சமயத்தினரும் இணக்கமாக வாழ்ந்து வரும் கழுநீர்குளத்தில் பள்ளிவாசலுக்கு சுற்றுச் சுவர் கட்டுவதில் முஸ்லிம் மற்றும் இந்துக்களிடையே பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த ஆண்டபெருமாள் மனைவி இசக்கியம்மாள் நேற்று இறந்துவிட்டார். இவரது உடலை முஸ்லிம் தெரு வழியாக எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர். வழக்கமாக இறந்தவர்களை எடுத்துச்செல்லும் தெருவை விட்டு முஸ்லிம் தெருவழியே எடுத்துச்சென்றதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ரோட்டில் திரண்டனர்.

இதனைத்தொடர்ந்து எதிர்தரப்பினரும் ரோட்டில் திரண்டனர். தகவலறிந்து ஆலங்குளம் டி.எஸ்.பி., லயோலா இக்னேஷியஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், வீரகேரளம்புதூர் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸ் படைகுவிக்கப்பட்டது. போலீசார் இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதனால் கழுநீர்குளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பிரச்னை ஏற்படாமலிருக்க கழுநீர்குளத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.