Pages

Sunday, 28 December 2014

வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரின் தமிழலங்காரம்

(விழுப்புரம் இலக்கியக்கூடலில் நூல் அறிமுக உரை)

1.1. இயல்பு
பிறப்பு என்பது ஒரு நேர்ச்சி – விபத்து - போன்றது ‘Birth is an accident” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எவரும் தாம் விரும்பிய நாட்டில், விருப்பமான பகுதியில், விருப்பமான மக்கள் கூட்டத்தில் பிறக்கின்ற வாயப்பைப் பெற்றிருக்கவில்லை. பிறந்தபின், தாய்நாட்டின் மீதும் தாய்மொழியின் மீதும் பற்றுள்ளவராக இருப்பதென்பது இயல்பானதே!
‘காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு’ என்பது போல அவரவருக்கும் அவரவருடைய இனம், அவரவர்களின் மொழி -உயர்ந்தது; சிறந்தது; பெருமை மிக்கது தான்! இருந்தபோதிலும், தமிழர்கள் வரலாறு தொடர்பாகவும், தமிழின் வரலாறு தொடர்பாகவும் கூறப்பட்டு வருகின்ற ஆய்வறிஞர்களின் கருத்துக்கள் வியப்பும் பெருமிதமும் அளிக்கக்கூடியனவாக இருக்கின்றன.

1.2.. குமரிக்கண்டம்
இப்போதிருக்கும் இந்திய தேசப்படத்தில் கன்னியாக்குமரி முனைக்குக் கீழே நாம் பார்க்கும் – அரபிக்கடல், வங்காள விரிகுடாக்கடல், இந்துமாக்கடல் – ஆகிய மூன்றுகடல்களின் கூடலாகக் காணப்படும் கடல் பகுதி ஒருகாலத்தில் பெரும் நிலப்பரப்பாக இருந்தது என்பது ஆய்வாளர் கருத்தாகும்.
அதாவது இலட்சத் தீவுகள், அந்தமான் நக்காவரம் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா சேர்ந்த இப்போதிருக்கும் கன்னியாகுமரியின் தென்பகுதி முழு நிலப்பகுதியாக இருந்தது;
அப்பெரு நிலப்பரப்பைத் தமிழர், ‘குமரிக்கண்டம்’ என்றனர். குமரியாறு, பஃறுளியாறு, குமரிமலை போன்றவை அப்பகுதியில் இருந்தன.
உயிரியல் ஆய்வாளர்கள் அதை ‘இலெமூரியாக் கண்டம்’ என்கின்றனர். நிலத்தியல் ஆய்வாளர்களோ அதனைக் ‘கோண்டுவானாக் கண்டம்’ என்கிறார்கள்.

1.3. மேற்குலக அறிஞர் உறுதிப்படுத்தல்
ஆப்பிரிக்காவையும் உள்ளடக்கிய அந்தக் குமரிக்கண்ட பெருநிலப் பகுதியிலேயே முதன் முதலாக மக்களினம் தோன்றியது என்பது ஆய்வாளர் கருத்தாக இருந்து வருகின்றது.
இதனை உறுதி செய்த மேற்குலக அறிஞர்கள் பலராவர். அவர்களுள், Sir John Evans, Prof. Hacckal, Sir Walter Ralegh, Sir T.W.Holderness, Dr.Macclean., Dr.heezer, Sir John Simmons போன்றோர் குறிப்பிடத் தக்கவராவர்.
சோவியத் அறிஞர் அலெக்சாந்தர் கோந்தரதோவ் எழுதிய “The Riddles of Three Oceans” என்ற நூல், தமிழிலே “இந்துமாக்கடல் மர்மங்கள்” என்ற பெயரில் பார்த்தசாரதி என்பாரால் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. NCBH வெளியீடு, அந்நூல் குமரிக்கண்ட உண்மையை உறுதி செய்கின்றது.

1.4. இலக்கியச் சான்றுகள்
“பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என வரும் சிலப்பதிகார வரிகளும், “நல்நீர்ப் பஃறுளி மணலினும் பலவே” என்ற புறநானூற்று வரியும் இன்னும் சில இலக்கியச் சான்றுகளும் குமரிக்கண்ட உண்மையை மெய்ப்பிக்கின்றது.
(உறையூரை அடைந்த கோவலன் கண்ணகி கவுந்தியென்னும் மூவரும் அன்று அங்கு தங்கி வைகறையிற் புறப்பட்டுத் தென்றிசை நோக்கிச் செல்கின்றனர். ஒரு இளமரக்காவுட் புக்கனர். அப்போது பாண்டியனின் பல புகழையும் கூறி வாழ்த்திக்கொண்டு அவ்விடத்திருந்த மறையோன்...
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கை இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி! .... என்றும் பாடுகின்றான்!

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் புறநானூறு 9ஆம் பாடலில்,

எம்கோ வாழிய குடுமி தம்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின், நெடியோன்
நல்நீர்ப் பஃறுளி மணலினும் பலவே! ... என்றும் பாடுகின்றார்)

இக் குமரிக்கண்டக் கருத்தை மொழிநூலறிஞர் மாகறல் கார்த்தி கேயனார், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பன்மொழிப்புலவர் கா.அப்பாத் துரையார், அறிஞர் கா.சுப்பிரமணியனார், அறிஞர் பூரணலிங்கனார் போன்ற தமிழ்நாட்டறிஞரும் ஏற்று உறுதிப் படுத்துகின்றனர்.

1.5. முதன்மொழி
ஓரிரு அறிஞர்கள் இவ் உண்மையை ஏற்கத் தயங்கினும், இக்கால் இலக்கியச் சான்றுகள், சொல்லாய்வுகள் போன்ற அகச்சான்றுகளும், கல்வெட்டு, தொன்மையான ஓவியங்கள், அகழ்வாய்வுக் கண்டுபிடிப்பு போலும் தொல்லியல் சான்றுகள் உள்ளிட்ட அறிவியற் கூறுகளாகிய புறச்சான்றுகளும் இதை உறுதிப் படுத்தி வருகின்றன. பேராசிரியர் மருதநாயகம், நாளுக்கு நாள், உலக ஆய்வறிஞர்களின் முடிவுகள் குமரிக்கண்ட உண்மையை வலியுறுத்தி வருவதை எடுத்துக் காட்டுகின்றார்.
கடற்கோள்களால் அழிந்த அந்தக் குமரிக்கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் முதன்முதலாகத் தோன்றிய மாந்தர் பேசிய முதல்மொழியே தமிழ்மொழி என்பது வரலாற்று அறிஞரும் மொழியியல் வல்லாரும் கூறும் கருத்தாகும்
பி.டி.சீனுவாச ஐயங்காரின் ‘இந்தியக் கற்காலம்’ “The stone age of India” என்ற ஆங்கில நூலும், ‘தமிழர் வரலாறு’ “The History of Tamils” என்ற ஆங்கில நூலும் இதை உறுதிப்படுத்துகின்றன.

1.6. தொல்காப்பியம்
இவையிருக்க, இப்போது நமக்குக் கிடைத்துள்ள பண்டைத்தமிழ் நூல்களுள் பழமையானது, காலத்தால் முந்தியது தொல்காப்பியம் என்னும் இலக்கண இலக்கிய நூலாகும். இதன் காலம் கி.மு.ஏழாம் நூற்றாண்டிற்கும் முற்பட்டது என்று பாவாணரும், அறிஞர் இலக்குவனாரும் இன்னும் பலரும் தீர்மானமாகக் கூறினர். இக்கால் செம்மொழித் தமிழாய்வு நிறுவன ஆய்வாளரும் அதனை உறுதி செய்துள்ளனர்.
ஆகவே, 2700 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியத்தில், அறிஞர் இன்னவாறு கூறுவர், இவ்வாறு கருதுவர் என்று விளக்கும் முறையில், என்ப, மொழிப, கூறுப, சொல்லினர், மொழியினர், என்மனார், என்றிசின், என்றிசினோரே, என்றவாறு பல இடங்களில் கூறப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
ஒரே ஒரு எடுத்துக்காட்டு: தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்தில், தொல்காப்பியம், எழுத்தெனப்படுப, அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப – என்று கூறுகிறது. இவ்வாறு, தொல்காப்பியத்தில் 287 இடங்கள் சுட்டப் படுகின்றன.

1.7. முன்னிருந்த நூல்கள்
இவை ஓர் உண்மையைச் சொல்கின்றன. தொல்காப்பியத்திற்கு முன்னராகவே பல்வேறு இலக்கியங்களும் கலை நூல்களும் தமிழில் இருந்திருக்கின்றன என்ற உண்மையைத் தான் அவை கூறாமல் கூறுகின்றன; உணர்த்துகின்றன.

1.8. மரபு
இன்னொன்று! தொல்பழங் காலந் தொட்டுத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும், நெறிகள் வழுவாது ஒழுகும் முறைமையை, ‘மரபு’ என்று அறிஞர்கள் கூறுவார்கள்.
நெறிகள் என்றால், ‘கொள்ளுவன கொண்டு, தவிர்ப்பன தவிர்த்தல்’, ‘காப்பன காத்து கடிவன கடிதல்’ அறிவார்ந்த பெரியோர் ‘விதித்தன செய்தலும் விலக்கியன தவிர்த்தலும்’ ஆகும். இப்படிப்பட்ட நெறிகளைத் தொன்று தொட்டுத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதே மரபு என்று சொல்லப்படுகின்றது.
தொல்காப்பியத்தில் மரபு என்ற சொல்லாட்சி 86 இடங்களில் காணப்படுகின்றது. தொல்காப்பிய உட்பிரிவான இயல்கள் சிலவற்றின் பெயர்களே நூன்மரபு, மொழிமரபு, தொகைமரபு, விளிமரபு, மரபியல் என்றுள்ளன.
தொல்காப்பியத்தில் சுட்டப்படும் பல்வேறு மரபு நிலைகள், கடைப்பிடித்துவரும் பல்வேறு முறைமைகளை மட்டும் சுட்டவில்லை. ‘தொன்று தொட்டுத்தொடர்ந்து கடைப்பிடித்து வருதல்’ – என்பதால் வேறொன்றையும் தொல்காப்பியம் நமக்கு மறைமுகமாகவும் தெளிவாகவும் தெரிவிக்கின்றது! என்ன அது? எண்ணிப் பாருங்கள்!
தொல்காப்பியத்திற்கும் முன்னரே ஒரு பெரும் நீண்ட அறிவுக்காலம் இருந்திருப்பதையும் அல்லவா அவை கூறாமல் கூறுகின்றன?
தமிழ்மொழி, பலதுறை நூல்கள் நிறைந்த மொழியாய் நுட்பச் சிறப்போடும் வளச் செழுமையோடும் இருந்திருக்கிறது என்பதைத் தெரிவிக்கின்றன. அந்த நூல்களெல்லாம் என்னவாயின?

1.9. அழிந்தவகை
பாவாணரும் பரிதிமாற் கலைஞரும் விடைகூறுகின்றனர். இடைக்காலத் தமிழரின் பேதைமையால், பாழான மண்ணிற்கும் படையான சிதலுக்கும், படியாதார் நெருப்பிற்கும், பதினெட்டாம் பெருக்கிற்கும், பற்பல பூச்சிக்கும், பகைவரின் சூழ்ச்சிக்கும் இரையான கலைநூல்கள் எத்துணை எத்துணையோ எனப் பாவாணர் பதைபதைப்பார்.
பரிதிமாற் கலைஞரென்னும் சூரிய நாராயண சாத்திரியார், ‘தமிழ்மொழியின் வரலாறு’ (மொழிநூல்) என்ற பெயரிலான அவருடைய நூலில் கூறுவதைக்கேளுங்கள்: ‘தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்’ என்பார்.
அவரே, “தமிழர்களின் மறைநூல் மந்திரநூல் போன்ற அரிய நூல்களைச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்துக் கொண்டு, மூல நூல்களை அழித்துவிட்டு வடமொழியனின்றே அவ்வரிய கருத்துக்கள் வந்தன போலக் காட்டினர் பிராம்மணர்” என்று எழுதியுள்ளார். இவற்றிற்குள் இதற்குமேல் இப்போது போகவேண்டாம்!

1.10. அறிவியல் சார்ந்த மெய்ப்பிப்பு
மேற் கூறிய செய்திகளால், தமிழ்மொழியின் முன்மையையும் தொன்மையையும் அறியமுடிகிறது
தொல்காப்பிய காலத்திற்கும் முன்னரே ஓர் உயர்ந்த நிலையில் அறிவார்ந்த செழுமைமிக்க வளஞ்சான்ற மொழியாகத் தமிழ்மொழி இருந்ததைப் பல்வேறு இலக்கியச் சான்றுகளாலும், அறிஞர் ஆய்வுரைகளாலும், தொல்லியல் ஆய்வு முடிவுகளாலும் அறிவியல் அடிப்படையில் அறிகிறோம்.

2.1. தமிழலங்காரம்
சரி. இவற்றிற்கும் தமிழலங்காரத்திற்கும் தொடர்புண்டா? உண்டு!
தமிழலங்காரமும், தமிழின் உயர்வையும் முன்மையையும் தொன்மையையும் பெருமையையும் சிறப்புகளையும் நுட்பங்களையும் பலவாறாகப் போற்றிக் கூறுகின்றது.
வடமொழியால், வடமொழியாளரால் தமிழ்மொழிக்கு ஏற்பட்ட, ஏற்படுகின்ற தாக்கத்தையும் கேட்டையும் கூறுகின்றது. வடமொழியைவிடத் தமிழ் எங்ஙனம் மேம்பட்டதாகும் என எடுத்துக் கூறுகின்றது.
ஆனால், அங்ஙனம் மேன்மையைக் கூற வேறுபட்ட கோணங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்பதே வேறுபாடாகும்.

2.2. தமிழலங்காரம் பிறந்த கதை
தமிழலங்காரம் சிறிய நூல். இதில் காப்புச் செய்யுளும் நூறு கட்டளைக் கலித்துறைப் பாடல்களும் உள்ளன. இந்நூலை இயற்றியவர் வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாராவார்.
இவர், தேவார மூவர் – திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தியார் - போல பல ஊர்களுக்கும் சென்று, ஆங்காங்கு கோயில்கொண்ட சிவனைப் போற்றிப் பதிகம் பாடி வந்தார். அவ்வாறான நிலையில் ஒருமுறை வேலூரில் வந்து தங்கி அவ்வூர் உறையும் இறைவனைப் போற்றிப் பதிகமும், திருப்புகழும் பாடியிருந்தார்.
அக்கால், அவரைத்தேடி வந்த ஒரு பனவன் – பனவன் என்றால் பார்ப்பனன், பிராமணன் என்று பொருள் – அவரிடம் வடமொழியே உயர்ந்தது; வலிமை பெற்றது எனத் தருக்குரை செய்ய, இருவரும் பல்வேறு நிலைகளில் சொற்போர் புரிந்தும் முடிவுபெறாத நிலையில், சீட்டெழுதிப் போட்டு முருகப் பெருமானிடம் தீர்ப்பறிய முடிவு செய்தனர்.
அம்முடிவின் படியே முருகனின் திருஉருவின் முன் சீட்டெழுதிப் போட்டு ஒரு சிறு பெண்குழந்தையை விட்டு ஒரு சீட்டை எடுக்கச் சொல்லினர். அக்குழந்தை எடுத்த சீட்டில், ‘தமிழே உயர்ச்சி’ என்று இருந்தது. இந் நிகழ்ச்சியே, தாம் தமிழலங்காரம் பாடக் காரணமாக இருந்தது என்று ‘குருபர தத்துவம்’ என்ற தன்வரலாற்று நூலில் நூலாசிரியர் குறித்துள்ளார்.

2.3. நூலாசிரியர்
‘தமிழலங்காரம்’ இயற்றிய வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரின் தந்தை, திருநெல்வேலி நெற்கட்டும் செவ்வல் சிற்றரசிடம் படைத்தலைவராகப் பணியாற்றிய செந்தில் நாயகம் ஆவார். தாய் பேச்சிமுத்து அம்மையார். இவர் 1839 -இல் பிறந்தவர். இவரது இயற்பெயர் சங்கரலிங்கம்.


2.4. பாப் பொழியும் ஆற்றல்
எட்டு அகவையிலேயே சுரண்டை என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள ‘பூமிகாத்தாள்’ எனும் பெண் தெய்வத்தின் பெயரில் இவர் முதன்முதலாக ஒரு வெண்பா பாடினார்.
பதின்மூன்றாம் அகவையிலேயே ‘வண்ணம்’ என்ற சந்தப்பா பாடுவதில் வல்லமை பெற்றிருந்ததார். இவ்வாறு இளமையிலேயே பாடல் பொழியும் ஆற்றலைக் கண்டு வியந்த சீதாராமனார் என்பார், இவருக்கு "ஓயா மாரி" என்ற பட்டப்பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
(வண்ணப் பா: முத்தைத்திரு பத்தித்திருநகை
அத்திக்கிரு சக்திச்சரவண.................................. என ஓதும்)
2.5. பெயர்க் காரணம்
‘சரபம்’ எனபது ஒரு புனைவான, ‘கற்பனை’யான எட்டுக்கால்களை உடைய பெரும் பறவை. இது பனிமலையில் வாழ்வதாகவும், சீயம், அரிமா என்னும் விலங்கரசான ‘சிங்க’த்தையும் தாக்கக் கூடியதென்றும் கூறுவர்.
இப் புனைவுப் பறவையைத் தமிழில் ‘சிம்புள்’ என்பர். ‘சிம்புட் பறவையே, சிறகை விரி, எழு!’ என்பது பாவேந்தரின் புகழ் பெற்ற பாடல் வரி!.
வண்ணம் என்றால் சந்தம். வண்ணப்பா இயற்றும் ஆற்றலில், அந்தப் பறவைக்கு இருந்த உடல் ஆற்றலை ஒத்த ஆற்றல் அவருக் கிருந்ததால் ‘வண்ணச்சரபம்’ என்ற அடைமொழியுடன் அவர் அழைக்கப்பட்டார். வெண்பா எழுதுவதில் திறம் மிக்கவரை ‘வெண்பாப் புலி’ என்று சொல்வார்கள். அதைப் போன்றே அடிகளார் ‘வண்ணச்சரபம் என்றழைக்கப்பட்டார். (12 வண்ணங்கள் பாடியுள்ளார்)
(சரபம்: A large fabnulous bird with 8 legs regarded as the foe of the lion and as inhibiting the snowy mountains. – வின்சுலோ அகராதி)
உச்சி முதல் உள்ளங்கால் வரை திருநீறு பூசிக்கொண்டு இடுப்பில் நீர்ச்சீலை என்னும் கோவணமும், கையில் தண்டமும் வைத்துக்கொண் டிருந்ததால் தண்டபாணி அடிகள் என்றும், முருகனை மனம் உருகிப் பாடியதால், "முருகதாசர்" என்றும் அழைக்கப்பட்டார். அருணகிரியாரின் அடியொற்றித் திருப்புகழ் பல படைத்ததால் ‘திருப்புகழ் அடிகள்’ என்றும் அழைக்கப்பட்டார்.

2.6. இயற்றிய நூல்கள் திருவரங்கத் திருவாயிரம், சடகோபர் சதகத்தந்தாதி, பெருமாளந்தாதி, அறுசமயக் கடவுள்கட்கு ஆயிரம் ஆயிரமாக ஆறாயிரம் பாடல்கள், புலவர் புராணம், திருமாவாத்தூர் தலபுராணம், அருணகிரிநாதர் புராணம், முசுகுந்த நாடகம், மறுநெறித் திருநூல், நான்குநூல், கௌமார முறைமை, தியானாநுபூதி ஆகிய நூல்களையும்,
சத்திய வாகசம் என்னும் உரைநடை நூலையும்,
அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம், வண்ணத்தியல்பு ஆகிய இலக்கண நூல்களையும்,
தமிழைப் போற்றி வணங்கும் முத்தமிழ்ப் பாமாலை, தமிழ்த் துதிப் பதிகம், தமிழலங்காரம் என்னும் நூல்களையும் இயற்றியுள்ளார்.
ஆங்கிலேயரை எதிர்த்து ‘ஆங்கிலியர் அந்தாதி’ என்ற நூலையும் இன்னும் பலநூல்களையும் அடிகள் இயற்றியுள்ளார்.

2.7. தமிழிசைத் தொண்டர் தியாகராசர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாத்திரி முதலானோர் தெலுங்கிலும், சமற்கிருதத்திலும் கர்நாடக இசையை வளர்த்துப் பாடிவந்த காலத்தில், வண்ணச்சரபம் தண்டபாணி அடிகள் தமிழில் வண்ணம் (சந்தப்பாட்டு) பாடித் தமிழிசைக்கு உயிரூட்டினார்.
சந்த வகைக்கு இலக்கணம் வகுத்து ‘வண்ணத்தியல்பு’ என்ற இலக்கண நூலை முதன்முதலாக இயற்றிவர் இவரே!. இவர் பாடிய தமிழிசைப் பாடல்கள் ஒரு நூறாயிரத்திற்கும் – ஓர் இலக்கத்திற்கும் மேற்பட்டவையாம்.

2.8. அடிகளும் ஆமாத்தூரும்
பல ஊர்களுக்கும் சென்று பதிகமும் திருப்புகழும் பாடிவந்த அடிகள், தம் இறுதிக் காலத்தில் நம் விழுப்புரம் நகருக்கு அருகிலுள்ள திருஆமாத்தூர் வந்துத் தங்கிக் கெளமார மடத்தை நிறுவித் தமிழ்ப்பணி யாற்றி யிருக்கிறார்.
அடிகளின் பெயரர் முருகதாசர் எழுதிய உரையுடன், தமிழலங்காரம் 1964-இல் வெளியிடப்பட்டது. அதன் பின்னர், 34 ஆண்டுகள் கடந்தபின், நம் விழுப்புரம் தமிழ்ச் சங்கத்தின் நிறுவுநர் தலைவர் மருத்துவர் பாவலர் பாலதண்டாயுதம் ஐயா, தமிழலங்காரம் நூலை உரையுடன் 34 ஆண்டுகளுக்குப் பிறகு 1998-இல் மீண்டும் அச்சேற்றி வெளியிட்டார்.
3.1. தமிழலங்காரம் தமிழின் உயர்வை எவ்வாறு விளக்குகிறது?
தமிழலங்காரம், பல்வேறு தெய்வியக் கதைகள், கடவுளரின் வாழ்க்கை. நிகழ்வுகள், நம்பிக்கைகள், இலக்கண இலக்கிய சிறப்புகள் துணையுடன் தமிழின் உயர்வை, பெருமைகளை, சிறப்புகளை, நுட்பங்களை விளக்கிக் கூறுகிறது.

3.2. தமிழலங்கார விளக்கங்களில் யார்யார் தொடர்பான செய்திகள் இடம் பெறுகின்றன?
சிவபெருமான், திருமால், பிரமன், இந்திரன், பிள்ளையார், முருகன், கலைமகள், திருமகள், சூரியர், சந்திரர் போன்ற கடவுளர் தொடர்பான பல செய்திகளும்
விருத்திராசூரன், சூரபன்மன். இராவணன் தொடர்பான செய்திகளும்,
சனகன், வசிட்டர், திருமலை ராயன், கணிவண்ணன், ஆண்டாள், பரவை நாச்சியார், தொடர்பான செய்திகளும்,
திருவள்ளுவர், ஒளவையார், கம்பர், கச்சியப்ப சிவாசாரியார், ஒட்டக்கூத்தர், அம்பிகாபதி, இரட்டைப் புலவர், அகத்தியர், நக்கீரர், காளமேகம், முத்துவயிரப் புலவர், கந்தசாமிப் புலவர், வீரபாண்டியப் புலவர், சீநிவாசப் பெலவர், ஆறுமுகப் புலவர், பாணினி, தக்கன் தொடர்பான செய்திகளும்,
பகழிக் கூத்தர், பட்டினத்தடிகள், பத்திரகிரியார், பராசரமுனிவர், திருஞான சம்பந்தர், சுந்தர மூர்த்தியார், திருநாவுக்கரசர், மாணிக்க வாசகர், குகை நமச்சிவாயர், அபிராமிபட்டர், வியாசர், சேரமான் பெருமாள் நாயனார், திருப்பாணாழ்வார், வீரபாகு, திருமங்கை யாழ்வார், இன்னும் சிலர் தொடர்பான செய்திகளும் தமிழின் உயர்வைக் கூறுவதற்கு வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரால் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

3.3. தமிழலங்காரம் சுட்டும் நிகழ்வுகள், நம்பிக்கைகளில் சில
சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டது,
இறைவனின் திருமணத்திற்கு அனைவரும் இமயத்தில் குவிந்ததால் இமயம் தாழ, அதைச் சரிசெய்வதற்குச் சிவன் அகத்தியரைப் பொதிகை மலைக்குச் செல்லுமாறு பணித்தது,
சுந்தரர், வறண்ட குளத்தில் நீர் வரவழைத்து, அதில் முதலை தோன்றச் செய்து, மூன்றாண்டுக்கு முன் அது விழுங்கிய பார்ப்பனச் சிறுவனை உரிய வளர்ச்சியுடன் உமிழச் செய்தது,
திருஞான சம்பந்தருக்கு உமை ஞானப்பால் ஊட்டியது,
திருஞானசம்பந்தர், மயிலாப்பூர் குளக்கரையில் சுடப்பட்ட எலும்பிலிருந்து பெண்வரப் பாடியது,
திருநாவுக்கரசர் கருங்கல்லைத் தெப்பமாகக் கொண்டு கரையேறச் செய்தது, கொல்லவந்த பட்டத்து யானையைப் பின்வாங்கச் செய்த்து, நீற்றறயைக் குளிரவைத்தது, இறந்த அப்பூதியார் மகனை உயிர்பெற்று எழச் செய்த்து,
தருமி பாண்டியனிடம் பொற்கிழி பெறச் செய்தது,
ஒளவையார், வெட்டப் பட்ட பலாமரம் தழைக்கப் பாடியது.
சுந்தரர்க்காகப் பரவைநாச்சியிடம் சிவன் தூது சென்றது,
அபிராம பட்டரைக் காப்பாற்றக் காருவா நாளில் அமாவாசையில் முழுநிலா தொன்றச்செய்தது - போன்ற பலப்பல கதைகளும், நிகழ்வுகளும் நம்பிக்கைகளும் தமிழின் உயர்வைக் கூற வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரால் தமிழலங்காரத்தில் பயன்படுத்திக் கொள்ளப் பட்டிருக்கின்றன.

4.1. தமிழலங்காரப் பாடல்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
முதலில் காப்புச் செய்யுள்:
தித்திக்கும் நூறு தமிழலங்காரப் பாடல்களை நன்றாகத் தாம் பாடுவதற்குப் பிள்ளையார் துணையிருக்க வேண்டுமென வேண்டுகிறார் வண்ணச்சரபம் அடிகளார். அக்காப்புச் செய்யுள் இதுதான்:
இமிழ லங்கார மதநீர் அருவிகள் எப்பொழுதுதும்
உமிழ லங்காரத் தலைக்கண நாதனை உன்னுகின்றேன்
சிமி ழலங்கார முலையார் மொழியினும் தித்திப்பதாம்
தமிழ லங்காரக் கவிநூறும் நன்கு தருவதற்கே!
மங்கையரின் இன்மொழியினும் தித்திப்பது தமிழ்மொழி என்கிறார். இந்தக் கருத்து, ‘மங்கை ஒருத்தி தரும் சுகமும் எங்கள் மாத்தமிழுக்கு ஈடில்லை என்று சொல்வேன்’ என்ற பாவேந்தரின் கூற்றை நினைவூட்டுகிறது அல்லவா?

4.2. ஆரிய வேள்வியில் உயிர்க் கொலை
பிரம்மன், தக்கன் போன்ற வடமொழியாளர், ஆரிய வேத்ததில் ஆ என்னும் பசு, ஆடு, குதிரை முதலியவற்றைக் கொன்று செய்யும் வேள்வியைப் பாராட்டிக் கூறுவர்.
ஆனால், திருவள்ளுவர் ஒளவையார் முதலானவர் கூறிய தமிழ்மறையோ கொலை எவ்விடத்தும் கூடாது என்று வலியுறுத்துவதால் உயர்ந்தமொழி தமிழே என்று வண்ணச்சரபம் ஐயா வலியுறுத்துகிறார். பாடல் இதோ:
நான்முகன் தக்கன் முதலோர் அநேகர் நவின்றவட
நூன்முழு தும்கொலை வேள்வியைப் போற்றும் நுடங்கரிய
வேன்முனைக் கண்ஒளவை வள்ளுவன் ஆதியர் விண்டதென்னூல்
ஊன்முழுப் பாவம் எனவே அடிக்கடி ஓதிடுமே! - 4
(‘மனோன்மணீயம்’ சுந்தரனாரும், ‘மணிமேகலை’ ஆபுத்திரனும் நினைவுக்கு வருகின்றனர் அன்றோ?)

4.3 தென்றலும் வாடையும்
தண்மையுடன் தமிழின் இனிமை சேர்ந்துவரும் தென்றல் காற்று உடலுக்கு நலத்தையும் மனத்திற்கு மகிழ்வையும் தரும்.
கடினமான வடமொழித் தன்மை தாங்கிவரும் வாடைக்காற்று உடலுக்கு அயர்வும் கேடும் தரும்.
இவற்றை ஆராய்ந்து மருத்துவநூல் வல்லாரே கூறுவர் என்று தமிழின் உயர்வைக் கூறுகிறார். பாடல் இது:
தண்டமிழ் வாசம் கலந்து குலாவும் தனித்தென்றலும்
ஒண்டகை ஆரியச் சீர்தோயும் வாடையும் ஊனிலொன்றி
மண்டலத் தோர்க்குத் தரும்பயன் தன்னை மதித்தறிந்து
கண்ட வயித்தியர் வாய்மேன்மை தாழ்மையைக் காட்டிடுமே! -10 ‘வாடைக் காற்று தமிழர்க் காகாது’ என்ற வரி நினைவுக்கு வருகின்றது.

4.4. இறைவன் தன்கையால் எழுதிய திருவாசகம்
பராசர முனிவரின் மகனான வியாசர் கூறிய வடமொழியின் ஐந்தாம் மறையாகிய பாரதத்தை மேருமலையின் மீது எழுதும்படி பிள்ளையாரைப் பணித்தார் இறைவன்.
ஆனால், அன்புருவான திருவாதவூரடிகள் பாடிய தென்மொழித் திருவாசகத்தை தம் கையாலேயே எழுதினார்.
அதை உமாதேவி மகிழும்படிப் பொன்னம்பலத்தில் பாதுகாப்பாகவும் வைத்தார் என்று தென்மொழித் தமிழுக்கு இறைவன் அளித்த உயர்வை அடிகள் கூறுகிறார்.
பாடல் இதோ:
வண்மைப் பராசரன் மகன்சொல்ஐந் தாமறை வாசகத்தை
அண்மைப் புதல்வன் கரத்தால் வரைவித்த அண்ணலருள்
உண்மைத் தமிழ்த்திரு வாசகப் பாடல் ஒருங்கெழுதிப்
பெண்மைக் குவகை தருமரங் கூடுறப் பேணினனே! - 17

4.5. எகர ஒகரம் இல்லாத மொழி
சீர்காழி அகன்ற பொய்கைக் கரையில் அழுத சிறுவரான திருஞான சம்பந்தருக்கு உமையவள் ஊட்டிய ஞானப்பாலின் இனிமை, அடியவர் அஞ்ஞான இருள் நீக்கும் தேவாரத் தமிழாக வெளிவந்ததே யல்லாமல்,
எ, ஒ போன்ற எழுத்துக்கள் இல்லாத வடமொழி மூலமாக வெளிவரவில்லை. எனவே, தமிழ் ஞானமொழி எனகிறார் அடிகள்.
அந்தப் பாடல் இதுதான்:
சீகாழி யூர்த்தடம் பொய்கைக் கரையிற் சிறிதழுத
வாகாரும் சேய்க்குமை நல்கிய பாலின் மதுரமன்பர்
சோகாந்த காரம் கெடத்தமி ழோடு துலங்கிற்றன்றி
ஏகாரத் தின்குறில் இல்லாக் கலையொ டிலங்கிற்றன்றே! - 19
தேவாரம் எகர ஒகரமில்லா வடமொழியிலா பிறந்தது? தமிழில்தானே பிறந்தது என்கிறார் வண்ணச்சரப அடிகளார்.

4.6. திரிந்த தமிழ்ச்சொல்
‘புகல்’ என்னும் தமிழ்ச் சொல்லைப் ‘போல்’ என்று இந்தியில் கூறுகின்றனர். இவ்வாறு பல தமிழ்ச் சொற்களை இந்துத்தானியில் திரித்து வழங்குகின்றனர்.
உலகில் எம்மொழியின் சொற்களும், தமிழ்ச்சொல்லும் வடசொல்லும் கலந்தே அமைகின்றன.
எனவே, தமிழே உலக மொழிகளின் தாய் என்கின்றார்.
பாடல் இது:
புகல்எனும் சொல்லினைப் போல்எனச் சொல்லுதல் போற்பலசொல்
இகல்இந்துத் தானியும் செந்தமி ழிற்கொண் டியம்புகின்றார்
அகல்நிலத் துள்ள கலையாவும் தென்சொல் லதுவுமெதிர்
திகழ்வட சொல்லும் கலந்தே விளங்கும் தெரிந்திடினே! - 22

4.7. ஒண்தமிழ் ஆற்றல்
திருநாவுக்கரசரைக் கருங்கல்லிற் பிணித்துக் கடலில் வீசினர். அந்தக் கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறச் செய்தது தமிழ்ப்பாடல்.
கொல்ல வந்த பட்டத்து யானையை அஞ்சி அடங்கச் செய்தது தமிழ்ப் பா. சுண்ணாம்புக் காளவாயாகிய நீற்றறையைக் குளிரவைத்தது அப்பரின் தமிழ்ப் பாட்டு.
அப்பருக்கு உணவு பரிமாற இலை கொண்டுவரச் சென்ற போது பாம்பு கடித்து இறந்த அப்பூதியடிகளின் தலைமகனை உயிர்பெற்றெழச் செய்தது அப்பரின் தமிழ்ப் பதிகம்.
ஒண்டமிழின் ஆற்றல் என்னே! என்று பாடுகிறார்.
கடல்நீரில் கல்மிதக்கும் படிச்செய்து களிறுறுக்கும்
அடல்யாவும் குன்ற அடக்கிவெந் நீற்றறை அம்புயப்பூந்
தடமாகக் காட்டி அரவால் இறந்த தனயனையும்
உடலோ டெழச்செய்த தன்றோ ஒருவன்சொல் ஒண்டமிழே! - 29

4.8. பேய்க்கரும்பு இனிக்கும் பேறு தரும் தமிழ்
திருவாரூரில் காமத்தால் இறந்த ஒருவனைப் பிழைக்கச் செய்தது பட்டினத்தார் தமிழ்ப் பா, இறந்த தாயின் உடலை நீரூறும் வாழை மரங்கொண்டு எரியூட்டியது அவர் தமிழ்ப் பாடல், காஞ்சியில் இகழ்ந்து பேசிய ஒருவனது பெருவயிறு பிளக்கச் செய்ததும் அவர் தமிழ்ப்பாவே, திருவொற்றியூரில் மாடு மேய்க்கும் சிறுவர்க்குப் பேய்க்கரும்பை இனிமை யுடையதாக்கியது (பட்டினத்தார் பாடிய) செந்தமிழே என்கின்றார். அது இந்தப் பாடல்:
ஆரூரில் மொத்துண்டு செத்தார்க் குயிர்நல்கி, அன்னையினால்
நீரூறும் வாழையில் தீமூட்டிக், கச்சியில் நிந்தைசெய்தோன்
பேரூன் வயிறு பிளந்து, கைப்பாகிய பேய்க்கரும்பும்
சீரீர்தென் ஒற்றியில் தித்திக்கச் செய்தது செந்தமிழே! - 53
(முன்னை யிட்டதீ முப்பு ரத்திலே
பின்னை யிட்டதீ தென்னி லங்கையில்
அளன்னை யிட்டதீ அடிவ யிற்றிலே
யானு மிட்டதீ மூளக மூள்கவே! – பட்டினத்தார் பாடல்)

4.9. தமிழை மற்றொருமொழி தந்ததென்பவன் பதர்!
தமிழை உணர்ந்த பாவலன் போன்ற ஒருவன், தனது மொழியை அமிழ்தினும் உயர்வென்று அறிந்து மகிழாமல், பிறமொழியை விரும்புவது, வேறொரு பெண்ணின் கணவனை வியக்கும் ஒருத்தியின் செயலுக்கு ஒப்பாகும். அவன் புலவனல்லன் என்கிறார். அந்தப்பாடல் இது:
தமிழ்உணர் பாவலன் போல்வான் ஒருவன் தனதுகலை
அமிழ்தினும் ஏற்றமென் றேமாப் புறாமல் அயற்கலையால்
உமிழ்வதென் றொப்பிடில் மற்றோர் மடந்தைக் குரியகொண்கன்
குமிழ்மலர் நாசியி னால்மணந் தாள்நிகர் கோதினனே! - 97
இவ்வாறு எல்லாப் பாடல்களும் சுவையோடு தமிழின் உயர்வைத் தெரிவிக்கின்றன.

5.1 தண்டபாணியார் தமிழ்ப்பற்று
"இளநகைச் சிறுமியர் சொல் மொழியினும் தித்தித்திருக்கின்ற தமிழ்" என்றும்,
"செந்தமிழே உயர்வென்று முன்னாள் சீட்டு எனக்குத் தந்தனன் கந்தன்" என்றும்
"தமிழ் மொழிக்கு உயர்மொழி தரணியில் உளதெனில் வெகுளியற் றிருப்பவன் வெறும் புலவோனே" என்றும்,
”மதுரத் தமிழை இகழ் தீயோர் மணிநா அறுத்துக் கனலில் இட” என்றும்
“தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளதெனில், அஃதுணர் அலகையில் தாழ்வெனல் அறமே!” (பு. இ.) என்றும்

தண்டபாணி அடிகளார் பாடிய பாடல் வரிகள் அவரின் ஒப்பற்ற தமிழ்ப்பற்றை உணர்த்துகின்றன.
5.2. தமிழலங்காரச் சிறப்பு
வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார், தமிழின் உயர்வை விளக்கி மெய்ப்பிக்க, அவர் காலத்தில் (ஏறத்தாழ 160 ஆண்டுகளுக்கு முன்னர்) மக்களிடம் அழுத்தமாகக் கருத்தேற்றம் பெற்றிருந்த தெய்வியக் கதைகளையும், கடவுளர் வாழ்க்கை நிகழ்வுகளையும், பல்வேறு நம்பிக்கைகளையும், மொழிகளின் இலக்கண அமைப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு, காலத்திற்கேற்ற உத்தியைக் கையாண்டு தமிழின் உயர்வைத் ‘தமிழலங்காரம்’ நூல்வழி நிலைநாட்டி நிறுத்தியிருபதை உணர்ந்திட முடிகின்றது என்று கூறி என் உரையை முடிக்கின்றேன்.

பொதிகை என்னும் ஹாட் ஸ்பாட்


அலையின் சுழற்சியிலே,

இலைகள் தோன்றுகின்றன;

மடிகின்றன; இந்தச் சுழற்சி,

விரிவாக, நட்சத்திரங்களிடையே

மெதுவாகவே நிகழ்கிறது.

- தாகூர்

என் வாழ்நாளில் மறக்க முடியாத மகத்தான ஓர் அனுபவம் ஏற்பட்ட நந்நாள் பொதிகையின் சிகரங்களில் ஏற்பட்டதுதான். பூங்குளம் என்னும் ஒரு மொட்டையான பாறையில் படுத்திருந்தபோது என்னைச் சுற்றி மஞ்சு தவழ்ந்து கொண்டிருந்தது. மெலிதாகத் தென்றல் வீசிக் கொண்டிருந்தது. திரைப்படப் பாடல்களில் வரும் தென்றலுக்கும், பொதிகை தென்றலுக்கும் அன்றுதான் வேறுபாடு தெரிந்தது. இறந்து போன உடலை உயிர்ப்பிப்பதற்கான வலிமை, அத்தென்றலுக்கு இருப்பதாக உணர்கிறேன். என்னுடைய இளவயதில் கானகத்தில் அலைந்த நாட்கள் என்னுடைய வாழ்க்கையை வேறு விதமாக மாற்றியமைத்தன. ‘பூங்குளத்தில்’ தான் தாமிரபரணி உற்பத்தியாகிறது.

பொதிகை மலையைப் பற்றி விரிவாக பார்க்கும் போது ஹாட்ஸ்பாட் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம். ஹாட்ஸ்பாட் என்பதை உலகின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்று குறிப்பிடலாம். எங்குமில்லாத பல்லுயிர்ப் பெருக்கம், மிக அருகிப்போன அபாயத்தில் உள்ள மிருகங்கள், தாவரங்கள், வனப்பாதுகாப்பையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டிய இடமாக ஹாட்ஸ்பாட்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மறைந்து கொண்டிருக்கும் உயிரினங்களைப் பாதுகாக்கவும், மனிதன் அழித்தது போக மிஞ்சிபோன பல்லுயிர்ப் பெருக்கங்களைப் பாதுகாக்கவே இந்த ஹாட்ஸ்பாட் உருவாக்கப்பட்டது. 1988ல் பிரிட்டிஷ் சுற்றுச்சூழல் அறிஞர் நார்மன் மையர்ஸ் இக்கருத்தாக்கத்தை உருவாக்கினார். இப்பூவுலகில் ஹாட்ஸ்பாட்கள் நிலப்பரப்பில் 2.3 சதவிகிதத்தை மட்டுமே கொண்டுள்ளன. ஒவ்வொரு ஹாட்ஸ்பாட்டும் ஏற்கனவே தன்னுடைய 70% சதவீத இயற்கைப் பல்லுயிர்களை இழந்துவிட்டது. உலகில் இதுவரை ஹாட்ஸ்பாட்டுகளாக 34 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் இமயமும், பொதிகை மேற்குத் தொடர்ச்சி மலையும் உள்ளது.

ஹாட்ஸ்பாட்டுகளின் அடிப்படை இழையாக உள்ள கருத்தாக்கம் என்னவெனில் அழிந்து வரும் உயிரினங்கள், அதாவது திரும்பவும் உருவாக்க இயலாத தன்மையை இது கவனப்படுத்துகிறது. எனவே இதை பாதுகாப்பதே நமது தலையாய கடமை Bird life international என்னும் நிறுவனம் ‘218’ இடங்களில் அருகி வரும் பறவையினங்கள் உள்ளதாக குறிக்கிறது. ‘Global 200 Eco regions’ என்று இருநூறு இடங்களைச் சுற்றுச்சூழல் மதிப்புமிக்கதாகக் கூறுகிறது. இந்த ஹாட்ஸ்பாட்கள் சுற்றுச்சூழல் மதிப்புமிக்க இடங்களில் 60 சதவிகிதத்திற்கு மேல் உள்ளடக்கியுள்ளன.

‘ஹாட் ஸ்பாட்’ என்று ஒரு இடத்தை நாம் குறிப்பதற்கு அவ்விடம் 1,500 தாவரங்களைக் கொண்டதாகவும் (அதாவது உலகின் 5 சதவிகிதத்தை), இரண்டாவதாக அந்த இடம் தன்னுடைய சுயமான உயிரினங்களில் 70 சதவிகிதத்தை இழந்திருக்க வேண்டும். இந்த 34 ஹாட் ஸ்பாட்டுகளும் 1,50,000 அருகி வரும் தாவரங்களைக் கொண்டுள்ளன. அதாவது இவ்வுலகின் பாதி தாவரங்களை. இதைத் தவிர பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன மற்றும் அனைத்து பல்லுயிர்ப் பெருக்க நிகழ்வுகளும் அடங்கும்.

இந்தியாவின் ‘வளர்ச்சித் திட்டங்களால்’ மேற்குத் தொடர்ச்சி மலை பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. மக்கள்தொகைப் பெருக்கம், மரங்களை வெட்டுதல், விவசாயத்திற்கு காட்டை அழித்தல் ஆகியவற்றின் மூலமும் மேற்குத் தொடர்ச்சி மலை பல்வேறு அழிவுகளைச் சந்தித்து வருகிறது. வேட்டை, தொழிற்சாலைகள், போக்குவரத்து ஆகியவை நிரந்தரப் பிரச்சனைகளாகவும் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையில் மேலைக் கடற்கரையோரத்தில் படிக்கட்டுகளைப் போல காட்சியளிப்பதால் இது (Western Ghats) மேலைப்படி என்று அழைக்கப்படுகிறது. தென்மேற்கு பருவக்காற்று மழையின் மூலம் ஜுன் முதல் செப்டம்பர் வரை பல்வேறு ஆறுகள் இம்மலையிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கின்றன. இந்த ஆறுகளினாலேயே தமிழகத்தின் விவசாயம், குடிநீர், எரிசக்தி அனைத்தும் உருவாகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைச்சரிவுகளில் தொல் பழங்குடி மக்களான காணிக்காரர்கள், பறியர்க்காடர், இருளர், தொதவர், முதுவர், புலையர் போன்றவர்கள் வசிக்கின்றனர். பொதிகை மலையின் அடிவாரத்திலும் காணிக்காரர்கள் பெருவாரியாக வாழ்கின்றனர்.


மேற்குத் தொடர்ச்சி மலையின் தொடர்ச்சியாக இலங்கையின் மலைகளும், காடுகளும் ஒரே ஹாட்ஸ்பாட்டாக அமைந்துள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியமான பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த, தொன்மையான புராணங்களும் தொன்மங்களும் நிறைந்த பகுதிதான் ‘பொதிகை’. தமிழகத்தையும் கேரளத்தையும் இரண்டாகப் பிரித்து, ஓங்கி நிற்கிறது இப்பொதிகை. தமிழகத்தின் தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தின் பாபநாசம், காரை அணைக்கட்டுகளின் மேல்பகுதியே பொதிகை மலை என்று அழைக்கப்படுகிறது. பொதிகை மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 6.125 அடி உயரத்திலுள்ளது. 8.25&9.10 வடக்கு அட்ச மற்றும் 77.89&78.25 கிழக்குத் தீர்க்க ரேகையில் 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், மேற்குத் தொடர்ச்சி மலையின் அதிஉன்னதச் செழுமையான பகுதிகளைக் கொண்டுள்ளது இப்‘பொதிகை’. முழு மேற்குத் தொடர்ச்சி மலையுமே ஹாட் ஸ்பாட் என்று அழைக்கப்பட்டாலும், பொதிகை ஹாட் ஸ்பாட்டுகளின் ஹாட் ஸ்பாட்டாக அமைந்துள்ளது எப்படி என்று காணலாம்.

‘பொதிகையின் தன்மை’

உண்மையில் பொதிகை மலையைப் பற்றி ஆய்வுகள் இல்லை. வாய்மொழிக் கதைகளும், புராணங்களும், தொன்மங்களுமே பொதிகை மலையை சிறப்பித்துள்ளன. எனினும் சங்க இலக்கியங்களில் பொதிகை மலை குறிப்பிடப்பட்டுள்ளது. மன்றப் பொதியில், தமிழ் மலை, பொதியப்பட்டு, அகத்தியர் மலை, மன பொதியம், தென்மலை, செம்மலை, குடைமலை, மலையாமலை, பொதியில் என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுவது பொதிகை மலையேயாகும். சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலையில் பொதிகை மலை தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது.
“பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே” (புறம் 2:8) புறநானூற்றுப் பாடல் ஒன்று இரு ஹாட் ஸ்பாட்களை அன்றே அடையாளப்படுத்தியுள்ளது. புராணங்களிலும் வெவ்வேறு இடங்களில் பொதிகை மலை வந்து போவது அதன் தொன்மையைக் காட்டுகிறது. மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் ‘பொதியில்’ என்று குறிப்பிடப்படுவது பொதிகை. ‘இரகு வம்சத்தில்’ காளிதாசர் பொதியமலையை குறிப்பிடுகிறார். பொதிகையில் உற்பத்தியாகும் தாமிரபரணியையும், அது சங்கமமாகும் இடத்திலுள்ள முத்துக் குளிக்கும் துறையான கொற்கையையும் குறிப்பிடுகிறார் காளிதாசர். வியாசபாரதம் இம்மலையை தாமிரபரணி என்று குறிப்பிடுகிறது. இது தேவர்கள் தவம் செய்யும் இறையுணர்வுமிக்க இடம் என்றும் குறிப்பிடப்படுகிறது.பொதிகை மலையில் ‘மகேந்திரகிரி’ என்ற இடம் உள்ளது. இவ்விடமே வால்மீகி இராமாயணத்தில் வரும் மகேந்திரமலையாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


பொதிகையின் தமிழ் முனி அவலோகிதரா?அகத்தியரா?

என்னுடைய முதல் பொதிகைப் பயணத்தில் பூங்குளத்தை விட்டு இறங்கியபோது பதினைந்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் விசாரித்தபோது தாங்கள் புத்தரை தரிசிக்க வந்ததாகக் கூறினர். எனக்கு அது மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. பின்பு வெகு நாட்களுக்குப் பிறகு முனைவர் ஜி.ஜான்சாமுவேலின் ‘பண்பாட்டுப் பயணங்கள்’ என்னும் நூலைப் படித்ததில் அவர் பொதிகை மலைக்கும், பௌத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி விரிவாக விளக்கியிருந்தார். கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் பௌத்தம் தமிழகத்திற்கு வந்தது. பௌத்த இலக்கியங்களில் இம்மலை ‘போதலகிரி’ என்று குறிப்பிடப்படுகிறது.

தாராசூக்கம் என்னும் நூலில் அவலோகிதர் தன் மனைவி தாராதேவியுடன் வீற்றிருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தமிழ் வரலாறு’ எழுதிய இரா.இராகவையங்கார் அவலோகிதரைப் போதலகிரி நிவாஸிநி என்று குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டுகிறார். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தோன்றிய மகாயான நூலான கந்தங்வவூவ்யூக சூத்திரம் தென்திசையிலுள்ள ‘பொத்தலகா’ என்ற மாலையில் ‘அவலோகிதர்’ வசித்ததாகக் குறிப்பிடுகிறது.

இந்தியாவிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் பௌத்தம் அழிக்கப்பட்டு பொதிகை மலையோடு அவலோகிதருக்கு இருந்த அனைத்து அடையாளங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. காலப்போக்கில் அவலோகிதர் வீற்றிருந்த இடத்தில் அகத்தியர் இடந்தரப்பட்டார் என்றும் ஆனால் அகத்தியரை ஏற்றுக்கொள்ளாத பௌத்தர்கள், அகத்தியர் பொதிய மலைக்குச் சென்று அங்கு வீற்றிருந்த அவலோகிதரிடம் தமிழ் கற்றார் என்று கதையினை பௌத்தர்கள் ஏற்படுத்தினர் என்று ஜான் சாமுவேல் குறிப்பிடுகிறார்.

பௌத்த இலக்கண நூலான வீரசோழியத்தில்

“ஆயும் குணத்து அவயோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு

ஏயும் புவனிக்கு இயம்பின தண்டமிழ்”

என்று அகத்தியர் அவயோகிதரின் மாணவனாக வீற்றிருந்து தமிழ் கற்றார் என்பது குறிக்கப் பட்டுள்ளது.

பல்வேறு இலக்கியங்களின் மூலம் நாம் அறிவதென்பது ‘அகத்தியர்’ வட மாநிலத்திலிருந்து வந்தார் என்பதுதான். அவர் வந்தபோது பொதிகையில் அவலோகிதர் பொதிகை மாமுனியாக வீற்றிருந்தார் என்றும் நமக்குத் தெரிகிறது. எனினும் இவையாவும் விரிவான ஆய்வுகளின் மூலம் நிறுவப்பட வேண்டியவை. எனினும், பொதிகை மலையில் மாமுனி ஒருவர் தமிழை வளர்த்தார், உலகிற்கு தமிழ்க் கவிதையாக அளித்தார் என்று சொல்வது மிகையாகாது.

பொதிகையின் மகள் தாமிரபரணி

பொதிகையின் தொன்மையை தமிழர்கள் மட்டுமன்றி சீன யாத்ரிகர் யுவான் சுவாங் பொதிகையில் சந்தன மரங்களை சிலாகித்து எழுதி உள்ளார். தாலமி பொதிகைத் தென்றலை பதிவு செய்து எழுதியுள்ளார். பெரிபுளுஸ் ஆப் எரிதீரியன் சீ என்றும் கடற்பயண நூலை எழுதிய கிரேக்க மாலுமி பொதிய மலையைச் செம்ம என்று குறிப்பிடுகிறார். குமரிக்கண்ட கொள்கையின்படி எல்லாத் தொடர்ச்சிகளும் இருந்த காலத்தில் இவையனைத்துமே தாமிரபரணி என்று அழைக்கப்பட்டது. இன்று எல்லாவற்றின் நினைவாக பொதிகையிலிருந்து புறப்பட்டு புன்னைக்காயல் வரை தாமிரபரணி நதி ஓடிக்கொண்டிருக்கிறது. தாமிரபரணி என்பதற்கு சிவப்பு சந்தன மரக்காடுகளின் ஊடே பாய்ந்து ஓடுகிறது என்றும், தாமிரத்தின் நிறம் பெற்ற இலைகளிலிருந்து வரும் ஆறு என்றும் கூறுவன. எனினும் தமிழகத்தில் மூலிகைகளின் மருத்துவக் குணம் கொண்டு எப்பொழுதும் தண்ணீரோடு, வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டிருப்பது தாமிரபரணி ஒன்றுதான்.

பொருநை, தன் பொருநை, கண் பொருள் பொன்நிறத்துப்புனல் பெருகும் பொருநை தன் பொருத்தம், மகாநதி, தட்சிண கங்கை பொருநல் என்ற பெயர்களும் உண்டு. இவ்வாற்றின் மூலம் 2460 ஏரிகள், குளங்கள், 515 மைல் நீளமுள்ள 394 கால்வாய்கள், 3 லட்சம் ஏக்கருக்கு பாசன வசதி (நீளம் 225 கி.மீ), 149 புனித குளியல் கட்டிடங்கள், 3 மாவட்டங்களில் நாளன்றுக்கு 60 லட்சம் மக்கள் தங்கள் தாகத்தைத் தணித்து கொள்கின்றனர். இதன் கிளை, துணை நதிகளாக காரையாறு, பேயாறு உள்ளன. சேர்வலாறு, பாம்பாறு, மணி முத்தாறு, வராக நதி, ராம நதி, கடனா நதி, கள்ளாறு, கருணையாறு, பேச்சியாறு, சிற்றாறு, குண்டாறு, ஐந்தருவியாறு, ஹனுமா நதி, கருப்பா நதி, அமுத கன்னியாறு ஆகியன தொடர்ச்சியாக அமைந்துள்ளன. எட்டு அணைக்கட்டுக்கள் இதன் வழியே அமைந்துள்ளன. ஜூன் தொடக்கத்தில் மேலைக்காற்றும், தென் மேற்குப் பருவக்காற்றும் ஆரம்பிக்கிறது. ஜூன் 15க்குப் பிறகு முதல் வெள்ளம், இருமுறை தண்ணீர் கரைபுரண்டோடி முழு வெள்ளத்துடன் செழிப்பு வண்டல் மண் சமவெளியில் பாய்ந்தோட வேண்டும். ஆனால் இன்று இதில் நிறைய மாற்றங்கள், தொழிற்சாலைக் கழிவுகள், அதிபயங்கரமான மணல் கொள்ளை ஆகியவற்றால் இன்று தாமிரபரணி ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என விரைகிறது.
தாமிரபரணி தண்ணீரை நம்பி தூத்துக்குடி மாவட்டத்தில் பிசானம், கார், அட்வான்ஸ் கார் என மூன்று போகத்திற்கு தண்ணீர் வரத்து இருந்தது என சொல்லுகிறார்கள். ஆனல் இன்று சிப்காட், ஸ்டெர்லைட் உள்ளிட்ட ஆலைகளின் தேவைகளுக்காக ஆண்டு முழுவதும் நீர் பாய்ச்சப்படுகிறது. பிசானம் பருவ விவசாயத்திற்கு மட்டும் தாமிரபரணி நீர் கிடைக்கிறது. ஆலைகளுக்கே முதலிடம். விவசாயத்திற்கு அல்ல. தாமிரபரணி கடலில் கலக்கும் மன்னார் வளைகுடாவை யுனெஸ்கோ கடல்வாழ் உயிரினங்களுக்கான பாதுகாப்பு வளையமாக அறிவித்துள்ளது. ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் தாரங்கதாரா கெமிக்கல்ஸ் பல ஆண்டுகளாக பாதரசம் உள்ளிட்ட மாசுக்களை தாமிரபரணி முகத்துவாரத்தில் கலக்க விடுகிறது.

தாமிரபரணி நதிக்கரையில் இரு உலக முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் எச்சங்கள் உள்ளன. ஒன்று ஆதிச்சநல்லூர். மற்றொன்று கொற்கை. ஆதிச்சநல்லூர் மூதமிழர்களின் வாழ்விடமாக (Proto Tamil) அறியப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகத்துக்கு இணையான நகரங்களும் தொன்மையும் நிறைந்த இடமாக ஆதிச்சநல்லூர் கருதப்படுகிறது. எனினும் இன்னும் ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போது இந்திய வரலாறே மாற்றம் பெறும் வகையில் ஆதிச்சநல்லூர் செயல்படும்.

கொற்கை தமிழர்களின் மிகத்தொன்மையான துறைமுகம். இது சங்ககால துறைமுகப் பட்டினமாகவும், பாண்டியர்களின் தலைநகராக இருந்துள்ளது. சங்கு குளித்தல், சங்¢கு அறுத்தல், முத்துக் குளித்தல் ஆகிய தொழில்களால் உலகப் புகழ் பெற்றிருந்தது. கோநகர் கொற்கை முத்து சிந்துவெளி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி என்பது வெறும் நதியல்ல, அது உலகப் பாரம்பரிய சின்னம். தாமிரபரணி தண்ணீரை குடித்து, கூடு கட்டி, குஞ்சுகள் பொரித்து, உயிர் வாழ்வதற்காக உலகெங்கிலுமிருந்து பறவைகள் கூந்தன்குளத்திற்கு வருகின்றன. பத்தமடை பாய்கள், திருநெல்வேலி அல்வா போன்ற அனைத்து பண்பாட்டு அடையாளங்களாகவும் விளங்குகிறது தாமிரபரணி. அத்தகைய அற்புத நீரை உருவாக்கி வழங்குகிறது பொதிகை மலை. காடுகள் என்பது கற்பனையான நிலப்பரப்பல்ல, அது நேரடியாக ஒவ்வொரு நிமிடமும் நம்மை பாதிக்கிற பொதிகை என்றும் அற்புதம்.
இவ்வளவு தொன்மைகளையும், அதிசயங்களை யும் உடைய பொதிகை இன்று எப்படி உள்ளது. இந்த ஹாட்ஸ்பாட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். மற்ற மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பகுதிகளைவிட இது இன்றும் அழியாமல் இருப்பதற்கு இங்கு பாதைகள் போடப்படாததுதான் காரணம். 2003ல் இக்காட்டின் வழியே பாதை போடப்பட வேண்டும் என்ற திட்டம் மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. இத்திட்டம் ஒருபோதும் வரக்கூடாது என்பதே நம் விருப்பம். மே மாதம் முதல் வாரத்தில் மட்டும் ஐந்தலைப் பொதிகையில் உள்ள அகத்தியரை வழிபட 2000க்கும் அதிகமான பக்தர்கள் சென்று வந்தனர். இப்பொழுது அதற்குத் தடை உள்ளது. ஆடி அமாவாசை சொரி முத்தைய்யனார் கோவிலுக்கு லட்சக்கணக்கில் மக்கள் வந்து தங்குவது வழக்கம். இவை இரண்டுமே பெரிய சுற்றுச்சூழல் சேதங்களை ஏற்படுத்தக்கூடியவை. வனத்துறையினரால் சிறப்பாக செயல் திட்டங்கள் தீட்டி இவற்றை நேர் செய்ய முடியும். மக்களும் இவ்வியற்கையை வழிபட்டாலே போதும். சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடாது என்ற மனோபாவத்தையும் வேண்டும்.

இந்தியாவில் சிரபுஞ்சிக்கு அடுத்தபடியாக அதிக மழை, அதாவது 4,300 மில்லி மீட்டர் மழை இங்கு பெய்து வந்தது. காலநிலை மாற்றத்தால் இது குறைந்திருக்கக்கூடும். மத்திய அரசு இதனை அகத்திய தேசியப் பூங்காவாக அறிவித்தது. வன உயிரினப் பாதுகாப்பு சட்டம், 1970 வனப்பாதுகாப்புச் சட்டம் 1980, 2005 பல்லுயிர் பாதுகாப்பு மசோதா, 2006 வன உரிமைச் சட்டம். இவ்வளவு சட்டங்களோடு ஹாட் ஸ்பாட் என்னும் தகுதியோடு பொதிகை இருந்து வந்தாலும், வனம் அழிந்து வருவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. முன்பு இஞ்சிக்குழியில் நிறைய காணி மக்களின் குடியிருப்புகள் இருந்து வந்தன. களக்காடு&முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் பேரில் ஆதிவாசி மக்கள் காடுகளில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டனர். காடுகளையும், பழங்குடி மக்களையும் பற்றிய தவறான பார்வைதான் இது. பழங்குடி மக்கள் காடுகளைப் பாதுகாப்பார்கள். அவர்களுடைய பாரம்பரிய மருத்துவ, கானக அறிவை யாரும் நம்பத் தயாரில்லை. இன்னும் சொல்லப்போனால் பொதிகை மலையின் பாதைகளையும், தட்பவெப்ப நிலையையும் அறிந்தவர்கள் காணிக்காரர்கள் மட்டுமே. பொதிகைத் தாவரங்களின் மருத்துவ குணங்களை அறிந்தவர்கள் அவர்கள் மட்டுமே.

பொதிகை மலை முழுவதுமே சித்தர்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. சித்தர்கள் மூலிகைகள் குறித்த மிக ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தனர். இன்றும் பொதிகை மலை அதனுடைய மருத்துவ மூலிகைகளுக்காகவே போற்றப்படுகிறது. பொதிகை மலைக்குள் மட்டுமே 11 விதமான மழைக்காடுகள் இருக்கின்றன. வாழை வகைகளில் மட்டுமே 26 விதங்கள் உள்ளன என்று சித்த மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். 10 வருடத்திற்கு ஒரு முறை காய்க்கும் கல்வாழை இன்றும் பொதிகையில் உள்ளது. 10 மாதங்களுக்குள் காய்க்கும் வாழைக்கு நாம் வந்துவிட்டோம். குங்கிலியம் இங்கு அதிகமாகக் காணப்படுகிறது. குழவு என்ற மரவகை இங்கு உள்ளது, இதைக் கீறிவிட்டால் ஒரு குடத்திற்கு எண்ணெய் கிடைக்கும், இதைப் பாதுகாப்பது நம் கடமை. அழிவை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கும் கல்தாமரை பொதிகை மலையில் அதிகமாகக் காணக் கிடைக்கிறது. பெட்ரோல் காய் எனப்படும் அகழிக்காய் இங்கு காணப்படுகிறது.

தென்னிந்தியாவின் மூன்றாவது பெரிய சிகரமாக விளங்கும் பொதிகையில் இன்று எல்லோருடைய கவனத்தைக் கவர்ந்து காடுகளின் தலையாய அடையாளமாக விளங்கும் ‘புலி’ அதிகமாகவே உள்ளது. இந்தியாவின் காரையாறு, 17வது புலிகள் சரணாலயம் இஞ்சிக்குழி பூங்குளம், நாகப்பொதிகை, ஐந்தலைப் பொதிகை வழியாக நாம் பயணிக்கும்போது எண்ணற்ற ஆறுகள் மலையின் வழியாக ஓடுவதையும் நாம் காணலாம். பாம்பாறு, பேயாறு, கல்லாறு, சேர்வலாறு, மயிலாறு இன்னும் எத்தனையோ சிற்றாறுகள். கிழக்கே பாயும் தாமிரபரணியைப் போல கேரளாவில் மேற்கே பாயும் தாமிரபரணியும் இங்கு உண்டு. இது களியக்காவிளைக்கும், மார்த்தாண்டத்திற்கும் நடுவே ஓடுகிறது. 800 வகையான உயிரினங்கள் இங்கு உள்ளன. புலி, யானை, கரடி ஆகியவற்றை நாம் சாதாரணமாகப் பார்க்க முடியும்.

தமிழ்நாட்டில் காணப்படும் 5,640 அதிகமான தாவரங்களில், 2,254 தாவரங்கள் பொதிகையில் காணப்படுகின்றன. அழிந்து வரும் தாவரங்களில் 533ல், 448 தாவரங்கள் பொதிகை மலையில் காணப்படுகின்றன. அதாவது மாபெரும் அபாயத்தில் உள்ள 230 தாவரங்களில் 58 இங்கு உள்ளன. மருத்துவக் குணம் கொண்ட 1,761 தாவரங்களில் 601 இங்கு உள்ளன. பாலூட்டிகளில் அழிந்து வரும் இனத்தில் 17 வகையும், பறவைகளில் 140, ஊர்வனவற்றில் 39ம், நீர்நிலவாழ்வில் ambibians 27ம் pisces 9 இங்கு காணப்படுகின்றன. அரிதான பறவைகளான பஞ்சவர்ணப் புறா (emerald dove) இருவாச்சி அல்லது மலைமொங்கானை (Horn bill) இங்கே பார்க்க முடியும். தமிழ் தேசிய விலங்கான வரையாடுகளும் இங்கு அதிகமாக உள்ளது. சிறுத்தை, சிறுத்தைப் பூனைகளையும் பொதிகை மலையில் நாம் பார்க்க முடியும்.
பொதிகை மலைப் பயணம் என்பது சாதாரணமான ஒன்று அல்ல. வாகனங்கள் செல்ல முடியாத பாதை, நடப்பதற்கும் மிகக்கடினமான ஒன்று. கன்னிகட், துலுக்கமொட்டை, தவிலடிச்சாடின் பாறை, பாண்டியன் கோட்டை என்று காணிக்காரர்கள் ஒவ்வொன்றாக விவரிக்கும்போது நாம் இயற்கையின் சங்கமமாக மெல்ல மாறிக் கொண்டிருப்பதை உணர முடியும். நாம் எதைத் தேடிப் பொதிகைக்கு பயணம் செய்கிறோம்? பல்லுயிர்ப் பெருக்கத்தின் வளங்களைப் பார்க்கவா, 100 அடிகளுக்கும் மேலாக வளர்ந்து நிற்கும் மரங்களைப் பார்க்கவா, மிருகங்களைப் பார்க்கவா, தாவரங்களைப் பார்க்கவா, அருவிகளைப் பார்க்கவா, மலையுச்சியிலிருந்து தெரியும் நமது ஊரை பார்க்கவா? காட்டின் ஒவ்வொரு வளைவிலும் நாம் நம்மையே பார்க்கிறோம். நாம் பெரிதாக மதிக்கும் வாழ்வின் தத்துவங்களும், லட்சியங்களும், பேராசைகளும், ஒவ்வொரு சிகரங்களில் ஏறும்போது தகர்த்துவிடுகின்றன. மலையுச்சியில் நாம் பறவையின் காட்சியையும், இறுதியாக பறவை மனதையும் அடைகிறோம். அதுவரை வாழ்ந்த வாழ்வில் ஒவ்வொரு இலையும், மலர்களும் நம்மைக் கேள்வி கேட்கிறன.

இயற்கையின் முன் ஏதுமற்றுப் போகிறோம். கடினமான பளுவோடு சிரமத்தோடு ஏறிச்சென்ற நம் மனது பறவையாகி மாறி, லேசாகி பறந்து, மிதந்து மீண்டும் நிலப்பரப்பிற்கு வருகிறோம். கீழேயிருந்து பொதிகையைப் பார்க்கும்போது, இலைகளாலும், மரங்களாலும் பொதிகை தன் ரகசியங்களை மூடிக்கொள்கிறது. இறுதியில் நாம் கற்றுக்கொண்டது ஏதுமில்லை, இயற்கையின் லயத்தையும், அன்பையும் தவிர.

(பூவுலகு ஜூலை 2012 இதழில் வெளியானது)

விவரங்கள்
எழுத்தாளர்: ஆர். ஆர்.சீனிவாசன்
தாய்ப் பிரிவு: சுற்றுலா
பிரிவு: தமிழ்நாடு
வெளியிடப்பட்டது: 30 அக்டோபர் 2012

Saturday, 20 December 2014

நெல்லை மாவட்டத்தில் நாளை 70 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர் கண்காணிக்க 21 பறக்கும் படைகள்

பதிவு செய்த நேரம்:2014-12-20 09:56:50

நெல்லை,: நெல்லை மாவட்டத்தில் நாளை (21ம் தேதி) நடக்கும் குரூப் 4 தேர்வை 69 ஆயிரத்து 792 பேர் எழுதுகின்றனர். தேர்வை கண்காணிக்க 21 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் நாளை நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி, பாளை, ராதாபுரம், சங்கரன்கோவில், செங்கோட்டை, சிவகிரி, தென்காசி, வள்ளியூர், வீ.கே.புதூர் ஆகிய 12 இடங்களில் 228 மையங்களில் குரூப் 4 தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வை 69 ஆயிரத்து 792 பேர் எழுதுகின்றனர்.
நெல்லையில் 25 மையங்களில் 6 ஆயிரத்து 494 பேரும், ஆலங்குளத்தில் 11 மையங்களில் 3 ஆயிரத்து 31 பேரும், அம்பையில் 30 மையங்களில் 7 ஆயிரத்து 439 பேரும், நாங்குநேரியில் 5 மையங்களில் 1,221 பேரும், பாளையங்கோட்டையில் 58 மையங்களில் 17 ஆயிரத்து 291 பேரும், ராதாபுரத்தில் 4 மையங்களில் 895 பேரும், சங்கரன்கோவிலில் 46 மையங்களில் 10 ஆயிரத்து 331 பேரும், செங்கோட்டையில் 14 மையங்களில் 2 ஆயிரத்து 915 பேரும், சிவகிரியில் 18 மையங்களில் 4 ஆயிரத்து 572 பேரும், தென்காசியில் 42 மையங்களில் 10 ஆயிரத்து 519 பேரும், வள்ளியூரில் 11 மையங்களில் 2 ஆயிரத்து 853 பேரும், வீ.கே.புதூரில் 10 மையங்களில் 2 ஆயிரத்து 229 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்வுக் கூட முதன்மை கண்காணிப்பாளர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேல் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், தேர்வை கண்காணிக்க துணை கலெக்டர்கள் தலைமையில் 21 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர தாசில்தார்கள், பிடிஒக்கள், துணை தாசில்தார்கள் நிலையில் 56 சுற்றுக்குழுக்களும், துணை பிடிஒக்கள், உதவியாளர்கள் நிலையில் 274 ஆய்வுப் பணி அலுவலர்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள் அனைத்திலும் போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சீனிவாசன், செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணா, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர்கள் சிவாஜி, சண்முகம், பிரேம் மனோகர் வில்லியம்ஸ், உதவி பிரிவு அலுவலர்கள் பெருமாள், பால தண்டாயுதம், சத்தியராஜ் மற்றும வருவாய் துறை, போக்குவரத்து துறை, கருவூலத் துறை, மின்சாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Thursday, 18 December 2014

திருமலைக்கோவில்-வீ.கே.புதூர்-நெல்லை வழித்தடத்தில் பஸ் தொடக்க விழா


செவ்வாய் 16, டிசம்பர் 2014 4:52:02 PM (IST)
திருமலைக்கோவிலில் இருந்து பண்பொழி, கம்பிளி, விந்தன்கோட்டை, சுந்தரபாண்டியபுரம், சுரண்டை, வீ.கே.புதூர், ஆலங்குளம் வழியாக நெல்லை செல்ல புதிய வழித்தடத்தில் (தடம் எண்.101) அரசு பஸ் தொடக்க விழா சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரத்தில் நடந்தது.

மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தலைமை வகித்தார். மாவட்ட அதிமுக துணை செயலாளர் மூர்த்தி, பொருளாளர் சண்முக சுந்தரம், எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் கரையாளனூர் சண்முகவேலு, கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் பண்டாரம் வரவேற்றார். அமைச்சர் செந்தூர்பாண்டியன் புதிய வழித்தடத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் யூனியன் தலைவர்கள் செல்லம்மாள் பால்ராஜா, செல்வ மோகன்தாஸ் பாண்டியன், பேரூராட்சி துணைத் தலைவர் பாலமுருகன், சுப்பிரமணியன், மேலபாட்டாகுறிச்சி ஊராட்சி தலைவர் பண்டாரிநாதன், மாநில போக்குவரத்து துணை செயலாளர் கந்தசாமிபாண்டியன், மண்டல தலைவர் இளவரசு, துணைசெயலாளர் குத்தாலிங்கம், அமைப்பாளர் வேல்முருகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Saturday, 29 November 2014

வீரகேரளம்புதூர் சவேரியார் ஆலய திருவிழா

பதிவு செய்த நேரம்:2014-11-27 10:53:34

வீரகேரளம்புதூர் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் மாலை யில் 2ம் தேதி வரை திருப்பலி, கூட்டுத்திருப்பலி, மறைக்கல்வி, அன்பியங்கள், நற் செய்தி தியானம் மற்றும் ஒப்புரவு வழிபாடு, விவிலியப் போட்டிகள் நற்கருணைப்பவனி நடக்கிறது.
டிச.2ம் தேதி இரவு 9 மணியளவில் புனிதரின் சப்பர பவனி நடக்கிறது. நிறைவு நாளான 3ம் தேதி திருவிழா திருப்பலி, புதுநன்மை, கொடியிறக்கம் நடைபெறுகிறது. விழாவில் தூத்துக்குடி மறை மாவட்ட சிப்பிக்குளம் ராஜா ரொட் ரிகோ, கோவில்பட்டி உதவி பங்குதந்தை, ஆரோக்கிய ராஜ், பாவூர்சத்திரம் ஆரோக்கியராஜ், சுரண்டை பங்குத்தந்தை வர்க்கீஸ் திருப்பலி நடத்துகிறார்கள். ஏற்பாடுகளை ஊர் தலை வர் சேசுராஜன், செயலாளர் மரியசுந்தரம், பொருளாளர் அருளானந்தம், உறுப்பினர் கள் ராயப்பன், ஞானசாமி அருள் சகோதரிகள் இறைமக்கள் செய்திருந்தனர்.

கடையநல்லூர் புதிய ஐடிஐயில் மாணவர் சேர்க்கை

நெல்லை, : கடையநல்லூரில் நடப்பு கல்வி ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வீரகேரளம்புதூர், அம்பை, தென்காசி, பேட்டை ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் வழங்கப்படுகிறது. பொருத்துனர், மின்பணியாளர், கம்பியர் மோட்டார் வண்டி, கம்பியாள், பற்றவைப்பவர் ஆகிய கல்விக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சிவிடி பாடத்திட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்கள் அனைவருக் கும் இலவச சைக்கிள், லேப்டாப், சீருடை, பஸ் பாஸ் உள்ளிட்டவை மற்றும் உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.50 ஆகும். மேலும் விபரங்களுக்கு பேட்டை ஐடிஐ முதல்வரை 0462 2342005 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 5ம் தேதி ஆகும்

Sunday, 9 November 2014

முட்டாளுடன் முந்த முடியுமா?

குறுநில மன்னர் ஒருவர், மிகச்சிறந்த தமிழ்ப்பற்றாளர். எப்போதும் புலவர்கள் புடைசூழவே இருப்பார். ஒருநாள் அவர் தனது ஆளுகையிலுள்ள வனப்பகுதிக்குப் பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றார். அப்போது தனக்குப் பிரியமான புலவர் ஒருவரையும் உடன் அழைத்துச் சென்றார். சில மைல் தூரம் சென்றவுடன் "சற்று இளைப்பாறலாம்' என்று எண்ணிய மன்னர், ஓர் ஆலமரத்தின் நிழலில் அமர்ந்தார். உடன் வந்தவர்களும் மன்னரைச் சுற்றி ஆங்காங்கே அமர்ந்தனர். ஆனால், உடன் வந்த புலவரைக் காணவில்லை.

÷மன்னர், அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் ""புலவர் எங்கே?'' எனக் கேட்டார். மன்னரைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் ஒருவரை ஒருவர் திகைப்புடன் நோக்க, அங்கே புலவர் இல்லாத நிலையில், வந்த வழியை அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

÷சற்று தூரத்தில் புலவர் நொண்டிக்கொண்டே வந்து கொண்டிருந்தார். புலவர் அருகில் வந்தவுடன், ""புலவரே ஏன் தாமதம், எங்களுடன் ஏன் வரவில்லை? ஒருவேளை எங்களை முந்திச் சென்றுவிட்டீர்களோ என நினைத்தேன்'' என்றார் மன்னர்.

÷புலவர் சற்றும் தயங்காமல் மன்னரை நோக்கி, ""அரசே முட்டாளுடன் முந்த முடியுமா?'' என்று பதில் கூறினார்.

÷புலவர் இவ்வாறு கூறியதைக் கேட்டவுடன் மன்னருடன் இருந்தவர்கள் அனைவரும், மன்னரைப் புலவர் "முட்டாள்' என்று கூறிவிட்டாரே எனத் திகைத்தனர். அப்போது புலவர் நிதானமாக, ""அரசே! வரும் வழியில் முட்கள் என் கால்களைப் பதம் பார்த்துவிட்டன. அம் முட்களை அகற்றி நடை தளர்ந்து நடந்துவரத் தாமதம் ஆகிவிட்டது. அதனால்தான் நான் உங்களுடன் சேர்ந்து வர இயலவில்லை. அப்படி இருக்கும்போது, முள்தாளுடன் முள்+தாள் - முள் தைத்த கால்களுடன் முந்த முடியுமா?) தங்களை நான் முந்த முடியுமா? எனப் புலவர் கூற, மன்னர் உட்பட அனைவரும் புலவரின் சாதுர்யத்தையும் கவித்துவத்தையும் ரசித்து இன்புற்றனர்.

÷இவ்வாறு கூறிய புலவர் "காவடிச்சிந்து' பாடிய சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார். இவர் 18-ஆம் நூற்றாண்டில் ஊத்துமலை என்னும் சிற்றூரைத் தலைமை இடமாகக்கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னரின் அவைக்களப் புலவராக இருந்து செந்தமிழ்க் கவிபாடி அவையை அலங்கரித்தவர்.

Friday, 29 August 2014

தண்ணீர் என நினைத்து பூச்சிமருந்தை குடித்த காவலாளி சாவு

சுரண்டை, ஆக. 28–

ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு பூலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முப்பிடாதிமுத்து (வயது 58). இவர் வீரகேரளம்புதூர் பகுதியில் உள்ள பல்லாரி தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு இவர் தோட்டத்தில் படுத்து இருக்கும்போது தண்ணீர் தாகம் எடுத்தது. அப்போது அங்கு பாட்டிலில் பல்லாரிக்கு அடிக்கும் பூச்சி மருந்து இருந்துள்ளது. அதை தண்ணீர் என்று நினைத்து முப்பிடாதிமுத்து குடித்து விட்டார்.

பாதி அளவு குடித்த பிறகுதான், அது தண்ணீர் அல்ல என்று அவருக்கு தெரியவந்தது. உடனடியாக அவர் அருகில் உள்ளவர்களிடம் கூறினார். அவர்கள் அவரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று முப்பிடாதிமுத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Friday, 1 August 2014

கலந்தாய்வு மூலம் நிரப்பப்படாத இடங்கள்: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது

நெல்லை,

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படாத இடங்கள் நேரடி மாணவர் சேர்க்கை மூலம் நிரப்பப்படுகிறது. நேரடி சேர்க்கை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

தொழிற்பயிற்சி நிலையங்கள்
நெல்லை பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், ஐ.டி.ஐ. படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது. அதாவது, பேட்டை, வீரகேரளம்புதூர், அம்பை, தென்காசி, ராதாபுரம் ஆகிய 5 ஊர்களில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும், 21 தனியார் தொழிற்பயிற்சி மையங்களுக்கும் இந்த கலந்தாய்வு நடந்தது.

மொத்தம் 26 தொழிற்பயிற்சி நிலையங்களிலும் உள்ள 1,587 இடங்களுக்கு, 2853 பேர் விண்ணப்பம் அனுப்பி இருந்தார்கள். அவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். மதிப்பெண்கள், இன சுழற்சி அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றதில் 1,406 இடங்கள் நிரபப்பட்டன.

நேரடி சேர்க்கை
மீதம் உள்ள 181 இடங்களுக்கு மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நேரடி சேர்க்கை மூலம் நிரப்பப்படுகிறார்கள். மேலும் ஏற்கனவே தொழிற்பயிற்சியில் சேர்க்கப்பட்டவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

காலியாக இருக்கும் கம்பியாளர், வெல்டர், பிளம்பர் பயிற்சி பிரிவுகளுக்கு 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பொருத்துனர், கடைசலர், இயந்திர வேலையாள், மோட்டார் மெக்கானிக், திறன்மிகு மையம் (எலக்ட்ரிக்கல்), கம்மியர் டீசல், ஏ.சி. மெக்கானிக், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், திட்டமிடுதல் (கோபா) போன்ற பயிற்சியில் சேர 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள், பெண்கள் தகுதி உடையவர்கள் ஆவர்.

ஒவ்வொரு தொழிற்பயிற்சி நிலையத்திலும் சில பிரிவுகளில் சில இடங்கள் காலியாக உள்ளன. மேற்படி காலி இட விவரங்கள் அனைத்து அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் விளம்பர பலகையில் ஒட்டப்பட்டு இருக்கிறது.

பயிற்சியில் சேர விரும்புவோருக்கு வயது 14 முதல் 45 வரை இருக்கலாம். நேரடியாக பெற்றோருடன் சம்பந்தப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு சென்று ரூ.50 செலுத்தி விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து பயிற்சியில் சேரலாம். மாற்றுச்சான்று, மதிப்பெண் பட்டியல், சாதி, வருமானம் ஆகியவற்றின் அசல் சான்றுகளை கொண்டு செல்ல வேண்டும். மார்பளவு புகைப்படம்–4, சேர்க்கைக்கான அரசு கட்டணத்தையும் கொண்டு வரவும்.

கட்டணம் கிடையாது
பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் விடுதி வசதியும், வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உணவுடன் கூடிய இலவச விடுதியும் உள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம் கிடைக்காத நிலையில், தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் கலந்தாய்வு மூலம் சேர்ந்து பயன் பெறலாம். கலந்தாய்வு மூலம் சேரும் ஆண்கள், பெண்களுக்கு தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.

மேலும் விவரங்களை நெல்லை மண்டல பயிற்சி இணை இயக்குனர் அலுவலக தொலைபேசி எண்–0462–2501251, பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 0462–2342005 என்ற எண்ணிலும், வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 04633–277962 என்ற எண்ணிலும், அம்பை அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 04634–251108, தென்காசி தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 04633–280933 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு அறியலாம்.

இந்த தகவலை பேட்டை, வீரகேரளம்புதூர், அம்பை, தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் ஒருங்கிணைந்த முதல்வர் எஸ்.முத்துசாமி, ராதாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எம்.ஆர்.அப்துல்காதர் ஆகியோர் தெரிவித்தனர்.

Wednesday, 23 July 2014

கலிங்கப்பட்டி நாராயண சுவாமி பொன்பதி திருவிழா 11 நாட்கள் நடக்கிறது

பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜூலை 23, 2:50

சுரண்டை அருகே உள்ள கலிங்கப்பட்டி ஸ்ரீமன் நாராயணசுவாமி பொன்பதியில் 35–வது ஆண்டு திருவிழா கடந்த (18–ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. கொடியினை சுரண்டை பேரூராட்சி மன்ற தலைவர் பழனி நாடார் ஏற்றினார்.

வீரகேரளம்புதூர் ஊராட்சி தலைவர் மருதப் பாண்டியன் (எ) பாபுராஜா திருஏடு வாசிப்பும், பால்தர்மம் நடக்கிறது. 8–ம் திருவிழா அன்று 25–ந்தேதி வெள்ளி பகல் 1 மணிக்கு அன்னதர்மமும் அய்யா கருட வாகனத்தில் பவனி வருதலும் நடக்கிறது.

நிறைவு நாளான வருகிற 28–ந்தேதி இரவு 12 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதலுடன் நிறைவு பெறுகிறது.

Sunday, 13 July 2014

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய திட்டத்தின்படி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 14) தொடங்கி ஜூலை 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய திட்டத்தின்படி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 14) தொடங்கி ஜூலை 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டை, வீரகேரளம்புதூர், அம்பாசமுத்திரம், தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வர் ச. முத்துசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டத்தின் மூலம் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீதம் இடங்களை அரசு ஒதுக்கீட்டின் கீழ், அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு இலவச பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களின் பயிற்சி செலவை அரசே ஏற்று தனியார் பயிற்சி நிலையங்களுக்கு வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

கலந்தாய்வு தொடக்கம்: அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திங்கள்கிழமை (ஜூலை 14) முதல் 21 வரை கலந்தாய்வு நடத்தி மதிப்பெண் தகுதி அடிப்படையிலும், இனவாரி அடிப்படையிலும் விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்து, அவரவர் விருப்பப்படி அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கான சேர்க்கை ஆணை வழங்கப்படும். இக் கலந்தாய்வில் 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 21 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் பங்கேற்கின்றன.

திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறும் கலந்தாய்வுக்கு 8, 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 195 மாணவர், மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் எஸ்.டி. முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர், பெண்களுக்கான இன ஒதுக்கீடுகளுக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் கலந்தாய்வுக்கு 8,10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு 2814 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வில் மாணவர்கள் மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்று, சாதி மற்றும் வருமானச் சான்று, அரசு சேர்க்கைக் கட்டணம் ஆகியவற்றுடன் நேரில் பெற்றோர்களுடன் பங்கேற்க வேண்டும்.

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் விடுதி வசதியும், வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உணவுடன் கூடிய இலவச விடுதியும் உள்ளது. பேட்டையில் மோட்டார் மெக்கானிக் பிரிவு மாணவர்களுக்கு 4 சக்கர வாகன பயிற்சியும், வீரகேரளம்புதூரில் 2 மற்றும் 4 சக்கர வாகன ஓட்டுநர் உரிமமும் பெற்றுத் தரப்படும். கம்பியாள், மின்சாரப் பணியாளர் பிரிவு மாணவர்களுக்கு பி- உரிமம் பெற்று வழங்கப்படும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், மடிக்கணினி, சைக்கிள், சீருடை, ஷூ, மாதாந்திர உதவித் தொகை ரூ. 500 ம், பேருந்து, ரயில் பயணக் கட்டணச் சலுகை போன்றவை வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 27 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் உள்ளன. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இடம் கிடைக்காத மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து இலவச பயிற்சி பெறலாம்.

மேலும் விவரங்களை அறிய திருநெல்வேலி மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண் 0462- 2501251, பேட்டை நிலையத் தொலைபேசி எண் 0462 - 2342005, அம்பாசமுத்திரம் நிலையத் தொலைபேசி எண் 04634 - 251108, வீரகேரளம்புதூர் நிலையத் தொலைபேசி எண் 04633 - 277962, தென்காசி நிலையத் தொலைபேசி எண் 04633 - 280933 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

Wednesday, 9 July 2014

Veerakeralampudur Pincode- 627861 details


Step 1 : Select State* :Tamilnadu
Step 2 : Select District :Tirunelveli
Step 3 : Select Taluk/Taluka/Tahasil :Veerakeralampudur
Step 4 : Select City :Veerakeralampudur

Pincode : 627861
City/Town Name : Virakeralmpudur
Delivery Status: Delivery
Office Type: S.O
Division Name : Kovilpatti
Region Name : Madurai
Taluk : Veerakeralampudur
Circle Name : Tamilnadu
District Name : Tirunelveli
State Name : TAMIL NADU


Breakdown of Pincode Digits :

627861, Veerakeralampudur, TAMIL NADU, India.



6 2 7 8 6 1


Virakeralmpudur has a pincode 627861. Virakeralmpudur belongs to Veerakeralampudur Taluk (taluka) of Tirunelveli District. Virakeralmpudur belongs to Madurai region of State TAMIL NADU and has Division name Kovilpatti and circle name Tamilnadu.

PIN Code also known as Post Code, Postal Code or ZIP Code is a series of numeric digits that are assigned to geographical areas and are used for mailing purpose (especially for sorting purpose)




1st Digit : Sub-Region

The 1st digit 6 of pincode 627861 signifies that it belongs to Northern India (States that belong to Southern India, Region 6 are Kerala and Tamil Nadu). India is being divided into 9 PIN regions. The first eight regions are the geographical regions where as the 9th is reserved for the Indian Army Postal Service.



2nd Digit : Sub-Region


The Geographical Reigion digit (1st digit) plus the Second Digit i.e. 62 of the PIN Code 627861 represents the Sub Region or the Postal Circles which it belogs : i.e. TAMIL NADU.
3rd Digit : Sorting/Revenue District

The 1st,2nd and the 3rd digits all together i.e. : 627 represents the sorting or the revenue district of.

627 code belongs to division Kovilpatti in Madurai region in TAMIL NADU.
Last 3 digit : Post Office

The last three digits 861 are assigned to to individual postal offices.



VIRAKERALMPUDUR 627861 Geo-loation co-ordinates : Latitude : 8.6854000 , Longitude : 77.6146000


VIRAKERALMPUDUR, 627861 : 14-Day Weather forecast


Tuesday, 8 July 2014

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சக மாணவரின் உயிரைக் காக்க களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயர் சிகிச்சை பெற்று வரும் மாணவரின் உயிரைக் காக்க அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் சுரண்டை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மனு அளித்தனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயர் சிகிச்சை பெற்று வரும் மாணவரின் உயிரைக் காக்க அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் சுரண்டை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மனு அளித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டம், ராஜபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பி. சொக்கலிங்கபாண்டியன் (19). இவர் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அவருக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்கு போதிய நிதி இல்லாத நிலையில் அவரது குடும்பத்தினர் தவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு நிதியுதவி அளித்து அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி அக்கல்லூரியில் பயிலும் சக மாணவர், மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர், திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.

Thursday, 3 July 2014

சாலையோர ஆக்கிரமிப்பு, குறுகிய பாலத்தால் வீ.கே.புதூரில் போக்குவரத்து நெருக்கடி

பதிவு செய்த நேரம்:2014-07-01 11:26:06

சுரண்டை, : வீ.கே.புதூரில் சாலையோர ஆக்கிரமிப்பு மற்றும் குறுகிய பாலத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
சுரண்டை அருகே வீரகேரளம்புதூரில் பழைய தாலுகா அலுவலகம் மேல்புறம் மாறாந்தை கால்வாய் செல்கிறது. இந்த காலல்வாயில் உள்ள குறுகிய பாலம் கட்டப்பட்டு சுமார் 80 வருடங்களுக்கு மேல்ஆகிறது. சுரண்டையிலிருந்து வீ.கே.புதூர் வழியாக நெல்லை செல்லும் அனைத்து பஸ்சுகளும் இந்த பாலத்தை கடந்து தான் செல்கின்றன. ஆலங்குளம், கழுநீர்குளம் பகுதி பொதுமக்கள் சுரண்டைக்கு வரும் பொதுமக்கள் இந்த பாலத்தை கடந்து தான் வரவேண்டிய அவல நிலை உள்ளது.
மழைக்காலங்களில் கால்வாயில் வெள்ளம் வரும் போது பாலத்தின் மேல்பகுதியில் செல்லும், அப்போது போக்குவரத்து தடைப்படுகிறது. பாலத்தில் எதிரே, எதிரே பஸ்கள் வந்தால் விலக முடியாமல் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லும் போது அதிக அதிர்வு ஏற்படுகிறது. பாலம் வெடிப்பு ஏற்பட்டு இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாலத்தை கடப்பதால் போக்குவரத்து பாதிப்பு எற்படுகிறது.
எனவே குறுகிய பாலத்தை விரிவுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டாஸ்மாக் கடை
அகற்றப்படுமா?
பாலத்திலிருந்து வடக்கு பழைய பஸ்-ஸ்டாப் வரையிலான இருபுறம் பலசரக்குகடைகள், டீ கடை, ஹோட்டல் வைத்திருப்பவர்கள் கடை முன்பு கூரைசாய்ப்பு வைத்தும், மரப்பெட்டிகள், சிமெண்ட் திண்ணைகள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர்.
மேலும் அருகில் டாஸ்மாக் கடை இருப்பதால் குடிமகன்கள் நடுரோட்டில் செல்வதாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகள் மற்றும் டாஸ்மாக் கடையை அகற்றினால் ஓரளவு போக்குவரத்து சீராகும்.

Wednesday, 25 June 2014

"மழைக் காலங்களில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு உதவித்தொகை'



First Published : 25 June 2014 02:58 AM IST
மழைக் காலங்களில் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவித்தொகையாக தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

இதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் தகுதியான பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்தார்.

மண்பாண்டத் தொழிலாளர்கள் மழைக்காலங்களில் தொழில் நடத்துவது மிகவும் கடினம். இதனால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, அவர்களுக்கு மழைக் காலங்களில் மட்டும் உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உதவித்தொகைக்கான தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் மு.கருணாகரன் பேசியதாவது: மழைக் காலங்களில் மண்பாண்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 2014-15ஆம் ஆண்டுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடைபெறவுள்ளது.

மண்பாண்டத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த நபர்கள் மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கூட்டுறவுச் சங்கத்தில் பதிவு செய்த உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது இம்மாதம் 26ஆம் தேதி முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை கள ஆய்வு நடத்தப்படும்.

ஆலங்குளம்,அம்பாசமுத்திரம்,நான்குனேரி,தென்காசி,பாளையங்கோட்டை, ராதாபுரம், சங்கரன்கோவில், செங்கோட்டை, சிவகிரி, திருநெல்வேலி, வீரகேரளம்புதூர் ஆகிய 11 வட்டங்களிலும் அந்தந்தப் பகுதி வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை, கதர்கிராமத் தொழில் வாரிய அலுவலர்கள் இணைந்து ஆய்வு செய்வர்.

ஒவ்வொரு குடும்பமாக கணக்கிடப்பட்டு தகுதியான அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.

மண்பாண்டம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் அனைவரும் கணக்கெடுப்பில் தங்களது பெயர் விடுபடாமல் முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் அலுவலர்களும் யாரையும் விடுபடாமல் முழுமையாக கணக்கெடுக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

இக்கூட்டத்தில், கதர் கிராமத் தொழில் வாரிய உதவி இயக்குநர் ராமசுப்பிரமணியன், கோட்டாட்சியர் ரமேஷ், சமூகப் பாதுகாப்பு திட்ட தொழிலாளர் அலுவலர் தமிழ்செல்வி, தொழிலாளர் ஆய்வாளர் லிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Saturday, 21 June 2014

ஊராட்சித் தலைவி கணவர் மீது தாக்குதல்

• Last Updated: Jun 19, 2014 12:40 AM
வீரகேரளம்புதூர் அருகே திருமண வீட்டுக்கு குடிநீர் வழங்கும் பிரச்னையில் ஊராட்சித் தலைவியின் கணவர் தாக்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து பதற்றம் நிலவியது.
இதையடுத்து போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்டது. வீரகேரளம்புதூர் அருகேயுள்ள கழுநீர்க்குளம் ஊராட்சித் தலைவர் சண்முகத்தாய். இவரது கணவர் ஆண்டபெருமாள். செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் திருமண வீடு ஒன்றுக்கு ஊராட்சி குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடிப்பது தொடர்பான பிரச்னையில் ஆண்டபெருமாள் தாக்கப்பட்டதாக தகவல் பரவியது. ஏற்கெனவே இருதரப்பினரிடையே கடந்த சில ஆண்டுகளாக பிரச்னை இருந்து வரும் நிலையில் இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து புதன்கிழமை காலையில் சுரண்டை ஆய்வாளர் டேவிட் ரவிராஜன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
பின்னர் ஆலங்குளம் டி.எஸ்.பி.பிச்சை தலைமையில் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுமூக தீர்வு ஏற்படவே பதற்றம் தணிந்தது. அங்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வி.கே.புதூர் சாலையில் ஆக்கிரமிப்புகள்

பதிவு செய்த நேரம்:2014-06-18 11:59:10

நெல்லை, : ஆலங்குளம் ஒன்றிய விவசாய அணி செயலாளர் காளி சாமி மற்றும் பாஜ பிரமுகர் சொர்ணராஜ் தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் அளித்த மனு:
வீரகேரளம்புதூர்- சண்முகநல்லூர் சாலையில் எங்கள் கிராமமான கீழ வீராணம் உள்ளது. இச்சாலையில் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. தற்போது பள்ளி வாகனங் கள் அதிகரித்துள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. ஒரு வாகனம் இச்சாலையில் வந்தால், எதிரே வரும் வாகனங்கள் சுமார் 300 அடி பின்னோக்கி வந்தே விலக முடியும் என்ற நிலை காணப்படுகிறது. எனவே இச்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். இச்சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, செப் பனிட முன்வரவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்க விண்ணப்பிக்கலாம் 30–ந் தேதி கடைசி நாள்

புதன், ஜூன் 18,2014, 10:04 AM IST

நெல்லை,
பேட்டை, வீரகேரளம்புதூர், அம்பை, தென்காசி ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்க 30–ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு முதல்வர் எஸ்.முத்துசாமி தெரிவித்து உள்ளார்.
தொழிற்பயிற்சி
பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், பொருத்துனர், கடைசலர், இயந்திர வேலையாள், கம்பியாள், கம்மியர் மோட்டார் வண்டி, கம்மியர் வானொலி மற்றும் தொலைக்காட்சி, பற்றவைப்பவர், திறன்மிகுமையம் (எலக்ட்ரிக்கல்) போன்ற பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வீரகேரளம்புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், பொருத்துனர், மின்சாரப்பணியாளர், கம்பியாள், பம்ப் மெக்கானிக் போன்ற பிரிவுகளும், அம்பை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துனர், மின்சாரப்பணியாளர், கம்பியர் மின் அணுவியல் பிரிவுகளும், தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துனர், மின்சாரப்பணியாளர், கம்பியாள் போன்ற தொழிற்பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்ற அனைத்து மாணவ– மாணவிகளுக்கும் வளாக தேர்வு மூலம் வேலைவாய்ப்பு வழங்குவதுடன், மின்சார பணியாள், கம்பியாள் போன்ற தொழிற்பிரிவு மாணவ– மாணவிகளுக்கும் ‘பி‘ லைசென்ஸ் பெற்று தரப்படுகிறது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று வரும் மாணவ– மாணவிகளுக்கு இலவச லேப்– டாப், சைக்கிள், சீருடை, ஷூ, மாதம் ரூ.500 ஊக்கத்தொகை, பஸ் பாஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி
பொருத்துனர், கடைசலர், இயந்திர வேலையாள், மெக்கானிக் மோட்டார் வண்டி, கம்பியர் வானொலி மற்றும் தொலைக்காட்சி, திறன்மிகு மையம் (எலக்ட்ரிக்கல்), பம்ப் மெக்கானிக் மற்றும் கம்பியர் மின் அணுவியல் போன்ற தொழிற் பிரிவுகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவ– மாணவிகள் சேரலாம். கம்பியாள் வெல்டர் போன்ற பிரிவுகளில் சேர 8–ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10–ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் சேரலாம். இருபாலரும் தகுதியுடையவர்கள்.
கம்பியர் மோட்டார் வண்டி தொழிற் பிரிவில் சேர்ந்த ஆண், பெண் பயிற்சியாளர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வீரகேரளம்புதூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் அனைத்து மாணவ– மாணவிகளுக்கும் ஓட்டுனர் பயிற்சி கொடுத்து 2 மற்றும் 4 சக்கர வாகன உரிமம் (லைட்) சான்றிதழ் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இயங்கி வரும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி வசதியும், வீரகேரளம்புதூர் அரசினர் தொழிற்பியிற்சி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு அரசு விடுதியில் உணவு வசதியுடன், இலவச தங்கும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர அலுவலகத்தில் ரூ.50 செலுத்தி விண்ணப்பமும், விளக்க உறையும் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். வருகிற 30–ந் தேதி கடைசி நாளாகும். மதிப்பெண் அடிப்படையிலும், இன சுழற்சி மூலமாகவும் மாணவ– மாணவிகள் சேர்க்கை தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
குறைந்தபட்ச கல்வி தகுதியுடன் 14 வயது பூர்த்தி செய்த மாணவ– மாணவிகள், 40 வயது வரை உள்ளவர்கள் சேர்க்கைக்கு தகுதி உடையவர்கள்.
வளாக தேர்வு
பேட்டை, வீரகேரளம்புதூர், அம்பை மற்றும் தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று மாணவ– மாணவிகளுக்கும் வளாக தேர்வு மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது. பலர் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று உள்ளனர். மேற்கண்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் விண்ணப்பம் பெற்று சேர்ந்து பயனடையலாம்.
விவரங்களுக்கு
பேட்டை தொழிற்பயிற்சி நிலையத்தில் 0462 2342005 என்ற தொலைபேசி எண்ணிலும், வீரகேரளம்புதூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 04633 277962 என்ற தொலைபேசி எண்ணிலும், அம்பை தொழிற்பயிற்சி நிலையத்தில் 04634 251108 என்ற தொலைபேசி எண்ணிலும், தென்காசி தொழிற்பயிற்சி நிலையத்தில் 04633 280933 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு நெல்லை, மண்டல பயிற்சி இணை இயக்குனர் அலுவலகம் 0462 2501251, 2501261 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் மாலை நேர இலவச பயிற்சிகள் திறன் மேம்பாட்டுக்காக பல்வேறு தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தகவலை, பேட்டை, வீரகேரளம்புதூர், அம்பை, தென்காசி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் ஒருங்கிணைந்த முதல்வர் எஸ்.முத்துசாமி தெரிவித்து உள்ளார்.

Sunday, 15 June 2014

வீ.கே.புதூரில் தி.மு.க. பொதுக்கூட்டம்

பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூன் 14, 2:37 PM IST

கீழப்பாவூர் ஒன்றிய திமுக சார்பில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வீ.கே.புதூரில் நடந்தது. சேக் மைதீன் தலைமை வகித்தார்.

நகர செயலாளர் மாரியப்பன் வரவேற்றார். பரசுராமன் தொகுத்து வழங்கினார். மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி, மாநில பேச்சாளர் நெல்லை பா.ரா, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் ஆகியோர் பேசினர்.

பாவூர் நாவலர், ராமச்சந்திரன், அன்பழகன், ஆண்டபெருமாள், தர்மர், வைத்தீஸ்வரி, சக்தி, ராசாத்தி. அருணாப்பேரி திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுப்பிரமணியன், ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் மகேந்திரன் ஆகியோர் நன்றி கூறினர்.

Sunday, 1 June 2014

பேட்டை ஐ.டி.ஐ.யில் முப்பெரும் விழா

: May 30, 2014 5:26 AM
பேட்டையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) முப்பெரும் விழா நடைபெற்றது.

பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துநர், கடைசலர், இயந்திரவேலையாள் ஆகிய 8 தொழிற்பிரிவுகளில் மாணவர்-மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த நிலையத்தின் வளாகத்தில் அமைந்துள்ள தொடர் அறிவுரை மையத்தில் 98 ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான தேர்வில் மோட்டார் மெக்கானிக் பிரிவு மாணவர் எஸ்.மணிகண்டன் முதல் இடத்திலும், 99 ஆம் ஆண்டு தேர்வில் கம்பியாளர் பிரிவு மாணவி சி.பாரதி முதலிடமும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது.

இதேபோல வீ.கே.புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் கம்பியாள் பிரிவு மாணவி எஸ்.பேச்சியம்மாள், மாநில அளவிலான திறனாய்வுப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். இவருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர வளாகத் தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்-மாணவிகளுக்கு பணிநியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.

இதற்கான முப்பெரும் விழாவுக்கு, பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எஸ்.முத்துசாமி தலைமை வகித்தார். பயிற்சி அலுவலர் என்.ரமீசாபானு வரவேற்றார். திருநெல்வேலி மண்டல பயிற்சி இணை இயக்குநர் டி.ஜான் பாஸ்கோ முன்னிலை வகித்தார். நிர்வாக அலுவலர் ஆ.வள்ளியம்மாள் பாராட்டிப் பேசினார். பயிற்சி அலுவலர்கள் சத்யராஜ், லட்சுமணன், ஜெயச்சந்திரன், முத்தையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Saturday, 10 May 2014

வீரகேரளம்புதூர் புனித அந்தோணியார் பெண்கள் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

பதிவு செய்த நேரம்:2014-05-10 11:19:37

வீரகேரளம்புதூர் புனித அந்தோணி யார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 134 மாணவிகள் பிளஸ்2 தேர்வு எழுதியினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும். மாணவி விக்னேஸ்வரி 1163 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவி கலை வாணி 1140 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தையும், மாணவி ரோஜா பர்வீன் 1136 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தையும் பெற்றனர். முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவி களை பள்ளி நிர்வாகி மேரிடெய்சி ராஜம்மாள், தலைமை ஆசிரியை காளியம்மாள் மற்றும் ஆசிரியர் கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

Friday, 9 May 2014

கோடை மழையால் 8 ஆண்டுகளுக்கு பிறகு சிற்றாற்றில் அணை கடந்து வெள்ளம் புரண்டது

பதிவு செய்த நேரம்:2014-05-09 11:49:36
நெல்லை, : நெல்லை மாவட்டத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு வெளுத்து வாங்கிய கோடை மழை யால் சிற்றாற்றில் அணை களை கடந்து வெள்ளம் புரள்கிறது. குளங்கள் நிரம்பி வருகின்றன. விவசாயிகள் சாகுபடிக்கு தயாராகி விட்டனர்.
குற்றாலத்தில் உருவா கும் சிற்றாறு சுரண்டை புளியரை அணையை கடந்து வீராணம் வருகிறது. அதன்பின் அனுமன்நதியோடு கலந்து கங்கைகொண்டான், சீவலப்பேரி வரை வந்து தாமிரபரணி யில் சங்கமிக்கிறது.
குற்றாலம் தாண்டி தென்காசி, வீகே.புதூர், சுரண்டை பகுதி வரை அணைகள், குளங்கள் அதி கம் என்பதால் சுரண்டை யை கடந்து தண்ணீர் வருவது கடந்த காலத்தில் குறைந்து விட்டது. குறிப் பாக வீராணம் அணையை உயர்த்தியபிறகு தண்ணீர் வடிவதே கடினமானது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான புயலால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்வதால் இப்பகுதியில் தண்ணீர் ஓடுகிறது. வீ.கே.புதூர், பைம்பொழில், அச்சன்புதூர், சுரண்டை வரை பல்லாரி சாகுபடி பெருமளவில் நடப்பதால் புளியரை அணையின் ஷட் டர் திறக்கப்பட்டு தண்ணீர் சிற்றாற்றை சார்ந்த குளங்களுக்கு செல்கிறது. வீரா ணம் கடந்து ஆற்றிலும் தண்ணீர் புரண்டோடுகிறது.
ஆயிரக்கணக்கான விவசாயிகள் நம்பியிருக்கும் மானூர் பெரியகுளத்திலும் கொஞ்சம் நீர் பெருகியுள் ளது. இக்குளத்துக்கு முன் புள்ள தெற்குப்பட் டியை சேர்ந்த 2குளங்கள், ஐயர் குளம், ஐயனார்குளம், மடத் தூர் குளங்கள் பெருகி வருகின்றன. இதேநிலை இன் னும் சில நாட்கள் நீடித்தால் மானூர் குளமும் ஓரளவு நிரம்பிவிடும்.
இதுகுறித்து மானூர் பெரியகுளம் விவசாயி முகமது இப்ராகிம் கூறுகை யில், ‘துத்திக்குளம், மாயமான்குறிச்சி, ஐயனார்குளம், மடத்துக்குளங்கள் நிரம்பி வருவதால் எங்கள் குளத்துக்கு நீர் வரத்து உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் தாயார்தோப்புக்கு கிழக்கே தண்ணீர் வருவதே இந்த கோடையில்தான். இன்னும் சில நாட்கள் மழை இருந்தால் சிற்றாற்றை தழுவியுள்ள 28 குளங்களும் நிரம்பிவிடும். விவசாயிகள் பருத்தி, நெல், கத்தரி என ஏதாவது ஒரு பயிரை சாகுபடி செய்யத் தொடங்கி விடுவர்.’ என்றார்.
மேல பிள்ளையார்குளம் விவசாயி சுடலை கூறுகையில், ‘கோடை மழை இன்னும் இரு நாட்கள் பெய்தால் மேல, கீழ பிள்ளையார்குளங்கள் முழுமையாக நிரம்பிவிடும். நாங்கள் விவசாயத்துக்கு தயாராகிவிட்டோம். கையிலிருந்த கொஞ்ச காசையும் கோடையில் கால்நடைகளை காப்பாற்ற செலவழித்து விட்டோம்’ என்றார்.
சபாஷ் சத்தியநாதன் மானூர் பெரியகுளத்துக்கு தண்ணீர் வர அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் சத்தியநாதனும் ஒரு காரணம் என்றனர் விவசாயிகள். தாயார்தோப்பிலிருந்து மானூர் குளம் வரை சுமார் 30 கி.மீ. கால்வாயை இவர் சத்தமின்றி செப்பனிட்டுள்ளார். இன்னும் சுமார் 6 கி.மீ. தூரமே இப்பணி பாக்கி உள்ளது.

Tuesday, 25 March 2014

வீ.கே.புதூரில் மின்வாரிய ஊழியரை மிரட்டியவர் மீது வழக்கு

பதிவு செய்த நேரம்:2014-03-25 10:30:32
சுரண்டை, : வீ.கே.புதூர் மின்வாரியத்தில் பெண் உதவியாளரை மிரட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சுரண்டை அருகே வீ.கே.புதூரை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் பரசுராமன்(52). வீகேபுதூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவர் வீகேபுதூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றார்.
அங்கு பணியில் இருந்த உதவியாளர் கழுநீர்குளத்தை சேர்ந்த மாரிச்சாமி மனைவி முருகேஸ்வரி(32) என்பவரிடம், புதிய மின் இணைப்பு பெறுவதற்கான விவரங்களை கேட்டுள்ளார். அதற்கு அவர், அதிகாரி இல்லை. எனக்கு அதுபற்றிய விவரம் தெரியாது என்று கூறியுள்ளார்.
இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பரசுராமன், முருகேஸ்வரியை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக வீ.கே.புதூர் போலீசார் பரசுராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Sunday, 16 March 2014

Anna Boys Higher Secondary School

                                             Anna Boys Higher Secondary School



Affiliation :
Funding : Self Financing
Level : Senior Secondary Stage
Accreditation : TNSB
Estd. Year :
Gender : Boys

Anna Boys Hr. sec School is one of the good institutes of Tamil Nadu.

It is situated in Veerakeralampudur city of Tamil Nadu.

Overview

Anna Boys Higher Secondary School level of Senior Secondary Stage is funded by the Self Financing Veerakeralampudur, Tamilnadu. This School was accredited by Tamil Nadu State Board. The group of visionaries and intellectuals to impart education in a stimulating and innovative environment where students are empowered with knowledge and professional skills while upholding the values of integrity, tolerance and mutual respect. It is among the prominent colleges of its field in the state.

Anna Boys Higher Secondary School the ambiance provided by the school facilitates quality learning. Anna Boys Higher Secondary School aims to produce technical and management professionals of global standards. The school mission is to develop well qualified, globally accepted, world class technically sound professionals, innovative research ideas with social commitments and highest ethical values as inner strength, for the upliftment of man kind, trained through high profiled experienced faculty, career oriented classes and interactive teaching-learning process.

Classes Offered
Class I
Class II
Class III
Class IV
Class V
Class VI
Class VII
Class VIII
Class IX
Class X
Class XI
Class XII

Facilities Avialable
Library
Laboratories
Playground
Seminar Room

Location
Anna Boys Higher Secondary School
Mainroad, Near by Policestation
Veerakeralampudur
Tirunelveli, Tamilnadu
INDIA - 627861




Friday, 10 January 2014

வீரகேரளம்புதூர் நூலக வாசகர் வட்ட கூட்டம்

பதிவு செய்த நேரம்:2014-01-04 11:26:23
சுரண்டை,: வீரகேளம்புதூரில் கிளை நூலக வாசகர் வட்ட கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வக்கீல் சுப்பையா தலைமை வகித்தார். நூலகர் வெற்றிவேலன் வரவேற்றார். வி.கே.புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராஜபாண்டி வேல்சாமி பாண்டியன் நூலக வாசகர் வட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தாயார்தோப்பு மெயின் ரோட்டில் நூலகத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் கட்டிடம் கட்டவதற்கு அரசிடம் மனுக்கள் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. உறுப்பினர்கள் பழனிக்குமார், சிவராமகிருஷ்ணன், கருப்பசாமி, முத்துராமன், வெள்ளத்துரை மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர். நூலகர் திருமலை நம்பி நன்றி கூறினார். ஏற்பாடுகளை நூலகர் வெற்றிவேலன், நூலக பணியாளர் கைலாசம், சங்கீதா ஆகியோர் செய்திருந்தனர்.

Wednesday, 1 January 2014

wise u happy new year to all my vk friends & ur families