Pages

Wednesday, 29 April 2015

மூத்த தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியத்துக்கு ‘தண்டமிழ் ஆசான்’ விருது திருவள்ளுவர் கழகம் வழங்கியது


புதன், ஏப்ரல் 29,2015, 4:30 AM IST


மூத்த தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியத்துக்கு ‘தண்டமிழ் ஆசான்‘ என்ற விருதை கடையத்தில் நடந்த விழாவில் திருவள்ளுவர் கழகம் வழங்கியது.

‘தண்டமிழ் ஆசான்‘ விருது

நெல்லை மாவட்டம் கடையம் கலையரங்கில் திருவள்ளுவர் கழகத்தின் 21–வது ஆண்டு விழா மற்றும் மூத்த தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியனுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

திருவள்ளுவர் கழக தலைவர் ஆ.சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியனுக்கு ‘தண்டமிழ் ஆசான்‘ என்ற விருதை வழங்கி, திருவள்ளுவர் கழக செயலாளர் அறிவரசன் பேசினார்.

‘பாரதியின் உலகப்பார்வை‘ என்ற தலைப்பில் மாணவர் சிவ.மணிமாறன் பேசினார். ‘வாழ வைக்குமா வள்ளுவம்‘ என்ற தலைப்பில் புலவர் செந்தலை ந.கவுதமன் பேசினார்.

விழாவில் தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் பேசியதாவது:–

இது பாரதியார் வாழ்ந்த ஊர், நடந்த இடம். இந்த இடத்தில் எனக்கு ‘தண்டமிழ் ஆசான்‘ என்ற விருது வழங்கப்பட்டு இருப்பதை நான் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன். தமிழை உணர்ந்தவர்கள் குறைவாகிக் கொண்டிருக்கிறார்கள். இது வருந்தத்தக்கது.

தற்கொலையாகும் காதல்

தற்காலத்தில் காதல் வயப்படுகிறார்கள். ஆனால், சில நாட்களில் தற்கொலைக்கு ஆளாகின்றனர். உண்மையான அன்பு இருந்தால், காதலில் யாருக்கும் தோல்வி இருக்காது.

தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து கிடையாது. ஆனால் திருக்குறளில் கடவுள் வாழ்த்து வருவதற்கு தொல்காப்பியம் தான் காரணம். தமிழின் பெருமையை உலகத்தினர் புரிந்து கொள்ளும் வகையில், உலகில் தோன்றிய முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதை வலியுறுத்தி ஆங்கிலத்தில் நூல் எழுதி உள்ளேன்.

தமிழ்த்தாய் அரவணைத்தாள்

நான் 5 வயதில் தாயை இழந்து விட்டேன். ஆனால் தமிழ்த்தாய் என்னை அரவணைத்தாள். தமிழ்தான் என் உயிர்.

86 வயதிலும் நான் தளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு தமிழ்தான் காரணம். தமிழ் கற்றவர்கள் ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். வள்ளுவர் கூறும் 10 உடைமைகளுடன் இருக்க வேண்டும். பேராற்றல் உடையது தமிழ். இதை தமிழ் மக்கள் உணர வேண்டும்.

இவ்வாறு தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் பேசினார்.

ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழக பொறுப்பாளர்கள் சுந்தரம், சங்கரநாராயணன், கடையம் திருவள்ளுவர் கழக பொறுப்பாளர்கள் மு.அ.சித்திக், இந்திரஜித், சுப்பிரமணியன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக திருவள்ளுவர் கழக துணை தலைவர் க.சோ.கல்யாணி சிவகாமிநாதன் வரவேற்றுப் பேசினார்.

முடிவில் சோமசுந்தரம் நன்றி கூறினார்.