Pages

Saturday, 26 March 2016

ச ரி க ம ப த நி!



Author: -இராஜை என். நவநீதிகிருஷ்ணராஜா


புலவர் அண்ணாமலையார் அகவையில் இளையோராயினும் பெரும்புலவர்கட்கு நிகரான புலமைத்திறன் மிக்கவர் என்பதை ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பர் அறிந்திருந்தார். எனவே, அவர் மீது மிக்க பற்றும் பாசமும் கொண்டு, அவருடன் அளவளாவிக் களித்தார்

புலவர் அண்ணாமலையார் அகவையில் இளையோராயினும் பெரும்புலவர்கட்கு நிகரான புலமைத்திறன் மிக்கவர் என்பதை ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பர் அறிந்திருந்தார். எனவே, அவர் மீது மிக்க பற்றும் பாசமும் கொண்டு, அவருடன் அளவளாவிக் களித்தார். இதனைக் கண்ணுற்ற ஏனைய புலவர்கள் அண்ணாமலை மீது பொறாமை கொண்டனர். ஜமீன்தார், அவர்களுக்கு அண்ணாமலையின் ஒப்பற்ற அறிவுத்திறனை உணர்த்த விரும்பினார்.

தம் அரசவைப் புலவர்களை அழைத்து, "சரிகமபதநி' எனும் தொடரினை யமகமாக வைத்து பாடல் ஒன்றினை இயற்றிடுக' எனக் கூறினார். அவைப் புலவர்கள் அனைவரும் அங்ஙனம் பாடும் வகை அறியாது திகைத்தனர். அண்ணாமலையோ சிறிதும் தாமதிக்காது,



"சரிகமப தநியேற்குச் சந்து சொல்என்

பாள் மதன்ஏ தைக்க மார்பில்

சரிகமப தநிசமனத் தார்க்கருள் சங்

கர எனும் அத்தத்தில் நில்லா

சரிகமப தநிதநிதம் அனையர் அருத்

திடினும் அருந்தாமல் வாடிச்

சரிகமப தநி எனப் பாடுதலைமறந்

தாள் இதயா லய சற் கோவே'



எனப் பாடினார். இதனை ரசித்துக்கேட்ட ஜமீன்தார் மகிழ்வுற, ஏனைய புலவர்களோ காழ்ப்புணர்ச்சி உற்றனர். அந்நிலை அறிந்த அண்ணாமலை பாடலின் பொருள் விளங்குமாறு பதம் பிரித்து விவரிக்கலானார். முதல் அடியில் அமைந்த சரிகம் என்பதற்கு வண்டு எனப் பொருள் உண்டு. எனவே, வண்டே எனக்காகத் தூது செல்வாயாக என விளக்கினார்.

அச்சமயம் அண்ணாமலையின் ஆசான் பெரும்புலவர் முகவூர் இராமசாமிக் கவிராயர் அவ்வரசவைக்கு வந்தார். அவர் அண்ணாமலையை இடைமறித்து, "சரிகம் எனும் சொல்லிற்குக் வண்டு எனும் பொருள் எங்ஙனம் பொருந்தும்? இலக்கியங்களில் எங்கேயாகிலும் சரிகம் எனும் சொல் வண்டு என இடம் பெற்றுள்ளதா? அங்ஙனம் இருப்பின் ஓர் இடத்தினைக் குறிப்பிடுவாயாக' என்றார்.

அதற்கு அண்ணாமலை, மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டில் "சரிகமே சரகமே, சஞ்சாளிகம் சுரும்பு கீடம்' என வந்துள்ளதே' என்றார். இதனைக் கேட்ட ராமசாமிக் கவிராயர், "முழுப்பாடலையும் பாடு' என்றார். உடனே,



"அரியளிஞிமிறு மந்தியறு பதஞ்சிலீ முகஞ்சஞ்

சரிகமே சரகமே சஞ்சாளிகஞ் சுரும்பு கீடம்

பிரமரமாவே கீதம் பிருங்கமே பிரிசம் புள்ளு

வரிகொள் புண்டரீகந் தும்பி மதுப

நாலைந்தும் வண்டாம்'



எனும் பாடலை இனிய ராகத்தோடு பாடினார். உடனே ராமசாமிக் கவிராயர், "சரிகம்' என்பது எங்ஙனம் வண்டு என பொருள்படும்?' என்றார். "சஞ்சரீகம், சரகம் என்பவைதான் வண்டினைக் குறிக்கும் சொற்களாகும். சரிகம் என்பது வண்டினைக் குறிக்கும் சொல்தான். எனவே, வேறு ஒரு பொருள் அமையுமாறு "சரிகமபதநி' எனும் ஏழு எழுத்துகள் வர மீண்டும் ஒரு யமகக் கவி பாடு' என்றார்.

இதனைச் செவிமடுத்த மற்ற புலவர்கள் அண்ணாமலையின் பாடல் தவறாக அமைந்துள்ளதை எண்ணி மகிழ்வுற்றனர். ஆனால், அவர்களது மகிழ்வு வெகுநேரம் நீடிக்கவில்லை. நுண்மாண் நுழைபுலம் மிக்க அண்ணாமலை கிஞ்சித்தும் தயக்கமின்றி "சரிகம்' எனும் சொல்லிற்குச் "சஞ்சரிக்கின்ற மேகம்' எனப் பொருள் கொள்ளலாமே... பாடலை ஏன் மாற்ற வேண்டும் என மிடுக்குடன் கூறினார்.



"இயம்புகின்ற காலத் தெகின மயில் கிள்ளை

பயம் பெறும் கம்பூவை பாங்கி }நயந்த குயில்

பேதை நெஞ்சந் தென்றல் பிரமா மீரைந்துமே

தூதுரைத்து வாங்குந் தொடை'



எனும் இரத்தினச் சுருக்கமாக தூதுக்குரிய பொருள்களுள் மேகம் ஒன்றுதானே! எனக் கூறினார். இவர்தம் பேராற்றலைக் கண்ட இராமசாமிக் கவிராயரோ பூரித்து நிற்க, ஏனைய புலவர்கள் வாயடைத்து நின்றனர். ஜமீன்தாரும் வியப்பின் மேலீட்டால், "இவர் புலவரில் இரட்டியல்லர்; மூவிரட்டி' எனப் பாராட்டி மகிழ்ந்தார்.

-இராஜை என். நவநீதிகிருஷ்ணராஜா