Saturday, 10 October 2020

தமிழ்ப்பா மஞ்சரி பாடல்கள்

ஊற்றுமலை ஜமீன்ந்தார் இருதாலய மருதப்பத் தேவரையும் வீரகேரளம்புதூரையும் பற்றி உ வே சாமிநாதையர் இயற்றிய தமிழ்ப்பா மஞ்சரி பாடல்கள்.



பாடல் 1:

மண்களிக்கும் வீரையிடைக் கண்ணன்நவ நீதமிரு
             மலர்கை ஏந்திக் 
கண்களிக்கும் படி நிற்கும் காட்சிஇத யாலயமா
             கனவான் ஊட்டும்  
விண்களிக்கும் சுவைமிகுசிற் றுண்டிகளா தியநிதமும்
             விரும்பி உண்டுண்
டெண்களிக்கும் சுவையதனை மறந்தொழிந்த
         பெருமிதத்தை இயம்பும் மன்னே !!


பொருள் :

ஊற்றுமலை ஜமீன்ந்தார் இருதாலய மருதப்பத் தேவர் .
வீரை - வீரகேரளம்புதூர் 
இங்கே நவநீதகிருஷ்ணசுவாமியின் ஆலயம் இருக்கிறது.

நவநீதகிருஷ்ணசுவாமி கையில்  வெண்ணெயை ஏந்தி நிற்பதை போல , இருதாலய மருதப்பத் தேவர் நிவேதித்த  சிற்றுண்டி வகைகளை உண்டு வெண்ணை சுவையை மறந்துவிட்ட  நிலையை காட்டுகிற தென்றபடி.

பாடல் 2:

தன்னிடைமுன் துயின்றிடுமா தவன்வடிவு பிறிதொன்று 
            தரித்தே தன்பால் 
மன்னிடுமற் றையஅனைத்தும்  மருவிஇத யாலயப்பேர் 
            மருவி யாரும் 
பன்னிடுமா றுறல்தெரிந்த பாற்கடலும்  அவன்போலப் 
            படிவ மாறித் 
துன்னிடுமற்றையதங்கி அவற்றங்கி  வீரையெனத் 
            துலங்கிற் றலோ. 

பொருள் :

திருமால் இருதாலய மருதப்பத் தேவராக தோன்ற, அதனையறிந்த 
பாற்கடலும் வீரகேரளம் புதூராகத் தோன்றியதென்றபடி.

அவற்றங்கி  -அவனைத் தாங்கி.
வீரை - வீரகேரளம்புதூர் : கடல் என்றும் ஒரு பொருள் உண்டு. 



வீரகேரளம்புதூர் என்ற இந்த ஊருக்கு ஒரு சிறப்பு உண்டு. அது தமிழ்காத்த, புலவர்களைப் புரந்த ஊற்றுமலை ஜமீன் ஊர் என்பதே! இந்த ஜமீனைப் பற்றி தமிழ் தாத்தா – உ. வே. சாமிநாதையர். தமது நினைவு மஞ்சரியான என் சரித்திரம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.