Pages

Sunday, 5 May 2013

அகத்தியர்

அகத்தியரும் பொதிகை மலையும்

அகத்தியர் தோற்றம் பற்றியும் சிறப்புச் செயல்கள் பற்றியும் பல கதைகள் உள்ளன.
தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தார்கள். இவர்களைக் கண்ட அசுரர்களோ கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும் பலவாறான கருத்துகள் நிலவுகின்றன. குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பிறவி பெற்ற அகத்தியர், இந்திரன் வேண்டு கோளுக்கிணங்க சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.

அகத்தீஸ்வரர், குறுமுனி என்றழைக்கப்படும் அகத்தியர் இயற்றிய அகத்தியம் தமிழ் இலக்கியத்தில் முதன்மையும், முதலாவதாகவும் கருதப் படுகிறது. தமிழும் மருத்துவமும் ஜோதிடமும் இறைபக்தியும் இவரிடம் இருந்து மணம் பரப்பின. புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.

தமிழுக்கான முனிவர் என்றும், சித்த மருத்துவ முறைகளை வழங்கிய முனிவர் என்றும் அகத்திய முனிவர் குறிப்பிடப்படுகிறார். இவரது பாடல்களில் பயின்றுவந்துள்ள சொற்கள் இவரைப் பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்பதைத் தெரிவிக்கின்றன.

அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை (ஆற்றல்களைப்) பெற்றார்.

அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.

இராமபிரானுக்கு சிவகீதையை போதித்தவர் அகத்தியர்.இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.

அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.

வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறியாய்ச் சமைத்துப் படைத்து, வாதாபியை திரும்ப அழைக்க அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிடவே, அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.

அகத்தியர் எழுதிய நூல்கள்
அகத்தியர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:

அகத்தியர் வெண்பா
அகத்தியர் வைத்தியக் கொம்மி
அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
அகத்தியர் வைத்தியம் 1500
அகத்தியர் வைத்திய சிந்தாமணி
அகத்தியர் கர்ப்பசூத்திரம்
அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
அகத்தியர் வைத்தியம் 4600
அகத்தியர் செந்தூரம் 300
அகத்தியர் மணி 4000
அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
அகத்தியர் பஸ்மம் 200
அகத்தியர் நாடி சாஸ்திரம்
அகத்தியர் பக்ஷணி
அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
சிவசாலம்
சக்தி சாலம்
சண்முக சாலம்
ஆறெழுத்தந்தாதி
காம வியாபகம்
விதி நூண் மூவகை காண்டம்
அகத்தியர் பூசாவிதி
அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூல்களை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்

அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர, அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணித்தார் அகத்தியர். மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம் கூறிச் சென்ற அகத்தியர், மீண்டும் வடதிசை செல்லாதிருந்தார். ஆதலால் விந்திய மலையும் அதன் பின் உயரவில்லை எனக்கூறப்படுகிறது.

சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காகமாக உருக் கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.

தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார்.

சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய “அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம்” வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

சிவபெருமான் கயிலையங்கிரியில் உமாதேவியை மணந்த போது, அனைத்து தேவர்களும் அங்கு கூடி நிற்க கயிலை தாழ்ந்து தென்னாடு உயர்ந்தது. அதனை சமப்படுத்த இறைவன் அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பி வைத்த கதை நாம் அறிந்ததே!

தென்னாட்டிற்கு உமையம்மையுடன் வந்து தன் திருமணக் காட்சியை அகத்தியருக்கு அருளுவதாகவும் கூறினார் சிவபெருமான். அதன்படி அகத்தியரும் தென்னாட்டிற்கு வந்து பல தலங்களைத் தரிசித்து, கடைசியில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகும் பொதிகை மலையில் வந்து தங்கித் தவம் செய்தார் என்று கந்த புராணம் கூறுகிறது. பாபநாசம் உட்பட பல தலங்களில் இறைவன் திருமணக் காட்சி அருளியுள்ளார். இப்பொழுதும் அகத்தியர் பொதிகை மலையில் தவம் செய்து கொண்டிருப்பதாக ஒரு ஐதீகம் உள்ளது.
பொதிகை மலை இருக்கும் பகுதியான அம்பாசமுத்திரமும் அதனைச் சுற்றியுள்ள பல இடங்களும் முத்தமிழிலும் புலமை பெற்ற தமிழ் முனிவர் அகத்தியருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவையாகும். இவர் பல திருக்கோவில் களில் சிவபெருமானை லிங்க வடிவில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம் உண்டு. இதற்குச் சான்றாக தமிழகத்தில்- குறிப்பாகத் தென் மாவட்டங்களில் உள்ள பழமை வாய்ந்த கற்றளி (கருங்கல் கோவில்) சிவாலயங்களில் அகத்தியரின் திருவுருவச் சிலைகளை நாம் காணலாம்.

அகத்தியர் தனியாக அல்லது சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடுவதாக வடிக்கப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் தூண்களில் வடிக்கப்பட்டிருக்கும். இதிலிருந்து அகத்தியருக்கும் தமிழ் நாட்டிற்கும் ஏற்பட்ட தொன்மைத் தொடர்பை நாம் அறியலாம்.

இமயமலையிலிருந்து அகத்தியர் பாண்டி நாட்டுக்கு வந்து பாண்டிய மன்னர்களுக்கு குலகுருவாக விளங்கினார் என்ற செய்தி, கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் மூன்றாம் ராசசிம்ம பாண்டியன் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட சின்னமனூர் செப்பேடுகளில் – வடமொழிப் பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காளிதாசர் எழுதிய ரகுவம்சத்திலும் “அகத்தியரின் சிஷ்யன் பாண்டியன்’ என்னும் குறிப்பு உள்ளது. இவற்றால் அகத்தியருக்கும் பாண்டியருக்குமுள்ள தொடர்பும் நமக்கு நன்கு புலனாகிறது.

அகத்தியருக்கான தனிக் கோவில்
இத்தனை பெருமை வாய்ந்த அகத்தியருக்கு அவரது மனைவி லோபமுத்திரையுடன் ஒரு கோவில் அம்பாசமுத்திரம் பிரதான கடை வீதியில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த சந்நிதியில் அகத்தியப் பெருமான் காட்சி தருகிறார். தனிச் சந்நிதியில் லோபமுத்திரை தெற்கு நோக்கிக் காட்சி தருகிறார். ஆலய முகப்பில் நந்தி, கொடி மரம் ஆகியவை உள்ளன. கருவறையின் வலப்புறம் இருவரின் அழகிய வண்ண ஓவியங்கள் உள்ளன. தென்புறம் தனிச் சந்நிதியில் தட்சிணாமூர்த்தியும், மேற்கே அகத்தியர், லோபமுத்திரையின் அழகிய பெரிய உற்சவத் திரு வுருவங்களும் செப்புப் படிமத்தில் காட்சியளிக்கின்றன.

சிவகாமியின் அழகிய பெரிய செப்புப் படிமங்களும் உள்ளன. கன்னி மூலை விநாயகரும் உள்ளார். கிழக்கே உள்ள பெரிய வெளி மண்டபத்தின் முன்புறம் அகத்தியரின் சுதை உருவம் உள்ளது. இவருக்கும் சிறப்பு வழிபாடுகள் உள்ளன. அகத்தியருக்கென்று ஏற்பட்ட ஒரே கோவில் என்ற பெருமை உடையது இந்தக் கோவில்.



கருவறையில் அகத்தியர் வலக்கை சின்முத்திரை காட்ட, இடக்கையில் ஏடு ஏந்தியுள்ளார். கழுத்தில் லிங்கத்துடன் மாலை, ஜடாமகுடம், மார்பில் பூணூல், மீசை, தாடியும் அமைந்துள்ளது. அகத்தியரின் தேவி லோபமுத்திரை இரு கரங்களுடன் வலக்கரத்தில் மலர் ஏந்தியுள்ளார். அகத்தியர் தென் தமிழ் நாட்டுக்கு வரும்போதே மணம் புரிந்து கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இவர்களுக்கு சித்தர் என்னும் பெயர் கொண்ட மெய்யறிவு வாய்ந்த புலவர் பிறந்ததாகவும் கூறுவர். இவையெல்லாம் தமிழோடு சம்பந்தப்பட்டவை.

சமஸ்கிருத நூல்களைப் படித்தால், அகஸ்தியர் மிகப் பழங்காலத்தில் வாழ்ந்தவர். சில ரிக் வேதப் பாடல்களின் கவி. அவரது பிறப்பும் ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர் கும்ப முனி, குடத்திலிருந்து ஜனித்தவர். மித்ர-வருண எனற தேவனுக்கும் ஊர்வசிக்கும் பிறந்தவர்.

இந்திரன் விருத்திராசுரனைக் கொன்ற கோபத்தால் கால கேயர்கள் கடலில் ஒளிந்து கொண்டு, அவ்வப்போது வெளியே வந்து தேவர்களைத் துன்புறுத்தினர். இந்திரனின் வேண்டுகோளின்படி அகஸ்தியர் கடலைத் தன் உள்ளங்கையில் ஏந்திக் குடித்தார்.

வாதாபி, இல்வலன் என்ற இரண்டு அரக்க சகோதரர்கள். வழிப்போக்கர்களை விருந்துக்கழைத்து, இல்வலன் ஆட்டுருவில் இருக்கும் வாதாபியைக் கறி சமைத்துப் படைப்பான். விருந்தினர் உண்டு முடிந்ததும், 'வாதாபி, வெளியே வா', என்றழைப்பான். விருந்தினர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வாதாபி வெளியே வருவான். ஒரு சமயம் இல்வலன் அகஸ்தியருக்கு உணவு இட்டபின் வழக்கம் போல் வாதாபியை அழைக்க, அவன் ஜீரணமாகி விட்டான் என்று கூறி, அகஸ்தியர் அவர்களது கொடுமையை ஒழித்தார்.

அகந்தையால் வானளவு உயர்ந்து சூரிய சந்திரர்களின் போக்கைத் தடுக்க முற்பட்ட விந்தியமலை தன்னைப் பணிந்த போது, 'நான் தென் திசை சென்று திரும்பி வரும்வரை அப்படியே தாழ்ந்திரு' என்று சொல்லிச் சென்றவர் திரும்பி வடநாடு செல்லவேயில்லை. இந்திரன் விருத்திராசுரனைக் கொன்ற தோஷத்தால் பீடிக்கப்பட்டு மானசரோவரத்தில் ஒரு தாமரைத் தண்டில் ஒளிந்து வாழலானான். இந்திரன் இல்லாதிருந்தது தேவலோகம். அப்போது நூறு அசுவ மேத யாகங்களைச் செய்து முடித்த நகுஷ சக்கரவர்த்தி புதிய இந்திரனானான். பதவிச் செருக்கில் அவன் இந்திராணியையும் விரும்பினான். அவனிடமிருந்து தப்புவதற்காக, தேவகுரு பிரகஸ்பதி சொன்னபடி, மகரிஷிகள் சுமக்கப் பல்லக்கில் வந்தால் அவனை ஏற்பதாக இந்திராணி நிபந்தனை விதித்தாள். நகுஷன் அகஸ்தியர் உட்பட்ட ரிஷிகளைப் பல்லக்கைச் சுமக்கச் செய்தான். இந்திராணியின் மேல் கொண்ட காமத்தால் அறிவிழந்த அவன் ரிஷிகளை 'சர்ப்ப, சர்ப்ப'[வேகமாகச் செல்லுங்கள்] என்று விரட்டினான். அதனால் கோபமடைந்த அகத்தியர், 'சர்ப்ப சர்ப்ப' எனறு எங்களை விரட்டிய நீ மகாசர்ப்பமாகக் கடவாய்' என்று சபித்தார். உடனே நகுஷனும் பெரும் மலைப்பாம்பாக உருமாறி பூமியில் விழுந்தான்.

அகஸ்தியர் லோபமுத்திரையை மணந்தார். கிரௌஞ்சன் என்ற அசுரன் தன்னைத் துன்புறுத்த, அவனை மலையாகும்படி சபித்தார். முருகனின் வேல்பட்டு அவன் தன்னுருவை மீண்டும் பெறுவான் என்று அருளினார். அகஸ்தியர் ராம ராவண யுத்தத்தில், ராமன் உள்ளத் தளர்வெய்திய போது, சூரியனைப் போற்றும் ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை உபதேசித்தார். அகஸ்தியரே தமிழ்நாட்டுக்குக் காவிரியையும், தாமிரவருணியையும் தனது கமண்டலத்தில் கொண்டு வந்தார். தொல்காப்பியர் அவரது சீடர். தென் திசை வானில் காணப்படும் ஒளி மிகுந்த அகஸ்திய நட்சத்திரம் (கெனோபஸ்) அவரே. 'அகஸ்திய கூட மலை'யில் அவர் இன்றும் தவமியற்றிக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம். இப்படி அகஸ்தியரைப் பற்றி எண்ணற்ற கதைகள் உண்டு.

அகஸ்தியருக்கு பாரதத்தில் பல இடங்களில் ஆசிரமங்கள் இருந்ததாகத் தெரிகிறது. தண்டகாரணியத்தின் வடபகுதியில் மகாராஷ்டிரத்தில் நாசிக் -பஞ்சவடியில் ஆசிரமம் இருந்தது. அங்கேதான் அவர் ராமனை முதலில் கண்டார். லோபமுத்திரையை மணந்ததும் அங்கு தான். (குஜராத்திலுள்ள சோமநாத் பிரபாஸ்பட்டணத்தில் அவர்களது திருமணம் நடந்தது என்றும் ஒரு கதை உண்டு). அவரது இரண்டாவது ஆசிரமம் வட கர்நாடகத்தில் வாதாபிக்கு மூன்று மைல் கிழக்கிலுள்ள 'மலகூட பர்வத'த்தில் இருந்தது.. மூன்றாவது ஆசிரமம் 'மலய பர்வதம்' எனப்படும் பொதியில் அல்லது பொதிகையில் இருந்தது. வால்மீகியும் கம்பனும் அதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் அகஸ்திய வழிபாடு இருந்தது. பல தமிழகக் கோயில்களில் அகஸ்தியருடைய சிலைகளைப் பார்க்கிறோம். ஆனால் தூரக் கிழக்கு நாடுகளில் உள்ள இந்துக் கோவில்களிலும் அகஸ்தியருக்குச் சிலை வைத்தார்கள் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அகஸ்தியரோ அல்லது அவரது சந்ததியினரோ ஜாவா, சுமத்ரா, மலேயா, போர்னியோ, தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்குச் சென்று அங்கே ஹிந்து தர்மத்தையும் கலாசாரத்தையும் நிலைநாட்டி இருக்கலாம். யசோவர்மன் என்ற புகழ்பெற்ற கம்புஜ மன்னன் அகஸ்தியருடைய சந்ததியைச் சேர்ந்தவன் என்று சொல்லப்படுகிறது.

கீழ்திசை நாடுகளுக்குச் செல்லும்போது, நான் தவறாது அங்குள்ள இந்தியக் கலாசாரச் சின்னங்களைப் பார்ப்பதுண்டு. அப்படியே இந்தோனேஷியாவிலும் குறிப்பாக ஜாவாவிலுள்ள பல ஹிந்து பௌத்த ஆலயங்களுக்குச் சென்றிருக்கிறேன். அங்கே பல இடங்களில் அகஸ்தியர் சிலைகளைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். தலைநகரான ஜகார்த்தா தொல்பொருள் அருங்காட்சியகத்திலும் பல ஹிந்து தெய்வச் சிற்பங்களோடு அகஸ்தியர் சிற்பங்களைப் பார்த்திருக்கிறேன். இந்தோனேஷியாவிலுள்ள மிகப்பெரிய பழைய சிவாலயம் 'பிரம்பனம்' என்ற ஊரில் இன்றும் உள்ளது. 'ஜோக்ஜகார்த்தா' என்ற நகருக்குச் சற்றுத் தொலைவிலமைந்த அக்கோயிலில் சிவன், பிரம்மா, விஷ்னு, துர்க்கை, கணபதி, நந்தி, அகஸ்தியர் சிலைகள் உள்ளன. சிவாலயத்தை வலம் வரும்போது தெற்குப் பக்கத்தில் அகஸ்தியருக்கு ஒரு தனி சன்னிதியே இருப்பதைக் காணலாம். அகஸ்தியர் சிற்பம் ஜடா மகுடம், தாடி, கைகளில் கமண்டலம், அக்ஷமாலா, குள்ளமான உருவம், பருத்தி இடையோடு காணப்படுகிறது. சிவபெருமானிடத்தில் அவருக்கிருந்த பக்தியினால், அவரை சிவனாகவே நினைத்து, அவருக்கு 'திரிசூலம்' ஒன்றும் அளிக்கப்பட்டிருக்கிறது.

அகஸ்தியரது இந்த இந்தோனேஷியத் தொடர்பைப் பற்றி, தொல்பொருள் துறை துணை இயக்குனர் ஜெனராலாக இருந்த பத்மபூஷண் டி.என். ராமச்சந்திரன் விரிவாக எழுதியுள்ளார். கிழக்கிந்தியத் தீவுகளுக்குக் கடல்வழியாக இந்தியர்கள் சுமார் கி. பி 600 முதல் செல்லத் தொடங்கினர். கூர்ஜர தேசத்திலிருந்து ஓர் இளவரசன் ஆயிரக்கணக்கான தன் குடிமக்களோடு ஜாவாத் தீவில் வந்து குடியேறியதாக ஒரு வரலாறு. பின்னால் கலிங்கத்திலிருந்தும், கோதாவரி, தமிழ்த் துறைமுகங்களிலிருந்தும் கப்பலேறி இந்தோனேஷியத் தீவுகளுக்குப் பல கூட்டங்கள் சென்றன.

ஜாவாவில் கலிங்கம் என்றே ஒரு ராஜ்யம் இருந்தது. அந்நாட்டு மொழியில் 'ஓராங் கெலிங்'(கலிங்க) என்றால் 'இந்தியாவிலிருந்து நேராக வந்தவன்' என்று பொருளாம். அங்கிருக்கும் கல்வெட்டுகளெல்லாம் சாலிவாகன சகாப்த காலக் கணக்கு முறையில் உள்ளன. இக் கணக்கு முறை முற்றிலும் தென்னிந்தியாவில் பின்பற்றிய முறை. அதுமட்டுமல்ல, வட இந்திய காலக் கணக்கு முறையான விக்கிரம சகாப்தம் ஒரு கல்வெட்டிலும் காணப்படவில்லை. எனவே இந்தோனேஷியாவில் குடியேறியவர்கள் பெரும்பாலும் தென்னிந்தியரே. மேலும், பல இடங்களில் பல்லவ லிபிகளே காணப்படுகின்றன.

அக்காலத்தில் பாய்மரக் கப்பலில் சென்ற மாலுமிகளுக்குப் புயலும், சூறாவளியும், கடல் கொந்தளிப்புகளும்தான் பேரபாயங்கள். கடலைக் குடித்த அகஸ்தியர் பெயரைச் சொன்னால் கடல் அலைகளே அடங்கிவிடும் என்று மாலுமிகளுக்கு ஒரு தீவிர நம்பிக்கை. மகா கவி காளிதாசனே 'அகஸ்திய (நட்சத்திர) உதயத்தில் கடல் அமைதியாகிறது' என்று பாடுகிறான். அகஸ்தியர் பெயரும் வழிபாடும் இந்தோனேஷியாவில் பரவுவதற்கு இந்தத் தென்னிந்திய மாலுமிகளும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தார்கள்.

இந்தோனேஷியாவில் உள்ள மூன்று கல்வெட்டுக்கள் குறிப்பாக அகஸ்தியரோடு தொடர்புடையன என்று ராமச்சந்திரன் சுட்டிக் காட்டுகிறார். தென் கேதுப் பிரதேசத்தில் 'சங்கல்' என்ற இடத்தில் சகா 654 (கி. பி.732)ல் எழுப்பிய சமஸ்கிருதக் கல்வெட்டில் உள்ள வாசகம் பின் வருமாறு: "மிக அற்புதமான, தெய்வீகமான சம்பு(சிவன்)வின் ஆலயம் குஞ்சரகுஞ்சம் எனப்படும் வளமிக்க நாட்டில் வசித்த குடும்பம் அல்லது வம்சத்திலிருந்து லோக க்ஷேமத்திற்காகக் கொண்டு வரப்பட்டது (அதைப் போல இங்கு அமைக்கப்பட்டுள்ளது)"

இந்தக் குஞ்சரகுஞ்சம் என்பது குஞ்சரகோணம். அது கன்னடத்தில் ஆனைகொண்டி எனப்படும் விஜயநகர சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட இடம், முதல் தலைநகரம். துங்கபத்ராவின் கரையிலமைந்தது. நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் ஹரிவம்சத்திலுள்ள சிறந்த ஆதாரங்களைக் கொண்டு ஓ.சி. கங்குலி, அகஸ்தியர் வசித்த பல இடங்களில் ஆனைகொண்டியில் உள்ள குஞ்சரகிரியும் ஒன்று என்று முடிவு செய்திருக்கிறார். அங்கே ஒரு கோவிலைக் கட்டியிருக்கக் கூடும். அதை முன்மாதிரியாகக் கொண்டே இந்தோனேஷியக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் ஆலயம் கட்டப்பட்டிருக்க வேண்டும். அகஸ்தியரோ அவரது வழிவந்தவர்களோ ஒரு சிவாலயத்தோடு தொடர்புடையவர்கள் என்று இக்கல்வெட்டிலிருந்து தெரியவருகிறது.

ஆனால் மிகத் தெளிவாக அகஸ்தியரே ஒரு சிவாலயத்தைக் கட்டினாரென்று மற்றொரு கல்வெட்டு பேசுகிறது: "பத்ரலோகம் எனப்படும் தேவாலயத்தைக் கலசஜர் (கலசம் அல்லது கும்பத்திலிருந்து ஜனித்தவர் அதாவது அகஸ்தியர்) கட்டினார். அவரது புத்திர பௌத்திரர்களது (சந்ததியினர்) விருப்பங்களெல்லாம் நிறைவேறட்டும்."

இதைவிட முக்கியமான செய்தி மற்றொரு கல்வெட்டினின்றும் கிடைக்கிறது. அது அகஸ்தியருக்கே ஒரு சிலையெடுக்கப் பட்டதைப் பற்றிப் பேசுகிறது. அது வரை சந்தன மரத்தால் சிலைகள் செய்யப்பட்டு வந்தன. அப்படி விரைவில் அழியும் மரத்தாலன்றி, கல்லால் சிலை செய்த விவரங்களை அக்கல்வெட்டு தருகிறது.

"தன் முன்னோர்களால் தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட சிலை சேதமாகி பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்ட மன்னன் கருங்கல்லால் அகஸ்தியருக்கு அழகிய சிலையெடுக்கச் சிறந்த சிற்பிகளுக்கு ஆணையிட்டான். சாலி வாகன சாகப்தம் 682ல் (கி.பி.760) மார்கழி மாதம், வெள்ளிக் கிழமை கும்ப லக்னத்தில் வேதம் நன்கறிந்த சான்றோர்களையும், தேர்ந்த சிற்பிகளையும் கொண்டு மன்னன் கும்பமுனிக்குச் சிலையெடுத்து பிரதிஷ்டை செய்தான்." அந்த மன்னனின் பெயர் கஜாயனன்.

இந்தோனேஷியத் தீவுகளில் தெய்வங்களோடு அகஸ்தியரும் வழிபடப்பட்டார். சிவகுரு, பட்டார குரு என்று அவர் அழைக்கப்பட்டார். பிரமாணப் பத்திரங்களில் அகஸ்தியர் பெயர் இருந்தது. மக்கள் அகஸ்தியர் என்ற சமஸ்கிருதப் பெயரிலோ அல்லது 'வலைங்' (பாலினேஷிய மொழியில் அகஸ்திய நட்சத்திரம்) என்ற பெயரிலோ வாக்குறுதி அளிக்கும் வழக்கம் நிலவி வந்தது. அகஸ்தியர் இந்திய சமயம், கலாச்சாரத்தைப் பரப்பியவர் என்பது மட்டுமல்ல, ஜாவாவின் மிகச் சிறந்த கலைகளின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் அவரே காரணமாயிருந்தார்.

வடநாட்டையும் தென்னாட்டையும் இணைத்தவர், இந்தியாவுக்கு வெளியிலும் நமது நாகரீகத்தைக் கொண்டு சென்று பரப்பியவர் என்ற ஆதாரபூர்வமான இந்த உண்மைகள் செயற்கரிய செய்த அகஸ்தியர் என்ற மாபெரும் மனிதரை நமக்குக் காட்டி, இந்தியனாக இருப்பதில் நம்மை பெருமிதமடையச் செய்கின்றன.


பொதிகை மலை


மேற்குத் தொடர்ச்சி மலையிலேயே இரண்டாவது பெரிய சிகரம் அகத்தியர் பீக் என்று சொல்லப்படும் ஏக பொதிகை. அகத்தியர் மலை தென்னிந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது பொதிகை மலை, அகத்தியர் மலை, தமிழ் மலை, தென்மலை, மலையமா மலை, மலையம் போன்ற பல பெயர்களால் குறிக்கப்படுகிறது. இங்கு அகத்தியர் வாழ்ந்ததாகக் கூறப்படுவதால் இது அகத்திய மலை என்று வழங்கப்படுகிறது. இம்மலையில் பல சிற்றாறுகளும், அருவிகளும் உள்ளன.



சங்ககாலத்தில் பொதியம் என்றும், பொதியில் என்றும் வழங்கப்பட்ட மலையை இக்காலத்தில் பொதிகைமலை என்றும் கூறுவர். வடக்கில் இமயமலையும், தெற்கில் பொதியமலையும் தமிழர் சென்று வந்து கண்ட ஓங்கி உயர்ந்த மலைகள்.


மேற்குத் தொடர்ச்சி மலையில் பொதிகை மலை 6,125 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அகத்திய முனிவருக்கு முதல்முறையாக 1970-ல் சிலை நிறுவப்பட்டது. பின்னர் 1985-ம் ஆண்டுக்குப் பின்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைதான் தற்போது அங்கு உள்ளது.


தென் காஞ்சி கோட்டம் என அழைக்கப்படும் ‘திககெல்லாம் புகழும் திருநெல்வேலி’ எனும் திருத்தலத்தினை மையமாகக் கொண்ட தென் பாண்டிச்சீமை இது.

இம்மாவட்டத்தின் மக்களுக்கு பல பெருமை உண்டு. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் ஓடவில்லை தமிழே ஓடுகிறது என்பர்.

தஞ்சை மாவட்டத்தாருக்கு இசை எப்படி உயிரோ, அதுபோல நெல்லைச் சீமைக்காரர்களக்கு இலக்கியம்.

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ‘மனோன்மணீயம்’ என்ற ஒப்பற்ற நாடக நூலை ஆக்கினார். அதில் சீவகபாண்டியன், மதுரையின் நீங்கி திருநெல்வேலியை தலை நகராக்கிச் சில காலம் அரசாண்டு வந்ததாகக் கூறியுள்ளார்கள்.



நாயக்க மன்னர்கள் மதுரையை ஆண்டபோது, நெல்லை மாவட்டத்தினர் பலர் திசைக் காவலர்களாக அமர்த்தப்பட்டனர். ஆயுதம் தாங்கிய படையை உடையவர்களானதால் ‘பாளையக்கார்கள்’ என்றும் அழைக்கப்பட்டனர்.

வடகரை, ஆவுடையாள்புரம், ஊத்துமலை,சிவகிரி, சிங்கம்பட்டி, அளகாபுரி, ஊர்க்காடு, சுரண்டை, கடம்பூர், இளவரசனேந்தல், மணியாச்சி,பாஞ்சாலங்குறிச்சி முதலியன அத்தகைய பாளயப்பட்டுக்கள் ஆகும்.



நெல்லை மாவட்டத்தின் மேற்கு எல்லையாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை வடமேற்கு எல்லையில் துவங்கி,நேர்தெற்காக தென்காசிக்கருகே ஒரு சிறு வளைவாகித் தண்பொருளைப் பள்ளத்தாக்குடன் கூடிய பாவநாசம் வரை செல்கிறது. பின் தென்கிழக்காகத் திரும்புகிறது. மிகத் தொலைவிலுள்ள எந்த சமவெளியிலிருந்து பார்த்தாலும் இந்த மலைத் தொடரில பல முடிகளைக் காணலாம்.



சுமார் ஐயாயிரம் அடி உயரமுள்ள, இருபது முடிகள் இந்த எல்லையில் உள்ள சிவகிரியில் துவங்கி, கள்ளக்கடை, மொட்டை, கோட்டைமலை, குளிராட்டி, குற்றாலத்திற்கு அருகில் உள்ள பஞ்சம்தாங்கி, அம்பாசமுத்திர எல்லையில் மத்தானம், பாறை பாவநாசம் அருகில் அகத்தியர் மலை, அதற்குத் தெற்கில் ஐந்து தலைகள் கொண்ட, ஐந்தலைப்பொதிகை, திருக்குறுங் குடியையொட்டி மகேந்திரகிரி,பணகுடி கணவாய்க்குத் தென்கிழக்கே ‘ஆரல்-ஆம்-பொழில்’ இன்று ஆரல்வாய் மொழி என அழைக்கபப்டும் எல்லை வரை.



நெல்லை மாவட்டத்தின் பேராறு தான் ‘தாமிரபரணி’ என அழைக்கப்படும் ‘தன்பொருணை’ ஆறு.

பொதிகை முழுவதும் மலையில் தோன்றி மாவட்டம் முழுவதும் வளப்படுத்துகிறது. தன்பொருணையுடன் சேரும் ஆறுகள் எண்ணற்றவை. பாம்பாறு காரியாறு, ஐந்தும் மலையில் தோன்றி மலை மேலேயே பொருணையோடு சேருபவை.



சிங்கம்பட்டிக்கு அருகில் மணிமுத்தாறும், செங்கல் தேரிச் சோலையில் தோன்றும் வரட்டாறும் கூசன்குழி ஆறும் சிற்றாறுகளாகும்.கடையம் அருகில் கீழைச்சரிவில் தோன்றுவது, சம்புநதி, கடையத்திற்கு தெற்கே ஓடுவது ராமநதி.



இவை இரண்டும் சேர்ந்து கருணை ரவண சமுத்திரம் அருகில் சேர்கிறது. இரண்டும் சேர்ந்து கருணை ஆற்றோடு, வராகநதி சேருவது திருப்புடை மருதூரில்.களக்காட்டு மலையான வெள்ளிமலையில் தோன்றுவது ‘பச்சையாறு’, ‘தருவை’ என்ற இடத்தில் பேராற்றில் கலக்கிறது.

சீவலப்பேரில் வந்து கூடுவது சிற்றாறு. இது குற்றால மலையாகிய திரிகூட மலையில் தோன்றி குற்றாலம், தென்காசி, வீரகேரளம்புதூர், கங்கை கொண்டான் வழியே அறுபது கி.மீ. ஓடிப் பாய்கிறது.

பண்புளி மலையில் தோன்றும் அநுமநதியும், சொக்கம்பட்டி மலையில் தோன்றும் கருப்பாறும் வீரகேரளம்புதூர் அருகில் சிற்றாறில் சேர்கின்றன.



மத்தளம் பாறையிலிருந்து வரும்அமுதக்கண்ணியாறும்,ஐந்தருவியாறும் சிற்றாரோடு சேர்கிறது. சிந்தாமணிக்கு அருகில் தோன்றும் உப்போடை, சீவலப்பேரி அருகில் சிற்றாறில் கூடுகிறது.

உப்போடை, சிற்றாறு, பேராறு மூன்றும் கூடும் இடமே முக்கூடல். தென்காசிக்கு மேற்கே ஒரு முக்கூடலும், திருப்புடைமருதூர் அருகில் ஒரு முக்கூடலும் உண்டு.

தண்பொருணையாறு அம்பாசமுத்திரம் சேரன் மகாதேவி, திருநெல் இவை தவிர, கருமேனியாறு, நம்பியாறு,
தாமரையாறு, கோம்பையாறு, கோடையாறு,வைப்பாறு, வாழைமலையாறு, தாழையூற்றாறு, வடுகபட்டியாறு, அருச்சுனன் ஆறு, கோட்டைமலையாறு, நிசேப நதி, காக்கா நதி, பாலையாறு போன்ற பல சிற்றாறுகளும் கொண்டே நெல்லைச் சீமை.நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 450 கோயில்கள் உள்ளன. பெரியபெரிய கோயில்கள், வானுயரும் இராஜகோபுரங்கள், பிரம்மாண்டமான் மண்டபங்கள், கண்கவர் சிற்பங்கள், சுவைமிக்க தலவரலாறுகள், புனித தீர்த்தங்கள், தேர் திருவிழாக்கள் எல்லாம் உண்டு.

ஆயிரம் திருநாமங்கள் கொண்டு ஆராதிக்கப்படும் ஆதி நாயகனான் சிவபெருமான், சிவலிங்த் திருமேனியாக
அருள்பாலிக்கிறார்.

வேலி வழியாகப் பாய்ந்து கொற்கைஅருகில் கடலில் சேருகிறது. குற்றாலம் ஐந்தாயிரம் அடி உயரம் கொண்ட மலையின் அடிவார்த்தில், குற்றால அருவிக்கு நேராக,சங்கு வடிவனாகஅமைந்திட்டகோயில்.ஆடவல்லானின் ஐந்து சபைகளில் இது ‘சித்திர சபை.

கோயில் வாசலை ஒரு சிறிய கோபுரம் அழகு செய்கிறது.உள்ளே திரிகூட மண்டபம் அடுத்து நமஸ்கார மண்டபம், மணி மண்டபம் எல்லாம் உண்டு.

அகத்திய முனிவர், ஈசனின் கட்டளையை ஏற்று, தென்புலத்திற்கு வருகிறார். இங்குள்ள குற்றாலநாதர் கோயில் வைணவ ஆலயமாக இருந்திருக்கிறது. சிவக்கோலத்தில் இருந்த அவரை உள்ளே அனுமதிக்கவில்லை
அர்ச்சகர்.

மனமுடைந்த குறுமுனி, இலஞ்சிக் குமரனை தொழுந்தார்.குமரன் காட்டிய வழியில் மீண்டும் வருகிறார் குற்றாலத்திற்கு. உடல் முழுதும் ‘திருமண்’ தரித்து வைணவ அடியாராக,உள்ளே சென்று ‘ஆத்மார்த்த பூஜை’ செய்வதாகக் கூறி, எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு, கதவை சார்த்திக் கொண்டார்.

பாண்டி பதின்நான்கு என்று அழைக்கப்படும் பாடல் பெற்றத் தலங்களுள் திருக்குற்றாலமும் ஒன்று.பொதிகைமலையுடன் சார்ந்த மலை, மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் சிறப்புடையதாகும். பொதிகைமலைக்கு செல்லும் வழியில் அகத்திய முனிவர் இங்கு வந்தார். அருவிகளுக்குப் பெயர் போன குற்றாலத்திற்கு வெளியேயும் பல சிறந்த அருவிகள் உள்ளன. அவற்றில் ஒன்று பாபநாசம் அணைக்குச் செல்லும் வழியில் உள்ள அகத்தியர் அருவியும் உள்ளது. இக் கண்கொள்ளாக் காட்சிகளைக் காண் கண் கோடி போதாது.

இந்தியாவில் பொதிகை மலை அமைந்துள்ள பகுதி:
மலைத் தொடர்கள்



மலைகள் ஒன்றையொன்று அடுத்து அடுத்து அமைந்து ஒரு நீண்ட சுவர்போல் எழும்பிக் காணப்படுவதால் இதனை மலைத்தொடர் என்பர். தமிழகத்தைப் பொருத்தவரையில் இருவேறு மலைத்தொடர்கள் இயற்கையாக அமையப்பெற்றுள்ளன. இவற்றுள் ஒன்று மேற்கு மலைத்தொடர். மற்றொன்று கிழக்கு மலைத்தொடர் ஆகும்

மேற்கு மலைத்தொடர் (Western Ghats)

இம்மலைத்தொடர் மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களின் எல்லைகளில் உள்ள தபதி ஆற்றுக்குத் தெற்கே தொடங்கி மராட்டியம், கோவா, கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் வழியாக நீண்டு தமிழ் நாட்டிலுள்ள கன்னியாகுமரியில் முடிவடைகிறது. இதன் நீளம் 1600 கி.மீட்டர் ஆகும். உயரம் 900 மீட்டர் ஆகும். இம்மலைத் தொடர் மராட்டியத்திலும், கர்நாடகத்திலும் ‘காயத்ரி மலைத்தொடர்’ எனவும், தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மலைத் தொடர் எனவும், கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகின்றது.

இம்மலைத்தொடரின் மிக உயரமான சிகரம் கேரளாவிலுள்ள ஆனைமுடி (2695 மீ) ஆகும். இதுவே தென் இந்தியாவின் உயரமான சிகரம் ஆகும்.

தென் இந்தியாவின் பல முக்கிய ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகின்றன. இங்கு உருவாகிக் கிழக்கு நோக்கித் தக்காண பீடபூமி வழியாகப் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கும் முக்கியமான ஆறுகளுள் ஒன்று காவிரி ஆறு ஆகும். தாமிரபரணி ஆறும் வேறுசில சிறுசிறு ஆறுகளும் இம்மலைத்தொடரில் தோன்றி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன. அவற்றுள் சில மணிமுத்தாறு, கபினி ஆறு, மற்றும் பெரியாறு ஆகும்.

இம்மலைத்தொடர் முற்காலத்தில் தற்போதைய ஆப்பிரிக்கா, மடகாஸ்கர் மற்றும் செல்சு தீவுகளோடு இணைந்திருந்தது என்று புவியியலார் கூறுகின்றனர். இதுவே இலெமூரியாக் கண்டம் என்று முன்பே படித்தோம்.

இம்மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கணவாய்கள் அதிகமாக இல்லை. கணவாய் என்பது மலைகளுக்கு இடையே உள்ள சிறுவழி. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பாலக்காட்டுக் கணவாய், ஆரல்வாய்க் கணவாய், செங்கோட்டைக் கணவாய் ஆகியன இருக்கின்றன. இவை தவிர ஆழ்ந்த பள்ளத்தாக்குகளும், அருவிகளும் ஏராளமாக உள்ளன. ஆதலால் இம்மலைத் தொடர் வனப்புடனும். வளத்துடனும் இருக்கிறது. இவ்வளத்தினால் ஆயிரக்கணக்கான தாவர இனங்களும் நூற்றுக்கணக்கான வனவிலங்குகளும் அங்கு இருக்கின்றன.

பொதிகை மலை யாத்திரைக்கு கேரள வனத்துறை அனுமதி

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது பொதிகை மலை, அகத்தியர் மலை, தமிழ் மலை, தென்மலை, மலையமா மலை, மலையம் போன்ற பல பெயர்களால் குறிக்கப்படுகிறது. இங்கு அகத்தியர் வாழ்ந்ததாகக் கூறப்படுவதால் இது அகத்திய மலை என்று வழங்கப்படுகிறது. இம்மலையில் பல சிற்றாறுகளும், அருவிகளும் உள்ளன.

இங்கு ஏலம், காப்பி, தேயிலை, சந்தணம், அகில், தேக்கு ஆகியவற்றுடன் பல மூலிகைகளும் நிறைந்துள்ளன. அடர்ந்த காட்டுப்பகுதிகளையும், குன்றுகளையும், பள்ளத்தாக்குகளையும் உடைய இம்மலை புயல், காற்று, மழை, மூடுபனி, யானை, காட்டுப்பன்றி, புலி, அட்டைகள் போன்றவற்றால் நெருங்க இயலாததாக உள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே மழை, மூடுபனி, அட்டைகள் போன்ற இடையூறுகள் குறைவாக இருக்கும்.

இம்மலையின் உச்சி தமிழ்நாடு-கேரள மாநிலங்களின் எல்லைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இச்சிகரத்தை அடைய கால்நடையாகச் சென்றால் இரண்டு நாள்கள் ஆகும். இதன் மேல்பகுதி கிழக்குப் பக்கம் லேசாக சரிந்து ஏறத்தாழ 2000 ச. மீ. பரப்புடையதாக உள்ளது. இங்கு பெருமளவு பாறைகளே காணப்படுகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 6200 மீட்டர் உயரத்தில் பொதிகை மலை அமைந்து உள்ளது. இங்கு அகத்தியரின் சிலை உள்ளது. ஆண்டுதோறும் மே மாதத்தில் அகத்தியரை தரிசிக்க கரடுமுரடான பாதையில் பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வர். நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து பாணதீர்த்தம், இஞ்சுகுழி, பூங்குளம் வழியாக பொதிகை மலைக்கு பக்தர்கள் சென்று வந்தனர். ஆனால் தற்போது களக்காடு & முண்டந்துறை புலிகள் சரணாலய வனப்பகுதியை பாதுகாக்கும் பொருட்டு இந்த வழியாக பொதிகை மலை யாத்திரை அனுமதி நிறுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் பொதிகை மலை யாத்திரை செல்ல கேரள அரசின் உதவியை நாடினர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பொதிகை மலை செல்ல இந்த ஆண்டும் கேரள வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். 5 பேர் கொண்ட ஒரு பேக்கேஜ்க்கு வனத்துறையினர் 4 ஆயிரம் ரூபாய் கட்டணமாக விதிக்கின்றனர்.

யாத்திரை செல்லும் ஒவ்வொரு குழுவினருடன் 2 வழிகாட்டிகளை வனத்துறையினரே அனுப்பி வைப்பார்கள். ஆண்டுதோறும் மே மாதம் 15ம் தேதி வரை மட்டுமே இதற்கான அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே யாத்திரை செல்பவர்கள் இதற்குள் கேரளாவில் உள்ள காணிதலம் என்னும் இடத்தில் உள்ள வனத்துறை செக்போஸ்டில் முன்பதிவு செய்யவேண்டும். திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமன்காடு வனத்துறை அலுவலகத்திலும் அனுமதி பெறலாம்.

பொதிகை மலை சென்று அகத்தியரை பூஜை செய்து வழிபட்டால் தங்கு தடையின்றி மழை பெய்யும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆண்டும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் பொதிகை மலை யாத்திரை செல்கின்றனர்.

7 comments:

  1. ஓம்
    மிகவும் அருமையான முயற்சி.சிறந்த படைப்பு.மனதார வாழ்த்துகிறேன்
    வெ.சுப்பிரமணியன்,கோடாரங்குளம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

      Delete
  2. எல்லாம் வல்ல அகஸ்தியர் அருளால், இந்த புனித மலைக்கு, நான் பதினைந்து முறை சென்று வந்துவிட்டேன்.
    தமிழ்நாடு வழியில், இரண்டு தடத்திலும், கேரளா பக்கமும் சென்று வந்துள்ளேன்.
    பல நண்பர்களையும், என் மனைவி, மக்களையும் கூட்டிச்சென்று சென்று இருக்கிறேன்.
    எல்லாம் அவன் செயல்.

    ReplyDelete
    Replies
    1. You are truly blessed to have been there so many times, and all souls who have been with you ate also blessed.

      Delete
  3. Blessed are the souls who have had the opportunity and blessings to set foot on Eka Pothigai. It's only through the divine wish of Agastiar that a soul gets to be there at a particular time and offer their prayers to Him. Let Agastiar bless us all I truly enjoy reading all articles on Pothigai and Agastiar. Wish I could also get the blessings to visit this holy place.let the tamilbadu govt open the route once again and provide adequate help for us all ardent devotees to visit His sacred abode.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. good collections of the historical events. thanks for that and keep updating sir.

    ReplyDelete