Pages

Monday, 23 September 2013

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீடு; ச.வே.சுப்பிரமணியன், மயில்சாமி அண்ணாதுரைக்கு ரூ.5 லட்சம் இலக்கியப்பரிசு ‘தினத்தந்தி’ நாளை வழங்குகிறது

பதிவு செய்த நாள் : Sep 23 | 12:29 am
‘தினத்தந்தி’ சார்பாக நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழாவில், மூத்த தமிழறிஞர் விருதை ச.வே.சுப்பிரமணியனும், சிறந்த நூலுக்கான பரிசை, மயில்சாமி அண்ணாதுரையும் பெறுகிறார்கள்.

விழாவில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியிடப்படுகிறது.

சென்னை,

‘தினத்தந்தி’ நிறுவனர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் நினைவாக, ஆண்டுதோறும் அவருடைய பிறந்த நாளையொட்டி இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது.

ரூ.5 லட்சம் இலக்கியப் பரிசு

இதன்படி, மூத்த தமிழறிஞர் ஒருவருக்கு ரூ.1½ லட்சமும், சிறந்த இலக்கிய நூலுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டு வந்தது.

இந்த ஆண்டு முதல், மூத்த தமிழறிஞருக்கு ரூ.3 லட்சமும், சிறந்த இலக்கிய நூலுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது.

விக்கிரமன்–பொன்னீலன்

கடந்த ஆண்டு எழுத்தாளர் விக்கிரமன், ‘சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர்’ விருது பெற்றார். அவருக்கு ரூ.1½ லட்சத்துக்கான காசோலையும் விருதும் வழங்கப்பட்டது. எழுத்தாளர் பொன்னீலன், ‘மறுபக்கம்’ என்ற நூலுக்காக ‘சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசு’ பெற்றார். அவருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையும், விருதும் வழங்கப்பட்டது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கல்யாணி மதிவாணன் இந்த பரிசுகளை வழங்கினார்.

இந்த ஆண்டு

இந்த ஆண்டு இலக்கியப் பரிசு பெறுவோர் விவரங்களை, ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அறிவித்து உள்ளார்.

‘சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர்’ விருது, இலக்கியச் செம்மல் ச.வே.சுப்பிரமணியனுக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு வெள்ளிப்பட்டயத்துடன் ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.

ச.வே.சுப்பிரமணியன்


மூத்த தமிழறிஞர் விருது பெறும் ச.வே.சுப்பிரமணியன், நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூரில் 31.12.1929–ல் பிறந்தார். பெற்றோர்: சு.சண்முக வேலாயுதம் பிள்ளை–இலக்குமி அம்மாள். இவர் இந்துக் கல்லூரியிலும் பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் பயின்று 1953–ல் ‘பி.ஏ.ஆனர்ஸ்’ பட்டம் பெற்றார். திருவனந்தபுரம் கேரள பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். பிறகு பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றிவிட்டு, சென்னையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ஆனார்.

தமிழ் இலக்கியங்கள் பற்றியும் மற்றும் பல்வேறு துறைகள் பற்றியும் தமிழில் 140 புத்தகங்களும், ஆங்கிலத்தில் 5 புத்தகங்களும், மலையாளத்தில் ஒரு புத்தகமும் எழுதி இருக்கிறார்.

இந்தியாவிலும், இங்கிலாந்து, பிரான்சு, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்பட பல வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்து தமிழ் பற்றி சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில், 1969–ல் ‘திருவள்ளுவர் கல்லூரி’யைத் தோற்றுவித்தார். நெல்லை மாவட்டத்தில் தென்காசி அருகே, ‘தமிழூர்’ என்ற பெயரில் ஒரு ஊரையே 1985–ல் உருவாக்கினார். அங்கு தங்கி தொடர்ந்து தமிழ் ஆராய்ச்சிப் பணிகளை செய்து வருகிறார்.

மயில்சாமி அண்ணாதுரை

இந்த ஆண்டுக்கான ‘சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசை’, விஞ்ஞானியும், எழுத்தாளருமான மயில்சாமி அண்ணாதுரை பெறுகிறார். அவருடைய ‘கையருகே நிலா’ என்ற நூலுக்கு, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசு (ரூ.2 லட்சம்) வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோதவாடி கிராமத்தில், 1958–ம் ஆண்டு ஜூலை மாதம் 2–ந் தேதி மயில்சாமி அண்ணாதுரை பிறந்தார். தந்தை, மயில்சாமி. தாயார், பாலசரஸ்வதி அம்மாள்.

ஆரம்பக் கல்வி, உயர் நிலைக்கல்வி, கல்லூரி படிப்புகளை தமிழிலேயே பயின்றார். பொறியியல் முனைவர் பட்டத்தை, சென்னை அண்ணா தொழில் நுட்ப கல்லூரியில் பெற்றார்.

1982–ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தில் சேர்ந்தார். அயராத உழைப்பினாலும், சிறு சிறு கண்டுபிடிப்புகளாலும் படிப்படியாக உயர்ந்தார். 8 இந்திய தேசிய செயற்கைக் கோள்களின் செயல் திட்ட இயக்குனராக சிறப்பாக பணியாற்றியபின், 2004–ல் இந்தியாவின் முதல் நிலவுக்கலத் திட்டத்தின் இயக்குனராக உயர்ந்தார்.

2008 அக்டோபர் மாதம் 22–ந்தேதி ‘சந்திரயான்–1’ செயற்கைக் கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. நவம்பர் 14–ந்தேதி சந்திரனில் இறங்கி, இந்தியக் கொடியை பதித்தது.

அதுவரை நிலவில் தண்ணீர் கிடையாது என்றே உலக விஞ்ஞானிகள் கூறி வந்தனர். ஆனால், ‘‘சந்திரனில் தண்ணீர் உண்டு’’ என்பதை ‘சந்திரயான்–1’ நிரூபித்தது. இதன் மூலம் மயில்சாமி அண்ணாதுரை உலகப்புகழ் பெற்றார்.

இவர் தனது அனுபவங்களை விளக்கி எழுதியுள்ள ‘கையருகே நிலா’ என்ற நூல், சிறந்த இலக்கிய நயத்துடன் திகழ்கிறது.

நாளை பரிசளிப்பு விழா

நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை, அண்ணாசாலையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் சி.பா.ஆதித்தனாரின் 109–வது பிறந்த நாள் விழா இலக்கியப் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

குஜராத் மாநில உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன் விழாவுக்கு தலைமை தாங்கி, விருது மற்றும் இலக்கியப் பரிசுகளை வழங்குகிறார்.

சிவந்தி ஆதித்தனார் புத்தகம் வெளியீடு

இந்த ஆண்டு நடைபெறும் விழாவில், சிறப்பு நிகழ்வாக, அமரர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு, ‘சிவந்தி ஆதித்தனார் சாதனைச் சரித்திரம்’ என்ற பெயரில், ‘தினத்தந்தி’ வெளியீடாக புத்தகமாக வெளியிடப்படுகிறது.

நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன் புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை, தமிழக முன்னாள் அமைச்சரும், கம்பன் கழகத்தலைவருமான ஆர்.எம்.வீரப்பன் பெற்றுக்கொள்கிறார்.

No comments:

Post a Comment