Pages

Friday, 27 September 2013

வீரகேரளம்புதூர் கிருஷ்ணன் கோவில் தெப்பக்குளத்தை சீரமைக்க கோரிக்கை

வீரகேரளம்புதூர் ஸ்ரீநவநீத கிருஷ்ணசுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.
திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்று ஸ்ரீநவநீத கிருஷ்ண சுவாமி திருக்கோவில். குருவாயூர் திருக்கோவிலில் உள்ள மூலவரைப் போன்ற தோற்றத்துடன் இத்திருக்கோவிலின் மூலவரும் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.இந்த கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் கோவிலின் மேற்கே சுரண்டை - திருநெல்வேலி சாலையோரம் அமைந்துள்ளது. மிகவும் அழகான இந்த தெப்பக்குளம் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் புதர் மண்டி உள்ளது. தெப்பக்குளத்தில் கல்சுவர் மற்றும் நீராழி மண்டபத்தில் மரங்கள் முளைத்து உள்ளது. தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய் தூர்ந்து போய் உள்ளதால் தெப்பக்குள நீர் பாசி படிந்து உள்ளது.

எனவே, இந்த தெப்பக்குளத்தை சீரமைக்க ஸ்ரீநவநீத கிருஷ்ண சுவாமி திருக்கோவில் நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர்

Monday, 23 September 2013

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீடு; ச.வே.சுப்பிரமணியன், மயில்சாமி அண்ணாதுரைக்கு ரூ.5 லட்சம் இலக்கியப்பரிசு ‘தினத்தந்தி’ நாளை வழங்குகிறது

பதிவு செய்த நாள் : Sep 23 | 12:29 am
‘தினத்தந்தி’ சார்பாக நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழாவில், மூத்த தமிழறிஞர் விருதை ச.வே.சுப்பிரமணியனும், சிறந்த நூலுக்கான பரிசை, மயில்சாமி அண்ணாதுரையும் பெறுகிறார்கள்.

விழாவில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியிடப்படுகிறது.

சென்னை,

‘தினத்தந்தி’ நிறுவனர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் நினைவாக, ஆண்டுதோறும் அவருடைய பிறந்த நாளையொட்டி இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது.

ரூ.5 லட்சம் இலக்கியப் பரிசு

இதன்படி, மூத்த தமிழறிஞர் ஒருவருக்கு ரூ.1½ லட்சமும், சிறந்த இலக்கிய நூலுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டு வந்தது.

இந்த ஆண்டு முதல், மூத்த தமிழறிஞருக்கு ரூ.3 லட்சமும், சிறந்த இலக்கிய நூலுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது.

விக்கிரமன்–பொன்னீலன்

கடந்த ஆண்டு எழுத்தாளர் விக்கிரமன், ‘சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர்’ விருது பெற்றார். அவருக்கு ரூ.1½ லட்சத்துக்கான காசோலையும் விருதும் வழங்கப்பட்டது. எழுத்தாளர் பொன்னீலன், ‘மறுபக்கம்’ என்ற நூலுக்காக ‘சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசு’ பெற்றார். அவருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையும், விருதும் வழங்கப்பட்டது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கல்யாணி மதிவாணன் இந்த பரிசுகளை வழங்கினார்.

இந்த ஆண்டு

இந்த ஆண்டு இலக்கியப் பரிசு பெறுவோர் விவரங்களை, ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அறிவித்து உள்ளார்.

‘சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர்’ விருது, இலக்கியச் செம்மல் ச.வே.சுப்பிரமணியனுக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு வெள்ளிப்பட்டயத்துடன் ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.

ச.வே.சுப்பிரமணியன்


மூத்த தமிழறிஞர் விருது பெறும் ச.வே.சுப்பிரமணியன், நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூரில் 31.12.1929–ல் பிறந்தார். பெற்றோர்: சு.சண்முக வேலாயுதம் பிள்ளை–இலக்குமி அம்மாள். இவர் இந்துக் கல்லூரியிலும் பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் பயின்று 1953–ல் ‘பி.ஏ.ஆனர்ஸ்’ பட்டம் பெற்றார். திருவனந்தபுரம் கேரள பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். பிறகு பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றிவிட்டு, சென்னையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ஆனார்.

தமிழ் இலக்கியங்கள் பற்றியும் மற்றும் பல்வேறு துறைகள் பற்றியும் தமிழில் 140 புத்தகங்களும், ஆங்கிலத்தில் 5 புத்தகங்களும், மலையாளத்தில் ஒரு புத்தகமும் எழுதி இருக்கிறார்.

இந்தியாவிலும், இங்கிலாந்து, பிரான்சு, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்பட பல வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்து தமிழ் பற்றி சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில், 1969–ல் ‘திருவள்ளுவர் கல்லூரி’யைத் தோற்றுவித்தார். நெல்லை மாவட்டத்தில் தென்காசி அருகே, ‘தமிழூர்’ என்ற பெயரில் ஒரு ஊரையே 1985–ல் உருவாக்கினார். அங்கு தங்கி தொடர்ந்து தமிழ் ஆராய்ச்சிப் பணிகளை செய்து வருகிறார்.

மயில்சாமி அண்ணாதுரை

இந்த ஆண்டுக்கான ‘சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசை’, விஞ்ஞானியும், எழுத்தாளருமான மயில்சாமி அண்ணாதுரை பெறுகிறார். அவருடைய ‘கையருகே நிலா’ என்ற நூலுக்கு, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசு (ரூ.2 லட்சம்) வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோதவாடி கிராமத்தில், 1958–ம் ஆண்டு ஜூலை மாதம் 2–ந் தேதி மயில்சாமி அண்ணாதுரை பிறந்தார். தந்தை, மயில்சாமி. தாயார், பாலசரஸ்வதி அம்மாள்.

ஆரம்பக் கல்வி, உயர் நிலைக்கல்வி, கல்லூரி படிப்புகளை தமிழிலேயே பயின்றார். பொறியியல் முனைவர் பட்டத்தை, சென்னை அண்ணா தொழில் நுட்ப கல்லூரியில் பெற்றார்.

1982–ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தில் சேர்ந்தார். அயராத உழைப்பினாலும், சிறு சிறு கண்டுபிடிப்புகளாலும் படிப்படியாக உயர்ந்தார். 8 இந்திய தேசிய செயற்கைக் கோள்களின் செயல் திட்ட இயக்குனராக சிறப்பாக பணியாற்றியபின், 2004–ல் இந்தியாவின் முதல் நிலவுக்கலத் திட்டத்தின் இயக்குனராக உயர்ந்தார்.

2008 அக்டோபர் மாதம் 22–ந்தேதி ‘சந்திரயான்–1’ செயற்கைக் கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. நவம்பர் 14–ந்தேதி சந்திரனில் இறங்கி, இந்தியக் கொடியை பதித்தது.

அதுவரை நிலவில் தண்ணீர் கிடையாது என்றே உலக விஞ்ஞானிகள் கூறி வந்தனர். ஆனால், ‘‘சந்திரனில் தண்ணீர் உண்டு’’ என்பதை ‘சந்திரயான்–1’ நிரூபித்தது. இதன் மூலம் மயில்சாமி அண்ணாதுரை உலகப்புகழ் பெற்றார்.

இவர் தனது அனுபவங்களை விளக்கி எழுதியுள்ள ‘கையருகே நிலா’ என்ற நூல், சிறந்த இலக்கிய நயத்துடன் திகழ்கிறது.

நாளை பரிசளிப்பு விழா

நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை, அண்ணாசாலையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் சி.பா.ஆதித்தனாரின் 109–வது பிறந்த நாள் விழா இலக்கியப் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

குஜராத் மாநில உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன் விழாவுக்கு தலைமை தாங்கி, விருது மற்றும் இலக்கியப் பரிசுகளை வழங்குகிறார்.

சிவந்தி ஆதித்தனார் புத்தகம் வெளியீடு

இந்த ஆண்டு நடைபெறும் விழாவில், சிறப்பு நிகழ்வாக, அமரர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு, ‘சிவந்தி ஆதித்தனார் சாதனைச் சரித்திரம்’ என்ற பெயரில், ‘தினத்தந்தி’ வெளியீடாக புத்தகமாக வெளியிடப்படுகிறது.

நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன் புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை, தமிழக முன்னாள் அமைச்சரும், கம்பன் கழகத்தலைவருமான ஆர்.எம்.வீரப்பன் பெற்றுக்கொள்கிறார்.

Tuesday, 17 September 2013

வீ.கே.புதூரில் வருவாய்துறையினரை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூரில் வருவாய்த்துறையினரைக் கண்டித்து பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அம்மா திட்ட முகாம்களில் வாங்கிய அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு அளிக்காத வருவாய்த்துறையைக் கண்டித்து வீரகேரளம்புதூரில் ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் ஒன்றிய பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தொழிற்பிரிவு தலைவர் சுடலையாண்டி தலைமை வகித்தார். ஆலங்குளம் ஒன்றிய தலைவர் டாக்டர் அன்புராஜ், கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் மாரியப்பன், விவசாய அணி மாடசாமி முன்னிலை வகித்தனர். சின்னதம்பி வரவேற்றார். வருவாய்த்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.

மாவட்ட செயலாளர் ரத்னராஜ், கோட்ட பொறுப்பாளர் அன்புராஜ், அமைப்பு சாரா பிரிவு தலைவர் கலைராஜா, மணி, ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லையாதேவர், நகர தலைவர்கள் தங்கராஜ், சுரண்டை சங்கரநாராயணன், ஊத்துமலை தாமரை மாடசாமி, குட்டி என்ற மாடசாமி, தென்காசி கந்தசாமி, மேலநீலிதநல்லூர் ராமலிங்கம், பொன்னுதுரை மற்றும் ஏராளமான பா.ஜ., தொண்டர்கள் கலந்து கொண்டனர். வீரகேரளம்புதூர் நகர தலைவர் சிவனனைந்த பெருமாள் நன்றி கூறினார்.

Saturday, 14 September 2013

கொற்றவை மலை ஐயன்



கேரள மாநிலத்தில் பிரபலமான ஐயப்பன் கோயில் அமைந்துள்ள மலை சபரிமலை என வழங்கப்படுகிறது. சபரி என்ற பெயர் கொற்றவையின் பெயர்களுள் ஒன்றாகும். இவள், ‘சபரர்’ எனப்பட்ட பாலை நில எயினர்களின்1 தெய்வமாவாள். இவளை நக்ன சபரி, கொட்டவி, கொட்டாரா என்ற பெயர்களை உடைய துர்க்கையாகவும், மகாபலியின் தாயாகவும் வடமொழிப் புராணங்கள் சித்திரிக்கின்றன.2 மகாபலியைத் துளுமொழி வழங்கிய கன்னட – கேரளப் பகுதி மக்களின் மூதாதையாகக் கருதும் வழக்கமுள்ளது. எனவே, கேரள மாநிலத்திலுள்ள சபரி மலையைக் கொற்றவை மலை எனக் குறிப்பிடுவதில் தவறில்லை எனக் கருதுகிறேன். சபரிமலை ஐயப்பன் வழிபாட்டின் வெகுஜனத் தன்மை பற்றியும் அதன் பெளத்த மூலம் பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, பள்ளிக்கட்டு, தர்மசாஸ்தா போன்ற வழக்குகளும், “புத்தம் சரணம் கச்சாமி” என்பதையொத்த “சாமியே சரணம் ஐயப்பா” முதலிய சரண கோஷங்களும் சாதி அந்தஸ்து ஏற்றத்தாழ்வுகளைப் பாராட்டாமல் பயண அனுபவ மூப்பு அடிப்படையில் ஒருவரைக் குருசாமியாக ஏற்கும் மரபும் பெளத்தத் தொடர்புகளை வலியுறுத்தும் கூறுகளாக அமைந்துள்ளன என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வழிபாட்டு நெறிகளிலும் வாழ்வியல் முறைகளிலும் வெகுஜனங்களின் பங்கேற்பு மூலமாகவே முடிவுகள் எடுக்கப்படும் பழங்குடிச் சமூகக் குடியரசு நெறிமுறைகளின் அடிப்படையில் தோன்றிய பெளத்த சங்கத்தின் தன்மைகளை ஜீரணித்து வளர்ந்ததே சபரிமலை ஐயப்பன் வழிபாட்டு மரபு என்பதை இவ்வழக்கங்கள் உணர்த்துகின்றன. கேரள மாநிலத்தைப் பொருத்தவரை, பெளத்த சமய மரபுகள் வைதிக இந்து சமய வழிபாட்டு நெறிகளுக்குள் ஈர்த்துத் தன்மயமாக்கிக் கொள்ளப்பட்ட நடைமுறை கி.பி. 12-13ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. தென்கேரளப் பகுதியைச் சேர்ந்த வேணாட்டு ஆய் மன்னர்களின் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையத்துச் சாசனம் பெளத்த சமயத் தொடர்புடையதாகும்.3 இச்செப்பேடு, “சுத்தோதனன் மகனான புத்த பகவான் மூன்று உலகங்களையும் குறைவின்றிக் காப்பாற்றுவாராக” என்றும், “பெளத்த தர்மம், பெளத்த சங்கம் என்பவை பூமிதேவியின் கண்களாகத் திகழ்க” என்றும், “அமுதைப் பொழியும் நிலவொளிக்கு ஒப்பான அவலோகித போதிசத்வரின் கருணைப் பார்வை குறைவற்ற செல்வத்தை அருளட்டும்” என்றும் துதிக்கிறது. இச்செப்பேடு திருமூலபாதத்து படாரர் எனப்பட்ட இறைவனுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையைப் பதிவுசெய்துள்ளது. திருமூல பாதத்து படாரர் என்பது ஸ்ரீமூலவாஸம் என்ற தலத்தில் எழுந்தருளியிருந்த, லோகநாதர் என அழைக்கப்பட்ட போதிசத்வ அவலோகிதேஸ்வரரைக் குறிக்கும். சுத்தோதனனுக்கும் மாயாதேவிக்கும் பிறந்த கெளதம சித்தார்த்தர் என்பவர் மானுஷி புத்தர் (புத்தரின் மனித வடிவம்) ஆவார் என்றும், அவலோகிதர் என்பது அவருடைய போதிசத்வ வடிவம் ஆகுமென்றும் அமிதாபர் என்பது அவருடைய தியானி புத்தர் வடிவம் ஆகுமென்றும் புத்த சமயத்தவர் கருதுகின்றனர்.

கி.பி. 10-11ஆம் நூற்றாண்டுகளில் சோழப் பேரரசின் விரிவாக்கம் நிகழ்ந்தது. பாண்டிய நாடு சோழ அரசின் அங்கமாக ஆக்கப்பட்டது. குறுகிய காலத்திற்குச் சேரநாடும் சோழர்களின் ஆளுகையின்கீழ் வந்தது. சோழர்கள், சேர, சோழ, பாண்டிய நாடுகளின் அதிபதி என்று பொருள்படும் வகையில் ‘மும்முடிச் சோழன்’ எனப் பட்டம் சூடினர். ஆயினும், சேரநாட்டுப் பெருமாக்கோதை மன்னர்கள் ஆட்சிதான் வீழ்ச்சியடைந்ததே தவிரச் சேர நாடு முழுமையாகச் சோழப் பேரரசுக்குள் அடங்கிவிடவில்லை. இக்காலகட்டத்தை “நூறாண்டு போர்க் காலம்” எனக் கேரள வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர். இப்போரின் விளைவாகச் சேர நாட்டின் ஆட்சியமைப்பிலும் சமூக அமைப்பிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. கி.பி. 12-13ஆம் நூற்றாண்டுகளில் பெருமாக்கோதை மன்னர்களின் ஆட்சி முழுமையாக வீழ்ச்சியடைந்தது. அவ்வீழ்ச்சி கி.பி. 14ஆம் நூற்றாண்டில் கண்ணனூர்க் கோலாதிரி (கோலத் திருப்பாதம்), பெருந்தலமன்ற வள்ளுவக் கோனாத்திரி (வள்ளுவக் கோன் திருப்பாதம்), கோழிக்கோடு சாமூதிரி (சாமிதிருப்பாதம்), ஆற்றிங்கல் வேணாட்டுத் திருவடி போன்ற சிற்றரசர்களின் எழுச்சிக்கு வழிவகுத்தது. இச்சிற்றரசர்களின் பட்டப் பெயர்கள் திருப்பாதம் அல்லது திருவடி என்று அமைந்திருப்பது பெளத்த மரபின் தொடர்ச்சியையே காட்டும். மிகப் பழமையான ஹீனயான பெளத்தத்தில் புத்தருடைய திருவடிகளைக் குறிக்கின்ற பாத பீடிகையே வழிபடப்பெற்றது. இந்து சமயத்தில் நிலவுகிற ஸ்ரீபாத வழிபாடு என்பது ஹீனயான பெளத்த மரபினை மூலமாகக் கொண்டதே ஆகும். கடவுளையும் கடவுளர் என அழைக்கப்பட்ட முனிவர்களையும் அடிகள் எனக் குறிப்பிடும் வழக்கம் இம்மரபின் தொடர்ச்சியே. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் என்று குறிப்பிடப்படுவது நாம் அறிந்ததே. இன்றும் வடகேரளப் பகுதியில் துளு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பிராம்மணர்களிடையே இப்பொருளுடைய அடிகா என்ற குடும்பப்பெயர் வழக்கிலுள்ளது. இதுபோன்றே நம்பிதிருப்பாதம் (இன்றைய வழக்கில் நம்பூதிரிபாத்) என்ற பட்டப் பெயர் கொண்ட பிராம்மணர்கள் கேரளச் சமூக அமைப்பில் முதன்மையான ஆதிக்க சக்தியாக உருவெடுத்தனர். இத்தகைய நிகழ்வுகளின் விளைவாகச் சேரநாடு கேரள ராஜ்ஜியமாகவும், பரசுராம க்ஷேத்திரமாகவும் மாறுகிற சூழல் உருவாயிற்று.

பெளத்த சமயத்தின் நிர்வாக அமைப்பு, வெறும் கூடாக மட்டுமே நீடித்தது. இதனையடுத்து, கி.பி. 14ஆம் நூற்றாண்டில் மதுரைப் பாண்டிய அரசினை வீழ்த்தி உருவான மதுரை சுல்தானிய அரசாட்சி, கர்நாடக மாநிலம் வரை வியாபித்த டில்லி, பாமினி சுல்தான்களின் ஆட்சி ஆகியவற்றின் தாக்கத்தால் கேரளக் கடற்கரை இஸ்லாமிய மரக்கல நாயர்களின் ஆதிக்கத்தின்கீழ் வந்தது. இவற்றின் ஒட்டுமொத்த விளைவாகக் கேரளக் கடற்கரையிலும், தமிழகத்தின் நாகப்பட்டினம், இராமேஸ்வரம் போன்ற சில கடற்கரை நகரங்களிலும் ஓரளவு உயிர்ப்புடன் இருந்த பெளத்த சமயத்தின் இறுதிமூச்சும் நின்றுபோனது. பெளத்த சமயம் அது தோன்றிய இடமாகிய இந்திய நாட்டிலேயே பின்பற்றுவாரின்றி மறைந்துபோனது. இந்நிகழ்வுப் போக்கின் விளைவாகவே சபரிமலை ஐயப்பன் முற்றிலும் இந்து சமய வழிபாட்டு முறையில் வழிபடப்பெறும் தெய்வமாக மாறிப்போனார். இஸ்லாமியர்களுடனான இணக்கத்தை வெளிப்படுத்தும் வண்ணம் சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் வாவர் (பாபர்) சமாதி வழிபாட்டுக்கும் இடமளிக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பனைப் பற்றிய இத்தகைய ஆய்வு முடிவுகள் அறிஞர்களால் பரவலாக விவாதிக்கப்பட்டுள்ளன.4 ஆனால், சபரிமலை ஐயப்பனின் பழங்குடி மூலத்தைப்பற்றி ஆழமான ஆய்வு ஏதும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஐயப்பன் வன்புலி வாகனனாக இன்றுவரை வழிபடப்படுவது, ராமாயணத்தில் இடம்பெறும் சபரி என்ற வேடர் குலப் பெண் அப்பகுதியில் வாழ்ந்ததாகவும் வன வாசத்தின்போது ராமன் அவளைச் சந்தித்ததாகவும் பம்பை திரிவேணி சங்கமத்தில் ராமன் தன் தந்தை தசரதனுக்குரிய சிராத்தச் சடங்குகளைச் செய்ததாகவும் நிலவுகின்ற நம்பிக்கை, போன்றவற்றின் அடிப்படையில் இம்மலை சபரர் என அழைக்கப்பட்ட எயினர்களின் வாழ்விடமாகவே முற்காலத்தில் இருந்துள்ளது என்று முடிவு செய்வது எளிது. ஆயினும், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. சபரர் என்ற பழங்குடிகள் பற்றி இந்தியப் புராணங்களில் இடம்பெற்றுள்ள விவரங்களை ஆராய்ந்தால் அவர்களுடைய வாழ்க்கை முறை குறிஞ்சி நிலப் பூர்வகுடிகளான குறவர்களைப் போன்று தினை முதலான மலைப்பயிர் விவசாயம் சார்ந்ததன்று எனத் தெரியவருகிறது. குன்றக் குறவர்கள் வடமொழிப் புராணங்களில் கிராதர் எனக் குறிப்பிடப்படுகின்றனர்.

5 முற்றிலும் வேட்டையும் ஆனிரை கவர்தலுமே சபரர்களுடைய வாழ்க்கை முறை. காட்டு எருமைகள், மலை ஆடுகள் போன்றவற்றை வேட்டையாடி உண்டு வாழ்ந்தவர்கள் சபரர் ஆவர். பிற்காலத் தமிழிலக்கியங்கள் கள்ளர் - மறவர் குலத்தவரைச் சபரர் என்றே குறிப்பிடுகின்றன. கள்ளர் - மறவர்களுடைய வழிபடு கடவுளான கொற்றவை ஆனிரை கவரும் வெட்சிப் போர்த் தெய்வமாகும். சபரர் குலத்தவர்களின் வழிபாட்டு எச்சங்களாகச் சபரிமலைப் பெருவழிப் பாதையில் அமைந்துள்ள எருமைகொல்லி (எருமேலி), காளைகட்டி போன்ற ஊர்ப் பெயர்களையும், மஹிஷி என்ற எருமை வடிவப் பெண் தெய்வத்தை ஐயப்பன் கொல்வது, மஹிஷியைப் புதைத்த இடமாகிய கல்லிடு குன்றில் பக்தர்கள் இன்றும் கற்களை இடுவது போன்ற வழக்கங்களையும் குறிப்பிடலாம். ‘உவலிடுபதுக்கை’ என்றும் “மறவர்களின் அம்புபட்டு வீழ்ந்தோரின் வம்பப்பதுக்கை” என்றும் சங்க இலக்கியங்கள் இவ்வழக்கத்தைக் குறிப்பிடுகின்றன. சபரர்களைப் பழங்கற்காலத்தின் இறுதிப் பகுதியைச் சார்ந்த குடியினராகவே தொல்லியலாளர்கள் அடையாளம் காண்பர்.

கொற்றவையின் ஆயுதமாகப் பிற்காலச் சிற்பங்களில் சித்திரிக்கப்படும் சக்கரத்தின் பூர்வ வடிவம் பழங்கற்கால வேட்டைக் கருவியாகிய வட்டு (disc) ஆகும். பழங்கற்காலப் பண்பாட்டு நிலைச் சமூகத்தவர் ஆப்பிரிக்க நிக்ராய்டு இனக் கூறுகளைக் கொண்டவர்களாவர். இவர்கள், தொல்பழங்காலத்திலேயே குன்றக் குறவர் போன்ற பிற பழங்குடிகளைச் சேர்ந்த மகளிரைச் சிறையெடுத்து மணம்புரிந்ததன் மூலம் குறவர் குலத்தவரின் மானிடவியல் பண்பாட்டுக் கூறுகள் சிலவற்றை உள்வாங்கியிருக்கக்கூடும். கொற்றவை வழிபாட்டுச் சமூகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி நிலையைப் பிரதிநிதித்துவம் செய்தவர்கள் இடப்பெயர்வு விவசாய வாழ்நிலையைச் சார்ந்தவர்கள் ஆவர்.

இச்சமூகத்தவரைப் புதிய கற்காலக் குடியினர் என நாம் அடையாளம் காணமுடியும். புதிய கற்காலக் குடியினரின் வழிபடு தெய்வமாக அல்லது வேட்டையின்போதும் போர்களின்போதும் வழிநடத்துகிற தளபதியாகச் சங்க காலக் கூற்றுத் தெய்வத்தை நாம் அடையாளம் காணமுடியும். கூற்று என்ற சொல் பொதுப்பாலில் அமைந்திருப்பினும் இத்தெய்வத்தைக் கொற்றவையின் ஆண் வடிவமாகவே அடையாளம் காணமுடிகிறது. இத்தெய்வம் விரும்பிச் சூடும் மலர் கொன்றை ஆகும். கூற்று என்ற இத்தெய்வம் புலித்தோலை ஆடையாக உடுத்த தெய்வம் என்று கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப்பாடல் (“கொலையுழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார் சுவல் புரள”) கூறுகின்றது. சைவ சமயம் பல்வேறு சமூகங்களின் வழிபாட்டு அம்சங்களையும் பொருத்தமாக உள்ளடக்கிச் சிவனென்ற பெருந்தெய்வமாக வடிவமைத்தபோது கூற்று என்ற இத்தெய்வம் காரி என்ற பெயரிலும், பைரவர் என்ற பெயரிலும் போற்றப்படும் சிவமூர்த்தமாகச் சித்திரிக்கப்பட்டது. கன்னட வீரசைவ நெறியின் தலைமைத் தெய்வமாகிய வீரபத்திரர் பைரவக் கடவுளின் வடிவமே ஆவார். அடிப்படையில் இத்தெய்வம் முல்லை நில வேட்டுவர்களின் தெய்வமாகும்.

முல்லை நிற வேட்டுவர்கள் கருத்த நிறமுடைய முன்னிலை ஆஸ்திரலாய்டுப் பழங்குடிகள் என அடையாளம் காண இயலும். சபரிமலையில் வன்புலி வாகனனாகக் காட்சியளிக்கும் ஐயன், பெளத்த சமயத்தவரின் தர்மசாஸ்தாவாக உருவெடுக்கும் முன்னர், கூற்றுத் தெய்வத்தின் தன்மைகள் கொண்ட காரியாகவே இருந்திருக்க வேண்டும் என நாம் முடிவு செய்யலாம். காரி என்ற பெயர் சாத்தனுக்கும் உரியதென்றும் தமிழ் நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. பைரவரைச் சிவபெருமானின் பிள்ளை எனப் பெரியபுராணம் குறிப்பிடுவது போன்றே சிவபிரான், “சாத்தனை மகனா வைத்தார்” என அப்பர் பெருமான் தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார். இத்தகைய ஒப்புமைகள் காணப்பட்டாலும், ஐயனார் அல்லது ஐயப்பன் என்ற பெயர் தகப்பனைக் குறிக்குமே தவிரப் பிள்ளையைக் குறிக்காது. கூற்று வழிபாடு என்பது பைரவ வடிவம், யமன் என்ற தென்புலக் காவல்காரன் வடிவம் ஆகியவற்றோடுதான் நெருக்கமுடையதாகும். யமன் என்பது இறந்து, மீண்டும் பிறக்கும் தன்மையின் உருவகமே. ஆனால், ஐயன் (பித்ரு) என்பதோ சிவபதம் என்றும், சாயுஜ்யம் என்றும் பிற்காலச் சைவ சித்தாந்தத்தில் குறிப்பிடப்படுவது போன்று, மீண்டும் பிறவாத உலகுக்குச் சென்றுவிட்ட தென்புலத் தலைவன் வடிவமாகும். தென்புலத் தெய்வம் என்பது netherworld எனக்குறிப்பிடப்பட்ட நெய்தல் உலகின் தலைவனாகிய வருணனையே குறிக்கும்.
இன்றைய நிலையில் சபரிமலைப் பயணத்திலோ, ஐயப்பன் வழிபாட்டிலோ பருவ வயதடைந்த பெண்டிர் அனுமதிக்கப்படாமல் இருப்பது ஆராயத்தக்கதாகும். இது ஒரு பழங்குடி நம்பிக்கையாகவே தோன்றுகிறது. குஹ்யகர்கள் எனப்படும் குள்ள வடிவக் குலக்குழுவினர் குருதியின் மணத்தை விரும்பி வருவரென்றும், அவர்களின் தலைவனாகிய குகன் (முருகன்) மாதவிடாய்க் காலத்துப் பெண்டிரை ஈர்த்து அவர்களை மனநோய்க்கு ஆளாக்கிவிடுவான் என்றும் பழங்குடி மக்கள் அஞ்சினர். புறநானூற்றில் (பா. 299) அணங்குடை முருகன் கோட்டத்தில் கலம்தொடா மகளிர் (உணவு சமைக்கும் கலங்களைத் தொடுவதற்கு அனுமதிக்கப்படாத மாதவிடாய்க் காலப் பெண்டிர்) புகுந்தால் சுருண்டு விழுந்துவிடுவர் என்ற குறிப்பு காணப்படுகிறது. இது மேற்குறித்த குஹ்யகர்கள் தொடர்பான நம்பிக்கையின் பதிவே எனலாம். குறிஞ்சி நிலத்தில் அமைந்துள்ள சபரிமலைச் சாத்தன் கோயிலுக்கு நீண்ட நெடும் மலைப்பாதை வழியாக மகளிர் பயணம் செய்கின்ற அவசியம் நேரும்பட்சத்தில் அவர்களுக்கு மாதவிடாய்க் காலம் வந்துவிட்டால் ஐயப்பனின் வாகனமான புலியினாலேயே ஊறு நேர்ந்துவிடலாம் என்ற அச்சமும் இத்தடைக்குக் காரணமாக இருந்திருக்கலாம். எவ்வாறாயினும், இந்நம்பிக்கை சபரர்களிடையே நிலவிய நம்பிக்கை எனக் கொள்வதைவிட, குறிஞ்சி நிலக் குடிகளான குறவர்களிடையிலும், முல்லை நில வேட்டுவர்களிடையிலும் நிலவிய நம்பிக்கையாகவே நாம் கருதலாம்.6 மலபார்ப் பகுதியிலுள்ள வயநாடு வட்டத்தில் அமைந்துள்ள எடக்கல் மலையில் கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில் ”பல்புலி தாத்தகாரி” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.7 இக்கல்வெட்டு உள்ள குகையினை அப்பகுதிப் பழங்குடியினர் மிகவும் புனிதமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர் என்ற செய்தியும் அறிஞர்களால் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் இடம்பெறுகிற தாத்தகாரி என்பதற்கு மூதாதையாகிய ஐயனார் என்று பொருள்கொள்ள வாய்ப்புள்ளது. பல்புலி என்பது பல புலிகளை வசப்படுத்தியவன் என்ற நேர்ப்பொருளும் புலிவாகனன் என்ற குறிப்புப் பொருளும் கொண்ட அடைமொழியாக இருக்கலாம்.

எனவே, தென் கன்னடத்தைச் சேர்ந்த, முல்லை நில வேட்டுவர்களின் தெய்வமாகிய வைரவர், யக்ஷர் குலக் கலப்பில் தோன்றிய, குறிஞ்சிக் கிழவனாகிய முருகன், யக்ஷர் தலைவனாகிய குபேரன் ஆகியோரின் தன்மைகளை உள்ளடக்கிய தாத்தகாரியைக் குறிக்கின்ற கல்வெட்டாக இதனைக் கருதலாம். ஐயப்பன் வழிபாட்டில் நீடித்து வருகின்ற மூதாதையர் வழிபாட்டுக்கூறுகளை இன்றும் நாம் எளிதில் அடையாளம் காணமுடியும். மழைக் காலத்தையடுத்து வருகிற சரத் காலம் (மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்கள்) மூதாதையர் வழிபாட்டிற்குரிய காலமாகும். குறிப்பாகப் பாரசிக ஜொராஸ்ட்ரிய சமயத்தில் மாசி மாதத்திற்குச் சமமாக வருகின்ற பிர்தெளஸ் மாதம் மூதாதையர் வழிபாட்டு மாதமாகக் கருதப்படுகிறது சைவ சமயத்தில் தை மாத அமாவாசையும், மாசி மாதத் தேய்பிறை சதுர்தசியும் (மகா சிவராத்திரி) முன்னோர் வழிபாட்டுக்குரிய நாள்களாகும். பாரசிக ஜொராஸ்ட்ரிய சமயம் சார்ந்த மரணச் சடங்குகளில் உறவினர்கள் கூடி சக்தித் என்ற பெயரில் விருந்துண்பது ஓர் அம்சமாக இடம்பெறும்.8 இறந்தவர் ஆவி வடிவில் வந்து உண்பதற்காக ஓர் இருக்கையும் உணவும் அவருக்கென்று ஒதுக்கிவைக்கப்படும். சபரிமலை யாத்திரையின்போது ஐயப்ப சத்யா என்ற பெயரில் பம்பை நதிக்கரையில் பித்ரு தர்ப்பணத்துடன் விருந்து படைப்பது ஐயப்ப பக்தர்களிடையே இன்றும் நடைமுறையில் உள்ளது. ஐயப்பனும் பக்தர்களுடன் சேர்ந்து உணவருந்துவதாகக் கருதப்படும். சத்யா என்பதும் சக்தித் என்ற பாரசிக மரபும் ஒன்றே என்பதில் ஐயமில்லை. முன்னோர் வழிபாட்டு மரபுகளோடு இத்தலத்துக்கு உள்ள தொடர்பினை உள்ளடக்கும் வகையிலும், இராமாயணக் கதையுடன் இந்திய நாட்டு வழிபாட்டுத் தலங்களைத் தொடர்புபடுத்தும் மனப்பாங்கின் வெளிப்பாடாகவும், ராமன் தசரதனுக்குரிய சிராத்தச் சடங்கினை இங்கு நிறைவேற்றியதாகக் கதை புனையப்பட்டிருக்க வேண்டும்.

பாரசிக ஜொராஸ்ட்ரிய மதத்தின் ஒரு பிரிவாகிய மாகி (magi) என்பது இன்றும் கேரள நாட்டில் மந்திரவாதிகளைக் குறிக்கின்ற பெயராக வழக்கில் உள்ளது மாகி என்ற சொல்லிலிருந்துதான் magic என்ற சொல் தோன்றியுள்ளது. முதன்முதலில் இறந்து, மரணம் என்பது இத்தகையது என மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் உணர்த்திய வழிகாட்டி யமன் ஆவான். (இது அமாவாசைப் பட்சத்து நிலவைக் குறிக்கும்.) யமன், பாரசீக சமய வழக்கில் ‘யிமா’ எனப்படுவான். மரணச் சடங்கைக் குறிப்பிடுவதற்குப் பயன்பட்ட சங்கத் தமிழ்ச் சொல்லாகிய ‘ஈமம்’ என்பது யிமா என்ற சொல்லுடன் நெருக்கம் உடையதாகத் தெரிகிறது. முதுமக்கள் தாழி என்பது ஈமத் தாழி எனப் புறநானூற்றில் (பா. 256:5) குறிப்பிடப்படுகிறது. தாழிகளில் உடலை அடக்கம் செய்யும் மரபு என்பது பாரசீகச் சமய மரபுகளுடன் ஒப்புமையுடையதாகும். ஐயனார் வழிபாடு என்பதே வேத கால வருணன் வழிபாட்டுடனும் ஜொராஸ்ட்ரிய சமய அஹுரமஸ்தா வழிபாட்டுடனும் மிக நெருங்கிய உறவுடைய வழிபாடாகும். அஹுரமஸ்தா என்ற சொல் அசுரர் தலைவன் எனப் பொருள்படும். அதாவது, சுரா பானம் அருந்தாத, பிரபஞ்ச ஒழுங்கைக் காக்கும் தலைவன் என பாரசீகத்தின் கிளை மொழியாகிய குஜராத்திப் பார்சி மொழியில் வருணன் குறிப்பிடப்பட்டான். ‘பாசண்டம்’ என்ற பெயருடையது. பாசண்டம் என்ற சொல், வைதிக மரபுக்கு மாறானது என்ற பொருளில் இந்திய மொழிகளில் வழங்கிற்று.
ஐயனாரைத் தொண்ணூற்றறு வகைப் பாசண்டச் சாத்தன் எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தொண்ணூற்று வகைப்பட்ட அவைதிகத் தத்துவ மரபுகளுக்கும் தலைவன் என்பது இதற்குப் பொருள். ஜொராஸ்ட்ரிய சமயத்தின் தலைமைத் தெய்வமாகிய அஹுரமஸ்தாவின் மகன் ஆதர் எனப்பட்ட நெறிப்பட்ட நெருப்புக் கடவுள் ஆவான். ஆதர் வழிபாட்டுப் பூசாரி ‘அத்ரவன்’ எனப்பட்டான். இது, அதர்வண வேதம் என்ற பெயரில் இடம்பெறும் ‘அதர்வண’ என்ற சொல்லுடன் தொடர்புடையதாகும். இச்சொல் பாசண்ட மொழியில் ‘அத்ரணன்’ என வழங்கிற்று. கர்நாடகக் கடற்கரைப் பகுதியாகிய துளு மொழி வழங்குகின்ற பகுதியில் அதர்வண வேதத்துடன் தொடர்புடைய அத்ருணோ என்ற சொல் பில்லி சூனியம் வைப்பவன், ஏமாற்றுக்காரன் என்ற பொருளில் வழங்குகிறது. அதர்வண வேத சடங்குகள் மாகி மந்திரவாத வழக்குகள் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்திருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை. எனவே, துளு மொழி பேசிய மக்கள் தொகுதியின் குடியேற்றத்துடன் உடன் நிகழ்ச்சியாக இத்தகைய வழிபாட்டு நெறிகள் சபரிமலை ஐயப்ப வழிபாட்டில் ஊடுருவி இருக்கலாம். அடிக்குறிப்புகள்
1. சபரர், புளிந்தர், புளிஞர் என்ற சொற்கள் எயினர்களைக் குறிக்கும். (பெருங்கதை உஞ்சைக்காண்டம் : 55 ; மகாவம்சம் VII : 68.) திவாகர நிகண்டு இவர்களைப் பாலை நிலக் குடிகளாகக் குறிப்பிடுகிறது. (கம்ப ராமாயணம், வாலி வதைப்படலம், பா. 124.)
2. கிருஷ்ண – வாணாசுர யுத்தம் தொடர்பான கதைக் குறிப்புகளில் இவ்விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீமத்பாகவதம் 10:63:20-21. p. 164, The Students Sanskrit English Dictionary, Vaman Shivram Apte, Motilal Banarsidass, New Delhi, 1969.
3. கோக்கருநந்தடக்கனின் பாலியத்துச் சாசனம், பக். அ24-அ34, பாண்டியர் செப்பேடுகள் பத்து, பதிப்பு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-600113, 1999.
4. கண்ணகி கோயில் எனக் கருதப்படும் (சுருளிமலை) திருப்பூரணமலை படாரியார் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள கி.பி. 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் பூர்ணியாற்றுச் சாத்தன், பெரியாற்றுச் சாத்தன் என்ற இரு சாத்தன் கோயில்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றுள் ஒன்று, சபரிமலை பொன்னம்பலமேட்டிலிருந்து கி.பி. 14ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர் ஆதிக்கத்தின்போது அழிந்துபோன கோயிலாக இருக்கலாம் என்றும், அதன் பின்னரே இப்போதைய இடத்தில் ஐயப்பன் கோயில் உருவாகியிருக்க வேண்டுமென்றும் கருதப்படுகின்றன. பார்க்க: திரு. கோவிந்தசாமி அவர்கள் கட்டுரை, கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பொன்விழா மலர், திருவனந்தபுரம்.
5. வடமொழி இலக்கியங்களில் பல இடங்களில் சபரர், கிராதர், நிஷாதர் போன்ற சொற்கள் வேறுபாடின்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது உண்மையே. எனினும், குன்றக் குறவர்களே கிராதர் என்ற பெயருக்கு உரியவர்களாவர். கிராதர் என்ற சொல் மலையெனப் பொருள்படும் கிரி என்ற சொல்லுடன் தொடர்புடையதாகும். கிராதர் என்ற சமஸ்கிருத வழக்கு, பிராகிருதத்தில் சிலாதர் என்றும் சங்கத் தமிழில் சிலதா என்றும் வழங்கிற்று. மலையைக் குறிக்கும் பிற சொற்களான சிலா, கிலா, சைலம், கைலம், கல் முதலான சொற்கள் சிலதருடன் தொடர்புடையவை.
6. வெகுஜன ஊடகங்களால் - குறிப்பாகத் தொலைக்காட்சி விவாதங்களில் - அறிவுஜீவிகளாக முன்னிறுத்தப்படும் சில ‘மாடம்பிகள்’, பழங்குடிகளின் இத்தகைய நம்பிக்கைகள் பற்றிய அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல், இந்நம்பிக்கையை வைதிக இந்து சமயத்துக்கு மட்டுமே உரியதாககச் சொல்லி, இவ்வழக்கத்தை வஹாபிய இஸ்லாம் போன்ற அரபு இனவாத - ஆபிரகாமிய அடிப்படைவாதங்கள் வலியுறுத்தும் பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பிரச்சாரம் செய்வது ஓர் அண்மைக் காலப் போக்காக உருவாகியுள்ளது.
7. ஐராவதம் மகாதேவன் தலைமையில் அமைந்த குழுவினரால் 1998ஆம் ஆண்டு இக்கல்வெட்டு கண்டறியப்பட்டு வாசிக்கப்பட்டது. ”பல்புலி தாத்தகாரி” என வாசிக்கப்பட்டுள்ளது. p. 476, Early Tamil Epigraphy, I. Mahadevan, Cre-A, Chennai, 2003. 8. The Zend-Avesta, F. Max Muller, Motilal Banarsidass, New Delhi. (நன்றி: தமிழினி, பிப்ரவரி 2009) sr@sishri.org

'நீர் எவ்வகையில் அரசர் ஆவீர்?'

ஜேபீ எழுதியது:

"தாமே ஒரு பெரும்புலவராகவும் ஆசிரியராகவும் விளங்கிவந்த சுப்பிரமணிய

தேசிகருக்கு பாடல் முழுவதும் புரிந்தது.ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை.

அண்ணாமலை ஏன் தன்னை ஓர் அரசன் என்றுகூறிக்கொள்கிறார் என்பதுமட்டும்

விளங்கவில்லை. அதை அண்ணாமலையிடமே கேட்டுவிட்டார்.

'நீர் எவ்வகையில் அரசர் ஆவீர்?' என்றுகேட்டார்."

---------------------------------------------------------------

அண்ணாமலை இரெட்டியாரின் இலக்கணப்பயிற்சி பற்றி நான் முன்பு வெளியிடமுயன்று எழுத்துருத்
தகராறினால் தோல்வியடைந்த இடுகையில் ஜேபீ அவர்கள் சுட்டும் மேற்சொன்னநிகழ்ச்சி பற்றிக்
குறிப்பிட்டிருந்தேன். நான் பயன்படுத்தியது சு.அ. இராமசாமிப் புலவர் எழுதிய அ.இரெட்டியார்
வரலாற்றுக் கட்டுரையாகும். அதில் காணும்தகவல்கள் நீங்கள் எழுதியதிலிருந்து சற்று மாறுபட்டதாகத்
தெரிகிறது. அதன்படி இரெட்டியார் இருமுறை திருவாவடுதுறை ஆதீனத்திற்குச்சென்றதாகத் தோன்றுகிறது.
அதுபற்றிய தகவலைச் சுருக்கமாகச் சொன்னால்:



அண்ணாமலை இரெட்டியார் (சுருக்கி, அ.ரெ.) சேற்றுருக்குச் சென்று இலக்கணங் கற்கத் தொடங்கியதற்குமுன்பு
திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சென்றால் இலக்கண இலக்கியங் கற்கலாம் என்றுசிலர் மூலமாக உணர்ந்து
அங்கு சென்றார். ஆதீனத் தலைவராயிருந்த சுப்பிரமணிய தேசிகர் (சு.தே.) 'இங்குள்ள அறிஞர்களிடம்
படித்துக்கொள்' என்று சொன்னார். சைவசமயத்திற் சிறந்த பெரியவர்கட்கே நல்ல உணவுஞ் சிறப்பும்
கிடைப்பதைப் பார்த்த அ.ரெ. தம் குலத்தைக் கூறினால் சாப்பாடு கூடப் போட மாட்டார்கள் என்று கருதி
குலத்தை மறைத்துக் கல்வி கற்றுவந்தார்.பின்னர் உண்மை வெளிவரின் உயிர்க்குஇறுதி நேரிடுமென்று
(-என்ன கொடுமையான சமூகம்!) சிலர் சொல்ல ஒருவருக்குந்தெரியாமல் ஊர்ப் போய்ச் சேர்ந்தார்.

பிறகு சேற்றூரில் இலக்கணங் கற்று ஊற்றுமலை இருதயாலய மருதப்பத் தேவரின் அவைப் புலவரான பின் அவர்
புகழ் திருவாவடுதுறைக்கும் எட்டியது. அப்போது ஆங்கிருந்த உ.வே. சாமிநாதையர்அவர்கள் (பின்னர்
'தமிழ்த் தாத்தா') சு.தே.யிடம், "சிலஆண்டுகட்குமுன்பு நம் ஆதீனத்திற்குக் கல்வி கற்க வந்து சிறிது
நாள் இருந்து சொல்லாமலே சென்றுவிட்டஅண்ணாமைலை இரெட்டியார் வகுப்பைச்சேர்ந்தவர். அவர் பிறகு
சேற்றூர் மன்னர் உதவியால் முகவூர் இராமசாமிக் கவிராயரிடம் இலக்கணங்கற்றுச் சிறந்த புலவராகி
இப்போது ஊற்றுமலையில் அவைப் புலவராகச் சிறந்து விளங்குகிறார். அவர் புகழ்எல்லாவிடங்களிலும் மண்டி
நிற்கிறது" என்று செய்தி கூறினார். இவ்வாறிருக்கும் நாளில் ஊற்றுமலை மன்னர் (மருதப்பர்)
தேசிகரைப் பார்க்கத் திருவாவடுதுறைக்குச் சென்றபோது அ.ரெ.வையும் அழைத்துச் சென்றார். மன்னர் கண்டு
மீண்ட பின் அ.ரெ. தேசிகரைக் காணச்சென்றார். அப்போது (ஜேபீயின் இடுகையில் தந்திருந்த)
'அரசனகர்' யமகப் பாடலைப் பாடினார்.எத்தகைய பாடலின் பொருளையும் தாமேஉணர்ந்துகொள்ளவல்ல
தேசிகருக்கும் உ.வே.சா. போன்ற பிறபுலவர்கட்கும் அந்தப் பாட்டின் நான்காவதுஅடியிலிருந்த அரசன்
என்னுஞ் சொல்லுக்கு மீண்டும் மீண்டும் படித்துச் சொல்லக் கேட்டும் பொருள் கண்டுபிடிக்க இயலவில்லை. பிறகு
தேசிகர் அ.ரெ.யைப் பாடலுக்குப் பொருள் விளக்குமாறு கட்டளையிட்டார். இரெட்டியார், முதல் அடியில்,
அர! சனகர் ஆதியர்=அரனே! சனகர் முதலான முனிவர்கள் எனவும், இரண்டாவது அடியில், தென்பால் அரசு
அன கராவை வென்ற விடை= தென்திசைஅரசனாகிய நமன் போன்ற முதலையைக்கொன்ற திருமாலாகிய
ஏற்றினை (காளையை) எனவும், மூன்றாவதுஅடியில் அரச நகர் ஆர்ந்து ஒளிர் - திருவாவடுதுறை எனும்
பதியில் அமர்ந்து விளங்கும் எனவும் நான்காவது அடியில், நான் அரசன் அகராகம் அகல = நான்
சுவையில்லாதவன் மனதிலுள்ள அவா நீங்குமாறு எனவும் பொருள் விரித்தார். அதுகேட்டு மகிழ்ந்த
தேசிகர் "நீர் சாதியிலும் இரட்டி, அறிவிலும் இரட்டி" என்று சொல்லிப் போற்றிப் புகழ்ந்து
அ.ரெ.க்குத் தக்கவாறு சிறப்புகள் செய்துஅனுப்பினார்.



நான் முன்பு சொன்ன வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடான "தமிழ்ப் புலவர் வரிசை"
என்னும் தொடர் நூலின் 19-ஆம் புத்தகத்தில்மேற்சொன்னவாறு காண்கிறது. ஜேபீ அவர்கள் அளிக்கும்
சுவையான வரலாறும் மிக நன்றாகவும் பொருள் படும்படியும் உள்ளது (எடுத்துக்காட்டாக ஏழு கவிராயர்
குடும்பம் பற்றின தகவல்). ஆகவே, பழையவரலாறுகள் எழுதுபவர்களுக்கிடையே சற்று கருத்து வேற்றுமைகள்
இருக்கத்தான் இருக்கும் என்று விட்டுவிடலாம் என்று தோன்றுகிறது. ஜேபீ என்னநினைக்கிறீர்கள்?


கருத்துவேற்றுமைகள் நமக்குள் இல்லை:-)

ஏனெனில் நாம் இருவருமே வேற்றார்களால் எழுதப்பட்ட வரலாற்றின்

அடிப்படையில் அல்லவா எழுதுகிறோம்.

ஆகவே உண்மையான கருத்து வேற்றுமை இருப்பின், அது அந்த

மூல வரலாற்று ஆசிரியர்களுக்கிடையில்தான். நமக்குள் இல்லை.

ஒரு விஷயம் புரியவில்லை.

ஏனெனில் அது பொருந்தி வரவில்லை.


அண்ணாமலையார் ரெட்டியார் சமூகத்தைச்சேர்ந்தவர். ரெட்டியார்கள்

மேல்மட்ட சமூகத்தினராகக் கருதப்பட்டுவந்தவர்கள். பெருநிலக்கிழார்களாக

அவர்களில் பலர் இருந்திருக்கின்றனர்.

14ஆம் நூற்றாண்டில் காகதீயப் பேரரசுதுருக்கியரிடம் வீழ்ச்சியடைந்த

பிறகு அழிந்துவிட்டது. அந்த இடத்தில்இரண்டு அரசுகள் ஏற்பட்டன. அவற்றில்

ஒன்று கொண்டவீடு அரசு. அதனை ஆண்டவர்கள் ரெட்டியார்கள்.

நம் தமிழகத்தில் படையாச்சிகள், தேவர்கள் எப்படியோ அப்படித்தான்

ஆந்திரத்தில் ரெட்டியார்கள். க்ஷத்திரியர்களாகத் தங்களைக் கருதிக்கொள்பவர்கள்.


உ.வே.சாமிநாதய்யரைத் தன்னிடம் வைத்து, அவருக்கும் அவருடைய தாய்

தந்தையருக்கும் உறைவிடம், உணவு ஆகியவற்றைத் தந்து ஆதரித்து, அத்துடன்

சாமிநாதய்யருக்குத் தமிழும் கற்றுக்கொடுத்து வந்தவர், செங்கணம் விருத்தாசல

ரெட்டியார்.

அப்படியிருக்கும்போது திருவாவடுதுறைஆதீனத்தில் சாதியைச்சொன்னால்

சோறு கிடைக்காது என்பது பொருந்திவரவில்லை.


ஆதீனத்தின் மேலாண்மை சைவப்பிள்ளைமார்களிடம் இருந்தது

உண்மைதான். சுப்பிரமணிய தேசிகர்கூடதிருநெல்வேலி சைவப்பிள்ளைமார்தான்.

ஆனால் மற்றவர்களும் அங்கு மற்ற பதவிகளில் இருந்திருக்கின்றனர். வரப்போகவும்

இருந்திருக்கின்றனர். கோவிந்த பிள்ளை என்னும் வைஷ்ணவர் அங்கு சில காலம்

ராமாயணப்பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அவர் வேறு இடத்தில் சாப்பிட்டிருக்கலாம்.

உ.வே.சா. தன்னுடைய நூலில் வெள்ளைவேட்டிக்காரர்களுக்கு இன்னொரு

பந்தி போடப்பட்டதாகச்சொல்கிறார். அந்த வெள்ளைவேட்டிக்காரர்கள் சன்னியாசம்

வாங்காதவர்கள்.

எங்கள் வட்டாரத்திலிருந்து தட்டார்வகுப்பைச்சேர்ந்த ஒருவர்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவாவடுதுறை ஆதீனத்தில் தங்கி தமிழ்க்கல்வி

கற்றிருக்கிறார்.



ஆகையால்தான் இப்படியும் இருக்குமா என்ற ஐயம் தோன்றுகிறது.

நீங்கள் படித்த அந்த வரலாற்றை எழுதியவரும் சைவர்; வெளியிட்டவர்களும்

சைவர்கள்; ஆதீனமும் சைவ ஆதீனம்; அதன்தலைவர்களும் சைவர்கள். அப்படி

இருக்கும்போது தங்களின் ஆதீனத்தைப்பற்றி குறைவாகக் கருதப்படும்படி

எழுதுவார்களா என்ற எண்ணத்தையும்ஒதுக்கமுடியவில்லை.


ஐயா, தெரியாதைய்யா!


பாடபேதம், சம்பவ வேற்றுமைகள் போன்றவை இருந்தால் உடனடியாக

சுட்டிக்காட்டிவிடுங்கள். அது நல்லதல்லவா.


அன்புடன்


ஜெயபாரதி

சங்கர நமச்சிவாயர்


நன்னூலுக்கு, மயிலைநாதருக்குப்பின் உரைஎழுதிப் பெரும்புகழ்
பெற்றவர், சங்கர நமச்சிவாயர். இவர் பதினோழாம் நூற்றாண்டில்
திருநெல்வேலியில் தடிவீரையன் கோயில் தெருவில் வாழ்ந்தவர்; சைவ
வேளாளர் குடியில் தோன்றியவர். அக்காலத்தில் இவரைச் சங்கர நமச்சிவாய
பிள்ளை என்றும், சங்கர நமச்சிவாயப் புலவர் என்றும் வழங்கி வந்தனர்.

இவரது ஆசிரியர், நெல்லை ஈசான மடத்திலிருந்த இலக்கணக்
கொத்தின் ஆசிரியராகிய சாமிநாத தேசிகர். தொல்காப்பியம் முதலிய
இலக்கணங்களையும், சங்க இலக்கியம், வடமொழி நூல்கள் ஆகியவற்றையும்
நன்கு பயின்றார் இவர். சைவ சித்தாந்தங்களையும் திருமுறைகளையும்
வைணவ இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தார். இவரைச் சிறப்புப் பாயிரம்,
“பன்னூற் செந்தமிழ்ப் புலவன்” என்று பாராட்டுகின்றது. சங்கர நமச்சிவாயர்
தம் ஆசிரியராகிய சாமிநாத தேசிகரை,

நன்னெறி பிறழா நற்றவத் தோர்பெறும்
தன்னடித் தாமரை தந்துஎனை ஆண்ட
கருணையங் கடலைஎன் கண்ணைவிட்டு அகலாச்
சுவாமி நாத குரவனை அனுதினம்
மனமொழி மெய்களில் தொழுது

என்று போற்றுகின்றார்.

“சாமிநாத தேசிகர் மட்டுமன்றி இலக்கண விளக்கம் வைத்தியநாத
தேசிகர் முதலியோரும் அவரைப்போன்ற வேறு சில பெரியாரும் இவர்
காலத்தில் திருநெல்வேலியில் இருந்தவர்கள் ஆதலின், கல்வி கேள்விகளில்
சிறந்த ஓர் இலக்கண நூலுக்கு உரை இயற்றுதற்குப் போதிய ஆற்றலைப்
பெறுவது இவருக்கு எளிதாயிற்று” என்பர் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர்.

சங்கரநமச்சிவாயர் நன்னூலுக்கு உரை இயற்றக் காரணமாய் இருந்தவர்,
ஊற்றுமலை சமீன்தாராகிய மருதப்ப தேவர். உரைப்பாயிரத்துள்
சங்கரநமச்சிவாயர் ஊற்றுமலை மருதப்பரை,

பொன்மலை எனஇப் புவிபுகழ் பெருமை
மன்னிய ஊற்று மலைமரு தப்பன்
முத்தமிழ்ப் புலமையும் முறையர சுரிமையும்
இத்தலத்து எய்திய இறைமகன்

என்று போற்றுகின்றார். மருதப்பர் கூற, தாம் உரை இயற்றிய வரலாற்றை,

...ஊற்றுமலை மருதப்பன்
‘நன்னூற்கு உரைநீ நவையறச் செய்து
பன்னூற் புலவர்முன் பகர்தி’என்று இயம்பலின்,
நன்நா வலர்முக நகைநா ணாமே
என்னால் இயன்றவை இயற்றும் இந்நூலுள்

என்று உரைக்கின்றார்.

சங்கரநமச்சிவாயர் உரை எழுதிக் கொண்டிருக்கும் போது மருதப்பர்
வேண்டிய உதவிகளைச் செய்து தந்து, உரையை அரங்கேற்றிப் பரிசு நல்கிச்
சிறப்பித்தார்.

நன்னூலுக்கு சங்கர நமசிவாயப்புலவர் எழுதிய உரை மிகச்சிறந்தது
என்று போற்றப்படுவது. அதனை அவர்ஊற்றுமலையரசரின் ஆதரவோடுதான்
எழுதியிருக்கிறார். அவர் அதனை எழுதும்போது மாதம் ஒன்றுக்கு நான்கு கோட்டை
நெல்லும் தினம் ஒருபடிபாலும் கொடுக்கப்பட்டனவாம். பின்னர் பல பரிசில்கள்
வழங்கப்பெற்றார்.


சங்கர நமச்சிவாயர் சைவர் ஆதலின், இவரது உரை முழுதும்
சைவமணம் கமழ்கின்றது. மேற்கோள்களும், எடுத்துக்காட்டும் சைவ சமயச்
சார்பானவையாகும்.

உரைத்திறன்

சங்கர நமச்சிவாயரின் உரைத் திறனை வெளிப்படுத்தும் சிறந்த பகுதிகள்
பல உள்ளன.
‘நடவாமடிசீ’ என்ற நூற்பா (137) நன்னூலாரின் இலக்கணப் புலமையை
உணர்த்தவல்ல சிறந்த நூற்பா என்பதை அறிந்த சங்கர நமச்சிவாயர்
‘கையறியா மாக்கட்கு அன்றி நூலியற்றும் அறவினையுடைய மக்கட்குப்
பல்கலைக்குரிசில் பவணந்தி என்னும் புலவர் பெருமான் புகழ்போல் விளங்கி
நிற்றலான், உலக மலையாமை பத்தழகோடும் பிறந்து நின்றது இ்ச் சூத்திரம்
என்று உணர்க” என்று வியந்து போற்றுகின்றார்.

‘பல்வகைத் தாதுவின் உயிர்க்கு உடல் போல்’ என்ற சூத்திரத்தில்
(268) உள்ள உவமையை, “தோல் இரத்தம் இறைச்சி மேதை எலும்பு மச்சை
சுவேதநீர் என்னும் எழுவகைத் தாதுக்காளினால் உயிர்க்கு இடனாக
இயற்றப்பட்ட உடம்பு போல” என்று விளக்கிப் பொருள் உரைக்கின்றார்.

எச்சங்களை விளக்கும் சூத்திரவுரையில் (360) சில குறள்களுக்கு நல்ல
விளக்கம் கூறுகின்றார். ‘இணர் எரி தோய்வன்ன’ (குறள்-308) என்ற குறளின்
விளக்கம் படித்து மகிழத்தக்கது.

உரியியலில் ‘இன்னாது இன்னுழி’ (நன்-460) என்ற சூத்திரவுரையின்
கீழ், ’இவ்வியலில் சால என்பது முதல் ஆர்ப்பு என்பது ஈறாக நாற்பத்து
ஐந்து உரிச்சொல் எடுத்துச் சுருங்கச் சொல்லுதல்’ என்று உரிச்சொற்களைக்
கணக்கிட்டு உரைக்கின்றார்.

பொருள் கோள்களின் பெயர்ப் பொருத்தங்களைச் சங்கர நமச்சிவாயர்
நன்கு விளக்குகின்றார். அவை பின்வருமாறு:

தாப்பிசை: ஊசல்போல் இடைநின்று இருமருங்கும் செல்லும் சொல்.
தாம்பு என்பது ஊசல்.

அளைமறிபாப்பு: அளை மறிபாம்பு என்பதில் பாம்பு என்பது பாப்பு
என நின்றது.*

மொழி மாற்று: தனக்கு உள்ளதைக் கொடுத்துப் பிறர்க்கு உள்ளதை
வாங்கும் பண்டமாற்றுப் போறல்.

வடமொழிப் புலமை

சங்கர நமச்சிவாயர் தம் வடமொழிப் புலமையை வெளிப்படுத்தும்
இடங்கள் சிலவற்றைக் கீழே காண்போம்:

* வளைக்குள் நுழைகின்ற நல்ல பாம்பு, தலையை முன்னால் வைத்து
உடலைச் சுருட்டி அதன்மேல் தலையை வைக்கும்.
“வட நூலார் இடுகுறியை ரூடி என்னும், காரணத்தை யோகம் என்றும்,
காரண இடுகுறியை யோக ரூடி என்றும் வழங்குப” (62).

“பிரகிருதி விகிருதி என்னும் ஆரிய மொழிகள் பகுதி விகுதி எனத்
திரிந்து நின்றன (133).

“வடநூலார் சொற்பொருளை வாச்சியம் வெங்கியம் இலக்கணை என
மூன்று எனவும், இலக்கணையை வெங்கியத்துள் அடக்கி இரண்டு எனவும்
கூறுப. இவற்றுள் வாச்சியம் என்பது வெளிப்படை; வெங்கியம் என்பது
குறிப்பு; இலக்கணை என்பது ஒரு பொருளினது இலக்கணத்தை மற்றொரு
பொருட்குத் தந்து உரைப்பது; அது விட்ட இலக்கணை, விடாத இலக்கணை,
விட்டும் விடாத இலக்கணை என மூவகைப்படும் (269).

உவமைகள்

இவர் பல இனிய உவமைகளை எடுத்துக்காட்டி, இலக்கணக்
கருத்துக்களை இனிது விளக்குகின்றார். அவ்வுவமைகள் எளியவையாயும்,
சிறியவையாயும் இருப்பினும் கற்போர் உள்ளத்தில் நன்கு பதியவல்லவை.

தொகை வகை விரி என்பவை ஒன்றோடொன்று தொடர்புடையவை
என்பதற்கு “மரத்தினது பராரையினின்றும் கவடு கோடு கொம்பு வளார்
பலவாய் ஒன்றோடொன்று தொடர் பட்டு எழுந்து நிற்றல்போல் என்ற
உவமையைக் கூறுகின்றார் (பாயிரம்).

மேலும், மரங்களைப்பற்றிய பின்வரும் உவமைகளைக் கூறுகின்றார்:

மா பலா முதலியன பராரை முதலிய சினையொடு நின்றன எனக்
கண்டது கூறுவார்போல (141).

கமுகந் தோட்டம் என்றாற்போல (151).

இவைகளேயன்றி முதல் நூல் வழி நூல் சார்பு நூல் என்பவற்றிற்குத்
தந்தை மகன் மருமான் என்பவர்களை உவமை கூறுகின்றார். ஙகரம் சுட்டு
வினா எழுத்துகளை முதலில் பெற்று வருவதற்கு முடவன் கோலூன்றி
வருவதை உவமை கூறுகின்றார். இத்தகைய சிறந்த உவமைகள் உரை
முழுதும் உள்ளன.


போற்றும் நூல்கள்

சங்கர நமச்சிவாயர் தொல்காப்பியம், திருக்குறள், திருக்கோவையார்
ஆகிய மூன்று நூல்களையும் பெரிதும் போற்றுகின்றார். தொல்காப்பியர்
கொள்கையிலிருந்து நன்னூலார்

மாறுபடும் இடங்களைத் தெளிவாகச் சுட்டுகின்றார். இடையிடையே தம்
உரையில் பல தொல்காப்பியச் சூத்திரங்களை மேற்கோள் தருகின்றார்.
தொல்காப்பியவுரைகளை ஆழ்ந்து பயின்று, பொருந்தாவுரைகளை
மறுக்கின்றார்.

திருக்குறளிலிருந்து பல மேற்கோள்கள் இவர் தருகின்றார். ‘பல்வகைத்
தாதுவின்’ என்ற சூத்திரத்திற்கு மேற்கோளாக, ‘வரும் குன்றம் அனையான்’
என்ற திருக்கோவையார் பாடலை எடுத்துக்காட்டுகின்றார்.

இவர் இம்மூன்று நூல்களையும் போற்றிக் கற்றவர் என்பது
தெளிவாகின்றது.


Saturday, 7 September 2013

இருதயாலீஸ்வரர் 108 போற்றி



• ஓம் அப்பா போற்றி
• ஓம் அரனே போற்றி
• ஓம் அரசே போற்றி
• ஓம் அமுதே போற்றி
• ஓம் அழகே போற்றி
• ஓம் அத்தா போற்றி
• ஓம் அற்புத போற்றி
• ஓம் அறிவா போற்றி
• ஓம் அம்பலா போற்றி

• ஓம் அரியோன் போற்றி
• ஓம் அருந்தவா போற்றி
•ஓம் அணுவே போற்றி
• ஓம் அண்டா போற்றி
• ஓம் ஆதியே போற்றி
• ஓம் ஆரங்கா போற்றி
• ஓம் ஆரமுதே போற்றி
• ஓம் ஆரணா போற்றி
• ஓம் ஆண்டவா போற்றி
• ஓம் ஆலவாமா போற்றி
• ஓம் ஆரூரா போற்றி
• ஓம் இறைவா போற்றி
• ஓம் இடபா போற்றி

• ஓம் இன்பா போற்றி
• ஓம் ஈசா போற்றி
• ஓம் உடையாய் போற்றி
• ஓம் உணர்வே போற்றி
• ஓம் உயிரே போற்றி
• ஓம் ஊழியே போற்றி
• ஓம் எண்ணே போற்றி
• ஓம் எழுத்தே போற்றி
• ஓம் என்ருணா போற்றி
• ஓம் எழிலா போற்றி
• ஓம் எளியே போற்றி
• ஓம் ஏகா போற்றி

• ஓம் ஏழிசையே போற்றி
• ஓம் ஏநூர்ந்தா போற்றி
• ஓம் ஐயா போற்றி
• ஓம் ஒருவா போற்றி
• ஓம் ஒப்பிலா போற்றி
• ஓம் ஒளியே போற்றி
• ஓம் ஓங்காரா போற்றி
• ஓம் கடம்பா போற்றி
• ஓம் கதிரே போற்றி
• ஓம் கதியே போற்றி
• ஓம் கனியே போற்றி

• ஓம் கலையே போற்றி
• ஓம் காருண்யா போற்றி
• ஓம் குறியே போற்றி
• ஓம் குருவே போற்றி
• ஓம் குணமே போற்றி
• ஓம் கூத்தா போற்றி
• ஓம் சடையா போற்றி
• ஓம் சங்கரா போற்றி
• ஓம் சதுரா போற்றி
• ஓம் சதாசிவா போற்றி
• ஓம் சிவமே போற்றி
• ஓம் சிறமே போற்றி
• ஓம் சித்தா போற்றி

• ஓம் சீரா போற்றி
• ஓம் சுடரே போற்றி
• ஓம் சுந்தரா போற்றி
• ஓம் செல்வா போற்றி
• ஓம் செங்கணா போற்றி
• ஓம் செம்பொனா போற்றி
• ஓம் சொல்லே போற்றி
• ஓம் ஞாயிரே போற்றி
• ஓம் ஞானமே போற்றி
• ஓம் தமிழே போற்றி
• ஓம் தத்துவா போற்றி
• ஓம் தலைவா போற்றி
• ஓம் தந்தையே போற்றி

• ஓம் தாயே போற்றி
• ஓம் தாண்டவா போற்றி
• ஓம் திங்களே போற்றி
• ஓம் திசையே போற்றி
• ஓம் திரிசூலா போற்றி
• ஓம் துணையே போற்றி
• ஓம் தெளிவே போற்றி
• ஓம் தேவதேவே போற்றி
• ஓம் தோழா போற்றி
• ஓம் நமச்சிவாயா போற்றி
• ஓம் நண்பா போற்றி
• ஓம் நஞ்சுண்டா போற்றி

• ஓம் நான்மறையா போற்றி
• ஓம் நிறைவே போற்றி
• ஓம் நினைவே போற்றி
• ஓம் நீலகண்டா போற்றி
• ஓம் நெறியே போற்றி
• ஓம் பண்ணே போற்றி
• ஓம் பித்தா போற்றி
• ஓம் புராணா போற்றி
• ஓம் பெரியோய் போற்றி
• ஓம் பொருளே போற்றி
• ஓம் பொங்கரவா போற்றி

• ஓம் மணியே போற்றி
• ஓம் மதிசூடியே போற்றி
• ஓம் மருந்தே போற்றி
• ஓம் மலையே போற்றி
• ஓம் மஞ்சா போற்றி
• ஓம் மணாளா போற்றி
• ஓம் மெய்யே போற்றி
• ஓம் முகிலே போற்றி
• ஓம் முத்தா போற்றி
• ஓம் முதல்வா போற்றி
• ஓம் வாழ்வே போற்றி
• ஓம் வைப்பே போற்றி

நாகம்மன் 108 போற்றி

ஓம் நல் அரவமே போற்றி
ஓம் நாகதேவதையே போற்றி
ஓம் அரசடியருள்வோரே போற்றி
ஓம் அபயமளிப்போரே போற்றி
ஓம் அன்பர்க்கெளியோரே போற்றி
ஓம் அடங்காரின் அழிவே போற்றி
ஓம் அரன்அணியரே போற்றி
ஓம் அபிஷேகப் பிரியரே போற்றி
ஓம் அனந்தனே போற்றி
ஓம் ஆதிசேஷனே போற்றி-10

ஓம் ஆடியருள்பவரே போற்றி
ஓம் ஆனைமுகன் அருகிலிருப்பவரே போற்றி
ஓம் ஆலமுடையவரே போற்றி
ஓம் ஆயுதமானவரே போற்றி
ஓம் இசைப்பிரியரே போற்றி
ஓம் இறையருள் கூட்டுவிப்போரே போற்றி
ஓம் ஈறிலாரே போற்றி
ஓம் ஈர்க்கும் வடிவினரே போற்றி
ஓம் ஊர்ந்து வருபவரே போற்றி
ஓம் ஊர் தோறும் அருள்வோரே போற்றி -20

ஓம் எங்குமிருப்போரே போற்றி
ஓம் எளிதில் மகிழ்வோரே போற்றி
ஓம் எண்ணிலாத் தலையரே போற்றி
ஓம் ஏற்றமளிப்போரே போற்றி
ஓம் ஓப்பில்லாரே போற்றி
ஓம் ஓன்று விப்பவரே போற்றி
ஓம் கம்பளரே போற்றி
ஓம் கத்ரு பத்ரரே போற்றி
ஓம் கம்பீரரே போற்றி
ஓம் கருடனைப் பணிந்தோரே போற்றி-30

ஓம் காணற்கினியவரே போற்றி
ஓம் கயவரையழிப்பவரே போற்றி
ஓம் காளிங்கரே போற்றி
ஓம் கண்ணனுக்கடங்கியவரே போற்றி
ஓம் கார்ககோடகரே போற்றி
ஓம் காவலநுக்கு ஆயுதரே போற்றி
ஓம் கிரீடமானவரே போற்றி
ஓம் கிரகதோஷநாசகரே போற்றி
ஓம் குங்குமப்பிரியரே போற்றி
ஓம் குலக்காவலரே போற்றி-40

ஓம் கேது சிரமானவரே போற்றி
ஓம் கோள்வினை பொடிப்பவரே போற்றி
ஓம் சங்கரே போற்றி ஓம் சப்தநாயகரே போற்றி
ஓம் சக்தி வடிவினரே போற்றி
ஓம் சங்கரனை அணைவோரே போற்றி
ஓம் சட்டை உரிப்போரே போற்றி
ஓம் சத்தியத்துக்கடங்கியவரே போற்றி
ஓம் சிவதாசரே போற்றி
ஓம் சிவனருள் பெற்றோரே போற்றி-50

ஓம் சுகுமாரதாசரே போற்றி
ஓம் சுப்ரமண்யஷேதரரே போற்றி
ஓம் சீறுவோரே போற்றி
ஓம் சீதள உடலோரே போற்றி
ஓம் தஷகரே போற்றி
ஓம் ததிகர்ணரே போற்றி
ஓம் தீனர்க்காவலரே போற்றி
ஓம் தீயோர்க்கு நஞ்சே போற்றி
ஓம் துதிப்பிரியரே போற்றி
ஓம் துன்பம் துடைப்போரே போற்றி-60

ஓம் நமனாரின் சேவகரே போற்றி
ஓம் நல்லோரைக் காப்போரே போற்றி
ஓம் நாகலட்சுமியே போற்றி
ஓம் நாகராஜரே போற்றி
ஓம் நாக கன்னியரே போற்றி
ஓம் நாடப்படுவோரே போற்றி
ஓம் நாக நாகினியரே போற்றி
ஓம் நாக பஞ்சமித்தேவரே போற்றி
ஓம் நாதத்தில் வயிப்போரே போற்றி
ஓம் நாதனைப் பணிந்தோரே போற்றி-70

ஓம் நீள் வடிவினரே போற்றி
ஓம் நொடியில் யருள்வோரே போற்றி
ஓம் பஞ்சமித் தோன்றலே போற்றி
ஓம் பரனருள் பெற்றோரே போற்றி
ஓம் பத்மனே போற்றி
ஓம் பளபளக்கும் மேனியரே போற்றி
ஓம் படைநடுக்குவிப்போரே போற்றி
ஓம் பல்வடிவில் அருள்வோரே போற்றி
ஓம் பால் பிரியரே போற்றி
ஓம் பாடலில் மயங்குவோரே போற்றி-80

ஓம் பஞ்சபூதத் தேவரே போற்றி
ஓம் பாதாள வாசரே போற்றி
ஓம் புண்ணியரே போற்றி
ஓம் புற்றிலுறைவோரே போற்றி
ஓம் புகழ்படைத்தோரே போற்றி
ஓம் பூஜிக்கப்படுவோரே போற்றி
ஓம் புனிதரே போற்றி
ஓம் பூவுலககோர்த் தேவரே போற்றி
ஓம் மரத்தடியிருப்வோரே போற்றி
ஓம் மகுடிக்கடங்குவோரே போற்றி-90

ஓம் மகளிர்த் தேவரே போற்றி
ஓம் மஞ்சளில் மகிழ்வோரே போற்றி
ஓம் மகவளிக்போரே போற்றி
ஓம் மலடு நீக்குவோரே போற்றி
ஓம் மணிபத்ரனே போற்றி
ஓம் மால் ஆசனனே போற்றி
ஓம் மானஸையே போற்றி
ஓம் மாலருளும் பொற்றோரே போற்றி
ஓம் முட்டைஏற்போரே போற்றி
ஓம் முக்கியத்தேவரே போற்றி-100

ஓம் ராகு உடலானோரே போற்றி
ஓம் ருத்ரனுடனிப்போரே போற்றி
ஓம் வாசுகியே போற்றி
ஓம் வளைந்து வருவோரே போற்றி
ஓம் வணங்கவைப்பவரே போற்றி
ஓம் வரம் எல்லாம் தருபவரே போற்றி
ஓம் வல்லோரே போற்றி
ஓம் வரமருள்வோரே போற்றி-108



Thursday, 5 September 2013

கப்பல் ஓட்டிய தமிழன் - வ.உ.சிதம்பரம்பிள்ளை



வ.உ.சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை (V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 - நவம்பர் 18 1936)[1] ஒரு விடுதலைப் போராட்ட வீரர்.
வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.

தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.

இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.

வ.உ.சி. 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் தமிழ் நாட்டில் திருநெல்வேலி தற்போதைய தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். (ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் தான் பிறந்தார்

ஆறு வயதில் வீரப் பெருமாள் அண்ணாவி என்ற தமிழாசிரியரிடம் தமிழ் கற்றுக் கொண்டார். அவரது பாட்டியார் அவருக்கு சிவபுராணக்கதைகளைக் கூறுவார். அவரது பாட்டனாரிடம் இருந்து அவர் இராமாயணக் கதைகளையும், பாட்டனாரோடு சேர்ந்து சென்று அல்லிக் குளத்து சுப்ரமணிய பிள்ளை கூறிய மகாபாரதக் கதைகளையும் கேட்டறிந்தார்.

அரசாங்க அலுவலரான திரு.கிருஷ்ணன் வ.உ.சி.க்கு ஆங்கிலம் கற்பித்தார். அவருக்கு பதினான்கு வயதாகும் போது அவர் ஓட்டப்பிடாரத்திலிருந்து தூத்துக்குடிக்குக் கல்வி கற்பதற்காக வந்தார். அவர் புனித சேவியர் பள்ளியிலும் கால்டுவெல் பள்ளியிலும் கல்வி கற்றார். திருநெல்வேலியில் இந்துக் கல்லூரியிலும் சேர்ந்து கல்வி கற்றார்.

வ.உ.சி. தனது இளம் வயதில் அனைத்து வகை விளையாட்டுகளிலும் ஆர்வம் மிக்கவராகவும் வல்லவராகவும் இருந்திருக்கிறா

வ.உ.சி. சில காலம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்தார். பின்னர் அவரது தந்தை அவரை சட்டக் கல்வி பெற திருச்சிக்கு அனுப்பி வைத்தார். திரு.கணபதி ஐயர், திரு.ஹரிஹரன் ஆகியோர் அவருக்கு சட்டம் கற்பித்தனர். அவர் சட்டத் தேர்வை 1894-ஆம் ஆண்டு எழுதித் தேர்ச்சி பெற்றார். 1895ல் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் துவங்கினார். அவர் உரிமையியல் மற்றும் குற்றவியல் என இரு வகை வழக்குகளைக் கையாண்டாலும் குற்றவியல் வழக்குகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் வசதியற்றவர்களுக்காக இலவசமாக வாதாடினார். வழக்குகளுக்காக இடைத்தரகர்களுக்குப் பணம் கொடுப்பதை ஆதரிக்கவில்லை. வ.உ.சி. பெரும்பாலான வழக்குகளில் வெற்றி பெற்றார். சில வழக்குகளில் இரு கட்சியினரும் சமாதானமாகப் போகும்படி செய்தார். அவருடைய தகுதி, திறமை, நேர்மை இவற்றிற்காக நீதிபதிகளின் மதிப்புக்குரியவராக இருந்தார்.

குற்றவியல் வழக்குகள் காவல் துறையினரால் தொடரப்படும். தவறாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் வ.உ.சி. யினால் விடுதலை செய்யப்பட்டனர். அதனால் அவர் காவல் துறையினரின் கோபத்திற்கு ஆளானார். வ.உ.சி.யின் தந்தை இந்த சூழ்நிலையை விரும்பவில்லை. அதனால் அவர் வ.உ.சி.யை 1900-ஆம் ஆண்டு தூத்துக்குடிக்குச் சென்று பணியாற்றும்படி அனுப்பி வைத்தார். வ.உ.சி. தூத்துக்குடியிலும் புகழ் பெற்ற வழக்கறிஞராக திகழ்ந்தார்.

ஒரு முறை வ.உ.சி. சென்னைக்குச் சென்ற போது சுவாமி விவேகானந்தர் மடத்தைச் சேர்ந்த துறவியான ராமகிருஷ்ணர் என்பவரைச் சந்தித்தார். அவர் வ.உ.சி.யிடம் நாட்டுக்காக ஏதாவது செய்யும்படி கூறினார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும் போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார். பாரதியார் ஒரு பெரும் புலவர். வ.உ.சி.யும் பாரதியாரும் அருகருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரின் தந்தையரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சந்தித்துக் கொண்ட பொழுது இருவரின் கருத்துகளும் ஒன்றாக இருப்பதை அறிந்தனர். இருவரும் எப்பொழுதும் நாட்டைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். பாரதியார் தனது உணர்ச்சி மிக்க பாடல்களால் நாட்டு மக்களைத் தட்டி எழுப்பினார். வ.உ.சி.யும் பாரதியாரும் நெருங்கிய நண்பர்களானர்கள்.

வ.உ.சி. தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கினார். அவர் ஆளுமை மிக்க மனிதர். அவர் "சுதேசி பிரச்சார சபை", "தர்ம சங்க நெசவு சாலை", "தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்", "சுதேசிய பண்டக சாலை", "வேளாண் சங்கம்" போன்றவற்றை ஏற்படுத்தினார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி", இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார்.

வ.உ.சி.,1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்). நிறுவனத்தின் மூலதனம் ரூ.10,00,000. ரூ.25 மதிப்புள்ள 40,000 பங்குகள் கொண்டது. ஆசியர்கள் அனைவரும் இதில் பங்குதாரர்கள் ஆகலாம். 4 வக்கீல்களும் 13 வங்கியரும் இருந்தனர். கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தவுடன் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் வ.உ.சி. இறங்கினார். ஜனாப் ஹாஜி முஹம்மது பக்கீர் சேட் 8000 பங்குகளுக்காக ரூ. 2,00,000 கொடுத்தார். ஆனால் நிறுவனத்திற்குச் சொந்தமாகக் கப்பல் இல்லை. "ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி"யிடமிருந்து கப்பல்களை வாடகைக்கு எடுக்க வேண்டியதாக இருந்தது. "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி" இந்தப் புதிய போட்டியை விரும்பாததால் அது "ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி" யை அச்சுறுத்தியது. அதனால் இது கப்பல்களை வாடகைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்திய கப்பல் நிறுவனத்திற்கென்று சொந்தமாகக் கப்பல் இல்லாததால் இந்திய வணிகர்கள் திகைத்துப் போயினர். ஆனால் வ.உ.சி. அஞ்சவில்லை. உடனடியாக கொழும்பு சென்று ஒரு கப்பல் வாடகைக்கு எடுத்து வந்து கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடக்கும்படி செய்தார்.

ஆனால் சொந்த கப்பல்கள் இல்லாமல் கப்பல் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த இயலாது என்பதை அறிந்து கொண்டார். அதனால் சொந்த கப்பல்கள் வாங்க முடிவு செய்தார். தூத்துக்குடி வணிகர்கள் உதவி செய்தனர். ஆனால் அது போதுமானதாக இல்லை. அதனால் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்றார். அங்குள்ள வணிகர்கள் அவரது பேச்சாற்றலால் கவரப்பட்டு கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள். வ.உ.சி. வட இந்தியாவிற்குக் கிளம்பும் போது "திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்", என்று சூளுரைத்துச் சென்றார். வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றினார். "எஸ்.எஸ். காலியோ" என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். கப்பல் 42 முதல் வகுப்பு இருக்கைகள், 24 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் மற்றும் 1300 சாதாரண இருக்கைகள் இவற்றைக் கொண்டிருந்தது. மேலும் 4000 சாக்கு மூட்டைகளை ஏற்றிச் செல்ல இயலும். திரு. எஸ் வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று "எஸ். எஸ். லாவோ" என்ற கப்பலை வாங்கி வந்தார். நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட இரு படகுகளும் வாங்கினர்.

இந்திய செய்தித் தாள்கள் அனைத்தும் இது குறித்து கட்டுரைகள் வெளியிட்டு வ.உ.சி. அவர்களைப் பாராட்டின. கப்பல் நிறுவனம் மெதுவாக வளர்ந்தது. மக்கள் சுதேசிக் கப்பலிலேயே பயணம் செய்தனர். வணிகர்கள் தங்கள் சரக்குகளை சுதேசிக் கப்பலிலேயே அனுப்பினர். பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. கடைசியில் இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்தின் தந்திரம் குறித்து வ.உ.சி. மக்களிடையே விளக்கினார். சுதேசி கப்பல் நிறுவனத்தை அழித்த பிறகு அவர்கள் தங்கள் கட்டணத்தை விருப்பம் போல் ஏற்றிவிடுவார்கள். அப்போது இந்தியர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போகும். அதனால் இந்தியர்கள் இலவசப் பயணத்தை மறுத்துவிட்டனர். உடனே வ.உ.சி.க்கு கையூட்டு கொடுக்க முயற்சி செய்தனர். சுதேசி கப்பல் நிறுவனத்தை விட்டு விலகினால் ரூ.1,00,000 கொடுப்பதாகக் கூறினர். வ.உ.சி. மறுத்துவிட்டார்.

ஆங்கில அரசு பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்திற்கு பலவிதங்களிலும் உதவி செய்தது. அது ஆங்கிலேயர்களின் கப்பலில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசு அதிகாரிகளுக்கு இரகசிய கடிதம் அனுப்பியது. சுங்க அதிகாரிகள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் பல விதமான தொல்லைகள் ஏற்படுத்தினர். இந்திய கப்பல் ஆங்கிலேயர்களின் கப்பலுடன் மோத வந்தது என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. வ.உ.சி. அது பொய்க் குற்றச்சாட்டு என்று நிரூபித்து இந்திய கப்பல் செல்ல அனுமதி பெற்றார். ஆனால் சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை அவர்களால் தடுக்க இயலவில்லை.

சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றியுடன் வ.உ.சி. திருப்தியடையவில்லை. அவர் மக்களிடையே விடுதலைப் போராட்ட உணர்வைத் தூண்ட நினைத்தார். இந்திய தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட வ.உ.சி.க்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. லார்டு. ராய் இந்தியாவில் இருந்த ஆங்கில அரசு அதிகாரி. அவர் 1905-ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஆங்கிலேய வணிகப் பெருமக்களின் கூட்டத்தில்,"இந்தியாவில் முதலீடு செய்யலாம். ஏனெனில் அங்கே தொழிற்சங்கம் இல்லை. அதனால் தொழிலாளர்களின் கூலி மிகக் குறைவு" என்று பேசினார். இந்த வகையான பேச்சிலிருந்து இந்தியாவில் அந்த கால கட்டத்தில் தொழிலாளர்களின் நிலையை நாம் அறியலாம். தூத்துக்குடியில் கோரல் நூற்பாலை என்று ஒரு தொழிற்சாலை இருந்தது. அங்கே தொழிலாளர்களுக்குக் கூலி மிகக் குறைவு.ஆனால் அவர்கள் நாள் முழுவதும் இடைவேளை இல்லாமல் பன்னிரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக கடினமாக உழைக்கவேண்டும். அவர்களுக்கு விடுமுறை கிடையாது. தொழிலாளர்கள் ஏதேனும் தவறு செய்தால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

தொழிலாளர்களின் அவல நிலையைப் பார்த்து வ.உ.சி. மிகவும் வருந்தினார். நூற்பாலை தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்யும்படி தூண்டினார். வ.உ.சி.யும் சுப்ரமணிய சிவாவும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்தனர். 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள் வ.உ.சி. தூத்துக்குடியில் சொற்பொழிவு ஆற்றினார். 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாள் நூற்பாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வ.உ.சி.யும் சுப்ரமணிய சிவாவும் வேலை நிறுத்தத்திற்குத் தலைமை தாங்கினர். அவர்கள் கோரிக்கைகள் பின்வருமாறு: 1. கூலி உயர்வு 2. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை 3. மற்ற விடுமுறை நாட்கள்

மாவட்ட ஆட்சியர் திருநெல்வேலியில் இருந்து இரண்டு அதிகாரிகளையும் சிவகாசியில் இருந்து 30 காவலர்களையும் தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தார். குற்றவியல் நடுவர் பொதுக்கூட்டங்களைத் தடை செய்தார். மறுநாள் மாவட்ட ஆட்சியர் திரு.விஞ்ச் தூத்துக்குடிக்கு வந்தார். தன்னைச் சந்திக்கும்படி வ.உ.சி.க்குச் சொல்லி அனுப்பினார். அந்த சந்திப்புக்குப் பிறகு வ.உ.சி. தொழிலாளர்களிடையே பேசினார். இந்தப் பொதுக்கூட்டம் ஒரு தனியாரின் இடத்தில் நடைபெற்றது. நூற்பாலை நிருவாகத்தின் கொடூரமான நடவடிக்கைகளே இந்த வேலை நிறுத்தத்திற்குக் காரணம் என்று மாவட்ட ஆட்சியரிடம் தான் கூறியதாகத் தொழிலாளர்களிடம் கூறினார். வ.உ.சி. தொழிலாளர்களுக்குப் பொதுமக்களின் துணையுடனும் தனது சொந்த சொத்துக்களில் மூலமாகவும் உதவினார். இதன் காரணமாக அவர் தனது சொந்த சொத்தில் பெரும் பகுதியை இழந்தார்.

நூற்பாலை நிருவாகம், தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்து விரைவில் வேலைக்குத் திரும்பிவிடுவார்கள் என்று நினைத்தது. ஆங்கில அரசு நூற்பாலை நிருவாகத்திற்கு உறுதுணையாக இருந்தது. ஆனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தது. நூற்பாலை நிருவாகத்தின் பாடு திண்டாட்டமாகிவிட்டது. சிலரை அச்சுறுத்தியது. சிலரை வேலையைவிட்டு நீக்கியது. சிலருக்கு ஆசை காட்டியது. எல்லாம் வீணானது. வேலை நிறுத்தம் இந்திய நாட்டில் உள்ள அனைவரின் கவனத்தை ஈர்த்தது. வ.உ.சி. பொதுமக்களிடையே தினமும் தொழிலாளர்களின் நிலை குறித்துப் பேசினார். அதனால் பொதுமக்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளித்தனர். வேலை நிறுத்தம் மேலும் மேலும் தீவிரமடைந்தது.மாவட்ட துணை ஆட்சியர் வ.உ.சி.யை அச்சுறுத்தினார். ஆனால் வ.உ.சி. அந்த அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்தினார். தொழிலாளர்கள் தினமும் ஊர்வலம் சென்றனர். வணிகர்கள் ஆங்கிலயர்களுக்குப் பொருட்களை விற்க மறுத்தனர். அதனால் அவர்கள் இலங்கையிலிருந்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். அவர்கள் தூத்துக்குடியில் தங்க அஞ்சி நடுக்கடலில் கப்பலில் தங்கினார்கள்.

இறுதியில் நூற்பாலை நிருவாகம் அவர்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தது. 1908-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் நாள் திரு. சுப்ரமண்ய பிள்ளை, நூற்பாலை நிருவாக அலுவலர், வ.உ.சி.யைச் சந்தித்தார். வ.உ.சி.தொழிலாளர்கள் 50 பேருடன் நூற்பாலை நிருவாக இயக்குனரைச் சந்தித்தார். அவர்கள் கூலியை உயர்த்தவும் வேலை நேரத்தைக் குறைக்கவும் ஞாயிற்றுக் கிழமையன்று வார விடுமுறை அளிக்கவும் சம்மதித்தனர். 9 நாள் வேலை நிறுத்தத்திற்குப் பிறகு தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர். வேலை நிறுத்தம் பெரும் வெற்றி பெற்றது. அது தொழிற்சங்கங்கள் இல்லாத ஒரு காலம். இந்தியாவில் முதல் தொழிற்சங்கமே 1920-ஆண்டுதான் தொடங்கப்பட்டது. சோவியத்புரட்சி 1917-ஆம் ஆண்டு நடைபெற்றது. வ.உ.சி. 1908-ஆம் ஆண்டே தொழிற்சங்கங்கள் இல்லாமல் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் பங்கு பெறச் செய்து அவர்களை வழி நடத்தி வேலை நிறுத்தத்தைப் பெரும் வெற்றி பெறச் செய்தார். வ.உ.சி. எல்லோருக்கும் முன்னோடியாக வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். இந்த வேலை நிறுத்தத்தின் பயனாக மற்ற ஆங்கில நிறுவனங்களின் தொழிலாளர்களும் பயன் பெற்றனர். அவர்கள் கூலியை அதிகரித்ததுடன் கொடூரமாக நடத்துவதையும் நிறுத்தினர். ஸ்ரீ அரவிந்தர் இந்த வேலை நிறுத்தம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது என்று பாராட்டி வந்தே மாதரம் என்ற இதழில் எழுதினார்.

சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சி ஆங்கிலயர்களை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. நூற்பாலை வேலை நிறுத்தத்தின் வெற்றி அவர்களை அச்சுறுத்தியது. இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று உணர்ந்தார்கள். அவர்கள் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்கள்.

வ.உ.சி. வெளி நாட்டுப் பொருட்களைப் புறக்கணித்தார்.மக்களும் புறக்கணித்தார்கள்.அந்த காலகட்டத்தில் வின்ச் தான் மாவட்ட ஆட்சியர். ஆனால் மக்கள் வ.உ.சி. யின் சொற்களைக் கட்டளையாக ஏற்றனர். மக்கள் வ.உ.சி.யை அவ்வளவு மதித்தனர். அவருக்குப் பின்னால் தொழிலாளர்கள் அனைவரும் இருந்தனர்.சுதந்திரப் போராட்ட உணர்ச்சி மக்களிடையே கொழுந்துவிட்டு எரிந்தது. வ.உ.சி. சொல்லும் எதையும் செய்ய மக்கள் தயாராக இருந்தார்கள். வ.உ.சி.காலத்திற்கு முன்பு படித்தவர்கள் மட்டுமே சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் தொழிலாளர்கள், உழைப்பாளிகள் என அனைவரையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடச் செய்த பெருமை வ.உ.சி.க்கே உரியது. அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட்டனர். அவர்கள் ஆங்கிலேயர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் வேலை பார்க்க மறுத்துவிட்டனர்.ஆங்கிலேயர்கள் மிகுந்த சிரமப்பட்டார்கள். வ.உ.சி. யின் செல்வாக்கு அளப்பரியது. .

வ.உ.சி. சுதேசி கப்பல் நிறுவனத்தை ஆரம்பித்தது பணத்துக்காகவோ புகழுக்காகவோ அல்ல. ஆனால் பங்குதாரர்கள் பலர் பணம் ஈட்டவே விரும்பினர். அவர்கள் வ.உ.சி. சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விரும்பவில்லை. ஆனால் வ.உ.சி. அவர்கள் கருத்தை ஏற்க மறுத்துவிட்டார்.

வங்கத்தின் சுதந்திரப் போராட்டத் தலைவரான பிபின் சந்திர பால் 1908-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாள் விடுதலையாக இருந்தார். வ.உ.சி. அதை ஒரு விழாவாக கொண்டாட எண்ணினார்.அந்த விழா நடந்தால் வ.உ.சி. மக்களிடையே பேசுவார். அதை ஆங்கில அரசு விரும்பவில்லை. அதனால் வ.உ.சி.யைக் கைது செய்ய முடிவு செய்தனர். ஆனால் அவரைத் தூத்துக்குடியில் கைது செய்தால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படும். அதனால் வ.உ.சி.யைத் திருநெல்வேலி வந்து தன்னைச் சந்திக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஒரு ஆணை அனுப்பினார். வ.உ.சி. அந்த ஆணையை ஏற்றுத் திருநெல்வேலி செல்லத் தயாரானார். அவர் கைது செய்யப்படுவார் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் எல்லோரும் அவரைச் செல்ல வேண்டாம் என்று தடுத்தனர். ஆனால் வ.உ.சி. அனைவரையும் சமாதானப்படுத்தி திருநெல்வேலிக்கு அவரது ஆப்த நண்பர் சுப்ரமண்ய சிவாவுடன் சென்றார்.

சுப்பிரமணிய சிவா

சுப்பிரமணிய சிவா, மதுரைக்கு அருகில் உள்ள வத்தலகுண்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். அவர் அந்த கிராமத் தலைவரின் மகன். அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிக்க புலமை வாய்ந்தவர். அவர் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே தாய் நாட்டின் சுதந்திரம் குறித்துப் பேசுவார். அவர் 1907-ஆண்டு தூத்துக்குடிக்கு வந்து சொற்பொழிவாற்றினார். வ.உ.சி.கடற்கரையில் நடந்த அந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரது பேச்சாற்றலும் தாய் நாட்டுப் பற்றும் வ.உ.சி.யை மிகவும் கவர்ந்தது. அவர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். வ.உ.சி.யும் சிவாவும் மக்களிடையே சுதந்திரப் போராட்ட உணர்ச்சியைத் தூண்டினர். ஆங்கில அரசு அவர்களது நடவடிக்கைகளை நிறுத்த நினைத்தது.

இருவரும் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க சென்ற போது இருவரையும் திருநெல்வேலியைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்றும் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்றும் கூறினார். வ.உ.சி. அவரது நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டார். அதனால் வ.உ.சி.யும் சிவாவும் 1908-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் நாள் கைது செய்யப்பட்டனர்.

வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் கொந்தளித்தனர்.திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பள்ளிகளும் கல்லூரிகளும் சேதப்படுத்தப்பட்டன.மண்ணெண்ணெய் கிடங்கு தீ வைக்கப்பட்டது. இரண்டு நாட்கள் இந்த நிலை நீடித்தது. அஞ்சல் நிலையமும் தீ வைக்கப்பட்டது.காவல் நிலையமும் நகராட்சி அலுவலகமும் தாக்கப்பட்டது. தூத்துக்குடியில் வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் இரவு முழுவதும் தூங்கவில்லை. கடைகள் மூடப்பட்டன. கோரல் நூற்பாலை மற்றும் "பெஸ்ட் அண்ட் க்ம்பெனி" தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். நகராட்சி ஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி ஓட்டுபவர்கள் போன்றோரும் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். இதுவே இந்தியாவில் முதல் அரசியல் வேலை நிறுத்தம். 1908-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் நாள் முதல் மார்ச் 19-ஆம் நாள் வரை நடைபெற்றது. பொதுமக்களும் அதில் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன. காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள்.

வ.உ.சி. சிறையிலிருந்தபோது அவரது நண்பர்கள் அவரை ஜாமீனில் வெளிவரும்படிக் கேட்டுக் கொண்டனர். சிவாவும் பத்மநாப ஐயங்காரும் அவருடன் சிறையில் இருந்தனர். அவர் தனது நண்பர்களை விட்டுவிட்டுத் தனியாக வெளி வர விரும்பவில்லை. இந்நிகழ்ச்சியில் இருந்து அவரது தைரியத்தையும் நேர்மையையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

காவல் துறையினர் வ.உ.சி.க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

1. வ.உ.சி. ஆங்கில அரசுக்கு எதிராக சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.(பிரிவு 123-அ)
2. வ.உ.சி. சுப்ரமண்ய சிவாவிற்கு அடைக்கலம் கொடுத்தார்.(பிரிவு 153-அ)
வழக்கு நேர்மையாக நடைபெறாததால் வ.உ.சி. அதில் பங்கேற்க மறுத்துவிட்டார். இரண்டு மாதங்கள் நடந்த இந்த வழக்கு விவரங்களை இந்தியா முழுவதும் மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்தனர்.

நீதிபதி திரு. பின்ஹே தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பு விவரம் பின்வரமாறு:

1. ஆங்கில அரசுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும்படி மக்களைத் தூண்டிவிட்டதற்காக 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனை.
சிவாவுக்கு ஆதரவு அளித்ததற்காக மற்றுமொரு 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனை.
2. சிவாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை.
40 ஆண்டு தீவாந்திரத் தண்டனை! யாருக்கும் கொடுக்கப்படாத கொடுமையான தண்டனை. ஆங்கில அரசுக்கு வ.உ.சி.யிடத்தில் அளவு கடந்த பயம். இந்தக் கொடுமையான தண்டனைக்கு அந்த பயமே காரணம். அவரைச் சிறையில் அடைத்தால்தான் அவர்களால் தொடர்ந்து இந்தியாவில் ஆட்சி செய்ய முடியும். வ.உ.சி.க்கு அப்பொழுது 36 வயது தான்.

இந்தக் கொடிய தீர்ப்பைக் கேட்டு இந்திய மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். வங்காளி, "அமிர்த பஜார்", " "சுதேசமித்ரன்", "இந்தியா", "ஸ்வராஜ்யா" மற்றும் பல செய்தித்தாள்கள் இத்தீர்ப்பைக் கண்டித்தனர். ஆங்கில இதழான "ஸ்டேட்ஸ் மேன்" இத்தீர்ப்பு நியாயமற்றது என்றும் வ.உ.சி.யின் தியாகம் போற்றத்தக்கது என்றும் குறிப்பிட்டது. ஆங்கில அரசை ஆதரிப்பவர்கள் கூட இந்தக் கொடிய தண்டனையை ஏற்றுக் கொள்ளவில்லை. லார்டு மார்லி, இந்தியாவுக்கான ஆங்கில அமைச்சர், இக்குரூரமான தண்டனையை ஏற்றுக் கொள்ள இயலாது என லார்டு மன்றோவுக்கு எழுதினார். அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீடு செய்ததில் 10 ஆண்டு தீவாந்திரத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார் . அவரது நண்பர்கள் லண்டனில் உள்ள மன்னர் அவையில்(பிரிவியூ கௌன்சிலில்) முறையீடு செய்ததில் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையாகக் குறைந்தது.

வ.உ.சி. முதலில் கோயம்புத்தூர் சிறையிலும் பின்னர் கண்ணனூர் சிறையிலும் அடைக்கப்பட்டார். இப்பொழுதெல்லாம் அரசியல் கைதிகள் நல்ல முறையில் நடத்தப்படுகின்றனர். அக்காலத்தில் அவர்கள் மற்ற ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளைப் போலவே நடத்தப்பட்டனர். கடுமையான வேலைகள் செய்ய வேண்டும். வ.உ.சி. செல்வந்தர். நல்ல ஆரோக்கியமான சுவையான உணவு உண்ணும் வழக்கம் உடையவர். ஆனால் சிறையில் கல்லும் மண்ணும் இருக்கும் கூழைக் குடிக்க வேண்டியிருந்தது. சிறை ஆடைகள் முரடானவை. தலையை மொட்டையடித்து கை, கால்களில் விலங்கிட்டிருப்பர்.

செக்கிழுத்த செம்மல்

சிறையில் வ.உ.சி. கடுமையான வேலைகளைச் செய்தார். சணல் நூற்றார். அப்பொழுது அவரது உள்ளங்கைகளில் இருந்து ரத்தம் கசிந்தது. கல் உடைத்தார். மாடுகள் இழுக்கும் செக்கினை இழுத்தார். அந்தப் புகழ் பெற்ற வழக்கறிஞர் ஒரு மாடு போல உழைத்தார். அவரது எடை மிகவும் குறைந்தது. மருத்துவர் சிறையதிகாரியை எச்சரித்தார். உடனே அரிசி உணவு வழங்கப்பட்டது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் அவர் சொந்த உணவை உண்ணலாம் என்று கூறியது.
.
வ. உ. சி. இழுத்த செக்கு சென்னை காந்தி மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் வடுகுராமன் என்ற கைதி வ.உ.சி.யை வணங்கினார். அதைப் பார்த்த சிறை அதிகாரி கோபமடைந்து வடுகுராமனிடம் இனிமேல் வ.உ.சி.யை வணங்கினால் செருப்பால் அடி கிடைக்கும் என்று கூறினார். வடுகுராமன் சிறை அதிகாரியைக் கொலை செய்ய முடிவு செய்தான். வ.உ.சி. கொலை செய்வதைத் தடுத்துவிட்டார். ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம் சிறைக் கைதிகள் கலவரம் செய்தனர். சிறை அதிகாரி கடுமையாகத் தாக்கப்பட்டார். சிறைக் கைதிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைத்தது. வ.உ.சி. அவரது நண்பர்களுக்கு எழுதி மேல்முறையீடு செய்து தண்டனக் காலத்தைக் குறைத்தார். வ.உ.சி. கைதிகள் பக்கம் சாட்சி கூறினார். அவர், சிறை அதிகாரி மிக மோசமான உணவை வழங்கியும் கடுமையாக அடித்தும் கைதிகளைக் கொடுமைப்படுத்தியும் கொடூரமாக நடந்து கொண்டதே கலவரத்திற்கான காரணம் என்று கூறினார்.

சிறை இயக்குநர் ஒரு நாள் வ.உ.சி.யிடம் சிறை அலுவலராக பணியேற்றுக் கொண்டால் தண்டனைக் காலம் குறையும் என்றும் இன்னும் பல நன்மைகள் கிட்டும் என்றும் கூறினார். வ.உ.சி. அப்பதவியை மறுத்துவிட்டார். வ.உ.சி. கேரளாவில் உள்ள கண்ணனூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே சிறைக்கைதிகளுக்கு ஒரு வித்தியாசமான தண்டனை கொடுக்கப்பட்டது. அவர்கள் கம்பளியால் போர்த்தப்பட்டு அடிக்கப்பட்டார்கள். வ.உ.சி.யை அச்சுறுத்த சிறை அதிகாரி ஒரு கொடூரமான சிறைக்கைதியை வ.உ.சி.யின் அறைக்கு வெளியே தூங்கும்படி செய்தார். வழக்கமாக அவன்தான் எல்லோரையும் அடிப்பான். ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் அவன் வ.உ.சி.யின் சீடனாகிவிட்டான்.

ஆஷ் கொலை

ஆஷ் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர். அவர் நூற்பாலை வேலை நிறுத்தத்தின் போதும் வ.உ.சி. கைது செய்யப்பட்ட போதும் ஏற்பட்ட கலவரத்தின் போது மக்களிடையே அரக்கத்தனமாக நடந்து கொண்டார். அவர் தூத்துக்குடி அருகில் உள்ள மணியாச்சி ரயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சி என்ற புரட்சி எண்ணம் கொண்ட இளைஞர் அவரைச் சுட்டுவிட்டுத் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்தார்.வ.உ.சி. இவ்வளவு கடுமையான தண்டனை பெற்றதற்குக் காரணம் ஆஷ் என்பதால் வாஞ்சி அவரைச் சுட்டார். வ.உ.சி. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இளைஞர்கள் இவ்வாறு உயிர்த் தியாகம் செய்வது அவரை வருத்தத்தில் ஆழ்த்தியது. மேலும் அவர் ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிரானவரே தவிர ஆங்கிலேயர்களுக்கு எதிரானவர் அல்ல.

வ.உ.சி. சிறையிலிருந்த போது சுதேசி கப்பல் நிறுவனம் மூழ்கிப் போனது. அவரில்லாமல் மற்றவர்களால் நிறுவனத்தை நடத்த இயலவில்லை. அவர்கள் கப்பலை விற்றுவிட்டனர். அதுவும் "எஸ்.எஸ்.காலியோ" என்ற கப்பலை ஆங்கில கப்பல் நிறுவனத்திற்கே விற்றுவிட்டார்கள். அது வ.உ.சி.யை மிகவும் பாதித்தது. அந்தக் கப்பலை வாங்க வ.உ.சி.என்ன பாடுபட்டார்?

1912-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் வ.உ.சி. விடுதலை அடைந்தார். அப்பொழுது அரசியல் சூழ் நிலை முற்றிலும் மாறி இருந்தது. சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது கொள்கையைத் தொடர்ந்தால் அது சுதந்திரப் போராட்டத்திற்கு இடையூறாகிவிடும். ஒரு தனிக்கட்சி ஆரம்பிக்கும் அளவு செல்வாக்கும் புகழும் இருந்த போதும் அவர் அப்படிச் செய்யவில்லை. அதன் மூலம் அவரது நாட்டுப்பற்றையும் மேன்மையான குணத்தையும் அறிந்து கொள்ளலாம்

வ.உ.சி. விடுதலைக்குப் பின்னர் சென்னை, கோயம்பத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் வசித்தார்.
வ.உ.சி. விடுதலைக்குப் பின்னர் சென்னைக்குச் சென்றார். அவர் ஒரு மண்ணெண்ணைக் கடை ஆரம்பித்தார். ஆனால் ஒரு வணிகராக அவரால் வெற்றி பெற இயலவில்லை. அவர் அன்புள்ளமும் தாராள மனமும் கொண்டவர். அவரால் எப்படி வாணிகத்தில் வெற்றி பெற முடியும்? 1920-ஆம் ஆண்டு கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. வ.உ.சி.ஒரு பிரதிநிதியாக அதில் கலந்து கொண்டார். வ.உ.சி. லோக மான்ய பால கங்காதர திலகரின் சீடர். திலகர் செயல் வீரர். காந்திஜி மிதவாதி. வ.உ.சி.க்கு காந்திஜியின் வழிமுறைகளில் விருப்பமில்லை. வ.உ.சி. சிந்தித்தார். காந்திஜியின் வழிமுறைகளைப் பின்பற்றுவதா? மனசாட்சிப்படி நடப்பதா? வ.உ.சி. மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார். ஆனால் வ.உ.சி.யும் காந்திஜியும் ஒருவரை ஒருவர் மதித்தனர். காந்திஜி வ.உ.சி.யின் சுய நலமற்ற சேவையை அறிவார்.வ.உ.சி. காந்திஜியின் எளிமையும் தூய்மையும் மிக்க வாழ்க்கையை மதித்தார்.

வ.உ.சி. சென்னையில் தொழிற்சங்கங்கள் தொடங்கி அதற்காகத் தீவிரமாகப் பணியாற்றினார். வ.உ.சி.யின் பெரும்பான்மையான தமிழ் நூல்கள் அவர் சென்னையில் வசிக்கும் போதே வெளியாகின. வ.உ.சி. சிறை சென்றதால் வழக்கறிஞர் பணி செய்வதற்கான உரிமையை இழந்தார். அவரால் வழக்கறிஞராகப் பணியாற்ற இயலவில்லை. திலகர் மாதம் ரூ.50 அனுப்பி வைத்தார்.
கோயம்புத்தூரில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றார். அங்கே ஒரு வங்கி இயக்குனராகவும் பணியாற்றினார். இந்த வருமானம் அவருக்கு வாழ்க்கைக்குப் போதுமானதாக இல்லை. வ.உ.சி. தான் சிறையில் இருந்தாலும் அரசியல் கைதியாக மட்டுமே இருந்தமையால் வழக்கறிஞராகப் பணியாற்ற அனுமதிக்கும்படி அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். திரு. ஈ.எச். வாலஸ் 1908-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பணியாற்றியிருந்ததால் அவர் வ.உ.சி.யின் நேர்மையும் திறமையும் அறிந்திருந்தார். அதனால் அவர் அனுமதி அளித்தார். அவரது அச்செயலுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர் தனது கடைசி மகனுக்கு "வாலேஸ்வரன்" என்று பெயரிட்டார்.
கோயம்புத்தூரில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றார். அங்கே ஒரு வங்கி இயக்குனராகவும் பணியாற்றினார். இந்த வருமானம் அவருக்கு வாழ்க்கைக்குப் போதுமானதாக இல்லை. வ.உ.சி. தான் சிறையில் இருந்தாலும் அரசியல் கைதியாக மட்டுமே இருந்தமையால் வழக்கறிஞராகப் பணியாற்ற அனுமதிக்கும்படி அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். திரு. ஈ.எச். வாலஸ் 1908-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பணியாற்றியிருந்ததால் அவர் வ.உ.சி.யின் நேர்மையும் திறமையும் அறிந்திருந்தார். அதனால் அவர் அனுமதி அளித்தார். அவரது அச்செயலுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர் தனது கடைசி மகனுக்கு "வாலேஸ்வரன்" என்று பெயரிட்டார்.1932-ல் தூத்துக்குடி வந்தார். தமிழ் நூல்களை எழுதுவதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்து வந்தார். தமிழ் இலக்கியங்கள் குறித்து நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாக் கொண்டிருந்தார். வ.உ.சி. சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பினார்.இரண்டாம் உலகப் போர் மூண்டால் இந்தியா சுதந்திரம் பெறுவது உறுதி என்று அவர் கூறியிருந்தார்.அதே போல் இந்தியா இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் சுதந்திரம் பெற்றது. வ.உ.சி. 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் மறைந்தார்.
வ.உ.சி. இயற்றிய நான்கு நூல்களுமே கவிதைகளால் ஆனவைதான். அவை 1.மெய்யறம் 2.மெய்யறிவு 3.பாடல் திரட்டு 4.சுயசரிதை

ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளுக்கெல்லாம் அஞ்சாமல், அவர்களை எதிர்த்து சுதேசி கப்பல் நிறுவனத்தை நடத்தியவர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் தமது சொத்துக்களை எல்லாம் இழந்து வறுமையில் வாடியவர். அவரது நினைவைப் போற்றும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தின் பெயர் வ.உ.சி. துறைமுகம் என்று மாற்றப்பட்டது.

Wednesday, 4 September 2013

பள்ளிவாசல் காம்பவுண்ட் சுவரை உயர்த்தி கட்ட அனுமதி கோரி உள்ளிருப்பு போராட்டம்

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2013,04:35 IST

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் அருகிலுள்ள கழுநீர்குளம் கிராமத்தில் பள்ளிவாசல் காம்பவுண்ட் சுவரை உயர்த்திக் கட்ட அனுமதிக்கக் கோரி முஸ்லிம்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கழுநீர்குளத்தில் காட்டுபாவா ஜூம்மா ம‹தி உள்ளது. இதன் காம்பவுண்ட் சுவர் கட்டுவதில் முஸ்லிம் சமுதாயத்திற்கும், மற்றொரு பிரிவினருக்கும் நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் மீண்டும் காம்பவுண்ட் சுவரை உயர்த்திக் கட்ட முஸ்லிம்கள் முயற்சித்தனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் ‹ழ்நிலை நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். தென்காசி ஆர்.டி.ஓ., ரமேஷ் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. அதில் 2003ம் ஆண்டு கோர்ட் தீர்ப்பின்படி நடப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுவர் கட்டும் பணியைத் தொடர முஸ்லிம்கள் ஏற்பாடு செய்தனர். இதனை மற்ற பிரிவினர் தடுத்தனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். காம்பவுண்ட் சுவர் கட்டும் பணி நிறுத்தப்பட்டதால், முஸ்லிம் சமுதாயத்தினர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையில் தென்காசி ஆர்.டி.ஓ., ரமேஷ் தலைமையில் மீணடும் சமாதானக் கூட்டம் நடந்தது. இதில் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருப்பதால், தீர்ப்பு வரும் வரை சுவரை கட்ட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனை அனைவரும் ஏற்றுக் கொள்ளாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மேலும் பிரச்னை ஏற்படாமலிருக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆலங்குளம் டி.எஸ்.பி., லயோலா இக்னேசியஸ், தாசில்தார் ரதி லெட்சுமி மற்றும் அதிகாரிகள் கழுநீர்குளத்தில் முகாமிட்டுள்ளனர்.

Monday, 2 September 2013

சிவபுராணத்தின் பொருள் / விளக்கம்

நமச்சிவாய வாழ்க – திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க;

நாதன் தாள் வாழ்க – திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க;
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க -இமைக்கும் நேரமுங் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க;
கோகழி ஆண்ட குரு மணிதன் தாள் வாழ்க – திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னையாட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க;
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க – ஆகம வடிவாகி நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க;
வேதத்தில் பொதுவாக விளங்குதல் போல அல்லாமல், ஆகமத்தில் சிறப்பாக இறைவன் விளங்குதலால், “ஆகமமாகி நின்றண்ணிப்பான்” என்றார். ஆகமங்கள் காமியம் முதல் வாதுளம் ஈறாக உள்ள இருபத்தெட்டு.
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க – ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க.
“ஏகன் அநேகன்” என்றமையால், இறைவன் தன்மையால் ஒரு பொருளாகவும், உயிர்களோடு கலந்திருத்தலால் பல பொருளாயும் இருக்கிறான் என்ற உண்மையும் கிடைக்கிறது.


வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க – மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி மேம்படுக;
மன ஓட்டத்தைத் தவிர்ப்பவனும், பிறவித் துன்பத்தை நீக்குபவனும் இறைவனே என்பது, “வேகங் கெடுத்தாண்ட வேந்தன்”, “பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்” என்பவற்றால் விளங்கும். பிஞ்ஞகன் – தலைக்கோலம் உடையவன்; பிறை, கங்கை, அரவம்முதலியன தலைக்கோலங்கள்.
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க – பிறவித் தளையை அறுக்கிற இறைவனது வீரக்கழலணிந்த திருவடிகள் மேம்படுக;
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க – தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர் போலும் திருவடிகள் மேம்படுக;
இறைவன் தன்னை நினையாதவரைத் தனக்கு வேறானவராகவே வைத்துச் சிறிதும் விளங்கித் தோன்றாதிருத்தலின், “புறத்தார்க்குச் சேயோன்” என்றார்.
கரம் குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க – கை கூம்பப்பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் மேம்படுக;
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க – கைகள் தலைமேல் கூம்பப்பெற்றவரை உயரப் பண்ணுகிற சிறப்புடையவனது திருவடி மேம்படுக.
இறைவன் விரும்பியிருக்குமிடங்கள் இரண்டு. ஒன்று, நெஞ்சத்தாமரை; மற்றொன்று, துவாதசாந்தப் பெருவெளி; அஃதாவது,தலைக்குப் பன்னிரண்டு அங்குலங்களுக்குமேலுள்ள இடம். இவ்விரண்டு இடங்களிலும் இறைவனை நினைத்து வழிபட வேண்டும் என்பதைக் குறிப்பிட, “கரங்குவிவார், சிரங்குவிவார்” என்று கூறினார்


ஈசன் அடி போற்றி – ஈசனது திருவடிக்கு வணக்கம்,
எந்தை அடி போற்றி – எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம்,
தேசன் அடி போற்றி – ஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம்; சிவன் சேவடி போற்றி -சிவபிரானது திருவடிக்கு வணக்கம்;
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி – அடியாரது அன்பின்கண் நிலைத்து நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம்;
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி – நிலையாமையுடைய பிறவியை ஒழிக்கின்ற அரசனது திருவடிக்கு வணக்கம்;
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி – சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின்கண் எழுந்தருளிய நம்முடைய கடவுளது திருவடிக்கு வணக்கம்.
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி – வெறுக்காத இன்பத்தைக் கொடுக்கின்ற மலைபோலும் கருணையையுடைய வனுக்கு வணக்கம்.
ஈசன் என்றதனால் தன் வயத்தனாதலும், எந்தை என்றதனால் பேரருளுடையனாதலும், தேசன் என்றதனால் தூய உடம்பினனாதலும், சிவன் என்றதனால் இயற்கை உணர்வினனாதலும், நிமலன் என்றதனால் இயல்பாகவே பாசங்களின் நீங்கினவனாதலும், பிறப்பறுக்கும் மன்னன் என்றதனால் முடிவிலா ஆற்றலுடையனாதலும், தேவன் என்றதனால் முற்றுணர்புடையனாதலும், ஆராத இன்பம் அருளுமலை என்றதனால் வரம்பில் இன்பமுடையனாதலுமாகிய இறைவனது எட்டுக் குணங்களையும் காட்டினார். “எண் குணத்தான்தாள்” என்ற நாயனார் அருள் மொழிக்குப் பரிமேலழகர் உரையில்கூறப்பட்டுள்ள எண்குணங்களைக் காண்க


———————————————————————————————————————————-
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் – சிவபெருமானாகிய அவன் என் மனத்தில் நிலை பெற்றிருந்ததனால்,
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி – அவனுடைய திருவருளாலே அவனுடைய திருவடியை வணங்கி,
சிந்தை மகிழ – மனம் மகிழும்படியும்,
சிவபுராணந்தன்னை – சிவனது அநாதி முறைமையான பழமையை
முந்தை வினை முழுதும் ஓய – முன்னைய வினை முழுமையும் கெடவும், ,
யான் உரைப்பன் – யான் சொல்லுவேன்.
கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி – நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண் காட்ட அதனால் அவன் திரு முன்பு வந்து அடைந்து,
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி – நினைத்தற்குக் கூடாத அழகு வாய்ந்த அவனது திருவடியை வணங்கிய பின்,
——————————————————————————————————————————————
விண் நிறைந்தும் – வானமாகி நிறைந்தும்,
மண் நிறைந்தும் – மண்ணாகி நிறைந்தும்,
மிக்காய் – மேலானவனே,
விளங்கு ஒளியாய் – இயல்பாய் விளங்குகின்ற ஒளிப்பிழம்பாகி,
எண் இறந்து – மனத்தைக் கடந்து,
எல்லை இலாதானே – அளவின்றி நிற்பவனே,
நின்பெருஞ்சீர் – உன்னுடைய மிக்க சிறப்பை,
பொல்லா வினையேன் – கொடிய வினையையுடையவனாகிய யான்,
புகழும் ஆறு ஒன்று அறியேன் – புகழுகின்ற விதம் சிறிதும் அறிகிலேன்.
இறைவன் ஐம்பெரும்பூதங்களில் கலந்தும் அவற்றுக்கு அப்பாலாயும் இருக்கிறான் என்பதை விளக்க, “விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய்” என்றார். “உலகெலா மாகி வேறாய் உடனுமா யொளியாய்” என்ற சித்தியார் திருவாக்கும் இதனையே வலியுறுத்துகிறது. இறைவனது பெருமையைக் காட்டித் தன் சிறுமையைக் காட்ட, ‘பொல்லா வினையேன்’என்றார்.


புல் ஆகி – புல்லாகியும்,
பூடு ஆய் – பூண்டாகியும்,
புழு ஆய் – புழுவாகியும்,
மரம் ஆகி – மரமாகியும்,
பல்விருகமாகி – பல மிருகங்களாகியும்,
பறவை ஆய் – பறவையாகியும்,
பாம்பு ஆகி – பாம்பாகியும்,
கல் ஆய் – கல்லாகியும்,
மனிதர் ஆய் – மனிதராகியும்,
பேய் ஆய் – பேயாகியும்,
கணங்கள் ஆய் – பூத கணங்களாகியும்,
வல் அசுரர் ஆகி – வலிய அசுரராகியும்,
முனிவர் ஆய் – முனிவராகியும்,
தேவர் ஆய் – தேவராகியும்,
சொல்லாநின்ற – இயங்குகின்ற,


இ – இந்த,
தாவர சங்கமத்துள் – அசையாப் பொருள் அசையும் பொருள் என்னும் இருவகைப் பொருள்களுள்ளே,
எல்லாப் பிறப்பும் பிறந்து – எல்லாப் பிறவிகளிலும் பிறந்து,
இளைத்தேன் – யான் மெலிவடைந்தேன்,
எம்பெருமான் – எம்பெருமானே,
மெய்யே – உண்மையாகவே,
உன் பொன் அடிகள் கண்டு – உன் அழகிய திருவடிகளைக் கண்டு,
இன்று – இப்பொழுது,
வீடு உற்றேன் – வீடு பெற்றேன்.

எல்லா உயிர்ப்பொருள்களையும் தாவரப் பொருள் (அசையாப்பொருள்), சங்கமப்பொருள் (அசையும் பொருள்) என்ற இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். தாவர வகையுள் கல், புல், பூடு, மரம் என்னும் நான்கும், சங்கம வகையுள் புழு, பாம்பு, பறவை,பல்விருகம், மனிதர், அசுரர், முனிவர், பேய், கணங்கள், தேவர் என்னும் பத்தும் அடங்கும். கல்லுக்கும் உயிர் உண்டு என்பதை இக்காலத்தாரும் உடன்படுவர். ‘மிருகம்’ என்பது ‘விருகம்’ என மருவியது. உயிர், தாவரப் பொருளாயிருந்து அறிவு வளர்ச்சிக்கேற்பச் சங்கமப் பொருள்களில் தேவர் ஈறாக உயர்ந்து பிறவி எடுக்கிறது.
இனி, உயிர்களுக்கு நால்வகைத் தோற்றமும் எழுவகைப் பிறப்பும் நூல்களிற்கூறப்படும். முட்டையிற்பிறப்பன,வேர்வையிற்பிறப்பன, வித்திற்பிறப்பன, கருவிற்பிறப்பன என்பன நான்கு வகைத் தோற்றமாம்; இவை முறையே அண்டசம்,சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் எனப்படும். தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர் என்பன எழுவகைப் பிறப்பாம்


உய்ய – நான் உய்யும்படி,
என் உள்ளத்துள் – என் மனத்தில்,
ஓங்காரம் ஆய் நின்ற – பிரணவ உருவாய் நின்ற,
மெய்யா – மெய்யனே,
விமலா – மாசற்றவனே,
விடைப்பாகா – இடபவாகனனே,
வேதங்கள் – மறைகள்,
ஐயா என – ஐயனே என்று துதிக்க,
ஓங்கி – உயர்ந்து,
ஆழ்ந்து அகன்ற – ஆழ்ந்து பரந்த,
நுண்ணியனே – நுண்பொருளானவனே.

ஓம் என்ற ஒலி அ, உ, ம் என்ற மூன்று ஒலிகளாய்ப் பிரியும். அம்மூன்றும் முறையே படைத்தல், காத்தல், அழித்தலாகிய முத்தொழில்களையும் குறிக்குமாதலின் அவையே உள்ளத்துள் நினைவின் தோற்றம், நிலை, இறுதியைச் செய்வனவாம்.அவ்வெழுத்துகளால் உண்டாகும் ஒலியை இறைவனது சத்தியே செலுத்தி நிற்றலால் “உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா,” என்றார்.
சைவ நூல்கள், இடப ஊர்தியை உயிர் என்று கூறும். ஆகவே, “விடைபாகா” என்றது, உயிருக்கு நாதன் என்றதாம்.
இறைவனது பெருமையை வேதங்களாலும் அறிய முடியாது.
“அல்ல யீதல்ல யீதென மறைகளு மன்மைச் சொல்லி னாற்றுதித் திளைக்குமிச் சுந்தரன்”
என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணத்தில், மறைகளாலும் இறைவனைக் காண முடியாத தன்மையைக் கூறுகிறார். வேதம் அறிவு நூல் ஆகையால், அறிவால் இறைவனைக் காண முடியாது; அருளால்தான் காணமுடியும் என்ற நயமும், “வேதங்கள் ஐயா என ஓங்கி” என்பதனால் கிடைக்கிறது.

இறைவன் மிக நுட்பமானவன்; அங்கும் இங்கும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன். நுண்பொருளுக்குத்தானே எங்கும் நிறைந்திருக்கும் தன்மையுண்டு. அதைக் குறிப்பிட “ஆழ்ந்தகன்ற நுண்ணியனே” என்றார். “அண்டங்க ளெல்லாம் அணுவாக அணுக்களெல்லாம் அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்” என இறைவனது நுண்மையைப் பரஞ்சோதி முனிவரும் கூறினார்.
வெய்யாய் – வெம்மையானவனே,
தணியாய் – தன்மையானவனே,
இயமானன் ஆம் விமலா – ஆன்மாவாய் நின்ற விமலனே,
பொய் ஆயின எல்லாம் – நிலையாத பொருள்கள் யாவும்,
போய் அகல – என்னை விட்டு ஒழிய,
வந்தருளி – குருவாய் எழுந்தருளி,
மெய்ஞ்ஞானம் ஆகி – மெய்யுணர்வு வடிவமாய்,



மிளிர்கின்ற – விளங்குகின்ற,
மெய்ச்சுடரே – உண்மை ஒளியே,
எஞ்ஞானம் இல்லாதேன் – எவ்வகையான அறிவும் இல்லாத எனக்கு,
இன்பப் பெருமானே – இன்பத்தைத் தந்த இறைவனே,
அஞ்ஞானந்தன்னை – அஞ்ஞானத்தின் வாதனையை,
அகல்விக்கும் – நீக்குகின்ற,
நல் அறிவே – நல்ல ஞானமயமானவனே.
இறைவன் தீயாய் நின்று வெம்மையைக் கொடுத்து, நீராய் நின்று குளிர்ச்சியைக் கொடுத்து, உயிருக்கு உயிராய் நின்று நல்வழியைக் காட்டி அருளைப் புரிகின்றான் என்பது,
“வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா”
என்றதனால் கிடைக்கிறது.


ஒளியைக் கண்டதும் இருள் மறைவது போல, மெய்ஞ்ஞானத்தால் அஞ்ஞானம் விலகுகிறது. இறைவன் குருவாகி வந்து அருள்வதனால் மெய்ஞ்ஞானம் கிடைக்கிறது என்பதை, “பொய்யாயினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே” என்றார். அஞ்ஞானம் வாதனையாய் நில்லாது நீக்கப்பட்டுப் பற்றற்றுக் கழிதலும் இறைவன் திருவருளாலேயே என்பதற்கு, “அஞ்ஞானம் தன்னை யகல்விக்கும் நல்லறிவே” என்றார்.
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் – தோற்றம் நிலை முடிவு என்பவை இல்லாதவனே,
அனைத்து உலகும் – எல்லா உலகங்களையும்,


ஆக்குவாய் – படைப்பாய்,
காப்பாய் – நிலைபெறுத்துவாய்,
அழிப்பாய் – ஒடுக்குவாய்,
அருள் தருவாய் – அருள் செய்வாய்,
போக்குவாய் – பிறவியிற்செலுத்துவாய்,
என்னை – அடியேனை,
புகுவிப்பாய் – புகப்பண்ணுவாய்,


நின் தொழும்பில் – உன் தொண்டில்,
நாற்றத்தின் நேரியாய் – பூவின் மணம்போல நுட்பமாய் இருப்பவனே,
சேயாய் – தொலைவில் இருப்பவனே,
நணியாய் – அண்மையில் இருப்பவனே,
மாற்றம் மனம் கழிய நின்ற – சொல்லும் மனமும் கடந்து நின்ற,
மறையோனே – வேதப் பொருளாய் உள்ளவனே,
கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தால் போல – கறந்த பாலும் சருக்கரையும் நெய்யும் கூடினது போல,
சிறந்த அடியார் சிந்தனையுள் – சிறந்த அன்பரது மனத்துள்,
தேன் ஊறி நின்று -இன்பம் மிகுந்து நின்று,
பிறந்த பிறப்பு அறுக்கும் – எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற,
எங்கள் பெருமான் – எம்பெருமானே.

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன இறைவனது ஐந்தொழில்களாம். அறியாமையில் கட்டுண்டிருக்கும் உயிருக்கு இறைவன் உடம்பைக் கொடுத்துப் படைக்கிறான்; எடுத்த உடம்பில் இருவினைகளை நுகரும்போது அறியாமையை நீக்கிக் காக்கிறான்; உயிர் அலுக்கா வண்ணம் ஓய்வு கொடுக்க அழிக்கிறான்; இவ்வாறு பிறப்பு இறப்புகளில் உழலும்படி அறிவை மறைக்கிறான்; குற்றம் நீங்கிப் பக்குவம் (மல பரிபாகம்) வந்த காலத்து அருளுகிறான் என்பவற்றை விளக்க, “ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்” என்றார். ஆக்குதல் முதலிய நான்கனைக் கூறவே,மறைத்தலும் கொள்ளப்படும்.
ஆக்கமும் கேடும் இல்லாதவன்தானே ஆக்கவும் அழிக்கவும் இயலும்? இதனால், “ஆக்கம் அளவிறுதி யில்லாய்” என்றார்.
இறைவன் உயிர்க்ளைப் பக்குவம் வருவதற்கு முன்பு பிறவியில் செலுத்தியும், பக்குவம் வந்த பின்பு தனது திருவடிக்கு ஆளாக்கியும் ஆண்டுகொள்வனாகலின், “போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்” என்றார்.
பூவில் மணம் போல ஆன்மாவில் இறைவன் கலந்திருக்கிறான். மலர் அரும்பாயிருக்கும்போது மணம் வீசாது; அலர்ந்த பின்னரே மணம் வீசும். அதைப் போல, ஆன்மா பக்குவப்பட்டது


நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் – ஐந்து நிறங்களை உடையவனே,
விண்ணோர்கள் ஏத்த – தேவர்கள் துதிக்க,
மறைந்து இருந்தாய் – அவர்களுக்கு ஒளிந்திருந்தவனே,
எம்பெருமான் – எம் பெருமானே,
வல்வினையேன் தன்னை – வலிய வினையையுடையவனாகிய என்னை,
மறைந்திட மூடிய – மறையும்படி மூடியுள்ள,
மாய இருள் – அறியாமையாகிய ஆணவம் கெடுதற்பொருட்டு,
அறம் பாவம் என்னும் – புண்ணிய பாவங்கள் என்கின்ற,
அருங்கயிற்றால் கட்டி – அறுத்தற்கு அருமையாகிய கயிற்றால் கட்டப்பெற்று,


புறம்தோல் போர்த்து – வெளியே தோலால் மூடி,
எங்கும் புழு அழுக்கு மூடி – எவ்விடத்தும் புழுக்கள் நௌ¤கின்ற அழுக்கை மறைத்து ஆக்கிய,
மலம் சோரும் – மலம் ஒழுகுகின்ற,
ஒன்பது வாயில் குடில் – ஒன்பது வாயிலையுடைய உடம்பாகிய குடிசை,
மலங்க – குலையும்படி,
புலன் ஐந்தும் – ஐம்புலன்களும்,
வஞ்சனையைச் செய்ய – வஞ்சனை பண்ணுதலால்,
விலங்கும் மனத்தால் -உன்னை விட்டு நீங்கும் மனத்தினாலே,
விமலா – மாசற்றவனே,
உனக்கு – உன்பொருட்டு,
கலந்த அன்பு ஆகி – பொருந்தின அன்பை உடையேனாய்,
கசிந்து உள் உருகும் – மனம் கசிந்து உருகுகின்ற,
நலந்தான் இலாத – நன்மையில்லாத,
சிறியேற்கு – சிறியேனுக்கு,
நல்கி – கருணை புரிந்து,


நிலத்தன்மேல் வந்தருளி – பூமியின்மேல் எழுந்தருளி,
நீள் கழல்கள் காட்டி – நீண்ட திருவடிகளைக் காட்டி,
நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு – நாயினும் கடையனாய்க் கிடந்த அடியேனுக்கு,
தாயின் சிறந்த – தாயினும் மேலாகிய,
தயா ஆன – அருள் வடிவான,
தத்துவனே – உண்மைப்பொருளே.


இறைவன் ஐம்பூதங்களிலும் நிறைந்திருக்கிறான். ஐந்து பூதங்களுக்கும் ஐந்து நிறங்கள் உண்டு. மண்ணுக்குப் பொன்மையும், நீருக்கு வெண்மையும், நெருப்புக்குச் செம்மையும், காற்றுக்குக் கருமையும், வானுக்குப் புகையையும்சாத்திரம் கூறும். “பொன்பார் புனல் வெண்மை பொங்கும் அனல் சிவப்பு வன்கால் கருமைவளர் வான்தூமம்” என்பது உண்மை விளக்கம். இந்த ஐந்து நிறங்களையுடைய ஐந்து பூதங்களிலும் இறைவன் இரண்டறக் கலந்திருத்தலால், “நிறங்கள் ஓர் ஐந்துடையாய்” என்றார். இனி, படைத்தல் முதலாக ஐந்து தொழில்கள் புரிவதற்கு ஐந்து வடிவங்கள் கொண்டிருக்கின்றான் என்றாலும் ஒன்று. ஐந்து வடிவங்களாவன, பிரமன், விட்டுணு, உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னும் வடிவங்கள்.

ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களுள் ஆணவம் நீங்குதற்பொருட்டே மாயையும் கன்மமும் சேர்க்கப்படுதலினால், “வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய இருள் மாய” என்றார். ‘அறம்பாவம்’ என்பன கன்ம மலம் எனவும், ‘ஒன்பது வாயிற்குடில்’ என்பது மாயா மலம் எனவும் அறிக. ‘இருளை, குடிலை’ என்பவற்றுள் உள்ள ஐகாரம் சாரியைகள்.
ஒன்பது வாயிலாவன – செவி இரண்டு, கண் இரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று, கருவாய் ஒன்று, எருவாய் ஒன்று. புலன்களால் பெறும் இன்பம் நிலையில்லாதது. முதலில் இன்பமாகத் தோன்றிப் பின் துன்பத்தைத் தருவது. அதனால், “குடில் மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய” என்றும், அவ்வஞ்சனைச் செயல்களால் இறைவனை மறத்தல் உண்டாவதால், ‘விலங்கும் மனத்தால் கசிந்து உள் உருகும் நலந்தான் இலாத சிறியேன்’ என்றும் கூறினார்.

“நாய், தலைவனை அறிவது : நன்றியுடையது. மனிதன் தலைவனையும் அறியமாட்டான்; நன்றியும் இல்லாதவன் ஆகையாலும், தாயன்பே சிறந்ததும், இழிவைக் கருதாததும் ஆகையாலும், “நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற்சிறந்த தயாவான தத்துவனே” என்றார்.

இவற்றால் தமக்கு இறைவன் திருப்பெருந்துறையில் குருவாய் வந்து அருளின திறத்தை வியந்து போற்றினார்.
மாசு அற்ற சோதி மலர்ந்த – களங்கமற்ற சோதியாகிய மரத்தில் பூத்த,
மலர்ச்சுடரே – பூப்போன்றே சுடரே,
தேசனே – குரு மூர்த்தியே,
தேனே – தேனே,
ஆர் அமுதே – அரிய அமுதே,
சிவபுரனே – சிவபுரத்தையுடையானே,


பாசம் ஆம் பற்று அறுத்து – பாசமாகிய தொடர்பையறுத்து,
பாரிக்கும் – காக்கின்ற,
ஆரியனே – ஆசிரியனே,
நேச அருள் புரிந்து – அன்போடு கூடிய அருளைச்செய்து,
நெஞ்சில் வஞ்சம் கெட – என் மனத்தில் உள்ள வஞ்சகம் அழிய,
பேராது நின்ற – பெயராமல் நின்ற,
பெருங்கருணை – பெருங்கருணையாகிய,
பேர் ஆறே – பெரிய நதியே,
ஆரா அமுதே – தெவிட்டாத அமிர்தமே,
அளவு இலாப் பெம்மானே – எல்லையில்லாத பெருமானே,
ஓராதார் உள்ளத்து – ஆராயாதார் மனத்தில்,
ஒளிக்கும் – மறைகின்ற,

ஒளியானே – ஒளியையுடையானே,
நீராய் உருக்கி – என் மனத்தை நீர் போல உருகப்பண்ணி,
என் ஆர் உயிராய் நின்றானே – என் அரிய உயிராய் நின்றவனே,
இன்பமும் துன்பமும் – சுகமும் துக்கமும்,
இல்லானே – இயற்கையில் இல்லாதவனே,
உள்ளானே – அன்பர்பொருட்டு அவற்றை உடையவனே,
அன்பருக்கு அன்பனே – அன்பர்களிடத்து அன்புள்ளவனே,
யாவையும் ஆய் – கலப்பினால் எல்லாப் பொருள்களும் ஆகி,
அல்லையும ஆம் – தன்மையினாலே அல்லாதவனும் ஆகின்ற,
சோதியனே – பேரொளியையுடையவனே,
துன் இருளே – நிறைந்த இருளானவனே,
தோன்றாப் பெருமையனே – புறத்தே வெளிப்படாத பெருமை உடையவனே,

ஆதியனே – முதல்வனே,
அந்தம் நடு ஆகி – முடிவும் நடுவும் ஆகி,
அல்லானே – அவையல்லாது இருப்பவனே,
ஈர்த்து என்னை ஆட்கொண்ட – என்னை இழுத்து ஆட்கொண்டருளின,
எந்தை பெருமானே – எமது தந்தையாகிய சிவபெருமானே,
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் – மிகுந்த உண்மை ஞானத்தால்,
கொண்டு உணர்வார்தம் கருத்தில் – சிந்தித்து அறிபவர் மனத்தினாலும்,

நோக்கு அரிய – எதிரிட்டுக் காண்பதற்கு அரிதாகிய,
நோக்கே – காட்சியே,
நுண்உணர்வே – இயற்கையில் நுட்பமாகிய அறிவே,
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் எம் காவலனே – எம்மைக் காப்பாற்றுகின்ற எம் அரசனே,
காண்பு அரிய பேர் ஒளியே – காண்பதற்கரிய பெரிய ஒளியே,
ஆற்று இன்ப வெள்ளமே – மகாநதி போன்ற இன்பப் பெருக்கே,
அத்தா – அப்பனே,
மிக்காய் – மேலோனே,

நின்ற தோற்றச்சுடர் ஒளியாய் – நிலைபெற்ற தோற்றத்தையுடைய விளங்குகின்ற ஒளியாகியும்,
சொல்லாத நுண் உணர்வு ஆய் – சொல்லப்படாத நுட்பமாகிய அறிவாகியும்,
மாற்றம் ஆம் வையகத்தின் – மாறுபடுதலையுடைய உலகத்தில்,
வெவ்வேறே வந்து – வெவ்வேறு பொருளாய்க் காணப்பட்டு வந்து,
அறிவு ஆம் – அறிவாய் விளங்கும், தேற்றனே – தௌ¤வானவனே,
தேற்றத் தௌ¤வே – தௌ¤வின் தௌ¤வே,
என் சிந்தனையுள் ஊற்று ஆன – என் மனத்துள் ஊற்றுப் போன்ற,
உண் ஆர் அமுதே – பருகுதற்கு அரிய அமிர்தமே,
உடையானே – தலைவனே.


சோதி – பேரொளி, அதிலிருந்து தோன்றுவது சுடர். சோதியை முழுதும் காண்பது அரிது. அதன்கண் உண்டாகும் ஒரு சிறு பகுதியாகிய சுடரைக் காண்பது எளிது. ஆகவே, எளிவந்து அருள் புரிந்த இறைவனைச் “சோதி மலர்ந்த சுடரே” என்றார்.இச்சுடர், மலர் போலக் குளிர்ச்சியைத் தருவதால், “மலர்ச்சுடர்” என்றார். பாசம் – அறியாமை.


அன்பர்கள் மனத்திலுள்ள வஞ்சனை கெட இறைவன் அதனை விட்டு நீங்காது பெருங்கருணை வெள்ளமாயும் அளவில்லாத இன்பப் பொருளாயும் அங்குத் தங்குகின்றான். அப்பொழுது அம்மனம் நீராய் உருகுகிறது. அவ்வாறு உருகிய உயிரைஇறைவன் தன்மயமாகச் செய்கின்றான். இக்கருத்துகளை விளக்கவே, “நெஞ்சில் வஞ்சங்கெட …………….. நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே” என்றான்.
இறைவன் தனக்கென ஓர் இன்பமும் துன்பமும் இல்லான்; அடியார்க்கு வரும் இன்பதுன்பங்களைத் தான் ஏற்றுக்கொள்வதனால் இன்பமும் துன்பமும் உள்ளான். அதனால், “இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே,” என்றார்.


இறைவன், எல்லாப் பொருளிலும் கலந்திருத்தலால் “யாவையுமாய்,” தன்மையால் வேறாதலால் “அல்லனுமாய்” இருக்கிறான். ஒளியும் இருளும் அவனன்றி இன்மையால், “சோதியனே, துன்னிருளே” என்றார். உலகத்திற்கு ஆதியும் நடுவும் முடிவுமாய் நிற்கின்ற இறைவன், தனக்கு அவற்றை உடையனல்லன் ஆதலின், “ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே” என்றார்.
இறைவனது உருவத்தைக் கண்ணால் காண முடியாது, அறிவினாலும் அறிய முடியாது என்பார், “நோக்கரிய நோக்கே,நுணுக்கரிய நுண்ணுணர்வே” என்றார். அனுபவத்தினால் காணக்கூடியவன் இறைவன் என்பதை உணர்த்த, “சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே” என்றார்.

உயிர்களின் மனப்பக்குவத்திற்கேற்ப இறைவன் அருளுவதை விளக்க, “மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே” என்றார்.
இவற்றால் இறைவன் பண்புகள் விளக்கப்பட்டன.
வேற்று விகார – வெவ்வேறு விகாரங்களையுடைய,
விடக்கு உடம்பின் உள் கிடப்ப ஆற்றேன் – ஊனாலாகிய உடம்பினுள்ளே தங்கிக் கிடக்கப் பொறேன்,
எம் ஐயா – எம் ஐயனே,
அரனே – சிவனே,


ஓ என்று என்று – ஓ என்று முறையிட்டு,
போற்றி – வணங்கி,
புகழ்ந்து இருந்து – திருப்புகழை ஓதியிருந்து,
பொய் கெட்டு – அறியாமை நீங்கி,
மெய் ஆனார் – அறிவுருவானவர்கள்,
மீட்டு இங்கு வந்து – மறுபடியும் இவ்வுலகில் வந்து,
வினைப்பிறவி சாராமே – வினைப் பிறவியையடையாமல்,
கள்ளப்புலம் குரம்பைக் கட்டு – வஞ்சகத்தையுடைய ஐம்புலன்களுக்கு இடமான உடம்பாகிய கட்டினை,
அழிக்க வல்லானே – அறுக்க வல்லவனே,

நள் இருளில் – நடு இரவில்,
நட்டம் பயின்று – மிகுந்து,
ஆடும் – நடனம் செய்கின்ற,
நாதனே – இறைவனே,
தில்லையுள் கூத்தனே – திருத்தில்லையில் நடிப்பவனே,
தென்பாண்டி நாட்டானே – தென்பாண்டி நாட்டையுடையவனே,
அல்லல் பிறவி அறுப்பானே – துன்பப் பிறப்பை அறுப்பவனே,


ஓ என்று – ஓவென்று முறையிட்டு,
சொல்லற்கு அரியானைச் சொல்லி – துதித்தற்கு அருமையானவனைத் துதித்து,
திருவடிக் கீழ் சொல்லிய பாட்டின் – அவனது திருவடியின்மீது பாடிய பாட்டின்,
பொருள் உணர்ந்து சொல்லுவார் – பொருளையறிந்து துதிப்பவர்,
சிவபுரத்தினுள்ளார் – சிவநகரத்திலுள்ளவராய்,
சிவன் அடிக்கீழ் செல்வர் – சிவபெருமானது திருவடிக்கீழ்ச் சென்று நிலை பெறுவர்.
பல்லோரும் ஏத்த – எல்லாரும் துதிக்க,
பணிந்து – வணங்கி

வேறு வேறு விகாரமாவன, நரை திரை மூப்பு பிணி சாக்காடு என்பன. பிறவியை அறுக்க விரும்புவார்க்கு இவ்வுடம்பும் சுமையாகும். ஆதலின், “விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன்” என்றார். நாயனாரும், “பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை,” என்று கூறினார்.
பொய்ப்பொருளைக் காண்பது அறியாமை; மெய்ப்பொருளைக் காண்பது அறிவு. மெய்ப்பொருளைக் கண்டவர், “மற்றீண்டு வாரா நெறி தலைப்படுவர்.” ஆதலின், சுவாமிகள் பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வாராராகக் கூறினார்.
நள்ளிருள் – சர்வ சங்கார காலம். இறைவன் விரும்பி ஆடும் இடம் தில்லை. சோமசுந்தரப் பெருமானாய் வீற்றிருந்து திருவிளையாடல் புரிந்த இடம் மதுரை. இரண்டையும் குறிப்பிட, “தில்லையுட்கூத்தனே, தென்பாண்டி நாட்டானே” என்றார்.தில்லை என்பது சிதம்பரம். பாண்டி நாட்டின் தலைநகரம் மதுரை.
இவற்றால் இறைவனே இடைவிடாது துதிப்பவர் சிவபுரத்துச் செல்வர் என்பதும், இச்சிவபுராணத்தை ஓதுவார்க்கு வரும் பயனும் கூறப்பட்டன.

திருச்சிற்றம்பலம்