Pages

Friday, 4 October 2013

நவராத்திரி

சிவனுக்கு உகந்த ஒரு ராத்திரி, சிவராத்திரி. சக்திக்கு உகந்த ஒன்பது ராத்திரிகள் நவராத்திரி. அம்மனை வழிபடும் விழாக்கள் ஏராளமாக இருந்தாலும் தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் அம்பாளை பூஜிக்கும் நவராத்திரியானது அதில் முக்கியத்துவம் பெறுகிறது. புரட்டாசி மாதத்தின் பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். 10–வது நாளான தசமி அன்று விஜயதசமி விழாவாகும்.

மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமி அன்று வெற்றி பெற்றார். பெரும்பாலும் கோவில்களில் 10 நாட்கள் திருவிழா நடத்தப்படும். அவற்றை பிரம்மோற்சவ விழா என்று அழைப்பார்கள். அதுபோல் வீட்டில் 10 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஒரே விழாவான நவராத்திரி விழா, வீடுகளில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம் என்று கூறினால் அது மிகையாகாது.

சித்திரை, புரட்டாசி ஆகிய இரு மாதங்களையும் எமனின் கோரப் பற்கள் என்று கூறுவார்கள். இந்த இரு மாதங்களிலும் பிணிகள் உடலை துன்புறுத்தி, நலிவடையும்படி செய்யும். அதனைப் போக்கும் விதமாகவே சக்தி வழிபாடு உள்ளது. சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரி யும் கொண்டாடப்படுகிறது. இதில் சாரதா நவராத்திரி அனைவரும் கொண்டாடும் தனிச்சிறப்பு பெற்றது.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடை மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்ய வேண்டும். முதல் மூன்று நாட்களில் துர்க்கையை மகேசுவரி, கவுமாரி, வராகியாகவும், இடை மூன்று தினங்களில் லட்சுமிதேவியை மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணியாகவும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியை சரஸ்வதி, நரசிம்மி, சாமுண்டியாகவும் முறையாக வழிபாடு செய்ய வேண்டும். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும்.

லட்சுமிதேவி, அலமேலுமங்கை என்ற நாமத்துடன் பிறந்து, திருப்பதி வெங்கடேசப் பெருமாளை அடையும் பொருட்டு ஒன்பது நாட்கள் விரதம் இருந்து பெருமாளை அடைந்ததாக ஒரு கதையுண்டு. அதன் காரணமாகவே இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுவதாகவும் கூற்று உள்ளது. நவராத்திரி விழாவை வைணவர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இதேபோன்று நவராத்திரி பற்றி பல கதைகள் உலவுகின்றன.

இந்தியா மட்டுமின்றி இலங்கை மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள இந்து மக்கள் மற்றும் உலகில் உள்ள இந்து மக்கள் ஆகியோரால் எங்கும் நவராத்திரி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களில் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும். கலை உணர்வு, பக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது. இதன் தத்துவம் தாமச குணம், ரஜோ குணம், சத்துவ குணம் ஆகிய மூன்று குணங்களையும் குறிக்கும். முதல் இரண்டு குணங்களைக் கடந்து சத்துவ குணத்தை அடையும் வழியையே இந்த நவராத்திரி கொலுப்படிகள் நமக்கு உணர்த்துகின்றன.

இந்த விரதத்தை அனுஷ்டித்ததன் பயனாக இந்திரன், விருத்திராசுரனை அழித்தார் என்று புராணம் கூறுகிறது. நவராத்திரி விரதத்தை மேற்கொண்டால் தாங்கள் விரும்பிய பலனை அடையலாம் என்றும் கூறுகிறார்கள். இவ்விரதத்தை இருப்பவர்கள் வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்று பலன்களையும் அடைவார்கள்.

இந்த விரதம் பெண்களுக்கே உரியதாகும். அனைத்து வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்களும் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயனாகும். அதே போல் இவ்விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமானப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள். மூத்த சுமங்கலி பெண்கள் மன மகிழ்ச்சியையும், மன நிறைவையும் பெறுவார்கள். இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் மற்றவர்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும்.

நவராத்திரி கொலு

நவராத்திரி கொலு அமைக்கும் முறை:

முதலாம் படி: ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின்

பொம்மைகள்.

இரண்டாம் படி: ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.

மூன்றாம் படி : மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.

நாலாம்படி : நான்கறிவு உயிர்களாக விளங்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.

ஐந்தாம்படி: ஐந்தறிவு உள்ள மிருகங்கள்,

பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள்

ஆறாம்படி: ஆறறிவு மனிதர்கள்

பொம்மைகள்.

ஏழாம்படி: மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.

எட்டாம்படி: தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவகிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.

ஒன்பதாம்படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர். அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தியை வைக்கவேண்டும்.

மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.



நவராத்திரி வழிபாட்டு முறை:

முதலாம் நாள்: சாமுண்டியாகக் கருதி வழிபடவேண்டும். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபம் கொண்ட அன்னை. நீதியைக் காக்கவே கோபமாகக் காட்சியளிக்கிறாள்.

நிவேதனம்: சர்க்கரைப் பொங்கல்.

இரண்டாம் நாள்: அன்னையை வாராஹி தேவியாகக் கருதி வழிபட வேண்டும். இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.

நிவேதனம் : தயிர்சாதம்.

மூன்றாம் நாள்: சக்தித்தாயை இந்திராணியாக வழிபட வேண்டும். இவளை மாஹேந்ரி, சாம்ராஜ்யதாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி. பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.

நிவேதனம்: வெண்பொங்கல்.

நான்காம் நாள்: அன்னையை வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். இவள் தீயவற்றை சம்ஹரிப்பவள்.

நிவேதனம் : எலுமிச்சை சாதம்.

ஐந்தாம் நாள்: அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். இவள் சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். க டின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற

அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

நிவேதனம் : புளியோதரை.

ஆறாம் நாள்: அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். இவள் தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்குபவள். வீரத்தைத் தருபவள்.

நிவேதனம் : தேங்காய் சாதம்.

ஏழாம் நாள்: அன்னையை மகாலட்சுமியாக வழிபட வேண்டும். இவள் விஷ்ணு பத்தினி. தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள்.

நிவேதனம் : கற்கண்டு சாதம்.

எட்டாம் நாள்: அன்னையை நரசிம்ஹியாக வழிபடவேண்டும். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும்.

நிவேதனம் : சர்க்கரைப் பொங்கல்.

ஒன்பதாம் நாள்: அன்னையை ப்ராஹ்மி (சரஸ்வதி )ஆக வழிபடவேண்டும். இவள் வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியம்.

நிவேதனம் : சுண்டல்

No comments:

Post a Comment