Pages

Sunday, 3 November 2013

அறுபத்து நான்கு சிவ ரூபங்கள் .....

சிவபெருமான் சைவர்களின் தலைவராக வழிபடக்கூடிய கடவுள் ஆவார். இவர் மும்மூர்த்திகளுள் ஒருவர். முதல்வன் என்றும், மூவரும் அவனே என்றும், மூவரும் அறியாதவர் என்னும் தத்துவத்தை சைவ சித்தாந்தம் கூறுகிறது. சிவனை சிவம் என்றும், சிவப்பரம்பொருள் என்றும் சைவர்கள் அழைக்கின்றார்கள்.

சிவன்முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார். அருவத் திருமேனியுடைய சிவம் `சத்தர்' என்றும், அருவுருவத் திரு மேனியுடைய சிவம் "பரம்பொருள்' என்றும், உருவத் திருமேனியுடைய சிவம் `பிரவிருத்தர்' என்றும் சைவர்களால் அழைக்கப்படுகிறது.

சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை'' (பூரணத்துவம்), "மங்களமானது'' என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம். சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இந்து சமயக் கருத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவை:- காலையில் தரிசிக்க நோய்கள் நீங்கும்.
நண்பகலில் தரிசிக்க தனம் பெருகும்.
மாலையில் தரிசிக்க பாவம் அகலும்
அர்த்த சாமத்தில் தரிசிக்க வீடுபேறு கிடைக்கும்.

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தும் சிவனின் தொழில் எனப்படுகிறது. சிவனின் ஐந்து முகங்கள் சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம். இம்முகத்தின் மூலம் ஆகம ரகசியப்பொருளினைக் கேட்டு அறிந்தனர் அறுபத்தாறு முனிவர்கள்.

அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்றுவகையான சிவ வழிபாட்டு முறையில் உருவ வழிபாடும் சைவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. உருவ வழிபாட்டில் சிவனை, லிங்கம், மகேசுவர மூர்த்தங்கள், சிவ உருவத்திருமேனிகள் ஆகிய சிவ வடிவங்களாக சைவர்களால் வணங்குகிறார்கள். இந்த வடிவங்களை சிவ ரூபங்கள் என்றும், சிவ சொருபங்கள் என்றும் குறிப்பிடலாம்.

மகேசுவ மூர்த்தங்கள் என்று இருபத்து ஐந்து வடிவங்களும், உருவத்திருமேனிகள் என்று அறுபத்து நான்கு வடிவங்களும் குறிப்பிடப்படுகின்றன. சிவபெருமானை உருவ வழிபாடு செய்வதைவிட லிங்க வழிபாடு செய்வதே சிறந்தது என வியாசர் மகாபாரதத்தில் கூறி இருக்கிறார்.

`லிங்கம்' என்னும் சொல்லுக்கு எல்லாம் தோன்றி மறையும் மூலம் எனவும் `மங்கலத்தைத் தரும் பரம்பொருள்' எனவும், `அண்ட சராசரங்கள் யாவும் ஒடுங்குவதும் மீண்டும் உற்பத்தியாகி வெளிப்படும் தன்மை கொண்டது' என்றும் சிவாகமங்கள் விளக்குகின்றன. ஆலயங்களில் ஸ்தாபித்த லிங்கம் அசலம், இல்லங்களில் வைத்துப் பூஜிக்கும் லிங்கம் சலம்.

ஈசன் கருணைப் பெருக்கால் தோன்றியது சுயம்புலிங்கம். சிவ வடிவங்கள் மொத்தம் 64 ஆகும். அவை போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் என மூன்று வகைக்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. போக வடிவம் என்பது உமாமகேஸ்வரர், சந்திரசேகரர், ரிஷபாரூடர் முதலானவற்றை குறிக்கும்.

யோக வடிவம் என்பது தட்சிணாமூர்த்தி சுகாசனர் முதலானவற்றை குறிக்கும். வேக வடிவம் என்பது கங்காளர், வீரபத்திரர் முதலானவற்றை குறிக்கும். இவை முறையே உயிர்களுக்கு போகத்தை அருளுவதற்கும், யோகத்தை அருள்வதற்கும், வினைகளை நீக்கி அருள்வதற்கும் ஏற்பட்டவை.

இனி இந்த அறுபத்து நான்கு சிவ ரூபங்களை சற்று விரிவாக காண்போம்

No comments:

Post a Comment