Pages

Saturday, 11 February 2017

மானூர் பெரியகுளம்

7ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் மணல் தேங்கி மேடான மானூர் பெரியகுளம் தூர்வாரி சீரமைக்க கோரிக்கை
2/10/2017 12:41:05 PM


மானூர்: 7ம் நூற்றாண்டின் சீமாற வல்லப பாண்டியனால் வெட்டப்பட்ட மானூர் பெரியகுளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானூர் பெரியகுளம் 7ம் நூற்றாண்டு தமிழ் மன்னனான சீமாற வல்லப பாண்டியனால் வெட்டப்பட்டது. பொதுப்பணித்துறையின் கணக்குப்படி நீர்பிடிப்பு பரப்பளவு 1695 ஏக்கர். 190 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாக கூறப்படுகிறது. மானூர், மாவடி, மதவக்குறிச்சி, எட்டான்குளம் ஆகிய 4 ஊராட்சிகளை சேர்ந்த வயல்வெளியை உள்ளடக்கியது இக்குளம். இது 5000 ஏக்கர் நிலத்துக்கு பாசன குளமாகவும், 25 கிராமங்களுக்கு நீராதாரமாகவும் இருக்கிறது.
மன்னர்கள் காலத்தில் தாமிரபரணி ஆற்றில் முக்கூடல் திருப்புடைமருதூர் இடையே மண்ணால் அணைகட்டி மதிகெட்டான் கால்வாய் வழியாக மானூர் பெரிய குளத்துக்கு நீரை கொண்டுவந்துள்ளனர். காலப்போககில் அந்த அணை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு தூர்ந்து போனது. இன்றளவும் அதன் அடிச்சுவடுகள் காணப்படுகின்றன.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தாமிரபரணியின் கிளை நதியான சித்ரா நதி எனப்படும் சிற்றாற்றிலிருந்து நீராதாரக் கால்வாய் அமைத்து, வீரகேரளம்புதூர் அருகேயுள்ள தாயார் தோப்பு என்ற இடத்தில் சிற்றாற்றின் குறுக்கே 215 மீட்டர் நீளத்தில் அணை கட்டி, 32.50 கி,மீ தூரம் கால்வாய் வெட்டி, அக்கால்வாயின் 20வது குளமாக மானூர் பெரியகுளத்தை இணைத்தனர். மானூர் பெரியகுளம் நெல்லை மாவட்டத்தில் 2வது பெரிய குளம் என்றாலும், 185 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கருப்பா நதி அணை, 174 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அடவி நயினார் அணை, 152 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ராமாநதி அணை, 25 மில்லியன் கன அடி கொண்ட குண்டாறு அணைகளை விட பெரியது.

இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் இக்குளம் காய்ந்து வறண்ட நிலையில் காணப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து நிரம்பிய நிலையில், இந்த ஆண்டு பருவமழை பொய்த்து வறண்டு போனதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
முன்னொரு காலத்தில் மானூர் பெரியகுளம் ஒரு முறை நிரம்பினால் தொடர்ந்து 3 ஆண்டுகள் வற்றாமல் கிடக்குமாம்.
ஆனால், பலநூறு ஆண்டுகளாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மணல் அடித்து வரப்பட்டு 6 அடிக்கு மேல் மணல் மேவியுள்ளது. குளத்தினுள் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட மடைப்பகுதியின் நீர்போக்கு வழி குளத்தின் பரப்பிலிருந்து 6 அடி ஆழத்தில் அமைந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘மானூர் பெரியகுளத்தில் தண்ணீர் வற்றி வரும் காலங்களில் குளத்தின் மையப்பகுதியில் இருந்து 2 நபர்கள் சேர்ந்து இறவை வட்டி மூலம் நீர் இறைத்து குளத்து மடையின் நீர்வழிப்பாதைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இன்று 6 அடி பள்ளம் தோண்டியே நீர்வழிப்பாதைககு தண்ணீர் கொண்டு வர முடிகிறது. இதனால் குளத்தின் கொள்ளளவு சரிபாதியாக குறைந்துவிட்டது. மழைக்காலங்களில் வெகு விரைவில் குளம் நிரம்புவதோடு ஒரு வருட காலத்திற்குள் குளம் வறட்சியை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. காரணம், குளம் வெட்டி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை தூர்வாரப்படவில்லை. எனவே, அரசு இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதியும், பொதுமக்களின் குடிநீர் ஆதாரம் கருதியும் இக்குளத்தை 6 அடி ஆழத்திற்கு தூர்வார வேண்டும். இதனால், ஒரு முறை குளம் நிரம்பும் நிலையில் நீராதாரம் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடித்திருக்கும், என்றனர்.

No comments:

Post a Comment