Pages

Sunday, 20 January 2019

பலவேசக்காரன்


கொள்ளை மழை கோட்டை கட்டி
பெய்யும் போதும்

கோடைவெயில் கூடாரமிட்டு
கொளுத்தும் போதும்

தை மாதப் பனி தரையை
துளைக்கும் போதும்

அம்மி பறக்க ஆலமரத்தை சாய்க்கும்
ஆடிக் காற்றின் போதும்

அஞ்சாது கண் துஞ்சாது
காவலே கடமையென
கால் கடுக்க நிற்கின்றான்

படையல் வைக்க மறந்த போதும்
பணி முடக்கம் செய்ததில்லை

ஊருக்கு உழைப்பதற்கு
ஊதிய உயர்வு
ஒருநாளும் கேட்டதில்லை

வலசை பிறந்த நாள் முதலாய்
வாசலிலே நிற்கின்றான்

வருவோர்க்கும் போவோர்க்கும்
வழி சொல்லி தருகின்றான்

கலியுகத்து பகை முடிக்க
பல வேசம் கட்டுகிறான்

வலசை மக்கள் வாழ்வு தேடி
பல தேசம் போனாலும்

வாழ்க்கை வெறுத்த நாளில்
பர தேசம் போனாலும்

பல வேசம் கூட வரட்டும்
பாதுகாப்பை தந்திடட்டும்...


கயிலாய மலையில் சிவபெருமான் உத்தரவிற்கிணங்க, சேவகர்கள் பிரமாண்டமான வேள்விக்குழியை வெட்டினர். அதில் பலவகையான மரங்களை அடுக்கி, தீ மூட்டத் தயாரானார்கள். சிவன் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிவந்த தீயை கப்பறையில் ஏந்திய பிரம்மதேவன் அதை வேள்விக்குழிக்குள் இட்டார். வேள்வித்தீ கொழுந்து விட்டு எரிந்தது. தீப்பிழம்பிலிருந்து தோன்றினாள் பிரம்ம ராக்கு சக்தி. பிரம்மனால் உருவானவள் என்பதால் அவளுக்கு அந்தப் பெயர். அவள் ஈசனிடம், “மகாதேவா, எனக்குப் பிறவி கொடுத்ததற்குக் காரணம் என்ன?” என்று கேட்டாள். “தேவர்கள் எனக்கென்று கொண்டு வந்த பொன்னரிய மாலையை சண்டமுண்டன் என்னும் அரக்கன் அபகரித்துச் சென்று விட்டான். அவனை அழித்து அதை நீ மீட்டு வரவேண்டும்,” என்றார் சிவபெருமான். ‘‘தங்கள் உத்தரவுப்படியே ஆகட்டும், ஆனால், இப்பணியை நான் மேற்கொள்வதற்கு எனக்கு நம்பிக்கைக்கு உரியவனாய், தம்பியாய் ஒருவன் வேண்டும்.

மேலும் படை திரட்டி பகை முடிக்க பலமும், நான் கொடுத்த வாக்கு நிறைவேறும் வகையில் எனக்கு அருளவும் வேண்டும்,’’ என்றாள் சக்தி. ‘‘அப்படியே ஆகட்டும்,’’ என்று அரனார் வரம் அளித்தார். பிறகு, ஆனந்த நடனம் புரிந்தார். அவருடைய முக்கண்களிலிருந்தும் அனல் பரவ, அதிலே உதயமானான் பெரிய வீரன். விண்ணுயர உயர்ந்து நின்றான். பின்னர் மனித உயரம் கொண்டான். இவ்வாறு பல ரூபங்கள் கொண்டு அரனாரைஅகமகிழ வைத்தான். நடனம் முடித்த நாதன், நாயகியுடன் வீற்றிருக்க, ஆங்காரமாய் நின்ற பெரியவீரன் சாந்த ரூபத்துடன் சிவனார் முன் சிரம் தாழ்த்தி கரம் கூப்பி நின்றான். ‘‘பல ரூபங்கள் என்னிடத்திலே காட்டி நின்ற வீரா, இன்று முதல் நீ பலவேசக்காரன் என்று அழைக்கப்படுவாய்,’’ என்று கூறி, அவனை பிரம்மராக்கு சக்தியுடன் அனுப்பி வைத்தார்.

இருவரும் சென்று சண்டமுண்டனை வென்று, பொன்னரிய மாலையை மீட்டு சிவனாரிடம் கொண்டு வந்து சேர்த்தனர். ’’ராட்சசனை அழித்ததால் பிரம்மராக்கு சக்தி, நீ பிரம்மராட்சசி என்று அழைக்கப்படுவாய் இருவரும் தீய சக்திகளிடமிருந்து மானிடர்களை காக்கும் பொருட்டு, சாஸ்தாவுக்கு துணையாக பூலோகம் செல்லுங்கள்,’’ என்று இருவரையும் சிவனார் பூவுலகிற்கு அனுப்பி வைத்தார். இருவரும் தென் பொதிகை மலையடிவாரம் கோயில் கொண்டுள்ள சொரிமுத்தைய்யன் சாஸ்தா கோயிலுக்கு வந்து நிலையம் கொண்டார்கள். பலவேசத்தை குலதெய்வமாக வணங்கி வந்த திருச்செந்தூர் அருகேயுள்ள ஒரு சிற்றூரில் வாழ்ந்த இருளப்பன், ஊரில் ஏற்பட்ட சொத்து பகை காரணமாக, நெல்லை மாவட்டம் ஆயம்பூரில் குடிபுகுந்தார். அங்கு ஊர்க்காவல் பணி செய்து வந்த அவர் தனக்கு பிறந்த மகனுக்கு பலவேசம் என்று பெயர் சூட்டினார்.

இரண்டாவது மகனை சின்ன பலவேசம் என்றழைத்தார். மகன்கள் வளர்ந்து வாலிபர்களாக ஆனதும். இருளப்பன் தனது குலப்பெருமையும், நமக்கு பூர்வீக ஊர் குறித்தும், அங்கு நமது உறவினர்கள் சொத்துகளை பறித்து கொண்டதையும், சிறிய அளவு சொத்து மட்டும் தற்போது தனக்கு உரிமைபட்டதாக இருப்பது பற்றியும் கூறினார். சகோதரர்கள் இருவரும் குதிரையில் தமது பூர்வீக ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு தங்களது பெரியப்பா வீட்டில் தங்கியிருந்து, தங்களது நிலத்தில் வீடுகட்டும் முயற்சியில் இறங்கினர். இவர்களுக்கு உதவியாக பெரியப்பா மகன் கண்ணப்பன் இருந்தான். பலவேசம் வீடு கட்டுவதற்கு அப்பகுதியை காவல் காக்கும் தீரன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் சகோதரர்கள் வீடு கட்டி குடியேறினர். பெற்றவர்களை வரவழைக்க வேண்டும். அதற்கு முன்பு ஊர்ப்பகை விலக்க வேண்டும் என நினைத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பலவேசம், அந்த பகுதியைச் சேர்ந்த சந்தன முத்தம்மை என்பவளுடன் தொடர்பு வைத்திருந்தார். இதை அறிந்த அவளது உறவினர்கள் பலவேசத்தைக் கொலை செய்யத் திட்டமிட்டு, கருவேலங்காட்டுக்குள் முள் மரங்களுக்கு இடையே பதுங்கி இருந்தனர். அந்த நேரம் அண்ணன் தம்பி இருவரும் குதிரையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் வீச்சருவாளை எடுத்து வீச, பளிச்சென்று அதைப் பிடித்துக்கொண்ட சின்ன பலவேசம், குதிரையை விட்டிறங்கி, எதிர்ப்பட்டவர்களையெல்லாம் வெட்டி எறிந்தான். சிலர் இறந்தனர்; பலர் கை, கால் முதலான உடலுறுப்புகளை இழந்தனர். எஞ்சியவர்கள் பின்வாங்கி ஓடிப்போய், அப்பகுதி காவல்காரரான தீரனாரிடம் முறையிட, அவர் பாதுகாப்பு கோரி, ஆங்கிலேய துரையிடம் தஞ்சமடைந்தார். உடனே வெள்ளைக்கார துரை, தீரனாருடன் தன் பட்டாளத்தை சேர்ந்த சில வீரர்களை அனுப்பி வைத்தார்.

தகவலறிந்த பலவேசம் சகோதரர்கள் செம்புலிங்க ஐயன் கோயிலுக்குச் சென்று மறைந்திருந்தனர். அவர்கள் மறைந்திருந்ததை அவர்களது நண்பன் ஒருவன் 50 பொற்காசுகளுக்காக காட்டி கொடுத்தான். உடனே பட்டாளத்தார் அண்ணன் தம்பி இருவரையும் பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். மூன்று நாட்கள் உணவோ, நீரோ கொடுக்காமல் காவல் வைத்து, நாலாவது நாள் காலையில் அவர்கள் கண்ணைக் கட்டி, சாத்தான்குளத்திற்கு தெற்கேயுள்ள கண்டதேரி மணலில் நிற்க வைத்து மூத்தவனை முதலில் வெட்டினார்கள். அண்ணன் ரத்தம் தம்பியின் முகத்தில் தெறிக்க, வீரம் கொண்டு எழுந்த சின்ன பலவேசம், கண்கட்டை அவிழ்த்துக்கொண்டு, அருகிலிருந்த ஒரு பட்டாளத்தானின் வாளைப் பிடுங்கி, எதிர்பட்டவர்களின் தலையை கொய்தான். அப்போது மறைந்து நின்ற ஒருவன் அவனை வெட்ட, சின்ன பலவேசம் மண்ணில் சாய்ந்தான். தொடர்ந்து பட்டாளத்தார் சின்ன பலவேசத்தை கண்ட துண்டமாக வெட்டினார்கள்.

மகன்கள் ஆங்கிலேய பட்டாளத்தார்களால் கொலை செய்யப்பட்டதை அறிந்து இருளப்பன் மனைவி முத்தம்மாளுடன் அங்கு வந்து இரண்டு மகன்களின் உடலை ஒன்று சேர்த்தாள். உறவினர்கள் உடலுக்கு தீ மூட்டக் கூறினர். ஆனால், அவளோ, ‘‘என் தெய்வம் பலவேசம் வருவார். என் மகன்களின் ஈருடல்களை ஓருடலாக்கி வலம் வருவார்,’’ என்று கூறிவிட்டு, உறவினர்களையும், மனைவியையும் அனுப்பிவிட்டு சுவாமியை நோக்கி அந்த உடல்களை வைத்து அவற்றினருகே தவமிருந்தார். இருளப்பனின் தவவலிமையினால் சுவாமி பலவேசம் வந்து இறங்கினார். மாண்டுபோன பலவேசம் ஈருடல் ஓருடலாகி பலவேசம் எழுந்தான். ஆக்ரோசம் கொண்டு குதிரையில் புறப்பட்டவன் தன் மரணத்திற்கு காரணமான தீரனையும் அவனோடு இருந்த பட்டாளத்து வீரர்களையும் வதம் செய்தான். மீண்டும் இருளப்பனிடம் வந்தான். இருளப்பா, உன் தலைமுறை தோஷத்தால் நீ உன் மக்களை இழந்து நிற்கிறாய்.


அதுமட்டுமல்ல, ஒழுக்க சீலனாய் வாழ்வதே உயர்வான வாழ்வு. அதை தவறியதன் காரணமாக உனது மூத்த மைந்தன் வாழ்வு முடிவுற்றது. வீரனாக இருந்தாலும் நற்காரியங்களுக்காக, நல்ல செயலுக்காக தனது வீரத்தை வெளிக்கொணரலாம். உறவுக்காக வீரத்தின் பொருட்டு முன்நின்ற இளைய மைந்தனும் உனக்கு சொந்தமின்றி போனான். எனக்கு இவ்விடம் கோயில் எழுப்பி பூஜித்து வா உன் வாழ்வையும், உன்னைப் போன்று என்னை வழிபடும் யாவருக்கும் நல்லருள் புரிவேன், தலமுறை தோஷம் போக்கி நல்வாழ்வு அளிப்பேன் என்று கூறி அவ்விடம் விட்டு மறைந்தார். அதன் பிறகு அதே இடத்தில் இருளப்பன் பலவேசத்திற்கு கோயில் எழுப்பி , மகனின் ரூபத்தில் சிலை வடித்து வைத்து வணங்கி வந்தார்.


அவரது காலத்திற்கு பிறகு அவளது குடும்பத்தார் பலவேசத்தை வழிபட ஆரம்பித்தார்கள். அந்த ஊரிலிருந்து இடம் பெயர்ந்து அவர்கள் பல இடங்களுக்குச் சென்ற போதிலும், அங்கெல்லாமும் பலவேசத்துக்கு சிலை நிறுவி தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். பலவேசம் தென் மாவட்டத்தின் காவல் தெய்வங்களில் ஒருவராக திகழ்கிறார். தலமுறை தோஷம் விலக பலவேசத்தை வழிபடுகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் அம்பையில் உள்ள மாயாண்டி சாமி கோவிலில் பலவேசக்கார சாமி நின்றபடி அருளாட்சி புரிகிறார். இந்த கோயிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

6 comments:

  1. Pls send the address of this temple

    ReplyDelete
  2. மகிழ்ச்சி படித்து தெரிந்ததில்

    ReplyDelete
  3. ஸ்வாமி சரணம்.

    ReplyDelete
  4. படித்ததில் சந்தோசம் சகோதரரே. இதே சம்பவம் வில்லு பாட்டில் சற்று வேறுவிதமாக உள்ளது. காரணம் சரி செய்யவேண்டுகிறேன். வணக்கம். அன்புடன் இ.ப.தமிழரசன் 9442101824. Slo. இ.பண்டாரநாடார் செட்டிகுளம் பண்ணையூர்

    ReplyDelete
  5. அருமை எனது பெயர் கூட பலவேசம் நெல்லை சீமை

    ReplyDelete
  6. கீழ ஆம்பூரில் அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் தேவர் சமுதாயம் அருகே முத்துபிள்ளை அம்மனுடன் பெரிய பலவேசம்,சின்ன பலவேசம் என்ற பெயரில் இரட்டை பலவேசம் ஆக கோயில் கொண்டுள்ளார்

    ReplyDelete