Saturday, 12 May 2018

வீ.கே.புதூரில் இந்து அறநிலைய துறை இடத்தில் பஸ் நிலையம் அமைக்கப்படுமா?


நெல்லை மாவட்டத்தில் தென்காசிக்கு கிழக்கே சிற்றாற்றின் கரையில் உள்ள வீரகேரளம் புதூர் தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 18 வருவாய் ஊராட்சிகளையும், ஒரு பேரூராட்சியையும் தன்னகத்தே கொண்டது. வீ.கே.புதூரில் ஒன்றரை லட்சம் பேர் வசிக்கின்றனர். விவசாயம், பீடி சுற்றுதல் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தென்காசியோடு இணைந்திருந்த வீ.கே.புதூர் 1998ம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் தனி தாலுகாவாக உருவாக்கப்பட்டது. மேலும் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த தாலுகா அலுவலகத்துக்கு 2009ம் ஆண்டில் ரூ.1.40 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இப்போது வடக்கு, தெற்கு என இரண்டு பஸ் நிறுத்தங்கள் மட்டுமே உள்ளன. இவ்வாறு 1998ல் தனி தாலுகாவாக உருவான வீ.கே.புதூர், மாவட்டத்திலேயே பஸ் நிலையம் இல்லாத நிலையில் இருந்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இங்குள்ள இரு பஸ் நிறுத்த பகுதிகளிலும் நிழற்குடையோ, குடிநீர் உள்ளிட்ட எந்தவொரு வசதியும் செய்துதரப்படவில்லை. எனவே, வீ.கே.புதூரில் பஸ் நிலையம் அமைத்தால் அனைத்து பஸ்கள் நின்று செல்லும். வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தை சுற்றி காலியாக இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமாக உள்ள 50 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் மற்றும் மருத்துவமனை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



Sunday, 8 April 2018

வீரகேரளம்புதூரை வளங்கொழிக்க செய்யும் அனுமன் நதி

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் செங்கோட்டை தாலுக்காவின் பண்பொழி, மேக்கரை அருகே உற்பத்தி ஆகும் நதி அனுமன் நதி ஆகும் .
தாமிரபரணியின் வடக்கு கடைக்குட்டி கிளைநதி அனுமன் நதி. தென்காசியில் உற்பத்தியாகும் சிற்றாறு என்னும் ஆற்றின் துணை ஆறு ஆகும்.அனுமன் நதி மூலம் தென்காசி நகராட்சியில் உள்ள 4046.94 எக்டேர்களுக்கு நேரடியாகவும், இதன் துணையாறான கருப்பா நதி மூலம் 3844.59 எக்டேர்களுக்கு மறைமுகமாகவும் பாசன வசதி கிடைக்கிறது. இது வீரகேரளம்புதூர் என்னும் ஊரில் சிற்றாறுடன் இணைகிறது. இது 14 அணைக்கட்டுகளை கொண்டுள்ளது.


அனுமன் நதி வரலாறு

இராமாயண காலத்தின் போது இராமன், இலட்சுமணனுடன் வந்த அவர்களின் படையின் தாகத்தைத் தணிக்க அனுமான் ஒரு பாறையை உடைத்தான். அதில் இருந்து விண்கங்கை கொட்டியது. அதுவே நாளடைவில் ஆறாக மாறி அனுமன் ஆறு எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

அல்லது

ஸ்ரீராமர் பதினாறு ஆண்டு வனவாச காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தண்ணீர் தாகம் எடுக்கவே ஸ்ரீஆஞ்சநேயர் தனது வாலால் மலையில் அடித்த இடத்தில் தோன்றியது தான் அனுமன் நதி ஆகும்

அனுமன் நதி அருகில் உள்ள ஊர்கள்:

பண்பொழி- பைம்பொழில்-பசுமையான சோலைகள் நிறைந்த இடத்தின் வழியாகவும். அனுமன் நதிக்கு வடகரையில் அமைந்த வடகரை வழியாகவும்.இலவையம்பதி என்ற இலத்தூர் வழியாக வந்து துணையாறான கருப்பா நதியுடன், காசி தர்மம் அருகே உள்ள நெடுவயல் என்னும் ஊரில் இணைகிறது. பின்பு ஆயர்கள் குடும்பம் அல்லது ஆயர்கள் வாழிடமான ஆய்க்குடி வழியாகவும். அகத்திஷ்வரர்சாம்பவமுர்த்தி- சாம்பவமுர்த்தி கோவிலுக்கும் அனுமன் நதிக்கும் வடகரையில் அமைந்த சாம்பவர்வடகரை வழியாகவும்.சுரர் அண்டிய இடம்.- அசுரர்களுக்குப் பயந்து தேவர்கள் தஞ்சமடைந்த சுரண்டை வழியாக வந்து வீரகேரளனின் புதிய ஊர் அல்லது வீரமாய் கேரளாவைப் போல செழிப்பான புதிய ஊரான -வீரகேரளம்புதூரில் சிற்றாறுடன் இணைகிறது.

அடவி நயினார் அணை தேக்கம்:

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் செங்கோட்டை தாலுக்காவின் பண்பொழி, மேக்கரை அருகே அனுமன் நதி ஆற்றின் குறுக்கே அடவி நயினார் அணை அமைந்துள்ளது.

அணையின் உயரம் : 51.5 m
அணையின் கொள்ளளவு : 4.927 Mcum
அணையின் நீளம் :670 m
அணையின் நீர்ப்பிடிப்பு பரப்பளவு : 15.54 km2



இந்நதி செங்கோட்டை , தென்காசி மற்றும் வீரகேரளம்புதூர் தாலுக்காவின் நீர்ப்பாசனத்திற்கு தேவையான நீரை தருகிறது.நமது ஊரிலுள்ள அருந்தாபிரட்டிக்குளம்,கோவில் குளம் மற்றும் குறு குளத்திற்கு தேவையான நீரை அனுமன் நதி மற்றும் கருப்பா நதி தருகிறது.


வீரகேரளம்புதூரை வளங்கொழிக்க செய்யும் கருப்பா நதி

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டம் கடையநல்லூர் நகரம் சொக்கம்பட்டி கிராமம் அ௫கில் மேற்கு மலை் தொடர்ச்சியில் உற்பத்தி ஆகும் நதி ஆகும் .
இந்த நதியில் 72 அடி கொள்ளளவு கொண்ட ஒ௫ அணைக்கட்டு கட்டப்பட்டு உள்ளது இதன் மூலம் கடையநல்லூரைச் சுற்றி 72 குளங்கள் பாசன வசதிக்கு உள்ளன. இந்நதிஅனுமன் நதியின் துணை ஆறாகும். இந்நதி மூலம் 3844.59 ஹெக்டேர்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது. இது ஆறு அணைக்கட்டுகளையும் ஒரு தேக்கத்தையும் கொண்டுள்ளது.

கருப்பா நதி அருகில் உள்ள ஊர்கள்:

கடையநல்லூர்:

தற்போதைய ஊரான கடையநல்லூர் அந்த காலத்தில் அர்ஜுனபுரி என்று அழைக்கப்பட்டு வந்தது.பக்தர் ஒருவர் சாமிக்கு பால் கொண்டு வரும்போது கால் இடறி தட்டியதால் கடையநல்லூர் என்ற பெயர் பழக்கத்தில் வந்தது.அதற்கு பிறகு தான் மேல கடையநல்லூரில் உள்ள கடைகால் ஈஸ்வரன் கோயில் கட்டபட்டது.

கருப்பா நதி காசி தர்மம் அருகே உள்ள நெடுவயல் என்னும் ஊரில் அனுமன் நதியுடன் இணைகிறது.

கருப்பா நதி அணை தேக்கம்:

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடையநல்லூர் தாலுக்காவின் சொக்கம்பட்டி கிராமம் அருகே கருப்பா நதி ஆற்றின் குறுக்கே கருப்பா நதி அணை தேக்கம் அமைந்துள்ளது.

அணையின் உயரம் : 38.64 m
அணையின் கொள்ளளவு : 5.239 Mcum
அணையின் நீளம் : 890 m
அணையின் நீர்ப்பிடிப்பு பரப்பளவு : 29.34 km


இந்நதி கடையநல்லூர், தென்காசி மற்றும் வீரகேரளம்புதூர் தாலுக்காவின் நீர்ப்பாசனத்திற்கு தேவையான நீரை தருகிறது.நமது ஊரிலுள்ள அருந்தாபிரட்டிக்குளம்,கோவில் குளம் மற்றும் குறு குளத்திற்கு தேவையான நீரை அனுமன் நதி மற்றும் கருப்பா நதி தருகிறது.

கழனியூரன்

தமிழ் நாட்டுப்புற வழக்காற்றியலின் முன்னத்தி ஏரான கி.ராஜநாராயணனின் நீட்சியாக, அவர் வழி வந்தவர் கழனியூரன். கரிசல் வட்டார வழக்குகள், நாட்டார் கதைகள், வசவுச் சொற்கள், விடுகதைகள், தமிழ்-தெலுங்கு சொலவடைகள், சிறுவர் கதைகள், பாலியல் சேகரிப்புகள் என்று ஒரு தேனீயைப் போல தேடித்தேடிச் சேகரித்தவர் கழனியூரன். கி.ராவின் அத்யந்த சீடனாகவே தன் வாழ்நாள் முழுக்கவும் செயல்பட்ட கழனியூரனின் சொந்தப் பெயர் எம்.எஸ். அப்துல் காதர். எழுத்துக்காக, தான் பிறந்த ஊரான கழுநீர் குளத்துக்காரராக (கழனியூரன்) மாறியவர். சிறுவயதில், கண்பார்வையற்ற தனது அண்ணனுக்காக அவர் கொடுத்த புத்தகங்களைத் சத்தமாக வாசிக்கத் தொடங்கியதுதான் கழனியூரனின் முதல் இலக்கிய அறிமுகம். பிறகு, தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் வாசலில் நடக்கும் ஆன்மிக, இலக்கியச் சொற்பொழிவுகளில் ஆர்வமாகக் கலந்துகொள்ளத் தொடங்கினார். அங்கேதான் ‘லானா சானா’ என்று அழைக்கப்படும் ல. சண்முகசுந்தரத்தின் அறிமுகம் கழனியூரனுக்குக் கிடைத்தது.

திருநெல்வேலியில் வட்டத்தொட்டி இலக்கியக் குழுமமும், ரசிகமணி டி.கே.சி.யின் பிறந்தநாள் நிகழ்ச்சியும் மிகவும் பிரபலம். ராஜாஜியில் தொடங்கி, ரா.பி. சேதுப்பிள்ளை, கல்கி, அ. சீனிவாச ராகவன், தொ.மு. பாஸ்கர தொண்டைமான், வையாபுரிப்பிள்ளை, மீ.ப. சோமு, கி.ரா., ஜெயகாந்தன் என்று பலரும் வட்டத்தொட்டியின் நெடுநாளைய உறுப்பினர்கள். டி.கே.சி.யின் மறைவுக்குப் பிறகு, அவரது பேரன் தீப. சிதம்பரநாதன் முயற்சியில், டி.கே.சி. அன்பர்கள் அனைவரும்கூடி, அவரது பிறந்தநாளை ஆண்டுதோறும் கொண்டாடத் தொடங்கினார்கள்.

அந்நிகழ்வில் பல்வேறு இலக்கிய ஆசான்களும் கலந்துகொள்வார்கள். அங்குதான் முதன்முறையாக கி. ராஜநாராயணனைச் சந்தித்தார். நிகழ்ச்சி முடிந்து ஊருக்குப் போன கி.ரா.விடமிருந்து சில நாட்களில் கழனியூரனுக்குக் கடிதம் வந்தது. “நீங்கள் ஒரு நல்ல வாத்தியார், அதே நேரம் கிராமம் கிராமமாக அலைந்து வேலை பார்க்கும் வாய்ப்பும் உங்களுக்கு இருக்கிறது. இப்படி, நாட்டார் வழக்காற்றியல் தொடர்புடைய கதைகளைத் தேடிச் சேகரியுங்களேன்” என்று முதல் தடவையாக கி.ரா கழனியூரனைத் தூண்டிவிட்டார். இப்படித்தான் தொடங்கியது கழனியூரனின் நாட்டாரியல் வேட்டை.

முதல் தடவை கழனியூரன் கிராமங்களுக்குப் போய்க் கதைகள் சேகரிப்பதற்காக கிராமத்தினரை அணுகியபோது, வெட்கத்தின் காரணமாகவும், வேலைப்பளுவைக் காரணம் காட்டியும், பெண்ணும் ஆணும் கதைசொல்ல மறுத்திருக்கிறார்கள். அதை கி.ராவிடம் சொன்னதும், “பொம்பளையாளு சோறு ஆக்கணும்பா. நீங்க போய்ப் பக்கத்துல உக்காந்து அடுப்புல தீயைத் தள்ளுங்க, அவங்களோட ஒண்ணுமண்ணா பழகிப் பேச்சு கொடுத்து, கதையச் சொல்ல விட்டுக் கேளுங்க” என்றாராம் கி.ரா. அப்படி மனிதர்களோடு நெருங்கிப் பழகி கழனியூரன் கதைகள் சேகரித்த சம்பவங்களையே தனித் தொகுப்பாக எழுதலாம்.

கரிசல் நிலம், செவக்காட்டு நிலம் முழுக்க அலைந்து கழனியூரன் திரட்டிக் கொண்டுவந்து குவித்த கதைகளில், தான் ஏற்கெனவே பதிவுசெய்தவற்றை, அரிசியில் கல் பிறக்குவதுபோலப் பிறக்கி எடுத்துவிட்டு, மற்றவற்றைச் சேர்த்துப் புத்தகமாக்கினார் கி.ரா. அப்படித் தொகுக்கும் ஒவ்வொரு முறையும் தவறாமல் கழனியூரன் பெயரையும் சேர்த்துப் புத்தகத்தில் இடம்பெறச் செய்திருந்தார்.

ஒரு சீடனுக்குக் கிடைக்கிற உச்சபட்ச மரியாதையை கி.ரா. எப்போதும் கழனியூரனுக்குத் தந்தார். அவர்கள் இரண்டு பேருக்குமிடையே வெளியில் சொல்லாத ஒரு தந்தை மகன் உறவு நிலை கொண்டிருந்தது. கிராம மக்களின் பேச்சில் நடமாடும் வசவுச் சொற்களை எல்லாம் விசாரித்து அவற்றில் இருக்கும் பூர்வாங்க மனித உணர்வுகளைப் படிக்க வேண்டும் என்று தனது 92-வது வயதில் யாருக்காவது ஆசை வருமா? கி.ராவுக்கு வந்தது. உடனே வேட்டியை மடித்துக்கொண்டு களத்தில் இறங்கினார் கழனியூரன். இத்தனைக்கும் அப்போதுதான் அவர் புற்றுநோய் பாதிப்பை உணரத் தொடங்கியிருந்தார்.



கழனியூரன் நூல்களில் சில...

தாய்வேர் - பூங்கொடி பதிப்பகம்.

கதைசொல்லியின் கதை - தாமரைச்செல்வி பதிப்பகம்.

நெல்லை நாடோடிக் கதைகள் - மித்ரா பதிப்பகம்.

மண் மணக்கும் மனுஷங்க - பூங்கொடி பதிப்பகம்.

நாட்டுப்புற நீதிக் கதைகள் - காவ்யா பதிப்பகம்.

பன்னாட்டுச் சிறுவர் நாடோடிக் கதைகள் - பூங்கொடி பதிப்பகம்.

செவக்காட்டு மக்கள் கதைகள் - சந்தியா பதிப்பகம்.

தாத்தா பாட்டி சொன்ன கதைகள் - பாரதி புத்தகாலயம்.

குறுஞ்சாமிகளின் கதைகள் - உயிர்மை பதிப்பகம்.

வாய்மொழி வரலாறு - சந்தியா பதிப்பகம்.

நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் -

(தலைமைத் தொகுப்பாளர் கி. ராஜநாராயணன்,

சண்முகசுந்தரம், கழனியூரன், பாரததேவி) - சாகித்ய அகாடமி.

நெருப்பில் விழுந்த விதைகள் (கவிதைகள்) - அகரம் பதிப்பகம்.

மண்ணின் கதைகள் மக்களின் கதைகள் - உயிர்மை பதிப்பகம்

நாட்டுபுற வழக்காறுகள் - தாமரைச்செல்வி பதிப்பகம்.

நாட்டுபுற நம்பிக்கைகள் - அகரம் பதிப்பகம்.

அன்புள்ள கி.ரா (கடித இலக்கியம்) - உயிர்மை பதிப்பகம்.

ரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள் - பூங்கொடி பதிப்பகம்.



ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, கழனியூரனின் உடல்நலம் மிகவும் மோசமடைந்தது. சிகிச்சைக்காக மகள் வீட்டிலும், ஓய்வுக்காகச் சொந்த ஊரிலுமாக நாட்களைப் பங்குபோட்டுக்கொண்டார். தனக்கு மிச்சமாகக் கிடைத்த ஒவ்வொரு நிமிடத்தையும் அதுவரையிலான தன் நாட்டுப்புறச் சேமிப்புகளை ஆவணப்படுத்தும் பணிகளுக்காகக் கவனத்தோடு செலவிடத் தொடங்கினார். தன்னுடையவை மட்டுமல்லாமல் கி.ராவின் கதைகள், கடிதங்கள், கட்டுரைகள், முன்னுரைகள், கதைசொல்லி இதழ் வெளியீடுகள், கி.ரா. பிற சஞ்சிகைகளில் எழுதியவை, வல்லிக்கண்ணன் -திகசி கடிதங்கள் என்று யாவற்றையும் தொகுத்துப் பத்திரப்படுத்தி நூலாக்கினார்.

கி.ரா.வை ஆசிரியராகக் கொண்டு, கே.எஸ். ராதாகிருஷ்ணன் பதிப்பித்து வெளியிடும் ‘கதைசொல்லி’ இதழில் கடைசிவரைக்கும் பொறுப்பாசிரியர் பணிகளை கழனியூரன் கவனித்தார். கி.ரா.வின் வாழ்க்கையை, திரும்ப அவருக்கே படம்போட்டுக் காட்டுவதுபோல, அவருடனான தன் அனுபவங்களைத் தொடராக எழுதிக்கொண்டிருந்தார் கழனியூரன்.

இந்த ஆண்டு 95-வயதைப் பூர்த்திசெய்யும் தன் குருநாதர் கி.ரா.வுக்குக் காணிக்கையாக, அவர் பற்றிய பிற படைப்பாளர்களின் எழுத்துகள் அடங்கிய தொகுதி ஒன்றை நூலாக ஆவணப்படுத்தும் பணியை கழனியூரன் என்னிடம் ஒப்புவித்திருந்தார். நூல் வேலைகள் முடிவடையும் நிலையில் புற்றுநோய் அவரை முற்றிலுமாகப் பறித்துக்கொண்டது. கழனியூரன் தன் குருவுக்கான காணிக்கையைக் கையளிக்கும் முன்பாகக் காலமாகிவிட்டார்.

கி.ரா. சொல்லுவார், “ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் வாழ்நாளில் பேசினதை, எழுதினதையெல்லாம் பத்திரப்படுத்திக்கொடுத்த மகேந்திரநாத் மாதிரி, ரசிகமணி டி.கே.சி.க்கும் ஒரு ‘சுடுகுஞ்சு’ கிடைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று. டி.கே.சி.க்கு அப்படி ஓர் ஆள் வாய்த்தாரோ இல்லையோ! கி.ரா.வின் ‘சுடுகுஞ்சாக’ வாழ்ந்தவர் கழனியூரன்.

கரிசல் மண்ணில் கி.ரா.வின் பங்களிப்பு பூரண நிலவென்றால் அதே வானத்தின் விடிவெள்ளியாக மின்னியவர் கழனியூரன். ஒரு முறை அவரிடம் ‘உங்கள் காலம்போல எங்களுடைய காலம் அவ்வளவு நல்ல விஷயங்களைக் கொண்டிருக்கவில்லையே?” என்றேன்.

அதற்கு அவர் சொன்ன பதில்: “எங்க தாத்தா வாழ்ந்த காலத்தை நான் பார்க்கும்போது அது பிரம்மாண்டமா இருந்துச்சு. அதிலே அவ்வளவு விஷயங்கள் இருந்துச்சு. என் காலத்து வாழ்க்கை என் பேரனுக்கு வித்தியாசமா இருக்கும். அவன் பேரன் வரும்போது, இங்கே இன்னும் நிறைய மாறியிருக்கலாம். நவீனத்துக்கான மாற்றங்கள் வந்துகிட்டேதான் இருக்கும். அவரவர் காலத்தோட கண்ணாடியை அணிஞ்சுக்கிட்டே இருக்கணும். நம் பார்வைகள் நாளுக்கு நாள் மாறும்; உடலும் உயிரும் வந்து வந்து போய்க்கிட்டே இருப்பது மாதிரி. ஆனா அதோட ஆன்மா அப்படியே இருக்கும். ஆன்மா அழியாது” என்றார். கழனியூரனின் ஆன்மா அவரது எழுத்து.

அஞ்சலி: கழனியூரன் - (1954 - 2017)


Friday, 6 April 2018

சிற்றாறு பாசனவசதி

சிற்றாற்றின் மீது பாசனவசதிக்காக 17 அணைக்கட்டுக்கள் கட்டப்பட்டுள்ளன.
எண் அணைக்கட்டின் பெயர் பதிவுசெய்யப்பட்ட

ஆயக்கட்டு நேரடியாக

(ஏக்கரில்)
பதிவுசெய்யப்பட்ட

ஆயக்கட்டு மறைமுகமாக

(ஏக்கரில்)
1 தலை அணைக்கட்டு 590.06 1467.32
2 அடிவட்டாம்பாறை அணைக்கட்டு 114.08 157.72
3 வால்விளகுடி அணைக்கட்டு 153.27 -
4 புலியூர் அணைக்கட்டு 381.00 911.48
5 பாவூர் அணைக்கட்டு 488.00 3110.08
6 திருசிற்றம்பலம் அணைக்கட்டு 163.00 163.25
7 மாறைந்தை அணைக்கட்டு 1361.00 2543.04
8 வீராணம் அணைக்கட்டு 231.15 2207.70
9 மானூர் அணைக்கட்டு 821.75 2677.52
10 மேட்டூர் அணைக்கட்டு 500.10 1027.50
11 பள்ளிக்கோட்டை அணைக்கட்டு 249.81 2135.00
12 உக்கிரன்கோட்டை அணைக்கட்டு 421.00 47.18
13 அழகியபாண்டியபுரம் அணைக்கட்டு - 440.48
14 பிள்ளையார்குளம் அணைக்கட்டு 66.90 413.19
15 செழியநல்லூர் அணைக்கட்டு 67.81 372.71
16 பிராஞ்சேரி அணைக்கட்டு 344.39 409.40
17 கங்கைகொண்டான் அணைக்கட்டு 216.28 779.80
மொத்தம் 9963.83 37062.19

Sunday, 26 March 2017

ஆடித்தபசும் ஊத்துமலை ஜமீனும்!

ஊத்து மலை ஜமீன்தாரின் ஆன்மிக திருப்பணிக்கு மற்றொரு சான்று, சங்கரன் கோயில் ஆடிதபசு திருவிழா. ஜமீன்தார்கள் இந்த திருவிழாவின்போது கோமதி அம்மனை தங்கள் வீட்டில் பிறந்த மகள் போலவே எண்ணி, சீதனபொருட்களுடன் மாப்பிள்ளை சிவனை நோக்கி காத்து இருப்பார்கள். பரம்பரை பரம்பரையாக ஊத்துமலை ஜமீன்தார் இதற்கான மண்டகப்படி நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி காசி விஸ்வநாதர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு இணையான பெரிய கோயில்களில் சங்கரன் நயினார் கோயிலும் ஒன்றாகும். இந்த தலத்துக்கு பூகைலாயம், புன்னைவனம், சீராசபுரம், சீராசை, வாராசைபுரம், கூழைநகர் என்ற பெயர்களும் உண்டு. சங்கரன் கோயில் ஐம்பூதத் தலங்களில் ஒன்றான மண்தலம் ஆகும். இந்தக் கோயில் தலபுராணம் சீவல மாறபாண்டிய மன்னரால் எழுதப்பட்டது. முதல் ஆறு சருக்கங்கள் ஊத்து மலைச் சமஸ்தான வித்துவான் புளியங்குடி முத்துவீரப்பக் கவிராயரால் 1913ம் ஆண்டு இயற்றப்பட்டது. இப்புராண சுருக்கத்தினை சேத்தூர் மு.ரா.அருணாசலக் கவிராயர் எழுதியுள்ளார்.

“முத்து வீரப்பக்கவிராயர் பிள்ளைத்தமிழ்” இத்தலத்திற்காக இயற்றப்பட்ட அற்புதமான நூலாகும். இவர் ஊத்துமலை சமஸ்தான வித்துவானாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கரனார் கோயில் முகப்பில் 124 உயரமுள்ள ஒன்பது நிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுரத்தின் உச்சி தெற்கு வடக்காக 56 அடி நீளம். கீழ்மேல் அகலம் 15 அடி. உச்சியிலுள்ள கலசம் ஏழடி நான்கு அங்குலம். நகரில் எங்கிருந்து பார்த்தாலும் இந்த கோபுரம் தெரியும். சங்கர லிங்கப் பெருமானுக்கு வன்மீக நாதர், சங்கரமூர்த்தி, வாராசைநாதன், வைத்தியநாதன், சீராசைநாதன், புன்னைவனநாதன், கூழையாண்டி என்று பல திருநாமங்கள். கோமதியம்மன், ஆவுடையம்மாள் என்றழைக்கப்படுகிறாள். ஆ என்றால் பசு. உலக ஜீவராசிகளை பசுக்கள் என்று சொல்வார்கள். அந்த ஜீவன்கள் அனைத்தையும் அரவணைத்துக் காக்கும் அன்னை இவர். இந்த அம்மனைக் கொண்டாடும் ஆடித்தபசு திருநாளில் கோமதியம்மாளின் தாய் வீட்டு சீதனத்தினை கொண்டு வரும் பெரும் பாக்கியத்தினை ஊத்துமலை ஜமீன் குடும்பத்தார் பெற்றுள்ளார்கள்.

இதற்காக ராஜ அலங்காரத்தில் வீரகேரளம் புதூர் நவநீத கிருஷ்ணன் கோயிலிலிருந்து கிளம்புவார்கள். நவநீத கிருஷ்ணன் யார்? கோமதியம்மாளின் தமயன்தானே! இந்த ஆடித்தபசு திருவிழா எப்படி உருவானது? ஒரு காலத்தில் சங்கரன்கோயிலில் புதர்கள் மண்டியிருந்தன. காடுகளாக இருந்தது. இப்பகுதியில் வாழ்ந்துவந்த காப் பரையன், கோயிலில் மண் தோண்டியபோது புற்று ஒன்றில் மண்வெட்டி பட்டு ரத்தம் பீறிட்டது. அப்போதைய தென்பாண்டி சீமையின் அரசன் உக்கிர பாண்டியன், தன் ஆட்சி எல்கைக்குள் இருந்த புன்னைவனக் காட்டில் ரகசிய சுரங்கப்பாதை அமைத்து, அதன்வழியாக மதுரை சென்று சிவனை வணங்கி வந்தார். ஒருநாள் அவரது கனவில் சிவன் தோன்றி, “இனி நீ என்னைத் தேடி மதுரை வரவேண்டாம். புன்னை வனத்திலுள்ள புற்றுகளை அகற்றி விட்டு அங்கு ஆலயம் அமைத்து வணங்கு,” என்று அறிவுறுத்தினார். மறுநாள் காவற் பறையன் அரசனிடம் புற்றில் இருந்து ரத்தம் பீறிட்ட சம்பவத்தினைக் கூறினான்.

தன் கனவுக்கு ஏதோ சங்கேத அறிகுறி அமைவது கண்டு, ரத்தம் பீறிட்ட இடத்துக்கு வந்தார். அங்கிருந்த பாம்புப் புற்றுகளை அகற்றி மண்ணைத் தோண்டச் செய்தார். அப்போது பூமிக்குள்ளிருந்து இரு நாகங்கள் (சங்கன், பதுமன்) குடைபிடிக்க அங்கே சங்கரலிங்கம் பிரசன்னமானார். ஆண்டவன் கட்டளைப்படி அங்கே மன்னன் எழுப்பிய ஆலயம்தான் சங்கரநாராயணன் ஆலயம். நாகங்களில் ஒருவரான சங்கன் சிவபக்தர்; பதுமன் விஷ்ணு பக்தர். இருவருக்குமிடையே சிவன் பெரியவரா, விஷ்ணு பெரியவரா என்று எப்போதும் விவாதம் நடக்கும். சிவபெருமான் அவர்களின் சந்தேகம் தீர்க்க இருவரையும் பூலோகத்துக்கு அனுப்பி வைத்தார். இதே சந்தேகம் உமையாளுக்கும் ஏற்படவே, அவளையும் பூலேகத்தில் அவதரிக்கச் செய்தார். பூமியில் கோமதியாகப் பிறந்த அம்பிகை, சிவனை எண்ணிப் பல ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அம்மையின் தவத்திற்கு இரங்கி சிவபெருமான் ஆடித்திங்கள், பௌர்ணமி, உத்திராட நட்சத்திரமும் கூடிய நன்னாளில் நாராயணமூர்த்தியுடன் இணைந்து சங்கரநாராயணராகக் காட்சி தந்தார்.

இந்நாளே ஆடித்தபசு திருநாள். “சிவனும் நானே, விஷ்ணுவும் நானே” என்று ஈஸ்வரன் உரைத்த நாள். சங்கன், பதுமன் இருவரும் சமரசமாகி முக்தியடைந்தனர். இந்த தபசுத் திருநாளில் லட்சக்கணக்கான மக்கள் பக்திப் பரவசத்துடன் கூடுகிறார்கள். விவசாயிகள் தங்கள் விளைச்சல் பெருக வேண்டி, விளைபொருட்களை சப்பரம் மீது தூவி வேண்டிக் கொள்கின்றனர். அன்றைய தினம் கோமதி அம்மைக்கும், சங்கரனாருக்கும் திருமணம் நடைபெறுவது காண்கொள்ளா காட்சியாகும். பரிவாரங்களுடன் சங்கரன் கோயிலுக்கு வரும் ஜமீன்தார் அம்பாளை வணங்கி நிற்பார்கள். அதன்பின் அம்பாளை தங்க சப்பரத்தில் அழைத்து வருவார்கள். அப்போது அவருக்கு பிறந்த வீட்டு சீதனமாய் அழைப்புச்சுருள் வைக்கப்படும். அலங்கார சாமான்களுடன் ஜவ்வாது, சந்தனம், விபூதி பைகள், எலுமிச்சை பழமாலை, பட்டு பரிவட்டம், சவுரிமுடி, புஷ்பவகை மற்றும் இதர பொருள்களுடன் கோயிலுக்குள் ஜமீன்தார் பரிவாரங்கள் புடைசூழ செல்வார். பிறகு அம்மனுக்கு தபசு அலங்காரம் செய்து, ஜமீன்தார் முன்செல்ல கோமதியம்மன் வீதிஉலா வருவார்.

“ஊத்துமலை ஜமீன் தபசு மண்டபத்தில் தங்க சப்பரத்தில் ஆவுடையம்மை, உமையம்மையாக தவம் இயற்றுவார். மாலையில் அம்பாள் தங்கச்சப்பரத்தில் சுவாமியை வலம் வந்து தவப்பயன் அடைவார். அதன்பின் மாலை மாற்றுதல், பரிவட்டம் கட்டுதல், திருக்கண் அலங்கரித்தல் போன்றன நடைபெறும். இவற்றை ஊத்துமலை ஜமீன் வாரிசுகள் முன்னின்று நடத்துகிறார்கள். தபசு காட்சியின்போது பரிவட்டம் கட்டி ராஜதோரணையில் ஊத்துமலை ஜமீன்தார் நிற்க ஒருபுறம் அம்பாள் சப்பரமும், மறுபுறம் சுவாமியின் சப்பரமும் நிற்கும். ஜமீன்தார் பரிவட்டம் கட்டிக்கொண்டு கோமதியம்மாளின் தாய் வீட்டு சீதனத்தோடு அந்த இடத்தில் எளிமையாகக் காத்திருக்கிறார். தற்போது ஜமீன்வாரிசு பாபுராஜ் என்ற மருதுபாண்டியர் இந்த மண்டகப்படியை முன்நின்று நடத்துகிறார். மறுநாள் கோமதி அம்பாள் சப்பரத்தில் பட்டிணப் பிரவேசம் செல்வார். இதற்குத் தேவையான புஷ்ப அலங்காரம் செய்து வீதி உலா வந்து அம்பாளை கோயிலில் கொண்டு சேர்க்கிறார் ஜமீன்தார். மூன்று நாட்களும் எண்ணெய்க் காப்பு நிகழ்ச்சிக்குப்பின் பள்ளியறைச் சிறப்பு மண்டகப்படியையும் இவரே செய்கிறார்.
இதற்காக நிறைக்குடமாக பசும்பால், தேங்காய் பருமன் உள்ள லட்டு, தோசைக்கல் அளவு தேன்குழல், அதிரசம் மற்றும் கனி வர்க்கங்கள், புஷ்பங்கள் வைத்து பூஜிப்பார்கள். அம்பாள் தவப்பயன் அடைந்து தபசு மண்டபத்துக்கு வந்ததும் ஊத்துமலை ஜமீன்தார் அனைவருக்கும் பாகுபாடு இன்றி சுருள் பிரசாதம் வழங்குவார். மதியம் அன்னதானம் நடைபெறும். கோயிலில் சங்கரநயினார், கோமதியம்மாள், சங்கரநாராயணர் ஆகியோர் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கிறார்கள். பிரசாதமாக வழங்கப்படும் புற்றுமண் தேள், பாம்பு போன்ற விஷக்கடிகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சிரங்கு போன்ற சரும நோய்களுக்கு புற்றுமண்ணை நீரில் கரைத்துத் தடவுகிறார்கள். உடனே நோய் தீருகிறது. வயிற்றுவலி, சீதபேதி போன்ற நோய்களுக்குப் புற்றுமண் கரைத்த நீரை அருந்தி குணமடைகிறார்கள். உடலில் கட்டி உபாதை கொண்டவர்கள் மாவிளக்கு எடுத்து கோமதியம்மாளை வணங்கி நோய் நீங்கிச் செல்கிறார்கள். இக்கோயில் நாகதோஷம் நீக்கும் தலமுமாகும்.

இங்குள்ள திருக்குளம் “நாகசுனை” என்று அழைக்கப்படுகிறது. குளத்தின் நீர் எப்போதுமே பச்சை நிறமாகக் காணப்படுகிறது. இதில் நாக பாஷாணம் கலந்துள்ளதால்தான் இந்த நிறம் என்கிறார்கள். விஷக்கடிக்கு ஆளானவர்கள் இக்குளத்தில் நீராடி தோஷம் நீங்கி நலம் பெறுகிறார்கள். இத்திருக்குளத்தை எத்தனை முறை தூர்வாரிச் சுத்தப்படுத்தினாலும் நீரின் நிறம் மட்டும் மாறுவதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது, தவம் மேற்கொண்ட அம்பிகையின் வண்ணமே என்றும் கருதுகிறார்கள். மார்ச், செப்டம்பர் மாதங்களில் 21, 22, 23 தேதிகளில் அதிகாலை 6 மணிக்கு சூரிய ஒளி லிங்கத்தின் மீது பாய்கிறது. இந்த கோயிலில் பிரதான வாசல் வழியாக நேரடியாக லிங்கத்தின் மீது இவ்வாறு ஒளி படர்வது சூரியனே சிவனை வழிபடுவதுபோல அமைகிறது. கோயிலின் உள்ளே புலித்தேவன் குகை உள்ளது. இந்த புலித்தேவனுக்கும் ஊத்துமலை ஜமீனுக்கும் நிறைய தொடர்பு உண்டு. புலித்தேவன் நெல்கட்டும் செவல் ஜமீன்தார்.
இவர் தமிழகத்தில் வெள்ளையர் ஆதிக்கத்துக்கு எதிராக தென்தமிழகத்தில் முதல் குரல் கொடுத்தவர். கடும்போரில் இவரை வென்ற வெள்ளையர்கள் இக்கோயில் வழியாக இவரை அழைத்துவந்தனர். அப்போது கடைசி ஆசையாக ஆலய தரிசனம் செய்ய விரும்பியதாகப் புலித்தேவன் கூறினாராம். இதையொட்டி கோயிலுக்குள் சென்ற பூலித்தேவன் கண் இமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டாராம். இங்குள்ள ரகசிய குகை வழியாக அவர் தப்பித்துச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. அந்த இடம் தற்போது பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்திய விடுதலைப்போருக்கு முதல் வித்தை ஊன்றிய மாவீரன் புலித்தேவன் மீது அதிக பற்றும், பாசமும் கொண்டவர் ஊத்துமலை ஜமீன்தார் எஸ்.எம். பாண்டியன். மாவீரனின் மறைந்த வரலாற்றை வெளியே கொண்டுவர பல முயற்சி செய்தவர். மன்னன் புலித்தேவன் பற்றி ஏராளமானோர் புத்தகம் எழுதியுள்ளனர். ஆனாலும் நெல்கட்டும் செவலில் கோட்டையும், சிலையும் உருவாக இவர்தான் மூலகாரணமாக செயல்பட்டவர்.

ஊத்துமலை ஜமீன்

ஊத்துமலை ஜமீன்தார்கள் கோயில்களை பராமரிப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக திகழ்ந்தனர். தமிழுக்கும் சிறந்த தொண்டாற்றிய அவர்கள் தாங்கள் வழிபடும் ஆலயத்தில் தங்கக் கொடிமரத்தை நிறுவி வணங்கி வருகின்றனர். கோயில்களை புனரமைப்பதிலும் திருவிழா நடத்துவதிலும் முன்னணியில் நிற்பர். கோமதி அம்மனை தங்களது வீட்டில் பிறந்த மகளாக எண்ணி அவரது திருமணத்தை தங்கள் இல்லத் திருமணம்போல் விமர்சையாக நடத்தி வருகின்றனர். ஜமீன்தார்கள் தென்பகுதிகளில் ஒரு குறுநில மன்னர்கள்போல ஆண்டு வந்தனர். அவர்கள் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் மறவர் பாளையமும், கிழக்குப் பகுதியில் நாயக்கர் பாளையமும் சிறப்புற்று விளங்கின. திருநெல்வேலி சீமையில் ஆட்சி செய்த மறவர் இனத்தைச் சேர்ந்த பாளையக்காரர்கள் அனைவரும் ராமநாதபுரம் பகுதியில் உள்ள “கிலுவை” நாட்டிலிருந்து வந்தவர்கள். மறவர் இனத்தில் கொண்டயங்கோட்டைப் பிரிவை சேர்ந்தவர்கள்தான் ஊத்துமலை ஜமீன்தார்கள்.

மதுரை மன்னன் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் பிரிக்கப்பட்ட 72 பாளையங்களில், ஊத்துமலை மிகப்பெரிதாக திகழ்ந்துள்ளது. இதன் ஆளுகைக்குள் 148 கிராமங்கள் இருந்தன. ஒரு காலக் கட்டத்தில் சுரண்டை ஜமீனையும் ஊத்துமலை ஜமீன்தார் ஏலம் எடுத்து தனது ஆளுகைக்கு கொண்டுவந்தார். ஊத்துமலை ஜமீன்தாருக்கு விஜயகுணராம பாண்டியன் என்ற பட்டம் உண்டு. இவர் உபய சாமரம், புலிக்கொடி, மகரக்கொடி, இந்திரனின் கொடியான வலரிக் கொடி ஆகியவற்றைப் பெற்றவர். பாண்டிய மன்னன் பல்வேறு காலகட்டங்களில் இவரது செயல்திறனுக்கு ஏற்ப இவற்றை வழங்கியுள்ளார். ஊத்துமலை பாளையம் எப்படி உருவாயிற்று? பாண்டிய மன்னன் மதுரையிலிருந்து தெற்கே திருநெல்வேலிச் சீமையிலுள்ள உக்கிரன் கோட்டைவரை ஆட்சி புரிந்து வந்தான். உக்கிரன் கோட்டையைச் சுற்றி வாழ்ந்த குறும்பர்கள் பாண்டிய மன்னனுக்கு பல தொல்லைகளைக் கொடுத்தனர். இவர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று மன்னன் முயற்சி செய்தான். அப்போது ஊத்துமலை ஜமீன்தார்களின் முன்னோர்கள் பெரும் படையெடுத்து வந்து குறும்பர்களின் தொல்லைகளை அடக்கினர்.

இதனால் ஊத்துமலைப் பாளையம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்தச் சமயத்தில் ஊத்துமலை பெருங்காடாக இருந்தது. ஜமீன்தார் தங்களது உறவுக் கூட்டத்தை அழைத்து வந்து காடுகளை அழித்து சீரமைத்து ஊரை உருவாக்கினார். அதன் பின் கோட்டை கட்டி வாழ்ந்து வந்தார். ஊத்துமலை ஜமீன்தார் சேரநாட்டிலிருந்து வந்ததாகவும் இதனாலேயே இவர் வம்சா வழியினர் வைணவ மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. வல்லப மகாராஜா (1534-1543) தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். இவர் நடத்திய நவராத்திரி விழாவிற்கு ஊத்துமலை மன்னர் வந்து சிறப்பு செய்தார். (தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தெப்பத்திருவிழாவை ஊத்துமலை ஜமீன்தார் வாரிசுகள் இப்போது நடத்தி வருகின்றனர்.) பாண்டியன் அரண்மனையில் தசரா விழா நடந்து கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் வீரதீர செயல்கள் நடைபெறும். இதன் பொருட்டு சண்டையிடுவதற்காக இரண்டு யானைகள் கூட்டி வரப்பட்டன.

அதில் ஒரு யானை தப்பிச் சென்று வீதியில் தென்படும் மக்களை எல்லாம் தூக்கி வீசி காலால் மிதித்துக் கொல்ல முயன்றது. அந்த சமயத்தில் ஊத்துமலை மன்னர் அங்கு வந்து தைரியமாக யானையை அடக்கினார். இதை அறிந்த பாண்டிய மன்னன் அந்த யானையின் மீது ஜமீன்தாரை ஏற்றி மேளதாளத்துடன் வீதிஉலா வரச் செய்தார். அவருக்கு ஏராளமான பரிசுகளையும் வழங்கி வழியனுப்பி வைத்தார். தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டிய மன்னன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியனுக்கும் ஊத்துமலை பாளையக்காரர்கள் உதவியுள்ளனர். மதுரையில் நாயக்கர் ஆட்சியை ஒழித்து விட்டு பாண்டியர் ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்த மாவீரன் பூலித்தேவன் தலைமையில் ஐந்து கோட்டைகள் அமைக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானது ஊத்துமலை கோட்டை. ஊத்துமலையில் கட்டப்பட்ட கோட்டைக்கு பஞ்ச பாண்டியர்களில் ஒருவரான மாறவர்மன் பெயர் சூட்டப்பட்டது.

‘ஊற்று’ உள்ள மலை ‘ஊற்றுமலை’ என்றழைக்கப்பட்டு நாளடைவில் ஊத்துமலை என்று வழங்கலாயிற்று. ஊத்துமலை ஜமீன்தார்கள் ஆட்சி துவங்கிய காலம் அறியப் போதிய ஆதாரம் இல்லை. ஊத்துமலை ஜமீன்தார்கள் காட்டுக்குள் “டானா” என்ற இடத்தின் வடக்குப் பகுதியில் முதல் கோட்டையையும், ஊத்துமலை நகருக்கு வடக்கே உள்ள “வையம் தொழுவான்பாறை” என்ற இடத்தில் இரண்டாவது கோட்டையையும் அமைத்துள்ளனர். நாளடைவில் ஆட்சிப்பரப்பு விரிந்ததால் அரண்மனையை இடம் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் மூன்றாவதாக ஊத்து மலையில் தற்போது ஆர்.சி. பள்ளி இருந்த இடத்துக்கு அரண்மனையை மாற்றினார்கள். இங்குதான் தமிழ்ச் சங்கம் நடத்தப்பட்டது. அரசவைக்கு பல கவிஞர்களை வரச்செய்து ஜமீன்தார்கள் தமிழ் வளர்த்தனர். இருதாலய மருதப்பதேவர் தனது காதல் மனைவிக்காக வீரகேரளம்புதூரை தலைநகராக மாற்றி அரண்மனையைக் கட்டினார். ராணி மீனாட்சி சுந்தர நாச்சியார் அருகிலுள்ள குருந்தன்மொழி கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.


ஊத்துமலையில் அரண்மனை இருந்தபோது இருதாலய மருதப்பதேவர் பரிவாரங்களுடன் தனது குதிரையில் குருந்தன்மொழி சென்றார். அந்த சமயத்தில் மீனாட்சி சுந்தர நாச்சியாரை பார்த்து அவரது அழகில் மயங்கினார். தனது உடைவாளை அனுப்பி அவரிடம் மணம் முடிக்க சம்மதம் கேட்டார். ‘‘ஜமீன்தாரை மணக்க நான் சம்மதிக்கிறேன். ஆனால், வானம் பார்த்த பூமியான ஊத்துமலைக்கு நான் வாழ்க்கைப் படமாட்டேன். குளிர்ச்சியான இடத்தில் ஒரு அரண்மனை கட்டினால் நான் அவரோடு வாழ்கிறேன்” என்றார் மீனாட்சி சுந்தர நாச்சியார். உடனே ஜமீன்தார் சிற்றாற்றின் குறுக்கே “தாயார் தோப்பு” என்னும் இடத்தில் தடுப்பணை கட்டினார். அந்த அணையிலிருந்து வீராணம் கால்வாய் வெட்டினார். வீரகேரளம்புதூர் என்ற இடத்தில் கால்வாயின் இருபுறங்களிலும் அரண்மனையைக் கட்டினார். அந்தக் காலத்திலேயே நீர்வழிப்பாதையை கட்டுப்படுத்தி மதிநுட்பத்துடன் தடுப்பணையை அவர் கட்டினார். ஆற்றில் வெள்ளம் வந்தால் அரண்மனை அழிந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு பர்லாங் தூரத்தில் ஒரு வடிகாலையும் அமைத்தார். அருகிலேயே நவநீத கிருஷ்ண சுவாமி கோயிலை கட்டினார்.



தொடர்ந்து அரண்மனையை வீரகேரளம் புதூருக்கு மாற்றினார். 25.5.1864 அன்று இருதாலய மருத்தப்ப தேவருக்கும் மீனாட்சி சுந்தர நாச்சியாருக்கும் திருமணம் நடந்தது. அரண்மனையின் ஒருபுறம் இருவரும் வாழ்ந்தனர். மறுபுறம் ராஜதர்பார் நடந்தது. அதில், புலவர்களை அழைத்து வந்து தமிழ் வளர்க்கும் பணியும் தொய்வில்லாமல் நடந்தது. இரவு பகலாக ஓலைச் சுவடியில் புலவர் பெருமக்கள் கவிதைகளை வடித்தனர். காதல் மனைவிக்காக ஊத்துமலை ஜமீன்தார் கட்டிய அரண்மனை வீரகேரளம் புதூரில் இப்போதும் சிறப்புடன் காணப்படுகிறது. ஊத்துமலையை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் வீரகேரளகுலவர்மன் (1021-1028) பெயரால் இந்த ஊர் உருவாகியிருக்கலாம். வீரகேரளம்புதூர் நகரை நிர்மாணித்த பிறகு திறப்பு விழாவிற்கு அப்போதைய சேர மன்னனை அழைத்து சிறப்பித்துள்ளனர். விழாவுக்கு வந்த சேரமன்னன் இங்குள்ள மக்கள் வீரமாக இருப்பதையும் இப்பகுதி கேரளம்போல் செழிப்புடன் இருப்பதையும் பார்த்து இதற்கு “வீரகேரளம்புதூர்” என்று பெயர் சூட்டியதாகவும் கூறப்படுகிறது.


விழா, முடிந்து சேர மன்னன் தனது நாட்டிற்கு திரும்பும் வேளையில் ஊத்துமலை ஜமீன்தார் அவருக்கு ஒரு விநாயகர் சிலையை பரிசாக கொடுத்தார். அந்த சிலையை செங்கோட்டையில் பிரதிஷ்டை செய்தனர். அந்த கோயில் அமைந்துள்ள தெருவுக்கு “வீரகேரள விநாயகர் தெரு” என்று பெயரிட்டனர். தற்போதும் இந்த பெயர் விளங்கி வருகிறது. கேரளம் என்னும் பெயருக்கு ஏற்ப இந்த ஊர் கேரள நாட்டின் சாயலைக் கொண்டுள்ளது. தென்னை, மா, பலா, வாழை ஆகிய மரங்கள் செழிப்பாக காணப்படுகின்றன. இவ்வூர் தெப்பத்தில் உள்ள மண்டபம் கேரள கட்டிடக் கலையை ஒத்துள்ளது. மன்னர் மருதப்பபூபதி காலத்தில் வீரகேரளம்புதூர் “மருதபூபதி” என்னும் பெயருடன் விளங்கியதாக குறிப்பு உள்ளது. ஊத்துமலை ஜமீன்தார்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், திருக்குற்றாலம் குற்றால நாதர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களின் நித்திய பூஜைக்கு நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர். மன்னார்கோயிலில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலில் கொடிமரம் நிறுவினார்கள். நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்துக்கும் ஊத்துமலை மன்னருக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.


ஊத்துமலை ஜமீன்தார்களின் குலதெய்வம் நவநீதகிருஷ்ணசாமி. வைணவ மதத்தைச் சேர்ந்தவர்களாக அவர்கள் விளங்கியதால் அங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் ஜீயர் சுவாமிகள் பங்கேற்று சிறப்பித்துள்ளார். நவநீதகிருஷ்ண சுவாமிக்கு மன்னர் தேரோட்டத் திருவிழா நடத்தினர். இறைவனுக்கு ஏராளமான அணிகலன்களையும் நிலங்களையும் வழங்கினர். வீரகேரளம்புதூரில் அரண்மனையின் தென்புறத்தில் ஸ்ரீ நவநீதகிருஷ்ணசாமி கோயில் உள்ளது. அங்கே நித்திய நைவேத்தியங்கள் சிறப்பாக நடைபெறுகிறது. அதற்குரிய நித்திய படித்தரம் பத்து வராகன், லாடு, லட்டு, ஜிலேபி, தேன்குழல் முதலியவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும். ஒரு லாடு என்பது உரித்த தேங்காய் அளவுக்கு இருக்கும். தேன்குழல் பெரிய சந்தனக்கல் அளவுக்கு காணப்படும். தினந்தோறும் காலையில் விஸ்வரூபம், திருமஞ்சனம், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம் ஆகிய நான்குகால பூஜைகள் இங்கு சிறப்பாக நடக்கின்றன.



இந்தக் கோயிலில் முன்பு ரதவீதியில் தேர் உள்ளது. தேரைக் கடந்து உள்ளே நுழைந்தால் பிரமாண்ட வளைவு வரவேற்கிறது. “1911ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதியாகிய இன்றைய தினம் டெல்லி மாநகரில் நடக்கும் மாட்சிமை தாங்கிய இந்திய சக்கரவர்த்தி 5வது ஜார்ஜ், சக்கரவர்த்தினி மேரி இவர்களுடைய மகுடாபிஷேக மகோத்சவம் குறிப்பாக திருநெல்வேலி ஜில்லா, ஊத்துமலை ஜமீன் ராஜா பத்தியுள்ள பிரஜைகளால் இயற்றப்பட்டது” என்று அதில் தமிழில் கல்வெட்டு காணப்படுகிறது. எதிரே ஆங்கிலத்திலும் இதே தகவல் கல்வெட்டில் உள்ளது. இருபுறமும் உள்ள வீடுகள். தொடர்ந்து நடந்தால் தொன்மையான சிறப்புமிக்க நவநீத கிருஷ்ண சுவாமி கோயிலை அடையலாம். கோயிலின் முன்பக்கம் இரும்பாலான தீபஸ்தம்பம் உள்ளது. அந்தக் காலத்தில் இரவு முழுவதும் அணையாமல் தீபம் எரிய காவலர்கள் எண்ணெய் ஊற்றிக்கொண்டே இருப்பார்கள். கோயிலின் முன்புள்ள கல் மண்டபத்தில் உபரியான தேர்ச் சக்கரங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

கோயில் கதவு அருகே மியூரல்வகை ஓவியங்கள் பிரமிக்க வைக்கின்றன. நெடிய கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால் வலதுபுறம் திருவிழாக் காலங்களில் அரண்மனைப் பெண்கள் அமர்ந்து பூஜை செய்யும் காட்சி மண்டபம் உள்ளது. இங்கு தங்கக் கொடிமரம் கம்பீரமாக நிற்கிறது. இந்தக் கொடிமரத்தைச் சுற்றிவந்து வழிபடுகிறவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும், திருமணம் கைகூடும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

நவநீத கிருஷ்ணன் கோயில் கொடிமரத்தைக் கடந்ததும், ஊத்துமலை ஜமீன்தார் இருதாலய மருதப்ப தேவரின் சிலை கம்பீரமாக காட்சியளிக்கிறது. தமிழையும், ஆன்மிகத்தையும் இரண்டு கண்களாக போற்றி பாதுகாத்த இவரது தோற்றம் பார்ப்பவர்களை வணங்கத் தூண்டுகிறது. இவரது தமிழ் பற்றுக்கு உதாரணமாக கோயில் வளாகத்தில் ஏராளமான ஓலைச்சுவடிகள் தற்போதும் காணப்படுகின்றன. எழுதி முடித்தும் முடிக்காமலும், பதம் செய்யப்பட்டும் நேர்த்தி செய்யப்படாமலும் உள்ள அந்த ஓலைச்சுவடிகள் உள்ளன. இங்குதான் இருதாலய மருதப்ப தேவர் தமிழ் அறிஞர்களைக் கொண்டு ஓலைச்சுவடிகளை எழுதியுள்ளார். ஆலயத்தின் வெளிப்பிராகாரத்தில் நூற்றுக்கணக்கானோர் அமர்ந்து பணி மேற்கொண்டிருந்திருக்கின்றனர். அந்தச் சுவடிகள்தாம் இவை.

மருதப்பரின் உறவினர்கள் சிலரும் பெருங்கவிஞர்களாக, இறையருள் பெற்ற புலவர்களாகத் திகழ்ந்துள்ளனர். இருதாலய மருதப்பத்தேவர் கல்வி ஞானம் மிகுந்தவர். தமிழறிஞர்களிடம் அவர் மிகுந்த நேசம் கொண்டிருந்தார்; அவர்களை அரவணைத்து உதவுவார். டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் எழுதிய “நான் கண்டதும், கேட்டதும்” என்னும் நூலில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஓலைச் சுவடிகளை, புத்தகங்களாகப் பதிப்பித்த அண்ணல் அவர். அவர் பணி சிறக்க, இரண்டு வில் வண்டிகள் நிறைய ஓலைச் சுவடிகளை இருதாலய மருதப்பதேவர் வழங்கியுள்ளார். “ஊத்துமலை ஜமீன்தார்கள் கலைகளை மட்டுமன்றி, தமிழ் அறிஞர்களையும் போற்றி வந்தனர்.

இவர்களது அரண்மனையில் அதிகமான ஓலைச்சுவடிகள் உள்ளன. நான் முதல் முதலில் இருதாலய மருதப்ப தேவரை அரண்மனையில் சந்தித்தபோது அவர் வேட்டைக்காரர் கோலத்தில் இருந்தார்’’ என்றும் “மன்னர் மருதப்பர், தினமும் காலையில் நான்கு மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடிப்பார். பாலை பருகி 6 மணிக்கெல்லாம் பரிவாரங்களுடன் நகர் உலா செல்வார். யானை, குதிரை, காளை கட்டுமிடங்களை நேரடியாக பார்வையிடுவார். அவரால் அமைக்கப்பட்ட இருபுறமும் மரங்கள் சூழ்ந்த சாலையைப் பார்வையிட்டுக் கொண்டே உலாவுவார். காலை 8 மணி முதல் 10 மணி வரை தமிழ்ப் புலவர்களுடன் கலந்துரையாடுவார். காலை 10 மணிக்கு மேல் அரண்மனை கச்சேரிக்கு சென்று சமஸ்தான பணிகளை கவனிப்பார். மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் 2 மணிக்கு தமிழ் நூல்களைப் படிக்க உட்காருவார். தொடர்ந்து மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை சமஸ்தான வேலைகளில் ஈடுபடுவார். பின்னர் தன்னை பார்க்க வந்தவர்களை உபசரித்து பேசுவார். ஓலைகளில் எழுதியுள்ளதை அவர்கள் நீட்டுவார்கள். அவற்றை படித்து பார்த்து மறுநாள் தனது கருத்தை சொல்வார். மாலையில் நல்ல பாடல்களை இசைக்கச் செய்து ஆலய வழிபாடு மேற்கொள்வார். வெளியூரில் இருந்து வந்த விருந்தினர்களை அவரே கோயிலுக்கு அழைத்து சென்று மரியாதை செய்து பிரசாதம் வழங்கி கவுரவிப்பார்” என்றும் தனது நூலில் உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார்.

கோயில்களில் கவி பாடவும், ஓலைச்சுவடிகளை எழுதவும் கவிராயர்களை இருதாலய மருதப்பர் பணியமர்த்தினார். சங்கர நமச்சிவாயர் என்னும் புலவரை நன்னூலுக்கு உரை எழுதச்செய்தார். மாதம் ஒன்றுக்கு நான்கு கோட்டை நெல்லும், தினந்தோறும் ஒருபடி பாலும் அவருக்கு சன்மானமாக வழங்கப்பட்டது. இவரைக்கொண்டே தொல்காப்பியத்துக்கும் ஊத்துமலை ஜமீன்தார் உரை எழுதவைத்தார். அந்த உரை திருவனந்தபுரம் அரசு காப்பகத்தில் தற்போதும் பாதுகாக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. சைவத்தையும் வைணவத்தையும் ஒருங்கே கருதிய மருதப்பர், அகரம் என்ற நகரில் மனக்காவல் ஈஸ்வரர், சிவகாமியம்மைக்கு பெருங்கோயிலை கட்டியுள்ளார் என்கிறார் டாக்டர் ராஜையா.

ஊத்துமலை ஜமீன் வருவாய் தரக்கூடிய 52 கிராமங்களை உள்ளடக்கியது. அதில் கீழப்பாவூர், மேலப்பாவூர் கிராமங்களில் 272 ஏக்கர் நிலம் ஜமீன்தாருக்கு சொந்தமாக இருந்தது. இந்த இடங்களை வீரகேரளம்புதூர் நவநீத கிருஷ்ணசாமி கோயிலுக்கு எழுதி வைத்தார். அப்போதைய நிலவரப்படி ரூ 60 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், வெள்ளிப் பொருட்களையும் கோயிலுக்கு அளித்தார். இவரைப் போற்றி 344 பாடல்களை அண்ணாமலை ரெட்டியார் பாடியுள்ளார். ஒரு சமயம் மருதப்பத்தேவர் கழுகுமலை முருகனை தரிசிக்க நடந்து சென்றார். அப்போது பயணம் எளிமையாக அமைய காவடிச்சிந்து பாடல்களை அண்ணாமலை ரெட்டியார் பாடியவாறு கூடவே சென்றார். இப்பாடல்களை புலமை படைத்த ஊத்துமலை மன்னரே இயற்றியதாக ஒரு கருத்து உள்ளது என்கிறார் எழுத்தாளரும், தென்காசி அரசு வக்கீலுமான மருது பாண்டியர். இப்பாடல்களை நூலாக வெளியிட்டார் மருதப்ப மன்னர். இந்த காவடிசிந்து ஐ.நா சபையில் இசைப் பேரரசி எம்.எஸ். சுப்புலெட்சுமியால் பாடி கூடுதல் பெருமை பெற்றது. இந்நூலில் அரண்மனையின் அலங்காரத்தைப் பற்றியும், மருதப்பரின் செல்வச் செழிப்பான வாழ்க்கை மற்றும் இறைபக்தி பற்றியும் வர்ணித்து எழுதப்பட்டுள்ளது.

ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியை அடுத்து கோயிலைச் சுற்றி வரும்போது சுவாமி வாகனங்களைக் காணலாம். பொதுவாக கோயில்களில் காணப்படும் மரத்தால் செய்யப்பட்ட வாகனங்கள்போல் இல்லாமல், இங்கு செப்பு உலோகத்தால் செய்யப்பட்ட தேர், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்கள் உள்ளன. இவை ஜமீன்தார்கள் கோயிலுக்கு தானமாக அளித்தவை. கோயில் வெளிபிராகாரத்தில் தற்போது ஆஞ்சநேயர், நவகிரக சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.12.09.1891 அன்று மருதப்பர் இப்பூவுலகை நீத்தார். மனம் கலங்கிய ராணியார் செய்வதறியாமல் தவித்தார். கணவரின் நோக்கத்தை ஈடேற்றவேண்டும் என்று உறுதி பூண்டார். நவநீத கிருஷ்ண சுவாமியின் அருளோடு அவர் ஆட்சி பொறுப்பை ஏற்க முன்வந்தார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் கணவனை இழந்தவர் அரசாட்சி செய்ய முடியாது என்று ஒரு சட்டம் இருந்தது. மகாராணி, கணவர் இருதாலய மருதப்ப தேவர் போல மாவு பொம்மை ஒன்றைத் தயார் செய்தார். அவர் உயிரோடு இருந்தபோது மேற்கொண்டிருந்த அலங்காரங்களை தினமும் அந்தச் சிலைக்குச் செய்தார். ராஜதர்பாரில் அந்த பொம்மையை ராஜாவாக நிறுவி அதன் காலை தொட்டு வணங்கிய பின்னரே தனது அன்றாட செயல்களைத் தொடங்கினார். மருதப்பர் விட்டுச்சென்ற பணிகளை எல்லாம் சிரமேற்கொண்டு செய்தார். கோயிலுக்கு அருகே பொதுமக்களுக்காக கிணறு ஒன்றை வெட்டினார். அன்ன சத்திரம் அமைத்தார். கோயில் வளர்ச்சிக்காக, வீரகேரளம்புதூர், கலிங்கம்பட்டி, வடக்கு கிருஷ்ணபேரி (ம) ராமனூர், ராஜகோபாலபேரி, அச்சங்குன்றம், மேலகிருஷ்ணபேரி, முத்துகிருஷ்ணபேரி ஆகிய ஏழு கிராமங்களை இணைத்தார். (இதுகுறித்த கல்வெட்டு கோயில் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது.)


மருதப்பர் உயிரோடு இருப்பதாகவே பாவித்து அந்த மாவு பொம்மையுடன் அரசாட்சி செய்தார் ராணி. தற்போது 150 வருடங்களை தாண்டியும் அந்த மாவு பொம்மை ஜமீன்தாரின் வாரிசான பாபுராஜ் என்ற மருதுபாண்டியரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்படி, இருதாலய மருதப்ப தேவர் இன்றும் தம்முடன் வாழ்வதாகவே ஜமீன் வாரிசுகள் நம்புகின்றனர்.

நவநீத கிருஷ்ணன் கோயில் ஜமீன் நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் அனைத்து சமுதாயத்துக்கும் மண்டகப்படி உண்டு. கோயிலில் பங்குனி உத்திர திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். முதல்நாள் திருவிழாவை பிராமண சமூகத்தினரும், இரண்டாம் நாள் யாதவர் சமூகத்தினரும், 3வது நாள் பிள்ளைமாரும், 4வது நாள் கர்ணம் வகையாறாக்களும், 5வது நாள் நாச்சியார் என்னும் அரண்மனை பெண்களும், 6வது நாள் வீராணம் தேவர் இனத்தவர்களும், 7வது நாள் சின்ன புலியப்ப தேவர் வகையறாக்களும், 8வது நாள் ஜமீன் உறவினர்களும், 9வது நாள் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களும், 10வது நாள் சேனை தலைவர் சமுதாயத்தினரும் நடத்தி வருகின்றனர். தேர்த்திருவிழா மிக விமர்சையாக நடக்கும். முதலில் ஜமீன்தார் வடம் பிடித்து இழுத்த பின்னரே தேரோட்டம் நடக்கும். வானில் கருடன் வட்டமிட்ட பிறகே தேரை வடம் பிடித்துக்கொடுப்பார் ஜமீன்தார். தேரடி முக்கில் ஒரு காவல் தெய்வம் உள்ளது. இந்த தெய்வத்துக்கு அசைவப் படையலும் உண்டு. மழை பொய்த்தால் ஜமீன்தார் தலைமையில் இந்த தெய்வத்துக்கு பூஜை நடக்கும். உடனடியாக மழைபொழியும் அதிசயமும் நடந்துள்ளது.

நவநீத கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடைபெறும். அதுசமயம் ஆலயத்தில் வேலை செய்யும் அனைவரும் கோயில் நிர்வாக அதிகாரி தலைமையில் அரண்மனைக்கு சென்று மேளதாளத்துடன் ஜமீன்தாரை அழைத்து வருவர். சரியாக நள்ளிரவு 12 மணிக்கு கிருஷ்ணர் அவதரித்த நேரத்தில் முதல் தரிசனம் ஜமீன்தாருக்குத்தான். அவருக்கு பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து, சீடை, அப்பம், வெண்ணெய், அவல், பொரி ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும். அதன் பிறகே மற்றவர்கள் தரிசனம் செய்வர். அன்றைய தினம், குருவாயூரில் இருப்பது போலவே சிறப்பு அலங்காரத்தில் குழந்தையாக நவநீத கிருஷ்ணன் காட்சியளிப்பார். இங்குள்ள உற்சவர் ராஜகோபாலன், ருக்மணி, சத்யபாமா சிலைகள் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டவை. சரஸ்வதி பூஜையின்போது வீரகேரளம்புதூரில் உள்ள முப்பிடாதி அம்மன், உஜ்ஜயினி மாகாளி அம்மன், கருமேனி அம்மன் கோயில்களில் கொலு வைப்பார்கள். மூன்று அம்மன்களும் சப்பரத்தில் பவனி வருவர். அன்று ராஜகோபால சுவாமி பரிவேட்டைக்கு சப்பரத்தில் புறப்படுவார். அன்றும் ஜமீன்தார் வந்து துவக்கி வைத்த பின்னரே சப்பரம் புறப்படும்.




இருதாலய மருதப்ப தேவரையும், அவருக்கு பிறகு அரியணை ஏறிய ராணி மீனாட்சி சுந்தர நாச்சியாரையும் ஜமீன் சுப்பையா தேவர் கடவுளாகவே கருதினார். சிற்றாற்றின் கரையில் இருதாலய ஈஸ்வரர் என்ற பெயரில் ஒரு சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிவனுக்கு இருதாலய மருதப்பர் என்றே பெயர்! கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள சிவபெருமான் மருதப்ப தேவராகவே வணங்கப்பட்டு வருகிறார். தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் சந்நதி கருவறையில் ராணி மீனாட்சி சுந்தர நாச்சியாரின் சிலை உள்ளது. இருவரையும் வணங்குவது போல எதிரே உள்ள தூணில் சுப்பையா தேவர் சிலை காணப்படுகிறது.

இந்தச் சிறிய கோயிலில் நவகன்னிகள், நந்தியம்பெருமான் உள்ளிட்ட தெய்வங்களும் உள்ளன. இக்கோயிலில் பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடந்து வருகின்றன.ஜமீன்களின் சீரிய ஆன்மிகப் பணியைப் பறைசாற்றும் வகையில் கோமதி அம்மனை ஜமீன்தார் தனது மகளாக பாவித்து வழிபடும் திருவிழா நடைபெறுகிறது. பொதுவாக ஒரு பெண் தெய்வத்தை அன்னையாக பாவிப்பது வழக்கம்; ஆனால், மகளாக பாவித்து நடத்தப்படும் இந்த அதிசய வழிபாடு நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கர நாராயண சுவாமி கோயிலில் நடக்கிறது.

நம் ஊர்களின் பெயர்களும் அதற்கான காரணங்களும்.

நம் ஊர்களின் பெயர்களும் அதற்கான காரணங்களும்.

இப்படியும் இருக்கலாம் என்று என் சிந்தனையில் உதித்தவை.

வீரகேரளம்புதூர்- வீரகேரளனின் புதிய ஊர் அல்லது வீரமாய் கேரளாவைப் போல செழிப்பான புதிய ஊர்.

கழனீர்குளம்- வயல்வெளிகள் சூழ்ந்த்க் குளம் அல்லது செங்குவலைப் பூக்கள் நிறைந்த குளம்.

அத்தியூத்து- அத்தி மரத்தில் நீர் ஊற்று வந்த இடம்.

ஊற்றுமலை- ஊற்று நீர் மலை உள்ள இடம் அல்லது நீர் ஊற்று உள்ள மலை.

வீராணம்- வீர ஆண் இனம் அல்லது வீர ஆ இனம்.

திருநெல்வேலி-நெல்வயல்களை வேலியாக உடைய ஊர்.

அம்பாசமுத்திரம் -மரகதவல்லி அம்பாள் பெயரால் அம்மை மற்றும் பெரிய ஏரிகள் சமுத்திரம் என்றும் சேர்த்து அம்பாசமுத்திரம்.

பாபநாசம்-பாபம் நாசம் ஆகும் இடம்.

விக்கிரமசிங்கபுரம் -விக்கிரமசிங்கன் இடம்.

சுரண்டை- சுரர் அண்டிய இடம்.- அசுரர்களுக்குப் பயந்து தேவர்கள் தஞ்சமடைந்த இடம்.

சாம்பவர்வடகரை-அகத்திஷ்வரர்சாம்பவமுர்த்தி- சாம்பவமுர்த்தி கோவிலுக்கும் அனுமன் நதிக்கும் வடகரையில் அமைந்த இடம்.

சுந்தரபாண்டியபுரம்-சுந்தரபாண்டியன் இடம்.

வேலாயுதபுரம்- வேல் ஆயுத இடம்- வேல் ஆயுதம் கொண்டவர்களின் இடம்.

ஊர்மேனிஅழகியான்- அழகிய உருவம் உடைய ஊர்.

கடையநல்லூர்- கடையன்+ நல்லூர் -இளையவனின் நல்ல ஊர்.

வாசுதேவநல்லூர்-வாசுதேவனின் நல்ல ஊர்.

சிவகிரி- சிவன் மலை.

ஆய்க்குடி- ஆயர்கள் குடும்பம் அல்லது ஆயர்கள் வாழிடம்.

தென்காசி-தென் திசையில் உள்ள காசி அல்லது தெற்கே உள்ள காசி.

செங்கோட்டை- செங்கற்களால் கட்டப்பட்ட கோட்டை.

திருமலைக்கோவில்- சிறப்பு மிகுந்த மலைக் கோவில் அல்லது மரியாதைக்குரிய மலை கோவில்.
அழகனின்(முருகன்) மலை கோவில்.

பண்பொழி -பைம்பொழில்-பசுமையான சோலைகள் நிறைந்த இடம்.

வடகரை- அனுமன் நதிக்கு வடகரையில் அமைந்த இடம்.

Saturday, 11 February 2017

மானூர் பெரியகுளம்

7ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் மணல் தேங்கி மேடான மானூர் பெரியகுளம் தூர்வாரி சீரமைக்க கோரிக்கை
2/10/2017 12:41:05 PM


மானூர்: 7ம் நூற்றாண்டின் சீமாற வல்லப பாண்டியனால் வெட்டப்பட்ட மானூர் பெரியகுளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானூர் பெரியகுளம் 7ம் நூற்றாண்டு தமிழ் மன்னனான சீமாற வல்லப பாண்டியனால் வெட்டப்பட்டது. பொதுப்பணித்துறையின் கணக்குப்படி நீர்பிடிப்பு பரப்பளவு 1695 ஏக்கர். 190 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாக கூறப்படுகிறது. மானூர், மாவடி, மதவக்குறிச்சி, எட்டான்குளம் ஆகிய 4 ஊராட்சிகளை சேர்ந்த வயல்வெளியை உள்ளடக்கியது இக்குளம். இது 5000 ஏக்கர் நிலத்துக்கு பாசன குளமாகவும், 25 கிராமங்களுக்கு நீராதாரமாகவும் இருக்கிறது.
மன்னர்கள் காலத்தில் தாமிரபரணி ஆற்றில் முக்கூடல் திருப்புடைமருதூர் இடையே மண்ணால் அணைகட்டி மதிகெட்டான் கால்வாய் வழியாக மானூர் பெரிய குளத்துக்கு நீரை கொண்டுவந்துள்ளனர். காலப்போககில் அந்த அணை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு தூர்ந்து போனது. இன்றளவும் அதன் அடிச்சுவடுகள் காணப்படுகின்றன.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தாமிரபரணியின் கிளை நதியான சித்ரா நதி எனப்படும் சிற்றாற்றிலிருந்து நீராதாரக் கால்வாய் அமைத்து, வீரகேரளம்புதூர் அருகேயுள்ள தாயார் தோப்பு என்ற இடத்தில் சிற்றாற்றின் குறுக்கே 215 மீட்டர் நீளத்தில் அணை கட்டி, 32.50 கி,மீ தூரம் கால்வாய் வெட்டி, அக்கால்வாயின் 20வது குளமாக மானூர் பெரியகுளத்தை இணைத்தனர். மானூர் பெரியகுளம் நெல்லை மாவட்டத்தில் 2வது பெரிய குளம் என்றாலும், 185 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கருப்பா நதி அணை, 174 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அடவி நயினார் அணை, 152 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ராமாநதி அணை, 25 மில்லியன் கன அடி கொண்ட குண்டாறு அணைகளை விட பெரியது.

இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் இக்குளம் காய்ந்து வறண்ட நிலையில் காணப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து நிரம்பிய நிலையில், இந்த ஆண்டு பருவமழை பொய்த்து வறண்டு போனதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
முன்னொரு காலத்தில் மானூர் பெரியகுளம் ஒரு முறை நிரம்பினால் தொடர்ந்து 3 ஆண்டுகள் வற்றாமல் கிடக்குமாம்.
ஆனால், பலநூறு ஆண்டுகளாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மணல் அடித்து வரப்பட்டு 6 அடிக்கு மேல் மணல் மேவியுள்ளது. குளத்தினுள் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட மடைப்பகுதியின் நீர்போக்கு வழி குளத்தின் பரப்பிலிருந்து 6 அடி ஆழத்தில் அமைந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘மானூர் பெரியகுளத்தில் தண்ணீர் வற்றி வரும் காலங்களில் குளத்தின் மையப்பகுதியில் இருந்து 2 நபர்கள் சேர்ந்து இறவை வட்டி மூலம் நீர் இறைத்து குளத்து மடையின் நீர்வழிப்பாதைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இன்று 6 அடி பள்ளம் தோண்டியே நீர்வழிப்பாதைககு தண்ணீர் கொண்டு வர முடிகிறது. இதனால் குளத்தின் கொள்ளளவு சரிபாதியாக குறைந்துவிட்டது. மழைக்காலங்களில் வெகு விரைவில் குளம் நிரம்புவதோடு ஒரு வருட காலத்திற்குள் குளம் வறட்சியை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. காரணம், குளம் வெட்டி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை தூர்வாரப்படவில்லை. எனவே, அரசு இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதியும், பொதுமக்களின் குடிநீர் ஆதாரம் கருதியும் இக்குளத்தை 6 அடி ஆழத்திற்கு தூர்வார வேண்டும். இதனால், ஒரு முறை குளம் நிரம்பும் நிலையில் நீராதாரம் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடித்திருக்கும், என்றனர்.

Sunday, 14 August 2016

விரதம் இருப்பதால் கிடைக்கும் உடல்நல நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா??

நாம் ஆன்மீகம் மற்றும் மூட நம்பிக்கை என நினைத்துக் கொண்டிருக்கும் பல விஷயங்கள் நிஜத்தில் அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த விஷயங்கள் ஆகும். நமது முன்னோர்கள் மறைமுகமாகவும், தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் நம்மிடம் கட்டாயப்படுத்தித் திணித்த சில விஷயங்கள் தான், கால போக்கில் நம்முன் கண்மூடித்தனமான பக்தியாகவும், மூட நம்பிக்கையாகவும் மருவி நிற்கின்றன.
இந்த விஷயங்களில் நம்மில் சிலர் மட்டுமே, அதிலும் பெண்கள் மட்டுமே பெரும்பாலும் கடைப்பிடித்து வரும் விரதம் என்பது மருத்துவ ரீதியாக உடல் செல்கள் புத்துயிர் அடைய உதவும் ஒரு செயல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இன்று நம்மில் பலர் இதை கேலியும் கிண்டலும் செய்து வருகிறோம். இதனால் என்ன பயன் என்று நக்கல் அடித்து வருகிறோம்.
விரதம் பல வகைகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. சிலருக்கு ஒரு வேளை, சிலருக்கு 2 வேளை உணவு, வெறும் பழங்களை சாப்பிடுவது, உப்பு தவிர்த்து இனிப்பு மட்டும் எடுத்துக் கொள்வது, அசைவம் மட்டும் தவிர்ப்பது என்று விரதங்கள் உள்ளது. நாம் சாப்பிடுகிற உணவு செரித்து, உணவில் உள்ள கொழுப்புகள் ஆற்றலாக மாற்றப்பட குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தேவை. ஆனால் இடைவேளை கொடுக்காமல் அடுத்த வேளை சாப்பாட்டை உள்ளே தள்ளுவதால் உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பானது, உடல் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலாக மாறாமல் தடுக்கப்பட்டு அப்படியே தேங்கி விடுகிறது…
உடல்நிலை மாற்றம்
விரதம் இருப்பதனால் உங்களது உடல் மற்றும் மன நிலையில் அமைதி ஏற்படும் மற்றும் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.
நோய் எதிர்ப்பு
உடலில் உள்ள செல்கள் புத்துயிர் பெறுவதனால், உங்களது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உடல் எடை குறைவு
விரதம் இருப்பதனால் ஏற்படும் மற்றுமொரு சிறந்த பயன் என்னவெனில் உங்களது உடல் எடை குறைய இது பெருமளவில்
உதவும்.
மன நிலை மேன்மையடையும்
நீங்கள் விரதம் இருப்பதனால் உங்களது ஞாபக திறன் அதிகரிக்கிறது, ஒருமுகத்தோடு வேளைகளில் ஈடுப்பட விரதம் இருப்பது சிறந்த முறையில் பயனளிக்கும்
உணவு இடைவேளை
தினமும் அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளி கொடுப்பது கூட விரதம் தான்.
வாரம் ஒருமுறை
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது.
மூக்கு முட்ட உண்பது தவறு
வாரத்தில் எல்லா நாள்களும் மூன்று வேளைகளும் வயிறு முட்ட சாப்பிட்டு பழகிவிட்டு, திடீரென ஒரு நாள் விரதத்தை கடைப்பிடிப்பார்கள். அது தவறு.
விரதம் இருக்க வேண்டிய முறை
விரதத்துக்கு 2 நாள்களுக்கு முன்பிருந்தே காரம், குறைவான பருப்பு சாதம் மாதிரி நன்கு வெந்த உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.
புத்துணர்ச்சி
வாரமோ, மாதமோ ஒரு நாள் குறைந்த அளவு உணவை எடுத்துக் கொண்டு விரதம் இருப்பதே நல்லது. அது உடலில் சில செல்களை வளர்ச்சியடைய செய்யும். பழுதடைந்த செல்கள் புத்துயிர் பெறும்.
குழந்தைகள் மற்றும் முதியவர்கள்
குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பணி பெண்கள், கடுமையான வேலைகள் செய்பவர்கள், அடிக்கடி வெளியூர் செல்பவர்கள், நோயாளிகள் தொடர்ந்து மருந்து உட்கொண்டு வருபவர்கள் ஆகியோர் விரதமும் இருக்கக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Saturday, 26 March 2016

ச ரி க ம ப த நி!



Author: -இராஜை என். நவநீதிகிருஷ்ணராஜா


புலவர் அண்ணாமலையார் அகவையில் இளையோராயினும் பெரும்புலவர்கட்கு நிகரான புலமைத்திறன் மிக்கவர் என்பதை ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பர் அறிந்திருந்தார். எனவே, அவர் மீது மிக்க பற்றும் பாசமும் கொண்டு, அவருடன் அளவளாவிக் களித்தார்

புலவர் அண்ணாமலையார் அகவையில் இளையோராயினும் பெரும்புலவர்கட்கு நிகரான புலமைத்திறன் மிக்கவர் என்பதை ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பர் அறிந்திருந்தார். எனவே, அவர் மீது மிக்க பற்றும் பாசமும் கொண்டு, அவருடன் அளவளாவிக் களித்தார். இதனைக் கண்ணுற்ற ஏனைய புலவர்கள் அண்ணாமலை மீது பொறாமை கொண்டனர். ஜமீன்தார், அவர்களுக்கு அண்ணாமலையின் ஒப்பற்ற அறிவுத்திறனை உணர்த்த விரும்பினார்.

தம் அரசவைப் புலவர்களை அழைத்து, "சரிகமபதநி' எனும் தொடரினை யமகமாக வைத்து பாடல் ஒன்றினை இயற்றிடுக' எனக் கூறினார். அவைப் புலவர்கள் அனைவரும் அங்ஙனம் பாடும் வகை அறியாது திகைத்தனர். அண்ணாமலையோ சிறிதும் தாமதிக்காது,



"சரிகமப தநியேற்குச் சந்து சொல்என்

பாள் மதன்ஏ தைக்க மார்பில்

சரிகமப தநிசமனத் தார்க்கருள் சங்

கர எனும் அத்தத்தில் நில்லா

சரிகமப தநிதநிதம் அனையர் அருத்

திடினும் அருந்தாமல் வாடிச்

சரிகமப தநி எனப் பாடுதலைமறந்

தாள் இதயா லய சற் கோவே'



எனப் பாடினார். இதனை ரசித்துக்கேட்ட ஜமீன்தார் மகிழ்வுற, ஏனைய புலவர்களோ காழ்ப்புணர்ச்சி உற்றனர். அந்நிலை அறிந்த அண்ணாமலை பாடலின் பொருள் விளங்குமாறு பதம் பிரித்து விவரிக்கலானார். முதல் அடியில் அமைந்த சரிகம் என்பதற்கு வண்டு எனப் பொருள் உண்டு. எனவே, வண்டே எனக்காகத் தூது செல்வாயாக என விளக்கினார்.

அச்சமயம் அண்ணாமலையின் ஆசான் பெரும்புலவர் முகவூர் இராமசாமிக் கவிராயர் அவ்வரசவைக்கு வந்தார். அவர் அண்ணாமலையை இடைமறித்து, "சரிகம் எனும் சொல்லிற்குக் வண்டு எனும் பொருள் எங்ஙனம் பொருந்தும்? இலக்கியங்களில் எங்கேயாகிலும் சரிகம் எனும் சொல் வண்டு என இடம் பெற்றுள்ளதா? அங்ஙனம் இருப்பின் ஓர் இடத்தினைக் குறிப்பிடுவாயாக' என்றார்.

அதற்கு அண்ணாமலை, மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டில் "சரிகமே சரகமே, சஞ்சாளிகம் சுரும்பு கீடம்' என வந்துள்ளதே' என்றார். இதனைக் கேட்ட ராமசாமிக் கவிராயர், "முழுப்பாடலையும் பாடு' என்றார். உடனே,



"அரியளிஞிமிறு மந்தியறு பதஞ்சிலீ முகஞ்சஞ்

சரிகமே சரகமே சஞ்சாளிகஞ் சுரும்பு கீடம்

பிரமரமாவே கீதம் பிருங்கமே பிரிசம் புள்ளு

வரிகொள் புண்டரீகந் தும்பி மதுப

நாலைந்தும் வண்டாம்'



எனும் பாடலை இனிய ராகத்தோடு பாடினார். உடனே ராமசாமிக் கவிராயர், "சரிகம்' என்பது எங்ஙனம் வண்டு என பொருள்படும்?' என்றார். "சஞ்சரீகம், சரகம் என்பவைதான் வண்டினைக் குறிக்கும் சொற்களாகும். சரிகம் என்பது வண்டினைக் குறிக்கும் சொல்தான். எனவே, வேறு ஒரு பொருள் அமையுமாறு "சரிகமபதநி' எனும் ஏழு எழுத்துகள் வர மீண்டும் ஒரு யமகக் கவி பாடு' என்றார்.

இதனைச் செவிமடுத்த மற்ற புலவர்கள் அண்ணாமலையின் பாடல் தவறாக அமைந்துள்ளதை எண்ணி மகிழ்வுற்றனர். ஆனால், அவர்களது மகிழ்வு வெகுநேரம் நீடிக்கவில்லை. நுண்மாண் நுழைபுலம் மிக்க அண்ணாமலை கிஞ்சித்தும் தயக்கமின்றி "சரிகம்' எனும் சொல்லிற்குச் "சஞ்சரிக்கின்ற மேகம்' எனப் பொருள் கொள்ளலாமே... பாடலை ஏன் மாற்ற வேண்டும் என மிடுக்குடன் கூறினார்.



"இயம்புகின்ற காலத் தெகின மயில் கிள்ளை

பயம் பெறும் கம்பூவை பாங்கி }நயந்த குயில்

பேதை நெஞ்சந் தென்றல் பிரமா மீரைந்துமே

தூதுரைத்து வாங்குந் தொடை'



எனும் இரத்தினச் சுருக்கமாக தூதுக்குரிய பொருள்களுள் மேகம் ஒன்றுதானே! எனக் கூறினார். இவர்தம் பேராற்றலைக் கண்ட இராமசாமிக் கவிராயரோ பூரித்து நிற்க, ஏனைய புலவர்கள் வாயடைத்து நின்றனர். ஜமீன்தாரும் வியப்பின் மேலீட்டால், "இவர் புலவரில் இரட்டியல்லர்; மூவிரட்டி' எனப் பாராட்டி மகிழ்ந்தார்.

-இராஜை என். நவநீதிகிருஷ்ணராஜா

Sunday, 14 February 2016

காவடிச்சிந்து

சிந்து...

சிந்து என்பது ஒரு வகை இசைப்பாட்டு.

இசையின்பமும், சொல்லழகும், தாளக்கட்டும், எளிய நடையுமே சிந்துக்கு அழகும் உயிரும் கொடுப்பவை.

இசைக்கு உயிர் கொடுக்கும் இந்தப்பாட்டு, ஓர் இசைக்கலைஞனின் உயிரைக் காத்திருக்கிறது என்றால் வியப்புதானே.

வியப்புக்குக் காரணம் இதுவரை தமிழுக்காக, தமிழ்ப்பாடலுக்காக தன் இன்னுயிரை நீத்தவர்களைப் படித்திருக்கின்றோம். ஒரு பாடல் உயிரைக் காத்திருக்கிறது என்றால் வியப்புத்தானே. உயிர்காத்த அந்த வியப்பில் தமிழின்பமும் இணைந்திருக்கின்றது. இவ்விரண்டையும் இப்போது இனிதே சுவைப்போம்.

சிந்து இலக்கியம்

சிந்து இலக்கியம் பெரும்பாலும் மூன்று சீர்களைப்பெற்ற அடிகளால் ஆனது. அதனால் ‘சிந்து’ என அழைத்தனர் நம் முன்னோர்கள். பிறகு பல்லவி, அனுபல்லவி, சரணம் என்பவற்றையும் அளவொத்து வரும் அடிகளையும் உடைய இசைப்பாடல்களைச் சிந்து என்று வழங்கினர்.

சிந்துப்பாடல்கள் நாட்டுப்புறப்பாடல்களை அடிப்படையாகக் கொண்டது. இது வழிநடைச்சிந்து, நொண்டிச்சிந்து, காவடிச்சிந்து என மூன்று வகைகளை உடையது.

இவற்றுள் வழிநடைச்சிந்து என்பது நடந்து பயணம் செய்வோர் களைப்புத் தோன்றாமல் இருப்பதற்காகப் பாடும் பாட்டாகும்.

பாரதியார் பாடியுள்ள ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்’ என்ற பாடல் நொண்டிச்சிந்தாகும்.

பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை போன்ற முருகன் திருத்தலங்களுக்கு வேண்டுதலை நிறைவேற்றிச் செல்பவர்கள் காவடி சுமப்பர். அப்போது பாடும் பாட்டே காவடிச்சிந்தாகும். இந்தக் காவடிச்சிந்தை தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன்முதலில் அறிமுகம் செய்தவர் அண்ணாமலை ரெட்டியாராவார்.

கவிராயரின் இலக்கியக்குறும்புகள்

ஒவ்வொருவருக்கும் குறும்புத்தனங்கள் குதூகலிக்கும் பருவம் மாணவப்பருவம். அண்ணாமலைக்கோ இலக்கியக் குறும்புத்தனங்கள் இயல்பாக நீரூற்றாய் பீறிட்டுக்கிளம்பின.

ஒரு சம்பவம்

ஒரு நாள் அவர் வீட்டுப்பாடம் எழுதி அதன்கீழ் ‘தமையபருவதம்’ என்று கையெழுத்திட்டு ஆசிரியரிடம் தந்தார். ‘தமையபருவதம்’ என்பதன் பொருள் ஆசிரியருக்குப் புரியவில்லை.

அண்ணாமலையை அழைத்து ‘தமையபருவதம்’ என்று இதன்கீழ் கையெழுத்திட்டுள்ளாயே அதன் பொருள் என்ன என்று கேட்டார். ‘தமையன்’ என்றால் ‘அண்ணன்’. ‘பருவதம்’ என்றால் ‘மலை’. அண்ணாமலையைத்தான் அவ்வாறு எழுதியுள்ளேன் ஐயா, என்று பணிவுடன் கூறினார்.

மாணவரின் சொற்சாதுரியம் கண்டு வியந்த ஆசிரியர் ‘அப்பா! அண்ணாமலை உன் புலமைக்கு நான் தீனிபோட முடியாது. நீ வேறு எங்கேனும் சென்று படி’ என்று உற்சாகமூட்டி அனுப்பி வைத்தார்.

மற்றொரு சம்பவம்

ஊற்றுமலையரசர் கவிராயரைக்காண வந்தார். அரசரைக் கண்ட அவர் ‘‘வாடா மருதப்பா! வாடிவிட்டேன் பார்த்தாயா!’’ என்று வரவேற்றார்.

அங்கிருந்தவர்கள் திகைப்புற்றனர். அரசரை மரியாதை இல்லாமல் ‘வாடா’ என்று அழைக்கின்றாரே என்று எண்ணினர்.

அவர்களின் திகைப்பையறிந்த கவிராயர் ‘நான் அரசரை மரியாதையில்லாமல் ‘வாடா’ என்று அழைப்பேனா?, ‘வாடா மருதப்பா’ என்றால் ‘வாடாத மருதப்பா’ என்ற பொருள்படவல்லவா அழைத்தேன். இன்பம் துன்பம் எதுவந்தாலும் வாடாமல் காப்பவர் நம் அரசரல்லவா’ என்று விளக்கம் தந்தார்.

இப்படி அவர் சொன்னபோது அவருடைய வயது 26. மரணத்தைத் தழுவிய வயது. இந்த மரண வேளையின்போதும் நகைச்சுவையும், கற்பனையும் அவரிடம் களிநடனம் புரிந்தன. யமகம் திரிபுகள் அணிவகுத்து நின்றன. கவிமலர்கள் மலர்ந்துகொண்டுதான் இருந்தன.

சிந்தையைக் கவர்ந்த காவடிச்சிந்து

இலக்கிய உலகில் காவடிச்சிந்துக்குத் தனியான இடமுண்டு. கவிச்சக்கரவர்த்தி கம்பருக்குப்பின்னும், பாரதியாருக்கு முன்னும் தமிழ்ப்பாட்டு நடைக்குப் புத்துணர்ச்சியை ஊட்டி தமிழை பழகு தமிழாக்கி தமிழ்க்கவிதையுலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் அண்ணாமலை ரெட்டியார். 1865–ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் சென்னிகுளம் என்ற ஊரில் பிறந்தவர். இவரது காவடிச்சிந்து கேட்பவர் எவரையும் ஈர்க்கும் ஆற்றல் பெற்றவை. காவடிச்சிந்து பாடும்பொழுது காவடியாட்டமும் நிகழும்.

அதனால் இவற்றில் தாளச்சிறப்பு மிகுதியாக உண்டு. இதோ ஒரு கழுகுமலை வளத்தைச் சொல்லும் காவடிச்சிந்துப்பாடல்.

பொன்னுலவு சென்னிகுள நன்னகர்
அண்ணாமலைதன்
புந்தியில் மகிழ்ந்து நித்தம் நின்றவன்
– முந்தி
வெந்திறல் அரக்கர்களை வென்றவன் – மயில்
போல ஏனலின் மீது உலாவும் கிராத மாது முன் ஏகியே – அடி
பூவையே உனது தஞ்சம் என்றவன் – அவள்
ஈயும், மாவினையும் மென்று தின்றவன்
மின்னலடி சொன்னமுடி சென்னியணி விண்ணவர்தே
வேந்திரனும் சித்தர்களும் துன்னியே – கதி
வேண்டியே அகத்தில் அன்பு மன்னியே – பணி
வேலவன் கிருபாகரன் குகன் மேவிடும் கழுகாசலம்தனில்
மிஞ்சிய வளங்களை நான் உன்னியே – சொல்ல
ரஞ்சிதமாய்க் கேளடி விற்பன்னியே

என்று தொடங்குகிறது.

‘சென்னிகுளத்து வாழ்பவனும் தமிழறிஞனுமான அண்ணாமலை புனையும் கவிதைகளை மாலையெனத் தோளில் அணிபவரும், வேல் ஏந்தி அரக்கர்களை வென்றவனும், மயில்வாகனனும், வள்ளி மணாளன் முருகன் வாழும் கழுகுமலையின் வளத்தைச் சொல்லுகின்றேன்’ என்று பாடலைத் தொடங்குகின்றார்.

யானைக்கூட்டங்கள் துதிக்கையை நீட்டி இந்திரன் தங்கியிருக்கும் தேவலோகத்தின் தேவதாரு மரங்களைப்பற்றி ஒடிக்கும். பலா மரத்திலுள்ள இனிய கனிகள் சந்திரனில் உராய்ந்து அதனைப் பெருகவிடும். அடுத்து வானளாவிய சந்தன மரம் ஆறுமுகநாதனுக்கு வந்தனம் செய்வது போலத்தன்கிளைகளைச் சாய்த்து வணங்கும்.

கூரிய கண்களைக் கொண்ட வேடுவ மகளிர் தினைப்புனம் காக்கும்போது பறவைகளை விரட்டக் கவணில் ரத்தினக் கற்களை வைத்து வீசி எறிய அவற்றின் ஒளியைக்கண்டு சூரியன் தன் முகத்தைச் சுருக்கிக் கொண்டான். அவன்தேரிலுள்ள குதிரைகள் கண்களை இடுக்கி விழிக்கின்றன.

வான மண்டலம் வரை ஓங்கி உயர்ந்திருக்கும் பல வகை மரங்கள் மண்ணுலகிலிருந்து விண்ணுலகிற்கு ஏறிச்செல்ல அமைக்கப்பட்ட படிக்கட்டுகளைப்போல உள்ளன என்று கமுகு மலையின் வளத்தைக் கற்பனைச் சுவையோடு பாடியுள்ள திறம் இலக்கிய இன்பம் தருவதாகும்.

ஒருமுறை இசைப்பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி ஐ.நா.சபையின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தார். பல நாட்டுத் தலைவர்கள் கூடியிருந்தனர். அவர்கள் முன்னிலையில் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்துப் பாடல்களைப் பாடுகின்றார்.

முடுகு வண்ணத்தில் அமைந்த அந்தப் பாடலைக்கேட்டு அதன் மெட்டில் மயங்கியவர்கள் ‘மீண்டும் பாடுக’ என்று விரும்பிக்கேட்டனராம்.

இதுபோல் ஒருசமயம் தமிழகம் வந்த அமெரிக்கர்கள் காவடிச்சிந்து இசைகேட்டு வியந்து சங்கீதபூஷணம் பேராசிரியர் ராமநாதனை தங்கள் நாட்டுக்கு அழைத்து, அங்கு காவடிச்சிந்து பாடவைத்து இசையின்பத்தை அனைவரும் சுவைத்துள்ளனர்.

இப்படி சிந்தையைக் கவர்ந்த நம் காவடிச்சிந்தை நாமும் சிந்தையில் போற்றுவோம். உயிர்காத்த தமிழ்ப்பாட்டை தரணியெங்கும் பரப்புவோம்.


காவடிச்சிந்து

‘காவடி’ என்ற சொல் ‘காவுதடி’ என்பதன் சுருக்கமாகும். ‘காவுதடி’ என்பதற்குச் ‘சுமக்கும் தடி’ என்று பொருள்.

ஒரு தடியின் இரு நுனிகளிலும் பொருள்களைக் கட்டித் தோளில் தூக்கிச் செல்லும் பழக்கம் மிகப்பழங்காலத்திலேயே உண்டு. இவ்வாறு எடுத்துச்செல்லுதலைக் ‘காவுதல்’ என்பர்.

புறநானூற்றில் உள்ள அவ்வையார் பாடல் ஒன்றில் ‘காவினம் கலனே, சுருக்கினும் கலப்பை’ என இடம் பெற்றுள்ளது.

சிலப்பதிகாரத்தில் இடையர்கள் பொருள்களைத் தூக்கிக்கொண்டு செல்வதைக்குறிக்குமிடத்தில் ‘மறித்தோன் நவியத்து உறிக்கா வாளரொடு’ என அடைக்கலக்காதையில் கூறுவது கவனிக்கத்தக்கது.

இப்படித்தான் தமிழிலக்கிய வரலாற்றில் காவடி இடம்பெற்றுள்ளது. இந்தக் காவடியை மையமாகக் கொண்டு காவடிச்சிந்தை முதலில் இயற்றியவர் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார்.

டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் ‘என் சரிதம்’ என்ற நூலில் அண்ணாமலை ரெட்டியார் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

‘அவருக்கு இலக்கிய இலக்கணங்களில் அதிகம் புத்தி செல்லவில்லை. புதிய செய்யுள் இயற்றுவதிலேயே போய்க்கொண்டிருந்தது. காவடிச்சிந்தின் முறை ஏற்பட்டது இவராலேதான்’.

இக்காவடிச்சிந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுகுமலையில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது.

ஊற்றுமலை ஜமீன்தாராகிய இருதாலய மருதப்பத்தேவர் கழுகுமலை முருகப்பெருமானுக்குப் பிரார்த்தனை செய்து காவடி எடுத்தபோது வழியில் பாடுவதற்காக அண்ணாமலையார் பாடியதே இந்தக்காவடிச்சிந்து.

இதில் 22 பாடல்கள் உள்ளன. விநாயகர் துதி, முருகன் துதி என்பவற்றை முதலில் பெற்று, பின்னர் கழுகுமலை வளம், கோவில் வளம், நகர் வளம், வாவிவளம் என்னும் வருணனைகள் பெற்று, முருகன் துதிகளாகச் சில பாடல்களையும், நற்றாய், பாங்கன், தலைவன், தலைவி கூற்று என்ற அகப்பொருள்பாடல்களையும் பெற்றுள்ளது.

அண்ணாமலையார் ஊற்றுமலை ஜமீன்தாரின் அரசவைப் புலவராக விளங்கியவர். அப்போது ஜமீன்தாரின் குலதெய்வமாகிய வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணன் மீது வீரையந்தாதி, வீரைப்பிள்ளைத்தமிழ் முதலிய சிற்றிலக்கியங்களையும், சங்கரன்கோவில் கோமதியம்மாள் மீது சங்கரன்கோவில் திரிபந்தாதிகளையும் படைத்தளித்தார். எனினும் அவரை கவிராயர் என்ற புகழ் மகுடத்தைச் சூட்டியது காவடிச்சிந்துப்பாடல்களேயாகும்.

உயிர்காத்த தமிழ் மெட்டு

19–ம் நூற்றாண்டில் மிகச்சிறப்பான நாடக இசைக்கலைஞர்களுள் ஒருவர் அவர். நாடகங்களில் ஆர்மோனியம் வாசித்து பின்பாட்டுப்பாடியும் மக்களை இசையால் ஈர்த்தவர். பிறப்பால் மாற்று மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கழுகுமலை முருகனிடம் ஈடுபாடு கொண்டவர். அவர் பாடிய முருகனைப் பற்றிய பக்திப்பாடல்களைக் கேட்டு உருகாதவர் இல்லை. ஒரு வழக்கில் அவர் மரண தண்டனை பெறுகிறார். சிறை அதிகாரி ‘உன் கடைசி விருப்பம் என்ன?’ என்று கேட்டார்.

‘நான் என் ஆர்மோனியத்தில் சற்றுநேரம் முருகப் பெருமானைப் பற்றிய காவடிச்சிந்து பாடவேண்டும்’ என்றார்.

அவர் விரும்பியபடியே அனுமதி கிடைத்தது.

சுருளி மலை மீதில் மேவும் சீலா – உனைத்
தோத்திரத்தேன் சுப்ரமண்ய வேலா – பசுந்
தோகைமயில் மீதில் ஏறி
வாருடனே காத்தருளும் அய்யா – முருகைய்யா

என்று தொடங்கும் பாடலை ஊணுருகப் பாடிக்கொண்டே இருந்தார்.

சிந்தையைக் கவர்ந்த சிந்து இசையில் சிறை அதிகாரிகள் அனைவரும் மெய் மறந்தனர். பின்னர் அவரைத் தூக்குமேடைக்கு அழைத்துச்செல்ல முயன்றனர். உடனிருந்த வழக்கறிஞர், ‘அவரை தூக்கிலிடுவதற்கான காலம் கடந்து விட்டது. சட்டப்படி இனி அவரைத்தூக்கிலிட முடியாது’ என்று கூறி அவரை விடுதலைபெறச் செய்தார்.

அப்படி அவரின் உயிர்காத்த தமிழ்மெட்டு தான் ‘‘தெள்ளு தமிழுக்கு உதவும் சீலன்’’ என்று தொடங்கும் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து மெட்டில் அமைந்தது.

‘உயிர்காத்த மெட்டு’ என்று இன்றளவும் அவர் சார்ந்து வாழும் மக்கள் போற்றுகின்றனர். சிந்துவையும் பாடி மகிழ்கின்றனர்.

தினத்தந்தி.

Saturday, 9 January 2016

நமச்சிவாயக் கவிராயர்

நமச்சிவாயக் கவிராயர் என்பவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் எனும் ஊரில் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கவிஞர். மாதவ சிவஞான யோகியின் தந்தையாகிய ஆனந்தக்கூத்தரின் உடன்பிறந்தவர். பாவநாசம் உலகம்மை மீது பேரன்பு கொண்டு நாள்தோறும் வழிபட்டு வந்தவர். ஒருமுறை உலகம்மை அவருடைய மகளாக வந்து உணவு படைத்தாளாம். கவிராயர், நோய்வாய்ப்பட்டு தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றபோது, உலகம்மை தடுத்து அருள்புரிந்தார் என்றும் கூறுவர்.

இவர் தினந்தோறும் அர்த்தசாமத்தில் பாவநாசத் திருக்கோயிலுக்குச் சென்று அம்பிகையைத் தொழுதுவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது பரவசத்தில் பக்திப் பாடல்களைப் பாடிகொண்டே வருவார். ஒரு நாளிரவு இவர் பாடியவாறே வீடு திரும்பும்போது அம்பாள் இவர் பாடல்களைக் கேட்டவாறே இவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தார். கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சில் அவர் பாடி வரும்போது தெரித்து அம்பிகையின் மீது பட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள். மறுநாள் காலை அர்ச்சகர் அம்பாள் ஆடையில் படிந்திருந்த எச்சில் திவலைகளைக் கண்டு மனம் வருந்தி, மன்னனிடம் முறையிட, அரசனும் பிராயச்சித்தம் செய்யப் பணித்து, இப்பாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிப்பதாகக் கூறினான். அன்றிரவு மன்னன் கனவில் அம்பிகை தோன்றி, நடந்ததைக் கூறினாள். விழித்த மன்னன் மறுநாள் காலை கவிராயரை அழைத்து வரச்செய்து, அவருடைய பக்தியை அளவிட எண்ணி, அம்பாளின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்துப் பொன் கம்பிகளால் சுற்றிக்கட்டி, அப்பூச்செண்டு வருமாறு பாடக் கவிராயரைப் பணித்தான். அவரும் கலித்துறையில் அந்தாதி யொன்றை அமைத்துப் பாடினார். அம்பிகையின் கரத்தில் கட்டப்பட்டிருந்த பொன் கம்பிகள் கவிக்கொருச் சுற்றாக அறுந்து கவிராயரின் பெருமையை வெளிப்படுத்தியது.

இவர் சிங்கை உலகம்மை பிள்ளைத் தமிழ், சிங்கை உலகம்மை கலித்துறை அந்தாதி, சிங்கை உலகம்மை கொச்சகக் கலிப்பா, சிங்கை உலகம்மை பதிற்றுப்பத்து அந்தாதி, சிங்கை உலகம்மை சந்த விருத்தம், சிங்கை சிலேடை வெண்பா ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இந்நூல் சிங்கை பிரபந்தத் திரட்டு என்கிற பெயரால் அழைக்கப்படுகின்றன.

“பாபநாசம் என்னும் சிங்கைப் பிரபந்தத் திரட்டு!”

அந்த நூல் ஆறு பிரபந்தங்கள் அடங்கியது. அவற்றுள் ஒரு நூல், 'சிங்கை உலகம்மை கலித்துறை அந்தாதி' ஆகும். அந்த நூல்களை இயற்றியவர், நமசிவாயக் கவிராயர் ஆவார். அவர் திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனப் புலவர், 'திராவிட மாபாடிய ஆசிரியராகிய மாதவச் சிவஞான யோகிகளின் சிறிய தந்தையார் ஆவார்.

அவர் அருளிய, உலகம்மை கலித்துறை அந்தாதியில் உலகம்மை தமக்கு அருள் புரிய வில்லையே என்ற ஏக்கத்துடன், 'வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவதற்கே உரிய இந்த உடல் சுடுகாட்டு நெருப்புக்கு உரிய விறகாக இருக்கிறதே!' என்று பாடுகிறார்.

‘பால் நினைந்தூட்டும் தாய்' என்றார் மாணிக்க வாசகர். சேக்கிழார் “எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்து அருளி, ‘உண் அடிசில்’ என உமையம்மை ஊட்டினார்' என்றார். அம்மை ஊட்டிய பால் வழிந்த திருவாயுடன் நின்ற மகனை நோக்கித் தந்தையார், “நீ யார் அளித்த பால் உண்டாய்?” எனக்கேட்டார்.

சிவஞானம் பெற்ற மைந்தர், “தோடுடைய செவியன்” என்ற தொடரால் அம்மையைப் போற்றி, அவர் உள்ளங்கவர் கள்வனாகிய சிவபெருமானே, என் உள்ளத்தையும் கவர்ந்தான்; அவனே பிரமாபுரம் மேவிய பெம்மான்! என்று பாடினார்

அவர் பாடலைக் கேட்ட விண்ணவர் மலர் மழை பொழிந்தனர்; மண்ணவர் வாழ்த்தொலி வழங்கினர்; “காழியர் தனமே; கவுணியர் தவமே; மறை வளர் திருவே; வைதிக நிலையே; புகலியர் புகலே; புண்ணிய முதலே; கலைவளர் மதியே;'' என்றெல்லாம் போற்றினர்!

அம்மை அளித்த பாலமுதினை உண்ட பொழுதே, ‘சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம், பவம் அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம், உவமை இலாக் கலைஞானம், உணர்வரிய மெய்ஞ்ஞானம் ஆகியவற்றை சம்பந்தச் சிறுவர் பெற்றார்!

இந்த நிகழ்ச்சியை மனக்கண்ணால் கண்ட விக்கிரம சிங்கபுரம் நமசிவாய தேசிகர் அம்மை பாலமுதினை திருஞான சம்பந்தருக்கு அளித்த போது, அவர் திருவாய் ஓரத்தில் வழிந்த செய்தியை, ‘சந்தன பாரத் தனம்பிதிரோட’ என்று பாடுகிறார். இவ்வாறு வழிந்தமையால் சீர்காழியில் ஒருபகுதி தென்பாதி என்ற பெயர் பெற்றது, சம்பந்தர் உண்ட பால் பாதியும், அவர் பாடிய தமிழ்த்தேன் பாதியும் வழிந்தமையால் அப்பகுதி தேன்பாதி எனப் பெற்றது.

அப்பாலைப் பருகியமையால் அவருடைய அவா அகன்று நீங்கியது!
“அவாஎன்பது எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து”

என்ற குறட்கருத்தின் படி, பிறப்புத் துன்பம் நீங்கியது! இதனைக் கவிஞர், “அவாஅறப் பால்கொடுத்தாய்!” என்று பாடுகிறார். இதனைக் “கவுணியர்க்குப் பால் சுரந்த கலசம் போற்றி” என்று திருவிளையாடல் புராணம் பாடுகிறது.

இதனை “கொங்கை வள்ளத்துப் பால் கிண்ணத்திலே, சைவக் கன்றுக்கு வார்த்தவள்” என்று நமசிவாயக் கவிராயர் பாடுகிறார். மேலும் அன்னை வழங்கிய பால், வேதம் ஓதும் அந்தணர் மைந்தனாய்த் தோன்றிய திருஞான சம்பந்தருக்கும், அவர் வழியில் வேத நெறியையும் சைவப்பயிரையும் வளர்த்த சிவனடியார் திருக்கூட்டமரபு வளர்வதற்கும் காரணமாயிற்று என்பதை “நீதி மறைக்குல சந்ததிக்கு உணப் பால் கொடுத்தாய்” என்று அவரே பாடுகிறார்.

“வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க
பூத பரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தருளும்
சீத வளவயற் புகலி திருஞானசம்பந்தர்”

என்று பாடிய சேக்கிழார் வழியில், நமசிவாயக் கவிராயர் பாடினார். அந்தப் புகழ்பெற்ற சிவனடியார் மரபில் தானும் பிறந்து வளர்ந்தது உண்மையானால், ஆசை அற்றுப் பாசம் விட்டு, சிவபூசை பண்ணும் நெறியில் இன்னும் ஊக்கத்துடன் விளங்கத் தொடங்கவில்லையே! என்று ஏங்குகிறார்.

சிவனருள் பெற்று, அவா அறுத்து வளரவேண்டும் என்று அன்று திருஞானசம்பந்தருக்குப் பால் கொடுத்த உமையம்மை உலகம்மையாய் விக்கிரமசிங்க புரத்தில் எழுந்தருளிக் காட்சி தருகிறாள். “அந்த அடியார் போல் வாழாமல் வீண் ஆசாபாசங்கள் என்னும் இரும்புச் சங்கிலியால் பிணிக்கப் பெற்று, வெற்றுடம்பை உண்டுடுத்துப் பேணி வளர்த்து இறுதியில் சுடுகாட்டில் எரியும் பெரு நெருப்பில் விறகாகும் பிணமாய் அடியேனும், அதனை வளர்க்கும் நெய்யாக என் மனமும் ஆனோமே!” என்று ஏங்கிப் பாடுகின்றார்; அந்தப் பாடல்:

“சந்தன பாரத் தனம்பிதி ரோடத் தமிழ்மறைச்சம்
பந்தன் அவாஅறப் பால்கொடுத் தாய்விருப் பாய்நிகள
பெந்தன மாம்இச் சடம்சுடு காட்டுப் பெருநெருப்புக்(கு)
இந்தன மாகத் தமியேனும் நெஞ்சும் இருந்தனமே!”

என்பதாகும். இந்தனம் என்ற சொல்லின் பொருள் விறகு. இந்த விறகு வளர்ந்து எரிபொருள் ஆவது போல், ‘இந்த உடம்பும் வளர்ந்து எரியும் விறகானதே’ என்ற கவிஞரின் எண்ணம் இதைப் படிக்கும் நமக்கும் உண்டாகிறது.

Friday, 25 December 2015

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம்


சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங் களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொ றியியல், புவியியல், கணிதவியல், மருத்துவ வியல் குறித்த ஆச்சரியங்க ளின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல் களும் ஒரு தெளிவான சிந் தனையை நோக்கியே பயணித்துள்ளது, சிதம்பர ம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற் புதமான ரகசியங்கள் இவைகள்தான்.”

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World’s Magnetic Equator ).
(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறி க்கும் தில்லை நட ராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத் தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லி யம் அன்றை க்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல், புவியியல் மற் றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக் கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உட லில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின்மேல் இருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடு களை கொண்டு வேயப்பட்டுள் ளது, இது மனிதன் ஒரு நாளை க்கு சராசரியாக 21600 தடவை கள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கி ன்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத் தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இரு க்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்ப வையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் ” திருமூலர்”

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது ” மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்ப ரம், அதுவே சதாசிவம், அதுவே அவரி ன் நடனம்”. என்ற பொருளைக் குறிகி ன்றது.


(7) “பொன்னம்பலம்” சற்று இடது புற மாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடை ய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப் படுகின்றது, அதாவது “சி,வா,ய,ந,ம” என்ற ஐந்து எழுத் தே அது. “கனகசபை” பிற கோயில் களில் இருப்பதை போன்று நேரான வழி யாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின் றது . இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக் கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங் களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கி ல் செல்லும் பல பலகைகள் (CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்ட பத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திர ங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கி ன்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண் டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்க ளால் அழைக்கபடுகின்றது.

CERN அராய்ச்சிக் கூடத்தில் நடராஜர்!
சிதம்பரம் கோவிலில் நடனக் கலையின் அரசனான சிவன் ‘நடராஜன்’ என்ற சிலை வடிவில் இருக்கின்றான். அணுவைப் பிளந்து மேற்கொள்ளும் ஆராய்ச்சி உலகிலேயே அங்குதான் நடைபெறுகின்றது. அந்த பரிசோதனைச் சாலையின் வாயிலில் நடராஜரின் சிலைவடிவம் வைக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அணுக்கூறுகளின் இயக்கங்களை ஒத்திருக்கும் மனித கலாச்சார விஷயத்தில் நடராஜரின் நடன வடிவமே அதற்குப் பொருந்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுள்ளனர்.


ஆகாய உருவில் இறைவன்!


சிதம்பர ரகசியம் என்பது, சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில், சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது, ஒரு சிறு வாயில். இதன் திரை அகற்றப்படும்போது, கற்பூர ஆரத்தி காட்டப்படும். இதனுள்ளே, திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தினாலான, வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே, வில்வ தள மாலை தொங்கும். இதன் ரகசியம், இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கிறார் என்பதை உணர்த்துவதே! அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை, வெறும் வெளியையே காட்டி, இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இது தான், 'சிதம்பர ரகசியம்' என, அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகிறது.

Wednesday, 23 December 2015

மேற்குத் தொடர்ச்சி மலை


பருவ மழையினால் எப்போதும் ஈரம் படிந்த கேரள மலபார் கரைக்கும் இந்திய தீபகற்பத்துக்கும் இடையே பெரும் மதில் போல இருப்பதுதான் மேற்குத் தொடர்ச்சி மலை. 1,600 கி.மீ. நீளமுள்ள இந்த மலைத் தொடர் இந்தியத் தென்கோடியான கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி, கேரளம், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், குஜராத் வரை நீண்டு கிடக்கிறது. உலக அளவில் பல்லுயிர் பெருக்கத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த 34 கேந்திரங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும். இதன் மேற்கு பகுதியில் ஆண்டுக்கு 6,000 முதல் 8,000 செ.மீ. அளவுக்கு மழை பொழிகிறது. இந்த மலைத் தொடரின் கிழக்குப் பகுதியிலோ ஆண்டுக்கு சராசரியாக 900 செ.மீ. மழை மட்டுமே பெய்கிறது. நிலயியல் அடிப்படையிலும் உயிரியல் அடிப்படையிலும் ஆப்பிரிக்க கண்டத்தின் தெற்குப் பகுதி மற்றும் மடகாஸ்கர் பகுதியின் நெருங்கிய உறவினராக இருக்கிறது நமது மேற்குத் தொடர்ச்சி மலை. இதன் பரப்பளவு இந்தியாவின் மொத்த நிலப் பகுதியில் வெறும் ஆறு சதவீதம்தான். ஆனால் இந்தியாவின் பல்லுயிர் பெருக்கத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் பங்கு எவ்வளவு தெரியுமா? முப்பது சதவீதம். இதிலிருந்தே இந்த மலைத்தொடரின் முக்கியத்துவம் புரியும். மரம்-செடி வகைகள், மருத்துவ குணமுள்ள செடிகள், பழ வகைகள் சிலவற்றின் பிறப்பிடம் இந்த மலைத் தொடர்தான். பழங்களில் மாம்பழம், வாழைப்பழம் - இவற்றின் மரபணுவின் மூல முகவரி மேற்குத் தொடர்ச்சி மலையில்தான் உள்ளது. மிளகு, ஏலக்காய், லவங்கம் ஆகியவற்றுக்கும் பிறப்பிடம் இந்த மலைகள்தான்.

சில அரிசி ரகங்கள், கேழ்வரகு இங்கு மட்டுமே விளைகின்றன. கணக்கில் அடங்காத மருத்துவ குணமுள்ள செடி வகைகளுக்கு இங்குதான் பிறப்பிடம். இந்த மலைத் தொடரிலிருக்கும் சில வனங்கள் இமயத்திலிருக்கும் வனங்களை விட மிகப் பழமையானவை. பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு முக்கிய அளவுகோல்- ஒரு குறிப்பிட்ட உயிரினம் ஒரு நிலப்பகுதியில் மட்டுமே காணப்படுவதாகும். இந்தப் பகுதிக்கு வெளியே சாதாரணமாக இந்த உயிரினங்களைக் காண முடியாது. மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணக் கிடைக்கக்கூடிய உயிரினங்கள் என்று ஏராளமாக சொல்லலாம். தெற்கு ஆசிய அளவில் மிக அதிக பல்லுயிர் பெருக்கமுள்ள இடங்களில் இந்தப் பகுதியும் அடங்கும். இமய மலைத் தொடருக்கு அடுத்தபடியாக மிக அதிக அளவில் தனக்கே உரித்தான உயிரினங்களுக்குத் தாயகமாக இருப்பது மேற்குத் தொடர்ச்சி மலைதான். கன்னியாகுமரிக்கு சற்று வடக்கே இந்த மலைத் தொடரில் உள்ள ஒரு பகுதிதான் மொத்த மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரிலேயே மிக அதிக அளவில் பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டிருக்கிறது. இதற்கு இன்னும் சற்று வடக்கேதான் குற்றாலம் இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சிகளை வருடியபடி பொழியும் பருவ மழை கொண்டு வரும் நீரானது, பச்சைப் பசேலென்ற காடுகளின் வழி கிழக்கே பயணம் செய்து பற்பல வீழ்ச்சிகளாக சமவெளியை அடைகிறது. தாமிரபரணியுடன் திருநெல்வேலி பகுதி நிலங்களை வளமாக்கிப் பின்னர் மன்னார் வளைகுடாவை அடைகிறது.

குற்றால அருவியில் குளித்தால் பல மருத்துவ பலன்களைப் பெறலாம் என்று பழைய காலம் முதலே நம்பிக்கை இருந்து வருகிறது. பல விதமான பசுமையான காடுகளின் செடி கொடிகள் வழியே தவழ்ந்து வந்து குற்றாலத்தை அடைந்து நீர் வீழ்ச்சியாகப் பாயும்போது அது பல மருத்துவ குணங்களை தன்னிடத்தே அடக்கியிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலையென்பது பற்பல சிறு மலைத் தொடர்களை உள்ளடக்கியது. பழனி மலைத் தொடரும் ஆனைமலைத் தொடரும் சந்திக்கும் பகுதியில்தான் மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக உயரமான மலைகள் உள்ளன. 2,695 மீட்டர் உயரமுள்ள ஆனைமுடிதான் மேற்கு தொடர்ச்சியில் மிக உயரமான மலை. இதுவே தென்னிந்தியாவின் உயரமான மலை என்பதுடன், இமயத்துக்குத் தெற்கே இதுதான் மிக அதிக உயரமுள்ள மலையும் கூட! அச்சுறுத்தப்பட்ட உயிரினங்கள் பட்டியலில் இருப்பதுதான் இங்குள்ள வரையாடு. இது தவிர பல்வேறு வகை ஆடுகள், புள்ளிமான், காட்டெருமை போன்றவை இப்பகுதிக்கே உரித்தானவை. இவற்றை வேட்டையாட சிறுத்தைகளும் புலிகளும் ஒரு வகையான காட்டு நாயும் இங்கு உண்டு. இவை தவிர ஆசிய யானை இனத்தை சேர்ந்த யானைகளை மிக அதிக எண்ணிக்கையில் இந்தப் பகுதியில்தான் காண முடியும். இதுபோன்ற காரணங்களாலேயே இந்த மலைத் தொடரை உலக பாரம்பரியச் சின்னமாக ஐ.நா.வின் அமைப்பான ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு (யுனெஸ்கோ) அறிவித்திருக்கிறது.

தஞ்சை பெரிய கோயிலில் புதைந்திருக்கும் ரகசியம் !


தஞ்சை பெரிய கோயிலில் புதைந்திருக்கும் ரகசியம் ! உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: கீழே இரு மடங்கு சுமை பெரிய கோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும் சில ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்தோம். அதில் கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமானமான ஆற்று மணல் படுகையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட இரு மடங்கு சுமை கீழே இருக்க வேண்டும். அதன்படி இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி அதில் பரு மணலை நிறைத்து அதன் மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது. அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது. தலையாட்டி பொம்மை போல.. தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக்கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது. தலையாட்டி பொம்மைகளின் பூர்வீகமும் தஞ்சாவூர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். இயல்பிலேயே கருங்கல் கட்டுமானங்களுக்கு மணல் அஸ்திவாரமே பொருத்தமானது. அதனால்தான் பெரும்பாலான கடல் கட்டுமானங்களில் கருங்கற்களும் ஆற்று மணலும் இடம்பெறுகின்றன. 2010-ம் ஆண்டு கோயிலுக்குள் ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது அஸ்திவாரம் மணல் என்பதாலேயே அங்கு சத்தம் வரவில்லை. அங்கு வெளியேறிய மணலில் மண் மற்றும் பாறைத் துகள் எதுவும் இல்லை. 350 அடி ஆழத்துக்கு கீழே தோண்டிய பிறகுதான் களிமண் வெளியேறியுள்ளது. இந்த மணல் தஞ்சாவூர் முகத்துவாரப் பகுதிக்கான மணல் அல்ல. தஞ்சாவூர் பகுதியில் இருப்பது சமதளத்தில் ஓடும் காவிரி ஆற்றுப் பகுதியின் குறுமணல். ஆனால், கோயிலின் அடியில் கிடைத்தது, அதைவிட மூன்று மடங்கு பெரிய பருமணல். இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டுவந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சிலை, நாணயங்கள் இருக்கலாம் நம் மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை கட்டியது காட்சிக்காகவும் பக்திக்காகவும் மட்டும் அல்ல.

அன்னியர்களால் நமது வரலாறு அழியாமல் இருக்கவும், பொக்கிஷங்களை பாதுகாக்கவும்தான் பிரமாண்டமான கோயில்களைக் கட்டியுள்ளனர். அப்படி பிரமாண்டமாக அமைத்தால்தான் அதன் அடியில் பெரும் நிலவறைகள் வடிவமைத்து பொருட்களைப் பாதுகாக்க முடியும். எனவே, பெரிய கோயிலின் அடியில் நாணயங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், சிலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன்மூலம் தென் கிழக்கு ஆசியாவை வென்ற தமிழனின் மற்றொரு பரிமாணத்தையும், மணல் அஸ்திவாரக் கட்டுமானக் கலையின் வரலாற்றையும் நாம் தெரிந்துகொள்ளலாம். கோயிலில் அகழ்வாராய்ச்சி நடத்தித்தான் இதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. செயற்கைக்கோள் உதவியுடன் ரிமோட் சென்சார் மற்றும் Ground penetrating radar தொழில்நுட்பம்மூலம் பூமிக்குள் ஊடுருவி படங்களை எடுத்து ஆய்வு செய்யலாம்” என்றார். நம் கலைப்பொக்கிசம் தஞ்சைப் பெரிய கோயில் எப்படி கட்டப்பட்டது ???? என்ற தகவல் உங்களுக்காக. படிப்பதற்கே தலை சுற்றுகிறது ,இது எப்படி சாத்தியமானது ? ? ! ! படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் . தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏட்படுத்தியவர்கள் விஸ்வப் பிரம்மகுல சிற்பிகளே மன்னர் கட்டியது மன்னர்கட்டியது என மார்தட்டும் எந்தமன்னனாவது ஒரு சிறு கல்லைத் தூக்கியதாக வரலாறுண்டா ஒருகல்லை அது எந்தபதத்தில் உள்ளது என , தெரியும் தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டு உள்ளன . எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் மற்றும் நவீன தொழிநுட்பங்கள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது. பெரிய கோயில் அளவுகோல்… எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை 1, விரல், 2, மானாங்குலம், 3, மானம் என்று அழைத்தனர். 4, இருபத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. 5, ஒரு முழமே இருவிரல் நீட்டித்து(நீளம்) பதினாறு விரல் அகலத்து(அகலம்), ஆறுவிரல் உயரத்து (உயரம்)பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உயரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம். தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறைவெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கத . அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது.

சரியான அளவுகள் தெரியவில்லை. இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் 1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகளை தீர்மானித்திருக்கிறார்கள் . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும். பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு 180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின்,13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர். அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.கருவறையின் நிலகீழ் அமைப்பும் நிலத்தில் நீர் ஊற ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கருவறை அத்திவாரநிலபீடம் எனும் சிட்பசாஸ்திர அளவு முறை ஆலயம் கட்டும் போதும் பயன்படுகிறது என்பது ஒரு முக்கியகுறிப்பு ஆகும், சாரங்களின் அமைப்பு கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் – ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் உபயோகப்படுத்தப்ப ட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் – சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது. இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது.

விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்ட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் நேர்ச்சட்டங்கள் , குறுக்குச் சட்டங்கள் அனைத்தும் முட்டுப் பொருத்துகள் மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ளஉதவின. அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது. மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்ட . விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது . !! ‘இராஜராஜேச்சரம்’ – பெயர்க்காரணம். “கோயில் என்பது சைவர்களுக்குத் தில்லை பொன்னம்பலத்தையும், வைணவர்களுக்குத் திருவரங்கத்தையும் குறிப்பது போலப் பொது மக்களுக்குப் ‘பெரிய கோயில்’ என்றால் அது தஞ்சை இராஜராஜேச்சரமே ஆகும்.” “பெரிய கோயில், ‘ப்ருஹத் ஈஸ்வரம்’ எனும் வடமொழிப் பெயரால் ‘பிரஹதீஸ்வரம்’ என்றும், பெரிய லிங்கத்திருமேனி இடம் பெற்றுள்ளது என்பதால் ‘பிரஹதீஸ்வரர் ஆலயம்’ எனவும் அழைக்கப்படலாயிற்று. தென்னாட்டுக் கோயில்களுக்குள் மிக உயர்ந்த விமானத்தை உடையதால்தான் ‘பெரியகோயில்’ என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்குகிறது.

இக்கோயிலின் ஸ்ரீவிமானம் தக்ஷிணமேரு எனப்பெயர் பெற்றுத் திகழ்கிறது.” சென்ற நூற்றாண்டில் இத்திருக்கோயிலின் வரலாறு மக்களால் தெளிவாக அறியப்பட்டிருக்கவில்லை. சைவர்களால் திருவிசைப்பா படிக்கப்பட்டு வந்தபோதும், அதிலுள்ள இராஜராஜேச்சுரம் என்னும் தொடர் வரலாற்று உணர்வோடு புரிந்து கொள்ளப்படவில்லை. இச்சிவாலயத்தைப் பற்றிப் பலவகையான கற்பனைக் கதைகள் ஏட்டிலும், நாட்டிலும் வழங்கி வந்தன. “இக்கோயிலைக் கட்டியவர் என்று பலருடைய பெயர்கள் தவறாகப் பரவியிருந்தன. 1892இல் வெளியான ‘தென்னிந்திய கல்வெட்டுக்கள்’ என்னும் நூலில், “பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்” எனும் தொடரால்தான் இது மாமன்னன் ராஜராஜன் கட்டிய செய்தி உறுதி செய்யப்பட்டது. இதுதவிர இந்தக் கோயிலைப் பற்றிய வேறு பல செய்திகளும் தவறாகவே சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. அவை:- நிழல் கீழே விழாத கோபுரம்; வளர்ந்து வருகின்ற நந்தி, சாரப்பள்ளம் எனும் கிராமத்திலிருந்து சாரம் கட்டி கோபுர உச்சிக்கு 80 டன் எடையுள்ள பிரமரந்திரக்கல் ஏற்றப்பட்டது என்பது போன்ற பல செய்திகள் பொய்.” “மன்னன் ராஜராஜனுக்கு இந்த ஆலயம் எழுப்பிட பலர் உதவியிருக்கிறார்கள். இந்தக் கோயிலால் ஆன்மீகம் வளர்ந்தது, கலைகள் செழித்தன; சோழநாட்டின் பொருளாதாரம் சிறந்தது என்பது போன்ற பல சாதனைகளைச் சொல்லி மகிழலாம். ராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்.” ‘இராஜராஜேஸ்வரம்’ எழும்பியுள்ள தஞ்சாவூர் பகுதி முழுவதும் ஆறுகள், வாய்க்கால்கள், வயல்வெளிகள் என பாறைகளே இல்லாத சமவெளிப் பிரதேசம். இங்கு பெரிய பெரிய கற்பாறைகளைக் கொண்டுவந்து தரை கெட்டியாகவுள்ள செம்மண் பிரதேசத்தில் இக்கோயிலை அமைத்துள்ளதே இவனது பொறியியல் திறமைக்குச் சான்று. இங்கு உபயோகப்படுத்தப்பட்ட பாறைகள் அனைத்தும் புதுக்கோட்டையை அடுத்த குன்னாண்டார்கோயில் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்பது முனைவர் குடவாயில் அவர்களின் கருத்து. நுழைவுக் கோபுரம் – கேரளாந்தகன் திருவாயில் keralanthakangate1இவ்வாலயத்தின் நுழைவு வாயிலாகத் திகழ்வது ‘கேரளாந்தகன் திருவாயில்’ எனப்படும். மாமன்னன் இராஜராஜன் தான் முடிசூடிய நான்காம் ஆண்டில் ‘காந்தளூர்ச்சாலை கலமருத்தருளிய கோஇராஜகேசரிவர்மன்’ என்று பெயர்பெற்றான். பொ.பி.988ஆம் ஆண்டில் கேரளத்தில் திருவனந்தபுரம் அருகிலுள்ள காந்தளூர்ச்சாலையை வென்று இப்பட்டப்பெயர் பெற்றான். (பொ.பி – பொது சகாப்தத்திற்குப் பின், CE) இந்த கேரளாந்தகன் திருவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அடுத்து வருவது ‘இராஜராஜன் திருவாயில்’. அதையும் தாண்டி உள்ளே சென்றால் இருப்பது ‘நந்தி மண்டபமும்’ மாபெரும் நந்தி உருவமும். இப்போது அங்குள்ள பெரிய நந்தி நாயக்க மன்னர்கள் காலத்தில் வைக்கப்பட்டது. மன்னன் ராஜராஜன் நிறுவிய பழைய நந்தி இப்போதும் ‘வாராஹி’ அம்மன் சந்நிதிக்கருகில் வைக்கப்பட்டிருக்கிறது. ராஜராஜன் எழுப்பிய மாபெரும் கோயிலுக்குள் நுழைவதற்கு முன் நாம் தாண்டிச் செல்லவேண்டிய இவ்விரு கோபுரங்களின் சிறப்பை அறிய வேண்டுமானால் குடவாயில் அவர்களின் நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இனி கோயிலின் சிறப்பினைப் பார்ப்போம். திருக்கோயிலின் அமைப்பு ஆலயத்தின் மதிற்சுவரோடு இணைந்து நாற்புறமும் திருச்சுற்று மாளிகை அமைந்திருக்கிறது. அதன் வடபுற விமானத்துக்கருகே சண்டீசரின் சந்நிதி உள்ளது. இவ்வளவுதான் அந்த ஆலயத்தின் பழைய தோற்றம். திருச்சுற்று மாளிகையில் பல பரிவார தேவதைகளுக்கான சிறு சந்நிதிகள் உண்டு. பழைய காலத்தில் வடக்குப் புறம் ஓர் அம்மன் ஆலயம் இருந்ததாகத் தெரிகிறது. “திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து பரமேஸ்வரி” என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. ஆலயத்தின் மகாமண்டபம், அர்த்தமண்டபம் இவைகளைத் தாண்டிச் சென்றால் ஆலயத்தின் கற்றளி விமானம் இருக்கிறது. “இந்த ஸ்ரீவிமானம் 30.18மீ அளவுடைய உயர்ந்த அதிஷ்டானத்தின் மேல் கருவறை நடுவே திகழ, அதனைச் சுற்றி நான்கு புறமும் வாயில்களுடனும் ஓர் சுற்று அறையுடனும் திகழ்கின்றது.

இராஜராஜேச்சரமுடையார் எனும் மிகப்பெரிய லிங்கத் திருவுருவம் நடுவே திகழ, ஒரே வாயிலுடனும் 11அடி கனமுடைய சுற்றுச் சுவர்களுடனும் கருவறை உள்ளது. கருவறைக்கு வெளிப்புறம் அமைந்துள்ள அறை 6அடி அகலமுடையதாக விளங்குகிறது. இங்கு புறச்சுவர்களின் நான்கு பக்கச்சுவர்களின் அகலம் 13 அடி கனமுள்ளது. சிவலிங்கத்துக்கு மேலே விதானம் மரத்தாலானது. இது பிற்காலத்தில் அமைக்கப்பட்டது. விமானம் உட்புறம் கூடாக அமைந்திருக்க அதன் இருண்ட பகுதிக்குள் வெளவால்கள் அடைந்துகொண்டு லிங்கத்தின் மேல் அசிங்கம் செய்துவந்த காரணத்தால் அதனைத் தடுக்கும் பொருட்டு மர அடைப்பு இடப்பட்டதாகக் கூறப்படுகிறது. கருவறைக்கு மேல் இரண்டாம் தளம் உள்ளது. மகாமண்டபம் வழியாகப் படியேறிச்சென்றால் இந்த தளத்துக்குச் செல்லலாம். இங்கே ஒரு திருச்சுற்று இருக்கிறது. இங்கு இருபக்கச் சுவர்களும் மேலே போகப்போக ஒன்றுகூடி 30அடியுள்ள கனமான சுவராக ஆகிவிடுகிறது. இந்த இடத்திலிருந்து விமானம் உட்புறம் பிரமிட் வடிவில் குவிந்து 13 அடுக்குகளாக உயர்ந்து கடைசியாக 8.7மீ பக்க அளவுடைய ஒரு சதுரத் தளத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த தளத்தில் எட்டு நந்திகள் உள்ளன. மையத்தில் 20மீ சுற்றளவுள்ள பெரிய பாறைபோன்ற அமைப்பு, அதன் மேல் சிகரம் அது சுமார் 12 அடி உயரமுள்ளது. இந்த விமானம் தரையிலிருந்து கலசம் வரை 60.40 மீ உயரமுள்ளது. இந்த விமானத்தின் உச்சியில் உள்ள பாறைபோன்ற அமைப்பு ஒரே கல்லால் ஆனது 80 டன் எடையுடையது என்றெல்லாம் பேசப்பட்டாலும், அது உண்மையல்ல என்பது முனைவர் குடவாயில் அவர்களின் முடிவு. இந்தக் கல்லை ஒரு கிழவி கொடுத்தாள் என்பதெல்லாம் கற்பனை கதை என்றும் அவர் கூறுகிறார். இந்த பாறைவடிவம் பல கற்களை இணைத்து உருவாக்கப்பட்டதாம். இருந்தாலும் ஒரே கல் போன்ற தோற்றமளிக்கும் வகையில் அவ்வளவு நேர்த்தியாக இவை கோர்க்கப்பட்டிருப்பது வியப்புக்குரியது. அற்புதமான துவாரபாலகர்கள் பெரிய நந்தியிலிருந்து மகாமண்டபத்துள் நுழையுமுன் இருக்கும் முன்மண்டப வாயில் இரண்டு துவாரபாலகர்கள் உண்டு. ஒரு துவாரபாலகரின் காலடியில் ஒரு மலைப்பாம்பு யானை ஒன்றை விழுங்கிக்கொண்டிருக்கிறது. இது ஓர் அரிய உட்பொருளை விளக்குகிறது என்று ஆசிரியர் கூறுகிறார். இந்த ஆலயமே ஒரு மாபெரும் தத்துவப் படைப்பு என்றும், இந்தச் சிற்பங்கள் அப்படிப்பட்ட தத்துவங்களை விளக்குவன என்றும் குடவாயில் கூறுகிறார்.