Sunday, 20 January 2019

பலவேசக்காரன்


கொள்ளை மழை கோட்டை கட்டி
பெய்யும் போதும்

கோடைவெயில் கூடாரமிட்டு
கொளுத்தும் போதும்

தை மாதப் பனி தரையை
துளைக்கும் போதும்

அம்மி பறக்க ஆலமரத்தை சாய்க்கும்
ஆடிக் காற்றின் போதும்

அஞ்சாது கண் துஞ்சாது
காவலே கடமையென
கால் கடுக்க நிற்கின்றான்

படையல் வைக்க மறந்த போதும்
பணி முடக்கம் செய்ததில்லை

ஊருக்கு உழைப்பதற்கு
ஊதிய உயர்வு
ஒருநாளும் கேட்டதில்லை

வலசை பிறந்த நாள் முதலாய்
வாசலிலே நிற்கின்றான்

வருவோர்க்கும் போவோர்க்கும்
வழி சொல்லி தருகின்றான்

கலியுகத்து பகை முடிக்க
பல வேசம் கட்டுகிறான்

வலசை மக்கள் வாழ்வு தேடி
பல தேசம் போனாலும்

வாழ்க்கை வெறுத்த நாளில்
பர தேசம் போனாலும்

பல வேசம் கூட வரட்டும்
பாதுகாப்பை தந்திடட்டும்...


கயிலாய மலையில் சிவபெருமான் உத்தரவிற்கிணங்க, சேவகர்கள் பிரமாண்டமான வேள்விக்குழியை வெட்டினர். அதில் பலவகையான மரங்களை அடுக்கி, தீ மூட்டத் தயாரானார்கள். சிவன் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிவந்த தீயை கப்பறையில் ஏந்திய பிரம்மதேவன் அதை வேள்விக்குழிக்குள் இட்டார். வேள்வித்தீ கொழுந்து விட்டு எரிந்தது. தீப்பிழம்பிலிருந்து தோன்றினாள் பிரம்ம ராக்கு சக்தி. பிரம்மனால் உருவானவள் என்பதால் அவளுக்கு அந்தப் பெயர். அவள் ஈசனிடம், “மகாதேவா, எனக்குப் பிறவி கொடுத்ததற்குக் காரணம் என்ன?” என்று கேட்டாள். “தேவர்கள் எனக்கென்று கொண்டு வந்த பொன்னரிய மாலையை சண்டமுண்டன் என்னும் அரக்கன் அபகரித்துச் சென்று விட்டான். அவனை அழித்து அதை நீ மீட்டு வரவேண்டும்,” என்றார் சிவபெருமான். ‘‘தங்கள் உத்தரவுப்படியே ஆகட்டும், ஆனால், இப்பணியை நான் மேற்கொள்வதற்கு எனக்கு நம்பிக்கைக்கு உரியவனாய், தம்பியாய் ஒருவன் வேண்டும்.

மேலும் படை திரட்டி பகை முடிக்க பலமும், நான் கொடுத்த வாக்கு நிறைவேறும் வகையில் எனக்கு அருளவும் வேண்டும்,’’ என்றாள் சக்தி. ‘‘அப்படியே ஆகட்டும்,’’ என்று அரனார் வரம் அளித்தார். பிறகு, ஆனந்த நடனம் புரிந்தார். அவருடைய முக்கண்களிலிருந்தும் அனல் பரவ, அதிலே உதயமானான் பெரிய வீரன். விண்ணுயர உயர்ந்து நின்றான். பின்னர் மனித உயரம் கொண்டான். இவ்வாறு பல ரூபங்கள் கொண்டு அரனாரைஅகமகிழ வைத்தான். நடனம் முடித்த நாதன், நாயகியுடன் வீற்றிருக்க, ஆங்காரமாய் நின்ற பெரியவீரன் சாந்த ரூபத்துடன் சிவனார் முன் சிரம் தாழ்த்தி கரம் கூப்பி நின்றான். ‘‘பல ரூபங்கள் என்னிடத்திலே காட்டி நின்ற வீரா, இன்று முதல் நீ பலவேசக்காரன் என்று அழைக்கப்படுவாய்,’’ என்று கூறி, அவனை பிரம்மராக்கு சக்தியுடன் அனுப்பி வைத்தார்.

இருவரும் சென்று சண்டமுண்டனை வென்று, பொன்னரிய மாலையை மீட்டு சிவனாரிடம் கொண்டு வந்து சேர்த்தனர். ’’ராட்சசனை அழித்ததால் பிரம்மராக்கு சக்தி, நீ பிரம்மராட்சசி என்று அழைக்கப்படுவாய் இருவரும் தீய சக்திகளிடமிருந்து மானிடர்களை காக்கும் பொருட்டு, சாஸ்தாவுக்கு துணையாக பூலோகம் செல்லுங்கள்,’’ என்று இருவரையும் சிவனார் பூவுலகிற்கு அனுப்பி வைத்தார். இருவரும் தென் பொதிகை மலையடிவாரம் கோயில் கொண்டுள்ள சொரிமுத்தைய்யன் சாஸ்தா கோயிலுக்கு வந்து நிலையம் கொண்டார்கள். பலவேசத்தை குலதெய்வமாக வணங்கி வந்த திருச்செந்தூர் அருகேயுள்ள ஒரு சிற்றூரில் வாழ்ந்த இருளப்பன், ஊரில் ஏற்பட்ட சொத்து பகை காரணமாக, நெல்லை மாவட்டம் ஆயம்பூரில் குடிபுகுந்தார். அங்கு ஊர்க்காவல் பணி செய்து வந்த அவர் தனக்கு பிறந்த மகனுக்கு பலவேசம் என்று பெயர் சூட்டினார்.

இரண்டாவது மகனை சின்ன பலவேசம் என்றழைத்தார். மகன்கள் வளர்ந்து வாலிபர்களாக ஆனதும். இருளப்பன் தனது குலப்பெருமையும், நமக்கு பூர்வீக ஊர் குறித்தும், அங்கு நமது உறவினர்கள் சொத்துகளை பறித்து கொண்டதையும், சிறிய அளவு சொத்து மட்டும் தற்போது தனக்கு உரிமைபட்டதாக இருப்பது பற்றியும் கூறினார். சகோதரர்கள் இருவரும் குதிரையில் தமது பூர்வீக ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு தங்களது பெரியப்பா வீட்டில் தங்கியிருந்து, தங்களது நிலத்தில் வீடுகட்டும் முயற்சியில் இறங்கினர். இவர்களுக்கு உதவியாக பெரியப்பா மகன் கண்ணப்பன் இருந்தான். பலவேசம் வீடு கட்டுவதற்கு அப்பகுதியை காவல் காக்கும் தீரன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் சகோதரர்கள் வீடு கட்டி குடியேறினர். பெற்றவர்களை வரவழைக்க வேண்டும். அதற்கு முன்பு ஊர்ப்பகை விலக்க வேண்டும் என நினைத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பலவேசம், அந்த பகுதியைச் சேர்ந்த சந்தன முத்தம்மை என்பவளுடன் தொடர்பு வைத்திருந்தார். இதை அறிந்த அவளது உறவினர்கள் பலவேசத்தைக் கொலை செய்யத் திட்டமிட்டு, கருவேலங்காட்டுக்குள் முள் மரங்களுக்கு இடையே பதுங்கி இருந்தனர். அந்த நேரம் அண்ணன் தம்பி இருவரும் குதிரையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் வீச்சருவாளை எடுத்து வீச, பளிச்சென்று அதைப் பிடித்துக்கொண்ட சின்ன பலவேசம், குதிரையை விட்டிறங்கி, எதிர்ப்பட்டவர்களையெல்லாம் வெட்டி எறிந்தான். சிலர் இறந்தனர்; பலர் கை, கால் முதலான உடலுறுப்புகளை இழந்தனர். எஞ்சியவர்கள் பின்வாங்கி ஓடிப்போய், அப்பகுதி காவல்காரரான தீரனாரிடம் முறையிட, அவர் பாதுகாப்பு கோரி, ஆங்கிலேய துரையிடம் தஞ்சமடைந்தார். உடனே வெள்ளைக்கார துரை, தீரனாருடன் தன் பட்டாளத்தை சேர்ந்த சில வீரர்களை அனுப்பி வைத்தார்.

தகவலறிந்த பலவேசம் சகோதரர்கள் செம்புலிங்க ஐயன் கோயிலுக்குச் சென்று மறைந்திருந்தனர். அவர்கள் மறைந்திருந்ததை அவர்களது நண்பன் ஒருவன் 50 பொற்காசுகளுக்காக காட்டி கொடுத்தான். உடனே பட்டாளத்தார் அண்ணன் தம்பி இருவரையும் பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். மூன்று நாட்கள் உணவோ, நீரோ கொடுக்காமல் காவல் வைத்து, நாலாவது நாள் காலையில் அவர்கள் கண்ணைக் கட்டி, சாத்தான்குளத்திற்கு தெற்கேயுள்ள கண்டதேரி மணலில் நிற்க வைத்து மூத்தவனை முதலில் வெட்டினார்கள். அண்ணன் ரத்தம் தம்பியின் முகத்தில் தெறிக்க, வீரம் கொண்டு எழுந்த சின்ன பலவேசம், கண்கட்டை அவிழ்த்துக்கொண்டு, அருகிலிருந்த ஒரு பட்டாளத்தானின் வாளைப் பிடுங்கி, எதிர்பட்டவர்களின் தலையை கொய்தான். அப்போது மறைந்து நின்ற ஒருவன் அவனை வெட்ட, சின்ன பலவேசம் மண்ணில் சாய்ந்தான். தொடர்ந்து பட்டாளத்தார் சின்ன பலவேசத்தை கண்ட துண்டமாக வெட்டினார்கள்.

மகன்கள் ஆங்கிலேய பட்டாளத்தார்களால் கொலை செய்யப்பட்டதை அறிந்து இருளப்பன் மனைவி முத்தம்மாளுடன் அங்கு வந்து இரண்டு மகன்களின் உடலை ஒன்று சேர்த்தாள். உறவினர்கள் உடலுக்கு தீ மூட்டக் கூறினர். ஆனால், அவளோ, ‘‘என் தெய்வம் பலவேசம் வருவார். என் மகன்களின் ஈருடல்களை ஓருடலாக்கி வலம் வருவார்,’’ என்று கூறிவிட்டு, உறவினர்களையும், மனைவியையும் அனுப்பிவிட்டு சுவாமியை நோக்கி அந்த உடல்களை வைத்து அவற்றினருகே தவமிருந்தார். இருளப்பனின் தவவலிமையினால் சுவாமி பலவேசம் வந்து இறங்கினார். மாண்டுபோன பலவேசம் ஈருடல் ஓருடலாகி பலவேசம் எழுந்தான். ஆக்ரோசம் கொண்டு குதிரையில் புறப்பட்டவன் தன் மரணத்திற்கு காரணமான தீரனையும் அவனோடு இருந்த பட்டாளத்து வீரர்களையும் வதம் செய்தான். மீண்டும் இருளப்பனிடம் வந்தான். இருளப்பா, உன் தலைமுறை தோஷத்தால் நீ உன் மக்களை இழந்து நிற்கிறாய்.


அதுமட்டுமல்ல, ஒழுக்க சீலனாய் வாழ்வதே உயர்வான வாழ்வு. அதை தவறியதன் காரணமாக உனது மூத்த மைந்தன் வாழ்வு முடிவுற்றது. வீரனாக இருந்தாலும் நற்காரியங்களுக்காக, நல்ல செயலுக்காக தனது வீரத்தை வெளிக்கொணரலாம். உறவுக்காக வீரத்தின் பொருட்டு முன்நின்ற இளைய மைந்தனும் உனக்கு சொந்தமின்றி போனான். எனக்கு இவ்விடம் கோயில் எழுப்பி பூஜித்து வா உன் வாழ்வையும், உன்னைப் போன்று என்னை வழிபடும் யாவருக்கும் நல்லருள் புரிவேன், தலமுறை தோஷம் போக்கி நல்வாழ்வு அளிப்பேன் என்று கூறி அவ்விடம் விட்டு மறைந்தார். அதன் பிறகு அதே இடத்தில் இருளப்பன் பலவேசத்திற்கு கோயில் எழுப்பி , மகனின் ரூபத்தில் சிலை வடித்து வைத்து வணங்கி வந்தார்.


அவரது காலத்திற்கு பிறகு அவளது குடும்பத்தார் பலவேசத்தை வழிபட ஆரம்பித்தார்கள். அந்த ஊரிலிருந்து இடம் பெயர்ந்து அவர்கள் பல இடங்களுக்குச் சென்ற போதிலும், அங்கெல்லாமும் பலவேசத்துக்கு சிலை நிறுவி தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். பலவேசம் தென் மாவட்டத்தின் காவல் தெய்வங்களில் ஒருவராக திகழ்கிறார். தலமுறை தோஷம் விலக பலவேசத்தை வழிபடுகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் அம்பையில் உள்ள மாயாண்டி சாமி கோவிலில் பலவேசக்கார சாமி நின்றபடி அருளாட்சி புரிகிறார். இந்த கோயிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

Sunday, 22 July 2018

தோரணமலை


தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது தோரணமலை. இந்த மலை யானையைப் போன்று காட்சியளிப்பதால், 'வாரண மலை' என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் தோரணமலை என்று மாறியது. இந்த மலையில் அருளாட்சி செய்கிறார் அழகு முருகன். மேலும், அகத்தியர் தங்கியிருந்து மருத்துவப் பணி செய்த மலை இது என்பதால், இந்த மலையில் பல்வேறு அபூர்வ மூலிகைகள் இருந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.


தோரணமலை


மலையின் கீழிருந்து 926 படிகள் ஏறிச் சென்றால், உச்சியில் உள்ள குகைக்கோயிலை அடையலாம். சிவனாரின் கட்டளைப்படி தென்பாரதம் வந்த அகத்தியர், பொதிகை மலைக்குச் செல்லும்வழியில், இந்த மலையின் அழகில் லயித்து, சில காலம் இங்கே தங்கியிருந்தார். சுமார் 4,000 மூலிகைகள் வரை இங்கிருந்த காரணத்தினால், அகத்தியர் இங்கே தங்கியிருந்து மருத்துவச்சாலை ஏற்படுத்தி பலருக்கும் வைத்தியம் செய்ததாகச் சான்றுகள் உள்ளன என்கிறார்கள். இங்கு தங்கியிருந்த அகத்தியரும் அவருடைய சீடரான தேரையரும் பல மருத்துவ நூல்களை இயற்றியதாகவும் சொல்லப்படுகிறது. தோரணமலையெங்கும் பல குழிகள் காணப்படுவதை இன்றும் காணலாம். அவை சித்தர்கள் இங்கு மருந்துகள் தயாரிக்க உதவிய குழிகள்தான் என்கிறார்கள். அகத்தியர் பொதிகை மலைக்குச் சென்ற பிறகும்கூட இந்த மலை பல சித்தர்களின் ஆராய்ச்சி மையமாகவும் செயல்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
சித்தர்கள் வாழ்ந்த பகுதியானதால் சில காலம் வரை இந்த மலைக்கோயிலில் வழிபாடு இல்லாமலிருந்தது. பின்னர் காலம் கனிந்ததும் மீண்டும் முருகப்பெருமான் வெளிப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினார். தேரையர் ஜீவ சமாதி அடைந்ததும் தோரணமலையில்தான் என்று நூல்குறிப்புகள் பலவும் கூறுகின்றன. இன்றைக்கும் சித்தர்கள் பலர் அருவமாக வந்திருந்து வழிபடும் தெய்வ மலை தோரணமலை.


இந்த மலை பார்ப்பதற்கு தனியே தோரணம் கட்டியதுபோலவும், மாபெரும் பாறையை தொப்பியாக்கி அணிவித்தது போலவும் இருக்கும். நாம் பார்க்கும் அந்த மலையில் ஒரு கபால அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதுதான் உலகிலேயே நடந்த முதல் அறுவை சிகிச்சையாகும். அகத்தியர் தலைமையில் தேரையர் உட்பட பல்வேறு சித்தர்கள் அமர்ந்து அந்த சிகிச்சையை நடத்தியுள்ளனர். தேரையர், புலத்தியர் இருவருமே அகத்தியரின் சீடர்களாவர். அகத்தியரோடு இணைத்துத்தான் தேரையரின் வரலாறும் கூறப்படுகிறது.

தலையைப் பிளந்து அறுவைச்சிகிச்சை செய்வது என்பது இன்று அறிவியல் வளர்ந்த நிலையில் கூட கடுமையான சோதனைக்களத்தில் நிற்கும் உணர்வைத் தருகிறது. ஆனால், நம் தேசத்தில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மூலிகை வகைகளைக் கொண்டே இந்த சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சையை செய்தவர் அகத்தியர் என்றாலும், அது வெற்றி பெற காரணமானவர் தேரையர். வைத்தியரே குழம்பிப்போய் நின்ற வேளையில், துணிச்சலும் சமயோசிதமும் கலந்து இந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற காரணமானார். தேரையர் சித்தர் மலையாள தேசத்தில், திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்தவராக இருந்திருக்க வேண்டும். அவரது வரலாற்றின் போக்கைக் கொண்டு இவ்வாறு கணிக்க வேண்டியுள்ளது. அவர் சமாதியானது மலையாள தேசத்திலுள்ள தோரண மலை என கணிக்கப்பட்டுள்ளது. தோரணமலை, குற்றாலம் அருகில் உள்ளது. முற்காலத்தில், குற்றாலத்தைச் சார்ந்த பகுதிகள் மலையாள தேசத்தில் தான் இருந்தன. மேலும், இவர் அகத்தியரின் சீடராக இருந்தார். அகத்தியரும், பொதிகை மலையில் தங்கியிருந்தார். இதையெல்லாம் கணக்கில் கொண்டால், இது உண்மையாக இருக்கலாம் என்றே நம்பலாம். தமிழ் மூதாட்டி அவ்வையார், தேரையரின் திறமையைப் பற்றித் தெரிந்து, அவரை அகத்தியரிடம் அறிமுகப்படுத்தியதாகவும், அவரை அகத்தியர் சீடராக ஏற்றுக்கொண்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அப்போது தேரையருக்கு என்ன பெயர் இருந்ததோ? ஆனால், அவர் தேரையர் என்ற பெயர் பெற ஒரு நிகழ்ச்சியே காரணமானது. எப்படியிருப்பினும், இவர் அகத்தியரின் சீடராக இருந்தது நிஜமே.ஒருமுறை தேரையர் அகத்தியரிடம், குருவே! மனிதன் ஏன் பிறக்கிறான்? அவன் இந்த உலகத்தை தன்னுடையதாகக் கருதி, இங்கேயே தங்க விரும்புகிறானே? மரணம் கண்டு அவன் அஞ்சுவது எதனால்? முக்திநிலை அடைவது தானே வாழ்வின் நோக்கம். பிறப்பற்ற நிலை பெற, நீங்கள் தான் உபதேசிக்க வேண்டும், என்றார்.

அகத்தியர் சிரித்தார். தேரையர் சற்றும் எதிர்பாராத ஒரு பதிலை அளித்தார். சீடனே! உடம்பை பாதுகாத்துக் கொள். உடம்பை பாதுகாத்தால் உனது ஆயுள் பெருகும். ஆயுள் பெருகப் பெருக உனக்கு முக்தி கிடைத்து விடும், என்றார்.சுவாமி! தங்கள் பதில் விந்தையாக இருக்கிறதே! இந்த உடம்பை விடுத்து, விரைவில் வந்த இடம் போய் சேர்வது தான் முக்தி தத்துவம். தாங்களோ, ஆயுள் அதிகரித்தால் முக்தி கிடைக்கும் என்கிறீர்களே! இதெப்படி சாத்தியம்? என்றார். சீடனே! ஒரு கேள்விக்கு பதில் சொல், என்றார் அகத்தியர்.தேரையர் ஆவலுடன் அவர் முகத்தை நோக்கினார். நீ பல திருமணங்களைப் பார்த்திருப்பாய். மணமக்களை விருந்தினர்கள் என்ன சொல்லி வாழ்த்துகின்றனர்? என்றார். நீடூழி வாழ்க, என்று சொல்வார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள்? உன் கூற்றின்படி பார்த்தால், விரைவில் முக்தி அடைக என்றல்லவா வாழ்த்த வேண்டும்! மகனே! ஆயுள் வளர்வது வீணே பொழுது போக்குவதற்காக அல்ல. ஆண்டவனால் நிர்ணயிக்கப்படும் வாழ்நாளை ஆண், பெண் இருபாலரும், பிறர் நன்மை பெறுவதற்காகப் பயன்படுத்த வேண்டும். நம்மைப் போன்ற துறவிகளும் இதையே செய்ய வேண்டும். மேலும், ஞானத்தைப் பெற கடும் ஆன்மிகப்பயிற்சிகள் தேவை. இந்த பயிற்சியைப் பெற உடல் வலுவாக இருக்க வேண்டும். மொத்தத்தில் நோயற்ற உடல் வேண்டும். எனவே, நீ எல்லோருக்கும் நோயற்ற உடல் அமையும் வகையில், சேவை செய். நீ ஞானம் பெற்று, முக்தி பெறுவாய், என்றார். குருவின் இந்த அற்புதமான விளக்கத்தைக் கேட்ட தேரையர், அவரிடம் மிகுந்த நேசம் கொண்டார். அந்நேரத்தில் அகத்தியர், காடுகளில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு பலவித ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தார். தேரையர் அவர் கேட்கும் மூலிகை வகைகளைத் தேடிப்பிடித்து கொண்டு வந்து மருந்து தயாரிக்க உதவினார். இந்த சமயத்தில், காசிவர்மன் என்ற அரசனுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது. நாளாக நாளாக வலி அதிகரித்தது. அவன், அகத்தியரைத் தேடி அவரது குடிலுக்கு வந்தான்.பெருமானே! என்னை தாங்க முடியாத தலைவலி ஆட்டிப்படைக்கிறது.

ராஜாங்க விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. தாங்கள் நினைத்தால், இதை நொடியில் குணப்படுத்தி விடுவீர்கள் என்பதை நான் அறிவேன். என்னைக் காப்பாற்ற வேண்டும், என வேண்டி அவரது பாதத்தில் விழுந்தான்.அரசன் மீது அகத்தியர் மிகுந்த கருணை கொண்டார். அவனை பரிசோதித்தார். தலைவலிக்கான காரணம் தெரிந்து விட்டது. அவனிடம் சொல்ல யோசித்தார். மன்னா! நீ அரண்மனைக்குச் செல். நாளை இந்த வியாதியை தீர்த்து விட ஏற்பாடு செய்கிறேன், என்றார்.சுவாமி! இந்த வலிக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று சொல்லி அருளுங்களேன் என்றான் மன்னன்.அது உனக்கெதற்கு? வியாதியஸ்தனுக்கு மருந்தும் சுகமும் தானே தேவை. நீ புறப்படு, என்றவரிடம், மன்னன் மிகவும் பணிவுடன் கேட்டான். மன்னா! சொல்ல வேண்டாம் என நினைத்தேன். சொல்ல வைத்து விட்டாய். உன் தலைக்குள் தேரை ஒன்று இருக்கிறது, என்றார். தேரை என்பது தவளை வகையில் ஒன்று. தேரையா! அதெப்படி தலைக்குள் நுழைய முடியும், என்று மன்னன் கேட்கவே, நீ தூங்கும்போது, உன் மூக்கின் வழியாக குஞ்சு ஒன்று நுழைந்திருக்க வேண்டும். அது தலையை இப்போது அடைந்ததால், வலி வந்திருக்கிறது, என்றதும், மன்னன் அதிர்ந்தான். சுவாமி! என்னால் நம்பவே முடிய வில்லையே. இப்படி ஒரு கொடிய நிலைமையா எனக்கு? தலைக்குள் இருக்கும் தேரையை எப்படி வெளிக்கொண்டு வர முடியும்? என்று பதட்டப்பட்டு கேட்ட மன்னனிடம், பயப்படாதே. நாளை உனக்கு கபால சிகிச்சை செய்யப் போகிறேன். உன் தலையைப் பிளந்து, உள்ளிருக்கும் தேரையை எடுக்க முயற்சிக்கிறேன், என்ற தேரையரை இடைமறித்த அரசன், ஐயோ சுவாமி! தலையை உடைத்த பின் எப்படி என் உடலில் உயிர் தங்கும்? என உடல் வெடவெடக்க கேட்டான்.

அகத்தியர் அவனைத் தைரியப் படுத்தினார். மன்னா! தலையைப் பிளக்கவும், அதை மூடவும் என்னிடம் மூலிகைகள் உள்ளன. இதனால் உனக்கு வலி தெரியாது. மேலும், சில மூலிகைகளைக் கொடுத்து உன்னை மயக்கமடையச் செய்து விடுவேன். என்ன நடக்கிறது என்பதை நீ அறியமாட்டாய். என்னிடம் வைத்தியம் பார்க்க வந்த எவரும் இதுவரை குணமாகாமல் திரும்பியதில்லை, என்றார். அகத்தியரின் தெய்வசக்தியை மன்னனும் அறிவான். எனவே, அவன் சிகிச்சைக்கு சம்மதித்தான். அகத்தியர் மன்னனின் மூக்கருகே ஏதோ ஒரு மூலிகையை நீட்டினார். அதன் வாசனைபட்டதுமே, மன்னன் படிப்படியாக மயக்கநிலையில் ஆழ்ந்தான். ஏதோ ஒரு மூலிகையை எடுத்து அரைத்து மன்னனின் தலையில் தடவிய அகத்தியர், அவனது தலையின் ஒரு பகுதியை பவ்யமாக உடைத்து திறந்தார். என்ன அதிசயம்! மன்னனின் மூளையில் ஒரு தேரை (தவளை) உட்கார்ந்திருந்தது. அது மிரள மிரள விழித்தது. இதை எப்படி வெளியேற்றுவது...கை படக்கூடாது. ஏதாவது குச்சியால் தட்டினால் அது ஏதாவது ஒரு இடத்தில் போய் பதுங்கிக் கொண்டால், பின்னர் மன்னனின் உயிருக்கு ஆபத்தாகி விடும்! வைத்திய மாமேதையான அகத்தியரே கலங்கி விட்டார். இந்த சமயத்தில், அருகில் நின்ற தேரையர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்தார். மன்னன் தலையருகே வைத்து, கைகளை தண்ணீருக்குள் விட்டு அளைந்தார். தண்ணீரின் சல சல சத்தம் கேட்ட தேரை தலையில் இருந்து குதித்து தண்ணீருக்குள் விழுந்து விட்டது. உடனே பாத்திரத்தை அங்கிருந்து அகற்றி விட்டார் தேரையர். தன் சிஷ்யனின் அபார அறிவு திறனை அகத்தியர் பாராட்டினார். தேரையா! தன்னைச் சார்ந்தவனுக்கு இக்கட்டான நிலையில் கை கொடுப்பவனே உலகில் உயர்ந்தவன். நீ செய்த காரியத்தால், என் மானமும், மன்னனின் உயிரும்காப்பாற்றப்பட்டன. என் மருந்துப்பெட்டி யிலுள்ள சந்தானகரணி மூலிகையை எடு, என்றார். சந்தானகரணியை எடுத்த தேரையர், குருவே! இதன் குணம் என்ன? என்றார். உடைந்த தலையை ஒட்டவைக்கும் அரியவகை மூலிகை இது, என்ற அகத்தியர் அதன் சாறைப் பிழிந்து தலையில் ஊற்றினார். சிறிது நேரத்திலேயே தலை ஒட்டிக்கொண்டது.

அகத்தியரே இந்த சிகிச்சையை செய்தார் என்றாலும் கூட, தேரை வெளியேற தேரையரே காரணமானார். தேரையுடன் சம்பந்தப்பட்டவர் என்பதால் தான் இவருக்கு தேரையர் என்ற பெயரே ஏற்பட்டது. இன்னொரு சமயத்திலும் அகத்தியருக்கு பெரும் உதவி செய்தார் தேரையர். அகத்திய சித்தர் தென்பாண்டி நாட்டில் தங்கியிருந்த சமயம் அது. பாண்டிய மன்னன் ஒருவன் அவரை வணங்க வந்தான். அவனுக்கு முதுகில் கூன் இருந்தது. தனது பரம்பரையே இப்படி கூன் விழுவதாக அவன் அகத்தியரிடம் சொல்லி வருத்தப்பட்டான். அகத்தியர் அவனுக்கு ஆறுதல் சொல்லி, பிறவிக்கூனை குணப்படுத்த தன்னிடம் மூலிகைகள் உள்ளதாகவும், சில நாட்கள் கழித்து ஆஸ்ரமத்திற்கு வரும்படியும் சொல்லி அனுப்பினார்.மன்னன் நம்பிக்கையுடன் சென்றான். தேரையரை அழைத்த அகத்தியர், சீடனே! கூனை நிமிர்த்தும் மூலிகை வகைகளின் பெயர்களைச் சொல்கிறேன் கேள். அவற்றை காட்டிற்குள் சென்று பறித்து வா, எனச்சொல்லி, மூலிகைகளின் அடையாளம் மற்றும் குணத்தையும் எடுத்துச் சொன்னார். தேரையரும், அகத்தியர் கூறியபடியே அவற்றை அடையாளம் கண்டு ஒரு பை நிறைய பறித்து வந்து விட்டார். அகத்தியர் அந்த மூலிகைகளைச் சாறெடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்தார். தேரையரிடம், தேரையா! நீ இந்தக் கரைசல் பக்குவமாக வரும் வரை கிளறிக்கொண்டிரு. எனக்கு காட்டிற்குள் சிறிது வேலையிருக் கிறது. நான் வந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளலாம், என சொல்லிவிட்டு சென்று விட்டார். தேரையரும் பக்குவமாக காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு மேலுள்ள மேற்கூரையில் இருந்து டக் என சப்தம் வந்தது. இது கேட்டு நிமிர்ந்தார் தேரையர். என்ன ஆச்சரியம்! வளைந்திருந்த அந்த மூங்கில் நிமிர்ந்து நேராகி இருந்தது. தேரையரின் மூளையில் பளிச்சென ஒரு மின்னல் வெட்டியது. குரு என்னவோ, தான் வந்த பிறகு கரைசலை இறக்கி வைத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்லியிருக்கிறார்.

ஒருவேளை அவர் வர தாமதமானால், கரைசல் மேலும் சூடாகி, இந்த அற்புதமான மருத்துவக் குணத்தை இழந்து போகலாம். மூலிகையின் புகைபட்டே வளைந்த மூங்கில் நிமிர்கிறது என்றால், மூலிகை கரைசலைத் தடவினால் கூன் நிச்சயமாக குணமாகத்தானே செய்யும்! இது தான் சரியான பக்குவம். கரைசலை இறக்கி வைத்து விட வேண்டியது தான், என நினைத்தவர், அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி வைத்துவிட்டார். களைப்பாக இருந்ததால், சற்று படுத்திருந்தார். வெளியே சென்றிருந்த அகத்தியர் வந்தார். அடேய்! உன்னை நம்பி எவ்வளவு முக்கியமான பொறுப்பை ஒப்படைத்து விட்டுப் போனேன். நீ என்னடாவென்றால், உறங்கிக் கொண்டிருக்கிறாயே! மூலிகை குழம்பு என்னாயிற்றோ! என்று கோபமாகப் பேசியவரிடம், மிகுந்த பணிவுடன் சென்ற தேரையர், நடந்ததைச் சொன்னார்.அகத்தியர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். சீடனே! எனக்கு கிடைத்தவர்களில் நீ மிகவும் உயர்ந்தவன். ஒவ்வொரு ஆசிரியருக்கும் இப்படி புத்திசாலி மாணவர்கள் கிடைக்கவும் கூட கொடுத்து வைக்க வேண்டும்! அன்றொரு நாள் ஒரு உயிரைக் காப்பாற்ற மூளையில் இருந்த தேரையையே குதிக்கச் செய்தாய்.இன்று, கூன் நிமிரும் பக்குவத்திற்கு கரைசலை தயார் செய்துள்ளாய். பெரியவர்கள் சொன்னதைக் கேட்க வேண்டும் தான்! அதே நேரம், சமயத்திற்கு தக்க முடிவுகளையும் எடுப்பதன் மூலம் அவர்களின் அபிமானத்தை மேலும் பெறலாம். மகனே! இனி நீ என்னுடன் இருக்கக் கூடாது. வெளியே செல், என்றார். தேரையர் அதிர்ச்சியானார். நல்லதைச் செய்ததாகச் சொல்லிவிட்டு, இப்போது வெளியே போகச் சொல்கிறாரே! என குழம்பி நின்றார்.ஒருவேளை நாம் செய்தது முட்டாள்தனமோ.. குரு நம்மைப் புகழ்வது போல பழிக்கிறாரோ, என கலங்கி நின்றார்.

குருதேவா! நான் ஏதும் தவறு செய்து விட்டேனா? தாங்கள் என்னை வெளியே போகச் சொல்லுமளவுக்கு நான் தங்கள் கவுரவத்துக்கு பங்கம் இழைத்து விட்டேனா? அவ்வாறு செய்திருந்தால், நான் உயிர் தரிக்க மாட்டேன்... தேரையர் கிட்டத் தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டார்.அடடா... தவறாகப் புரிந்து கொண்டாயே! திறமையுள்ள இருவர் ஒரே இடத்தில் இருப்பதால் மக்களுக்கு லாபம் குறைகிறது. அவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தால் பயன்பெறும் மக்களின் அளவு கூடும். நீ தனித்தே வைத்தியம் செய்யுமளவுக்கு தகுதி பெற்று விட்டாய். அதனாலேயே உன்னை வெளியே அனுப்புகிறேன். கடந்த வாரத்தில், உன் கைங்கர்யத்தால் காட்டில் இருக்கும் முனிவர் ஒருவரின் வயிற்று வலி நீங்கியது! என்றார். ஆம்...மன்னனுக்கு கூன் நிமிர்ந்த பிறகு, தீராத வயிற்றுவலி இருப்பதாகச் சொல்லிக்கொண்டு ஒரு முனிவர் அகத்தியரிடம் மருந்து வாங்க வந்தார். அதி அற்புதமான திரவ மருந்தொன்றை அவருக்கு கொடுத்த அகத்தியர், பத்திய முறைகளின் படி இதைச் குடித்து வர, வலி பறந்தோடி விடும் என சொல்லி விட்டார். அகத்தியரின் மருந்துக்கு மறுமருந்து உண்டா? முனிவரும், அதை குடித்தார். உஹும்...வலி தீரவில்லை.இரண்டு நாள் கழித்து முனிவர், தன் சீடன் ஒருவனை அகத்தியரிடம் அனுப்பினார். அவன் அகத்தியரிடம் வந்து, அகத்திய சித்தரே! தங்கள் மருந்தாலேயே எங்கள் குருவின் வியாதியைக் குணப்படுத்த முடியவில்லை என்றால், இனி யாரால் மருந்து தர இயலும்? குரு வயிற்றுவலி தாளாமல், இன்னும் பிதற்றிக் கொண்டிருக்கிறார், என்றான். அகத்தியருக்கு ஆச்சரியம். சரியான மருந்தைத் தானே கொடுத்தேன். சரி.. சரி... உன்னோடு, தேரையனை அழைத்துச் செல். அவன் என்ன ஏதென்று பார்ப்பான், எனச்சொல்லி தேரையரை அனுப்பி வைத்தார். தேரையர் அங்கு சென்று முனிவரைச் சோதித்தார். கொருக்கை என சொல்லப்படும் குச்சியை எடுத்தார். அந்தக் குச்சியின் நடுவில் துவாரம் இருக்கும். அதாவது, இப்போது நாம் குளிர்பானம் குடிக்கப் பயன்படுத்தும் ஸ்டிரா போல! அதன் மூலமாக, அகத்தியர் கொடுத்த அதே மருந்தை உறிஞ்சி குடிக்கச் சொன்னார். என்ன ஆச்சரியம்! வலி உடனே பறந்து விட்டது.

தேரையர் மகிழ்ச்சியுடன் ஆஸ்ரமத்துக்கு வந்து, அகத்தியரிடம் நடந்ததைச் சொன்னார். அகத்தியர் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. என் பெயரைக் காப்பாற்றினாய், என்று சொல்லி பாராட்டினார். இப்படி அகத்தியர் பல மருந்துகளைக் கண்டுபிடிக்க, அதைப் பயன்படுத்தும் வித்தையை தேரையர் பல்வேறு விதங்களில் கையாள...பல நோயாளிகள் பயன் பெற்றனர். இந்தக் காரணத்தாலேயே அகத்தியர், தேரையரை வெளியில் அனுப்ப உத்தேசித்தார். இந்தக் காலத்தில் தொழில் தெரிந்த ஒருவர், தன்னைப் போலவே ஒருவர் அதே தொழிலைச் செய்ய முற்படுகிறார் என்றால், அவரை எப்படி கவிழ்க்கலாம் என்ற யோசனையில் ஆழ்ந்து விடுவார். ஆனால், மகான்கள் பிறர் நன்மைக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தனர் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.குருவின் கட்டளையை ஏற்று தேரையரும் கிளம்பி விட்டார். அகத்தியர் இருந்த இடத்தை விட்டு வெகு தொலைவிலுள்ள காட்டுக்குச் சென்றார். அங்கு பல முனிவர்களுக்கு வைத்தியம் செய்து அவர்களின் பிணி நீக்கினார். இந்நிலையில், பாண்டியநாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. தங்களுக்கு தங்கம் கிடைத்தால், அதை வேற்று நாட்டவரிடம் விற்று, உணவுப் பொருள் வாங்கிக் கொள்வதாக மக்கள் தேரையரைச் சந்தித்துக் கூறினார்.தேரையரும் தங்கம் தயாரிக்க ஆரம்பித்தார். அப்போது அவர் அமைத்த பட்டறைகளில் இருந்து எழுந்த புகை, அப்பகுதியில் தவம் செய்து வந்த முனிவர்களுக்கு இடைஞ்சலைக் கொடுத்தது. அவர்களில் சிலர், அகத்தியரிடம் வந்து, உங்கள் சீடன் செய்த காரியத்தால், எங்கள் தியானம் கலைந்தது என புகார் செய்தனர். அகத்தியருக்கு கடும் கோபம். தேரையரை வரவழைத்தார். அவரிடம் பேசக்கூட இல்லை. இரண்டாக அவரைக் கிழித்தார். தேரையரின் உயிர் பறந்து விட்டது. தேரையர் தன் சீடர்களுக்கு முன்கூட்டியே, இப்படி ஒரு நிலை வந்தால், உடலை ஒட்ட வைத்து மீண்டும் உயிரூட்டும் கலையைச் சொல்லிக் கொடுத்திருந்தார். அதைப் பயன்படுத்தி தேரையரை உயிர் பெறச் செய்து விட்டனர் சீடர்கள். அதன்பின் அகத்தியருக்கு பயந்து தலைமறைவாக இருந்தார் தேரையர். சீடனின் திறமையையும், சமயோசிதத்தையும் கேள்விப் பட்டு மகிழ்ந்தார். ஆண்டுகள் ஓடின. அகத்தியருக்கு பார்வைக் குறைவு ஏற்பட்டது. அவர் சீடர்களை அழைத்து, தேரையனை மருந்துடன் வரச்சொல்லுங்கள். அவன் வந்தால் தான் எனக்கு கண் குணமாகும், என்றார். சீடர்களும் பல மைல் தூரம் சென்று, தேரையரை அழைத்து வந்தனர். தேரையர் தன் குருநாதரின் கண்களில், ஒரு மூலிகையைப் பிழிந்து விட, கண் முன்பை விட தெளிவாகத் தெரிந்தது. தன் சீடனை அப்படியே அணைத்துக் கொண்டார் அகத்தியர். தேரையா! நீ முன்னிலும் தேறி விட்டாய். உன்னை நான் கொன்றும் கூட, புத்திசாலித் தனத்தால் உயிர் பெற்றாய். என்னை பழி வாங்க எண்ணாமல், தக்க வைத்தியம் செய்தாய். உயிர் போகும் அளவிலான துன்பம் செய்தவர்களுக்கும் கூட நன்மை செய்பவனே உலகில் உயர்ந்தவன். அத்தகைய நற்குணத்தை நீ பெற்றுள்ளாய். நீ கண்டுபிடித்த மருத்துவக்குறிப்புகள் வீண் போகக்கூடாது. அவற்றை ஒரு நூலாக எழுதி வை. எதிர்கால வைத்தியர்கள் உன்னை தலைதலைமுறையாக வாழ்த்துவர், என்றார்.தேரையரும், 21 நூல்களை எழுதினார். பலகாலம் வாழ்ந்த அவர், முன்பு கேரளத்தில் இருந்ததும், தற்போது தமிழகத்தில் தென்காசி அருகில் உள்ளதுமான தோரணமலையில் சமாதியானதாக ஒரு குறிப்பு கூறுகிறது.

Saturday, 14 July 2018

தேடிவந்து அருள்பாலிக்கும் தேவி -அழகு பார்வதி அம்மன்


குற்றால மலையில் இருந்து ஓடி வரும் சிற்றாறும், சொக்கம்பட்டி வழியாக ஓடி வரும் கருப்ப நதியும் சங்கமிக்கும் அற்புத பூமி, சுரண்டை. இங்கு விவசாய விளைச்சலுக்குப் பஞ்சமில்லை; பக்தி விளைச்சலுக்கும் குறைவில்லை. சுரண்டை ஜமீன்தார்கள் கோயில் கட்ட இடம்கொடுத்தனர். மண்டகப்படி திருவிழாவை ஏற்படுத்தினர். கஷ்டம் பல வந்தாலும், ஆங்கிலேயர் காலத்தில் தங்களால் பலமுறை கப்பம் கட்ட முடியாமல் தங்கள் ஜமீன் ஏலத்துக்கு சென்றபோதும் தாங்கள் உருவாக்கிய கோயில்களை மறக்கவில்லை. தாங்கள் செய்யும் பணிவிடைகளை இன்றளவும் அவர்களுடைய வாரிசுகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
தென்னகத்தில் உருவான 72 பாளையங்களுள் ஒன்று சுரண்டை. ஆங்கிலேயர் ஆட்சியின்போது கிழக்கு பாளையத்தினை நாயக்கர்களும், மேற்கு பாளையத்தினை மறவர்களும் ஆண்டு வந்தனர். மறவர் ஜமீனில் சுரண்டை முக்கியமானதாக விளங்கியது.

இந்த ஜமீன்தார்கள் வரிவசூல் செய்து ஆங்கிலேயருக்குக் குறிப்பிட்ட தொகையைக் கப்பமாக செலுத்திவிட்டு, மீதி பணத்தினை வைத்து சுகபோகமாக வாழ்ந்தார்கள். இவர்களில் சிலர் கப்பம் கட்ட விரும்பாமல் ஆங்கிலேயருக்கு எதிராகக் கலகம் செய்தனர். இதனால் பல ஜமீனை ஏலத்துக்கு விட்டனர் ஆங்கிலேயர்கள். இந்தவகையில் நான்கு முறை கப்பம் கட்ட முடியாமல் சுரண்டை ஜமீன் ஏலத்துக்கு வந்துள்ளது. அந்த சமயத்தில், ஊத்து மலை ஜமீன்தார் இருதலாய மருத்தப்பர் தலையிட்டு ஜமீனை மீட்டுக் கொடுத்துள்ளார். அந்த காலகட்டத்தில் சிவனு சாலுவ கட்டாரி பாண்டியன் என்பவர் அந்த ஜமீனை ஆண்டு வந்திருக்கிறார் என்று தெரிகிறது. இவர் ஆட்சியின்போதுதான் சுரண்டையில் அழகு பார்வதியம்மன் கோயிலில் திருவிழா உருவானது என்றும் கூறுகிறார்கள். இன்றைக்கும் 10 நாள் கொண்டாட்டமாக நடை பெறும் இந்தத் திருவிழாவின் முதல் மண்டகப் படியே ஜமீன் அரண்மனைக்குரியதுதான்.

கட்டாரி பாண்டியன், சீரோடும் சிறப்போடும் ஊத்துமலை ஜமீனுக்கு நிகரான செல்வசெழிப்போடு வாழ்ந்து வந்தார். எனவே இவருக்கு ஊத்துமலை ஜமீன்தாரின் சகோதரி இந்திர மருத நாச்சியாரை மணமுடித்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. எனவே கட்டாரி பாண்டியன் இறந்த பிறகு நாச்சியார் ஆட்சிக்கு வந்தார். இவருக்கு உதவியாக இருந்த தம்பி இந்திர தலைவன், நாச்சியாரின் காலத்துக்கு பிறகு பட்டத்துக்கு வந்தார். இவர் ஆட்சி காலத்திலும் சுரண்டை ஜமீன் ஏலத்துக்கு வந்துள்ளது. இவர்களின் அரண்மனை ஏலத்துக்கு வந்தபோது சுந்தரபாண்டியபுரத்தினை சேர்ந்த ஒருவர் ஏலம் எடுத்தார். அரண்மனை இருந்த இடத்தில் இப்போது கிராம மக்களின் வீடுகள் காணப்படுகின்றன. அரண்மனை இருந்ததற்கான சான்றாக கோட்டைத் தெரு மட்டும் உள்ளது. தற்போது ஜமீன் வாரிசுகள் வசிக்கும் இடம் ஒரு காலத்தில் விருந்தினர் மாளிகையாக இருந்துள்ளது.

மிக பிரமாண்டமான மூன்று மாடி கட்டிடம் அது. கலைநயம் மிக்கது. மூன்றாவது மாடியில் மணிப்பாரா உள்ளது. இந்த மணிப்பாரா, ஜமீன் ஆட்சி காலத்தில் காவலர்கள் கண்காணிப்புத் தளமாக இருந்தது. வாரிசுகள் இங்கு வசித்தபோது, பிரச்னைகள் பல ஏற்பட்டன. எனவே வாஸ்து சாஸ்திரப்படி முன்பக்கம் வாசல் சரியில்லை என்று அதை அடைத்து விட்டு பின்பக்க வாசலை பிரதான வாசலாகப் பயன்படுத்தி வருகிறார்கள். வராண்டாவில் ஊஞ்சல் ஆடுகிறது. அருகே ஜமீன்தார்கள் பயன்படுத்திய வேட்டை துப்பாக்கி சுவரில் மாட்டப்பட்டுள்ளது. மூன்று மாடி ஏறிப்போனால் மணிப்பாராவை எட்டலாம். இந்திர தலைவரின் மகன் தங்கராஜ்பாண்டியன், இவரை அடுத்து இவரது மனைவி அன்னபூரணி நாச்சியார் என்னும் கருத்த துரைச்சி - இவர்களுக்குப் பிறகு, மூத்த மகனான சிவஞானராஜா, தற்போதைய சுரண்டை ஜமீன்தாராக உள்ளார். இவருடைய மகன், எஸ்.கே.பி. ராஜா, கோயிலில் நடைபெறும் பரிவட்டம் உள்பட ஜமீன் மரியாதைகளை ஏற்று வருகிறார். சுமார் 120 வருடங்களுக்கு முன்பு நடந்த வரலாறு இது:

இருதாலய மருதப்பதேவர் ஊத்துமலை ஜமீனை ஆண்டு வந்தார். இவருடைய பெண்ணை மணந்து மருமகனானவர், சுரண்டை ஜமீன்தாரான கட்டாரி பாண்டியன். மருமகனுக்கு அனைத்து சீர்வரிசை, மாலை மரியாதை எல்லாமே திரு விழாக்களில் வழங்கப்படுவதை மாமனார் உறுதிசெய்தார். ஆனால், கட்டாரி பாண்டியன் வித்தியாசமானவர். தன்னைப் போலவே தனது நண்பர்களுக்கும் மதிப்பும், மரியாதையும் தரவேண்டும் என்ற எண்ணங்கொண்டவர். எனவே திருவிழாக்காலங்களில் சுரண்டையில் இருந்து அனைத்து சமுதாய மக்களையும் திரட்டிக்கொண்டு சென்று விடுவார். சபையில் தனக்கு தரும் சிறப்பு மரியாதைபோலவே, கொஞ்சமும் குறைவின்றி தன் நண்பர்களுக்கும் தரப்படவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். வீரகேரளம் புதூர் நவநீத கிருஷ்ணன் கோயில் பங்குனி திருவிழாவில் பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. சுரண்டை மக்களுக்கு வழங்கப்பட்ட உணவில் உப்பு இல்லை.

இதனால் அவர்கள் நல்ல உணவு வேண்டும் என்று கோர, அங்குள்ள ஊழியர்களுக்கும் சுரண்டைக்காரர் களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஊத்துமலை ஜமீன் ஊழியர்கள், அவர்களைப் பாதி சாப்பாட்டிலேயே வலுக்கட்டாயமாக எழுந்திருக்கச் செய்தனர். சம்பவத்தைக் கேள்விப்பட்ட சுரண்டை ஜமீன்தார் கோபமுற்று, தனது ஊர்க்காரர்களை அழைத்துக்கொண்டு பாதி திருவிழாவிலேயே ஊருக்கு திரும்பி விட்டார். தகவலறிந்த இருதாலய மருதப்பர் தனது மருமகனை எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தார். ஆனால், அவர் சமாதானமாகவில்லை. சுரண்டைக்கு வந்த ஜமீன்தார், பலமுறை ஏலத்துக்கு வந்த தன் ஜமீனைக் காப்பாற்றித் தந்தது இருதாலய மருதப்பர்தான். என்றாலும், தனது ஊர்க்காரர்கள் மான மரியாதையை இழப்பது சரியா என்றெல்லாம் யோசித்தார். திருவிழாவை அந்தக் கோயிலில் நடத்துவதால்தானே தம் மக்கள் அங்கு செல்கிறார்கள், அதே திருவிழாவை நமது ஊரில் நடத்தினால் என்ன என்று சிந்தித்தார்.

ஒரு அம்மன் தமது முன்னோர்களிடம் இடம் கேட்டு அமர்ந்து ‘கேட்ட வரம் தரும் அம்ம’னாக சுரண்டையில் அருள்பாலிக்கும் வரலாறு அவருக்கு நினைவுக்கு வந்தது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு சுரண்டை பகுதியில் இலந்த குளம் கரையில் காளியம்மனை வைத்து வணங்கி வந்தனர். இங்கு வாழ்ந்த நாடார் சமுதாயத்தினர் இருவர் பொதி மாட்டில் பஞ்சு பொதியை ஏற்றிக்கொண்டு சிவகாசி பகுதிக்கு வியாபாரத்துக்கு சென்றனர். அங்கே வியாபாரத்தினை முடித்துவிட்டு ஒரு வேப்பமரத்தடியில் தங்கினர். அவர்கள் முன்பு சிறு பெண்ணாக தோன்றிய அம்மன், அவர்களிடம் உணவு கேட்டார். அவர்கள், “நாங்களோ வியாபாரிகள். இந்த இடத்தில் உணவு கேட்டால் எப்படி கிடைக்கும்? எங்கள் ஊருக்கு வந்தால் உணவு கொடுப்போம்” என்று கூறினர். “சரி, அப்போ ஊருக்கு வருகிறேன்” என்று அந்த பெண் சொன்னாள். அவர்களும், “உன்னால் நடந்து வரமுடிந்தால் வா” என்று கூறி விட்டுக் கிளம்பினர்.

சித்திரை மாதத்து வெயிலில் இருவரும் பொதி மாட்டுடன் சுரண்டைக்கு வந்தனர். பொதி மாட்டை காளியம்மன் கோயில் முன்பு கட்டினர். அப்போது தங்கள் பின்னாலேயே வந்துகொண்டிருந்த அந்த பெண் திடீரென மறைந்து விட்டாள்! திகைத்துப்போன வியாபாரிகள் சுற்றுமுற்றும் தேடிப் பார்த்தனர். பிறகு, ‘பாவம், எங்கே போனாளோ’ என்று வருந்தியபடி தம் வீட்டிற்குச் சென்றனர். அந்த பெண்ணின் நினைவே சுற்றிச் சுற்றி வந்தது. பிறகு அயர்ச்சியில் தூங்கிவிட்டார்கள்.
அன்றிரவு ஒரேநேரத்தில் அந்த வியாபாரிகள் மற்றும் சுரண்டை ஜமீன்தார் கனவில், தோன்றினாள் அப்பெண். “நான்தான் அம்மன். இவ்வூர் மக்களை பாதுகாக்க நான் இங்கு உறைய விரும்புகிறேன். எனக்கு கோயில் கட்டி வழிபாடு செய்யுங்கள்,’’ என்றாள். காலையில், கனவால் ஏற்பட்ட குழப்பத்துடன் ஜமீன்தார் நின்றிருந்தபோது வியாபாரிகள் இருவரும் ஓடோடி வந்தனர்.

அவரிடம் தாங்கள் ஒரு பெண்ணை சந்தித்த விவரத்தைச் சொன்ன அவர்கள், “எங்க கூடவே சின்னப் பொண்ணாட்டம் வந்த அம்மன், காளியம்மன் கோயில்கிட்டே நின்னுகிட்டு நிலையம் கேக்கா... அது ஜமீனுக்கு உள்பட்ட இடம். நீங்க அனுமதி கொடுத்தா அவளுக்கு அங்கே நிலையம் கொடுக்கலாம்,’’ என்றனர். இரவில் தன் கனவில் வந்த அதே பெண்ணைத்தான் இவர்களும் சந்தித்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்த ஜமீன்தார், அவள் நிச்சயம் விசேஷமான தெய்வம்தான் என்பதை உறுதிசெய்துகொண்டார். உடனே, இலந்த குளம் உள்பட 6 ஏக்கர் 90 சென்ட் நிலத்தை கோயிலுக்கு ஜமீன்தார் கொடுத்து விட்டார். அந்த இடத்தில் ஓர் ஓலைக் குடிசையில் அம்மனை பிரதிஷ்டை செய்தார்கள். அம்மன் சிறு பெண்ணாக, சிரித்தமுகத்துடன் வியாபாரிகளை சந்தித்ததாலும், அவளது சலங்கை சத்தம் இனிமையாக ஒலித்ததாலும் அவளுக்கு ‘அழகு பார்வதி அம்மன்’ என்று பெயர் வைத்தனர். காளியம்மன் திருக்கோயில் அருகேயே அழகு பார்வதி அம்மனும் நிலையம் கொண்டிருந்தாலும், இருவருமே காக்கும் தெய்வமானார்கள்.


நாளாக ஆக, கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து, கேட்ட வரம் தந்த அந்த அம்மனை தரிசிக்கப் பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்தனர்; இன்றும் வந்து கொண்டிருக்கிறார்கள். மூன்று வருடத்துக்கு ஒருமுறைதான் கோயிலில் கொடைவிழா நடைபெறும். விழாவில் முதல் சுருளை ஜமீன்தார் கொடுப்பார். கோயிலை வணங்க வணங்க வியாபாரிகள் குடும்பத்தினர் தழைத்தோங்கினர். உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூருக்கும் சென்று பெரிய அளவில் முன்னேறினர். நாளாவட்டத்தில் ஓலைக் குடிசை, ஜமீன்தார் குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களின் கைங்கரியத்தால் காரைக்கட்டிடம் ஆனது. ஊரிலுள்ள அனைத்து சமுதாயத்தினரும் வணங்கும் தெய்வமாக அழகு பார்வதி விளங்கினாள். ஊத்துமலை ஜமீனுக்குப் போவானேன், நம் ஜமீனிலுள்ள அழகு பார்வதி அம்மனுக்குத் திருவிழா நடத்தினால் என்ன என்று சுரண்டை ஜமீன்தாருக்குத் தோன்றியது. அதற்காக ஊர் மக்களை ஒன்று கூட்டினார்.

ஊத்துமலை திருவிழாவில் தன் கிராமத்தாருக்கு நேர்ந்த அவமரியாதை சுரண்டை ஜமீன்தாரை மனவருத்தமடையச் செய்தது. அங்குபோய் திருவிழாவில் பங்கேற்பானேன், நாமே நம் ஜமீனிலேயே அதை நடத்தி நம் மக்களை மகிழ்விப்போமே என்று கருதினார். ஊர் மக்களும் அவர் கருத்துக்கு முழு ஆதரவு தெரிவித்தனர். ஊத்துமலை ஜமீனைப்போலவே தேர் மற்றும் தெப்பத் திருவிழாக்களை நடத்த தீர்மானித்தனர்.



உடனே உள்ளூர் தச்சர்களைக் கொண்டே தேரை உருவாக்கினர். இந்தப் பணியை அங்கீகரிக்கும் வகையில் திருவிழாவின் பத்தாம் நாள் மண்டகப்படியை, தேர் உருவாக்கிய அந்தக் கலைஞர்களுக்கு அளித்தார் சுரண்டை ஜமீன்தார். அன்றிலிருந்து இன்றுவரை 10ம் திருநாள் மண்டகப்படியை விஸ்வகர்ம சமூகத்தினர் சிறப்புடன் செய்து வருகிறார்கள். இந்த ஏற்பாட்டின்படி திருவிழாவின் 10ம் நாளில் சப்பரத்தில் அம்மன் வீதி உலா புறப்படுவார்.

தச்சர் பெருமக்கள் குடியிருக்கும் தெருவுக்கு செல்வார். அம்மனை அவர்கள் தங்களது வீட்டுக் குழந்தைபோலவே பாவித்து மாலை அணிவித்து குடும்பத்தோடு வணங்கி மகிழ்வர். அதன் பிறகே அம்மன் கோயிலுக்கு திரும்புவார். திருவிழாவின் முதல்நாள் மண்டகப்படி ஜமீந்தாரால் நடத்தப்படுகிறது. இதில் ஜமீனின் இளைய ராஜாவான எஸ்.கே.பி. ராஜாவுக்கு மாலை மரியாதை செய்து பரிவட்டம் கட்டி, முதல்மரியாதை செய்யப்படுகிறது. இரண்டாம் நாள் மண்டகப்படி, தேவர் சமுதாயத்துக்குரியது.

மூன்றாம் நாள் மண்டகப்படி, செட்டியார் மற்றும் பிள்ளைமார் சார்பில் நடத்தப்படுகிறது. நான்காம் நாள் மண்டகப்படி, நாடார் சமுதாயத்தினருக்குரியது. (சிவகாசியிலிருந்து வியாபாரத்துக்குச் சென்றபோது அழகு பார்வதி அம்மனை அழைத்து வந்தவர்கள் இவர்கள்தானே!) ஐந்தாவது நாள் மண்டகப்படி முதலியார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்டது. ஆறாவது நாள், படையாச்சி சமுதாயத்தினரும், ஏழாவது நாள் கிளையில்லா தேவர் சமுதாயத்தினரும் மண்டகப்படியைத் திறம்பட நடத்தி வருகிறார்கள்.

எட்டாம் நாள் அனைத்து சமுதாயத்தினர் சார்பிலும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பூப்பண்டார சமுதாயத்தினர் திரளாகக் கலந்துகொள்கிறார்கள். அப்போது வேண்டுதலை நிறைவேற்ற ஆயிரங்கண் பானை உருவம் மற்றும் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபடுவர். நேர்ச்சை பொருட்களை கைகளில் வைத்து மார்போடு அணைத்தவாறு தங்கள் பிரச்னையை தீர்க்கக்கோரி அம்மனை மனமுருக வணங்குவர். அவர்கள் கேட்ட வரம் கிடைத்ததும், மறுவருடம் சந்தோஷமாக நன்றி செலுத்த வருவார்கள். அம்மனுக்கு பட்டு பரிவட்டங்களை காணிக்கையாக செலுத்தி மகிழ்வார்கள்.


ஒன்பதாவது நாள், தேரோட்டம். அம்மன் ஒய்யாரமாய் தேரில் எழுந்தருளி பவனி வருவார். திரளான பக்தர்கள் ஒருசேர தேர் இழுப்பார்கள். பத்தாவது நாள் ஜமீன்தார் உத்தரவுப்படி தச்சர்கள் தெருவில் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளுவார். சுரண்டை ஊருக்குள் நுழையும் போது காணப்படும் பிரமாண்டமான வரவேற்பு வளைவு, அம்மனின் அருளாட்சியைப் பறைசாற்றுகிறது. கோயிலில் ஒய்யாரமாய் அழகு பார்வதி அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளார்.

ஆதிகாலத்தில் இங்கு வீற்றிருந்த காளியம்மன் தற்போதும் தென்பகுதியில் அருள் வழங்குகிறார். இவருக்கு அசைவ படையல். ஆனால் அழகு பார்வதி அம்மனுக்கு எப்போதும் சைவப் படையல்தான். கோயிலுக்கு தெற்கு வாசலும் உண்டு. இங்கு பிள்ளையார், பாலமுருகன், காவல் தெய்வமாக கருப்பசாமி ஆகியோர் உள்ளனர். தேர்த் திருவிழா மட்டுமின்றி ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் இந்த ஆலயத்தில் நடைபெறுகின்றன. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை, விளக்கு பூஜை நடக்கிறது. இதில் சுரண்டை மட்டுமின்றி சுற்று வட்டார கிராம பெண்களும் பங்கேற்கிறார்கள்.

ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி. அன்று திருமணத்தடை நீங்கவும், குழந்தைவரம் வேண்டியும் பெண்கள் அம்மனை வழிபடுவர். அம்மன் அருளால் மறுவருடமே, தாம் கோரிய வரம் நிறைவேறி மகிழ்வர். சிவராத்திரியின்போது பத்து நாள் திருவிழா மற்றும் கந்த சஷ்டி திருவிழா ஆகியவையும் இங்கே சிறப்பாக நடைபெறும். மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும் கார்த்திகை நட்சத்திர நாளிலும் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளுவார்.

இப்பகுதியில் மற்றொரு ஆலயமும் குறிப்பிடத்தக்கது. இதற்கும் ஒரு பின்னணி உண்டு. சுரண்டை ஜமீன்தார் ஏகோபித்த புகழுடன், வளத்துடன் வாழ்ந்து வந்தார். அவர் பெரும்படை வைத்திருந்தார். இந்தப் படை சிறப்பாக விளங்க, ராமநாதபுரத்திலிருந்து வந்த சிவனுபாண்டி, பரமசிவபாண்டி ஆகிய இரு படைவீரர்களே முக்கிய காரணம். எதிரிகளுக்கு இவர்களைக் கண்டாலேயே அடிவயிறு கலங்கும். இருவரும் பிரம்மசாரிகள். தங்களது பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தனர். சுரண்டை ஜமீன்தாருக்கு மெய்க்காவலர்களாகத் திகழ்ந்தனர்.



அந்த காலத்தில் சுரண்டை ஜமீனுக்கும், நடுவக்குறிச்சி ஜமீனுக்கும் அடிக்கடி பகை மூண்டது. ஒவ்வொரு முறையும் தான் தோல்வியையே அடைவதைக் கண்டு மனம் வெறுத்த நடுவக்குறிச்சி ஜமீன்தார், சுரண்டை ஜமீன்தாரின் இரு மெய்க்காவலர்கள்தான் அந்தத் தோல்விகளுக்குக் காரணம் என்பதைப் புரிந்துகொண்டு அவர்களை எப்படியாவது கொன்றுவிட திட்டமிட்டார்.

ஒற்றர்கள் மூலம் அவர்களை அணுகி பணத்தாசை காட்டித் தம் பக்கம் இழுக்க முனைந்தார். ஆனால், சுரண்டை ஜமீன்தாருக்கே தாங்கள் விசுவாசமாக இருப்பவர்கள் என்றும் யாராலும், எந்த காரணத்தாலும் தங்களை சோரம் போகச் செய்யமுடியாது என்று உறுதியாக நின்றனர் அந்த இளைஞர்கள். ஆனாலும் நடுவக்குறிச்சி ஜமீன்தார் முயற்சியை விட்டுவிடவில்லை.

சுரண்டை ஜமீன்தார் அரண்மனையில் அந்த இரு வீரர்களுக்கு பிடிக்காத கணக்குப் பிள்ளை ஒருவர் இருந்தது அவருக்குத் தெரியவந்தது. அவரைத் தன் வசமாக்கி அவர் மூலம் காயை நகர்த்தினார். ‘சிவனையும், பரமசிவனையும் பெரும்தொகை கொடுத்து எங்களுக்கு அடிமையாக்கிவிட்டோம். இனி அவர்கள் எங்களுக்கு சாதகமாகத்தான் போர்புரிவார்கள்’ என்று ஒரு புரளியைக் கிளப்பினர். அதைக் கேட்ட கணக்குப் பிள்ளைக்கு கோபம் வந்து விட்டது.

ஏற்கெனவே அவர்கள் அவருக்கு ஆகாதவர்களாக இருந்தார்கள். உடனே அரண்மனைக்குப் போய் ஜமீன்தாரிடம், அவ்விருவரும் துரோகிகள், ஜமீனுக்கு எதிராகக் கலகம் செய்ய துணிந்து விட்டார்கள் என்று கூறினார். ஏற்கனவே ஒற்றர்கள் மூலம் நடுவக்குறிச்சி ஜமீன்தாரின் ஆட்கள் அவ்வீரர்களின் வீட்டுக்கு வந்ததை அறிந்திருந்த ஜமீன்தார், கணக்குப்பிள்ளை கூறியதை நம்பினார். இருவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அந்தப் பொறுப்பை கணக்குப் பிள்ளையிடமே ஒப்படைத்தார்.

இதற்காகவே காத்திருந்த கணக்கு பிள்ளையும் தனக்கு விசுவாசமான ஏவலாட்களுடன் இருவரையும் தீர்த்துக்கட்ட தருணம் பார்த்தார். ஒருநாள் நடுவக்குறிச்சி ஜமீன்தாரின் ஆட்கள் சுரண்டை ஜமீன்தார் வயலில் நெற்கதிர்களைத் திருடியபோது விவரம் அறிந்த பரமசிவன், சிவனுபாண்டி இருவரும் வயற்காட்டிற்கு வந்தனர்.

பாய்ந்து சென்று நடுவக்குறிச்சி ஜமீன் படை வீரர்களை விரட்டி அடித்தார்கள். திருடர்களிடமிருந்து நெல் மூட்டைகளைக் கைப்பற்றிக் கொண்டு வெற்றிக் களிப்புடன் இருவரும் ஜமீன் அரண்மனையை நோக்கிச் சென்றபோது கணக்குப் பிள்ளையின் ஏவலாட்கள் திடீரென எதிர்ப்பட்டு அவ்விருவருடைய தலைகளையும் வாளால் கொய்தனர்.

தன் பேரப்பிள்ளைகள் கொலையுண்டதை அறிந்த பாட்டி, ஓடோடி வந்து அந்த சடலங்களைப் பார்த்து அழுது அரற்றினாள். சுரண்டை ஜமீனே கதி என்று கிடந்த தனது பேரன்களை அதே ஜமீன்தார்தான் கொலை செய்திருக்கிறார் என்றறிந்ததும் மேலும் ஆவேசமானார். உடனே அரண்மனை நோக்கிச் சென்று ஆத்திரம் மிக, மண்ணை அள்ளி வீசி சாபமிட்டார்: ‘நீயே கதி என்று கிடந்த எனது பேரன்கள் இருவரையும் நம்ப வைத்து கழுத்தறுத்தாயே! உனது அரண்மனை இப்போதே அழிந்து போகும்,’ என்று சபித்ததோடு தானும் அங்கேயே விழுந்து இறந்தார்.
காலங்கள் உருண்டோடின. பாட்டியின் சாபம் பலித்தது. அரண்மனை அழிந்துபட்டது. ஜமீன்தார் வாரிசுகளும் விருந்தினர் மாளிகைக்கு குடியிருப்பை மாற்றினர். அரண்மனை இருந்த இடம் இப்போது பொதுமக்கள் குடியிருப்பாக மாறிவிட்டது. தொடர்ந்து வாரிசுகளுக்கு பல பிரச்னைகள் ஏற்பட்டன. கணக்குப் பிள்ளை குடும்பத்தாரும் பிரச்னையிலிருந்து தப்பவில்லை.

இதற்கான பரிகாரத்தை மலையாள மந்திரவாதி களிடம் கேட்டபோது, ‘சிவனு பாண்டியும், பரமசிவ பாண்டியும் நல்ல ஜீவன்கள். கடைசிவரைக்கு அரண்மனைக்கு விசுவாசமாக இருந்தவர்கள். ஜமீன்தார் அவர்களை பலி வாங்கியதால் அவர்களுடைய ஆன்மாக்கள் அமைதியடையாமல் அலைந்துகொண்டிருக்கின்றன. அவை சாந்தியடைந்தால் எல்லா பிரச்னையும் தீரும்’ என்றனர்.

அழகு பார்வதி அம்மன்கோயில் அருகே மேற்கு நோக்கி இருவருக்கும் பீடம் அமைத்து வணங்க ஆரம்பித்தனர். அதன் பிறகு பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்து விட்டது. வேண்டும் வரம் தரும் தெய்வமாக சிவனு பாண்டியும், பரமசிவ பாண்டியும் விளங்குகின்றனர். தற்போதைய ஜமீன்தார் வாரிசு சிவஞான ராஜா அந்த ஆலயத்துக்கு மணி மண்டபம் அமைத்துக் கொடுத்துள்ளார். இத்தனை பிரச்னைக்கும் மூலகாரணமான நடுவக்குறிச்சி ஜமீன் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.

1910ம் ஆண்டு அரசு ஆவணப்படி, கடைசியாக இங்கு ராமசாமி ஜமீன்தார் என்பவர் ஆண்டு வந்தார் என்ற குறிப்பு மட்டுமே காணப்படுகிறது. சிவனு பாண்டி, பரமசிவபாண்டிக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கணக்குப் பிள்ளை வாரிசுகள் கொடை கொடுக்கின்றனர். இதில் ஜமீன்தாரும் கலந்துகொள்கிறார். இந்தக் கோயில் கொடைவிழாவின்போது வேளாளர் வீட்டில் இருந்து சிவனு பாண்டி, பரமசிவபாண்டி மற்றும் அவர்கள் வளர்த்த நாய் முதலிய மண்சிலைகளை தலைச்சுமையாக அரண்மனைக்குக் கொண்டு வருகிறார்கள்.

அங்கே பூசாரி மூன்று சிலைகளுக்கும் ஜமீன்தார் முன்னிலையில் கண் திறந்து வைப்பார். அதன்பின் சிலைகளைக் கோயிலில் வைத்து கொடைவிழா கொண்டாடுவார்கள். இந்தக் கோயில் பெயரையே தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுவதுடன் குழந்தைக்கு காது குத்துதல், மொட்டைபோடுதல் போன்றவற்றையும் பல பக்தர்கள் இங்கேயே செய்கின்றனர். வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷகாலங்களில் குடும்பத்துடன் வந்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.



வீ.கே.புதூர் அரண்மனையில் டாஸ்மாக் மது ஆறாக ஓடுதாம்


‘‘அல்வா மாவட்டத்துல என்ன விசேஷம்’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இது சாதாரண ஆறு இல்ல... சாராய ஆறு... நெல்லையின் வரலாற்றுச் சின்னமாக இருக்கும் வீ.கே.புதூர் அரண்மனையில் டாஸ்மாக் மது ஆறாக ஓடுதாம்... ஊத்துமலை மன்னர் இருதாலய மருதப்ப பாண்டியனார் தமிழ் வளர்த்த இந்த அரண்மனை மதுக்கடையாக மாறி விட்டது வரலாற்று ஆய்வர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே கட்டிடம் ஸ்டிராங்க் இல்லைனு இதற்கு முன்பு இருந்த கலெக்டர் நிராகரித்த பைல் எங்கே போச்சுனே தெரியல... கலெக்டர் மாறிய பிறகு நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த பைலை தூசி தட்டி எப்படியோ தற்போது கடையை திறந்து விட்டனர். இந்த அரண்மனையின் அருகில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலும் உள்ளதாம். வழிபாட்டு தலம் அருகில் மதுக்கடை இருக்கக் கூடாது, ஸ்திரத்தன்மை இல்லாத கட்டிடம் என விதிமுறைகளை மீறி அங்கு மதுக்கடை திறந்து இருக்காங்களாம்... இதனால பக்தர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் ரொம்பவே அப்செட்ல இருக்காங்களாம்...’’ என்று சொல்லிவிட்டு எழுந்தார் விக்கியானந்தா.

Saturday, 12 May 2018

வீ.கே.புதூரில் இந்து அறநிலைய துறை இடத்தில் பஸ் நிலையம் அமைக்கப்படுமா?


நெல்லை மாவட்டத்தில் தென்காசிக்கு கிழக்கே சிற்றாற்றின் கரையில் உள்ள வீரகேரளம் புதூர் தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 18 வருவாய் ஊராட்சிகளையும், ஒரு பேரூராட்சியையும் தன்னகத்தே கொண்டது. வீ.கே.புதூரில் ஒன்றரை லட்சம் பேர் வசிக்கின்றனர். விவசாயம், பீடி சுற்றுதல் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தென்காசியோடு இணைந்திருந்த வீ.கே.புதூர் 1998ம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் தனி தாலுகாவாக உருவாக்கப்பட்டது. மேலும் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த தாலுகா அலுவலகத்துக்கு 2009ம் ஆண்டில் ரூ.1.40 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இப்போது வடக்கு, தெற்கு என இரண்டு பஸ் நிறுத்தங்கள் மட்டுமே உள்ளன. இவ்வாறு 1998ல் தனி தாலுகாவாக உருவான வீ.கே.புதூர், மாவட்டத்திலேயே பஸ் நிலையம் இல்லாத நிலையில் இருந்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இங்குள்ள இரு பஸ் நிறுத்த பகுதிகளிலும் நிழற்குடையோ, குடிநீர் உள்ளிட்ட எந்தவொரு வசதியும் செய்துதரப்படவில்லை. எனவே, வீ.கே.புதூரில் பஸ் நிலையம் அமைத்தால் அனைத்து பஸ்கள் நின்று செல்லும். வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தை சுற்றி காலியாக இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமாக உள்ள 50 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் மற்றும் மருத்துவமனை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



Sunday, 8 April 2018

வீரகேரளம்புதூரை வளங்கொழிக்க செய்யும் அனுமன் நதி

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் செங்கோட்டை தாலுக்காவின் பண்பொழி, மேக்கரை அருகே உற்பத்தி ஆகும் நதி அனுமன் நதி ஆகும் .
தாமிரபரணியின் வடக்கு கடைக்குட்டி கிளைநதி அனுமன் நதி. தென்காசியில் உற்பத்தியாகும் சிற்றாறு என்னும் ஆற்றின் துணை ஆறு ஆகும்.அனுமன் நதி மூலம் தென்காசி நகராட்சியில் உள்ள 4046.94 எக்டேர்களுக்கு நேரடியாகவும், இதன் துணையாறான கருப்பா நதி மூலம் 3844.59 எக்டேர்களுக்கு மறைமுகமாகவும் பாசன வசதி கிடைக்கிறது. இது வீரகேரளம்புதூர் என்னும் ஊரில் சிற்றாறுடன் இணைகிறது. இது 14 அணைக்கட்டுகளை கொண்டுள்ளது.


அனுமன் நதி வரலாறு

இராமாயண காலத்தின் போது இராமன், இலட்சுமணனுடன் வந்த அவர்களின் படையின் தாகத்தைத் தணிக்க அனுமான் ஒரு பாறையை உடைத்தான். அதில் இருந்து விண்கங்கை கொட்டியது. அதுவே நாளடைவில் ஆறாக மாறி அனுமன் ஆறு எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

அல்லது

ஸ்ரீராமர் பதினாறு ஆண்டு வனவாச காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தண்ணீர் தாகம் எடுக்கவே ஸ்ரீஆஞ்சநேயர் தனது வாலால் மலையில் அடித்த இடத்தில் தோன்றியது தான் அனுமன் நதி ஆகும்

அனுமன் நதி அருகில் உள்ள ஊர்கள்:

பண்பொழி- பைம்பொழில்-பசுமையான சோலைகள் நிறைந்த இடத்தின் வழியாகவும். அனுமன் நதிக்கு வடகரையில் அமைந்த வடகரை வழியாகவும்.இலவையம்பதி என்ற இலத்தூர் வழியாக வந்து துணையாறான கருப்பா நதியுடன், காசி தர்மம் அருகே உள்ள நெடுவயல் என்னும் ஊரில் இணைகிறது. பின்பு ஆயர்கள் குடும்பம் அல்லது ஆயர்கள் வாழிடமான ஆய்க்குடி வழியாகவும். அகத்திஷ்வரர்சாம்பவமுர்த்தி- சாம்பவமுர்த்தி கோவிலுக்கும் அனுமன் நதிக்கும் வடகரையில் அமைந்த சாம்பவர்வடகரை வழியாகவும்.சுரர் அண்டிய இடம்.- அசுரர்களுக்குப் பயந்து தேவர்கள் தஞ்சமடைந்த சுரண்டை வழியாக வந்து வீரகேரளனின் புதிய ஊர் அல்லது வீரமாய் கேரளாவைப் போல செழிப்பான புதிய ஊரான -வீரகேரளம்புதூரில் சிற்றாறுடன் இணைகிறது.

அடவி நயினார் அணை தேக்கம்:

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் செங்கோட்டை தாலுக்காவின் பண்பொழி, மேக்கரை அருகே அனுமன் நதி ஆற்றின் குறுக்கே அடவி நயினார் அணை அமைந்துள்ளது.

அணையின் உயரம் : 51.5 m
அணையின் கொள்ளளவு : 4.927 Mcum
அணையின் நீளம் :670 m
அணையின் நீர்ப்பிடிப்பு பரப்பளவு : 15.54 km2



இந்நதி செங்கோட்டை , தென்காசி மற்றும் வீரகேரளம்புதூர் தாலுக்காவின் நீர்ப்பாசனத்திற்கு தேவையான நீரை தருகிறது.நமது ஊரிலுள்ள அருந்தாபிரட்டிக்குளம்,கோவில் குளம் மற்றும் குறு குளத்திற்கு தேவையான நீரை அனுமன் நதி மற்றும் கருப்பா நதி தருகிறது.


வீரகேரளம்புதூரை வளங்கொழிக்க செய்யும் கருப்பா நதி

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டம் கடையநல்லூர் நகரம் சொக்கம்பட்டி கிராமம் அ௫கில் மேற்கு மலை் தொடர்ச்சியில் உற்பத்தி ஆகும் நதி ஆகும் .
இந்த நதியில் 72 அடி கொள்ளளவு கொண்ட ஒ௫ அணைக்கட்டு கட்டப்பட்டு உள்ளது இதன் மூலம் கடையநல்லூரைச் சுற்றி 72 குளங்கள் பாசன வசதிக்கு உள்ளன. இந்நதிஅனுமன் நதியின் துணை ஆறாகும். இந்நதி மூலம் 3844.59 ஹெக்டேர்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது. இது ஆறு அணைக்கட்டுகளையும் ஒரு தேக்கத்தையும் கொண்டுள்ளது.

கருப்பா நதி அருகில் உள்ள ஊர்கள்:

கடையநல்லூர்:

தற்போதைய ஊரான கடையநல்லூர் அந்த காலத்தில் அர்ஜுனபுரி என்று அழைக்கப்பட்டு வந்தது.பக்தர் ஒருவர் சாமிக்கு பால் கொண்டு வரும்போது கால் இடறி தட்டியதால் கடையநல்லூர் என்ற பெயர் பழக்கத்தில் வந்தது.அதற்கு பிறகு தான் மேல கடையநல்லூரில் உள்ள கடைகால் ஈஸ்வரன் கோயில் கட்டபட்டது.

கருப்பா நதி காசி தர்மம் அருகே உள்ள நெடுவயல் என்னும் ஊரில் அனுமன் நதியுடன் இணைகிறது.

கருப்பா நதி அணை தேக்கம்:

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடையநல்லூர் தாலுக்காவின் சொக்கம்பட்டி கிராமம் அருகே கருப்பா நதி ஆற்றின் குறுக்கே கருப்பா நதி அணை தேக்கம் அமைந்துள்ளது.

அணையின் உயரம் : 38.64 m
அணையின் கொள்ளளவு : 5.239 Mcum
அணையின் நீளம் : 890 m
அணையின் நீர்ப்பிடிப்பு பரப்பளவு : 29.34 km


இந்நதி கடையநல்லூர், தென்காசி மற்றும் வீரகேரளம்புதூர் தாலுக்காவின் நீர்ப்பாசனத்திற்கு தேவையான நீரை தருகிறது.நமது ஊரிலுள்ள அருந்தாபிரட்டிக்குளம்,கோவில் குளம் மற்றும் குறு குளத்திற்கு தேவையான நீரை அனுமன் நதி மற்றும் கருப்பா நதி தருகிறது.

கழனியூரன்

தமிழ் நாட்டுப்புற வழக்காற்றியலின் முன்னத்தி ஏரான கி.ராஜநாராயணனின் நீட்சியாக, அவர் வழி வந்தவர் கழனியூரன். கரிசல் வட்டார வழக்குகள், நாட்டார் கதைகள், வசவுச் சொற்கள், விடுகதைகள், தமிழ்-தெலுங்கு சொலவடைகள், சிறுவர் கதைகள், பாலியல் சேகரிப்புகள் என்று ஒரு தேனீயைப் போல தேடித்தேடிச் சேகரித்தவர் கழனியூரன். கி.ராவின் அத்யந்த சீடனாகவே தன் வாழ்நாள் முழுக்கவும் செயல்பட்ட கழனியூரனின் சொந்தப் பெயர் எம்.எஸ். அப்துல் காதர். எழுத்துக்காக, தான் பிறந்த ஊரான கழுநீர் குளத்துக்காரராக (கழனியூரன்) மாறியவர். சிறுவயதில், கண்பார்வையற்ற தனது அண்ணனுக்காக அவர் கொடுத்த புத்தகங்களைத் சத்தமாக வாசிக்கத் தொடங்கியதுதான் கழனியூரனின் முதல் இலக்கிய அறிமுகம். பிறகு, தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் வாசலில் நடக்கும் ஆன்மிக, இலக்கியச் சொற்பொழிவுகளில் ஆர்வமாகக் கலந்துகொள்ளத் தொடங்கினார். அங்கேதான் ‘லானா சானா’ என்று அழைக்கப்படும் ல. சண்முகசுந்தரத்தின் அறிமுகம் கழனியூரனுக்குக் கிடைத்தது.

திருநெல்வேலியில் வட்டத்தொட்டி இலக்கியக் குழுமமும், ரசிகமணி டி.கே.சி.யின் பிறந்தநாள் நிகழ்ச்சியும் மிகவும் பிரபலம். ராஜாஜியில் தொடங்கி, ரா.பி. சேதுப்பிள்ளை, கல்கி, அ. சீனிவாச ராகவன், தொ.மு. பாஸ்கர தொண்டைமான், வையாபுரிப்பிள்ளை, மீ.ப. சோமு, கி.ரா., ஜெயகாந்தன் என்று பலரும் வட்டத்தொட்டியின் நெடுநாளைய உறுப்பினர்கள். டி.கே.சி.யின் மறைவுக்குப் பிறகு, அவரது பேரன் தீப. சிதம்பரநாதன் முயற்சியில், டி.கே.சி. அன்பர்கள் அனைவரும்கூடி, அவரது பிறந்தநாளை ஆண்டுதோறும் கொண்டாடத் தொடங்கினார்கள்.

அந்நிகழ்வில் பல்வேறு இலக்கிய ஆசான்களும் கலந்துகொள்வார்கள். அங்குதான் முதன்முறையாக கி. ராஜநாராயணனைச் சந்தித்தார். நிகழ்ச்சி முடிந்து ஊருக்குப் போன கி.ரா.விடமிருந்து சில நாட்களில் கழனியூரனுக்குக் கடிதம் வந்தது. “நீங்கள் ஒரு நல்ல வாத்தியார், அதே நேரம் கிராமம் கிராமமாக அலைந்து வேலை பார்க்கும் வாய்ப்பும் உங்களுக்கு இருக்கிறது. இப்படி, நாட்டார் வழக்காற்றியல் தொடர்புடைய கதைகளைத் தேடிச் சேகரியுங்களேன்” என்று முதல் தடவையாக கி.ரா கழனியூரனைத் தூண்டிவிட்டார். இப்படித்தான் தொடங்கியது கழனியூரனின் நாட்டாரியல் வேட்டை.

முதல் தடவை கழனியூரன் கிராமங்களுக்குப் போய்க் கதைகள் சேகரிப்பதற்காக கிராமத்தினரை அணுகியபோது, வெட்கத்தின் காரணமாகவும், வேலைப்பளுவைக் காரணம் காட்டியும், பெண்ணும் ஆணும் கதைசொல்ல மறுத்திருக்கிறார்கள். அதை கி.ராவிடம் சொன்னதும், “பொம்பளையாளு சோறு ஆக்கணும்பா. நீங்க போய்ப் பக்கத்துல உக்காந்து அடுப்புல தீயைத் தள்ளுங்க, அவங்களோட ஒண்ணுமண்ணா பழகிப் பேச்சு கொடுத்து, கதையச் சொல்ல விட்டுக் கேளுங்க” என்றாராம் கி.ரா. அப்படி மனிதர்களோடு நெருங்கிப் பழகி கழனியூரன் கதைகள் சேகரித்த சம்பவங்களையே தனித் தொகுப்பாக எழுதலாம்.

கரிசல் நிலம், செவக்காட்டு நிலம் முழுக்க அலைந்து கழனியூரன் திரட்டிக் கொண்டுவந்து குவித்த கதைகளில், தான் ஏற்கெனவே பதிவுசெய்தவற்றை, அரிசியில் கல் பிறக்குவதுபோலப் பிறக்கி எடுத்துவிட்டு, மற்றவற்றைச் சேர்த்துப் புத்தகமாக்கினார் கி.ரா. அப்படித் தொகுக்கும் ஒவ்வொரு முறையும் தவறாமல் கழனியூரன் பெயரையும் சேர்த்துப் புத்தகத்தில் இடம்பெறச் செய்திருந்தார்.

ஒரு சீடனுக்குக் கிடைக்கிற உச்சபட்ச மரியாதையை கி.ரா. எப்போதும் கழனியூரனுக்குத் தந்தார். அவர்கள் இரண்டு பேருக்குமிடையே வெளியில் சொல்லாத ஒரு தந்தை மகன் உறவு நிலை கொண்டிருந்தது. கிராம மக்களின் பேச்சில் நடமாடும் வசவுச் சொற்களை எல்லாம் விசாரித்து அவற்றில் இருக்கும் பூர்வாங்க மனித உணர்வுகளைப் படிக்க வேண்டும் என்று தனது 92-வது வயதில் யாருக்காவது ஆசை வருமா? கி.ராவுக்கு வந்தது. உடனே வேட்டியை மடித்துக்கொண்டு களத்தில் இறங்கினார் கழனியூரன். இத்தனைக்கும் அப்போதுதான் அவர் புற்றுநோய் பாதிப்பை உணரத் தொடங்கியிருந்தார்.



கழனியூரன் நூல்களில் சில...

தாய்வேர் - பூங்கொடி பதிப்பகம்.

கதைசொல்லியின் கதை - தாமரைச்செல்வி பதிப்பகம்.

நெல்லை நாடோடிக் கதைகள் - மித்ரா பதிப்பகம்.

மண் மணக்கும் மனுஷங்க - பூங்கொடி பதிப்பகம்.

நாட்டுப்புற நீதிக் கதைகள் - காவ்யா பதிப்பகம்.

பன்னாட்டுச் சிறுவர் நாடோடிக் கதைகள் - பூங்கொடி பதிப்பகம்.

செவக்காட்டு மக்கள் கதைகள் - சந்தியா பதிப்பகம்.

தாத்தா பாட்டி சொன்ன கதைகள் - பாரதி புத்தகாலயம்.

குறுஞ்சாமிகளின் கதைகள் - உயிர்மை பதிப்பகம்.

வாய்மொழி வரலாறு - சந்தியா பதிப்பகம்.

நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் -

(தலைமைத் தொகுப்பாளர் கி. ராஜநாராயணன்,

சண்முகசுந்தரம், கழனியூரன், பாரததேவி) - சாகித்ய அகாடமி.

நெருப்பில் விழுந்த விதைகள் (கவிதைகள்) - அகரம் பதிப்பகம்.

மண்ணின் கதைகள் மக்களின் கதைகள் - உயிர்மை பதிப்பகம்

நாட்டுபுற வழக்காறுகள் - தாமரைச்செல்வி பதிப்பகம்.

நாட்டுபுற நம்பிக்கைகள் - அகரம் பதிப்பகம்.

அன்புள்ள கி.ரா (கடித இலக்கியம்) - உயிர்மை பதிப்பகம்.

ரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள் - பூங்கொடி பதிப்பகம்.



ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, கழனியூரனின் உடல்நலம் மிகவும் மோசமடைந்தது. சிகிச்சைக்காக மகள் வீட்டிலும், ஓய்வுக்காகச் சொந்த ஊரிலுமாக நாட்களைப் பங்குபோட்டுக்கொண்டார். தனக்கு மிச்சமாகக் கிடைத்த ஒவ்வொரு நிமிடத்தையும் அதுவரையிலான தன் நாட்டுப்புறச் சேமிப்புகளை ஆவணப்படுத்தும் பணிகளுக்காகக் கவனத்தோடு செலவிடத் தொடங்கினார். தன்னுடையவை மட்டுமல்லாமல் கி.ராவின் கதைகள், கடிதங்கள், கட்டுரைகள், முன்னுரைகள், கதைசொல்லி இதழ் வெளியீடுகள், கி.ரா. பிற சஞ்சிகைகளில் எழுதியவை, வல்லிக்கண்ணன் -திகசி கடிதங்கள் என்று யாவற்றையும் தொகுத்துப் பத்திரப்படுத்தி நூலாக்கினார்.

கி.ரா.வை ஆசிரியராகக் கொண்டு, கே.எஸ். ராதாகிருஷ்ணன் பதிப்பித்து வெளியிடும் ‘கதைசொல்லி’ இதழில் கடைசிவரைக்கும் பொறுப்பாசிரியர் பணிகளை கழனியூரன் கவனித்தார். கி.ரா.வின் வாழ்க்கையை, திரும்ப அவருக்கே படம்போட்டுக் காட்டுவதுபோல, அவருடனான தன் அனுபவங்களைத் தொடராக எழுதிக்கொண்டிருந்தார் கழனியூரன்.

இந்த ஆண்டு 95-வயதைப் பூர்த்திசெய்யும் தன் குருநாதர் கி.ரா.வுக்குக் காணிக்கையாக, அவர் பற்றிய பிற படைப்பாளர்களின் எழுத்துகள் அடங்கிய தொகுதி ஒன்றை நூலாக ஆவணப்படுத்தும் பணியை கழனியூரன் என்னிடம் ஒப்புவித்திருந்தார். நூல் வேலைகள் முடிவடையும் நிலையில் புற்றுநோய் அவரை முற்றிலுமாகப் பறித்துக்கொண்டது. கழனியூரன் தன் குருவுக்கான காணிக்கையைக் கையளிக்கும் முன்பாகக் காலமாகிவிட்டார்.

கி.ரா. சொல்லுவார், “ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் வாழ்நாளில் பேசினதை, எழுதினதையெல்லாம் பத்திரப்படுத்திக்கொடுத்த மகேந்திரநாத் மாதிரி, ரசிகமணி டி.கே.சி.க்கும் ஒரு ‘சுடுகுஞ்சு’ கிடைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று. டி.கே.சி.க்கு அப்படி ஓர் ஆள் வாய்த்தாரோ இல்லையோ! கி.ரா.வின் ‘சுடுகுஞ்சாக’ வாழ்ந்தவர் கழனியூரன்.

கரிசல் மண்ணில் கி.ரா.வின் பங்களிப்பு பூரண நிலவென்றால் அதே வானத்தின் விடிவெள்ளியாக மின்னியவர் கழனியூரன். ஒரு முறை அவரிடம் ‘உங்கள் காலம்போல எங்களுடைய காலம் அவ்வளவு நல்ல விஷயங்களைக் கொண்டிருக்கவில்லையே?” என்றேன்.

அதற்கு அவர் சொன்ன பதில்: “எங்க தாத்தா வாழ்ந்த காலத்தை நான் பார்க்கும்போது அது பிரம்மாண்டமா இருந்துச்சு. அதிலே அவ்வளவு விஷயங்கள் இருந்துச்சு. என் காலத்து வாழ்க்கை என் பேரனுக்கு வித்தியாசமா இருக்கும். அவன் பேரன் வரும்போது, இங்கே இன்னும் நிறைய மாறியிருக்கலாம். நவீனத்துக்கான மாற்றங்கள் வந்துகிட்டேதான் இருக்கும். அவரவர் காலத்தோட கண்ணாடியை அணிஞ்சுக்கிட்டே இருக்கணும். நம் பார்வைகள் நாளுக்கு நாள் மாறும்; உடலும் உயிரும் வந்து வந்து போய்க்கிட்டே இருப்பது மாதிரி. ஆனா அதோட ஆன்மா அப்படியே இருக்கும். ஆன்மா அழியாது” என்றார். கழனியூரனின் ஆன்மா அவரது எழுத்து.

அஞ்சலி: கழனியூரன் - (1954 - 2017)


Friday, 6 April 2018

சிற்றாறு பாசனவசதி

சிற்றாற்றின் மீது பாசனவசதிக்காக 17 அணைக்கட்டுக்கள் கட்டப்பட்டுள்ளன.
எண் அணைக்கட்டின் பெயர் பதிவுசெய்யப்பட்ட

ஆயக்கட்டு நேரடியாக

(ஏக்கரில்)
பதிவுசெய்யப்பட்ட

ஆயக்கட்டு மறைமுகமாக

(ஏக்கரில்)
1 தலை அணைக்கட்டு 590.06 1467.32
2 அடிவட்டாம்பாறை அணைக்கட்டு 114.08 157.72
3 வால்விளகுடி அணைக்கட்டு 153.27 -
4 புலியூர் அணைக்கட்டு 381.00 911.48
5 பாவூர் அணைக்கட்டு 488.00 3110.08
6 திருசிற்றம்பலம் அணைக்கட்டு 163.00 163.25
7 மாறைந்தை அணைக்கட்டு 1361.00 2543.04
8 வீராணம் அணைக்கட்டு 231.15 2207.70
9 மானூர் அணைக்கட்டு 821.75 2677.52
10 மேட்டூர் அணைக்கட்டு 500.10 1027.50
11 பள்ளிக்கோட்டை அணைக்கட்டு 249.81 2135.00
12 உக்கிரன்கோட்டை அணைக்கட்டு 421.00 47.18
13 அழகியபாண்டியபுரம் அணைக்கட்டு - 440.48
14 பிள்ளையார்குளம் அணைக்கட்டு 66.90 413.19
15 செழியநல்லூர் அணைக்கட்டு 67.81 372.71
16 பிராஞ்சேரி அணைக்கட்டு 344.39 409.40
17 கங்கைகொண்டான் அணைக்கட்டு 216.28 779.80
மொத்தம் 9963.83 37062.19

Sunday, 26 March 2017

ஆடித்தபசும் ஊத்துமலை ஜமீனும்!

ஊத்து மலை ஜமீன்தாரின் ஆன்மிக திருப்பணிக்கு மற்றொரு சான்று, சங்கரன் கோயில் ஆடிதபசு திருவிழா. ஜமீன்தார்கள் இந்த திருவிழாவின்போது கோமதி அம்மனை தங்கள் வீட்டில் பிறந்த மகள் போலவே எண்ணி, சீதனபொருட்களுடன் மாப்பிள்ளை சிவனை நோக்கி காத்து இருப்பார்கள். பரம்பரை பரம்பரையாக ஊத்துமலை ஜமீன்தார் இதற்கான மண்டகப்படி நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி காசி விஸ்வநாதர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு இணையான பெரிய கோயில்களில் சங்கரன் நயினார் கோயிலும் ஒன்றாகும். இந்த தலத்துக்கு பூகைலாயம், புன்னைவனம், சீராசபுரம், சீராசை, வாராசைபுரம், கூழைநகர் என்ற பெயர்களும் உண்டு. சங்கரன் கோயில் ஐம்பூதத் தலங்களில் ஒன்றான மண்தலம் ஆகும். இந்தக் கோயில் தலபுராணம் சீவல மாறபாண்டிய மன்னரால் எழுதப்பட்டது. முதல் ஆறு சருக்கங்கள் ஊத்து மலைச் சமஸ்தான வித்துவான் புளியங்குடி முத்துவீரப்பக் கவிராயரால் 1913ம் ஆண்டு இயற்றப்பட்டது. இப்புராண சுருக்கத்தினை சேத்தூர் மு.ரா.அருணாசலக் கவிராயர் எழுதியுள்ளார்.

“முத்து வீரப்பக்கவிராயர் பிள்ளைத்தமிழ்” இத்தலத்திற்காக இயற்றப்பட்ட அற்புதமான நூலாகும். இவர் ஊத்துமலை சமஸ்தான வித்துவானாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கரனார் கோயில் முகப்பில் 124 உயரமுள்ள ஒன்பது நிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுரத்தின் உச்சி தெற்கு வடக்காக 56 அடி நீளம். கீழ்மேல் அகலம் 15 அடி. உச்சியிலுள்ள கலசம் ஏழடி நான்கு அங்குலம். நகரில் எங்கிருந்து பார்த்தாலும் இந்த கோபுரம் தெரியும். சங்கர லிங்கப் பெருமானுக்கு வன்மீக நாதர், சங்கரமூர்த்தி, வாராசைநாதன், வைத்தியநாதன், சீராசைநாதன், புன்னைவனநாதன், கூழையாண்டி என்று பல திருநாமங்கள். கோமதியம்மன், ஆவுடையம்மாள் என்றழைக்கப்படுகிறாள். ஆ என்றால் பசு. உலக ஜீவராசிகளை பசுக்கள் என்று சொல்வார்கள். அந்த ஜீவன்கள் அனைத்தையும் அரவணைத்துக் காக்கும் அன்னை இவர். இந்த அம்மனைக் கொண்டாடும் ஆடித்தபசு திருநாளில் கோமதியம்மாளின் தாய் வீட்டு சீதனத்தினை கொண்டு வரும் பெரும் பாக்கியத்தினை ஊத்துமலை ஜமீன் குடும்பத்தார் பெற்றுள்ளார்கள்.

இதற்காக ராஜ அலங்காரத்தில் வீரகேரளம் புதூர் நவநீத கிருஷ்ணன் கோயிலிலிருந்து கிளம்புவார்கள். நவநீத கிருஷ்ணன் யார்? கோமதியம்மாளின் தமயன்தானே! இந்த ஆடித்தபசு திருவிழா எப்படி உருவானது? ஒரு காலத்தில் சங்கரன்கோயிலில் புதர்கள் மண்டியிருந்தன. காடுகளாக இருந்தது. இப்பகுதியில் வாழ்ந்துவந்த காப் பரையன், கோயிலில் மண் தோண்டியபோது புற்று ஒன்றில் மண்வெட்டி பட்டு ரத்தம் பீறிட்டது. அப்போதைய தென்பாண்டி சீமையின் அரசன் உக்கிர பாண்டியன், தன் ஆட்சி எல்கைக்குள் இருந்த புன்னைவனக் காட்டில் ரகசிய சுரங்கப்பாதை அமைத்து, அதன்வழியாக மதுரை சென்று சிவனை வணங்கி வந்தார். ஒருநாள் அவரது கனவில் சிவன் தோன்றி, “இனி நீ என்னைத் தேடி மதுரை வரவேண்டாம். புன்னை வனத்திலுள்ள புற்றுகளை அகற்றி விட்டு அங்கு ஆலயம் அமைத்து வணங்கு,” என்று அறிவுறுத்தினார். மறுநாள் காவற் பறையன் அரசனிடம் புற்றில் இருந்து ரத்தம் பீறிட்ட சம்பவத்தினைக் கூறினான்.

தன் கனவுக்கு ஏதோ சங்கேத அறிகுறி அமைவது கண்டு, ரத்தம் பீறிட்ட இடத்துக்கு வந்தார். அங்கிருந்த பாம்புப் புற்றுகளை அகற்றி மண்ணைத் தோண்டச் செய்தார். அப்போது பூமிக்குள்ளிருந்து இரு நாகங்கள் (சங்கன், பதுமன்) குடைபிடிக்க அங்கே சங்கரலிங்கம் பிரசன்னமானார். ஆண்டவன் கட்டளைப்படி அங்கே மன்னன் எழுப்பிய ஆலயம்தான் சங்கரநாராயணன் ஆலயம். நாகங்களில் ஒருவரான சங்கன் சிவபக்தர்; பதுமன் விஷ்ணு பக்தர். இருவருக்குமிடையே சிவன் பெரியவரா, விஷ்ணு பெரியவரா என்று எப்போதும் விவாதம் நடக்கும். சிவபெருமான் அவர்களின் சந்தேகம் தீர்க்க இருவரையும் பூலோகத்துக்கு அனுப்பி வைத்தார். இதே சந்தேகம் உமையாளுக்கும் ஏற்படவே, அவளையும் பூலேகத்தில் அவதரிக்கச் செய்தார். பூமியில் கோமதியாகப் பிறந்த அம்பிகை, சிவனை எண்ணிப் பல ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அம்மையின் தவத்திற்கு இரங்கி சிவபெருமான் ஆடித்திங்கள், பௌர்ணமி, உத்திராட நட்சத்திரமும் கூடிய நன்னாளில் நாராயணமூர்த்தியுடன் இணைந்து சங்கரநாராயணராகக் காட்சி தந்தார்.

இந்நாளே ஆடித்தபசு திருநாள். “சிவனும் நானே, விஷ்ணுவும் நானே” என்று ஈஸ்வரன் உரைத்த நாள். சங்கன், பதுமன் இருவரும் சமரசமாகி முக்தியடைந்தனர். இந்த தபசுத் திருநாளில் லட்சக்கணக்கான மக்கள் பக்திப் பரவசத்துடன் கூடுகிறார்கள். விவசாயிகள் தங்கள் விளைச்சல் பெருக வேண்டி, விளைபொருட்களை சப்பரம் மீது தூவி வேண்டிக் கொள்கின்றனர். அன்றைய தினம் கோமதி அம்மைக்கும், சங்கரனாருக்கும் திருமணம் நடைபெறுவது காண்கொள்ளா காட்சியாகும். பரிவாரங்களுடன் சங்கரன் கோயிலுக்கு வரும் ஜமீன்தார் அம்பாளை வணங்கி நிற்பார்கள். அதன்பின் அம்பாளை தங்க சப்பரத்தில் அழைத்து வருவார்கள். அப்போது அவருக்கு பிறந்த வீட்டு சீதனமாய் அழைப்புச்சுருள் வைக்கப்படும். அலங்கார சாமான்களுடன் ஜவ்வாது, சந்தனம், விபூதி பைகள், எலுமிச்சை பழமாலை, பட்டு பரிவட்டம், சவுரிமுடி, புஷ்பவகை மற்றும் இதர பொருள்களுடன் கோயிலுக்குள் ஜமீன்தார் பரிவாரங்கள் புடைசூழ செல்வார். பிறகு அம்மனுக்கு தபசு அலங்காரம் செய்து, ஜமீன்தார் முன்செல்ல கோமதியம்மன் வீதிஉலா வருவார்.

“ஊத்துமலை ஜமீன் தபசு மண்டபத்தில் தங்க சப்பரத்தில் ஆவுடையம்மை, உமையம்மையாக தவம் இயற்றுவார். மாலையில் அம்பாள் தங்கச்சப்பரத்தில் சுவாமியை வலம் வந்து தவப்பயன் அடைவார். அதன்பின் மாலை மாற்றுதல், பரிவட்டம் கட்டுதல், திருக்கண் அலங்கரித்தல் போன்றன நடைபெறும். இவற்றை ஊத்துமலை ஜமீன் வாரிசுகள் முன்னின்று நடத்துகிறார்கள். தபசு காட்சியின்போது பரிவட்டம் கட்டி ராஜதோரணையில் ஊத்துமலை ஜமீன்தார் நிற்க ஒருபுறம் அம்பாள் சப்பரமும், மறுபுறம் சுவாமியின் சப்பரமும் நிற்கும். ஜமீன்தார் பரிவட்டம் கட்டிக்கொண்டு கோமதியம்மாளின் தாய் வீட்டு சீதனத்தோடு அந்த இடத்தில் எளிமையாகக் காத்திருக்கிறார். தற்போது ஜமீன்வாரிசு பாபுராஜ் என்ற மருதுபாண்டியர் இந்த மண்டகப்படியை முன்நின்று நடத்துகிறார். மறுநாள் கோமதி அம்பாள் சப்பரத்தில் பட்டிணப் பிரவேசம் செல்வார். இதற்குத் தேவையான புஷ்ப அலங்காரம் செய்து வீதி உலா வந்து அம்பாளை கோயிலில் கொண்டு சேர்க்கிறார் ஜமீன்தார். மூன்று நாட்களும் எண்ணெய்க் காப்பு நிகழ்ச்சிக்குப்பின் பள்ளியறைச் சிறப்பு மண்டகப்படியையும் இவரே செய்கிறார்.
இதற்காக நிறைக்குடமாக பசும்பால், தேங்காய் பருமன் உள்ள லட்டு, தோசைக்கல் அளவு தேன்குழல், அதிரசம் மற்றும் கனி வர்க்கங்கள், புஷ்பங்கள் வைத்து பூஜிப்பார்கள். அம்பாள் தவப்பயன் அடைந்து தபசு மண்டபத்துக்கு வந்ததும் ஊத்துமலை ஜமீன்தார் அனைவருக்கும் பாகுபாடு இன்றி சுருள் பிரசாதம் வழங்குவார். மதியம் அன்னதானம் நடைபெறும். கோயிலில் சங்கரநயினார், கோமதியம்மாள், சங்கரநாராயணர் ஆகியோர் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கிறார்கள். பிரசாதமாக வழங்கப்படும் புற்றுமண் தேள், பாம்பு போன்ற விஷக்கடிகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சிரங்கு போன்ற சரும நோய்களுக்கு புற்றுமண்ணை நீரில் கரைத்துத் தடவுகிறார்கள். உடனே நோய் தீருகிறது. வயிற்றுவலி, சீதபேதி போன்ற நோய்களுக்குப் புற்றுமண் கரைத்த நீரை அருந்தி குணமடைகிறார்கள். உடலில் கட்டி உபாதை கொண்டவர்கள் மாவிளக்கு எடுத்து கோமதியம்மாளை வணங்கி நோய் நீங்கிச் செல்கிறார்கள். இக்கோயில் நாகதோஷம் நீக்கும் தலமுமாகும்.

இங்குள்ள திருக்குளம் “நாகசுனை” என்று அழைக்கப்படுகிறது. குளத்தின் நீர் எப்போதுமே பச்சை நிறமாகக் காணப்படுகிறது. இதில் நாக பாஷாணம் கலந்துள்ளதால்தான் இந்த நிறம் என்கிறார்கள். விஷக்கடிக்கு ஆளானவர்கள் இக்குளத்தில் நீராடி தோஷம் நீங்கி நலம் பெறுகிறார்கள். இத்திருக்குளத்தை எத்தனை முறை தூர்வாரிச் சுத்தப்படுத்தினாலும் நீரின் நிறம் மட்டும் மாறுவதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது, தவம் மேற்கொண்ட அம்பிகையின் வண்ணமே என்றும் கருதுகிறார்கள். மார்ச், செப்டம்பர் மாதங்களில் 21, 22, 23 தேதிகளில் அதிகாலை 6 மணிக்கு சூரிய ஒளி லிங்கத்தின் மீது பாய்கிறது. இந்த கோயிலில் பிரதான வாசல் வழியாக நேரடியாக லிங்கத்தின் மீது இவ்வாறு ஒளி படர்வது சூரியனே சிவனை வழிபடுவதுபோல அமைகிறது. கோயிலின் உள்ளே புலித்தேவன் குகை உள்ளது. இந்த புலித்தேவனுக்கும் ஊத்துமலை ஜமீனுக்கும் நிறைய தொடர்பு உண்டு. புலித்தேவன் நெல்கட்டும் செவல் ஜமீன்தார்.
இவர் தமிழகத்தில் வெள்ளையர் ஆதிக்கத்துக்கு எதிராக தென்தமிழகத்தில் முதல் குரல் கொடுத்தவர். கடும்போரில் இவரை வென்ற வெள்ளையர்கள் இக்கோயில் வழியாக இவரை அழைத்துவந்தனர். அப்போது கடைசி ஆசையாக ஆலய தரிசனம் செய்ய விரும்பியதாகப் புலித்தேவன் கூறினாராம். இதையொட்டி கோயிலுக்குள் சென்ற பூலித்தேவன் கண் இமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டாராம். இங்குள்ள ரகசிய குகை வழியாக அவர் தப்பித்துச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. அந்த இடம் தற்போது பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்திய விடுதலைப்போருக்கு முதல் வித்தை ஊன்றிய மாவீரன் புலித்தேவன் மீது அதிக பற்றும், பாசமும் கொண்டவர் ஊத்துமலை ஜமீன்தார் எஸ்.எம். பாண்டியன். மாவீரனின் மறைந்த வரலாற்றை வெளியே கொண்டுவர பல முயற்சி செய்தவர். மன்னன் புலித்தேவன் பற்றி ஏராளமானோர் புத்தகம் எழுதியுள்ளனர். ஆனாலும் நெல்கட்டும் செவலில் கோட்டையும், சிலையும் உருவாக இவர்தான் மூலகாரணமாக செயல்பட்டவர்.

ஊத்துமலை ஜமீன்

ஊத்துமலை ஜமீன்தார்கள் கோயில்களை பராமரிப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக திகழ்ந்தனர். தமிழுக்கும் சிறந்த தொண்டாற்றிய அவர்கள் தாங்கள் வழிபடும் ஆலயத்தில் தங்கக் கொடிமரத்தை நிறுவி வணங்கி வருகின்றனர். கோயில்களை புனரமைப்பதிலும் திருவிழா நடத்துவதிலும் முன்னணியில் நிற்பர். கோமதி அம்மனை தங்களது வீட்டில் பிறந்த மகளாக எண்ணி அவரது திருமணத்தை தங்கள் இல்லத் திருமணம்போல் விமர்சையாக நடத்தி வருகின்றனர். ஜமீன்தார்கள் தென்பகுதிகளில் ஒரு குறுநில மன்னர்கள்போல ஆண்டு வந்தனர். அவர்கள் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் மறவர் பாளையமும், கிழக்குப் பகுதியில் நாயக்கர் பாளையமும் சிறப்புற்று விளங்கின. திருநெல்வேலி சீமையில் ஆட்சி செய்த மறவர் இனத்தைச் சேர்ந்த பாளையக்காரர்கள் அனைவரும் ராமநாதபுரம் பகுதியில் உள்ள “கிலுவை” நாட்டிலிருந்து வந்தவர்கள். மறவர் இனத்தில் கொண்டயங்கோட்டைப் பிரிவை சேர்ந்தவர்கள்தான் ஊத்துமலை ஜமீன்தார்கள்.

மதுரை மன்னன் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் பிரிக்கப்பட்ட 72 பாளையங்களில், ஊத்துமலை மிகப்பெரிதாக திகழ்ந்துள்ளது. இதன் ஆளுகைக்குள் 148 கிராமங்கள் இருந்தன. ஒரு காலக் கட்டத்தில் சுரண்டை ஜமீனையும் ஊத்துமலை ஜமீன்தார் ஏலம் எடுத்து தனது ஆளுகைக்கு கொண்டுவந்தார். ஊத்துமலை ஜமீன்தாருக்கு விஜயகுணராம பாண்டியன் என்ற பட்டம் உண்டு. இவர் உபய சாமரம், புலிக்கொடி, மகரக்கொடி, இந்திரனின் கொடியான வலரிக் கொடி ஆகியவற்றைப் பெற்றவர். பாண்டிய மன்னன் பல்வேறு காலகட்டங்களில் இவரது செயல்திறனுக்கு ஏற்ப இவற்றை வழங்கியுள்ளார். ஊத்துமலை பாளையம் எப்படி உருவாயிற்று? பாண்டிய மன்னன் மதுரையிலிருந்து தெற்கே திருநெல்வேலிச் சீமையிலுள்ள உக்கிரன் கோட்டைவரை ஆட்சி புரிந்து வந்தான். உக்கிரன் கோட்டையைச் சுற்றி வாழ்ந்த குறும்பர்கள் பாண்டிய மன்னனுக்கு பல தொல்லைகளைக் கொடுத்தனர். இவர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று மன்னன் முயற்சி செய்தான். அப்போது ஊத்துமலை ஜமீன்தார்களின் முன்னோர்கள் பெரும் படையெடுத்து வந்து குறும்பர்களின் தொல்லைகளை அடக்கினர்.

இதனால் ஊத்துமலைப் பாளையம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்தச் சமயத்தில் ஊத்துமலை பெருங்காடாக இருந்தது. ஜமீன்தார் தங்களது உறவுக் கூட்டத்தை அழைத்து வந்து காடுகளை அழித்து சீரமைத்து ஊரை உருவாக்கினார். அதன் பின் கோட்டை கட்டி வாழ்ந்து வந்தார். ஊத்துமலை ஜமீன்தார் சேரநாட்டிலிருந்து வந்ததாகவும் இதனாலேயே இவர் வம்சா வழியினர் வைணவ மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. வல்லப மகாராஜா (1534-1543) தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். இவர் நடத்திய நவராத்திரி விழாவிற்கு ஊத்துமலை மன்னர் வந்து சிறப்பு செய்தார். (தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தெப்பத்திருவிழாவை ஊத்துமலை ஜமீன்தார் வாரிசுகள் இப்போது நடத்தி வருகின்றனர்.) பாண்டியன் அரண்மனையில் தசரா விழா நடந்து கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் வீரதீர செயல்கள் நடைபெறும். இதன் பொருட்டு சண்டையிடுவதற்காக இரண்டு யானைகள் கூட்டி வரப்பட்டன.

அதில் ஒரு யானை தப்பிச் சென்று வீதியில் தென்படும் மக்களை எல்லாம் தூக்கி வீசி காலால் மிதித்துக் கொல்ல முயன்றது. அந்த சமயத்தில் ஊத்துமலை மன்னர் அங்கு வந்து தைரியமாக யானையை அடக்கினார். இதை அறிந்த பாண்டிய மன்னன் அந்த யானையின் மீது ஜமீன்தாரை ஏற்றி மேளதாளத்துடன் வீதிஉலா வரச் செய்தார். அவருக்கு ஏராளமான பரிசுகளையும் வழங்கி வழியனுப்பி வைத்தார். தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டிய மன்னன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியனுக்கும் ஊத்துமலை பாளையக்காரர்கள் உதவியுள்ளனர். மதுரையில் நாயக்கர் ஆட்சியை ஒழித்து விட்டு பாண்டியர் ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்த மாவீரன் பூலித்தேவன் தலைமையில் ஐந்து கோட்டைகள் அமைக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானது ஊத்துமலை கோட்டை. ஊத்துமலையில் கட்டப்பட்ட கோட்டைக்கு பஞ்ச பாண்டியர்களில் ஒருவரான மாறவர்மன் பெயர் சூட்டப்பட்டது.

‘ஊற்று’ உள்ள மலை ‘ஊற்றுமலை’ என்றழைக்கப்பட்டு நாளடைவில் ஊத்துமலை என்று வழங்கலாயிற்று. ஊத்துமலை ஜமீன்தார்கள் ஆட்சி துவங்கிய காலம் அறியப் போதிய ஆதாரம் இல்லை. ஊத்துமலை ஜமீன்தார்கள் காட்டுக்குள் “டானா” என்ற இடத்தின் வடக்குப் பகுதியில் முதல் கோட்டையையும், ஊத்துமலை நகருக்கு வடக்கே உள்ள “வையம் தொழுவான்பாறை” என்ற இடத்தில் இரண்டாவது கோட்டையையும் அமைத்துள்ளனர். நாளடைவில் ஆட்சிப்பரப்பு விரிந்ததால் அரண்மனையை இடம் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் மூன்றாவதாக ஊத்து மலையில் தற்போது ஆர்.சி. பள்ளி இருந்த இடத்துக்கு அரண்மனையை மாற்றினார்கள். இங்குதான் தமிழ்ச் சங்கம் நடத்தப்பட்டது. அரசவைக்கு பல கவிஞர்களை வரச்செய்து ஜமீன்தார்கள் தமிழ் வளர்த்தனர். இருதாலய மருதப்பதேவர் தனது காதல் மனைவிக்காக வீரகேரளம்புதூரை தலைநகராக மாற்றி அரண்மனையைக் கட்டினார். ராணி மீனாட்சி சுந்தர நாச்சியார் அருகிலுள்ள குருந்தன்மொழி கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.


ஊத்துமலையில் அரண்மனை இருந்தபோது இருதாலய மருதப்பதேவர் பரிவாரங்களுடன் தனது குதிரையில் குருந்தன்மொழி சென்றார். அந்த சமயத்தில் மீனாட்சி சுந்தர நாச்சியாரை பார்த்து அவரது அழகில் மயங்கினார். தனது உடைவாளை அனுப்பி அவரிடம் மணம் முடிக்க சம்மதம் கேட்டார். ‘‘ஜமீன்தாரை மணக்க நான் சம்மதிக்கிறேன். ஆனால், வானம் பார்த்த பூமியான ஊத்துமலைக்கு நான் வாழ்க்கைப் படமாட்டேன். குளிர்ச்சியான இடத்தில் ஒரு அரண்மனை கட்டினால் நான் அவரோடு வாழ்கிறேன்” என்றார் மீனாட்சி சுந்தர நாச்சியார். உடனே ஜமீன்தார் சிற்றாற்றின் குறுக்கே “தாயார் தோப்பு” என்னும் இடத்தில் தடுப்பணை கட்டினார். அந்த அணையிலிருந்து வீராணம் கால்வாய் வெட்டினார். வீரகேரளம்புதூர் என்ற இடத்தில் கால்வாயின் இருபுறங்களிலும் அரண்மனையைக் கட்டினார். அந்தக் காலத்திலேயே நீர்வழிப்பாதையை கட்டுப்படுத்தி மதிநுட்பத்துடன் தடுப்பணையை அவர் கட்டினார். ஆற்றில் வெள்ளம் வந்தால் அரண்மனை அழிந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு பர்லாங் தூரத்தில் ஒரு வடிகாலையும் அமைத்தார். அருகிலேயே நவநீத கிருஷ்ண சுவாமி கோயிலை கட்டினார்.



தொடர்ந்து அரண்மனையை வீரகேரளம் புதூருக்கு மாற்றினார். 25.5.1864 அன்று இருதாலய மருத்தப்ப தேவருக்கும் மீனாட்சி சுந்தர நாச்சியாருக்கும் திருமணம் நடந்தது. அரண்மனையின் ஒருபுறம் இருவரும் வாழ்ந்தனர். மறுபுறம் ராஜதர்பார் நடந்தது. அதில், புலவர்களை அழைத்து வந்து தமிழ் வளர்க்கும் பணியும் தொய்வில்லாமல் நடந்தது. இரவு பகலாக ஓலைச் சுவடியில் புலவர் பெருமக்கள் கவிதைகளை வடித்தனர். காதல் மனைவிக்காக ஊத்துமலை ஜமீன்தார் கட்டிய அரண்மனை வீரகேரளம் புதூரில் இப்போதும் சிறப்புடன் காணப்படுகிறது. ஊத்துமலையை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் வீரகேரளகுலவர்மன் (1021-1028) பெயரால் இந்த ஊர் உருவாகியிருக்கலாம். வீரகேரளம்புதூர் நகரை நிர்மாணித்த பிறகு திறப்பு விழாவிற்கு அப்போதைய சேர மன்னனை அழைத்து சிறப்பித்துள்ளனர். விழாவுக்கு வந்த சேரமன்னன் இங்குள்ள மக்கள் வீரமாக இருப்பதையும் இப்பகுதி கேரளம்போல் செழிப்புடன் இருப்பதையும் பார்த்து இதற்கு “வீரகேரளம்புதூர்” என்று பெயர் சூட்டியதாகவும் கூறப்படுகிறது.


விழா, முடிந்து சேர மன்னன் தனது நாட்டிற்கு திரும்பும் வேளையில் ஊத்துமலை ஜமீன்தார் அவருக்கு ஒரு விநாயகர் சிலையை பரிசாக கொடுத்தார். அந்த சிலையை செங்கோட்டையில் பிரதிஷ்டை செய்தனர். அந்த கோயில் அமைந்துள்ள தெருவுக்கு “வீரகேரள விநாயகர் தெரு” என்று பெயரிட்டனர். தற்போதும் இந்த பெயர் விளங்கி வருகிறது. கேரளம் என்னும் பெயருக்கு ஏற்ப இந்த ஊர் கேரள நாட்டின் சாயலைக் கொண்டுள்ளது. தென்னை, மா, பலா, வாழை ஆகிய மரங்கள் செழிப்பாக காணப்படுகின்றன. இவ்வூர் தெப்பத்தில் உள்ள மண்டபம் கேரள கட்டிடக் கலையை ஒத்துள்ளது. மன்னர் மருதப்பபூபதி காலத்தில் வீரகேரளம்புதூர் “மருதபூபதி” என்னும் பெயருடன் விளங்கியதாக குறிப்பு உள்ளது. ஊத்துமலை ஜமீன்தார்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், திருக்குற்றாலம் குற்றால நாதர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களின் நித்திய பூஜைக்கு நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர். மன்னார்கோயிலில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலில் கொடிமரம் நிறுவினார்கள். நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்துக்கும் ஊத்துமலை மன்னருக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.


ஊத்துமலை ஜமீன்தார்களின் குலதெய்வம் நவநீதகிருஷ்ணசாமி. வைணவ மதத்தைச் சேர்ந்தவர்களாக அவர்கள் விளங்கியதால் அங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் ஜீயர் சுவாமிகள் பங்கேற்று சிறப்பித்துள்ளார். நவநீதகிருஷ்ண சுவாமிக்கு மன்னர் தேரோட்டத் திருவிழா நடத்தினர். இறைவனுக்கு ஏராளமான அணிகலன்களையும் நிலங்களையும் வழங்கினர். வீரகேரளம்புதூரில் அரண்மனையின் தென்புறத்தில் ஸ்ரீ நவநீதகிருஷ்ணசாமி கோயில் உள்ளது. அங்கே நித்திய நைவேத்தியங்கள் சிறப்பாக நடைபெறுகிறது. அதற்குரிய நித்திய படித்தரம் பத்து வராகன், லாடு, லட்டு, ஜிலேபி, தேன்குழல் முதலியவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும். ஒரு லாடு என்பது உரித்த தேங்காய் அளவுக்கு இருக்கும். தேன்குழல் பெரிய சந்தனக்கல் அளவுக்கு காணப்படும். தினந்தோறும் காலையில் விஸ்வரூபம், திருமஞ்சனம், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம் ஆகிய நான்குகால பூஜைகள் இங்கு சிறப்பாக நடக்கின்றன.



இந்தக் கோயிலில் முன்பு ரதவீதியில் தேர் உள்ளது. தேரைக் கடந்து உள்ளே நுழைந்தால் பிரமாண்ட வளைவு வரவேற்கிறது. “1911ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதியாகிய இன்றைய தினம் டெல்லி மாநகரில் நடக்கும் மாட்சிமை தாங்கிய இந்திய சக்கரவர்த்தி 5வது ஜார்ஜ், சக்கரவர்த்தினி மேரி இவர்களுடைய மகுடாபிஷேக மகோத்சவம் குறிப்பாக திருநெல்வேலி ஜில்லா, ஊத்துமலை ஜமீன் ராஜா பத்தியுள்ள பிரஜைகளால் இயற்றப்பட்டது” என்று அதில் தமிழில் கல்வெட்டு காணப்படுகிறது. எதிரே ஆங்கிலத்திலும் இதே தகவல் கல்வெட்டில் உள்ளது. இருபுறமும் உள்ள வீடுகள். தொடர்ந்து நடந்தால் தொன்மையான சிறப்புமிக்க நவநீத கிருஷ்ண சுவாமி கோயிலை அடையலாம். கோயிலின் முன்பக்கம் இரும்பாலான தீபஸ்தம்பம் உள்ளது. அந்தக் காலத்தில் இரவு முழுவதும் அணையாமல் தீபம் எரிய காவலர்கள் எண்ணெய் ஊற்றிக்கொண்டே இருப்பார்கள். கோயிலின் முன்புள்ள கல் மண்டபத்தில் உபரியான தேர்ச் சக்கரங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

கோயில் கதவு அருகே மியூரல்வகை ஓவியங்கள் பிரமிக்க வைக்கின்றன. நெடிய கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால் வலதுபுறம் திருவிழாக் காலங்களில் அரண்மனைப் பெண்கள் அமர்ந்து பூஜை செய்யும் காட்சி மண்டபம் உள்ளது. இங்கு தங்கக் கொடிமரம் கம்பீரமாக நிற்கிறது. இந்தக் கொடிமரத்தைச் சுற்றிவந்து வழிபடுகிறவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும், திருமணம் கைகூடும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

நவநீத கிருஷ்ணன் கோயில் கொடிமரத்தைக் கடந்ததும், ஊத்துமலை ஜமீன்தார் இருதாலய மருதப்ப தேவரின் சிலை கம்பீரமாக காட்சியளிக்கிறது. தமிழையும், ஆன்மிகத்தையும் இரண்டு கண்களாக போற்றி பாதுகாத்த இவரது தோற்றம் பார்ப்பவர்களை வணங்கத் தூண்டுகிறது. இவரது தமிழ் பற்றுக்கு உதாரணமாக கோயில் வளாகத்தில் ஏராளமான ஓலைச்சுவடிகள் தற்போதும் காணப்படுகின்றன. எழுதி முடித்தும் முடிக்காமலும், பதம் செய்யப்பட்டும் நேர்த்தி செய்யப்படாமலும் உள்ள அந்த ஓலைச்சுவடிகள் உள்ளன. இங்குதான் இருதாலய மருதப்ப தேவர் தமிழ் அறிஞர்களைக் கொண்டு ஓலைச்சுவடிகளை எழுதியுள்ளார். ஆலயத்தின் வெளிப்பிராகாரத்தில் நூற்றுக்கணக்கானோர் அமர்ந்து பணி மேற்கொண்டிருந்திருக்கின்றனர். அந்தச் சுவடிகள்தாம் இவை.

மருதப்பரின் உறவினர்கள் சிலரும் பெருங்கவிஞர்களாக, இறையருள் பெற்ற புலவர்களாகத் திகழ்ந்துள்ளனர். இருதாலய மருதப்பத்தேவர் கல்வி ஞானம் மிகுந்தவர். தமிழறிஞர்களிடம் அவர் மிகுந்த நேசம் கொண்டிருந்தார்; அவர்களை அரவணைத்து உதவுவார். டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் எழுதிய “நான் கண்டதும், கேட்டதும்” என்னும் நூலில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஓலைச் சுவடிகளை, புத்தகங்களாகப் பதிப்பித்த அண்ணல் அவர். அவர் பணி சிறக்க, இரண்டு வில் வண்டிகள் நிறைய ஓலைச் சுவடிகளை இருதாலய மருதப்பதேவர் வழங்கியுள்ளார். “ஊத்துமலை ஜமீன்தார்கள் கலைகளை மட்டுமன்றி, தமிழ் அறிஞர்களையும் போற்றி வந்தனர்.

இவர்களது அரண்மனையில் அதிகமான ஓலைச்சுவடிகள் உள்ளன. நான் முதல் முதலில் இருதாலய மருதப்ப தேவரை அரண்மனையில் சந்தித்தபோது அவர் வேட்டைக்காரர் கோலத்தில் இருந்தார்’’ என்றும் “மன்னர் மருதப்பர், தினமும் காலையில் நான்கு மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடிப்பார். பாலை பருகி 6 மணிக்கெல்லாம் பரிவாரங்களுடன் நகர் உலா செல்வார். யானை, குதிரை, காளை கட்டுமிடங்களை நேரடியாக பார்வையிடுவார். அவரால் அமைக்கப்பட்ட இருபுறமும் மரங்கள் சூழ்ந்த சாலையைப் பார்வையிட்டுக் கொண்டே உலாவுவார். காலை 8 மணி முதல் 10 மணி வரை தமிழ்ப் புலவர்களுடன் கலந்துரையாடுவார். காலை 10 மணிக்கு மேல் அரண்மனை கச்சேரிக்கு சென்று சமஸ்தான பணிகளை கவனிப்பார். மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் 2 மணிக்கு தமிழ் நூல்களைப் படிக்க உட்காருவார். தொடர்ந்து மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை சமஸ்தான வேலைகளில் ஈடுபடுவார். பின்னர் தன்னை பார்க்க வந்தவர்களை உபசரித்து பேசுவார். ஓலைகளில் எழுதியுள்ளதை அவர்கள் நீட்டுவார்கள். அவற்றை படித்து பார்த்து மறுநாள் தனது கருத்தை சொல்வார். மாலையில் நல்ல பாடல்களை இசைக்கச் செய்து ஆலய வழிபாடு மேற்கொள்வார். வெளியூரில் இருந்து வந்த விருந்தினர்களை அவரே கோயிலுக்கு அழைத்து சென்று மரியாதை செய்து பிரசாதம் வழங்கி கவுரவிப்பார்” என்றும் தனது நூலில் உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார்.

கோயில்களில் கவி பாடவும், ஓலைச்சுவடிகளை எழுதவும் கவிராயர்களை இருதாலய மருதப்பர் பணியமர்த்தினார். சங்கர நமச்சிவாயர் என்னும் புலவரை நன்னூலுக்கு உரை எழுதச்செய்தார். மாதம் ஒன்றுக்கு நான்கு கோட்டை நெல்லும், தினந்தோறும் ஒருபடி பாலும் அவருக்கு சன்மானமாக வழங்கப்பட்டது. இவரைக்கொண்டே தொல்காப்பியத்துக்கும் ஊத்துமலை ஜமீன்தார் உரை எழுதவைத்தார். அந்த உரை திருவனந்தபுரம் அரசு காப்பகத்தில் தற்போதும் பாதுகாக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. சைவத்தையும் வைணவத்தையும் ஒருங்கே கருதிய மருதப்பர், அகரம் என்ற நகரில் மனக்காவல் ஈஸ்வரர், சிவகாமியம்மைக்கு பெருங்கோயிலை கட்டியுள்ளார் என்கிறார் டாக்டர் ராஜையா.

ஊத்துமலை ஜமீன் வருவாய் தரக்கூடிய 52 கிராமங்களை உள்ளடக்கியது. அதில் கீழப்பாவூர், மேலப்பாவூர் கிராமங்களில் 272 ஏக்கர் நிலம் ஜமீன்தாருக்கு சொந்தமாக இருந்தது. இந்த இடங்களை வீரகேரளம்புதூர் நவநீத கிருஷ்ணசாமி கோயிலுக்கு எழுதி வைத்தார். அப்போதைய நிலவரப்படி ரூ 60 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், வெள்ளிப் பொருட்களையும் கோயிலுக்கு அளித்தார். இவரைப் போற்றி 344 பாடல்களை அண்ணாமலை ரெட்டியார் பாடியுள்ளார். ஒரு சமயம் மருதப்பத்தேவர் கழுகுமலை முருகனை தரிசிக்க நடந்து சென்றார். அப்போது பயணம் எளிமையாக அமைய காவடிச்சிந்து பாடல்களை அண்ணாமலை ரெட்டியார் பாடியவாறு கூடவே சென்றார். இப்பாடல்களை புலமை படைத்த ஊத்துமலை மன்னரே இயற்றியதாக ஒரு கருத்து உள்ளது என்கிறார் எழுத்தாளரும், தென்காசி அரசு வக்கீலுமான மருது பாண்டியர். இப்பாடல்களை நூலாக வெளியிட்டார் மருதப்ப மன்னர். இந்த காவடிசிந்து ஐ.நா சபையில் இசைப் பேரரசி எம்.எஸ். சுப்புலெட்சுமியால் பாடி கூடுதல் பெருமை பெற்றது. இந்நூலில் அரண்மனையின் அலங்காரத்தைப் பற்றியும், மருதப்பரின் செல்வச் செழிப்பான வாழ்க்கை மற்றும் இறைபக்தி பற்றியும் வர்ணித்து எழுதப்பட்டுள்ளது.

ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியை அடுத்து கோயிலைச் சுற்றி வரும்போது சுவாமி வாகனங்களைக் காணலாம். பொதுவாக கோயில்களில் காணப்படும் மரத்தால் செய்யப்பட்ட வாகனங்கள்போல் இல்லாமல், இங்கு செப்பு உலோகத்தால் செய்யப்பட்ட தேர், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்கள் உள்ளன. இவை ஜமீன்தார்கள் கோயிலுக்கு தானமாக அளித்தவை. கோயில் வெளிபிராகாரத்தில் தற்போது ஆஞ்சநேயர், நவகிரக சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.12.09.1891 அன்று மருதப்பர் இப்பூவுலகை நீத்தார். மனம் கலங்கிய ராணியார் செய்வதறியாமல் தவித்தார். கணவரின் நோக்கத்தை ஈடேற்றவேண்டும் என்று உறுதி பூண்டார். நவநீத கிருஷ்ண சுவாமியின் அருளோடு அவர் ஆட்சி பொறுப்பை ஏற்க முன்வந்தார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் கணவனை இழந்தவர் அரசாட்சி செய்ய முடியாது என்று ஒரு சட்டம் இருந்தது. மகாராணி, கணவர் இருதாலய மருதப்ப தேவர் போல மாவு பொம்மை ஒன்றைத் தயார் செய்தார். அவர் உயிரோடு இருந்தபோது மேற்கொண்டிருந்த அலங்காரங்களை தினமும் அந்தச் சிலைக்குச் செய்தார். ராஜதர்பாரில் அந்த பொம்மையை ராஜாவாக நிறுவி அதன் காலை தொட்டு வணங்கிய பின்னரே தனது அன்றாட செயல்களைத் தொடங்கினார். மருதப்பர் விட்டுச்சென்ற பணிகளை எல்லாம் சிரமேற்கொண்டு செய்தார். கோயிலுக்கு அருகே பொதுமக்களுக்காக கிணறு ஒன்றை வெட்டினார். அன்ன சத்திரம் அமைத்தார். கோயில் வளர்ச்சிக்காக, வீரகேரளம்புதூர், கலிங்கம்பட்டி, வடக்கு கிருஷ்ணபேரி (ம) ராமனூர், ராஜகோபாலபேரி, அச்சங்குன்றம், மேலகிருஷ்ணபேரி, முத்துகிருஷ்ணபேரி ஆகிய ஏழு கிராமங்களை இணைத்தார். (இதுகுறித்த கல்வெட்டு கோயில் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது.)


மருதப்பர் உயிரோடு இருப்பதாகவே பாவித்து அந்த மாவு பொம்மையுடன் அரசாட்சி செய்தார் ராணி. தற்போது 150 வருடங்களை தாண்டியும் அந்த மாவு பொம்மை ஜமீன்தாரின் வாரிசான பாபுராஜ் என்ற மருதுபாண்டியரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்படி, இருதாலய மருதப்ப தேவர் இன்றும் தம்முடன் வாழ்வதாகவே ஜமீன் வாரிசுகள் நம்புகின்றனர்.

நவநீத கிருஷ்ணன் கோயில் ஜமீன் நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் அனைத்து சமுதாயத்துக்கும் மண்டகப்படி உண்டு. கோயிலில் பங்குனி உத்திர திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். முதல்நாள் திருவிழாவை பிராமண சமூகத்தினரும், இரண்டாம் நாள் யாதவர் சமூகத்தினரும், 3வது நாள் பிள்ளைமாரும், 4வது நாள் கர்ணம் வகையாறாக்களும், 5வது நாள் நாச்சியார் என்னும் அரண்மனை பெண்களும், 6வது நாள் வீராணம் தேவர் இனத்தவர்களும், 7வது நாள் சின்ன புலியப்ப தேவர் வகையறாக்களும், 8வது நாள் ஜமீன் உறவினர்களும், 9வது நாள் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களும், 10வது நாள் சேனை தலைவர் சமுதாயத்தினரும் நடத்தி வருகின்றனர். தேர்த்திருவிழா மிக விமர்சையாக நடக்கும். முதலில் ஜமீன்தார் வடம் பிடித்து இழுத்த பின்னரே தேரோட்டம் நடக்கும். வானில் கருடன் வட்டமிட்ட பிறகே தேரை வடம் பிடித்துக்கொடுப்பார் ஜமீன்தார். தேரடி முக்கில் ஒரு காவல் தெய்வம் உள்ளது. இந்த தெய்வத்துக்கு அசைவப் படையலும் உண்டு. மழை பொய்த்தால் ஜமீன்தார் தலைமையில் இந்த தெய்வத்துக்கு பூஜை நடக்கும். உடனடியாக மழைபொழியும் அதிசயமும் நடந்துள்ளது.

நவநீத கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடைபெறும். அதுசமயம் ஆலயத்தில் வேலை செய்யும் அனைவரும் கோயில் நிர்வாக அதிகாரி தலைமையில் அரண்மனைக்கு சென்று மேளதாளத்துடன் ஜமீன்தாரை அழைத்து வருவர். சரியாக நள்ளிரவு 12 மணிக்கு கிருஷ்ணர் அவதரித்த நேரத்தில் முதல் தரிசனம் ஜமீன்தாருக்குத்தான். அவருக்கு பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து, சீடை, அப்பம், வெண்ணெய், அவல், பொரி ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும். அதன் பிறகே மற்றவர்கள் தரிசனம் செய்வர். அன்றைய தினம், குருவாயூரில் இருப்பது போலவே சிறப்பு அலங்காரத்தில் குழந்தையாக நவநீத கிருஷ்ணன் காட்சியளிப்பார். இங்குள்ள உற்சவர் ராஜகோபாலன், ருக்மணி, சத்யபாமா சிலைகள் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டவை. சரஸ்வதி பூஜையின்போது வீரகேரளம்புதூரில் உள்ள முப்பிடாதி அம்மன், உஜ்ஜயினி மாகாளி அம்மன், கருமேனி அம்மன் கோயில்களில் கொலு வைப்பார்கள். மூன்று அம்மன்களும் சப்பரத்தில் பவனி வருவர். அன்று ராஜகோபால சுவாமி பரிவேட்டைக்கு சப்பரத்தில் புறப்படுவார். அன்றும் ஜமீன்தார் வந்து துவக்கி வைத்த பின்னரே சப்பரம் புறப்படும்.




இருதாலய மருதப்ப தேவரையும், அவருக்கு பிறகு அரியணை ஏறிய ராணி மீனாட்சி சுந்தர நாச்சியாரையும் ஜமீன் சுப்பையா தேவர் கடவுளாகவே கருதினார். சிற்றாற்றின் கரையில் இருதாலய ஈஸ்வரர் என்ற பெயரில் ஒரு சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிவனுக்கு இருதாலய மருதப்பர் என்றே பெயர்! கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள சிவபெருமான் மருதப்ப தேவராகவே வணங்கப்பட்டு வருகிறார். தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் சந்நதி கருவறையில் ராணி மீனாட்சி சுந்தர நாச்சியாரின் சிலை உள்ளது. இருவரையும் வணங்குவது போல எதிரே உள்ள தூணில் சுப்பையா தேவர் சிலை காணப்படுகிறது.

இந்தச் சிறிய கோயிலில் நவகன்னிகள், நந்தியம்பெருமான் உள்ளிட்ட தெய்வங்களும் உள்ளன. இக்கோயிலில் பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடந்து வருகின்றன.ஜமீன்களின் சீரிய ஆன்மிகப் பணியைப் பறைசாற்றும் வகையில் கோமதி அம்மனை ஜமீன்தார் தனது மகளாக பாவித்து வழிபடும் திருவிழா நடைபெறுகிறது. பொதுவாக ஒரு பெண் தெய்வத்தை அன்னையாக பாவிப்பது வழக்கம்; ஆனால், மகளாக பாவித்து நடத்தப்படும் இந்த அதிசய வழிபாடு நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கர நாராயண சுவாமி கோயிலில் நடக்கிறது.

நம் ஊர்களின் பெயர்களும் அதற்கான காரணங்களும்.

நம் ஊர்களின் பெயர்களும் அதற்கான காரணங்களும்.

இப்படியும் இருக்கலாம் என்று என் சிந்தனையில் உதித்தவை.

வீரகேரளம்புதூர்- வீரகேரளனின் புதிய ஊர் அல்லது வீரமாய் கேரளாவைப் போல செழிப்பான புதிய ஊர்.

கழனீர்குளம்- வயல்வெளிகள் சூழ்ந்த்க் குளம் அல்லது செங்குவலைப் பூக்கள் நிறைந்த குளம்.

அத்தியூத்து- அத்தி மரத்தில் நீர் ஊற்று வந்த இடம்.

ஊற்றுமலை- ஊற்று நீர் மலை உள்ள இடம் அல்லது நீர் ஊற்று உள்ள மலை.

வீராணம்- வீர ஆண் இனம் அல்லது வீர ஆ இனம்.

திருநெல்வேலி-நெல்வயல்களை வேலியாக உடைய ஊர்.

அம்பாசமுத்திரம் -மரகதவல்லி அம்பாள் பெயரால் அம்மை மற்றும் பெரிய ஏரிகள் சமுத்திரம் என்றும் சேர்த்து அம்பாசமுத்திரம்.

பாபநாசம்-பாபம் நாசம் ஆகும் இடம்.

விக்கிரமசிங்கபுரம் -விக்கிரமசிங்கன் இடம்.

சுரண்டை- சுரர் அண்டிய இடம்.- அசுரர்களுக்குப் பயந்து தேவர்கள் தஞ்சமடைந்த இடம்.

சாம்பவர்வடகரை-அகத்திஷ்வரர்சாம்பவமுர்த்தி- சாம்பவமுர்த்தி கோவிலுக்கும் அனுமன் நதிக்கும் வடகரையில் அமைந்த இடம்.

சுந்தரபாண்டியபுரம்-சுந்தரபாண்டியன் இடம்.

வேலாயுதபுரம்- வேல் ஆயுத இடம்- வேல் ஆயுதம் கொண்டவர்களின் இடம்.

ஊர்மேனிஅழகியான்- அழகிய உருவம் உடைய ஊர்.

கடையநல்லூர்- கடையன்+ நல்லூர் -இளையவனின் நல்ல ஊர்.

வாசுதேவநல்லூர்-வாசுதேவனின் நல்ல ஊர்.

சிவகிரி- சிவன் மலை.

ஆய்க்குடி- ஆயர்கள் குடும்பம் அல்லது ஆயர்கள் வாழிடம்.

தென்காசி-தென் திசையில் உள்ள காசி அல்லது தெற்கே உள்ள காசி.

செங்கோட்டை- செங்கற்களால் கட்டப்பட்ட கோட்டை.

திருமலைக்கோவில்- சிறப்பு மிகுந்த மலைக் கோவில் அல்லது மரியாதைக்குரிய மலை கோவில்.
அழகனின்(முருகன்) மலை கோவில்.

பண்பொழி -பைம்பொழில்-பசுமையான சோலைகள் நிறைந்த இடம்.

வடகரை- அனுமன் நதிக்கு வடகரையில் அமைந்த இடம்.

Saturday, 11 February 2017

மானூர் பெரியகுளம்

7ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் மணல் தேங்கி மேடான மானூர் பெரியகுளம் தூர்வாரி சீரமைக்க கோரிக்கை
2/10/2017 12:41:05 PM


மானூர்: 7ம் நூற்றாண்டின் சீமாற வல்லப பாண்டியனால் வெட்டப்பட்ட மானூர் பெரியகுளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானூர் பெரியகுளம் 7ம் நூற்றாண்டு தமிழ் மன்னனான சீமாற வல்லப பாண்டியனால் வெட்டப்பட்டது. பொதுப்பணித்துறையின் கணக்குப்படி நீர்பிடிப்பு பரப்பளவு 1695 ஏக்கர். 190 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாக கூறப்படுகிறது. மானூர், மாவடி, மதவக்குறிச்சி, எட்டான்குளம் ஆகிய 4 ஊராட்சிகளை சேர்ந்த வயல்வெளியை உள்ளடக்கியது இக்குளம். இது 5000 ஏக்கர் நிலத்துக்கு பாசன குளமாகவும், 25 கிராமங்களுக்கு நீராதாரமாகவும் இருக்கிறது.
மன்னர்கள் காலத்தில் தாமிரபரணி ஆற்றில் முக்கூடல் திருப்புடைமருதூர் இடையே மண்ணால் அணைகட்டி மதிகெட்டான் கால்வாய் வழியாக மானூர் பெரிய குளத்துக்கு நீரை கொண்டுவந்துள்ளனர். காலப்போககில் அந்த அணை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு தூர்ந்து போனது. இன்றளவும் அதன் அடிச்சுவடுகள் காணப்படுகின்றன.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தாமிரபரணியின் கிளை நதியான சித்ரா நதி எனப்படும் சிற்றாற்றிலிருந்து நீராதாரக் கால்வாய் அமைத்து, வீரகேரளம்புதூர் அருகேயுள்ள தாயார் தோப்பு என்ற இடத்தில் சிற்றாற்றின் குறுக்கே 215 மீட்டர் நீளத்தில் அணை கட்டி, 32.50 கி,மீ தூரம் கால்வாய் வெட்டி, அக்கால்வாயின் 20வது குளமாக மானூர் பெரியகுளத்தை இணைத்தனர். மானூர் பெரியகுளம் நெல்லை மாவட்டத்தில் 2வது பெரிய குளம் என்றாலும், 185 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கருப்பா நதி அணை, 174 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அடவி நயினார் அணை, 152 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ராமாநதி அணை, 25 மில்லியன் கன அடி கொண்ட குண்டாறு அணைகளை விட பெரியது.

இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் இக்குளம் காய்ந்து வறண்ட நிலையில் காணப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து நிரம்பிய நிலையில், இந்த ஆண்டு பருவமழை பொய்த்து வறண்டு போனதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
முன்னொரு காலத்தில் மானூர் பெரியகுளம் ஒரு முறை நிரம்பினால் தொடர்ந்து 3 ஆண்டுகள் வற்றாமல் கிடக்குமாம்.
ஆனால், பலநூறு ஆண்டுகளாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மணல் அடித்து வரப்பட்டு 6 அடிக்கு மேல் மணல் மேவியுள்ளது. குளத்தினுள் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட மடைப்பகுதியின் நீர்போக்கு வழி குளத்தின் பரப்பிலிருந்து 6 அடி ஆழத்தில் அமைந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘மானூர் பெரியகுளத்தில் தண்ணீர் வற்றி வரும் காலங்களில் குளத்தின் மையப்பகுதியில் இருந்து 2 நபர்கள் சேர்ந்து இறவை வட்டி மூலம் நீர் இறைத்து குளத்து மடையின் நீர்வழிப்பாதைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இன்று 6 அடி பள்ளம் தோண்டியே நீர்வழிப்பாதைககு தண்ணீர் கொண்டு வர முடிகிறது. இதனால் குளத்தின் கொள்ளளவு சரிபாதியாக குறைந்துவிட்டது. மழைக்காலங்களில் வெகு விரைவில் குளம் நிரம்புவதோடு ஒரு வருட காலத்திற்குள் குளம் வறட்சியை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. காரணம், குளம் வெட்டி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை தூர்வாரப்படவில்லை. எனவே, அரசு இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதியும், பொதுமக்களின் குடிநீர் ஆதாரம் கருதியும் இக்குளத்தை 6 அடி ஆழத்திற்கு தூர்வார வேண்டும். இதனால், ஒரு முறை குளம் நிரம்பும் நிலையில் நீராதாரம் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடித்திருக்கும், என்றனர்.

Sunday, 14 August 2016

விரதம் இருப்பதால் கிடைக்கும் உடல்நல நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா??

நாம் ஆன்மீகம் மற்றும் மூட நம்பிக்கை என நினைத்துக் கொண்டிருக்கும் பல விஷயங்கள் நிஜத்தில் அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த விஷயங்கள் ஆகும். நமது முன்னோர்கள் மறைமுகமாகவும், தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் நம்மிடம் கட்டாயப்படுத்தித் திணித்த சில விஷயங்கள் தான், கால போக்கில் நம்முன் கண்மூடித்தனமான பக்தியாகவும், மூட நம்பிக்கையாகவும் மருவி நிற்கின்றன.
இந்த விஷயங்களில் நம்மில் சிலர் மட்டுமே, அதிலும் பெண்கள் மட்டுமே பெரும்பாலும் கடைப்பிடித்து வரும் விரதம் என்பது மருத்துவ ரீதியாக உடல் செல்கள் புத்துயிர் அடைய உதவும் ஒரு செயல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இன்று நம்மில் பலர் இதை கேலியும் கிண்டலும் செய்து வருகிறோம். இதனால் என்ன பயன் என்று நக்கல் அடித்து வருகிறோம்.
விரதம் பல வகைகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. சிலருக்கு ஒரு வேளை, சிலருக்கு 2 வேளை உணவு, வெறும் பழங்களை சாப்பிடுவது, உப்பு தவிர்த்து இனிப்பு மட்டும் எடுத்துக் கொள்வது, அசைவம் மட்டும் தவிர்ப்பது என்று விரதங்கள் உள்ளது. நாம் சாப்பிடுகிற உணவு செரித்து, உணவில் உள்ள கொழுப்புகள் ஆற்றலாக மாற்றப்பட குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தேவை. ஆனால் இடைவேளை கொடுக்காமல் அடுத்த வேளை சாப்பாட்டை உள்ளே தள்ளுவதால் உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பானது, உடல் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலாக மாறாமல் தடுக்கப்பட்டு அப்படியே தேங்கி விடுகிறது…
உடல்நிலை மாற்றம்
விரதம் இருப்பதனால் உங்களது உடல் மற்றும் மன நிலையில் அமைதி ஏற்படும் மற்றும் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.
நோய் எதிர்ப்பு
உடலில் உள்ள செல்கள் புத்துயிர் பெறுவதனால், உங்களது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உடல் எடை குறைவு
விரதம் இருப்பதனால் ஏற்படும் மற்றுமொரு சிறந்த பயன் என்னவெனில் உங்களது உடல் எடை குறைய இது பெருமளவில்
உதவும்.
மன நிலை மேன்மையடையும்
நீங்கள் விரதம் இருப்பதனால் உங்களது ஞாபக திறன் அதிகரிக்கிறது, ஒருமுகத்தோடு வேளைகளில் ஈடுப்பட விரதம் இருப்பது சிறந்த முறையில் பயனளிக்கும்
உணவு இடைவேளை
தினமும் அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளி கொடுப்பது கூட விரதம் தான்.
வாரம் ஒருமுறை
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது.
மூக்கு முட்ட உண்பது தவறு
வாரத்தில் எல்லா நாள்களும் மூன்று வேளைகளும் வயிறு முட்ட சாப்பிட்டு பழகிவிட்டு, திடீரென ஒரு நாள் விரதத்தை கடைப்பிடிப்பார்கள். அது தவறு.
விரதம் இருக்க வேண்டிய முறை
விரதத்துக்கு 2 நாள்களுக்கு முன்பிருந்தே காரம், குறைவான பருப்பு சாதம் மாதிரி நன்கு வெந்த உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.
புத்துணர்ச்சி
வாரமோ, மாதமோ ஒரு நாள் குறைந்த அளவு உணவை எடுத்துக் கொண்டு விரதம் இருப்பதே நல்லது. அது உடலில் சில செல்களை வளர்ச்சியடைய செய்யும். பழுதடைந்த செல்கள் புத்துயிர் பெறும்.
குழந்தைகள் மற்றும் முதியவர்கள்
குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பணி பெண்கள், கடுமையான வேலைகள் செய்பவர்கள், அடிக்கடி வெளியூர் செல்பவர்கள், நோயாளிகள் தொடர்ந்து மருந்து உட்கொண்டு வருபவர்கள் ஆகியோர் விரதமும் இருக்கக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.