Pages

Sunday, 16 June 2013

மரங்களின் அரசன் அரசமரம்

பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு. அனைத்து மரங்களையும் விட அரசமரத்திற்கு தன் சிறப்பு அதிகம்.
ராஜவிருட்சம்

அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன அதனாலேயே அரசமரம் ராஜ விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. ‘மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்’ என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறான். புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் இந்தியாதான் என்பதற்கு சான்றுகள் உள்ளன.

போதிமரம்

அரசமரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் புனித மரமாகும். புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது அரச மரம்தான். அரசுநீழலிருந்தோன் என சூடாமணி நிகண்டு கடவுட் பெயர் தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் அரச மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.

விஞ்ஞான உண்மை

அரசமரத்தை சுற்றினால் குழந்தை பேறுகிடைக்கும் என்பது என்பது ஒரு நம்பிக்கை. இதன் காரணமாகவே “அரசினை நம்பி புருசனை கைவிட்டாள்” என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளளது. அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது

‘அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் ’என்ற பழமொழி உண்டு. இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப் பேற்றை உண்டாக்கும். சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே. அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.

பெண்களுக்கு கர்ப்பப்பை என்ற அமைப்பு உள்ளது. பெண்ணின் ‘ ஓவரி ‘க்கு சினை முட்டைகள் வந்து சேரமுடியாவண்ணம் ‘ ஃபிலோப்பியான் ட்யூப் ‘ போன்ற உள் உறுப்பில் ஏதாவது தடை அல்லது அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம். இந்த ‘ஃபிலோப்பியான் ட்யூப் ‘க்கு அடியில் தசை வளர்ச்சி ஏற்பட்டு அதன்மூலம் அடைப்பு ஏற்பட்டும் இருக்கலாம். இத் தடையை நிவர்த்திக்கவே, பெரியோர்கள் கூறிய ஒப்பற்ற வழி அரச மரப் பிரதட்சிணம். அரச பிரதபுத்திர பாக்கியம் அடைய வேண்டுமானால், பெண்கள் அரச மரத்தைச் சுற்ற வேண்டும் என்று நம் மூதாதையர் ட்சணம் 108 முறை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யும்போது வெறுமனே சுற்றி வராமல், ஒவ்வொரு சுற்று முடிந்ததும் , மரத்தின் அடியில் வீற்றிருக்கும் வினாயகப் பெருமான் சிலை முன்போ , அல்லது நாகர் சிலை முன்போ குனிந்து வணங்கி பஞ்சாங்க நமஸ்காரம் செய்தாக வேண்டும்.

ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பெண் இப்படி செய்து நமஸ்கரிக்கும்போது பெண்ணின் அடிவயிறு அழுத்தப்படுகின்றது. இம்மாதிரி 108 முறை அழுத்தப்படும்போது அந்த அடைப்பானது சிறிது சிறிதாக நீங்கி விடக்கூடும். அதன்பிறகு பரிபூரணமாக தடை ஏற்படுத்தும் அடைப்பு நீங்கியவுடன், சினை முட்டைகள் இப்போது எளிதாக கருப்பையைச் சென்று எளிதாகச் சேர்ந்துவிட முடியும். பிறகு புத்திர பாக்கியம் சுலபமாக ஏற்பட்டு விடும்.

இப்படிப்பட்ட உடற்பயிற்சி யோகாவில்கூட சொல்லித் தரப்படும். ஆதலின், இப்பயிற்சியை வீட்டிலேயே செய்யலாம். அரச மரத்தை ஏன் நாடிச் செல்ல வேண்டும் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? அதற்கான காரணத்தையும் விஞ்ஞான ரீதியிலேயே நாம் தெளிந்தறியலாம்.

தாவரங்களில் அதிகப்படியான பிராண வாயுவை வெளியிடும் தாவரம் அரச மரம்தான். அதற்கடுத்து வேப்பமரம். சூரிய உதயத்தில் அரச பிரதட்சிணம் செய்யும்போது இம்மரத்தடியில் ஆரோக்கியமான வகையில் காற்றோட்டம் அமைந்திருப்பதுதான். அதாவது சூரிய ஒளிக்கு முன் இம் மரத்திற்கு மேல், ‘ ஓஸோன் ‘ என்னும் காற்றழுத்த மண்டலம் ஒன்று அமையப்பெற்று , பிராண வாயுவை வெளியிடாமலும், சிதற விடாமலும், மரத்தடியில் உள்ளவர்க்கு அளிக்கின்றது. இந்த அமைப்பு சூரிய ஒளி ஏற்பட்டவுடன் சிதறி காற்றழுத்தத்தையும் சிதைத்துவிடுகின்றது.

ஆகையினால்தான் வீட்டில் கூடாது என்றும், அரச மரத்தை நாடிச் சென்று அதனைப் பிரதட்சிணம் செய்து 108 முறை முடியாவிட்டாலும், தம்மால் இயன்றவரை குனிந்து நமஸ்கரித்து வந்தால், நிச்சயம் மலட்டுத் தன்மை நீங்கப் பெற்று புத்திரப் பேற்றை அடையமுடியும் என்று நம் முன்னோர்கள் கூறிய அறிவுரை தற்கால விஞ்ஞானத்துடன் எந்த அளவுக்குப் பொருந்தி வருகிறது என்பதை நினக்கும்பொழுது வியப்படைவதுடன் , நம் முன்னோர்களின் அறிவாற்றலைக் கண்டு பூரிப்படைகிறோம். பிரதி வருடமும் ஐந்து திங்கட்கிழமைகளில் அமாவாசை வரும். இந்த தினங்கள் விஷேஷ பலனை அளிக்கும்.

அது சரி!. பிள்ளைப்பேறு பெறுவதற்கு அரசப் பிரதட்சிணம் என்றால், திருமணம் ஆகாதவர்கள் திருமணம் ஆகவேண்டும் என்று சுற்றுகிறார்களே , அதற்கு விளக்கம் என்ன என்று கேட்கலாம். திருமணம் ஆகாதவர்களுக்கும் அரச மரத்தை வலம் வருவதால், நிச்சயம் பலன் உண்டு. ஆனால், அவர்கள் 108 முறை விழுந்து வணங்கி நமஸ்கரிக்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இந்தப் பயிற்சி புத்திர ஸ்தானம் அடைய விரும்புபவர்களுக்கே. !

பெண்களின் திருமணத்துக்கு சில தோஷங்கள் தடையாக அமைந்துள்ளன. அவைகளுள் நாக தோஷம் ஒன்றாகும். அரச மரத்தடியில் பெரும்பாலும் வினாயகர் சிலையுடன், நாக தேவதைகளின் சிலைகளும் நிறுத்தப்பட்டிருக்கும். காலையில் ஸ்நானம் முடித்து , நம்பிக்கையோடு, மரத்தை பிரதட்சிணம் வரும்போது நாகதோஷத்தின் பாதிப்பும் விலகி, சுப காரியம் இனிது நிறைவேறும்.

கருப்பை கோளாறு

அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் ( 1 மண்டலம் ) அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.


அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.


பிராணவாயு

நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர். இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் ஒன்றான அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.

அரசமரமும், வார வழிபாடும்

ஞாயிறு: ஞாயிறு அன்று அரச மரத்தை வலம் வந்து சூரியனைப் பிரார்த்தனை செய்தால் எல்லாவிதமான துன்பங்களும் விலகும்.

திங்கள்: திங்கட்கிழமை சிவபெருமானை மலர்களால் அர்ச்சித்து அரசமரத்தை வலம் வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

செவ்வாய்: செவ்வாய்க்கிழமை அன்னை உமா தேவியை அர்ச்சித்து அரச மரத்தை வலம் வந்தால் காரியசித்தி, உத்தியோக உயர்வு முதலான பல்வேறு வெற்றிகளும் எளிதில் அடையலாம்.

புதன்: புதன்கிழமை தேவகணங்களை நமஸ்கரித்து அரச மரத்தை வலம் வருபவர்களுக்கு விரும்பிய லாபங்கள் கிடைக்கும். வர்த்தகர்களுக்கு சுபிட்சம் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன்: வியாழன் அன்று தட்சிணாமூர்த்தியை அஞ்சலி செய்து அரச மரத்தை பிரதட்சிணம் செய்தால் கல்வி ஞானமும் கீர்த்தியும் பெற முடியும்.

வெள்ளி: வெள்ளிக்கிழமை லட்சுமியை நமஸ்கரித்து அரச மரத்தை வலம் வந்தால் அமோக ஐஸ்வரியமும் யோக சுபிட்சங்களும் குவியும்.

சனி: மகாவிஷ்ணுவைப் பணிந்து நைவேத்தியங்கள் செய்து அரச மரத்தை வலம் வந்தால் சர்வ துக்கமும் போகும்.

7 முறை சுற்றினால் இஷ்ட சித்தி.

9 முறை சற்றினால் ஜயம்.

11 முறை சுற்றினால் சற்குணம் உண்டாகும்.

13 முறை சுற்றினால் புத்திர பிராப்தி.

15 முறை சுற்றினால் ஆயுள் அபிவிருத்தி.

108 முறை சுற்றினால் தன பிராப்தி, தன விருத்தி.

1008 முறை சுற்றினால் அஸ்வமேத யாக பலன்

No comments:

Post a Comment