Pages

Monday, 17 June 2013

கர்நாடக-சங்கீதம்


தமிழிசை
அடடா! என்ன அழகு!!

மார்கழி மகோற்சவம், சங்கீதக் கச்சேரி, தியாகராஜ உற்சவம் _ என்கிற பெயர்களில் சென்னை, திருவையாறு நகரங்களில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் இசைப்பருவகாலம் (Music Season) தொடங்கிவிட்டது.

சென்னையில், மியூசிக் அகாடமி, கிருஷ்ணகான சபா, நாரதகான சபா முதலான அரங்குகளில் கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் களைகட்டத் தொடங்கிவிட்டது.

அரங்குகளில் அமர்ந்து, சபாஷ்! பேஷ், பேஷ்!! ரொம்ப நன்னா இருக்கு!!! _ எனக் கூறி, தலையசைத்து, கைத்தாளம் போட்டு, சுவைத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

தமிழிசை மன்றம் ஒன்றில் மட்டும் தமிழிசை விழா தொடங்கி இசை நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. அது என்ன, கர்நாடக சங்கீதம்? அது என்ன, தமிழிசை? இரண்டும் ஒன்றா? வெவ்வேறா? தொடர்ந்து ஆய்வு செய்வோம்.

இசை எனப்பட்டது ஏன்?

பாடுபவனின் அல்லது கருவிகள் மூலம் ஒலி இயக்குபவனின் கருத்தும் ஓசையும் கேட்பவனின் செவியில் விழுந்து மனதில் புகுந்து, எண்ணத்தில் கலந்து உள்ளத்தை அந்த கருத்து _ ஓசையோடு இசைந்து போகச் செய்வதால் _ இசைவிக்கச் செய்வதால் இசை எனப்பட்டது. இனிமை தழுவும்போது இன்னிசை எனப்பட்டது.

இசைத்தமிழ் நாம் செய்த அரும் சாதனை!

இசையில் தமிழ் கலக்கும்போது இசைத்தமிழ் எனலாயிற்று, தமிழில் இசை இணையும்போது தமிழிசை எனப்படுகிறது. இவ்வண்ணம் அமைத்தது தமிழரின் சாதனை! தமிழில், இசைக்கலை தொல்காப்பியம், சங்ககால இலக்கியங்கள் தொடங்கி இன்றுவரை அரும்பி, மலர்ந்து வளர்ந்து வருகிறது. சங்ககாலம் தொட்டே இசைக்கு என, முறையான, நெறிப்படுத்தப்பட்ட இலக்கணம் உண்டு. இலக்கண நூல்களும் உண்டு. மொழியறிவும் இயற்கையறிவும் கொண்டு, ஏழுவகை இசைப் பெயர்களைப் பண்டைத் தமிழர் வகுத்தனர். அவை: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன.

இயற்றமிழின் உயிர் நெடில் எழுத்துகள் ஆகிய, ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகியவை ஏழிசைக்குரிய அலகு (unit) கள் என்னும் குறியீடுகளை அமைத்தனர். பின்னர், வசதி, எளிமை கருதி தமிழர்களே ச, ரி, க, ம, ப, த, நி என்ற குறியீட்டு எழுத்துகளை அவற்றிற்கு மாற்றாக வகுத்தனர். இந்த ஏழு இசைக்குறியீடுகளின் ஏற்ற, இறக்க, நிரவல்களே ஆலோசை, அமரோசை, அலுக்கல் எனப்பட்டன. நல்லவண்ணம் பண்படுத்தி, செவிக்கு இனிய ஓசையைச் செய்த (பண்ணிய)தால் இன்னிசை பண் எனும் பொதுப்பெயரால் வழங்கப்பட்டது. பண்டைக்காலத்தில் முதலில் அமைந்த பண்கள் (இராகங்கள்) _ 103; பிறகு, இவை விரிவடைந்து 11991 பண்கள் ஆயின _ என்கிறது தமிழ்ப் பண்ணாராய்ச்சி முடிபு.

பழங்காலப் பண்கள்: அய்ந்திணை அடிப்படையில் குறிஞ்சிப் பண், முல்லைப்பண், மருதப்பண், நெய்தற்பண், பாலைப்பண் என அய்ம்பெரும் பண்கள் அமைந்தன. இவற்றின் வகைப்பாடுகள் ஆகப் பல பண்கள் எழுந்தன. அவற்றில் சில பின்வருமாறு: செம்பாலைப்பண், படுமலைப்பாலைப்பண், செவ்வழிப்பண், அரும்பாலைப்பண், கோடிப்பாலைப்பண், விளரிப்பண், மேற்செம்பாலைப்பண். இவை சங்ககாலப் பண்களின் பெயர்கள். சிலப்பதிகாரக் காலத்தில், பண்கள் அடிப்படையில் அமைந்த பாடல்கள், கானல்வரி, ஊர்சூழ்வரி, வேட்டுவரி என்கிற நில அடிப்படையிலான இசைப்பாடல்கள் பாடப்பட்டன. தேவார_திருவாசக_திவ்வியப்பிரபந்த சைவ_வைணவ பக்திக்காலத்தில் (கி.பி.7_12ஆம் நூற்றாண்டு) பண்கள் புதிய பெயர்களைப் பெற்றன. அவற்றுள் சில பின்வருவன:

அவை: இந்தனம், கொல்லி, சாதாரி, தக்கேசி, பழந்தக்கம், நைவளம் அல்லது நாட்டை, யாழ்முறி. ஒரு பண்ணை, நீட்டி முழக்கி, அலுக்கி இசைக்கும் ஒலிப்புமுறை ஆளத்தி என்பதாகும். தமிழ்ப்பண் முறையில் வழங்கிய பாடல் பண்ணத்தி எனலாயிற்று.

இரு வல்லவர்கள்: தனித்தன்மை வாய்ந்த தமிழிசைக் கலையின் நுட்பம், நுண்ணிய யாழிசைப் பண் முதலிய வற்றைத் திரட்டி, பண்ணாய்வு செய்து இரு இசை வல்லவர்கள் அரிய நுல்களை வெளியிட்டுள் ளனர். ஒருநூல்: கருணா மிர்தசாகரம் என்பது. இதனை எழுதி வெளி யிட்ட இசைப் பேரறிஞர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர். மற்றொரு நூல்: யாழ்நூல் என்பது இதனை எழுதியவர் அருள்திரு. விபுலானந்த அடிகள்.

விபுலானந்த அடிகள் இந்த நூலை அண்ணா மலைப் பல்கலைக்கழக அரங்கில் அரங்கேற்றம் செய்து பண்ணிசை நுட்பங்களை மக்களிடம் நேரில் விளக்கினார். அப்போது, உடனிருந்து, ஒத்துழைத்து, பண்ணி சைத்து உறுதுணை புரிந்தவர். பண்ணா ராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள். அவரோடு, பல நாள்கள் நெருங்கிப் பழகி, பல தமிழிசை நுணுக்கங்களை அவரிடமிருந்து நான் பெற்றேன்; கற்றேன். இவ்வாய்ப்பு எனக்குக் கிடைத்த பெரும்பேறு எனலாம்.

கர்நாடக சங்கீதம் மறைந்து போயிற்றே!

பண்டைய தமிழிசை களவாடப்பட்டு, சமஸ்கிருத மயம் (Sanseritation) ஆக்கப் பட்டு, கர்நாடக சங்கீதம் என அழைக்கப்படலாயிற்று. அது மெய்யாகவே, நம் தமிழிசை தான்? மராட்டிய மன்னன் சோமேசுவரன் தமிழிசையைக் கர்நாடக சங்கீதம் என அழைத்தான்; குறித்தான். தமிழிசை என்னும் வழக்காறு தடம் புரண்டு போயிற்று. கர்நாடக சங்கீதம் _ என்னும் வழக்காறு காலூன்றலாயிற்று.

மறுக்க இயலா மாபெரும் உண்மை:

கி.பி. 1210_1247இல் வாழ்ந்த காஷ்மிரியாகிய சாரங்க தேவர் என்பார், தான் எழுதிய சங்கீத ரத்னாகரம் என்னும் நூலிலே, தேவார வர்த்தினி, தட்சணாத்ய கானா, திராவிட பாஷா, தட்சண குர்ஜரி என்கின்ற வகையால் அந்த நூலிலே, செய்திகளை விளக்குகிறார். தமிழ்நாட்டு இசையையே அவர் கைக்கொண்டார்.

அவர், தமிழ்நாட்டின் பல இடங்களையும் சுற்றிப்பார்த்து, பல, தேவார இசை வகை களையும், ஒவ்வொரு கோவிலி லும் வாசிக்கப் பெறும் நாகசுர இசையையும்; பஜனை மற்றும் நாட்டுப் புறப்பாடல் முதலியவற்றையும் நன்றாகக் கேட்டறிந்தார். அவற்றின் உண்மைகள், இசையின் நுட்பம், முதலியவற்றை உளத்தில் பதித்துக் கொண்டே பின்பு சங்கீத ரத்னாகரம் என்ற நூலை எழுதினார். _ (ஆதாரம்: நூல்: இசைத்தமிழ் இலக்கண விளக்கம் _ ஆசிரியர்: வா.சு. கோமதி சங்கரய்யர்.)

எப்படி? எப்படி? மாறியது எப்படி?

கர்நாடக மன்னர்களின் தலைநகரம் விஜயநகரமாகும். அவர்களது ஆதிக்கத்தின்கீழ், இருந்த துளுவ நாடு, கோவா, ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய பகுதிகளும் கர்நாடக ராஜ்யம் என்றே அழைக்கப்பட்டன. தமிழகம், கி.பி.1500 வரை, கர்நாடக விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்களின் நேர்ப்பார்வையில் இருந்தது. பின்பு, மதுரையிலும், தஞ்சையிலும் விஜய நகரத்தின் பிரதிநிதிகளாக நாயக்கர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களது தாய்மொழி தெலுங்கு ஆகும். கர்நாடக சாம்ராஜ்யத்தின் காலத்தில் தமிழகத்தில் வடமொழி, கன்னட, தெலுங்குப் பாடல்கள் பெருமளவு ஏற்கப்பட்டன. 18, 19ஆம் நூற்றாண்டுகளில் மைசூர், வடஆர்க்காடு, செங்கல்பட்டுப் பகுதிகளைக் கர்நாடகா என்றே வெள்ளைக்காரர்கள் அழைத்தனர். கர்நாடக இசை என்ற பெயரும் அப்படிப்பட்டதுதான்! _ (குடந்தை என் சேதுராமன், நூல்: தமிழிசையும் கர்நாடக சங்கீதமும் -_ தமிழ்மணி, தினமணி _ 23.3.1991.)
நம் தமிழிசை களவாடப்பட்டு, கர்நாடக சங்கீதமான வரலாற்றைப் பார்ப்பனர்கள் தயக்கமோ, மயக்கமோ இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டனரே?

பெயர்களை மாற்றிய பித்தலாட்டம்

தமிழிசை ஏழு அலகுகளை ஏற்றி, இறக்கி ஒலித்த பின் பண்ணைப் பாடும் பாங்கு பண் என்பதாகும். இதனை, ஆரியப் பார்ப்பனியம் (இ)ராகம் என மாற்றியது. ச, ரி, க, ம, ப, த, நி என்னும் தமிழ்ப் பண்களின் ஏழிசை அலகு, தமிழில் சுரம் எனப்பட்டது. சுர் என்னும் ஒலிக்குறிப்பினால் இப்பெயர் பெற்றது. இதனை ஸ்வரம் என மாற்றினர் களவாணிகள். இந்த சுரங்கள் இசைப் பெயர்கள் அல்ல; இசைக் குறியீடுகள்தான்.

ஆனால், ஆரியம். ச _ ஷட்ஜம்; ரி _ ருஷபம்; க _ காந்தாரம்; ம _ மத்யமம்; ப _ பஞ்சமம்; த _ தைவதம்; நி _ நிஷாதம் _என்று ஏழிசையின் அலகுகளுக்குப் பெயர் சூட்டி, தமக்குரியதாக்கினர் களவாணிகள். இது உண்மையாயின் ஷட்ஜம் _ என்பதன் முதல் எழுத்து ஆகிய ஷ என்றுதான் இருக்க வேண்டும். ருஷபம் _ ரு _ என்றுதான் இருக்க வேண்டும். காந்தாரம் _ கா எனவும், தைவதம் _ தை எனவும் குறிக்கப்படல் வேண்டும். அவ்வாறில்லையே? ச, ரி, க_ என்றல்லவா இருக்கிறது? இந்தப் பெயர்கள் உண்மையில் ஏழிசைப்பண்கள் ஆகிய, குரல், துத்தம் முதலியவற்றின் வறட்சி வடமொழிப் பெயராக்கமே! ஆளத்தி _ ஆலாபனம் ஆனது; பண்ணத்தி கீர்த்தனை ஆனது; ச, ரி, க, ம, ப, த, நி என ஏழு சுரங்களை ஏறுமுகமாக இசைப்பது ஆரோசை எனப்படும். இறங்குமுகமாக இசைப்பது அமரோசை (ச, நி, த, ப, ம, க, ரி என) இரண்டையும் மாறிமாறி கலக்கி இசைப்பது, அலுக்கள் எனப்படும். இப்பெயர்கள், ஆரோஹணம், அவரோ---ஹணம், கமஹம் எனப் பெயர் மாற்றப்பட்டன. பண்ணை இசைக்கும் அடிப்படை ஒலி ஒலிப்பு ஆகும்; இது ஸ்தாயி என மாற்றப்பட்டது வன்மையான ஒலிப்பு, தமிழில் வலிவு, மென்மை ஒலிப்பு மெலிவு, இரண்டையும் சமனாக ஒலிப்பது சமன் என்றும் அழைக்கப்பெற்றன. இவற்றை, தாரஸ்தாயி, மந்த்ரஸ்தாயி, மத்யமஸ்தாயி _ என மாற்றினர். ச, ரி, க, ம, ப, த, நி _ என்னும் ஏழு சுரங்களும் இடம் பெறும் இசை தமிழில் பண் என்றே வழங்கப்பட்து.

இதனை, சம்பூர்ணம் என மாற்றினர். 6 சுரங்கள் கொண்டது பண்ணியல் திறம் எனத் தமிழில் வழங்கப்பட்டது ஷாடவம் என மாற்றப்பட்டது. 5 சுரங்கள் கொண்டது திறம் எனப்படும். இது அவ்டவம் என வடசொல்லாக்கினர். 4 சுரங்கள் கொண்ட திறத்திறம் என்பது சதுக்த்தம் எனப் பெயர் மாற்றப்பட்டது. வடமொழிப் பெயர்களால் வழங்கிய தமிழ்ப்பண்கள்:

தமிழ்ப்பண்களின் சில பெயர்கள் கர்நாடக சங்கீதத்தில் பின்வருமாறு மொழிமாற்றம் செய்யப்பட்டன. படுமலைப் பாலைப்பண் _ பரஹரப்ரியா, அரும்பாலைப்பண் _கல்யாணி; கொல்லிப்பண் _ சுத்தசாவேரி; இளிப்பண் _ சுத்ததன்யாசி; இந்தளப்பண் _ ஆனந்தபைரவி; என்பன அவற்றுள் சில.

அரசுப் பதிவிதழில் (Govt. Gazette) பதிவு பெறாமலே பெயர் மாற்றப்பட்டது போலும்!

செந்தமிழ்ப் பண்கள் வடமொழி ராகங்கள் ஆக்கப்பட்ட தகவலைப் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் ஆகிய தமிழ் மன்னர் திருமங்கையாழ்வார் செந்திறத்த தமிழோசை வடசொல் ஆகி (நாலாயிரத்திவ்யப்பிரபந்தம்_ பா_2055) என்று தமது பாசுரத்தில் பாடி, உண்மையினை ஒப்புக் கொண்டுள்ளார்.



- அடுத்த இதழிலும் இசைக்கும்...

- பேராசிரியர் ந.வெற்றியழகன்

No comments:

Post a Comment