Wednesday, 24 July 2013

வாடா அப்பா!

முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழில், இறவாத புகழுடைய காவடிச் சிந்தில் நூல் தந்தவர் அண்ணாமலையார். 31வது வயதிலேயே வாழ்க்கையைத் துறந்துவிட்டாலும், அதற்குள்ளேயே கவியரசர் என்று பெயரெடுத்தவர். அரசவைக் கவிஞர். மண் ஆண்ட மன்னனே மரியாதையுடன் பெருமை அளிக்கப் பெற்றவர் சென்னிகுளம் அண்ணாமலையார். பலே பேர்வழியும் கூட.

பால் ஒளி படர்ந்த நேரம், பாலகன் அண்ணாமலை சாலை வழியே பசுமையை பரவசமாய்க் கண்டு களித்துச் செல்கிறான், எதிரில் மன்னன் மருதப்பர். மாசறு மாணிக்கமே மன்னனாய் எதிரில் கண்டதும் பாலகன் அண்ணாமலை,

“வாடா மன்னா!”

அண்ணாமலை இவ்வாறு விளித்தது கண்ட மன்னருடன் வந்த மந்திரிகள் பதை பதைக்க, மன்னன் திடுக்கிட, பாலகன் தொடர்கிறான்,

“வாடா(த) மன்னா, பரம்பொருளே வணக்கம்!”

நிம்மதிப் பெருமூச்சுடன் மன்னனின் புடை சூழ்ந்தோரும், பெருமூச்சுடன் மன்னர்,

“வணக்கம் பிள்ளாய், எங்கு சென்று கொண்டிருக்கிறாயப்பா?”

“இன்று சனிக் கிழமையாதலால் வீட்டிற்கு எண்ணெய்க் குளியல் காணச் சென்று கொண்டிருக்கிறேன் மன்னா!”

“ஆகட்டும், நல்லதொரு குளியல் கொள்வாயாகட்டும்!”

பரபரவென வீட்டை அடைகிறார். வீட்டில் இருந்த ஏவலர் புறக்கொல்லையில் இருக்கும் அண்ணாமலையாரை அடைகிறார். ஏனோ அண்ணாமலையார் சற்றுக் கடுகடுப்புடன் இருப்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை போலும். எண்ணெய்க் கோப்பையுடன் பாலகனைச் சென்றடைகிறார்.

“என்ன ஏவலரே, இரு கைகளுடன் எண்ணெயுடன் வந்து விட்டீரோ? இரு கைகள் மட்டும் போதாது எனக்கு, பல கை வேணுமெனக்கு!”

“பல கை எதற்கு பிள்ளாய்? இரு கைகளால் தேய்த்துக் குளித்தால் போதாதா?”
”வெறும் தரையில் நான் ஏன் அமர வேண்டும். ஆகவே பலகை கேட்டேன் ஏவலரே! பல கைகள் அல்ல!!” என்று புன்முறுவலுடன் சொல்கிறான் பாலகன் அண்ணாமலை.

பின்னர் பலகையில் அமர்ந்து குளித்துச் சிற்றுண்டி உண்டு விட்டு கோயிலடி செல்கிறான் அண்ணாமலை. அங்கே தன் தந்தையிடம் அலுவல் பார்க்கும் வேலையாள்,

“தம்பீ, காளி கோயிலுக்கு படையல் வைக்க வேண்டும். ஆகவே உம்வீட்டில் சொல்லி ஆடும், அரிசியும் வாங்கித் தருவீராக!”

சற்று யோசித்த பின், “ம்ம், அதில் ஒன்று நடக்கும், ஒன்று நடக்காது!”

“தம்பீ, எது ஒன்று இல்லாவிட்டாலும் படையல் நடக்காதல்லவா? ஆகவே இரண்டையும் பெற்றுத் தாருங்கள் தம்பீ!”

“யாராலும் அது முடியாது பெரியவரே!”

“என்ன தம்பீ இப்படி விதண்டாவாதம் செய்யலாமா நீங்கள்?”

“பெரியவரே, கோபப்படாதீரும்! ஆடு நடக்கும், அரிசி நடக்காது!! அதைத்தான் நான் சொன்னேன்!” என்று பெரியவரை ஆசுவாசப்படுத்தி விட்டு, வீட்டிற்குச் சென்று ஆடும் அரிசியும் பெற்றுத் தந்தான் அண்ணாமலை.

அப்போது அந்த ஆட்டைக் கண்டதும், “பெரியவரே உமக்குக் கிடைத்த இந்த ஆட்டின் கொம்பில் முத்திருக்கு கண்டீரோ?”

“இல்லையே தம்பி, ஆட்டின் கொம்பில் ஏது முத்து? அப்படி ஒன்றும் இல்லையே?”

“என்ன பெரியவரே?! இதோ இந்த கொம்பில் மூன்று திருக்கு(வளைவு) இருக்கிறது பாரும், அதைத்தான் முத்திருக்கு என்றேன் நான்!”

“தம்பீ, உங்களிடம் இருந்தால் என்னைக் கிறுக்கன் ஆக்கிவிடுவீர் போல் இருக்கிறது. நான் காளி கோயிலுக்குச் செல்ல வேண்டும்!” என்று கூறிய பெரியவர் கோயிலுக்குச் செல்ல, அண்ணாமலையார் சிந்துப் பாட்டுடன் ஊருக்குள் தன் வேலையைக் காண்பிக்கப் புறப்படுகிறார்.

No comments:

Post a Comment