ஓரினம் தனது அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு பல வழிகளிலும் போராடத்தான் வேண்டியிருக்கிறது. நாடு, எல்லை என தனக்கான தன்னாட்சி உரிமையைப் பெறுவதற்கும், அதனை தொடர்ச்சியாகத் தக்க வைப்பதற்குமான கலகங்களும், சச்சரவுகளும் உலகெங்கும் நடைபெற்ற வண்ணமிருக்கின்றன. இதில், அவ்வின மொழியின் இருப்பும், முதன்மை பெறுகிறது. "ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அது பேசுகின்ற மொழியை முதலில் அழித்துவிடு" எனும் வல்லாதிக்க சித்தாந்தத்தை எதிர்கொண்ட மொழிகளுள், தனிச்சிறப்பிற்குரிய இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது தமிழ்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழியின் மீது நடத்தப்படுகின்ற, அழித்தொழிப்புப் பணியில் தற்போது வரை தப்பிப் பிழைத்திருக்கிறது என்றால், அது தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அணியப்படுத்திக் கொண்ட கழக இலக்கியங்களும், காப்பியங்களுமே முதன்மைக் காரணமாகும். எத்தனையோ வடிவங்களில் நடைபெற்ற, எவ்வளவோ அழிவுச் செயல்பாடுகளுக்கு இடையிலும் தமிழ் மொழியின் தலைநிமிர்ந்த நன்னடை, பெருமைக்குரியதாக இருக்கிறது. ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இன்று கணினியில் மாபெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கும் தமிழ்மொழியின் வரலாற்று வழித்தடம், அண்மைக் காலம் வரை கரடுமுரடாய்த்தான் இருந்திருக்கிறது. இப்போதும் அது போன்ற தடத்திலேதான் பயணம் செய்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.
சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்பாகவே தமிழ்ச்சமூகம், பரந்து பட்ட அளவில் கல்வியறிவு பெற்றிருந்ததை, மதுரைக்கு அருகிலுள்ள ஆண்டிப்பட்டி புள்ளிமான் கோம்பையில் கிடைத்த நடுகற்கள் சான்றாய் நின்று பகர்கின்றன. கோவையில் கிடைத்த சூலூர் மண் தட்டில் காணப்படும் குறியீடுகளும், சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகளும் ஒத்ததாய் அமைந்திருப்பது, தமிழ்ப்பண்பாட்டின் நாகரிகம் எவ்வளவு பழமை வாய்ந்தது என்பதை உரக்கத் தெரிவித்துள்ளது. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு மேலும் பல வரலாற்றுத் தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளது. "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று அறிவுச் செருக்கோடு உலகத்திற்கே வாழ்வியல் எதார்த்தத்தை வழங்கிய தமிழ் மொழி, இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறையவே உள்ளது. இதற்கிடையே, நேற்றுப் பிறந்த மொழிகளோடும், அதற்கு முந்தைய நாள் பிறந்த மொழிகளோடும் ஒப்பிட்டு, தமிழின் செம்மொழிப் பெருமையைக் கீழிறக்கும் செயல்களும் நம் கண் முன்னே அரங்கேற்றப்படுகிறது என்பதையும் நாம் கணக்கிலே கொண்டாக வேண்டும்.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற மொழிப்போர் குறித்து இப்போதுள்ள இளந்தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. கல்லூரி மாணாக்கர்கள், போர்க்குணத்துடன் தாங்கள் எண்ணிய இலக்கு ஈடேறுவதற்காக, மண்டை உடைந்து, கை கால் ஒடிந்து, குருதி சொட்ட, உயிர் ஈகம் செய்த வரலாறு, தமிழகத்தின் கருஞ்சிவப்புப் பக்கங்களாகும். 1965ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராய் இருந்த காங்கிரஸ் கட்சியின் பக்தவச்சலம், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தன்னெழுச்சியாய் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, அதில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை கதறக் கதற லத்தியால் அடித்த அடியை எவராலும் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது. அன்று அடி வாங்கிய பெரும்பாலான மாணவர்கள் இன்று திராவிடக் கட்சிகளின் பல்வேறு பொறுப்புகளிலும், பல தமிழ்த் தேசிய அமைப்புகளிலும் வாழும் சான்றாக தற்போதும் உயிருடன் இருக்கிறார்கள். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணா தலைமையில் இப்போராட்டத்தை முன்னின்று நடத்திய திராவிட முன்னேற்றக் கழகம், அப்போது மொழியுணர்வோடும், இனவுணர்வோடும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நாடு விடுதலையடைவதற்கு முன்பாக அப்போதைய சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த இராஜகோபாலாச்சாரியார், 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாள் முதன் முதலாக இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து பெரியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ மற்றுமுள்ள தமிழறிஞர்களும் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். தொண்டர்களும், தலைவர்களுமாக பல்லாயிரக்கணக்கானோர் இப்போராட்டத்தில் திரண்டனர். இதற்கிடையே முதலமைச்சரின் வீட்டிற்கு முன்பாக உண்ணாநோன்பிருந்த பல்லடம் பொன்னுசாமி என்பார் இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில் முதல் நபராகக் கைதானார். அதே ஆண்டு டிசம்பர் 5ஆம் நாள் இந்தி மொழி எதிர்ப்பிற்காக நடராசன் கைது செய்யப்பட்டார். சிறையில் கடும் தாக்குதலுக்கு ஆளான நடராசன், 1939ஆம் ஆண்டு சனவரி 15ஆம் நாள் இறந்துபோனார். இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் ஈகம் செய்த முதல் போராளி இவர். தர்மாம்பாள், நாராயணி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உள்ளிட்ட பெருமளவிலான பெண்களும் இப்போராட்டத்தின் விளைவாக கைது நடவடிக்கைக்கு ஆளாயினர்.
இந்தித் திணிப்பிற்கு ஆதரவான அரசின் முயற்சிகளுக்கு 1938ஆம் ஆண்டு இராஜாஜி வித்திட்டாரென்றால், அதற்கு எதிரான போராட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தவர் பெரியார் ஈ.வெ.ரா. இந்தி மொழிக்கு எதிரான போராட்டத்தில் இறந்துபோன நடராசனின் இறப்பை இராஜாஜி, பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்தார். இரண்டாவது மொழிப் போராட்டமாய்க் கருதப்படும் 1948ஆம் ஆண்டிலும் அதே காங்கிரஸ் அரசு, முதல்வராய் அமர்ந்த ஓமந்தூர் இராமசாமி மூலம் இந்தித் திணிப்பை மேற்கொண்டது. அப்போதும் பெரியார் தலைமையில் அறிஞர் அண்ணா, திரு.வி.க., பாரதிதாசன், தருமாம்பாள் என பல்வேறு தலைவர்களும், அறிஞர்களும் போராட்டங்கள் பல நடத்தி சிறை புகுந்தனர்.
வெள்ளை ஏகாதிபத்தியத்திடமிருந்து நாடு விடுதலை பெற்ற பின்னர், இந்தியா தனக்கென்று அரசியல் அமைப்பை உருவாக்க முடிவு செய்தது. இதற்கென்று உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புக் குழு இந்தியாவின் ஆட்சி மொழி குறித்த கலந்துரையாடலை 1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தியது. அரசியலமைப்பு அவையில் இருந்த காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், தனியே நடத்திய கூட்டத்தில் ஆட்சி மொழி வாக்கெடுப்பை நடத்தினர். இதில் இந்திக்கு ஆதரவாக 77 வாக்குகளும், ஆங்கிலத்திற்கு ஆதரவாக 77 வாக்குகளும் கிடைத்தன. அப்போது அந்தக் கூட்டத்தின் தலைவராக இருந்த பட்டாபி சீதாராமய்யர் தனது ஓட்டை இந்திக்கு ஆதரவாகப் பதிவு செய்ததால் ஒரு வாக்கு வேறுபாட்டில் இந்தி மொழி வெற்றி பெற்றது. இதற்குப் பிறகு இந்தி மொழியை, அதனைப் பேசாத பிற மாநிலங்களில் திணிப்பதற்கு காங்கிரஸ் பெரும் முயற்சி எடுத்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் விரும்பாத நிலையில் இந்தித் திணிப்பு விரைவுபடுத்தப்பட்டது. 1950 சனவரி 26ஆம் நாள் இந்திய அரசியலமைப்பு சட்டம் 17ஆவது பிரிவின் கீழ் இந்தி, நடுவணரசின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான போரில் முளைத்த திராவிட முன்னேற்றக் கழகம், தொடர்ந்து பல்வேறு பேராட்டங்களை நடத்தியது. அக்கட்சியின் இதழ்களிலும், வேறு பல ஏடுகளிலும் இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பு அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவின் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இதன் விளைவாக 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் நாள் மக்களவையில் பிரதமர் நேரு, "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்கும்" என்று உறுதியளித்தார். இதனையடுத்து தற்காலிகமாக மூன்றாவது மொழிப்போர் முடிவுக்கு வந்தது. ஆனால் 1963ஆம் ஆண்டிலிருந்து 1965ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நான்காவது மொழிப்போர், இரத்தம் சிந்திய போராட்டமாக அமைந்துவிட்டது. அப்போதும் காங்கிரஸ் கட்சியே இந்தித் திணிப்பை முன்னெடுத்தது. நடுவண் உள்துறை அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி 1963ஆம் ஆண்டு, ஏப்ரல் 13ஆம் நாள் கொண்டு வந்த ஆட்சி மொழி குறித்த சட்ட முன்வரைவு, பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பின. இதன் விளைவாக ஒட்டு மொத்த தமிழகமே கொந்தளித்தது. அண்ணா தலைமையில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் தமிழகம் முழுவதும் பரவின.
கல்லூரி மாணவர்கள் அனைவரும் இந்தித் திணிப்பிற்கு எதிரான பெரும் போரில் சிறிதும் தயக்கமின்றி குதித்தனர். காங்கிரஸ் தலைமையிலான பக்தவச்சலம் அரசு மிக மோசமான ஒடுக்குமுறைகளைக் கையாண்டது. தமிழகக் காவல்துறை, மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக்குள் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக அடித்தத் காங்கிரஸ் தொண்டர்களைத் தயார் செய்து, ஆங்காங்கே மாணவர்கள் மீது உருட்டுக் கட்டைகளால் தாக்கியது என வரலாறு காணாத அளவில் பெரும் வன்முறைக் காடாக தமிழகத்தை மாற்றிக் காட்டியது பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இந்த நெடும் போராட்டத்தில் தான் வெறும் 21 வயதே ஆன கீழப்பழுவூர் சின்னச்சாமி, திருச்சி தொடர்வண்டி நிலையத்திற்கு முன்பாக "இந்தி ஒழிக, தமிழ் வாழ்க!" என்று முழக்கமிட்டு, தன் உடலுக்குத் தீ வைத்துக் கொண்டு இறந்து போனார்.
மதுரையில் நடைபெற்ற கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில், திட்டமிட்டு வன்முறையைத் தூண்டிய காங்கிரஸ் அரசு, மாணவர்களை ஓட, ஓட அடித்து விரட்டியது. அதில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். 1965 சனவரி 26ஆம் நாள் சிவலிங்கம் என்ற திமுக தொண்டர், சென்னை கோடம்பாக்கத்தில் தீக்குளித்து இறந்து போனார். மொழிக்காக உயிரை ஈந்த இத்தியாகப் போராட்டத்தை பக்தவச்சலம், சட்டமன்றத்தில் மிக இழிவாகப் பேசினார். பிறகு பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் தீக்குளித்து இறத்தல் தொடர்கதையாகின. 1965ஆம் ஆண்டு ஐம்பது நாட்கள் நடைபெற்ற நான்காவது மொழிப் போராட்டத்தில், காங்கிரஸ் அரசால் நடத்தப்பட்ட வன்முறையின் காரணமாய் சற்றேறக்குறைய 500 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமுற்றனர்.
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நடந்த போராட்டங்கள் அனைத்தையும் அப்போதிருந்த இளைஞர்களும், மாணவர்களுமே பெரும் எழுச்சியோடு நடத்தினர். நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்து தமிழ் மொழியைக் காப்பாற்றினாலும் கூட, நடுவணரசின் மறைமுக வேலைத்திட்டமும், மாநிலக் கட்சிகளின் கையாலாகாத்தனமும் இந்தியை கொஞ்சம், கொஞ்சமாய் தமிழகத்திற்குள் தற்போது கொண்டு வந்து கொண்டிருக்கிறது. "அனைவருக்கும் கல்வி" என்பதைக் காட்டிலும் "சர்வ சிக்ச அபியான்" வெகு இயல்பாக புழங்கப்படுகிறது. தமிழகத்திலுள்ள நடுவண் அரசின் அனைத்துத் துறைகளும் இந்தியை மெல்ல மெல்ல புகுத்தி வருகின்றன. நடுவண் அரசின் காப்பீட்டுத் திட்டங்களும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் இந்தித் திணிப்பை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அறிஞர் அண்ணா, "மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக எப்போது அறிவிக்கப்படுகிறதோ, அப்போதுதான் இந்த மொழிப்போர் முடிவிற்கு வரும்" என்றார். அந்த நிலை அய்யாவால் சாத்தியமாகுமா..? அல்லது அம்மாவால் சாத்தியமாகுமா..? என்பது இன்னமும் விளங்காத புதிர்.
மொழிப் போராட்டத்தை கையிலெடுத்து, ஆளும் உரிமையைப் பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் மொழி, இன உணர்வைக் காப்பாற்ற தன்மரியாதையோடு செயல்படத் தொடங்கும் நாள் எந்நாளோ? இரு கழகங்களின் ஆட்சியில் தான் ஆங்கில வழியிலான நர்சரிப் பள்ளிகள் வெகு வேகமாக வளர்ந்தன. தமிழ் உரையாடல்கள் அவ்வப்போது தலைகாட்டும் வண்ணம் தமிழ்த் திரைப்படங்களின் வளர்ச்சி விரைவடைந்ததும் கழகங்களின் காலத்தில்தான். தற்போது கிரந்த எழுத்துக்களைக் கொண்டு தமிழ்மொழியின் கணினிப் பயன்பாட்டு வளர்ச்சியைத் தடை செய்கின்ற முயற்சியும் திமுகவின் காலத்தில்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு தலைமுறையே தமிழ் மொழியை உச்சரிக்கும் திறனற்று, ஆங்கில மோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் மனநிலையை ஊக்குவித்தது திமுகவும் அதன் அரசியல் எதிரியான அதிமுகவும்தான்.
தமிழ்வழியில் பயின்றோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற திமுக அரசின் அறிவிப்பிற்கு நீதிமன்றம் சென்று தடையாணை பெறுகின்ற அளவிற்கு தமிழ் மொழிக்கெதிரான செயல்பாடுகள் அப்பட்டமாகவே தமிழகத்தில் நடைபெறுகின்றன. இதற்கெல்லாம் தமிழகத்தை ஆளுகின்ற, ஆளப்போகின்ற கழக அரசுகள் என்ன சொல்லப் போகின்றன? அண்டை மாநிலங்களான மராட்டியமும், கன்னடமும், மலையாளமும் தனது தாய்மொழியின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் பங்காற்றுகின்ற போது, தமிழகத்தால் மட்டும் இயலாமற்போனது ஏன்? மொழி வழி தேசியம் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டு, அண்டைத் தேசிய இனங்கள், அதனதன் மாநிலத்திற்குள் ஒன்று சேரும்போது தமிழகத்தில் மட்டும் அவ்வாறு இயலவில்லையே என்ன காரணம்? முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி போன்ற உயிராதாரச் சிக்கல்களில் கூட தமிழர்களால் ஒன்று பட இயலாமற் போனதற்கு யாரைக் குற்றம் சாட்டுவது? இவையனைத்திற்கும் காரணம் தன்னல அரசியலன்றி வேறு எது?
முதல் பத்து இடத்தில் தமிழ்மொழி!
உலகின் மிகப் பிரபலமான அகரமுதலிகளுள் முதன்மை இடத்தை வகிக்கும் விக்கி அகரமுதலி தனது அடையாள முத்திரையில் தமிழையும் இடம் பெறச் செய்துள்ளது. தற்போது விக்கி அகரமுதலியில் (http://www.wiktionary.org/) மட்டும் ஒரு இலட்சத்து 92 ஆயிரம் சொற்கள் இடம்பெற்று முதல் பத்து இடங்களுக்குள் தமிழ் இடம் பெற்றுள்ளது (http://meta.wikimedia.org/wiki/Wiktionary#Statistics). இந்திய மொழிகளுள் எவையும் இந்த இடத்தைப் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் பேச உறுதியேற்போம்!
இன்று கணினியில் தமிழ் கோலோச்சுவதற்கு புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களும், ஈழத் தமிழர்களுமே மிக முக்கியக் காரணம். மொழிப் போராடத்தை தீவிரமாக நடத்திக் காட்டிய தமிழ் மண்ணில் பிறந்தோர் தற்போது ஒரு சொற்றொடரைக் கூட முழுமையாகத் தமிழில் பேச இயலவில்லை. இதற்கெல்லாம் காரணம் நம்மை ஆளுகின்ற அரசுகளின் பலவீனமே! இந்தி மொழிப்போர் ஈகியர் நாளிலாவது நாம் அனைவரும் தாய்மொழியில் உரையாட உறுதியேற்போம்.

No comments:
Post a Comment