First Published : 25 June 2014 02:58 AM IST
மழைக் காலங்களில் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவித்தொகையாக தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.
இதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் தகுதியான பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்தார்.
மண்பாண்டத் தொழிலாளர்கள் மழைக்காலங்களில் தொழில் நடத்துவது மிகவும் கடினம். இதனால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, அவர்களுக்கு மழைக் காலங்களில் மட்டும் உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உதவித்தொகைக்கான தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் மு.கருணாகரன் பேசியதாவது: மழைக் காலங்களில் மண்பாண்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 2014-15ஆம் ஆண்டுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடைபெறவுள்ளது.
மண்பாண்டத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த நபர்கள் மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கூட்டுறவுச் சங்கத்தில் பதிவு செய்த உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது இம்மாதம் 26ஆம் தேதி முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை கள ஆய்வு நடத்தப்படும்.
ஆலங்குளம்,அம்பாசமுத்திரம்,நான்குனேரி,தென்காசி,பாளையங்கோட்டை, ராதாபுரம், சங்கரன்கோவில், செங்கோட்டை, சிவகிரி, திருநெல்வேலி, வீரகேரளம்புதூர் ஆகிய 11 வட்டங்களிலும் அந்தந்தப் பகுதி வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை, கதர்கிராமத் தொழில் வாரிய அலுவலர்கள் இணைந்து ஆய்வு செய்வர்.
ஒவ்வொரு குடும்பமாக கணக்கிடப்பட்டு தகுதியான அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.
மண்பாண்டம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் அனைவரும் கணக்கெடுப்பில் தங்களது பெயர் விடுபடாமல் முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் அலுவலர்களும் யாரையும் விடுபடாமல் முழுமையாக கணக்கெடுக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
இக்கூட்டத்தில், கதர் கிராமத் தொழில் வாரிய உதவி இயக்குநர் ராமசுப்பிரமணியன், கோட்டாட்சியர் ரமேஷ், சமூகப் பாதுகாப்பு திட்ட தொழிலாளர் அலுவலர் தமிழ்செல்வி, தொழிலாளர் ஆய்வாளர் லிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.