Friday, 5 June 2015

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 10 கடைசி


திருநெல்வேலி மாவட்டத்தில் பேட்டை, தென்காசி, வீரகேரளம்புதூர், அம்பாசமுத்திரம், கடையநல்லூர், ராதாபுரம் ஆகிய இடங்களில் உள்ள 6 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை இம்மாதம் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பேட்டை, தென்காசி, வீரகேரளம்புதூர், அம்பாசமுத்திரம், கடையநல்லூர், ராதாபுரம் ஆகிய இடங்களில் உள்ள 6 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை இம்மாதம் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதுதொடர்பாக, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எம்.ஆர். அப்துல்காதர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும், பேட்டை, தென்காசி, வீரகேரளம்புதூர், அம்பாசமுத்திரம், கடையநல்லூர், ராதாபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்களுக்கான ஆகஸ்ட் 2015ஆம் ஆண்டுக்குரிய சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த 25ஆம் தேதிமுதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இப்பயிற்சி நிலையங்களில் பொறிப்பகுதி, கம்மியர், மோட்டார் வண்டி, பற்றவைப்பவர், மின்சாரப் பணியாளர், பம்ப் மெக்கானிக் மற்றும் இயக்குபவர், கம்மியர் மின்னணுவியல், கம்மியர் (குளிர்சாதனம்) மற்றும் தட்பவெப்பநிலையக் கட்டுப்படுத்துதல் போன்ற பிரிவுகளில் சேர்க்கை நடைபெறுகிறது.

இங்கு பயிலும் மாணவர், மாணவிகளுக்கு வளாகத் தேர்வு மூலம் உரிய வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது. மேலும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இலவச மடிக்கணினி, இலவச சீருடை, இலவச மிதிவண்டி, இலவச பேருந்து பயண அட்டை, இலவச புத்தகங்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் அனைவருக்கும் கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ. 500 வழங்கப்படுகிறது.

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி வசதி, வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகளுக்கு உணவு வசதியுடன் இலவச தங்கும் விடுதி வசதியும் உள்ளது. கம்பியாளர், பற்றவைப்பவர் போன்ற பிரிவுகளில் சேர 8ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ஆம் வகுப்பு தோல்வி அடைந்திருக்க வேண்டும்.

பிற தொழிற் பிரிவுகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண், பெண் இருபாலரும் அனைத்துப் பிரிவுகளுக்கும் தகுதியுடையோர். கம்மியர் மோட்டார் வண்டி தொழில் பிரிவில் சேரும் ஆண், பெண் பயிற்சியாளர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ராதாபுரம், கடையநல்லூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சிபெற்று தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 0462 - 2342005, வீரகேரளம்புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 04633 - 277962, அம்பாசமுத்திரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 04634-251108, தென்காசி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்துக்கு 04633 - 280933 என்ற தொலைபேசி எண்களில் அலுவலக வேலை நாள்களில் தொடர்பு கொள்ளலாம்.

மாவட்டத்தில் உள்ள எந்தப் பயிற்சி நிலையத்திலும் விண்ணப்பம் பெற்று எந்தப் பயிற்சி நிலையத்திலும் சேரலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை இம்மாதம் 10ஆம் தேதிக்குள் அந்தந்தத் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றார் அவர்.