Sunday, 14 August 2016

விரதம் இருப்பதால் கிடைக்கும் உடல்நல நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா??

நாம் ஆன்மீகம் மற்றும் மூட நம்பிக்கை என நினைத்துக் கொண்டிருக்கும் பல விஷயங்கள் நிஜத்தில் அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த விஷயங்கள் ஆகும். நமது முன்னோர்கள் மறைமுகமாகவும், தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் நம்மிடம் கட்டாயப்படுத்தித் திணித்த சில விஷயங்கள் தான், கால போக்கில் நம்முன் கண்மூடித்தனமான பக்தியாகவும், மூட நம்பிக்கையாகவும் மருவி நிற்கின்றன.
இந்த விஷயங்களில் நம்மில் சிலர் மட்டுமே, அதிலும் பெண்கள் மட்டுமே பெரும்பாலும் கடைப்பிடித்து வரும் விரதம் என்பது மருத்துவ ரீதியாக உடல் செல்கள் புத்துயிர் அடைய உதவும் ஒரு செயல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இன்று நம்மில் பலர் இதை கேலியும் கிண்டலும் செய்து வருகிறோம். இதனால் என்ன பயன் என்று நக்கல் அடித்து வருகிறோம்.
விரதம் பல வகைகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. சிலருக்கு ஒரு வேளை, சிலருக்கு 2 வேளை உணவு, வெறும் பழங்களை சாப்பிடுவது, உப்பு தவிர்த்து இனிப்பு மட்டும் எடுத்துக் கொள்வது, அசைவம் மட்டும் தவிர்ப்பது என்று விரதங்கள் உள்ளது. நாம் சாப்பிடுகிற உணவு செரித்து, உணவில் உள்ள கொழுப்புகள் ஆற்றலாக மாற்றப்பட குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தேவை. ஆனால் இடைவேளை கொடுக்காமல் அடுத்த வேளை சாப்பாட்டை உள்ளே தள்ளுவதால் உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பானது, உடல் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலாக மாறாமல் தடுக்கப்பட்டு அப்படியே தேங்கி விடுகிறது…
உடல்நிலை மாற்றம்
விரதம் இருப்பதனால் உங்களது உடல் மற்றும் மன நிலையில் அமைதி ஏற்படும் மற்றும் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.
நோய் எதிர்ப்பு
உடலில் உள்ள செல்கள் புத்துயிர் பெறுவதனால், உங்களது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உடல் எடை குறைவு
விரதம் இருப்பதனால் ஏற்படும் மற்றுமொரு சிறந்த பயன் என்னவெனில் உங்களது உடல் எடை குறைய இது பெருமளவில்
உதவும்.
மன நிலை மேன்மையடையும்
நீங்கள் விரதம் இருப்பதனால் உங்களது ஞாபக திறன் அதிகரிக்கிறது, ஒருமுகத்தோடு வேளைகளில் ஈடுப்பட விரதம் இருப்பது சிறந்த முறையில் பயனளிக்கும்
உணவு இடைவேளை
தினமும் அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளி கொடுப்பது கூட விரதம் தான்.
வாரம் ஒருமுறை
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது.
மூக்கு முட்ட உண்பது தவறு
வாரத்தில் எல்லா நாள்களும் மூன்று வேளைகளும் வயிறு முட்ட சாப்பிட்டு பழகிவிட்டு, திடீரென ஒரு நாள் விரதத்தை கடைப்பிடிப்பார்கள். அது தவறு.
விரதம் இருக்க வேண்டிய முறை
விரதத்துக்கு 2 நாள்களுக்கு முன்பிருந்தே காரம், குறைவான பருப்பு சாதம் மாதிரி நன்கு வெந்த உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.
புத்துணர்ச்சி
வாரமோ, மாதமோ ஒரு நாள் குறைந்த அளவு உணவை எடுத்துக் கொண்டு விரதம் இருப்பதே நல்லது. அது உடலில் சில செல்களை வளர்ச்சியடைய செய்யும். பழுதடைந்த செல்கள் புத்துயிர் பெறும்.
குழந்தைகள் மற்றும் முதியவர்கள்
குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பணி பெண்கள், கடுமையான வேலைகள் செய்பவர்கள், அடிக்கடி வெளியூர் செல்பவர்கள், நோயாளிகள் தொடர்ந்து மருந்து உட்கொண்டு வருபவர்கள் ஆகியோர் விரதமும் இருக்கக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Saturday, 26 March 2016

ச ரி க ம ப த நி!



Author: -இராஜை என். நவநீதிகிருஷ்ணராஜா


புலவர் அண்ணாமலையார் அகவையில் இளையோராயினும் பெரும்புலவர்கட்கு நிகரான புலமைத்திறன் மிக்கவர் என்பதை ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பர் அறிந்திருந்தார். எனவே, அவர் மீது மிக்க பற்றும் பாசமும் கொண்டு, அவருடன் அளவளாவிக் களித்தார்

புலவர் அண்ணாமலையார் அகவையில் இளையோராயினும் பெரும்புலவர்கட்கு நிகரான புலமைத்திறன் மிக்கவர் என்பதை ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பர் அறிந்திருந்தார். எனவே, அவர் மீது மிக்க பற்றும் பாசமும் கொண்டு, அவருடன் அளவளாவிக் களித்தார். இதனைக் கண்ணுற்ற ஏனைய புலவர்கள் அண்ணாமலை மீது பொறாமை கொண்டனர். ஜமீன்தார், அவர்களுக்கு அண்ணாமலையின் ஒப்பற்ற அறிவுத்திறனை உணர்த்த விரும்பினார்.

தம் அரசவைப் புலவர்களை அழைத்து, "சரிகமபதநி' எனும் தொடரினை யமகமாக வைத்து பாடல் ஒன்றினை இயற்றிடுக' எனக் கூறினார். அவைப் புலவர்கள் அனைவரும் அங்ஙனம் பாடும் வகை அறியாது திகைத்தனர். அண்ணாமலையோ சிறிதும் தாமதிக்காது,



"சரிகமப தநியேற்குச் சந்து சொல்என்

பாள் மதன்ஏ தைக்க மார்பில்

சரிகமப தநிசமனத் தார்க்கருள் சங்

கர எனும் அத்தத்தில் நில்லா

சரிகமப தநிதநிதம் அனையர் அருத்

திடினும் அருந்தாமல் வாடிச்

சரிகமப தநி எனப் பாடுதலைமறந்

தாள் இதயா லய சற் கோவே'



எனப் பாடினார். இதனை ரசித்துக்கேட்ட ஜமீன்தார் மகிழ்வுற, ஏனைய புலவர்களோ காழ்ப்புணர்ச்சி உற்றனர். அந்நிலை அறிந்த அண்ணாமலை பாடலின் பொருள் விளங்குமாறு பதம் பிரித்து விவரிக்கலானார். முதல் அடியில் அமைந்த சரிகம் என்பதற்கு வண்டு எனப் பொருள் உண்டு. எனவே, வண்டே எனக்காகத் தூது செல்வாயாக என விளக்கினார்.

அச்சமயம் அண்ணாமலையின் ஆசான் பெரும்புலவர் முகவூர் இராமசாமிக் கவிராயர் அவ்வரசவைக்கு வந்தார். அவர் அண்ணாமலையை இடைமறித்து, "சரிகம் எனும் சொல்லிற்குக் வண்டு எனும் பொருள் எங்ஙனம் பொருந்தும்? இலக்கியங்களில் எங்கேயாகிலும் சரிகம் எனும் சொல் வண்டு என இடம் பெற்றுள்ளதா? அங்ஙனம் இருப்பின் ஓர் இடத்தினைக் குறிப்பிடுவாயாக' என்றார்.

அதற்கு அண்ணாமலை, மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டில் "சரிகமே சரகமே, சஞ்சாளிகம் சுரும்பு கீடம்' என வந்துள்ளதே' என்றார். இதனைக் கேட்ட ராமசாமிக் கவிராயர், "முழுப்பாடலையும் பாடு' என்றார். உடனே,



"அரியளிஞிமிறு மந்தியறு பதஞ்சிலீ முகஞ்சஞ்

சரிகமே சரகமே சஞ்சாளிகஞ் சுரும்பு கீடம்

பிரமரமாவே கீதம் பிருங்கமே பிரிசம் புள்ளு

வரிகொள் புண்டரீகந் தும்பி மதுப

நாலைந்தும் வண்டாம்'



எனும் பாடலை இனிய ராகத்தோடு பாடினார். உடனே ராமசாமிக் கவிராயர், "சரிகம்' என்பது எங்ஙனம் வண்டு என பொருள்படும்?' என்றார். "சஞ்சரீகம், சரகம் என்பவைதான் வண்டினைக் குறிக்கும் சொற்களாகும். சரிகம் என்பது வண்டினைக் குறிக்கும் சொல்தான். எனவே, வேறு ஒரு பொருள் அமையுமாறு "சரிகமபதநி' எனும் ஏழு எழுத்துகள் வர மீண்டும் ஒரு யமகக் கவி பாடு' என்றார்.

இதனைச் செவிமடுத்த மற்ற புலவர்கள் அண்ணாமலையின் பாடல் தவறாக அமைந்துள்ளதை எண்ணி மகிழ்வுற்றனர். ஆனால், அவர்களது மகிழ்வு வெகுநேரம் நீடிக்கவில்லை. நுண்மாண் நுழைபுலம் மிக்க அண்ணாமலை கிஞ்சித்தும் தயக்கமின்றி "சரிகம்' எனும் சொல்லிற்குச் "சஞ்சரிக்கின்ற மேகம்' எனப் பொருள் கொள்ளலாமே... பாடலை ஏன் மாற்ற வேண்டும் என மிடுக்குடன் கூறினார்.



"இயம்புகின்ற காலத் தெகின மயில் கிள்ளை

பயம் பெறும் கம்பூவை பாங்கி }நயந்த குயில்

பேதை நெஞ்சந் தென்றல் பிரமா மீரைந்துமே

தூதுரைத்து வாங்குந் தொடை'



எனும் இரத்தினச் சுருக்கமாக தூதுக்குரிய பொருள்களுள் மேகம் ஒன்றுதானே! எனக் கூறினார். இவர்தம் பேராற்றலைக் கண்ட இராமசாமிக் கவிராயரோ பூரித்து நிற்க, ஏனைய புலவர்கள் வாயடைத்து நின்றனர். ஜமீன்தாரும் வியப்பின் மேலீட்டால், "இவர் புலவரில் இரட்டியல்லர்; மூவிரட்டி' எனப் பாராட்டி மகிழ்ந்தார்.

-இராஜை என். நவநீதிகிருஷ்ணராஜா

Sunday, 14 February 2016

காவடிச்சிந்து

சிந்து...

சிந்து என்பது ஒரு வகை இசைப்பாட்டு.

இசையின்பமும், சொல்லழகும், தாளக்கட்டும், எளிய நடையுமே சிந்துக்கு அழகும் உயிரும் கொடுப்பவை.

இசைக்கு உயிர் கொடுக்கும் இந்தப்பாட்டு, ஓர் இசைக்கலைஞனின் உயிரைக் காத்திருக்கிறது என்றால் வியப்புதானே.

வியப்புக்குக் காரணம் இதுவரை தமிழுக்காக, தமிழ்ப்பாடலுக்காக தன் இன்னுயிரை நீத்தவர்களைப் படித்திருக்கின்றோம். ஒரு பாடல் உயிரைக் காத்திருக்கிறது என்றால் வியப்புத்தானே. உயிர்காத்த அந்த வியப்பில் தமிழின்பமும் இணைந்திருக்கின்றது. இவ்விரண்டையும் இப்போது இனிதே சுவைப்போம்.

சிந்து இலக்கியம்

சிந்து இலக்கியம் பெரும்பாலும் மூன்று சீர்களைப்பெற்ற அடிகளால் ஆனது. அதனால் ‘சிந்து’ என அழைத்தனர் நம் முன்னோர்கள். பிறகு பல்லவி, அனுபல்லவி, சரணம் என்பவற்றையும் அளவொத்து வரும் அடிகளையும் உடைய இசைப்பாடல்களைச் சிந்து என்று வழங்கினர்.

சிந்துப்பாடல்கள் நாட்டுப்புறப்பாடல்களை அடிப்படையாகக் கொண்டது. இது வழிநடைச்சிந்து, நொண்டிச்சிந்து, காவடிச்சிந்து என மூன்று வகைகளை உடையது.

இவற்றுள் வழிநடைச்சிந்து என்பது நடந்து பயணம் செய்வோர் களைப்புத் தோன்றாமல் இருப்பதற்காகப் பாடும் பாட்டாகும்.

பாரதியார் பாடியுள்ள ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்’ என்ற பாடல் நொண்டிச்சிந்தாகும்.

பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை போன்ற முருகன் திருத்தலங்களுக்கு வேண்டுதலை நிறைவேற்றிச் செல்பவர்கள் காவடி சுமப்பர். அப்போது பாடும் பாட்டே காவடிச்சிந்தாகும். இந்தக் காவடிச்சிந்தை தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன்முதலில் அறிமுகம் செய்தவர் அண்ணாமலை ரெட்டியாராவார்.

கவிராயரின் இலக்கியக்குறும்புகள்

ஒவ்வொருவருக்கும் குறும்புத்தனங்கள் குதூகலிக்கும் பருவம் மாணவப்பருவம். அண்ணாமலைக்கோ இலக்கியக் குறும்புத்தனங்கள் இயல்பாக நீரூற்றாய் பீறிட்டுக்கிளம்பின.

ஒரு சம்பவம்

ஒரு நாள் அவர் வீட்டுப்பாடம் எழுதி அதன்கீழ் ‘தமையபருவதம்’ என்று கையெழுத்திட்டு ஆசிரியரிடம் தந்தார். ‘தமையபருவதம்’ என்பதன் பொருள் ஆசிரியருக்குப் புரியவில்லை.

அண்ணாமலையை அழைத்து ‘தமையபருவதம்’ என்று இதன்கீழ் கையெழுத்திட்டுள்ளாயே அதன் பொருள் என்ன என்று கேட்டார். ‘தமையன்’ என்றால் ‘அண்ணன்’. ‘பருவதம்’ என்றால் ‘மலை’. அண்ணாமலையைத்தான் அவ்வாறு எழுதியுள்ளேன் ஐயா, என்று பணிவுடன் கூறினார்.

மாணவரின் சொற்சாதுரியம் கண்டு வியந்த ஆசிரியர் ‘அப்பா! அண்ணாமலை உன் புலமைக்கு நான் தீனிபோட முடியாது. நீ வேறு எங்கேனும் சென்று படி’ என்று உற்சாகமூட்டி அனுப்பி வைத்தார்.

மற்றொரு சம்பவம்

ஊற்றுமலையரசர் கவிராயரைக்காண வந்தார். அரசரைக் கண்ட அவர் ‘‘வாடா மருதப்பா! வாடிவிட்டேன் பார்த்தாயா!’’ என்று வரவேற்றார்.

அங்கிருந்தவர்கள் திகைப்புற்றனர். அரசரை மரியாதை இல்லாமல் ‘வாடா’ என்று அழைக்கின்றாரே என்று எண்ணினர்.

அவர்களின் திகைப்பையறிந்த கவிராயர் ‘நான் அரசரை மரியாதையில்லாமல் ‘வாடா’ என்று அழைப்பேனா?, ‘வாடா மருதப்பா’ என்றால் ‘வாடாத மருதப்பா’ என்ற பொருள்படவல்லவா அழைத்தேன். இன்பம் துன்பம் எதுவந்தாலும் வாடாமல் காப்பவர் நம் அரசரல்லவா’ என்று விளக்கம் தந்தார்.

இப்படி அவர் சொன்னபோது அவருடைய வயது 26. மரணத்தைத் தழுவிய வயது. இந்த மரண வேளையின்போதும் நகைச்சுவையும், கற்பனையும் அவரிடம் களிநடனம் புரிந்தன. யமகம் திரிபுகள் அணிவகுத்து நின்றன. கவிமலர்கள் மலர்ந்துகொண்டுதான் இருந்தன.

சிந்தையைக் கவர்ந்த காவடிச்சிந்து

இலக்கிய உலகில் காவடிச்சிந்துக்குத் தனியான இடமுண்டு. கவிச்சக்கரவர்த்தி கம்பருக்குப்பின்னும், பாரதியாருக்கு முன்னும் தமிழ்ப்பாட்டு நடைக்குப் புத்துணர்ச்சியை ஊட்டி தமிழை பழகு தமிழாக்கி தமிழ்க்கவிதையுலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் அண்ணாமலை ரெட்டியார். 1865–ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் சென்னிகுளம் என்ற ஊரில் பிறந்தவர். இவரது காவடிச்சிந்து கேட்பவர் எவரையும் ஈர்க்கும் ஆற்றல் பெற்றவை. காவடிச்சிந்து பாடும்பொழுது காவடியாட்டமும் நிகழும்.

அதனால் இவற்றில் தாளச்சிறப்பு மிகுதியாக உண்டு. இதோ ஒரு கழுகுமலை வளத்தைச் சொல்லும் காவடிச்சிந்துப்பாடல்.

பொன்னுலவு சென்னிகுள நன்னகர்
அண்ணாமலைதன்
புந்தியில் மகிழ்ந்து நித்தம் நின்றவன்
– முந்தி
வெந்திறல் அரக்கர்களை வென்றவன் – மயில்
போல ஏனலின் மீது உலாவும் கிராத மாது முன் ஏகியே – அடி
பூவையே உனது தஞ்சம் என்றவன் – அவள்
ஈயும், மாவினையும் மென்று தின்றவன்
மின்னலடி சொன்னமுடி சென்னியணி விண்ணவர்தே
வேந்திரனும் சித்தர்களும் துன்னியே – கதி
வேண்டியே அகத்தில் அன்பு மன்னியே – பணி
வேலவன் கிருபாகரன் குகன் மேவிடும் கழுகாசலம்தனில்
மிஞ்சிய வளங்களை நான் உன்னியே – சொல்ல
ரஞ்சிதமாய்க் கேளடி விற்பன்னியே

என்று தொடங்குகிறது.

‘சென்னிகுளத்து வாழ்பவனும் தமிழறிஞனுமான அண்ணாமலை புனையும் கவிதைகளை மாலையெனத் தோளில் அணிபவரும், வேல் ஏந்தி அரக்கர்களை வென்றவனும், மயில்வாகனனும், வள்ளி மணாளன் முருகன் வாழும் கழுகுமலையின் வளத்தைச் சொல்லுகின்றேன்’ என்று பாடலைத் தொடங்குகின்றார்.

யானைக்கூட்டங்கள் துதிக்கையை நீட்டி இந்திரன் தங்கியிருக்கும் தேவலோகத்தின் தேவதாரு மரங்களைப்பற்றி ஒடிக்கும். பலா மரத்திலுள்ள இனிய கனிகள் சந்திரனில் உராய்ந்து அதனைப் பெருகவிடும். அடுத்து வானளாவிய சந்தன மரம் ஆறுமுகநாதனுக்கு வந்தனம் செய்வது போலத்தன்கிளைகளைச் சாய்த்து வணங்கும்.

கூரிய கண்களைக் கொண்ட வேடுவ மகளிர் தினைப்புனம் காக்கும்போது பறவைகளை விரட்டக் கவணில் ரத்தினக் கற்களை வைத்து வீசி எறிய அவற்றின் ஒளியைக்கண்டு சூரியன் தன் முகத்தைச் சுருக்கிக் கொண்டான். அவன்தேரிலுள்ள குதிரைகள் கண்களை இடுக்கி விழிக்கின்றன.

வான மண்டலம் வரை ஓங்கி உயர்ந்திருக்கும் பல வகை மரங்கள் மண்ணுலகிலிருந்து விண்ணுலகிற்கு ஏறிச்செல்ல அமைக்கப்பட்ட படிக்கட்டுகளைப்போல உள்ளன என்று கமுகு மலையின் வளத்தைக் கற்பனைச் சுவையோடு பாடியுள்ள திறம் இலக்கிய இன்பம் தருவதாகும்.

ஒருமுறை இசைப்பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி ஐ.நா.சபையின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தார். பல நாட்டுத் தலைவர்கள் கூடியிருந்தனர். அவர்கள் முன்னிலையில் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்துப் பாடல்களைப் பாடுகின்றார்.

முடுகு வண்ணத்தில் அமைந்த அந்தப் பாடலைக்கேட்டு அதன் மெட்டில் மயங்கியவர்கள் ‘மீண்டும் பாடுக’ என்று விரும்பிக்கேட்டனராம்.

இதுபோல் ஒருசமயம் தமிழகம் வந்த அமெரிக்கர்கள் காவடிச்சிந்து இசைகேட்டு வியந்து சங்கீதபூஷணம் பேராசிரியர் ராமநாதனை தங்கள் நாட்டுக்கு அழைத்து, அங்கு காவடிச்சிந்து பாடவைத்து இசையின்பத்தை அனைவரும் சுவைத்துள்ளனர்.

இப்படி சிந்தையைக் கவர்ந்த நம் காவடிச்சிந்தை நாமும் சிந்தையில் போற்றுவோம். உயிர்காத்த தமிழ்ப்பாட்டை தரணியெங்கும் பரப்புவோம்.


காவடிச்சிந்து

‘காவடி’ என்ற சொல் ‘காவுதடி’ என்பதன் சுருக்கமாகும். ‘காவுதடி’ என்பதற்குச் ‘சுமக்கும் தடி’ என்று பொருள்.

ஒரு தடியின் இரு நுனிகளிலும் பொருள்களைக் கட்டித் தோளில் தூக்கிச் செல்லும் பழக்கம் மிகப்பழங்காலத்திலேயே உண்டு. இவ்வாறு எடுத்துச்செல்லுதலைக் ‘காவுதல்’ என்பர்.

புறநானூற்றில் உள்ள அவ்வையார் பாடல் ஒன்றில் ‘காவினம் கலனே, சுருக்கினும் கலப்பை’ என இடம் பெற்றுள்ளது.

சிலப்பதிகாரத்தில் இடையர்கள் பொருள்களைத் தூக்கிக்கொண்டு செல்வதைக்குறிக்குமிடத்தில் ‘மறித்தோன் நவியத்து உறிக்கா வாளரொடு’ என அடைக்கலக்காதையில் கூறுவது கவனிக்கத்தக்கது.

இப்படித்தான் தமிழிலக்கிய வரலாற்றில் காவடி இடம்பெற்றுள்ளது. இந்தக் காவடியை மையமாகக் கொண்டு காவடிச்சிந்தை முதலில் இயற்றியவர் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார்.

டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் ‘என் சரிதம்’ என்ற நூலில் அண்ணாமலை ரெட்டியார் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

‘அவருக்கு இலக்கிய இலக்கணங்களில் அதிகம் புத்தி செல்லவில்லை. புதிய செய்யுள் இயற்றுவதிலேயே போய்க்கொண்டிருந்தது. காவடிச்சிந்தின் முறை ஏற்பட்டது இவராலேதான்’.

இக்காவடிச்சிந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுகுமலையில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது.

ஊற்றுமலை ஜமீன்தாராகிய இருதாலய மருதப்பத்தேவர் கழுகுமலை முருகப்பெருமானுக்குப் பிரார்த்தனை செய்து காவடி எடுத்தபோது வழியில் பாடுவதற்காக அண்ணாமலையார் பாடியதே இந்தக்காவடிச்சிந்து.

இதில் 22 பாடல்கள் உள்ளன. விநாயகர் துதி, முருகன் துதி என்பவற்றை முதலில் பெற்று, பின்னர் கழுகுமலை வளம், கோவில் வளம், நகர் வளம், வாவிவளம் என்னும் வருணனைகள் பெற்று, முருகன் துதிகளாகச் சில பாடல்களையும், நற்றாய், பாங்கன், தலைவன், தலைவி கூற்று என்ற அகப்பொருள்பாடல்களையும் பெற்றுள்ளது.

அண்ணாமலையார் ஊற்றுமலை ஜமீன்தாரின் அரசவைப் புலவராக விளங்கியவர். அப்போது ஜமீன்தாரின் குலதெய்வமாகிய வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணன் மீது வீரையந்தாதி, வீரைப்பிள்ளைத்தமிழ் முதலிய சிற்றிலக்கியங்களையும், சங்கரன்கோவில் கோமதியம்மாள் மீது சங்கரன்கோவில் திரிபந்தாதிகளையும் படைத்தளித்தார். எனினும் அவரை கவிராயர் என்ற புகழ் மகுடத்தைச் சூட்டியது காவடிச்சிந்துப்பாடல்களேயாகும்.

உயிர்காத்த தமிழ் மெட்டு

19–ம் நூற்றாண்டில் மிகச்சிறப்பான நாடக இசைக்கலைஞர்களுள் ஒருவர் அவர். நாடகங்களில் ஆர்மோனியம் வாசித்து பின்பாட்டுப்பாடியும் மக்களை இசையால் ஈர்த்தவர். பிறப்பால் மாற்று மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கழுகுமலை முருகனிடம் ஈடுபாடு கொண்டவர். அவர் பாடிய முருகனைப் பற்றிய பக்திப்பாடல்களைக் கேட்டு உருகாதவர் இல்லை. ஒரு வழக்கில் அவர் மரண தண்டனை பெறுகிறார். சிறை அதிகாரி ‘உன் கடைசி விருப்பம் என்ன?’ என்று கேட்டார்.

‘நான் என் ஆர்மோனியத்தில் சற்றுநேரம் முருகப் பெருமானைப் பற்றிய காவடிச்சிந்து பாடவேண்டும்’ என்றார்.

அவர் விரும்பியபடியே அனுமதி கிடைத்தது.

சுருளி மலை மீதில் மேவும் சீலா – உனைத்
தோத்திரத்தேன் சுப்ரமண்ய வேலா – பசுந்
தோகைமயில் மீதில் ஏறி
வாருடனே காத்தருளும் அய்யா – முருகைய்யா

என்று தொடங்கும் பாடலை ஊணுருகப் பாடிக்கொண்டே இருந்தார்.

சிந்தையைக் கவர்ந்த சிந்து இசையில் சிறை அதிகாரிகள் அனைவரும் மெய் மறந்தனர். பின்னர் அவரைத் தூக்குமேடைக்கு அழைத்துச்செல்ல முயன்றனர். உடனிருந்த வழக்கறிஞர், ‘அவரை தூக்கிலிடுவதற்கான காலம் கடந்து விட்டது. சட்டப்படி இனி அவரைத்தூக்கிலிட முடியாது’ என்று கூறி அவரை விடுதலைபெறச் செய்தார்.

அப்படி அவரின் உயிர்காத்த தமிழ்மெட்டு தான் ‘‘தெள்ளு தமிழுக்கு உதவும் சீலன்’’ என்று தொடங்கும் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து மெட்டில் அமைந்தது.

‘உயிர்காத்த மெட்டு’ என்று இன்றளவும் அவர் சார்ந்து வாழும் மக்கள் போற்றுகின்றனர். சிந்துவையும் பாடி மகிழ்கின்றனர்.

தினத்தந்தி.

Saturday, 9 January 2016

நமச்சிவாயக் கவிராயர்

நமச்சிவாயக் கவிராயர் என்பவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் எனும் ஊரில் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கவிஞர். மாதவ சிவஞான யோகியின் தந்தையாகிய ஆனந்தக்கூத்தரின் உடன்பிறந்தவர். பாவநாசம் உலகம்மை மீது பேரன்பு கொண்டு நாள்தோறும் வழிபட்டு வந்தவர். ஒருமுறை உலகம்மை அவருடைய மகளாக வந்து உணவு படைத்தாளாம். கவிராயர், நோய்வாய்ப்பட்டு தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றபோது, உலகம்மை தடுத்து அருள்புரிந்தார் என்றும் கூறுவர்.

இவர் தினந்தோறும் அர்த்தசாமத்தில் பாவநாசத் திருக்கோயிலுக்குச் சென்று அம்பிகையைத் தொழுதுவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது பரவசத்தில் பக்திப் பாடல்களைப் பாடிகொண்டே வருவார். ஒரு நாளிரவு இவர் பாடியவாறே வீடு திரும்பும்போது அம்பாள் இவர் பாடல்களைக் கேட்டவாறே இவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தார். கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சில் அவர் பாடி வரும்போது தெரித்து அம்பிகையின் மீது பட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள். மறுநாள் காலை அர்ச்சகர் அம்பாள் ஆடையில் படிந்திருந்த எச்சில் திவலைகளைக் கண்டு மனம் வருந்தி, மன்னனிடம் முறையிட, அரசனும் பிராயச்சித்தம் செய்யப் பணித்து, இப்பாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிப்பதாகக் கூறினான். அன்றிரவு மன்னன் கனவில் அம்பிகை தோன்றி, நடந்ததைக் கூறினாள். விழித்த மன்னன் மறுநாள் காலை கவிராயரை அழைத்து வரச்செய்து, அவருடைய பக்தியை அளவிட எண்ணி, அம்பாளின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்துப் பொன் கம்பிகளால் சுற்றிக்கட்டி, அப்பூச்செண்டு வருமாறு பாடக் கவிராயரைப் பணித்தான். அவரும் கலித்துறையில் அந்தாதி யொன்றை அமைத்துப் பாடினார். அம்பிகையின் கரத்தில் கட்டப்பட்டிருந்த பொன் கம்பிகள் கவிக்கொருச் சுற்றாக அறுந்து கவிராயரின் பெருமையை வெளிப்படுத்தியது.

இவர் சிங்கை உலகம்மை பிள்ளைத் தமிழ், சிங்கை உலகம்மை கலித்துறை அந்தாதி, சிங்கை உலகம்மை கொச்சகக் கலிப்பா, சிங்கை உலகம்மை பதிற்றுப்பத்து அந்தாதி, சிங்கை உலகம்மை சந்த விருத்தம், சிங்கை சிலேடை வெண்பா ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இந்நூல் சிங்கை பிரபந்தத் திரட்டு என்கிற பெயரால் அழைக்கப்படுகின்றன.

“பாபநாசம் என்னும் சிங்கைப் பிரபந்தத் திரட்டு!”

அந்த நூல் ஆறு பிரபந்தங்கள் அடங்கியது. அவற்றுள் ஒரு நூல், 'சிங்கை உலகம்மை கலித்துறை அந்தாதி' ஆகும். அந்த நூல்களை இயற்றியவர், நமசிவாயக் கவிராயர் ஆவார். அவர் திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனப் புலவர், 'திராவிட மாபாடிய ஆசிரியராகிய மாதவச் சிவஞான யோகிகளின் சிறிய தந்தையார் ஆவார்.

அவர் அருளிய, உலகம்மை கலித்துறை அந்தாதியில் உலகம்மை தமக்கு அருள் புரிய வில்லையே என்ற ஏக்கத்துடன், 'வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவதற்கே உரிய இந்த உடல் சுடுகாட்டு நெருப்புக்கு உரிய விறகாக இருக்கிறதே!' என்று பாடுகிறார்.

‘பால் நினைந்தூட்டும் தாய்' என்றார் மாணிக்க வாசகர். சேக்கிழார் “எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்து அருளி, ‘உண் அடிசில்’ என உமையம்மை ஊட்டினார்' என்றார். அம்மை ஊட்டிய பால் வழிந்த திருவாயுடன் நின்ற மகனை நோக்கித் தந்தையார், “நீ யார் அளித்த பால் உண்டாய்?” எனக்கேட்டார்.

சிவஞானம் பெற்ற மைந்தர், “தோடுடைய செவியன்” என்ற தொடரால் அம்மையைப் போற்றி, அவர் உள்ளங்கவர் கள்வனாகிய சிவபெருமானே, என் உள்ளத்தையும் கவர்ந்தான்; அவனே பிரமாபுரம் மேவிய பெம்மான்! என்று பாடினார்

அவர் பாடலைக் கேட்ட விண்ணவர் மலர் மழை பொழிந்தனர்; மண்ணவர் வாழ்த்தொலி வழங்கினர்; “காழியர் தனமே; கவுணியர் தவமே; மறை வளர் திருவே; வைதிக நிலையே; புகலியர் புகலே; புண்ணிய முதலே; கலைவளர் மதியே;'' என்றெல்லாம் போற்றினர்!

அம்மை அளித்த பாலமுதினை உண்ட பொழுதே, ‘சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம், பவம் அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம், உவமை இலாக் கலைஞானம், உணர்வரிய மெய்ஞ்ஞானம் ஆகியவற்றை சம்பந்தச் சிறுவர் பெற்றார்!

இந்த நிகழ்ச்சியை மனக்கண்ணால் கண்ட விக்கிரம சிங்கபுரம் நமசிவாய தேசிகர் அம்மை பாலமுதினை திருஞான சம்பந்தருக்கு அளித்த போது, அவர் திருவாய் ஓரத்தில் வழிந்த செய்தியை, ‘சந்தன பாரத் தனம்பிதிரோட’ என்று பாடுகிறார். இவ்வாறு வழிந்தமையால் சீர்காழியில் ஒருபகுதி தென்பாதி என்ற பெயர் பெற்றது, சம்பந்தர் உண்ட பால் பாதியும், அவர் பாடிய தமிழ்த்தேன் பாதியும் வழிந்தமையால் அப்பகுதி தேன்பாதி எனப் பெற்றது.

அப்பாலைப் பருகியமையால் அவருடைய அவா அகன்று நீங்கியது!
“அவாஎன்பது எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து”

என்ற குறட்கருத்தின் படி, பிறப்புத் துன்பம் நீங்கியது! இதனைக் கவிஞர், “அவாஅறப் பால்கொடுத்தாய்!” என்று பாடுகிறார். இதனைக் “கவுணியர்க்குப் பால் சுரந்த கலசம் போற்றி” என்று திருவிளையாடல் புராணம் பாடுகிறது.

இதனை “கொங்கை வள்ளத்துப் பால் கிண்ணத்திலே, சைவக் கன்றுக்கு வார்த்தவள்” என்று நமசிவாயக் கவிராயர் பாடுகிறார். மேலும் அன்னை வழங்கிய பால், வேதம் ஓதும் அந்தணர் மைந்தனாய்த் தோன்றிய திருஞான சம்பந்தருக்கும், அவர் வழியில் வேத நெறியையும் சைவப்பயிரையும் வளர்த்த சிவனடியார் திருக்கூட்டமரபு வளர்வதற்கும் காரணமாயிற்று என்பதை “நீதி மறைக்குல சந்ததிக்கு உணப் பால் கொடுத்தாய்” என்று அவரே பாடுகிறார்.

“வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க
பூத பரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தருளும்
சீத வளவயற் புகலி திருஞானசம்பந்தர்”

என்று பாடிய சேக்கிழார் வழியில், நமசிவாயக் கவிராயர் பாடினார். அந்தப் புகழ்பெற்ற சிவனடியார் மரபில் தானும் பிறந்து வளர்ந்தது உண்மையானால், ஆசை அற்றுப் பாசம் விட்டு, சிவபூசை பண்ணும் நெறியில் இன்னும் ஊக்கத்துடன் விளங்கத் தொடங்கவில்லையே! என்று ஏங்குகிறார்.

சிவனருள் பெற்று, அவா அறுத்து வளரவேண்டும் என்று அன்று திருஞானசம்பந்தருக்குப் பால் கொடுத்த உமையம்மை உலகம்மையாய் விக்கிரமசிங்க புரத்தில் எழுந்தருளிக் காட்சி தருகிறாள். “அந்த அடியார் போல் வாழாமல் வீண் ஆசாபாசங்கள் என்னும் இரும்புச் சங்கிலியால் பிணிக்கப் பெற்று, வெற்றுடம்பை உண்டுடுத்துப் பேணி வளர்த்து இறுதியில் சுடுகாட்டில் எரியும் பெரு நெருப்பில் விறகாகும் பிணமாய் அடியேனும், அதனை வளர்க்கும் நெய்யாக என் மனமும் ஆனோமே!” என்று ஏங்கிப் பாடுகின்றார்; அந்தப் பாடல்:

“சந்தன பாரத் தனம்பிதி ரோடத் தமிழ்மறைச்சம்
பந்தன் அவாஅறப் பால்கொடுத் தாய்விருப் பாய்நிகள
பெந்தன மாம்இச் சடம்சுடு காட்டுப் பெருநெருப்புக்(கு)
இந்தன மாகத் தமியேனும் நெஞ்சும் இருந்தனமே!”

என்பதாகும். இந்தனம் என்ற சொல்லின் பொருள் விறகு. இந்த விறகு வளர்ந்து எரிபொருள் ஆவது போல், ‘இந்த உடம்பும் வளர்ந்து எரியும் விறகானதே’ என்ற கவிஞரின் எண்ணம் இதைப் படிக்கும் நமக்கும் உண்டாகிறது.