Sunday, 22 March 2015

இரா.உ.விநாயகம் பிள்ளை-நாத தனுமனிஷம்

‘மஞ்சரில விளாத்திகுளம் சாமியப் பத்தி வீரகேரளம்புதூர் விநாயகம் பிள்ளைன்னு ஒருத்தர் எழுதியிருக்காரு. படிச்சு பாருங்க. நல்லா இருக்கு’. வேறு ஏதோ பேசிக் கொண்டிருக்கும் போது தற்செயலாக இதை சொன்னார் நண்பர் ஜெயமோகன். ‘மோகன், அது வேற யாருமில்ல. எங்க பெரியப்பா’ என்றேன். விளாத்திகுளம் சாமியைப் பற்றி மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ மனிதர்களைப் பற்றி, எவ்வளவோ விஷயங்கள் பற்றி விநாயகத்துப் பெரியப்பா சொல்லி நான் தெரிந்திருக்கிறேன்.

விநாயகத்துப் பெரியப்பா ஒன்றும் எனக்கு ரத்த உறவு இல்லை. ஆனாலும் பெரியப்பா. இப்படி பல உறவுகள் எனக்கு உண்டு. ஐம்பதுகளில் நெல்லை சகோதரர்கள் என்றழைக்கப்பட்டு கர்நாடக இசைக் கச்சேரிகள் செய்து கொண்டிருந்த எனது பெரியப்பாக்களோடு மிருதங்கம் வாசிப்பவராக அறிமுகமாகி எங்கள் குடும்பத்துக்குள் வந்தவர்தான் விநாயகத்துப் பெரியப்பா. அதன் பின் தாத்தாவுக்கும், ஆச்சிக்கும் மற்றொரு மகனாக ஆகியிருக்கிறார். எனது சொந்த பெரியப்பாக்களை விட நான் அதிகமாக பெரியப்பா என்றழைத்தது விநாயகத்துப் பெரியப்பாவைத்தான். எப்போதுமே வெள்ளை அரைக்கைச் சட்டையும், வேட்டியும்தான் உடை. மாநிறம். சற்று பருமனான உடல்வாகு. மீசையில்லாத முகத்தில் சிரிக்கும் போது சற்றுத் தூக்கலான முன்பல் இரண்டும் பார்ப்பதற்கு அழகாகவே இருக்கும்.

ரசிகமணி டி.கே.சி.யுடன் நெருங்கிப் பழகிய பெரியப்பாவைப் போன்ற ஒரு கலா ரசிகரை என் வாழ்க்கையில் நான் பார்த்ததில்லை. புகழ் பெற்ற தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். அந்த வகையில் தமிழறிஞர்கள் கி.வா.ஜ, திருக்குறள் முனுசாமி போன்றோரின் நண்பர். எந்த ஒரு சூழலுக்கும் ஒரு குறள் சொல்லுவார். ‘இதுக்கும் ஒரு கொறள் வச்சிருப்பேளே’ என்று கேட்டால், ‘என்ன செய்யச் சொல்லுதெ? அந்த பேதீல போவான் எல்லா எளவுக்கும்லா எளுதி வச்சிருக்கான்’ என்பார். மிருதங்கம், ஹார்மோனியம் போக தானே உருவாக்கிய ஒற்றைக் கம்பி வாத்தியம் ஒன்றும் வாசிப்பார். அந்த வாத்தியத்தை பத்திருபது நிமிடங்களுக்குள் உருவாக்கி வாசிப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஒற்றைத் தந்தியில் அத்தனை ஸ்வரங்களையும் கொண்டு வந்து இசைப்பது அவ்வளவு எளிதில்லை.

திருநெல்வேலிக்கு பெரியப்பா வந்தால் குறைந்தது நான்கு நாட்களாவது எங்கள் வீட்டில் தங்குவார். அந்த நான்கு நாட்களும் வீடே நிறம் மாறிவிடும். காலையில் கொஞ்சம் தாமதமாகவே குளிக்கச் செல்வார் பெரியப்பா. அரைத்தூக்கத்தில் இருக்கும் என்னை ஹார்மோனியமோ, மிருதங்கமோ வந்து வருடி எழுப்பும். ஹார்மோனியம் வாசிக்கும் போது பெரியப்பாவிடம் ஒரு கனிவு தெரியும். சித்தரஞ்சனி ராகத்தில் ‘நாத தனுமனிஷம்’ கீர்ததனைதான் பெரியப்பா அடிக்கடி வாசிப்பது. சில சமயங்களில் இருமலோடு பாடுவதும் உண்டு. சித்தரஞ்சனி ஒரு சுவாரஸியமான ராகம். அதில் மேல் ஸட்ஜமத்துக்கு மேலே உள்ள ஸ்வரங்களுக்கு வேலை இல்லை. அந்தச் சின்ன ஏரியாவுக்குள் பெரியப்பா சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக வாசித்துக் கொண்டிருப்பார். தூக்கம் கலையாத கண்களுடன் அவரருகில் சென்று உட்காருவேன். ஹார்மோனியத்திலிருந்து கையை எடுக்காமலேயே, அந்த சமயத்தில் தான் வாசித்துக் கொண்டிருக்கும் பிடிமானத்தை கண்களால் எனக்குக் காட்டிச் சிரிப்பார்.

பெரியப்பாவின் ஹார்மோனிய வாசிப்புக்கு நான் பலமுறை மிருதங்கம் வாசித்திருக்கிறேன். அவரது வேகத்துக்கும், லயிப்புக்கும் என்னால் ஈடு கொடுக்க முடிந்ததே இல்லை. கொஞ்ச நேரத்திலேயே நைஸாக மிருதங்கத்தை பெரியப்பாவின் பக்கம் தள்ளிவிட்டு நான் ஹார்மோனியத்தை எடுத்துக் கொள்வேன். மிருதங்கம் கையில் வந்தவுடன் பெரியப்பா ஆளே மாறிவிடுவார். அசுர பலம் வந்து வாசிப்பார். அவர் வாசிப்பில் மிருதங்கம் பேசும். அழும். சிரிக்கும். அதற்குப் பின் மிருதங்கத்திலிருந்து பெரியப்பா வெளியே வர ரொம்ப நேரம் ஆகும். ‘சாமியாடிட்டேளே பெரிப்பா’ என்பேன். ‘வாசிச்சா அப்படித்தான்யா வாசிக்கணும். இல்லென்னா அதத் தொடவே கூடாது’ என்பார். அவரைப் போலவே என்னையும் அந்த இரண்டு வாத்தியங்களிலும் தயார் செய்து விடவேண்டும் என்று பெரியப்பா விரும்பினார். நான் தான் அதற்கு சரியாக ஒத்துழைக்கவில்லை. இதில் என் மேல் அவருக்கு எப்பொழுதும் ஒரு தீராத வருத்தம் இருந்தது. ‘எல்லாருக்கும் இது வராது. ஒனக்கு வருது. ஆனா வாசிக்க ஒனக்கு வலிக்கி’. பாளயங்கோட்டையில் ஒரு கச்சேரியில் நான் மிருதங்கம் வாசித்து விட்டு திரும்பும் போது உடன் வந்திருந்த பெரியப்பா சலிப்புடன் இதை சொன்னார்.

பெங்களூர் சுந்தரம் அவர்களின் ‘ஆனந்த ரகஸ்யம்’ புத்தகத்தை வைத்துக் கொண்டு நானாக சில ஆசனங்களை பயின்று கொண்டிருந்தேன். ‘பொஸ்தகத்த பாத்துல்லாம் ஆசனம் போடக் கூடாதுய்யா’ என்று சொல்லி, முறையாக எனக்கு யோகாசனம் கற்றுக் கொடுத்த ஆசான் அவர். எனக்கு தெரிந்து அப்போதே அவர் எழுபதை நெருங்கியிருந்தார். ஆனால் அந்த வயதிலும் சிரசாசனம் உட்பட கடினமான ஆசனங்களைப் போட்டு காண்பித்து என்னை அசரடித்தார். இத்தனைக்கும் வாதம் காரணமாக அவரது இரண்டு கால்களும் சற்று வளைந்திருக்கும். அந்தக் கால்களை வைத்துக் கொண்டு அவர் நடக்கும் தூரம் நம்ப முடியாதது. பெரியப்பாவுக்கு மாலையிலும் ஒரு குளியல் உண்டு. குளித்து முடித்த பின் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து நடுவகிடெடுத்து தலை வாருவார். மெல்ல நடக்க ஆரம்பிப்பார். இரண்டு மணிநேரம் கழித்து நெற்றி நிறைய திருநீறுடன் வீடு திரும்புவார். நெல்லையப்பர் கோயிலைச் சுற்றி வந்திருக்கும் களைப்பு அவர் உட்காரும் போது நமக்கு தெரியும்.

‘நானேதானெ இங்கெ வந்துக்கிட்டிருக்கென். நீ ஒரு நாளைக்கு வீரகேரளம்புதூர் வாய்யா’. ரொம்ப நாட்கள் சொல்லிக் கொண்டிருந்த பெரியப்பாவுக்காக ஒரு மாலையில் அங்கு சென்றேன். சந்தோஷத்தில் பெரியப்பாவின் வீட்டிலுள்ள அனைவரும் உபசரித்தார்கள். தடபுடலான இரவு உணவுக்குப் பின் சுகமான காற்றடிக்க இருவரும் சிறிது தூரம் நடந்தோம். ஊரே அடங்கிய அமைதியான பொழுதில் வீட்டு வாசலறையில் வந்து உட்கார்ந்தோம். பெரியப்பா ‘அந்த பொட்டிய எடு’ என்றார். பெரியம்மை ஒரு பழைய அழுக்குப் பெட்டியை எடுத்து கொடுக்க, அதை தன் பக்கம் நகர்த்தி உள்ளுக்குள்ளிருந்து நிறைய கேஸட்டுக்களை எடுத்தார். எல்லாமே பழையவை. ஒரு மோனோ டேப்ரிக்கார்டர் அருகில் இருந்தது. ‘எய்யா, இத கொஞ்சம் கேளேன்’. கரகரவென கேஸட் ஓடத் துவங்கியது. ஆல் இண்டியா ரேடியோவின் ஒலிபரப்பை பதிவு செய்து வைத்திருக்கிறார் என்பது புரிந்தது. மயக்கும் குழலிசை. ‘என்ன ராகம் தெரியுதா?’. சற்று நேரம் யோசித்து விட்டு மால்கௌன்ஸ் மாதிரி இருக்கு’ என்றேன். ‘அதேதான். எப்படி வாசிச்சிருக்கான் பாத்தியா?’ பன்னாலால் கோஷ் என்னும் மேதையை அந்தப் பழைய கரகர ஒலிபரப்பில் அன்றைக்குத்தான் முதன்முறையாகக் கேட்டேன். ‘பேஸ் வாசிக்கறதுக்காக தான் விரல அறுத்து ஆபரேஷன் செஞ்சுக்கிட்ட சண்டாளன்யா இவன்’. இந்த மாதிரி ஏதாவது சொல்லும் போது உணர்ச்சி மிகுதியில் பெரியப்பாவின் குரல் உடையும். அப்போது அவர் அழுகிறாரோ என்று நமக்கு சந்தேகம் வரும். பன்னாலால் கோஷைத் தொடர்ந்து படே குலாம் அலிகானும் அன்றைய எங்களின் இரவை நிறைத்தார்.

ஜிம் ரீவ்ஸின்(Jim reeves) குரல் விநாயகத்துப் பெரியப்பாவுக்குப் பிடித்தமான ஒன்று. ‘இந்த ரீவ்ஸ் பய அடியோஸ் அமிகோஸ்னு பாடும் போது நம்ம தோள்ல கையப் போட்டுக்கிட்டு காதுக்குள்ள வந்து பாடுற மாதிரி இருக்குல்லா’ என்பார். லாரல் ஹார்டி இரட்டையர்களும் அவருக்கு பிடித்தமானவர்கள். சில வசனங்களை மீண்டும் மீண்டும் சொல்லி ஒரு குழந்தை போல ரசித்துச் சிரிப்பார். வீரகேரளம்புதூர் என்னும் சின்னஞ்சிறு கிராமத்தில் இருந்து கொண்டு இவர் எப்படி எல்லாவற்றையும் ரசிக்கிறார் என்று ஆச்சரியமாகவே இருக்கும். நான்கைந்து ஆண்டுகளாகச் சந்திக்கும் வாய்ப்பில்லாமல் இருந்தேன். அவ்வப்போது போஸ்ட் கார்டில் நுணுக்கி எழுதி அனுப்புவார். அதில் ஒரு குறுங்கவிதையோ, சங்கீத சமாச்சாரமோ, குற்றாலச் சாரல் பற்றிய செய்தியோ இருக்கும். அந்தச் சின்ன அஞ்சலட்டைக்குள் அதிக பட்சம் எவ்வளவு எழுத முடியுமோ, அவ்வளவு எழுதியிருப்பார். ‘முதுமை காரணமாக இப்போதெல்லாம் எங்குமே செல்ல முடிவதில்லை. வீரகேரளம்புதூரிலேயே இருக்கிறேன். நீ இங்கு வா. ஆசி’ என்றெழுதிய ஒரு கார்டு சென்ற ஆண்டில் வந்திருந்தது. ஒரு சில வாரங்களில் வீரகேரளம்புதூர் செல்லும் வாய்ப்பு வந்தது. கொஞ்சம் இளைத்திருந்த பெரியப்பா என்னைக் கண்டது எழுந்திருக்க முடியாமல் எழுந்து வந்து கட்டியணைத்து கன்னங்களில் மாறி மாறி முத்தினார்.

‘மிருதங்கத்த எப்பவோ கைகளுவிட்டெ. ஆர்மோனியமாது வாசிக்கியாய்யா’ என்று கேட்டார். ‘அப்பப்பொ வாசிக்கென். அன்னைக்குக் கூட நாத தனுமனிஷம் வாசிச்சென்’ என்றேன். ‘நானும் அன்னைக்கு டெலிவிஷன்ல சின்னப்பா காதல் கனிரசமே பாடும் போது ஒன்னத்தான் நெனச்சுக்கிட்டென்’ என்றார். சில மாதங்களுக்கு முன் என் தம்பி என்னிடம் இனி நாம் வீரகேரளம்புதூருக்குச் செல்லும் அவசியமில்லை என்ற அர்த்தத்தில் விநாயகத்துப் பெரியப்பாவைப் பற்றிய சேதி சொன்னான். அதுவே அவனுக்கு தாமதமாக வந்த செய்தி. அன்றைக்கு முழுக்க என் மனதில் நாததனுமனிஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது.

ஜெயமோகன்..

இது தமிழர்

முதல் இரண்டு தமிழ்ச்சங்கங்களில் உருவான பல அரிய தமிழ்க்கலை நூல்களை தின்றழித்த தாமிரபரணியின் கரையில்தான் இந்த தமிழ்ப்புரட்சியும் நடந்து வருகிறது. காடாகக் கிடந்த 120 ஏக்கர் பரப்பை செதுக்கிச் செப்பனிட்டு, ‘தமிழூர்’ என்ற ஒரு கிராமத்தையே நிர்மாணித்திருக்கிறார் ச.வே.சு என்று அன்பாக அழைக்கப்படும் தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன். தமிழின் தொன்மத்தை நிறுவும் பல்வேறு ஆராய்ச்சிகள் தமிழூரில் நடந்து வருகின்றன. 25 ஆயிரம் அரிய நூல்களைக் கொண்ட மூன்று நூலகங்கள் எந்நேரமும் ஆய்வு மாணவர்களால் நிரம்பி வழிகின்றன.
முழங்காலுக்கு மேலான வேட்டிக்கட்டு, தோளில் ஒரு துண்டு... டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஏதுமறியாத கிராமத்துப் பெரியவரைப் போல காட்சியளிக்கிறார் ச.வே.சு. ‘தமிழ்ப்பழம்’ என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். வீரகேரளம்புதூரைச் சேர்ந்த இவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பும், கேரள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் பணி செய்ய ஆரம்பித்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முதல் இயக்குனராக உயர்ந்தவர். ‘‘ச.வே.சு சிலப்பதிகாரம் நடத்தினால் வகுப்பறை முழுவதும் தமிழும் இசையும் ததும்பி நிற்கும்’’ என்கிறார்கள் அவரது மாணவர்கள்.

ஓய்வுக்குப் பிறகு, தம் சொந்த ஊருக்கு அருகிலேயே தமிழூரை நிர்மாணித்து, சங்க இலக்கிய ஆய்வுகள், இலக்கிய உரைகள் என எந்நேரமும் தமிழும், இலக்கியமுமாகவே வாழ்கிறார். 84 வயதான இவரது பணியை மெச்சி, சாகித்ய அகாடமியின் பாஷா சன்மான் உள்பட ஏராளமான விருதுகள் கிடைத்துள்ளன.

‘‘இது எனது நெடுநாள் கனவு. உலகில் வேறெந்த சமூகத்துக்கும் தம் மொழியின் பால் இவ்வளவு அலட்சியம் இல்லை. தமிழ் பிழைப்புக்குரிய முதலீடாக இங்கே மாறிவிட்டது. தமிழாசிரியர்கள் கூட தங்கள் பிள்ளைகளை தமிழ் படிக்க வைக்க தயங்குகிறார்கள். சங்க இலக்கியங்கள்தான் நம் மொழியின் செழுமைக்கும், தொன்மைக்கும் சான்று. அதை சர்வதேச தளத்தில் நிறுவுவதற்கான ஆய்வுகள், ஏற்பாடுகள் மிகவும் குறைவாகவே நடக்கின்றன. நிறைய வரலாறு பதிவு செய்யப்படாமல் கிடக்கிறது’’ என்று வருந்துகிற ச.வே.சு, இதுவரை 170 நூல்களை எழுதியிருக்கிறார்.

ஆலங்குளத்துக்கும் தென்காசிக்கும் இடையில், பூலாங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கிறது தமிழூர். அரசுப்பதிவேடுகளும் இப்பெயரை அங்கீகரித்துள்ளன. ச.வே.சு இங்கு வரும்முன்பு, அத்தியூத்து கிராமத்தின் ஒரு அங்கமாக இப்பகுதி இருந்தது. 1985ல் இந்த இடத்தை வாங்கிய ச.வே.சு, இதை ஒரு கல்வி கிராமமாக மாற்றும் எண்ணத்தில் 35 ஏக்கர் நிலத்தை ஒரு பொறியியல் கல்லூரிக்குக் கொடுத்தார். அருகில் ஒரு வேளாண்மைக் கல்லூரியையும் தொடங்கினார். தென்னந்தோப்பு, மாந்தோப்புகளை உருவாக்கினார். உலகத்தமிழ் கல்வி இயக்கம் என்ற அமைப்பு தொடங்கி, சர்வதேச அளவில் தமிழ் பற்றி ஆய்வுசெய்யும் மாணவர்களை ஒருங்கிணைத்தார். குடியிருப்புகளையும் உருவாக்கினார். தற்போது வேளாண் கல்லூரி செயல்படவில்லை. குடியிருப்புகளில் ஆய்வு மாணவர்கள் தங்கியிருக்கிறார்கள். ஊரின் நடுவில் தனக்கென ஒரு வீட்டையும் கட்டியிருக்கிறார். வீட்டின் பெயர் தமிழகம்.


‘‘தமிழ்ல இருக்கிற பழமையான இலக்கியங்களை வெளிக்கொண்டு வரவேண்டிய கடமை என்னைப் போன்றவங்களுக்கு இருக்கு. இலக்கியங்கள்தான் நமக்கு சொத்து. ஆனால், மொழி மேம்பாட்டுக்கான ஆதரவும் இங்கே குறைவா இருக்கு. அந்தக்காலத்தில் தமிழ்ப்பணிக்காக பெரும் செல்வங்களைக்கூட இழந்தவர்கள் இருந்தார்கள். எங்கள் வீரகேரளம்புதூரை உள்ளடக்கிய ஊத்துமலை ஜமீன் இருதாலய மருதப்பர், 37 கவிஞர்களைக் கொண்டு ஊத்துமலை பிரபந்த திரட்டு ஒன்றை உருவாக்கினார். அந்தத் திரட்டின் ஒரு பிரதியை பொக்கிஷம் போல பாதுகாத்து வைத்திருக்கிறேன். காவடிச்சிந்து இயற்றிய சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் போன்ற பலரை அரவணைத்துப் பாதுகாத்தார் மருதப்பர். நெல்லைக்கு வந்த உ.வே.சாமி நாதய்யருக்கு ஒரு மாட்டுவண்டி நிறைய ஓலைச்சுவடிகளை தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தார். அதில்தான் பத்துப்பாட்டும், குறுந்தொகையும் கிடைத்தன. மருதப்பரைப் பற்றி படித்தபிறகுதான் தமிழில் எனக்கு ஈடுபாடு வந்தது.

எனக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது. இளைஞர்கள் கையில் இந்த வேலைகளை ஒப்படைக்க வேண்டும். மாதம்தோறும் ஏதேனும் ஒரு கருத்துருவை முன் வைத்து கருத்தரங்கங்களை நடத்துகிறேன். சிறந்த கட்டுரைகளைத் தேர்வுசெய்து பரிசு வழங்குகிறேன். இப்பணியை இன்னும் விரிவுபடுத்த வேண்டியுள்ளது’’ என்கிற ச.வே.சுவின் துணைவியார் பார்வதி அம்மாள். 2 மகன்கள். மூத்தவர், பள்ளி ஆசிரியர். இளையவர், கோவை வேளாண் கல்லூரியில் பேராசிரியர்.

தற்போது ‘தொல்காப்பியமே உலகின் முதல் பொதுநூல்’ என்ற உண்மையை நிறுவும் ஆய்வுகளில் தீவிரமாக முனைந்திருக்கிறார் இவர். தவிர, ‘தமிழ்மரபுச் செல்வம்’ என்ற திட்டத்தை உருவாக்கி, தொல்காப்பியர் தொடங்கி வாலி வரையிலான தமிழ் படைப்பாளிகளின் படைப்புகள் பற்றிய ஆய்வுகள் தமிழூரில் தீவிரமாக நடந்து வருகின்றன.