Thursday, 4 April 2013

மருதமரம்

இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான மர வகைகளில் முக்கியமானது மருதமரம். இதயத்தின் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படியாமல் தடுப்பதற்கு மருத மரப் பட்டையில் உள்ள அர்ஜுனின் என்ற வேதிப் பொருள் உதவுவதை சமீபத்திய ஆராய்ச்சிகள் முடிவுகள் உறுதிப்படுத்துகிறது. இதில் லிப்பிட் பெர்ஆக்சிடேஷன் நிறைந்து உள்ளதால், ரத்தம் உறைநிலையைத் தடுப்பதோடு, இதயத் தசைகளை வலுவாக்கும் ஆற்றலும் உள்ளது. ரத்தபேதி மற்றும் சீதபேதி ஏற்பட்டால், இதன் இலைக் கொழுந்தை மென்று விழுங்கினால், உடனடியாக குணமாகும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் அளவை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு. ஒரு லிட்டர் தண்ணீரில், 200 கிராம் மருதம் பட்டையைச் சேர்த்து 120 மிலலியாகும் வரை சுண்ட காய்ச்சி வைத்துக்கொள்ள வேண்டும். இதை தினமும் காலை உணவுக்கு முன் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்கும். மாரடைப்பு ஏற்படுவதையும் தவிர்க்கும்.




மானுட உடம்பில் உண்டாகும் ஒட்டுமொத்த நோய்களையும் களையும் வல்லமை பெற்றது மருத மரமேயாகும். வாத, பித்த, கப நோய்களை முற்றிலும் நீக்கி, ஆரோக்கியத்துடன் கூடிய ஒரு மேம்பட்ட வாழ்க்கையை நமக்கு மருத மரம் வழங்கி வருகிறது.

ரத்தக் கொதிப்பு நீங்க...

ரத்த அழுத்தமே (இல்) இரத்தக் கொதிப்பு எனப் படுகிறது. ஒருமுறை ரத்த அழுத்த நோய்க்கு ஆட்பட்டுவிட்டால், வாழ்நாள் முழுக்க இந்நோய் நம்முள் இருந்துகொண்டேதான் இருக்கும். ரத்த அழுத்தத்தை ஒரே சீராய் வைத்துக் கொள்ள மருத மரம் நமக்கு வழிகாட்டுகிறது.

மருதமரப் பட்டை 200 கிராம், சீரகம் 100 கிராம், சோம்பு 100 கிராம், மஞ்சள் 100 கிராம் இவற்றை ஒன்றாகத் தூள் செய்து பத்திரப் படுத்தவும். இதில் ஐந்து கிராம் அளவில் எடுத்து, இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்யவும். இதை காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டுவர, ரத்த அழுத் தம் இருந்த சுவடே இல்லாமல் மறையும்.

மன உளைச்சல், தூக்கமின்மை விலக...

மருதமரப் பட்டை, வில்வம், துளசி ஆகிய வற்றை வகைக்கு 100 கிராம் எடுத்து அரைத்துத் தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு காலை, இரவு என இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டுவர, மன உளைச்சல், படபடப்பு, தேவையில்லாத பயம், ஆவேசம், தூக்கமின்மை போன்ற குறைபாடுகள் தானே மறையும்.

சர்க்கரை நோய் குணமாக...

மருதமரப் பட்டை, ஆவாரம்பட்டை வகைக்கு 200 கிராம். சுக்கு, ஏலக்காய் வகைக்கு 20 கிராம் இவற்றை ஒன்றாகத் தூள் செய்து பத்திரப் படுத்தவும். இதில் ஐந்து கிராம் அளவு எடுத்து, இரண்டு டம்ளர் தண்ணீரிலிட்டு கசாயமிட்டு காலை, இரவு என இருவேளையும் காபிக்குப் பதிலாகச் சாப்பிட்டுவர, சர்க்கரை நோய் குணமாகும்.

சர்க்கரை நோய் குணமாக மற்றொரு மருந்து கூறுகிறேன்.

மருதமரப் பட்டை, ஆலம்பட்டை, அரசம் பட்டை, கருவேலம் பட்டை, ஆவாரம் பட்டை, பருத்திக் கொட்டை, கடல் அழிஞ்சில், நாவல் பட்டை, நாவல் கொட்டை, கருஞ்சீரகம் ஆகிய வற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி, ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு காலை, இரவு என இருவேளையும் உணவுக்கு முன்பாகச் சாப்பிட்டுவர, சர்க்கரை நோய் வெகுவாகக் கட்டுப்படும். சர்க்கரை நோயினால் உண்டாகும் உடல் பலவீனம், அதிக தாகம், அதிமூத்திரம் போன்ற கோளாறுகளும் உடனே தீரும்.

இதயநோய் குணமாக...

இதய நோய்களை மிக எளிதில் குணமாக்கும் வல்லமை மருத மரத்திற்கு உண்டு. இதய நோய்களுக்கு உண்டு வரும் நவீன மருந்துகளுடன், மருதம் சார்ந்த மருந்துகளைச் சாப்பிட்டு வரலாம். மருத மரம் வீரியமான ரசாயனமல்ல என்பதை உணர்ந்து கொண்டீர்களானால் கண்டிப்பாகச் சாப்பிடத் தயங்கமாட்டீர்கள்.

மருதம்பட்டை, தாமரைப்பூ வகைக்கு 200 கிராம். ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கப் பட்டை வகைக்கு 20 கிராம். இவற்றையெல்லாம் ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு காலை, இரவு என இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டுவர, இதய பலவீனம், இதயத்தில் உண்டாகும் வலி, இதய வீக்கம், இதயக் குழாய் களில் உண்டாகும் அடைப்பு போன்றவை அதிசயமாய் நீங்கும்.

மேற்சொன்ன மருந்தையே கசாயமிட்டும் சாப்பிட்டு வரலாம். கடைகளில் கிடைக்கும் மருத மரம் சார்ந்த மருந்துகளையும் வாங்கி உபயோகிக்கலாம். நம் பண்டைய ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படும் "அர்ஜுனா அரிஸ்டம்' என்ற திரவ மருந்து மருந்துக் கடைகளில் தாராளமாய்க் கிடைக்கிறது. இதில் 20 மி.லி. அளவு காலை, இரவு என இருவேளையும் சாப்பிட்டு வர, இதய நோய்கள், ரத்தம் சார்ந்த நோய்கள் உடனே தீரும்.

ரத்த மூலம் தீர...

மருத மர இலையை ஐந்து எண்ணிக்கையில் எடுத்து அரைத்து, கட்டித் தயிரில் கலக்கிச் சாப்பிட்டுவர, மூன்று தினங்களில் ரத்தப் போக்கு நிற்கும்.

மாதவிலக்கை முறைப்படுத்த...

மருத மர இலையைக் காயவைத்துத் தூள் செய்து, தினசரி ஐந்து கிராம் அளவில் இருவேளை யும் சாப்பிட்டுவர, பெண்களுக்கு உண்டாகும் மாதாந்திர சுழற்சி முறையாகும்.

மாதவிலக்கில் உண்டாகும் வயிற்றுவலி தீர...

மருதம்பட்டை, வேப்பம்பட்டை வகைக்கு 100 கிராம், பெருங்காயம் 10 கிராம் சேர்த்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு, காலை, இரவு என இருவேளையும் ஒரு டம்ளர் மோருடன் சாப்பிட்டுவர, மாதவிலக்கின்போது உண்டாகும் வயிற்றுவலி முற்றிலுமாய் குணமாகும்.

மேலும் மருத மரத்தினால் வெள்ளைப்படுதல், உஷ்ண நோய்கள், பித்த நோய்கள், சரும நோய் கள், பற்களைச் சார்ந்த நோய்கள் அனைத்தும் தீரும்.

மருதமலை முருகனும் மருத மரமும்...

மருதமலை முருகனின் அம்சம் மற்றும் பேரருள் பெற்ற மூலிகையே மருத மரமாகும். மருத மலையில் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானை ஒருமுறையேனும் தரிசித்து வாருங்கள். குன்றுகள் தோறும் குமரன் இருக்கும் இடம்தான் என்றாலும், மருத மரத்தை தல விருட்சமாய்க் கொண்டுள்ள மருதமலை முருகனை மண்டியிட்டு வேண்டி வாருங்கள். எம்பெருமான் முருகப் பெருமான் உங்கள் சகல கஷ்டங்களையும் கவலைகளையும் தீர்த்து, முப்பிணியை நீக்கி எப்பிணியும் வராமல் இப்பிறவி முழுவதும் காப்பான். வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment