* இந்தச் சிவன் கோயிலில் சொர்க்க வாசல் உண்டு; வைகுண்ட ஏகாதசி சிறப்பாகக் கொண்டாட்டம்!
* பெருமாள் குளிர்ச்சி பொருந்தியவர் என்பதால், சிவனுக்கு அபிஷேகம் கிடையாது!
* பிரசாதமாக விபூதியும், துளசி தீர்த்தமும் ஒன்றாகத் தரப்படுகிறது!
இத்தனையும் எங்கேன்னு வித்தியாசமா பாக்குதீயளா? நம்ம நெல்லைச் சங்கரன்கோயில் டவுன்-ல தான்-லே! அட நம்மூரு சங்கரநயினார் கோயிலை மறந்துட்டீயளா?
வியப்பா இருக்கா? மேலே படிங்கல்லே!
* அது என்னாங்க தபசு? = தபசு-ன்னா தவம்!
* யாரு செய்யற தவம்? = சிவனாரின் இல்லத்தரசி கோமதி செய்கின்ற தவம்!
* எதுக்கு அவிங்க போயி தவம் செய்யறாங்க? = எல்லாம் பொறந்த வீட்டுப் பாசம் தேன்!
* அது என்ன கோமதி? = அவிங்க ஊரு கோ-குலம்; தொழில் கோ-பாலம்; அண்ணன் கோ-விந்தன்; -வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணன்
தங்கச்சி் கோ-மதி!
கோமதி! செந்தமிழில் ஆவுடையாம்பிகை! பசுக்களைக் காப்பவள்!
கோவில்பட்டில எப்படி ஒரு செண்பகமோ, அது போல சங்கரன்கோவில்-ல ஒரு கோமதி! வீட்டுக்கு வீடு ஒரு கோமதி இருப்பாள்!
ஆடித் தபசே அவள் திருவிழா தான்! அம்பாளைத் தரிசிக்கும் முன்னர் கொஞ்சம் கதை என்னான்னு பார்க்கலாமா?
சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்ற பேத புத்தி இல்லாமல், இந்த சக்திகள் இரண்டும் ஒன்றே என்பதை நிரூபிக்க வேண்டும்!’ என்று எண்ணினாள் அம்பிகை. தனது எண்ணத்தை சிவபெருமானிடம் கூறி, ''ஸ்வாமி... சங்கரரும் நாராயணரும் பேதம் இல்லா மல் பொருந்தி இருக்கும் திருக் காட்சியைக் காட்டியருள வேண் டும்!'' என வேண்டினாள்.
சிவபெருமான் ஒப்புக் கொண் டார். ''தேவி... உனது எண்ணம் போலவே, ஹரியும் ஹரனும் பேதமில்லாத ஒரே சக்தியே என்று உலகுக்கு உணர்த்த, யாம் சங்கர நாராயணராகக் காட்சி கொடுப்போம். பூலோகத்தில் அகத்திய முனிவன் இருக்கும் பொதிகை மலையின் அருகில் உள்ள புன்னைவனத் தலத்தில், உனக்கு அந்த தரிசனம் கிடைக் கும். மகா சக்தியான நீயும் அங்கே இடம் பெற வேண்டும்!'' என் றார்.
அம்பிகை தொடர்ந்தாள். ''தேவதேவா, சங்கரநாராயண திருக் காட்சிக்காக, ஜீவகோடிகளின் சார்பில் நானே அந்தப் புன்னை வனத்தில் தவம் புரிவேன். எனது தவத்துக்காக தாங்கள் அங்கே எழுந்தருள வேண்டும்!'' என்ற அம்பிகை அங்கிருந்து கிளம்பினாள்.
அங்கிருந்த வேத வல்லுநர் களான ரிஷிகள், தேவ மாதர்கள் யாவரும் அன்னையிடம், ''அம்மா... நீங்கள் செய்யும் தவத்தில் நாங்களும் பங்கு பெற வேண்டும்!'' என வேண்டினர். அம்பிகை அதற்கு ஒப்புக் கொண்டாள்.
''அப்படியே ஆகட்டும். சங்கரநாராயணக் காட்சிக்காக ஸ்வாமி நிச்சயித்திருக்கும் புன்னை வனத்தில், முனிவர்கள் -புன்னை மரங்களாகவும் தேவமாதர்கள்- பசுக் குலமாகவும் தோன்றட்டும். முனிவர்களின் நிழலில், தேவலோக மாதர்களின் பணிவிடையில் நான் அங்கு தவம் மேற்கொள்வேன்!'' என்று அருளினாள்.
அது மட்டுமா? எந்தத் திருக் காட்சியைக் காண அங்கே அன்னை தவம் செய்தாளோ, அந்தக் காட்சியைக் காணும் பாக் கியத்தை இரு பாம்புகளுக்கும் அளித்து அருள் புரிந்தாள் அம்பிகை. பாம்புகளா?
ஆம். சங்கன், பதுமன் என்று இரு சர்ப்பங்கள்! சங்கன் - சிவ பக்தன். பதுமன் - விஷ்ணு பக்தன். இவர்களுக்கிடையே பெரும் போட்டி. ''சிவன் தான் பெரியவர்!'' என்று சங்கன் சொல்ல, ''இல்லை, விஷ்ணுவே பெரியவர்!'' என்று பதுமன் கூற, இரு வருக்கும் இடையே சண்டை மூண்டது.
இருவரும் முனிவர்கள் பலரைச் சந்தித்துத் தங்க ளுக்கு ஆதரவு தேடினார்கள். அப்போது குருபகவான், ''அறியாமைக் கடலில் மூழ்கிக் கிடக்கும் உங்களுக்கு, ஞான விளக்கம் கிடைக்க வேண்டுமெனில், நீங்கள் புன்னை வனம் செல்லுங்கள். அங்கு உங்களது கேள்விக்கு பதில் கிடைக்கும்!'' என் றார்.
அதன்படி இருவரும் அருள் செழிக்கும் புன்னை வனம் வந்து தவமியற்றினர். அவர்களின் தவம் சங்கரரையும் நாராயணரையும் மகிழச் செய்தது. வீண்வாதம் செய்யும் அவர்களுக்காக மட்டுமல்லாமல், உலகிலுள்ள மற்றவர்களுக்கும் உண்மையை உணர்த்த, பாதித் திருமேனி சங்கரர், பாதித் திருமேனி நாரா யணராகக் கோலம் கொண்டு சங்கரநாராயணராகத் திருக்காட்சி கொடுத்தனர்.
ஹரி-ஓம்-நம சிவாய!
ஈசன் காட்சி கொடுத்து விட்டான்! ஈசன் சாட்சி கொடுத்து விட்டான்!
இறைவன் திருமேனி இடப்பாகத்தில் யமுனைத்
துறைவன் தோன்றி விட்டான்!
ஈசன் திருமேனி இடப்பாகத்தில் இலக்குமி
நேசன் தோன்றி விட்டான்!
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து விட்டான்!
தாழ் சடையும் = நீள் முடியும்; ஒண் மழுவும் = சக்கரமும்; சூழ் அரவும் = பொன் ஞானும்!
* ஒரு புறம் சிவப்பு, மறு புறம் சியாமளம்!
* ஒரு புறம் கங்கை-சந்திரன் சடைமுடி, மறு புறம் வஜ்ர-மாணிக்க மகுடம்!
* ஒரு புறம் மழு, மறு புறம் சங்கு!
* ஒரு புறம் புலித்தோல், மறு புறம் பீதாம்பரம்!
* ஒரு புறம் ருத்திராட்சம், மறு புறம் துளசீ மாலை!
* ஒரு புறம் வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்கிறான்; மறு புறம் சைவச் சங்கன் பெருமாளுக்குக் குடை பிடித்து நிற்கிறான்!
முனியே நான்முகனே முக்கண்ணப்பா! என் பொல்லாக் கனிவாய் தாமரைக்கண் கருமாணிக்கமே!
* சன்னிதியில் விபூதிப் பிரசாதம், துளசீ தீர்த்தம் உண்டு!
* வில்வார்ச்சனை, துளசி அர்ச்சனை இரண்டுமே உண்டு!
* இரண்டையும் இணைக்கும் அம்பாளின் குங்குமார்ச்சனையும் உண்டு!
குளிர்ந்த கண்ணன் ஈசன் திருமேனியில் எழுந்தருளியதால், அபிஷேகப் பிரியன் சிவபெருமானுக்கு அபிஷேகம் கிடையாது! அலங்காரம் மட்டுமே!
அதனால் சந்திர மெளலீச்வரர் என்னும் லிங்கத்தை முன்னே நிறுத்தி, அதற்கு மட்டும் திருமுழுக்காட்டுதல், அன்னாபிஷேகங்கள் உண்டு!
எப்போதுமே அருவத்தில் லிங்கமாகக் காட்சி தரும் ஈசன், கருவறையில் உருவமாக காட்சி அளிப்பது மிக மிக விசேடம்!
எனினும் ஆகம வழக்கப்படி லிங்க உருவத்தில் மட்டுமே பூசை நடக்க வேண்டி, சங்கரலிங்கம் என்று இன்னொரு தனிச் சன்னிதியிலும் எழுந்தருளி உள்ளார் ஈசன்! அவர் நாயகியாக கோமதி அம்மன்!
புற்று சூழ்ந்த சங்க-பத்மன்! நாக நண்பர்கள் வழிபட்டதால் புற்று மண்ணே பிரசாதம்!
ஆடித் தபசின் பன்னிரண்டு நாளும், ஊர் மக்கள் தங்கள் வீட்டு விழாவைப் போல் கொண்டாடுகின்றனர்! உலக நன்மைக்காகத் தன் இடப்பாகத்தையே அன்னை விட்டுத் தந்தாள் அல்லவா? அதனால் அவளுக்கென்று தனித்தேர்! அவள் மட்டுமே சிறப்பாக வலம் வருவாள்!
இறுதி நாளன்று, ஆடித் தபசு மண்டபம் மண்டபத்தில் அவள் தவம் நடித்துக் காட்டப்படுகிறது! ஒரு கையில் விபூதிப் பை! ஒரு காலில் தவம்! சங்கர நாராயணர் அவள் முன் தோன்றி வரம் அருளும் காட்சி!
அரன் சொற்படி, தவம் இருந்த அன்னை, கோமதியம்மன் எனும் திருநாமத்துடன் இங்கு அருளாட்சி செய்கிறாள். சங்கரன்கோவில் என்றவுடன்
நம் நினைவுக்கு வருவது- கோமதி அம்மன்தான்! அன்று அன்னை செய்த தவம், 'ஆடித் தவசு’ என்ற பெயரில் இன்றும் சங்கரன்கோவில் திருத் தலத்தில் பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
ஆடித் தபசு
ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தி அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. பத்து நாட்கள், திருவிழா நடைபெறும். உத்திராட நட்சத்திரத்தன்று ஆடித் தவசு மண்டபத்தில் கோமதியம்மன் எழுந்தருள்வாள். அன்று மாலை ஐந்தரை மணி அளவில் ஸ்ரீ சங்கர நாராயணர் திருக்காட்சி வைபவம் நடைபெறுகிறது.
அம்பாள் முன் ஆக்ஞா சக்கரம்! பொதுவாக ஸ்ரீசக்ர பிரதிஷ்டை காலடிகளில் தான் இருக்கும்! ஆனால் இங்கு சன்னிதி முகப்பில் பெரிதாக ஸ்ரீசக்ர அமைப்பு! மன மாச்சர்யங்கள், பேதங்கள், மன நோய்கள் எல்லாம் நீங்கிட, அதில் உட்கார்ந்தும் தியானித்துக் கொள்ளலாம்!
ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு அன்னை நமக்கு! ஆனால் எல்லாப் பிறவியிலும் வரும் ஒரே அன்னை யார்?
தன் குழந்தைகளின் புத்தி தெளிய வேண்டி, தன் பாகத்தையே விட்டுக் கொடுத்த திருமதி! அவள் ஒரு வெகுமதி! அவளே அன்னை கோமதி!
மாதே, மலையத் தவஜ பாண்டிய சஞ்சாதே!
மாதங்க வதன குக மாதே!
சகோதரி சங்கரி! சங்கரி! சங்கரி!
சாமுண்டீஸ்வரி, சந்திர கலாதரி, தாயே கெளரி!
உலகன்னை! ஜகன்மாதா!
தர்ம சம்வர்த்தினி! அறம் வளர்த்த நாயகி!
அவளுக்கு எந்தக் குழந்தையிடமும் பேதம் பார்க்கத் தெரியாது!
சைவக் குழந்தையோ, வைணவக் குழந்தையோ, சாக்தக் குழந்தையோ, புத்தக் குழந்தையோ, சமணக் குழந்தையோ, முகம்மதியக் குழந்தையோ, கிறித்துவக் குழந்தையோ.....எதுவுமே இல்லாத குழந்தையோ.....
என்னிக்குமே, குழந்தை குழந்தை தான்! அம்மா அம்மா தான்!
நம சிவாய!
ஓம் நமோ நாராயணாய!
கோமதித் தாய் திருவடிகளே சரணம்!!!
No comments:
Post a Comment