அண்ணாமலை ரெட்டியார் இயற்றிய காவடிச் சிந்து
சிந்து என்பது இசைத் தமிழ் பாகுபாடுகளில் ஒன்றாகும். அது ஐந்து உறுப்புகளால் ஆன யாப்பு விசேடம். அவை பல்லவி, அநுபல்லவி, மூன்று கண்ணிகள் அடங்கிய சரணம் ஆகும். காவடிச் சிந்து பல்லவியும் அநுபல்லவியும் இன்றிச் சரணங்களுக்குரிய கண்ணிகளை மாத்திரம் பெற்று வரும். முருகனிடம் பிரார்த்தனை செய்து காவடி எடுத்துச் செல்வோர் வழியில் துதி செய்து பாடும் பாடல்களே காவடிச் சிந்து எனப்படுகின்றன. இந்த நூலை இயற்றியவர் அண்ணாமலை ரெட்டியார். இவர் திருநெல்வேலி சங்கர நயினார் கோவிலை அடுத்த சென்னிகுளம் என்னும் ஊரில் 1865 ஆம் ஆண்டு பிறந்தார். திருநெல்வேலி இராமசாமிக் கவிராயரிடம் கல்வி கற்று, பின்னர் ஊற்றுமலை ஜமீந்தார் சுந்தரதாஸ் பாண்டியனின் சமஸ்தான வித்துவானாக விளங்கினார். இவர் நோய் காரணமாக 1891ல், தம் 26ஆம் வயதில் காலமானார்.
சிந்து என்பது இசைத் தமிழ் பாகுபாடுகளில் ஒன்றாகும். அது ஐந்து உறுப்புகளால் ஆன யாப்பு விசேடம். அவை பல்லவி, அநுபல்லவி, மூன்று கண்ணிகள் அடங்கிய சரணம் ஆகும். காவடிச் சிந்து பல்லவியும் அநுபல்லவியும் இன்றிச் சரணங்களுக்குரிய கண்ணிகளை மாத்திரம் பெற்று வரும். முருகனிடம் பிரார்த்தனை செய்து காவடி எடுத்துச் செல்வோர் வழியில் துதி செய்து பாடும் பாடல்களே காவடிச் சிந்து எனப்படுகின்றன. இந்த நூலை இயற்றியவர் அண்ணாமலை ரெட்டியார். இவர் திருநெல்வேலி சங்கர நயினார் கோவிலை அடுத்த சென்னிகுளம் என்னும் ஊரில் 1865 ஆம் ஆண்டு பிறந்தார். திருநெல்வேலி இராமசாமிக் கவிராயரிடம் கல்வி கற்று, பின்னர் ஊற்றுமலை ஜமீந்தார் சுந்தரதாஸ் பாண்டியனின் சமஸ்தான வித்துவானாக விளங்கினார். இவர் நோய் காரணமாக 1891ல், தம் 26ஆம் வயதில் காலமானார்.
1. விநாயகர் துதி
திருவுற் றிலகுகங்க வரையில் புகழ்மிகுந்து
திகழத் தினம்உறைந்த வாசனை, - மிகு
மகிமைச் சுகிர்ததொண்டர் நேசனை, - பல
தீயபாதக காரராகிய சூரர்யாவரும் மாளவேசெய்து
சிகரக் கிரிபிளந்த வேலனை, - உமை
தகரக் குழல்கொள்வஞ்சி பாலனை,
மருவுற் றிணர்விரிந்து மதுபக் குலம்முழங்க
மதுமொய்த் திழிகடம்ப ஆரனை,- விக -
சிதசித்ர சிகிஉந்து வீரனை, - எழில்
மாகநாககு மாரியாகிய மாதினோடுகி ராதநாயகி
மருவப் புளகரும்பு தோளனை, - எனை
அருமைப் பணிகொளும்த யாளனை,
தெரிதற் கரியமந்தி ரமதைத் தனதுதந்தை
செவியில் புகமொழிந்த வாயனை,- இள
ரவியில் கதிர்சிறந்த காயனை,- அகல்
தேவநாடுகெ டாதுநீடிய சேனைகாவல னாகவேவரு
திறலுற்ற சிவகந்த நாதனை,- விரி
மறையத் தொளிருகின்ற பாதனை,
மருளற் றிடநினைந்து மனதிற் களிசிறந்து
மதுரக் கனிவுவந்து கூடவே,- பல
விதமுற் றிலகுசிந்து பாடவே,- விரி
வாரிநீரினை வாரிமேல்வரு மாரிநேர்தரு மாமதாசல
வதனப் பரன்இரண்டு தாளையே - நயம்
உதவப் பணிவம்இந்த வேளையே.
2. முருகன் துதி
சீர்வளர் பசுந்தோகை மயிலான்,- வள்ளி
செவ்விதழ் அலாதினிய தெள்ளமுதும் அயிலான்,
போர்வளர் தடங்கைஉறும் அயிலான் - விமல
பொன்னடியை இன்னலற உன்னுதல்செய் வாமே.
குஞ்சர வணங்கு ஆவல் வீடா - தபடி
கொஞ்சிமரு வும்சரச ரஞ்சிதவி சேடா!
பைஞ்சர வணம்காவல் வீடா - வளரும்
பாலன்என மாலையொடு காலைநினை வாமே.
வல்அவுணர் வழியாதும் விட்டு, - வெருள
வன்சமர்செய் கந்தனிடம் வழியடிமைப் பட்டு
நல்லஉணர் வழியாது மட்டு - மிஞ்சு
ஞானபர மானந்த மோனம் அடை வாமே.
ஒருதந்த மாதங்க முகத்தான், - மகிழ
உத்தம கனிட்டன்என உற்றிடு மகத்தான்,
வருதந்த மாதங்க முகத்தான் - எவரும்
வாழ்த்துகுக நாயகனை ஏத்துதல்செய் வாமே.
3. கழுகுமலை நகர்
தெள்ளுதமி ழுக்குதவு சீலன், - துதி
செப்பணாம லைக்கும் அனு கூலன் - வளர்
செழிய புகழ்விளைத்த கழுகு மலைவளத்தை
தேனே! சொல்லு வேனே.
வெள்ளிமலை யொத்தபல மேடை, - முடி
மீதினிலே கட்டுகொடி யாடை, - அந்த
வெய்யவன் நடத்திவரு துய்யஇர தப்பரியும்
விலகும் படி இலகும்.
வீதிதொறும் ஆதிமறை வேதம், - சிவ
வேதியர்கள் ஓதுசாம கீதம் - அதை
மின்னுமலர்க் காவதனில் துன்னுமடப் பூவையுடன்
விள்ளும், கிள்ளைப் புள்ளும்,
சீதள முகிற்குவமை கூறும் - நிறச்
சிந்துரங்கள் சிந்துமதத் தாறும், - உயிர்ச்
சித்திரம் நிகர்ந்தமின்னார் குத்துமுலைக் குங்குமச்செஞ்
சேறும் காதம் நாறும்.
நித்தநித்த மும்கணவ ரோடும் - காம
லீலையில் பிணங்கிமனம் வாடும் - கரு
நீலவிழி யார்வெறுத்த கோலமணி மாலைரத்னம்
நெருங்கும் எந்த மருங்கும்.
கத்துகட லொத்தகடை வீதி - முன்பு
கட்டுதர ளப்பந்தலின் சோதி - எங்கும்
காட்டுவதால் ஈரிரண்டு கோட்டுமத யானையிற்பல்
களிறும் நிறம் வெளிரும்;
முத்தமிழ்சேர் வித்வசனக் கூட்டம் - கலை
முற்றிலும் உணர்ந்திடும் கொண் டாட்டம் - நெஞ்சில்
முன்னுகின்ற போதுதொறும் தென் மலையில் மேவுகுறு
முனிக்கும் அச்சம் சனிக்கும்.
எத்திசையும் போற்றமரர் ஊரும், - அதில்
இந்திரன் கொலுவிருக்கும் சீரும், - மெச்சும்
இந்தநக ரம்தனை அடைந்தவர்க் கதுவும்வெறுத்
திருக்கும்; அரு வருக்கும்.
துள்ளிஎழும் வெள்ளையலை அடங்கும் - படி
சுற்றிலும் வளைந்த அகழ்க் கிடங்கும் - பல
சொன்னமலை போல்மதிலும் மின்னுவதி னாலேபுகழ்
தோன்றும் லோகம் மூன்றும்.
கள்ளிவிழ் கடப்பமலர் வாகன், - குறக்
கன்னியை அணைக்கும் அதி மோகன் - வளர்
கழுகுமலை நகரின்வள முழுமையும்என் நாவில்அடங்
காதே! மட மாதே.
4. கோயில் வளம்
சென்னி குளநகர் வாசன், - தமிழ்
தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்
செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை
தீரன்; அயில் வீரன்.
வன்ன மயில்முரு கேசன், - குற
வள்ளி பதம்பணி நேசன் - உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற
வாதே சொல்வன் மாதே!
கோபுரத் துத்தங்கத் தூவி, - தேவர்
கோபுரத் துக்கப்பால் மேவி, - கண்கள்
கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு
குலவும் புவி பலவும்.
நூபுரத் துத்தொனி வெடிக்கும் - பத
நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் - அங்கே
நுழைவாரிடு முழவோசைகள் திசைமாசுணம் இடியோ என
நோக்கும் படி தாக்கும்.
சந்நிதி யில்துஜஸ் தம்பம், - விண்ணில்
தாவி வருகின்ற கும்பம் - எனும்
சலராசியை வடிவார்பல் கொடிசூடிய முடிமீதிலே
தாங்கும்; உயர்ந் தோங்கும்.
உன்னத மாகிய இஞ்சி,-பொன்னாட்டு
உம்பர் நகருக்கு மிஞ்சி - மிக
உயர்வானது பெறலால், அதில் அதிசீதள புயல்சாலவும்
உறங்கும்; மின்னிக் கறங்கும்.
அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம், -பல
அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி
அடைக்கும்; அண்டம் உடைக்கும்.
கருணை முருகனைப் போற்றித்-தங்கக்
காவடி தோளின்மேல் ஏற்றிக் - கொழும்
கனல்ஏறிய மெழுகாய்வரு பவர் ஏவரும், இகமேகதி
காண்பார்; இன்பம் பூண்பார்.
5. கழுகுமலை வளம்
பொன்னுலவு சென்னிகுள நன்னகர்அண் ணாமலைதன்
புந்தியில் மகிழ்ந்து நித்தம் நின்றவன் - முந்தி
வெந்திறல் அரக்கர்களை வென்றவன் - மயில்
போல ஏனலின் மீதுலாவுகி ராதமாதுமுன் ஏகியே ".அடி
பூவையே! உனதுதஞ்சம்" என்றவன் - அவள்
ஈயும்மாவி னையும்மென்று தின்றவன்.
மின்னுலவு சொன்னமுடி சென்னியணி விண்ணவர்தே-
வேந்திரனும் சித்தர்களும் துன்னியே, - கதி
வேண்டியே அகத்தில் அன்பு மன்னியே - பணி
வேலவன்கிரு பாகரன்குகன் மேவிடும்கழு காசலம்தனில்
மிஞ்சிய வளங்களை நான் உன்னியே - சொல்ல,
ரஞ்சிதமாக் கேளடிவிற் பன்னியே!
மூசுவண்டு வாசமண்டு காவில்மொண்டு தேனை உண்டு
மோகன முகாரிராகம் பாடுமே; - மைய-
லாகவே பெடையுடனே கூடுமே, - அலை
மோதிவாரிதி நீரைவாரிவிண் மீதுலாவிய சீதளாகர
முகில்பெருஞ் சிகரமுற்றும் மூடுமே; - கண்டு
மயிலினம் சிறகைவிரித் தாடுமே.
தேசுகொண்ட பாரதந்த வீரதும்பி ராசி அண்டர்
தேவதாரு வைக்கரத்தால் பிடிக்குமே; - சுற்றும்
மேவிய கிளையைவளைத் தொடிக்குமே, - ஒளிர்
சேயசந்திர னோடுரிஞ்சுப லாமரங்களி லேநெருங்கிய
திங்கனி, மதுரசத்தை வடிக்குமே, - மந்தி
பாங்கில் நின்று அதனையள்ளிக் குடிக்குமே.
அந்தரம் உருவிவளர்ந் திந்திரன் உலகுகடந்-
தப்புறம்போய் நின்றசையும் சந்தன - மரம்,
தப்பிதமி லாதுகையால் வந்தனம் - எங்கள்
ஆறுமாமுக நாதனுக்கிடு மாறுபோல, விசாலமுற்றகொம்-
பத்தனையும் நின்று தலை சாய்க்குமே; - அண்டப்
பித்திகை தனிலும்சென்று தேய்க்குமே.
கந்தரம் தொறும்கிடந்து கந்தரம் பயந்தொதுங்கக்
கர்ச்சனை புரியும்திறல் சிங்கமே; - நெஞ்சில்
அச்சமுற விண்ணுறைமா தங்கமே - தடங்
காவிலேசில தாவிலேவளர் மாவி றால்நடு வேகிராதர்கள்
கார்முகம் எயும்கணைகள் ஏறுமே; - அதில்
வார்மதுவால் வாரி உவர் மாறுமே.
காலவடி, வேல், நெடிய, வாள், கொடிய நாகம்உமிழ்
காரி, பிணை, வாரி, கணை, பானலே - அன்ன
கூர்நயன வேடமின்னார் ஏனலே - காக்கும்
காலைமேலெறி போதுவார்கவ ணோடுமாமணி தேசுவீசவே
கதிரவன் தனதுமுகம் சுழிக்குமே;- அவன்
குதிரையும் கண் ணைச் சுருக்கி விழிக்குமே.
ஓலமலி கோலநீல வேலைசூழும் ஞாலமீதில்
உற்றவர் இன் பத்துடனே வானமே - செல்ல
வைத்தபல சித்திரசோ பானமே - என்ன
ஓங்குகோங்ககில் நாங்கிலாங்கலி பாங்குநீங்கரு வேங்கைபூங்கழை
ஒன்றோடொன்று வம்புகொண்டு நீளுமே - கோள்கள்
சென்றுசென்று நின்றுநின்று மீளுமே.
6. வாவி வளம்
புள்ளிக் கலாபமயில் பாகன்; - சத்தி
புதல்வ னானகன யோகன்; - மலை
போலத் தான்திரண்ட கோலப் பன்னிரண்டு
வாகன்; நல்வி வேகன்.
வள்ளிக் கிசைந்தமுரு கேசன்; - அண்ணா-
மலைக்கவி ராசன் மகிழ் நேசன்-என்றும்
வாழுங் கழுகுமலை வாவிவளம் சொல்வேன்
மாதே! கேள் இப் போதே.
வெள்ளை நாரைகொத்தும் வேளை, - தப்பி
மேற்கொண்டு எழுந்துசின வாளை - கதி
மீறிப் பாயும்தொறும் சீறிச் சாயும்தென்னம்
பாளை யுடன் தாழை.
தெள்ளும் பிள்ளை யன்னப் பேடும் - இளம்
சேவ லானதுவும் ஊடும்;- பின்பு
தேமலர்த் தவிசில் காமம் முற்றவந்து
கூடும்; உற வாடும்.
மின்னிக் குலவிமதி மானும் - வரி
வெள்ளைப் பணிலராசி தானும்;- மட
மின்னார் விழிகளென்ன மன்னு கெண்டைமுத்தம்
ஈனும் மட மானும்
வன்னத் தாமரையைக் கண்டு - வாயில்
மதுர ராகம்பாடிக் கொண்டு - மதி
மயங்கிப் பேட்டினுடன் முயங்கியே கிடக்கும்
வண்டு, கள்ளை உண்டு.
அந்த ரத்துமின்போல் கூடிக், - கொங்கை-
யாலே நீந்திவிளை யாடிச், - செல்லும்
அந்நல் லார்நடக்கும் நன்ன டைக்குருகி
அன்னம் செல்லும் பின்னம்.
மந்த மேதி உள்ளே எட்டும் - சினை
வராலும் மேலெழுந்து முட்டும் - போது
மடிசு ரந்துகன்று தனைநி னைந்துகண்ட
மட்டும் பாலைக் கொட்டும்.
7. துதி
மரகத விகசித ஒளிதவழ் இருசிறை
மருவிய மயில்மிசை அனுதினம் உறைதரு
வாசன், பவ நாசன்.
சூரகத சுகமணி வளிரதம் நடவிய
குவலய சரதரன் எனும்மத னனும் மகிழ்
கோலன், பரை பாலன்.
பரிபுர அணிகல கலவென ஒலிபுரி
பரிதிஉ தயமதில் அவிழ்மரை மலர்நிகர்
பாதன், குக நாதன்.
திரிபுர மவைஒரு நொடிதனில் எரிகொடு
சிதைவுற நகைபுரி சிவன்மன மகிழ்உப-
தேசன், முரு கேசன்.
பதும நிதியினொடு பணில நிதியும் எழில்
பரவிய சுரபியும் உறுசுர புரன்மகள்
பாகன், கன யோகன்.
சததள நளினத விசுமிசை வதிஒரு
சதுர்முக விதிசிறை யதிலுற நிறுவுவி-
சாகன், தட வாகன்.
குரைதிரை வரைநிரை புரைதர உலவிய
குரவையின் நடுவுற நிருதரை முடுகிய
கோபன், கமழ் நீபன்.
பரைசிவை பகவதி உதவிய சரவண-
பவன்அறு முககுகன் மிசைமது ரிதகவி
பாடும்; சுகம் நாடும்.
8. துதி
பவணக் கிரியதனுள் தானே
மன்னு வானே! - பல
பாழிலே அலை யாமல் இன்புற
நாளுமேயருள் மேவுகண்கொடு
பாராய்!-இன்னல் தீராய்!
அவுணப் பகையைமுடித் தோனே!
புண்ய வானே! - கதி
யாருமேதரு வாருமிங்கிலை
யாதலால் அருள் வாய், இனம்புரி-
யாதே பண்ணும் சூதே.
விரகப் பெருவிதனத் தாலே
மண்ணின் மேலே - மனம்
வீணிலேஉழ லாதுகந்தவி-
சாகனேபுரி, நீயும்வஞ்சம்என்
மீதே எண்ணி டாதே.
நரகச் சமன் வருமப் போதே,
பின் நில்லாதே - பல
நாளுமேமற வாதுநின்சிறு
பாதமாகிய சீதபங்கயம்
நானே உன்னி னேனே.
நிமலப் பெருமிதச்செவ் வேளே!
கன்னல் வேளே - தொடு
நீடுபாணம தால்மருண்டிடை
வாடுமாதரி டங்கொடாவகை
நீயே பண்ணுவாயே.
குமரிக் கதிகபரல் கானே
நண்ணி னானே! - இகழ்
கோதிலாதத போபலம்பெறு
நீதர்பால் அக லாதுறைந்தருள்
கோவே! - என்னுள் வாவே!
கடல்சுற் றிய உலகப் பாலே
மின்னல் போலே - வரு
காயமாகிய தீயவன்பிணி
மேவியேதவி யாமல் அன்பொடு
காவே! - என் ஐ யாவே!
திடமற் றவனினுடைச் சேயே,
என்னை நீயே - திவ்ய
சேவையேசெயும் ஞானபண்டிதர்
நாவினூடு இனி தாவிளைந்திடு
தேனே! பொன்ன னானே!
9. துதி
செந்தில் மாநகர்வாழ் கந்த நாதன்இரு
செய்யபாத கஞ்சமே - நமக்கு
உய்யமேவு தஞ்சமே - இன்று
செப்புவது கொஞ்சமே - கேட்கத்
தீய பாதக விரோகம் மாய விட்டுத்
திரும்பு வாயே நெஞ்சமே!
பந்த பாசம்இதை எந்த வேளையினும்
பார்க்கும்போது தொல்லையே - அல்லால்
ஆர்க்கும் ஆவது இல்லையே - ஒரு
பாரமேரு வில்லையே, - கையில்
பற்று நாதன்மாது பெற்ற நீதன்மீது
பனுவல் சூடு வல்லையே.
மங்கை மார்கள் இரு கொங்கை துங்கமத
வாரணங்கொள் கும்பமே, - முகம்
பூர்ணசந்திர விம்பமே, - பட
மாசுணம்நி தம்பமே, - தொடை
மார வேள் அரசு மண்டபத்தருகில்
வைத்த ரண்டு கம்பமே.
செங்கை சூரியோத யங்கு லாவமலர்
சீதபத்ம தளமே, - வாயில்
ஓதுசொற்கள் குளமே, - இதழ்
திவ்யபொற்ப வளமே,' - என்று
சிந்தித் தால்குமரன் கந்தப் பாதமலர்
சேர்வ தெவ்வா றுளமே?
வன்ன மானவிழி மின்ன வேகடையில்
வக்ர தந்த சிங்கமே - கொண்ட
உக்ரதுங்க சிங்கமே - என்ன
மறலிதூதர் பொங்கமே - உற்று
வந்த வேளை நெஞ்சே கந்த வேளை நினை,
மருவு றாது பங்கமே.
சென்னை மாநகரண் ணாமலைக் கவிஞன்
தேசம் எங்கும் இசையே-பெறப்
பேசுசந்த மிசையே-சற்றும்
தீர்ந்திடாத நசையே-வைத்துச்
சேவ லாளிபதம் ஆவ லோடுபணி
தினமும் நூறு விசையே.
10. சுரம் போக்கு - நற்றாய் இரங்கல்
பாதிராத்திரி வேளையில் வீட்டுப்
பக்கத்தில் வந்து மேவிப் - பஞ்ச
பாதகன் ஒரு பாவி - சிறு
பாவையை மெள்ளக் கூவிக் - கையைப்
பற்றிக் கூட்டிக்கொண் டேகி னான்; பதை
பதைக்குதே என்றன் ஆவி.
சோதனைப்பிர காரமாய் என்னைத்
தொடர்ந்ததே பெருந் தோஷம்! - எவர்
சூதினால் வந்த மோசம்? - இனித்
தொலையுமோ பிள்ளைப் பாசம்? - இதைச்
சுற்றத் தார் அறிந் தால்எனக் குமுன்,
சொல்வரே, பரி காசம்.
தேன் இலங்கிய காவனம் திகழ்
சென்னிமா நகர் வாசன், - துதி
செய்அண்ணா மலை தாசன் - செப்பும்
செந்தமிழ்க் கருள் நேசன், - தினம்
சிந்தனை செய்யும் தொண்டர் தீவினை
தீர்த்திடும் முரு கேசன்.
நானிலம்புகழ் கழுகு மாமலை
நாயகன் பாண்டி நாட்டில், - நெஞ்சில்
நாணம் விட்டுத்தன் பாட்டில், - வெப்பம்
நண்ணிய பாலைக் காட்டில் - மகள்
நடக்க வேண்டிமுன் அடக்க மாய்த்தெய்வம்
லிபித்ததோ மண்டை ஓட்டில்?
மையல்கொண்டொரு பையல் பின்செல
வயது மீறின மாதோ? - இந்த
மார்க்கம் தோன்றின தேதோ? - சென்ம
வாசனைப் பலன் ஈதோ? - ஐயோ!
மாதம் பத்தும் சுமந்து பெற்றஎன்
வயிறும்தான் எரி யாதோ?
செய்யபஞ்சணை யும்பொ றாது
சிவந்து கொப்பளம் ஆகும் - நெரிஞ்-
சிப்பழம் என்று நோகும் - அவள்
சீரடி களும் வேகும் - படி
தீயும் கானலில் காயும் வேனிலாம்
தீயில் எப்படிப் போகும்?
தேடினும்கிடை யாத தாகிய
திரவியக் கரு கூலம் - போலே
செனித்தபெண் ணுக்குச் சீலம் - வேறே
திரும்பின தென்ன காலம்? - கொங்கை
திரண்டி டாமுன்னம் மருண்டி டற்கெவன்
செய்தானோ இந்த்ர சாலம்?
காடுசேர்கையில் கரடி வேங்கைகள்
காட்டுமே ஆர வாரம், - அதைக்
காதில் கேட்கவி சாரம் - வைத்துக்
கலங்குவாள்; அந்த நேரம் - என்றன்
காதலி தன்னை ஆதரித் துயிர்
காப்பது வேலன் பாரம்.
11. தலைவி இரங்கல்
நேம மாய்ப்பணியண் ணாம லைக்குதவு நீதனைக்
கழுகுமலை நாதனை - நெஞ்சில்
நினைக்க நினைக்கமீறி எனைக்கொல் லுதேகாம வேதனை
கோம ளக்கடலி லேமி குத்ததிரைக் கூட்டமே!
மன்மதனும்போ ராட்டமே - செய்து
கோரமே விளைத்தால் தீருமோ எனக்கு வாட்டமே?
வெள்ளத் திரையின்மேலே துள்ளித் திரியும்சுறா மீனமே!
இனியும்உண்டோ மானமே? - கொங்கை
வீக்கம் கொண்டதனால் ஏற்கு தில்லை அன்ன பானமே.
அள்ளற் கழிக்கரையுள் மெள்ளக் குலவிவரும் ஆமையே!
கொடியகாமத் தீமையே - நாளும்
அதிகரித் திடலால் அவமதிக்கு திந்தச் சீமையே.
பொங்கு மதுமலர்கள் எங்கும் பரிமளிக்கும் புன்னையே!
பெற்று வளர்த்த அன்னையே - எந்தப்
போதும் வைதுவைது மோதுகிறாள் பாவி என்னையே.
தங்குநித் திலம்புரி இங்கித வலம்புரிச் சங்கமே!
தென்றலும் ஒரு சிங்கமே - போலத்
தாக்கவே மயங்கி ஏக்கமாய் மெலிந்தேன் அங்கமே.
மங்கை மார்கள் அத ரங்கள் நேர்பவள வல்லியே!
'பிரியேன்' என்று சொல்லியே - போன
வாசக் கடம்பின்வர நேசத்துடன் சொல்லுமோ பல்லியே?
அங்க யத்தில் நிறை பங்க யத்துள் உறை அன்னமே!
பிரியம் வைத்து முன்னமே - கட்டி
அணைத்த வேல்முருகன் தனைக்கண் காணேன் ஐயோ! இன்னமே.
12. தலைவியின் ஊடல்
ஆறுமுக வடிவேலவ னே! கலி-
யாணமும் செய்யவில்லை; - சற்றும்
அச்சம்இல் லாமலே கைச்சர சத்துக்கு
அழைக்கிறாய், என்ன தொல்லை?
மீறிய காமம்இல் லாதபெண் ணோடே
விளம்பாதே வீண்பேச்சு - சும்மா
வெள்ளைத் தனமாகத் துள்ளுகிறாய்; நெஞ்சில்
வெட்கம் எங்கே போச்சு?
மேட்டிமை என்னிடம் காட்டுகிறாய், இனி
வேறில்லையோ சோலி? - இதை
வீட்டில் உள்ளார் கொஞ்சம் கேட்டுவிட்டால், அது
மெத்தமெத்தக் கேலி!
தாட்டிகம் சேர்கழு காசல மாநகர்
தங்கும்முரு கோனே! - இந்த்ர
சாலத்தி னால் என்னைக் காலைப் பிடித்தாலும்
சம்மதியேன் நானே.
'அக்கரைக் காரர்க்குப் புத்திகொஞ் சம்' என்பார்
ஆரும்பழ மொழியே,- நீயும்
அப்படி என்னைப் பலாத்காரம் செய்திடில்
ஆச்சுது பெண் பழியே.
சர்க்கரைக் கட்டிபோல் வள்ளிதெய் வானையாம்
தையல்உனக் கிலையோ? - இரு
தையலரைச் சேரும் மையல் உனக்கென்ன
தானும்ஒரு நிலையோ?
அம்புவி மேல்சிறு பெண்களில் மேல்உனக்கு
ஆசை ஏன் காணுதையா? - நீர்
ஆக்கப் பொறுத்தாலும் ஆறப் பொறாதவ-
ராகவேதோணு தையா!
நம்பும்அண் ணாமலை தாசன் பணியும்
நளினமலர்ப் பாதா! - கொஞ்ச
நாளைக்கு மேல் ஒரு வேளைக் குலீலை
நடத்தினால் ஆகாதா?
13. பாங்கி தலைவி நிலைமை கூறி தலைவனை அழைத்தல்
கண்ணா யிரம்படைத்த விண்ணூ ரிடம்தரித்த
கனவயி ரப்படை யவன்மக ளைப்புணர் கத்தனே! - திருக்
கழுகு மலைப்பதி அனுதினம் உற்றிடு சுத்தனே!
அண்ணா மலைக்கிடர்கள் நண்ணா தொழித்து மிக
அகமகி ழத்தன தருளை அளித்திடும் ஐயனே!-திசை
அரவமும் வெட்குற மயிலை நடத்திய துய்யனே!
மின்னோ கமலமலர்ப் பொன்னோ எனப் புகல
விகசித ரத்தின நகைகள் தரித்தொளிர் மெய்யினாள்; - கதிர்
விரவிய சித்திர வளையல் அடுக்கிய கையினாள்.
எந்நேர மும்மனதில் உன்மீதில் மையல் கொண்டு
எழுதிய சித்திரம் எனமவு னத்தினில் இருக்கிறாள்;- வள்ளத்து
இடுகிற புத்தமு தினையும் வெறுத்தரு வருக்கிறாள்.
கும்பத் தினைச்சினந்து வம்பைப் பிதிர்த் தெழுந்து
கொடி இடை முற்றிலும் ஒடியவளைத்தது கொங்கையே; - மணம்
குலவு கடப்பினில் நினைவது வைத்தனள் மங்கையே.
செம்பொற் சிலம்புகள் புலம்பப் பெரும்தெருவில்
திகழ்தரு சிற்றில்கள் புரிவதை விட்டவள் தியங்கினாள்; - உன்றன்
திருவழ வைக்கரு விழியுள் இருத்தியே மயங்கினாள்.
போராடு தற்குரிய கூரார் மலர்க்கணைஎய்
பகழ்பெறு சித்தச தனுவத னைப் பொரு ருவத்தாள்;- தவம்
புரிபவ ரைத்தன தடியில் விழப்புரி பருவத்தாள்.
சீராக மெத்தைதனில் நேராக வைத்துனது
திருவத ரக்கனி அமுதை அருத்தியே சேரையா!-இந்தத்
தெரிவை உளத்துனை யலது பிடித்தவர் ஆரையா?
14. தலைவி பாங்கியைத் தூது விடுதல்
பூமிமெச் சிடும்அண் ணாமலைக் கோர்துணை யானவன்
மயில் வானவன், ஒரு கானவன் - எனப்
புனத்தைக் காக்கும் வள்ளி
தனத்தைப் பார்க்க மெல்லப் போனவன்.
சேமமுற் றகழ காசலே சனையே தேடுதே;
மனம் வாடுதே; கால்தள் ளாடுதே; - இரு
செங்கை தங்கி நின்ற
சங்கி னங்கள் கழன் றோடுதே.
தென்ற லானபுலி வந்து கோபமொடு சீறுதே
தடு மாறுதே; இதழ் ஊறுதே; - மெத்தத்
தீமை யாம் இருளில்
காம லா கிரியும் மீறுதே.
குன்ற மானமுலை ரண்டும் மார்பில் விம்மிக் கொண்டுதே;
தேமல் மண்டுதே; வெப்பும் கண்டுதே; - மலர்க்
கொம்பு போல மென்ம-
ருங்கு லான தும்து வண்டுதே.
உள்ளம் மெல்லமெல்ல லீலை செய்ய நினைந் துருகுதே;
முத்தம் கருகுதே; கண்ணீர் பெருகுதே; - என்றன்
உச்சிக் கேறிக் காமப்
பித்தம் கிறுகி றென்று வருகுதே;
வள்ளம் மேவும்பசும் பாலும் தேனும்அரு வருக்குதே;
கசந் திருக்குதே; துன்பம் பெருக்குதே; - வன்ன
வாரும் தாறு மாறாய்க்
கீற வே தனமும் பருக்குதே.
பார மானகொங்கை ஓரம் வேடன் அம்பு பாயுதே;
உடல் தேயுதே; மலர் தீயுதே; - கொடும்
பாவி யான மதி
ஆவி சோர வந்து காயுதே.
மார வேளினாலே கோர மானகாம் வாதையே
எனும் தீதையே தீரத் தூதையே! - சொல்லி
வாட்டம் தீர் குகனைக்
கூட்டி வாடி யடி கோதையே!
15. பாங்கி தலைவியின் அவயவத்தருமை சாற்றல்
சந்தவரை வந்தகுக நாதா! - பரை
அந்தரி மனோன்மணியாம் மாதா - தந்த
சண்முக சடாட்சரவி நோதா!
குழைத் காதா! சூரர் வாதா! - வன
சஞ்சரிவெண் குஞ்சரிச மேதா!
செந்தமிழ்அண் ணாமலையை ஆளாக் - கொண்ட
கந்தஅர விந்த மலர்த் தாளா! - கள்க-
சிந்திடும் கடம்பணியும் தோளா!
நெடு நாளா(ய்) மற வாளா(ய்) - உனைத்
தேடோ ர்குயில் பேடுருவம் கேளா(ய்)!
சுந்தரம் மிகுந்தகுழல் மேகம்; - அவள்
சொந்தநுதல் இந்துவிலோர் பாகம்;- திருந்-
தும்புருவம் வில்லோடுசி நேகம்;
தவ யோகம் வென்ற நேகம் - வஞ்சம்
துஞ்சுவிழி நஞ்சினிலும் வேகம்.
சந்தம்மலி கின்றமுகம் இந்து; - வள்ளைத்
தண்டுசெவி என்பதுவே தந்து; - கன்னம்
சாணை; நுனி நாசியின்ப சுந்து
மதுச் சிந்து தல்பொருந்து - சிறு
சண்பகம்; துப் பாம்இதழ்சி வந்து.
செங்குமுத புட்பமதை ஒத்து, - மொழித்
தேனுதவும் வாய்நகையோ முத்து; - கண்டம்
சீதரனார் ஊதுவர நத்து;
சொல்தி தித்துப் பாகைக் கைத்து - விடச்
செய்யும்என உன்னலாம்உ ளத்து.
குங்குமவா கங்கசகோ தண்டம்; - முன்கை
கோமகர யாழ்உவமை விண்டம்; - கையைக்
கோகனக மோஎனம ருண்டம்;
ஆழி மண்டங் குலி கண்டம் - நெருங்-
கும்கெளிறு சிறுகிளித் துண்டம்.
கட்டுகதிர் பட்டுமணி வம்பு - கிழி
பட்டுவழி விட்டிடஎ ழும்பு - கிற
கட்டழகாம் வட்டமுலை, செம்பு,
யானைக் கொம்பு, சிவ சம்பு - குடங்
கைக்கும்வளை யாதபொற்ப றம்பு.
மட்டுமிழ் பசுந்துளப மாலே - செங்கண்
வளருகிற தவிசெனும்ஓர் ஆலே - சிறு
வயிறு; மயிர் சிற்றெறும்பு போலே;
விரை வாலே வெள்ளம் மேலே - சுற்றி
வந்தசுழி உந்தி; இடை நூலே.
தாமரவ படமென் அல்குல் உண்டு; - தொடை
தங்கநிறச் செங்கதலித் தண்டு; - முழந்
தாட்குவமை கேட்கில் அவை நண்டு;
சினை கொண்டு வளர் பெண்டு - வரால்
தானே கணைக் கால் எனும் இரண்டு.
பரடு, தராசு உயர்குதி, கந் துகமே; - அணி
பரவுபுற வடியிணை, புத் தகமே; - கடற்
பவளமதி தசவிரல்கள் நகமே;
அம்போ ருகமே பத யுகமே; - மயில்
பண்ணும் இளஞ் சாய ஐயா சகமே.
மேனகையோ டுருவசிஇந்த் ராணி - செல்வம்
மிக்கதிரு முக்யகலை வாணி - இந்த
மின்னரசி தன்னுருவம் காணில்
நெஞ்சு நாணி மலர்ப் பாணி-தலை
மீதுகுவித் துத்தொழுவார் பேணி.
சேனையொடு வந்துகருங் காவி-அம்பைச்
செய்யகருப் புச்சிலைவைத் தேவி - சண்டை
செய்யும்ஒரு மன்மதனாம் பாவி
எங்கள் தேவி உடல் ஆவி - தனைத்
தீர்க்குமுனம் காத்திடுவாய் மேவி.
16. தலைவன் வருத்தம் சாற்றல்
வன்னத் தினைமாவைத் தெள்ளியே - உண்ணும்
வாழ்க்கைக் குறக்குல வள்ளியே! - உயிர்
வாங்கப் பிறந்திட்ட கள்ளியே! - இரு
வட மேருவை நிகராகிய புயமீதணி பலமாமணி
மாலை படீர்எனத் துள்ளியே - விழ
வான்மதி வீசும்தீ அள்ளியே.
கன்னத் தினில்குயில் சத்தமே - கேட்கக்
கன்றுது பார்என்றன் சித்தமே; - மயக்
கஞ்செய்பு தேகாமப் பித்தமே; உடல்
கனலேறிய மெழுகாயின தினியாகிலும் அடிபாதகி!
கட்டி அணைத்தொரு முத்தமே - தந்தால்
கைதொழு வேன் உன்னை நித்தமே.
வாடி யிருப்பது வஞ்சமோ? - பொல்லா
வன்கருங் கல்லோஉன் நெஞ்சமோ? - கொண்ட
மையல் பயித்தியம் கொஞ்சமோ? - சிலை
மதனாகம முதுகாவியம் அதிலேமொழி சுகலீலையின்
மார்க்கம் உனக்கென்ன நஞ்சமோ?- ஒரு
வார்த்தை உரைக்கவும் பஞ்சமோ?
தேடக் கிடையாத சொன்னமே! - உயிர்ச்
சித்திர மே! மட அன்னமே! - அரோ
சிக்குது பால்தயிர் அன்னமே - பொரு
சிலை வேள் கணை கொலைவேலென விரிமார்பினில் நடுவேதொளை
செய்வது கண்டிலை இன்னமே,- என்ன
செய்தேனோ நான்பழி முன்னமே?
17. தலைவி பாங்கிக்குக் கூறல்
செந்தில் மாநக ரம்தனில் மேவிய
தேசிக னாம்முரு கேசன்; மயில்
வாசியில் ஏறும்உல் லாசன்; - சிறு
திங்களும்பண சங்கமாசுண-
மும்துலங்கிய கங்கையாறொடு
செஞ்ச டாடவி மீதணி வார்செவி
சேரமுன் ஓதுஉப தேசன்; - அடி
யார்தமை ஆள்விசு வாசன்.
எந்த நேரமும் வந்தனை செய்தடி
எண்ணும் அண் ணாமலை தாசன் - துதி
பண்ணும்மெய்ஞ் ஞானவி லாசன், - என்னோடு
இந்தெழுந்து தயங்குமாலையில்
வந்துவண்டு முழுங்குசோலையில்
இன்ப சாகர மாகிய லீலைகள்
அன்புட னே செய்தான் மானே,- அந்தச்
சம்ப்ரமம் என்ன சொல் வேனே!
மங்கை மார்பல ரும்புடை சூழ்தர
மாமலர் கொய்திடச் சென்றேன்; - அங்கோர்
பூமரத் தேதனி நின்றேன், -சந்த்ர
மண்டலங்களை வென்ற ஆனனம்
ஐந்தொடொன்று மிகுந்துவார்மது
வண்ட லோடு கடம்பெனும் ஆரமும்
வாரமும் தோன்றிடச் சேர்ந்தான்; - எனது
ஏரும்பார்த் தேகளி கூர்ந்தான்.
.பங்க யாசனம் மேலுறை நான்முகப்
பாதக னும்மலர்க் கைதான் - கொண்டுன்
சோதியை எப்படிச் செய்தான்? - அடி
பஞ்சுரஞ்சினும் அஞ்சுசீரடி
கொஞ்சுரஞ்சித வஞ்சியே! புவி
பட்டு நீநிலை நிற்கவொண் ணா தென்று
பன்மலர் மெத்தையொன் றிட்டான்; - பின்பு
மென்மெல வந்தென்கை தொட்டான்.
8. துதி
கன்னல் சூழ்பழ னம்புடை சூழ்கழு-
காசலம்தனில் வாழ்பிர தாபனே! - கன
வாசம்எங்கும் கமழ்கின்ற நீபனே! - வளர்
காதலோடிரு போதிலும்பல
போதினால் பணி வார்மனத்துறை
காரிருட்குவை நீக்கிய தீபனே! - அதி
சூரபத்மனைத் தாக்கிய கோபனே!
சென்னி மாநகர் வாழும் அண் ணாமலை
செப்பும்செந் தமிழ்க்கதி நேசனே! - சிவ
சுப்பிரமண் யனெனும்பிர காசனே! - கொடுஞ்
சிந்தைநைந்து புலம்பிநின்திரு
மந்திரம்தனில் வந்தடைந்துனைச்
சேவிக்கும்குணம் என்றெனக் காகுமோ? - மிகு
பாவிக்கும்துயர் எப்படிப் போகுமோ?
வந்த வர்க்குப் பழம்புளிக் காடியே
தந்திடச்சகி யார்தமைத் தேடியே, - பிர -
பந்தம் எத்தனை எத்தனை கோடியே - குலை
வாழையின்பழ மோகனிந்திடும்
மாழையின்கனி யோஎனும்படி
மதுரிதம்பெ றவேநிதம் பாடியே, - ஒரு
விதப்பரிசும் பெறாதுளம் வாடியே,
வெந்த ரைக்குள் வெடிப்பிடைப் பாலையே
சிந்துபித்தரைப் போல்வெறும் வேலையே - செய்யும்
வீணன்நான்விளங் குன்தண்டைக் காலையே, - எந்த
வேளையும்துதி கூறவும் துயர்
நீளும்வெம்பவம் மாறவும்புரி
வில்வவேணிசேர் கற்பக வாலையே - தரு
செல்வனே எனும் கற்பகச் சோலையே!
19. தலைவியின் ஊடல்
செந்தூர் வளர்முருக நாதா! - அருணோதயச்
செந்தா மரைநிகரும் பாதா! - திகழ்
சிந்தையில்அண் ணாமலைசெய்
நிந்தையை எண் ணாது அருள்செய்
சித்திர வேல்கரவி நோதா!- உனதுவஞ்சச்
செய்கைஇன் னமும்தெரி யாதா?
சந்தோச மாகவே போய் வீடு - வீடுகள் தோறும்
சரசம் கொண் டாடுவதே பாடு; - வந்துன்
தன்னுடனே சேர்பிரியக்
கன்னியர்கள் பேர்வரியச்
சகஸ்திரம் வேணுமேவெள் ளேடு! - தனித்தோரிடம்
தங்கியே மேயுமோவெள் ளாடு?
வேசையர் வாசலிலே சென்று - தம்பலங்களை
வெட்கமில் லாமல்வாங்கி மென்று, - தின்று
மெத்தப்பயித் தியம் கொண்டு,
சுற்றித்திரிந் தேம ருண்டு,
வீடுதேடி வந்தாயே இன்று; - தொடவேமாட்டேன்
வேணும் என் றாலும்போடு கொன்று.
ஆசை கொண் டவருக்கு ரோசம் - கிடையாதென்பார்
அப்படிக் காகில்விசு வாசம் - வைக்கும்
அந்தவிலைப் பெண்டுகளைச்
சொந்தமெனக் கொண்டனையே,
ஆனாலும் உனைப்போல மோசம் - போனவர் உண்டோ ?
ஆரும் செய்கி றாரேபரி காசம்!
கந்தா செய்யேதே பல வந்தம் - புதுமலரைக்
கசக்க அறிவார்களோ கந்தம்? - சற்றும்
காதலிலா மல்சினந்த
மாதைவலி யப்பிடித்துக்
கலந்தால் வருமோசுகா னந்தம்? - உனக்கெனக்கும்
கனவிலும் இல்லைஇனித் தொந்தம்.
."எந்தப் பிறப்பினுமே வல்லி, - உனையல்லாமல்
எவளையும் சேரேன் என்று சொல்லி - ஊரில்
எத்தனை பரத்தையையோ
நித்தமும் அணைத்தனையோ?
இப்படிக் காசிகாஞ்சி டில்லி - கன்யாகுமரி
எங்கம்பார்த் தாலும் இல்லை சல்லி!
கங்கு கரை இல்லையே சாடை - சொல்லிவைபவர்!
கட்டுகி றாயே எதற் காடை? - மானம்
காக்கவல்ல வா? என்பாலே
சேர்க்கையிலா தே அன்பாலே
காத்தாயே வேசைமாதர் மேடை! கைவசமாமோ
கலப்புல்லுத் தின்றாலுமே காடை?
குங்குமம் சந்தனம் சவ் வாது - சுககதம்பம்
குமுகுமென் றேபுயத்தின் மீது - வாசம்
கொட்டுது எழில் நெற்றிசந்தப்
பொட்டொடுப கட்டுதுஇந்தக்
கோலம் புதிதாய்வந்த தேது? - நடந்ததெல்லாம்
கொஞ்சம் சொல் வாய்பண்ணாதே சூது.
20. தலைவி வருந்தல்
பாளை வாய் கமுகில் வந்தூர் வளை பாய் வயல்சூழ்செந்தூர்
பாலனம் புரியவந்த புண்ணியா! போகம்
காலையும் செய் கிறாய் முன்பின் எண்ணியா?
."வேளை யோ விடிந்ததையா, நாளை வாறேன் இன்றுகையை
விட்டி", டென்றா லும்விடாமல் பிடிக்கிறாய்! - பாலை
ஒட்டவே மடி அரிந்து குடிக்கிறாய்!
நித்தமும்அண் ணாமலை செய் குற்றமெண்ணா வேலா! கண்டோர்
".நின் இதழ்ப் பவளங்களில் வெள்ளை ஏ - தென்றால்
என்ன சொல்வேன் நான் ஒரு பெண் பிள்ளையே?
மத்தக நிகர்தனத்தில் மெத்தநக ரேகைபட்டு
மாலைப்பிறை போல் அனந்தம் தோணுதே!- இது
கேலித்துறை யாகுமென்று நாணுதே!
உன்னையும், விவாகமில்லை என்னையுமே அன்னைகண்டால்
ஒன்றும்சொல்லி டாளோ, அட பாவியே? - ."இன்று
தின்றிடுவேன்" என்பாள் பச்சை நாவியே.
".சன்னை சாடை யாகவந்தென் தன்னையணைவாய் நீ" என்று
சாற்றிடும் என் உண்மையான சொல்லையே, - விட்டுக்
கூற்றுவன் போல் வந்தாய்என்ன தொல்லையே!
சாறுசேர் கரும்புருசி யாயிருந்தா லும்வேரோடோ
தான்பறித்துத் தின்னுவது ஞாயமோ? - முழு
ஆண்பிள்ளைக்கு இதுதான் சம்ப்ர தாயமோ?
நூறுதரம் மாறிமாறி வேறுவேறு லீலைசெய்தால்
நோகுமோநோ காதோ எனக் குள்ளமே? - கொண்டு
போகுமோகி ணற்றுநீரை வெள்ளமே?
21. நற்றாய் இரங்கல்
என்னடி நான் பெற்ற மங்கை?
இரு கொங்கை-
களில் சங்கை? - எண்ண
எத்தனை கோடியோ செங்கை - விர-
லிடமேவளர் நகரேகைகள்
மிகவேபடு வகைதோகையில்
ஏய்ந்த முருகவேள் கிள்ளி - உனைத்
தோய்ந்ததோ சொல்லடி கள்ளி?
அன்னவயல் செந்தூர் வாசன்,
மந்த காசன்,
அன்பர் நேசன், - நாளும்
அண்ணா மலைக்கவி ராசன் - பாடும்
அமுதச்சுவை தருமுத்தமிழ்
களபத்தொடுகமழ் பொற்புய
அற்புத வேலன் செய் சாலம் - தன்னால்
கற்பழிந் தாயோ இக் காலம்?
சித்தசன் கொக்கோக நூலை
அந்தி மாலை-
யொடு காலை - வைத்துச்
சிந்திப்ப தாச்சுதுன் வேலை! - சிமிழ்ச்
சின்னத்தன மடவஞ்சியே!
உன்னைப்பணி வொடு கெஞ்சியே
சேவற் கொடியோன் பூஞ் சோலை - தனில்
தேடிப் புரிந்தானோ லீலை?
மெத்தப் பிரமை கொண் டேங்கி,
கொங்கை வீங்கி,
நேசப் பாங்கி - மாரை
விட்டுத் தனியாக நீங்கி, - வடி
வேலுக்கதி பதி மையலே
மேலிட்டல றியதையலே!
வெட்கத்தைப் போகடித் தாயோ?-காம
வேசைத் தனம்படித் தாயோ?
இன்னம் விவாகமே இல்லை,
கமழ் கொல்லை
வெடி முல்லை - குழல்
எங்கும் சிங்காரித்து வில்லை - சந்தம்
இனிதாகிய களபம்தன
கனமேருவில் அணிகின்றனை,
இப்படியும் தலை விதியோ? - பெண்ணே!
செப்படியே இது மதியோ?
சன்னத மாய்க்காமப் பேயே
பிடித் தாயே!
வேப்பங் காயே - போலச்
சாதம் வெறுத்தாயே நீயே! - பெருஞ்
சண்டாளியே! கண்டோ ர்திரள்
கொண்டேபழி விண்டார்நம
சாதிக்கெல்லாம் ஒரு வடுவே, - வரத்
தான்பிறந்தாய் வந்து நடுவே.
வண்ணப் பயிரவி தோடி
ராகம் பாடி
உற வாடி
மஞ்சத்தி லேசென்று கூடி, - உன்றன்
வன்னப்படி கம்போல் ஒளிர்
கன்னத்தினிலும் தேனிதழ்
வாயிலும் கொஞ்சம்பற் குறியோ - வைத்தான்!
வாலை மகனுக்கும் வெறியோ?
எண்ணங் குமரவேள் பாலே
சென்ற தாலே
இனி மேலே-வயி
றெப்படி யாகிலும் சூலே - வரும்
என்றே என துளம் அஞ்சுது
நன்றே சொலில் என்வஞ்சகம்
இல்லை; கிழவன் சொல் வீணைக் - காரர்க்
கேற்காதென் றாலும்கண் ணாணை.
22. காலம் நீடத் தலைவி வருத்தல்
மஞ்சுநிகர் குந்தள மின்னே!
சத தளங்கள்
விக சிதம்செய்
வாரிசாத னத்தில்வாழ் பொன்னே! - செய்ய
வன்னமே ஒளிர் சொன்னமே! நடை
அன்னமே! இடை பின்னமே பெற
வந்ததன பார வஞ்சியே!
அதி விருப்பத்-
துட னுரைக்கும்
வார்த்தை யைக்கேள், ஆசை மிஞ்சியே.
அஞ்சுவய தான பருவம்-
தனில் எனது
சிறு மனைமுன்
அங்கசவேள் போல உருவம் - பெற்றே
அன்று வந்து நயந்து மாலையில்
நெஞ்ச ழிந்து மயங்க வேபுணர்
ஆறுமுக வேல வனையே
நினைவு கொண்டே,
மதி மருண்டே,
ஆறுதில்லை, என்ன வினையே!
என்னிரண்டு கண்ணும் தேடுதே
கனவி னிலும்
மனது நினைந்-
தேக்கமுற் றலைந்து வாடுதே - முன்னம்
என்றன் ஆகம தொன்ற வேபுணர்ந்-
தன்று போனகு கன்றன் ஆவலை
எண்ணியெண்ணி என்ன பயனே?
உருகி நிதம்
மறுகி விழ
இப்படி விதித்தான் அயனே.
சென்னிகுளம் மேவிய வாசன்
இனிய துதி
அனுதி னமும்
செய்திடும்அண் ணாமலை தாசன் - பாடும்
சிந்து மீதுமி குந்த மோகமு-
றும்சு சீலகு கன்ச ரோருக
திவ்வியமு கங்கள் ஆறுமே,
கண்களில் கண்டால்
பெண்களுக் கெல்லாம்
செவ்விதழும் வாயும் ஊறுமே.
23. பாலனைப் பழித்தல்
அங்கத்தில் பசப் பாச்சே! - அழகு
அவ்வளவும் குடி போச்சே! - முந்தி
ஆதிபிர மாவகுத்த சோதனையி னால்உதித்த -
தையோ! இதும் பொய்யோ?
தங்கக் கிண்ணங்கள் போலே - மின்னும்
தனங்களும் சாய்ந்த தாலே, - கந்தன்
தன்னை மரு விச்சுகித்த கன்னியர்க்கு ளெல்லாம் மெத்தத்
தாழ்ந்தேன், நொந்து வீழ்ந்தேன்.
சாமம் நாலினும் பிரியான் - என்னைத்
தனிக்கவிட் டெங்கும் திரியான், - கர்ப்பம்
தன்னையறிந் தென்னையும்விட் டன்னியராம் கன்னியரைச்
சார்ந்தான்; ஆசை தீர்ந்தான்.
".காமம் மீறு" தென் றழுவான், - பின்னும்
காலிலே வந்து விழுவான், - அவன்
காசுதனில் ஆசைமிகும் வேசையர்கள் மீதினிலே
கடந்தான்; அங்கே நடந்தான்.
".கோடிச் சேலைக்கொரு வெள்ளை, - இளம்
குமரிதனக் கொரு பிள்ளை" - என்று
கூறுகின்ற வார்த்தை நெஞ்சில் தேறி எனக் கானதென்று
கொண்டேன்; மனம் விண்டேன்.
வேடிக்கை யெல்லாம் விடுத்தேன்; - பஞ்சு
மெத்தையும் தள்ளிப் படுத்தேன்; - கோடி
மின்னலொளி போலிருந்த எந்நிறமெல் லாம் மெலிந்து
வெளுத்தேன் பிஞ்சில் பழுத்தேன்.
சென்னி மாநகர் வாசன்; - துதி
செயும் அண் ணாமலை தாசன்; - தர்ம
சிந்தையில் இருந்து நித்தம் வந்ததுய ரம் தவிர்க்கும்
சீலன், உமை பாலன்.
கன்னி மாமதில் சூழும் - திருக்
கழுகு மாமலை வாழும் - மயில்
கந்தன், ஒரு மைந்த! நீ பிறந்தபோ துலைந்த தெண்ணிக்
கழித்தான்; மெட்டை அழித்தான்.
அந்தரப் பிழைப் பாச்சே! - நட்-
டாற்றுக் கோரையாப் போச்சே! - இங்கே
ஆறுமுக நாதன்மனை தேடிவரும் வேளை தனி
ஆச்சே, பெரு மூச்சே.
சந்தனம் பன்னீர் வில்லை, - பூசச்
சம்மதம் இப்போ தில்லை; - சிவ
சண்முகக் குமாரவேளுக் கின்னமும்என் மீதில் ஆசை
தருமோ? மோகம் வருமோ?
அழுதா லும் துயர் போமோ? - இந்த
ஆபத் தும்வர லாமோ? - தோழன்
ஆறுமுக னைப் பிரிந்து போகமே நினைந்துருகு-
தாவி, அடா பாவி!
பழுதில் லாதகொக் கோகம் - தனில்
பகரும் காமசை யோகம்; - அந்த
பச்சமுற்ற வேலவனை இச்சணத்தி லே பிரித்தாய்
பாலா! எம காலா!
24. தலைவனிடம் வந்து செவிலித்தாய் கூறுவது
கந்தம்சேர் தருபொழில் திகழ்கழு-
காசல மாநகர் வாழ்முருகா!
கஞ்சம்தான் என ஒளிர் விகசித
கரதல மாதவன் மால்மருகா!
கருதும் அண்ணாமலை தேசிகனே!
அருணை உண்ணாமுலை யாள் மகனே!
கங்குல்பொருந் தும்குழல்தங்-
கும்சிறுபெண் ணும்தினமும்
கண்டு மயங்கினள் அணைவாயே!
தொந்தம்தோம் தொதிங்கண வென்று
துலங்கும் அரம்பையர் ஆடிடவே,
துன்றும்தே மழை என வீணைகள்
தும்புரு நாரதர் பாடிடவே,
சுடர்மர கதம்நிகர் தோகையிலே
திடமொடு பவனி நீ போகையிலே,
தொங்கல்களும் சங்கினமும்
பொன்கலையும் சிந்தினள்உன்
சொந்தம் எனும் கனி அணைவாயே.
அண்டம்பா தலமதி லும்கிடை-
யாத சவுந்தர ரூபவதி;
அஞ்சம்பால் அனுதினம் அமர்புரி
அங்கச ராசன் அடைந்தநிதி;
அகிலமும் அருள்பிர காசமயில்;
மிகமது ரிதமொழி பேசுகுயில்;
அன்றிலும் இந் தும்கடலும்
கண்டுமருண் டஞ்சுதல் கொண்-
டங்க மெலிந்தனள் அதுபாராய்!
ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டிலிருந்து எடுக்கப்பட்டவை
அண்ணாமலை ரெட்டியார் தமக்கு நோய் வந்ததைப் பற்றிப் பாடிய பாடல்கள்
சங்கரநயினார் கோயிலில்...
ஓரராசை யங்களிரண்
டெடுத்தனநட் டனத்தரம்பை
யோர்விண் ணாட்ட
மரராசைக் கமலமின்னார்
தம்புருடர் கிம்புருடர்
வரஞ்சேர் தாப
தரராசை வசித்தாந்தப்
பழம்பொருளே யெனுந்துதியு
ததிவாய் போர்ப்ப
வரராசை யெனப் பெயர் பூன்
டெழுபுவிக்குஞ் செழும்புகழ்க்க
வசஞ்செ யூரில் 302
கோமதியம்மன் தவம் செய்யும் தபசுத் திருவிழாவில்
மாமதியா னனமைந்து
படைத்தமண வாளன்முன
மனத்தூ டின்பக்
காமதியா னனமீதற்
றியோகியற்றி னானெனும்ப
கையுட் கொண்டு
கோமதியா னனங்கை தனித்
திருந்துதவம் புரிந்தந்தக்
கொண்கன் தன்னைத்
தாமதியா னனையமொடு
தனைத்தேடி வரப்புரிவித்
தகவி ழாவில். 303
ஊற்றுமலை ஜமீன்தார் நடத்திய விழாவில்
பன்மலரைப் புறங்கண்டாய்
தனுவெடுத்துத் தனுக்கரும்பைப்
பற்று றாம
லன்மலரைம் பாலருக்கு
வருமதனா நீபுரிசா
றதனிற் புன்னை
நின்மலரைத் தொழுவார்க்
கமரர்பதந் தருபவன்போ
னிலத்துப் பூவாப்
பொன்மலரை யின்னரம்பைக்
களியொடுவிண் வழியளிக்கும்
போது தன்னில். 304
ஜமீன்தாரைக் கண்டு கவிபாடி, சென்னி குளத்துக்குப் போன பின்
நிற்கண்டு களிகூர்ந்து
துறைசை யிற்சுப் பிரமணிய
நிமலன் மேற்செய்
கற்கண்டு கசக்குமது
ரிதக்கவிசொற் றுனது சிரக்
கம்பத் தானெஞ்
சிற்கண்டு பேரின்பத்
தொடுவிடைபெற் றணிவிடங்கத்
திரள்கள் சூன்மங்
குற்கண்டு வண்டசையு
மணிமாடச் சென்னிநகர்க்
குப்போம் பின்னர் 305
அரையாப்பினால் பட்ட கஷ்டம்
ஆதியிலக் கணப்படியே
யுதித்திரண்டிற் கடங்காத்துன்
பாக்கி மூன்றை
மேனியிற் பலவிதமாச்
செலவுசெயு மாறுபுரி
வித்த நாலிற்
பாதியினா லியான் பட்ட
பாடு சொல முடியாது
பஞ்ச மென்ப
தேதுமில்லை யோதுமில்லை
யுகந்துதெரு வுலவுதற்கு
மேது வில்லை. 306
"நோய் தீர்ந்ததும் வீரகேரளம் புதூருக்கு வருவேன்"
பற்பலபண் டிதர்புரிந்த
வைத்தியத்தாற் பத்தியத்தாற்
படிவஞ் சாலத்
துற்பலமுற் றெய்த்ததிது
தீர்ந்துககம் பிறந்தபின்புன்
சுமுகங் காண
நற்பலவின் முட்கனியி
னுட்கனியி னறாவருவி
நளிர்கா லோடி
யுற்பலமென் மலர்த் தடங்க
ணிறைத்திடுதென் வீரைநகர்க்
குறுவன் மாதோ. 307
"சீதையிடம் அனுமன் கொடுத்த ராமனின் கணையாழியைவிட ஜமீன்தாரின் கடிதம் சிறந்தது"
தருவா ழிமயவர்பிரான்
றனையனைய சுகபோக
சம்ப னானான்
வெருவாழி கடந்தேற
நீயருளோர் சுபநிருபம்
விரித்தேர்க் கொற்றைக்
குருவாழி ரவிகுலரா
கவதூத னசோகவனக்
கொடிக்கன் றீந்த
திருவாழி எனினுமது
சிறப்பிலதேல் வேறுவமை
செப்பற் பாற்றே. 308
"பகவான் உனக்குக் கிருபை செய்வான்" என்று ஜமீன்தார் எழுதிய கடிதம் கண்டதும் அயர்ச்சி பறந்தது
நன்னிருப குலதிலக
நராதிபசற் குணதரவென்
னாளு மன்பின்
முன்னிருப கவானுனக்குக்
கிருபைசெய்வா னெனும்வாழ்த்து
மொழிக ணாட்டி
யன்னிருபத் துனதுபங்க
யக்கரந்தீட் டக்கரங்கண்
டயர்ச்சி யெல்லாம்
பன்னிருப கலுமுளைக்கப்
பரந்தவிருள் பரந்ததுபோற்
பரந்த தாலோ. 318
மேற்படியாரின் கடிதம் கண்டு வெய்ய் வியாதி எங்கோ போய்விட்டது
புவியாதி பதியேதென்
பொதிகைவரைத் தமிழ்முழுதும்
புகுந்து நின்ற
செவியாதி காந்தமெலாஞ்
செறிந்தபுக ழாகரநின்
செங்கை யால் யான்
றவியாதி துசமயத்தி
லருணிருபத் திலகுறுமஞ்
சனங்கண் டென்வெய்
யவியாதி வெவ்விடம
திவ்விடம்விட் டெவ்விடமோ
வடைந்த மன்னோ. 319
மேற்படியாரின் கடிதம் கண்டு பிணி தகர்ந்து இன்பம் பெற்றது
மன்னாகப் படிப்பகடு
மதன்சிலையோ டடிமுடியே
வாய்வாய் மேய்ந்து
புன்னாகப் பொதும்பர்நறு
நிழறொறுங்கண் வளர்வழுதிப்
புகழ்நா டாளு
நின்னாகப் பேரளியா
லெற்கருட னிருபம் வந்து
நிலவ லாலே
யென்னாகப் பிணிமுழுதுந்
தகர்ந்தறப்பெற் றனன்பரம
வின்பந் தானே. 320
பிணி ஆறு மாதம்; சுரம் இரண்டு மாதம்
என்பணிய கலக் கடவு
னிடத்தினின்முத் தமிழுமுண
ரியற்கும் பன்கம்
பன்பணியத் தருங்கேள்வி
படைத்தவித யாலயபூ
பாலா மாலாய்
முன்பணிய வினையாலோர்
பிணியாறு திங்களிற்போய்
முடிந்த தப்பால்
வன்பணிய சுரமிரண்டு
மாதமிருந் துறுத்தியால்
வருந்தினேனால். 323
கடவுள் கருணை புரிந்தால், வீரகேரளம்புதூர் நவநீத கிருஷ்ணப் பெருமாள் கோவில் திருவிழாவுக்குவரத் தடையில்லை
முருக்கவிழா நின்ற மலர்
கருக்குமித ழரம்பையரின்
முன்றிற் பாலித்
தருக்கவிழா மதுப்பிலிற்றும்
வீரைநகர்க் கராமகுட
சயன மாறன்
பெருக்கவிழாச் சிறப்பினையு
நீகவிக்குப் புரிசிரக்கம்
பிதமும் யான்பார்த்
திருக்கவிழாத் திருக்கருணை
புரிகுவனேற் றடையறவந்
தெய்து வேனே. 325
"சாப்பிட்டது சீரணிக்க மருந்து அனுப்புக"
தாரணிக்க மருந்துமருந்
தெனக்கயவர்ப் பாடாதென்
தனைக்காத் தாய்பாங்
காரணிக்க மருந்துங்க
வரமளித்தா னட்பினுட
னாக மும்பெற்
றேரணிக்க மருந்துறந்த
புதுமதவே ளேநுகர்ந்த
தெல்லா நன்றாய்ச்
சீரணிக்க மருந்து சிறி
துளதெனில் தனுப்புவண்ணஞ்
செய்விப் பாயே. 326
"எனது இல்செலவுக்காகவே நூறு ரூபாயும் எனக்கு அளிப்பாய்"
மீனூறு வசக்கிடையா
மெல்லியலார் பகலிரா
வேழ மாரன்
றானூறு படாதெழுந்து
வந்தனனென் றுரைத்திடுஞ்சுந்
தரரூ பாசெந்
தேனூறு வசனவித
யாலயபூ பதியெனதிற்
செலவுக் காக
வேனூறு ரூபாயு
மெனக்களிப்பாய் மனக்களிப்பாய்
விரும்பித் தானே. 289
"என் அகத்துக்குப் பணம் தந்திடுக"
பொன்னகத்துக் குப்பணவன்
வன்கையிலைக் கும்பணைத்த
புயவி சால
மன்னகத்துக் குப்பணவு
மணிபலவிண் மணியெனவில்
வழக்குந் தெய்வப்
பன்னகத்துக் குப்பணப்பா
ரம்பொறுத்த மருதப்ப
பாண்டிய கோவே
யென்னகத்துக் குப்பணந்தந்
திடக்கருணை முழுதினும்வைத்
திரட்சிப் பாயே. 295
"கம்பனுக்கு ஒப்பானே"
பிரமரசங் கக்கந்தக்
கவினளினத் தாரையணி
பிரமன் மாதே
வரமரசங் கக்கந்தக்
கவினளினத் தாரையடு
மழுவா னஞ்சக்
கிரமரசங் கக்கந்தக்
கவினளினத் தாரையுய்த் தோன்
கிளர்தோள் வாழ்த்தும்
பரமரசங் கக்கந்தக்
கவினளினத் தாரைபெய்கம்
பனுக்கொப் பானே. 291
கல்விப் பழக்கந்தனில் கம்பன் சிரக்கம்பம் செய...
முப்பழக்க மதுரமுற
ழியலிசைநாடக மென்ன
மொழியுஞ் செங்கல்
விப்பழக்கந் தனிற் கம்பன்
சிரக்கம்பஞ் செயவுணர்ந்த
மேலோ னேதே
யுப்பழக்கஞ் சுழலவரு
காளியொடு கூளிகளு
முவப்ப வென்னார்
குப்பழக்கந் துணித்து நெய்யுட்
குளித்துறையிற் குடிபுகும் வாட்
குடங்கை யானே. 300
"காயாவா காயமதி" என்ற எதுகை
காயாவா காயமதிக்
கொன்னலரை யேற்றுவில்லா
கவபு விச்ச
காயாவா காயமதிற்
கிளுவையித யாலயதுங்
காவே ளம்பு
காயாவா காயமதி
கம்படவென் றோதநல்லார்
கரும்பு வேப்பங்
காயாவா காயமதி
கதிராவென் றுருகுவளென்
கன்னி தானே. 7
சரிகமபதநி
சரிகமப தநியேற்குச்
சந்துசொலென் பாண்மதனே
தைக்க மார்பிற்
சரிகமப தநிசமனத்
தார்க்கருள்சங் கரவெனுமத்
தத்தி நில்லா
சரிகமப தநிதநித
மனையரருத் திடினுமருந்
தாமல் வாடிச்
சரிகமப தநியெனப்பா
டுதலைமறந் தாளிதயா
லயசற் கோவே. 42
சாயாதரங்கிணி
தினஞ்சாயா தரங்கிணியி
னும்மிவள்கட் புலனதுபோற்
றெருவிற் சிற்றின்
மினஞ்சாயா தரங்கிணித்த
னைவிதியைத் தொழுதழற்கண்
விழிக்க நான்செய்
யினஞ்சாயா தரங்கிணுசூ
தனநகில ரதிகணவா
வென்னுந் தோய்மோ
கனஞ்சாயா தரங்கிணிதே
ரெங்களித யாலயசிங்
கார மாலே. 66
நடனாராயணி
நடனாரா யணியணிவண்
டினம்பகர்கா வடுத்தெடுத்த
னங்க னாங்க
படனாரா யணியணிகொங்
கையிலெயவம் பின்றுகண்ணாற்
பார்த்தா லென்னோ
வடனாரா யணியணிவாழ்
நடராயா வென்பளென்ற
னவதி யெல்லா
மடனாரா யணியணியா
வோதிருத யாலயன்பான்
மருவித் தானே. 67
சாவேரி
சாவேரி யம்பையிர
வியனமிசை யாள்விழிவந்
தசல நேருங்
காவேரி யம்பையிர
வியனமதி யன்றிறென்றற்
காற்று மாமா
தாவேரி யம்பையிர
வியனரலை பகைமொழிக்குத்
தருந்தீ தாருப்
பூவேரி யம்பையிர
வியனமிசை யாளிதயா
லயபூ மானே, 68
காம்போதி
எப்போதுங் காம்போதி
வண்டிசைக்குங் குழன்முடியா
ளெழிலார் வேலோ
வப்போதுங் காம்போதி
யோவெனுங்கண்டனையிமையா
ளங்க சன்புங்
கப்போதுங் காம்போதி
சையும்பகையாம் பட்டதுசங்
கடனங் கன்னிக்
குப்போதுங் காம்போதி
சரியவணைத் தாளிதயா
லயகோ மானே. 69
மோகனம்
மோகனஞ்சு மாதவிக்குப்
போரியற்ற மூரியற்றுன்
முன்பு வேதா
வாகனஞ்சு மாதவிக்கும்
படிநிதமுந் தூதுவிடு
வாள்கை யிற்சங்
கேகனஞ்சு மாதவிக்கும்
படர்துடவைப் பூப்பறியா
ளிடைய ருங்கோ
மாகனஞ்சு மாதவிக்கும்
பாலருந்தா ளணையிதயா
லயவல் லோனே. 70
சேற்றூர் முதலிய ஊர்ப் பெயர்கள்
சேற்றூருங் கமடமதொப் பாம்புறவங் கிரிசந்
திரகிரியே யிளமுலைவஞ் சிவகிரி நூன் மருங்கு
போற்றுமெழி லூர்க்காடு பிடித் தடக்கை நிகராம்
புணராச்சங் கடம்பூர்வப் புலனைமயக் குதென்றாள்
வேற்றுமுகம் பாராப்பெண் மணியாச்சி வருமே
விறற்சிங்கம் பட்டினிமே வினும்புல்விரும் புறுமோ
வூற்றுவரை முன்படைத்த வூற்றுவரை மகிபா
வுயர்மருதப் பேந்திரனா முலகதுரந் தரனே. 268
"பரணி" முதலிய நஷத்திரப் பெயர்கள்
பாரார்முன் னெழிற்கிரதி யென்பரிநா ளிவளென்
பரணியணி யாளனங்கார்த் திகைக்குமருத்தினில் வேள்
வோராவா ரோகணிக்கப் பயந்தனள்சந் தந்தி
மிருகசீ ரிடப்புறத்து விழிதுடிக்கு ததனாற்
றீராதி ரையுங்கட லோட் டங்குவர் வெம் பழிச்சொற்
செப்புனர்பூ சம்பூசம் பூவெனிற்சீ றாதென்
றாராலும் பணியுமின்பாற் சொன்மருதப் பேந்த்ரா
வாயிலிய மகமெவையு மறிதரவல் லோனே. 269
இனிப் பாகும் இனிப்பாகும்
பெருங்குவளைத் திருக்குறுவல்
வாய்ப்பெயுமா விடம்பிரியாப்
பிரியன் கொங்கை
நெருங்குவளைத் திருக்குழையார்
மதனனித யாலயனிந்
நேரம் வந்தான்
மருங்குவளைத் திருக்குமெழி
லம்பரஞ்சோ ராதுமுத்த
மாலை போனீர்
இருங்குவளைத் திருக்குகுகா
தினிப்பாகு மினிப்பாகு
மெனக்குத் தானே. 95
மேகலையுமே கலையுமே
பொற்பவனி யாளுகின்ற பூமனித யாலயவே
ணற்பவனி வந்ததொடிந் நாள் வரையுங்-கற்பரிவைக்
கேகலையு மேகலையுற் றெண்ணிறரஞ் சோருமிடை
மேகலையு மேகலையு மே. 206
"இந்த லச்சைக்கு என் சொல்வேனே"
சுரும்பாலுந் தொடையலணி
யிருதயா லயன்பவனித்
தோற்றங் கண்டு
பெரும்பாலு மயலாகிப்
பிறர்முகங்கண் டறியாவென்
பேதை காமன்
கரும்பாலு மரும்பாலுங்
கலையாலு மலையாலுங்
கலங்கி யேத
யிரும்பாலும் பாயசமுங்
கசக்குமென்றா ளிந்தலச்சைக்
கென்சொல்வேனே. 33
ஒருவடை அப்பம்
தருவடையப் பஞ்சுகந்த
மலர்தருவார்க் கருடரும்பித்
தாவெ னப்ப
கருவடையப் பஞ்சுகந்த
வேண்மகிழ்மைத் துனன்விடுக்குங்
காலை மாலை
பெருவடையப் பஞ்சுகந்த
பாதமட வார்பழிக்க
மின்னா ளுண்ணா
ளொருவடையப் பஞ்சுகந்தத்
தணையிருத யாலயனா
முசித மாலே. 82
ரவை ரவையாக அவன்கணை மின்மெய்யைக் கொய்ய
சத்தமலைத் திருப்பரவை
மிகவெழுப்பக் கட்டிலுப
தான மெத்தை
மொத்தமலைத் திருப்பரவை
விழியருவி நீரெழுந்து
முடுக்க மாரன்
மெத்தமலைத் திருப்பரவை
ரவையாக வவன்கணைமின்
மெய்யைக் கொய்யச்
சித்தமலைத் திருப்பரவை
யாரிருத யாலயவ
சீர மாலே. 93
சடைத்தார் ஆள் ஆயிரம்பேர்
கொடைத்தாரா ளாவிருத
யாலயபூ பதியேவிண்
குலவும் வேரி
யுடைத்தாரா ளாநின்ற
நின்புயத்தி லாசைவைத்த
வொருத்திக் கன்னம்
படைத்தாரா ளாவென்று
தன்னருமைத் தாயர்கண்ணாற்
பார்த்துப் பூத்துச்
சடைத்தாரா ளாயிரம்பேர்
சந்தனசே றப்பியப்பித்
தவித்திட் டாரே. 106
வம்புத்தனம் ஆதலினால்
கந்தவம்புத்தன நேர்தேமலார்ந்து கடமெனக்கு
விந்தவம்புத்தன மீதெய்துமாரன் விழைத்தனன்மி
குந்தவம்புத்தன மாதலினாலிக் கொடியுணக்க
சந்தவம்புத்தன மாமிதயாலய தாட்டிகனே. 147
கால்தோசையும் அருந்தாள்
வேளிரதக் காற்றோசை மென்செவியுட் கேட்டரிக்கண்
ணாளிரதக் காற்றோசை யும்மருந்தாள் - காளகண்டங்
கூவநைந்தாள் வாய்கசந்தாள் கூடியித யாலயமால்
பூவனைந்தாள் வாய்தனஞ்செப்பு. 185
காவடிச் சிந்து முதல் பதிப்பு அச்சிடுவதற்கு ஊற்றுமலை ஜமீன்தார் இருதயாலய மருதப்பத் தேவர்பொருளுதவி செய்தபோது அவர்பேரில் ரெட்டியார் பாடிய பாடல்கள்
ஊற்றுமலையில் வாழும் ராஜராஜன்
படங்கிடங்கர்ச் சனைபுரியும்
பயோதரங்கண் வளர்மாடப்
பந்தி யும்போர்
தொடங்கிடங்கர் தெலுங்கர்வங்கர்
துளுவர்கரு நாடருயிர்
துடிப்புற் றோட
வுடங்கிடங்கர்க் குலம்பிறழ்பற்
பேழ்வாயங் காப்பினுட
னுலாவு கின்ற
தடங்கிடங்கர் களுந்திகழு
மூற்றுமலை மேவியவா
சராச ராசன் 329
வீரகேரளம்புதூர் ஸ்ரீநவநீத கிருஷ்ணப் பெருமாளுக்கு நேசன்
தடங்கான கத்தனத்தி
னொடுநடந்தோன் பழவடியர்
தமக்குத் தாய்க்கெண்
மடங்கான கத்தனத்தி
னகரனைப்போ ரிடைமறைத்தோன்
மகர மூருங்
கிடங்கான கத்தனத்தி
நிகர்சுருபன் கோவியராங்
கிளரும் வம்புக்
கடங்கான கத்தனத்தி
யரைப்புணர்வீ ரைக்கடவுட்
கதிக நேசன். 330
இருதயாலயப் பெயர்கொண்ட அற்புத சுசீலன்
பெட்பரத னத்துடன் பொன்
மலையிரண்டு பிறந்ததெனப்
பெருத்துக் கச்சுக்
குட்பரத னத்துணைகள்
புதைக்கவடங் காதுகிழித்
துருவ வன்பாந்
தட்பரத னத்துறழ்கந்
தரமடவா ரமிழ்துகைத்துத்
தனது செவ்வாய்ப்
புட்பரத னத்துறைச்செ
யிருதயா லயப்பேரற்
புதசு சீலன் 331
முத்துசாமி மன்னனின் நேயனான நெல்லையப்பக் கவிராஜ சிங்கம் அச்சகத்தில்
முல்லையப்பன் மானுமட
மானினியர்க் கொருமதனன்
முரணுந் தெவ்வை
வல்லையப்ப ரும்படை கொண்
டடருமுத்து சாமிமன்னன்
மகிழ்நே யன்பொற்
சில்லையப்ப ளகிபுகளத்
தனக்காந்தி மதிகொழுநன்
திருத்தாள் போற்று
நெல்லையப்பக் கவிராஜ
சிங்கநிறு வியவச்சு
நிகேத னத்தில் 332
கழுகுமலை முருகன் பேரில் பாடிய காவடிச் சிந்தை அச்சிடச் செய்து புகழைக் கைக் கொண்டான்
நாவடிச்சிந் தனந்தரலில்
விலைபகர்ந்தோன் மாவலிபார்
நல்கென் றண்டந்
தாவடிச்சிந் தனந்தமகன்
மருகனென்ற ழைத்திடுகந்
தன்றே மாரி
பூவடிச்சிந் தனந்தவனம்
பொலிகழுகா சலபதிமேற்
பொருந்த நாஞ்சொல்
காவடிச் சிந்தனந்தமச்சிற்
பதிப்பிவித்துப் புகழ்முழுதுங்
கைக்கொண் டானே. 333
No comments:
Post a Comment