Sunday, 5 May 2013

வீரகேரளன்

தொண்டியில் உள்ள குளம் நடுவில், மூவேந்தர் சின்னமான வில், புலி, மீன் மூன்றும் ஒன்றாகப் பொறிக்கப்பட்ட அரிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை ஆட்சிபுரிந்த சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தில், கி.பி., 1192ம் ஆண்டு தொண்டியில் இருந்த காளிகோவிலை, காளிகணத்தார் என்போர் நிர்வகித்தனர். அங்கு வாழ்ந்த உய்யவந்தான் சுந்தரன் ஆன வல்லப சமஞ்சிதனான பரசமய கோளரி என்பவரிடம் நிலம் வாங்கி ஊருக்குப் பொதுவாக குளம் வெட்டினர். அதற்கு, "காளிகணத்தான் குளம்' என்று பெயர் வைத்து காளி உருவத்தையும் பொறித்தனர். குளம் அமைத்ததைக் கூறும் கல்வெட்டில், மூவேந்தர் சின்னமான வில், புலி, மீன் பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டில், தொண்டிக்கு "பவித்திரமாணிக்கப் பட்டினம்' என்ற பெயர் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. பவித்திர மாணிக்கம் என்றால் "தூய்மையான மணி' என்று பொருள். அக்காலத்தில் வணிக முக்கியத்துவம் வாய்ந்த, செல்வ வளம் மிக்க காயல்பட்டினம், பெரியபட்டினம் போன்ற ஊர்களுக்கும் பவித்திரமாணிக்கப்பட்டினம் என்று பெயர் விளங்கியது. இந்த கல்வெட்டில் சேரர், சோழர் சின்னங்களும் பொறித்துள்ளதற்கு, சரித்திர ரீதியான காரணங்கள் உள்ளன. வீரபாண்டியனுக்கும், அவன் தாயாதியான விக்கிரம பாண்டியனுக்கும் அரசுரிமைப் போர் நடந்தது. வீரபாண்டியனுக்கு இலங்கை படைத்தலைவர்களான இலங்காபுரித் தண்டநாயகன், ஜகத்விஜயத் தண்டநாயகன் ஆதரவு தந்தனர்.
மூன்றாம் குலோத்துங்க சோழன் படைத்தலைவன் திருச்சிற்றம்பலம் உடையான் பெருமான் நம்பிப் பல்லவராயனும் விக்கிரமபாண்டியனுக்கு ஆதரவாகப் போரிட்டு வென்று, விக்கிரம பாண்டியனை அரியணையில் அமர்த்தினான். இலங்கைப் படைத்தலைவர்களின் தலைகள் மதுரைக்கோட்டையில் தொங்கவிடப்பட்டன. சேர நாடு சென்ற வீரபாண்டியன், சேரன் துணையோடு மூன்றாம் குலோத்துங்கனிடம் அடைக்கலம் புகுந்தான். தன் இரு மக்களுக்கும் வீரகேரளன், பரிதி குலபதி என்று சேரர், சோழர் பெயரை வைத்தான். "மூன்றாம் குலோத்துங்கன், வீரபாண்டியனைப் பாண்டிய நாட்டின் ஒரு பகுதிக்கு அரசன் ஆக்கினான். அதனால், தன்னை அரசனாக்கிய சோழர் சின்னத்தையும், உதவிய சேரர் சின்னத்தையும் தன் கல்வெட்டில் வீரபாண்டியன் பொறித்திருக்க வேண்டும்' என்று ஈரோடு கொங்கு ஆய்வு மைய ஆய்வாளர் புலவர் ராசு தெரிவித்தார்.

வேங்கையின் மைந்தன் ---வீரகேரளன்

வைகை நதியில் தண்ணீர் ஓடவில்லை. செந்நீர் ஓடியது. வீரர்களின்
கைகளும் கால்களும் சடலங்களும் ஆங்காங்கே நீருக்குள் மிதந்து சென்றன.
கரைகளில் சில புரவிகள் ஒதுங்கிக் கிடக்க நீருக்குள் கரிய நிறப் பாறைகள்
போன்று யானைகள் இரண்டு வீழ்ந்து கிடந்தன. பிணம் தின்னும்
கழுகுகளுக்குக் கொண்டாட்டம் தாங்கவில்லை. யானைகளின் மீதும்
குதிரைகளின் மீதும் கூடிக்கொண்டு நிணவிருந்தைப் பகிர்ந்து கொண்டன.

அருவருப்பு நிறைந்த இந்தப் பயங்கரக் காட்சிகளைக் காணச் சகிக்காத
மாலைச் சூரியன் மலைவாய்க்குள் விழுந்து விட்டான். தமிழ் இனத்துக்குள்ளே
இருந்த இந்த ஒற்றுமைக் குலைவை அவன் காலங்காலமாகக் கண்டு வந்தவன்.
மூவேந்தர்களும் ஒருவரோடொருவர் முட்டி மோதிக்கொண்டு இரத்தம் சிந்திய
சோகக் காட்சிகள் அவனுக்கு ஒன்றும் புதுமையானவையல்ல. வெறுப்பின்
சின்னமான படுகளத்தை இருட்போர்வையால் மூடி மறைத்துவிட்டு அவன்
அவ்விடத்தை விட்டு விலகிக் கொண்டான்.

கொடும்பாளூர் பெரியவேளார் வைகை நதிப்பெருக்கில் தமது
உடைவாளையும் கை கால்களையும் கழுவிக் கொண்டு மணல் வெளியில்
திரும்பி நடந்தார். நதிப் பெருக்கே இரத்தமாக மாறியிருந்ததால்,
கழுவிக்கொண்டது போதாமல் துணியால் கறைகளைத் துடைத்துக் கொள்ள
வேண்டியிருந்தது. கூப்பிடு தூரத்தில் தென்பட்ட பாசறையை நோக்கிச்
சலிப்போடு நடந்தார். மின்மினிக் கூட்டம் காற்றில் இழைவதுபோல்
தீவர்த்திகள் கூடாரங்களின் அருகில் இழைந்து கொண்டிருந்தன.

முதலில் தென்பட்ட பெரியதொரு கூடாரத்துக்குள் அவர் நுழைந்த
போது, ஏற்கனவே அங்கு இளவரசன் இராஜாதிராஜன் சிலையென
வீற்றிருப்பதைக் கண்டார். களைப்பும், சோர்வும், குரோதமும் அவன்
முகத்தில் குடிகொண்டிருந்தன. இராஜேந்திரரின் சாயல் அவனுடைய
உருவத்தின் ஒவ்வொரு அணுவிலுந் தெரிந்ததென்றாலும் அவன் கண்கள்
கொடும்பாளூர்க் கண்கள் தாய் வழி வந்த கண்கள்; முரட்டுத்தனத்திலும்
அவன் அப்படித்தான்.

“நம்மவர்களை நாமே கொன்று குவிப்பதென்றால் அது
வெறுப்பைத்தான் தருகிறது’’ என்று தம்முடைய உடைவாளை அருகில் கிடந்த
ஓர் ஆசனத்தின் மீது எறிந்தார் பெரியவேளார்.

அவர் கூறியதைக் கேளாதவன்போல், “மாமா, தாங்கள்
சுந்தரபாண்டியரை இன்றைய போரில் உயிருடன் விட்டு விட்டீர்கள். கிடைத்த
வாய்ப்பை நீங்கள் இழந்து விட்டீர்கள்’’ என்றான் இராஜாதிராஜன்.

“இளவரசே! இன்றையப் பொழுதுக்கு இரண்டு பாண்டியர்களை
வீழ்த்தியது போதாதா? என் பங்குக்கு மானாபரணனும் தங்கள் வீரத்துக்கு
வீரகேரளனும் பலியாகியிருக்கிறார்கள். மானாபரணனின் தலை தரையில்
உருண்டு விட்டது. வீரகேரளன் குடலைப் பறித்துக் கழுகுகளுக்கு
வீசியிருக்கிறீர்கள். நாளைய போரில் சுந்தரபாண்டியரைப் பார்த்துக்
கொள்ளலாம்.’’

“வீழ்ச்சி நிச்சயம் என்று தெரிந்த பிறகு சுந்தர பாண்டியர் போரிடுவார்
என்று நம்புகிறீர்களா? புறமுதுகு காட்டிச் சென்றவரிடம் எனக்கு
நம்பிக்கையில்லை.’’

“எல்லாம் நாளைக்குத் தெரிந்துவிடும்’’ என்றார் பெரிய வேளார்.
“ஒன்று அவர் சரணடைய வேண்டும்! அல்லது உயிர் துறக்க வேண்டும்.’’

“நாளைக்கு என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. பாண்டியரின் வயது
தங்களிடம் இரக்க உணர்ச்சியை எழுப்பியிருக்கிறது. அதனால்தான் விட்டு
விட்டு வந்திருக்கிறீர்கள்.’’

“வயது கிடக்கட்டும், நிராயுதபாணியாகப் புறமுதுகு காட்டி ஓடியவரின்
மேல் வேலெறிவது அழகல்லவே! ‘நாளைக்குச் சந்திப்போம்’ என்று
கூக்குரலிட்டுக் கொண்டே குதிரையைத் திருப்பினார் அவர். மேலும் பொழுது
நன்றாக இருட்டிவிட்டது. இட்டியவுடன் போர்நிறுத்தம் என்ற நமது
வழக்கத்தை மீற நான் விரும்பவில்லை.’’

“தந்தையாரும் தாங்களும் ஒன்றாகி வருகிறீர்கள்’’ என்று கூறி
வருத்தத்துடன் சிரித்தான் இராஜாதிராஜன். “தந்தையாரோ பாண்டியர்கள்
படுகளத்தில் வீழ்வதைப் பார்க்கவிரும்பாமல் தஞ்சையிலேயே தங்கி
விட்டார்கள். தாங்களோ கருணைக்குப் புறம்பான இடத்தில் கருணை
காட்டியிருக்கிறீர்கள்.’’

அன்றைக்கு மாலை மங்கிய நேரத்தில் சுந்தர பாண்டியர் புறமுதுகு
காட்டி ஓடிவிட்டார். சிறிய மலைச் சாரலின் ஓரத்தில் யுத்தம் நடந்து
கொண்டிருந்தபோது அவருடைய உடைவாள் பெரிய வேளாருடைய வாளுடன்
மோதித் தரையில் விழுந்தது. பெரியவேளார் ஒரு கணம் பொறுத்தார்.
அதற்குள் பாண்டியரின் குதிரை பின்னால் திரும்பியது. காற்றெனப் பறந்து
சென்று மலைச் சாரலுக்குள் மறைந்துவிட்டது.

பெரிய வேளாருக்குப் பின்புறம் வந்து கொண்டிருந்த வீரமல்லன்,
வேளார் தடுத்தும் கேளாமல் சுந்தரபாண்டியரை விரட்டிச் சென்றான்.
சென்றவன் இன்னும் திரும்பி வரவில்லை.

No comments:

Post a Comment