Thursday, 16 May 2013

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான்.

தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர்.

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!

நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும் என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படிப் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அவர். நடன காசிநாதனை நாம் சந்தித்துப் பேசினோம்.

‘‘1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குநராக நான் பணியாற்றிய போதுதான் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன என்று ஆரம்பித்தார் அவர்.

‘‘குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலோடு கலக்கும் அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நாகை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன.

அழகன்குளத்தில் கொத்துக் கொத்தாய் ரோமானிய காசுகள், இடுப்பில் குழந்தையுடன் கூடிய மரத்தால் ஆனதாய் சிற்பம், கண்ணாடி கைப்பிடியை வைத்திருக்கும் மூன்று தாய்மார்களின் சிற்பம் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன.

கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தப் பொருட்கள் மூலம் பழங்காலத் தமிழன் ரோமானியர்களுடன் வணிகம் புரிந்திருக்கிறான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

கொடுமணலில் சாம்பிராணிப் புகை போடப் பயன்படும் செப்புப் பாத்திரம், இரும்பு ஈட்டிகள், தவிர ராஜசுத்(ஸ்)தானிலிருந்து தருவிக்கப்பட்ட கார்னிலியன் கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன.

மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் சங்ககால படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிகாரை போன்றவை கிடைத்தன. தமிழக தொல்லியல்துறை சார்பில் நாங்கள் செய்த அகழ்வாராய்ச்சியில், கிழார்வெளி என்கிற இடத்தில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு படகுத்துறை, படகுகளைக் கட்டும் இலுப்பை மரம், எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளைக் கண்டுபிடித்தோம்.

அதேபோல் கோவா கடல் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து, கடல் தற்போது 5 கி.மீ. தூரம் முன்னேறி ஊருக்குள் வந்திருப்பதைக் கண்டறிந்தோம். தவிர, ‘சைட் ஸ்கேன் சோனார் என்கிற நவீன தொழில்நுட்ப முறையின் மூலம் கடலுக்குள் 21 அடி ஆழத்தில் 5 கட்டடங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தோம்.

அவை செம்புரான் கல்லினால் கட்டப்பட்ட கோயில்கள் அல்லது புத்த விகாரைகளாக இருக்கலாம்.

அதுபோல பூம்புகார் அருகே வானகிரி பகுதியில் கடலுக்குள், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு டேனிசு(ஷ்) கப்பல்மூழ்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தோம்.

அது டென்மார்க் அல்லது இங்கிலாந்திலிருந்து வந்த கப்பலாக இருக்கலாம். அதிலிருந்த ஈயக்கட்டிகள் சிலவற்றை எடுத்து கடல் அகழ் வைப்பகத்தில் வைத்தோம். நான் பதவியிலிருந்த காலத்தில்தான் இவை அனைத்தும் நடந்தன என்றவர், அடுத்ததாக...

‘‘தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக் கரையிலுள்ள ஆதிச்சநல்லூரை ‘தமிழகத்தின் க(ஹ)ரப்பா என்றே சொல்லலாம். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல்களம் அது.

கடந்த 2004-2005-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் அகழாய்வு இயக்குநர் எஸ்.டி.சத்தியமூர்த்தி தலைமையில் அங்கே நீண்டநாட்களாக நடந்த அகழாய்வுகளில் 150 -க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.

அதில் ஒரு தாழி, 3000 ஆண்டுகள் பழைமையானது. அதியற்புதமான அந்தத் தாழியில் ‘அப்ளிக்யூ முறையில் ஒரு பெண், மான், வாழை மரம், ஆற்றில் இரண்டு முதலைகள் இருப்பது மாதிரியான உருவங்கள் வரையப்பட்டிருந்தன.

அந்தப்பானைகளின் ஓட்டில் இருந்த சில குறியீடுகள் கரப்பா கால உருவ எழுத்தை ஒத்திருந்தன. அது மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானது. தவிர, அங்கு கிடைத்த செப்புப் பொருட்கள் குச(ஜ)ராத் டைமமாபாத்தில் கிடைத்தது போன்ற கரப்பா காலப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக் கல்வெட்டை வாசிக்கச் சொன்னார்.

அதில் ‘கரி அரவ நாதன் என்று எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார் ‘கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது.

கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் கரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன.

ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? தற்போது தாழியில் கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள். ‘அது அபூர்வமான தாழி என்று சொன்ன ஐராவதம் மகாதேவன், இப்போது, ‘அது கரப்பா கால எழுத்தல்ல என்கிறார்.

தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள். அவர்கள் இருந்த பல மேடைகளில் நான் இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை. இதையெல்லாம் நான் எழுதிய ‘தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

‘வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை, அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள் என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு.

ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த பழந்தமிழ் எழுத்துக்கள் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை.

அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால் தவிடுபொடியாகிறது. ‘தமிழன் அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக இருந்திருக்கிறான். அவன் பயன்படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது.

இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆய்வு முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கு இதுவே காரணம்

No comments:

Post a Comment