Wednesday, 27 March 2013

கிராமத்து மக்கள்


கிராமத்து மக்கள் எதையும் மங்களமாகச் சொல்லவேண்டும் என்றே நினைக்கிறார்கள். சொற்களில் சில சுடும். ‘அறம்’ பாடி அழித்த புலவர்களை நாம் அறிவோம். அமங்கலமான ஒரு நிகழ்வைக் குறித்துச் சொல்லும்போதுகூட கிராமத்து மக்கள் அதை மங்களமான சொற்களில்தான் கூறுகிறார்கள்.
ஒரு பெண்ணின் கணவர் இறந்து விட்டார். இப்போது அந்தப் பெண்ணின் கழுத்தில் கிடக்கும் தாலியை அறுக்க வேண்டும். அல்லது நீக்க வேண்டும். கணவனை இழந்த பெண்ணின் கழுத்தில் கிடக்கும் தாலியை அகற்றியாகிவிட்டதா? என்பதை ஒரு மூதாட்டி, ‘தாலியைப் பெருக்கியாச்சா? என்று கேட்டார்.
‘தாலியை அப்ற்றியாச்சா?’ என்று அமங்கலமாகக் கேட்காமல், ‘தாலியைப் பெருக்கியாச்சா?’என்று மங்களமாக அந்த மூதாட்டி கேட்ட மொழி நுட்பத்தைக் கண்டு நான் வியந்தேன். கிராமத்து சம்சாரிகளின் இத்தகைய சில அமங்கலம் நீக்கிய மங்களகரமான பிரயோகங்களை இக்கட்டுரையில் பதிவு செய்யலாம் என்று கருதுகிறேன்.
இனி வீரசேரளம்பதூர் இரா.உ. விநாயம் பிள்ளை என்ற கதை சொல்லி கூறியதைக் கேளுங்கள்.
அது ஐப்பசி மாதம், கழனியில் நடவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். சேர்ந்தாற்போல ஒரு கோட்டை விதப்பாடு, கரையடியோரம், தொழி உழவு உழுது மரம் அடிச்சி, நாற்றுப் பிடுங்கி, நாற்றங்காலில் இருந்து, நாற்றைச் சுமந்து நாற்று முடிகளை விதைத்து இருந்தார்கள் நடுகைத் தொழியில் (வயலில்).
அன்று நான் நடுகை. நான்தான் ஈசான மூலையில் மூன்று இடத்தில் நாற்றுகளை நட்டு நடுகையை ஆரம்பித்து வைத்தேன். நான் நட ஆரம்பித்ததும், அருகில் நின்ற ஒரு பெரிய மனுஷி, என் வெள்ளை வேட்டி சட்டை மீது, சகதியில் தெளிந்த தண்ணீரை எடுத்து என்மீது தெளிக்க, மற்றப் பெண்கள் எல்லாம் ஒருசேர குலவைச் சத்தம் எழுப்பினார்கள்.
எப்போதும் அப்பாதான் ‘நாள் நடுகை’யை ஆரம்பித்து வைப்பது வழக்கம். இன்று அப்பா வராததால் நான் நாள் நடுகையை ஆரம்பித்து வைத்தது எனக்குப் புது அனுபவமாக இருந்தது. சேற்றுத் தண்ணீர் என் வெள்ளை வேட்டி சட்டையை அழுக்காக்கினாலும், அந்த நிகழ்வு எனக்குச் சந்தோசமாக இருந்தது.
ஒருபுறம் நடுகை நடந்து கொண்டிருந்தது. மறுபுறம் நாற்றங்காலிலும் உழவு நடந்து கொண்டிருந்தது. நாற்றங்காலை உழும் உழவனைப் பார்த்து நடவு செய்து கொண்டிருந்த ஒரு பெரிய மனுஷி சொன்னாள். ‘அது புள்ளைப் பெத்த வயல்’ அதை நன்றாக உழு என்று. ‘புள்ளை பெத்த வயல்’ என்ற சொற்பிரயோகம் எனக்குப் புதிதாக இருந்தது. ஏன் இந்த வயலை மட்டும் அப்படிச் சொல்கிறார்கள் என்று உழவனிடம் கேட்டேன்.
தம்பி, “அது நாற்றங்கால். அந்த நாற்றங்கால் ‘நாற்று’ என்ற பிள்ளையை இப்போதுதான் பெற்றிருக்கிறது. நாற்றங்கால் கெட்டிப்பட்டுப் போய் இருக்கும். எனவே நாற்றங்காலை நன்றாக உழவேண்டும் என்பதைத்தான் ‘புள்ளைப் பெத்த வயலை நன்றாக உழு’ என்று அந்தப் பெண் கூறுகிறாள். நெல் விதையை கருவாகவும், நாற்றை வயிற்றில் வளரும் பிள்ளையாகவும், பெண்கள் பாவிப்பதால் நாற்றங்காலைப் பிள்ளைப் பெத்த வயல் என்று கூறுகின்றார்கள் என்று விளக்கம் கூறினார். உழவர் கூறிய விளக்கம் எனக்குப் பிரமிப்பை ஏற்படுத்தியது.
நாற்றங்காலில் இரண்டு ஏர்கள் உழுது கொண்டிருந்தது. முன்னால் போன உழவு மாடுகள் ரொம்ப சூட்டிகையாக (சுறுசுறுப்பாக) இருந்தன. வேகமாக நடந்தன. பின்னால் சென்ற மாடுகள் மெதுவாக நடந்தன. “முன்னேர் போன வழியே பின் ஏர் போகும்’ என்பது பழமொழி. பின்னேர்க்காரன் அடிக்கடி, முன்னேர்க்காரனைப் பார்த்து ‘கண்டோட்டு’ என்று சொல்லிக்கொண்டே இருந்தான். பின்னேர்க்காரன் சொல்வதின் பொருள் எனக்குத் தெரியவில்லை. எனவே, எங்கள் உழவனிடம் ஏன் பின்னேர்க்காரன் அடிக்கடி ‘கண்டோட்டு’ என்று கூறுகிறான்? என்று கேட்டேன்.
உழவன், முன்னேர்க்காரன் வேகமாகச் செல்கிறான். எனவே அவனை, ‘நின்று போ, அல்லது மெதுவாகப் போ….’ என்று கூறவேண்டும். ‘ஏரை நிறுத்து’ என்பது அமங்கலச் சொல். ஏர் என்பது உழவைக் குறிக்கும். ‘ஏரை நிறுத்து என்றால், விவசாயம் செய்வதையே நிறுத்து’ என்று பொருள்பட்டுவிடும். எனவேதான் ‘கண்டோட்டு’ என்று வேறு ஒரு சொல்லைச் சொல்கிறான். பின்னேர்க்காரன் ‘ஏரை எடுத்து வச்சிட்டான்’ என்றால், சம்சாரித்தனம் செய்வதையே நிறுத்திவிட்டான் என்று அர்த்தம். ஏர்தான் உழவனின் சின்னம். எனவே ஏர் சம்பந்தப்பட்ட விசயங்களில் அமங்கலச் சொல் வராமல்தான் சம்சாரிகள் பேசுவார்கள்.
ஏர்க்கால், ஒடிந்துவிட்டது என்றால், ‘ஏர்க்கால் வளைந்து விட்டது’ என்றுதான் கூறுவார்கள். ஏர்க்கால் ஒடிந்துவிட்டது என்று அமங்கலமாகக் கூறாமல், ‘ஏர்க்கால் வளைந்துவிட்டது’ என்று மங்களமாக, குறிப்பாகக் கூறுவார்கள் என்று உழவன் மேலும் விளக்கம் கூறினான்.
நடுகை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது சுமார் மத்தியானம் பன்னிரண்டு மணி இருக்கும். உழவன், வரப்பின்மேல் நின்றுகொண்டு இருந்தான். உழவன் பெண்டாட்டி உழவன் அருகில் சென்று அவன் காதோரமாய் ஏதோ ‘குசுகுசு’ என்று கூறினாள். உடனே உழவன் வயலில், நாற்று எடுத்துப் போட்டுக் கொண்டிருந்த பையன், உழவுக்காரர்கள், மற்றும் என்னையும் பார்த்து ஆம்பளைகள் எல்லாம் கரை ஏறி அந்தப் பக்கமா போங்க. பெண்கள் ‘கழனி பார்க்கணுமாம்’ என்று கூறிக்கொண்டே உழவன் குளத்தின் கரையைப் பார்க்க நடக்கத் தொடங்கினான். ஆண்கள் அனைவரும், அவரவர் வேலையை அப்படி, அப்படியே போட்டுவிட்டு உழவன் பின் சென்றார்கள். நானும் உழவன் பின்னால் சென்றேன்.
எல்லோரும் குளத்தின் கரையைக் கடந்து கீழே இறங்கி, ஒரு கருவை மரத்தில் நிழலில் அமர்ந்தோம். அப்போது நான் உழவனைப் பார்த்து, “கழனி பார்க்கணும்னா என்ன அர்த்தம்? பெண்கள் கழனி பார்க்க, நாம் ஏன் இங்கு வரவேண்டும்?’’ என்று கேட்டேன்.
உழவன் என்னைப் பார்த்து ஒரு ஏளனச் சிரிப்பை உதிர்த்துவிட்டு, “பெண்கள் நடுகை நட ஆரம்பித்ததில் இருந்து எங்கும் போகாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஆம்பிளைகளாகச் சுற்றி நின்று கொண்டிருக்கும்போது எப்படி அவர்கள் ‘ஒதுங்க’ முடியும்? அதனால், நடுகையின்போது நடுவேளையில், ‘கழனி பார்க்கணும்’ என்று பெண்கள் கூறினால், நாம்தான் அதைப் புரிந்துகொண்டு ஒதுங்கிக் கொள்ளணும். சில விசயங்களை நேரடியாகக் கூற முடியாது. இப்படித்தான் ஜாடைமாடையாக சொல்லுவார்கள். நாம்தான் அதை அனுபவத்தில் புரிந்து கொள்ளணும்” என்று விளக்கம் கூறினான்.
சம்சாரிகள் மத்தியில் நிலவும் இத்தகைய குழுவுக் குறிகள் கேட்க சுவாரசியமாக இருந்தன என்று கூறினார் தகவலாளர்.


நன்றி : திரு.கழனியூரன்

அன்னபூரணத்தின் அவலக் கதை-I


தமிழகத்தைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து அப்பகுதிகளை ஜமீன்தார்கள் ஆண்டு வந்தார்கள். எங்கள் பகுதி ஊத்துமலை ஜமீனைச் சேர்ந்தது. சில ஜமீன்களின் வரலாறுகள் ஆதாரபூர்வமாக (தக்க சான்றாதாரங்களுடன்)எழுதப்பட்டுள்ளது.

ஊத்துமலை என்ற ஊரைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்த ஊத்துமலை ஜமீனின் வரலாற்றை இதுவரை யாரும் முழுமையாகத் தொகுத்துத் தரவில்லை. ஊத்துமலை ஜமீனைப் பற்றி வாய்மொழி வாயிலாக உலவி வந்த பல்வேறு சொல் கதைகளை நான் பல்வேறு இதழ்களில் அவ்வப்போது எழுத்தில் பதிவு செய்துள்ளேன்.

சமீபத்தில் ஊத்துமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு.த. மருது பாண்டியன் அவர்கள், ஊத்துமலை ஜமீனின் வரலாற்றை முறையாகத் தொகுத்து, "ஊத்துமலை ஜமீன் தமிழ் வளர்த்த பூமி" என்ற நூலை வெளியிட்டுள்ளார்.இந்நூலை எழுதுவதற்கான வரலாற்று ஆவணங்களை எல்லாம் அவர், ஆங்கிலேயர்கள் எழுதி வைத்துச் சென்றுள்ள (பதிவு செய்துள்ள) ஆவணங்களில் இருந்தே பெற்றுள்ளார். தமிழர்களுக்கு குறிப்பாகத் தமிழ் அறிஞர்களுக்கு சமகால வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்பு அக்காலத்தில் இருந்ததில்லை என்பதை நாம் மறுக்க முடியாது.

அந்நூலில் ஊத்துமலை ஜமீனை ஆண்ட ஜமீன்தார்களில் மிகவும் புகழ்பெற்றவரும், மக்களால் போற்றப்பட்டவரும் தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவருமான இருதாலய மருதப்ப பாண்டியரின் வரலாற்றை மிகச் சிறப்பாகத் தொகுத்துத் தந்துள்ளார்.

இருதாலய மருதப்ப பாண்டியரின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்து காணப்படும் அன்ன பூரணம் என்ற பெண்ணின் கதை உள்ளபடியே அந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்களின் ஆதிக்க வெறிக்கும், அதிகார மோகத்திற்கும், இடையே அன்ன பூரணம் என்ற சிறுமி அகப்பட்டு அவள் அனுபவித்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எல்லாம் விதியின் செயல் என்று ஒரே வார்த்தையில் விடை சொன்னாலும், அன்னபூரணம் வடித்த கண்ணீரின், அனுபவித்த துன்பத்தின் சுமை மிகவும் அதிகம்.

அன்ன பூரணத்தம்மாளின் கதையை மிகச் சுருக்கமாக வாசகர்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன்.

ஊத்துமலை ஜமீனின் புதியதலை நகரமாக வீர கேரளம் புதூரை அறிவித்து அங்கு ஒரு அழகிய அரண்மனையைக் கட்டி, அதில் குடி பெயர்ந்து ஆட்சி செய்கிறார் இருதாலய மருதப்ப பாண்டியன்.

ஊத்துமலைக்கு அருகில் உள்ளது குருக்கள்பட்டி என்ற ஊர். குருக்கள் பட்டியில் அழகப்பத்தேவர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் வேட்டையாடுவதில் வல்லவர். எனவே, அவருடன் மருதப்பர் அடிக்கடி, ஊத்துமலைக் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றார்.

ஒரு நாள் வேட்டையின் போது மருதப்பரை கருநாகப்பாம்பு ஒன்று தீண்ட வருகிறது. தக்க சமயத்தில் அழகப்பத் தேவர் கருநாகப் பாம்பை வெட்டி ரெண்டு தூண்டாக்கிக் கொன்று மருதப்பரின் உயிரைக் காக்கின்றார்.

தன் உயிரைக்காத்த அழகப்பத் தேவருக்கு அன்று மாலையே வீரகேரளம் புதூரில் உள்ள தன் அரண்மனையில் தடபுடலாக விருந்து கொடுத்து,அவருக்குத் தேவையான பொன் பொருள்களையும், தனக்குப் பிரியமான, குதிரை ஒன்றையும் தானமாகக் கொடுத்து அழகப்பத்தேவரை கௌரவித்த மருதப்பர், "உமக்கு வாரிசாக இருக்கும் ஒத்த ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கைக்கும் நானே பொறுப்பேற்கிறேன்" என்று சொல்கிறார்.

பொன், பொருளைப் பெற்ற போதையில் அழகப்பத் தேவர், மருதப்பர் சொன்ன வார்த்தைகளின் பொருளை தனக்குச் சாதகமாக (வேறு விதமாக)புரிந்துகொள்கிறார். விதி இங்குதான் விளையாட ஆரம்பிக்கிறது.

மருதப்பர், குருக்கள்பட்டி அழகப்ப தேவரின் மகளின் நல் வாழ்விற்காக, அப்பெண்ணிற்குத் திருமணம் நடைபெறும் போது, நகை நட்டுகளைச் செய்து கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அழகப்பத் தேவரிடம் "உம் மகளின் வாழ்க்கைக்கும் நான் பொறுப்பு" என்று கூறினார்.ஆனால் அழகப்பத் தேவரோ, மருதப்பரே தன் வாயில் சொன்னதால், ‘உன் மகளுக்கு நானே வாழ்க்கை கொடுக்கிறேன்’ (அவளைத் திருமணம் செய்து கொண்டு) என்று வேறுவிதமாகப் பொருள் புரிந்து கொள்கிறார்.

குறுந்தன் மொழி என்ற ஊரைச் சேர்ந்த மீனாட்சி சுந்தர நாச்சியார் என்ற பெண்ணைப் பார்த்ததில் இருந்து அவளின் அழகில் மயங்கி, அவளையே ஒரு தலையாகக் காதலிக்கின்றார் மருதப்பர்.

சாதாரண குடிமக்களில் இருந்து தனக்கான வாழ்க்கைத் துணையை ஜமீன்தார்கள் தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் மருதப்பர் குறுந்தன் மொழியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரி என்ற பெண்ணைப் பல எதிர்ப்புகளுக்கு இடையே 1864-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி, வீரகேரளம் புதூரில் உள்ள தனது அரண்மனையில் வைத்து மணமுடித்துக் கொள்கிறார்.

மணவிழாவில் குருக்கள் பட்டி அழகப்பத் தேவர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. "தன் உயிர் காத்த நண்பர் தன் திருமணவிழாவில் கலந்துகொள்ள வில்லையே" என்று நினைத்து மருதப்பர் மனவருத்தம் கொள்கிறார். அழகப்பத் தேவரை அழைத்து வர ஆள் அனுப்புகிறார்.அப்போதும் அழகப்பத் தேவர் வரவில்லை. எனவே மணக்கோலத்தில் இருந்த மருதப்பரே தன் நண்பரைத் தேடி குருக்கள் பட்டிக்குச் செல்கிறார்.

மணக்கோலத்தோடு, தன் வீடு தேடி வந்த மன்னர் மருதப்பரை, முகம்வாடிய நிலையில் அழகப்பத் தேவர் வரவேற்கிறார். மருதப்பர்,அழகப்பரிடம், நான் முறைப்படி என் திருமணத்திற்கு ஓலை அனுப்பினேன். நீர் என் திருமணத்திற்கு வரவில்லை. பிறகு ஆள் அனுப்பி உங்களை அழைத்து வரச் சொன்னேன் அப்போதும் தாங்கள் தக்க பதிலும் சொல்லி அனுப்பவில்லை. நேரிலும் வரவில்லை. "என் மேல் தாங்களுக்கு அப்படி என்ன கோபம்? என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் நேரில் வந்தேன்" என்றார்.

அழகப்பத் தேவர், "தாங்களின் உயிரை நாகப்பாம்பிடம் இருந்து காத்த அன்று தாங்கள் ’உன் மகளின் வாழ்க்கைக்கு நான் பொறுப்பு’ என்று சொன்னீர்கள். எனவே, தாங்கள் என் மகளைத்தான் திருமணம் செய்து கொள்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் இன்று வேறு ஒரு பெண்ணுக்கு மாலையிட்டு, தாங்கள் ‘வாக்கு’ மீறி விட்டீர்கள். எனவேதான் நான் உங்கள் திருமணத்திற்கு வரவில்லை" என்றார்.


"தான் சொன்னதைத் தன் நண்பன் தவறான அர்த்தத்தில் புரிந்து கொண்டுள்ளானே." என்று மன வருத்தப்பட்ட மருதப்பர், கொடுத்த வாக்கை மீறக்கூடாது என்ற காரணத்திற்காக, அப்போதே அவ்வூர் மக்களின் முன்னிலையில், ஒரு மாலையை வாங்கி, அன்ன பூரணம் என்ற சிறுமிக்குச் சூட்டி, "இவளும் இனி என் மனைவிதான் நான் என் நண்பனுக்குக் கொடுத்த வாக்கை அவரின் விருப்பப்படி நிறைவேற்றி விட்டேன்" என்று அறிவித்தார். அப்போது அழகப்பத் தேவரின் மகளான அன்ன பூரணிக்கு சுமார் பத்து வயதுதான் இருக்கும்.

சிறுமி அன்ன பூரணிக்கு எல்லாமே விளையாட்டாகத் தெரிந்தது. குருக்கள் பட்டி அழகப்பத்தேவர் ஜமீன் சொத்துக்களுக்கு வாரிசாக வேண்டும் என்ற உள் நோக்கத்திற்காகத்தான் தன்மகளையே பகடைக் காயாக வைத்து விளையாடுகிறார் என்ற விபரம் யாருக்கும் தெரியவில்லை.

அன்னபூரணி என்ற சிறுமிக்கு ரெண்டாந்தாரமாக மாலையிட்டுள்ளார் மன்னர் மருதப்பர் என்ற சேதி(செய்தி) காற்றில் பரவியதும், மருதப்பரின் தாயார் பெரிய நாயகி அம்மாள், தன் மகனான மருதப்பரை அழைத்துக் கண்டித்தார்.


"கொடுத்தவாக்கைக் காப்பாற்றத்தான் அச்சிறுமிக்கு மாலை சூடினேன்" என்று விளக்கம் சொல்லியும், மருதப்பரின் தாயார் அச்சமாதானத்தை ஏற்றுக் கொள்ளாமல், தான் பிறந்த ஊரான சொக்கம்பட்டிக்குச் (சொக்கம்பட்டி ஜமீன்தாரின் அரண்மனைக்கு) சென்று விட்டார்.

மீனாட்சி சுந்தரி அம்மாளின் வீட்டாரும், மருதப்பர் மறுமணம் செய்து கொண்டதை விரும்பவில்லை. எனவே குருக்கள்பட்டி அழகப்பத்தேவருக்கும் அவரின் மகளான அன்னபூரணிக்கும் சொக்கம்பட்டி ஜமீன்தாரின் வகையறாக்காரர்களும், குறுந்தன் மொழியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தர நாச்சியாரின் வகையறாக்காரர்களும் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தார்கள்.

அன்னபூரணம் என்ற சிறுமியின் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை வந்தது. எனவே, அழகப்பத் தேவர் தன் மகளை அழைத்துக்கொண்டு வீர கேரளம் புதூர் அரண்மனைக்கு வந்து, மன்னர் மருதப்பரிடம், "உமது மனைவியும், என் மகளுமான அன்னபூரணத்திற்கு,உமது மூத்தமனைவியின் குடும்பத்தினராலும், உமது தாய்மாமனா சொக்கம்பட்டி ஜமீன்தாராலும் எந்த நேரமும் தீங்கு நேரலாம். எனவே, நீர் உமது ரெண்டாவது மனைவியான அன்னபூரணத்திற்கு அரண்மனைக்கு அருகிலேயே ஒரு வீட்டை ஏற்பாடுசெய்து கொடுத்து, அவளுக்குத் தேவையான வசதி வாய்ப்புகளையும் செய்து கொடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, மருதப்பரும், வீரகேரளம் புதூரில் உள்ள தன் அரண்மனைக்கு அருகிலுள்ள லட்சுமி விலாஸ் என்ற மாளிகை ஒன்றை ஒதுக்கிக் கொடுத்து. அங்கு அழகப்பத் தேவரையும் அவரின் மகளான அன்னபூரணத்தையும் தங்கச் சொன்னார்.

பருவ வயதை அடையாத, உலக நடப்புத் தெரியாத அன்னபூரணி என்ற சிறுமிக்குத் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது கூடப் புரியவில்லை.அவள் விளையாட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட்டுப் பராக்கில் அலைந்தாள்.

லட்சுமி விலாசுக்கு அன்னபூரணி குடி வந்ததால், மீனாட்சி சுந்தர நாச்சியார் கோபம் கொண்டார். ஏற்கனவே மருதப்பரின் தாயார் பெரிய நாயாகி அம்மாள் கோபித்துக் கொண்டு சொக்கம்பட்டி சென்றவர் திரும்பி வரவேயில்லை.

மருதப்பர் "வாக்கு’க் கொடுத்து இப்படி ஒரு வேண்டாத சிக்கலில் மாட்டிக் கொண்டோமே" என்று நினைத்து மனம் வருந்தினார்.

கலை, இலக்கிய ஈடுபாடு, வேட்டைக்குச் செல்வது, அரச பரிபாலனம் என்று நீரோட்டமாகப் போய்க் கொண்டிருந்த மருதப்ப பாண்டியரின் வாழ்வை அழகப்பத் தேவரின் பணத்தாசையும், பதவி மோகமும் நிலைகுலையச் செய்தது.

நாளாக, நாளாக அழகப்பத் தேவர் அரண்மனையில் தன் செல்வாக்கை நிலைநாட்ட முயன்றார். தம் மகளுக்கும் ஜமீனில் சகல உரிமையும் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனால் மருதப்பருக்கும் அழகப்பத் தேவருக்கும் இடையே மனத் தாங்கல் ஏற்பட்டது.

அழகப்பத்தேவரின் சூழ்ச்சியால்தான், மனைவியையும், தாயையும் பிரிந்து வாழ்கிறோம் என்பதை உணர்ந்து கொண்ட மருதப்பர், அழகப்பரின் உறவை எப்படியாவது முறிக்க வேண்டும் என்று யோசித்து, தன் இரண்டாவது மனைவியான சிறுமி அன்னபூரணத்தை விவாகரத்து செய்து ஓலை அனுப்பினார். அப்போதும் அன்னபூரணி என்ற சிறுமி வயசுக்கு வரவே இல்லை.

அன்னபூரணத்தின் அவலக்கதை-II

பத்து வயதில் கல்யாணம் நடந்ததும், பதினோரு வயதில் விவாகரத்து நடந்ததும் தெரியாமல், அன்ன பூரணம் என்ற சிறுமி, தன் சோட்டுப் பிள்ளைகளுடன் பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்தாள்.


மருதப்பர் விவாகரத்து ஓலை அனுப்பினாலும், அழகப்பத் தேவர் அதை வாங்கிக் கொள்ளவில்லை. "வயசுக்கு வராத பெண் பிள்ளையை விவாகரத்து செய்ய. கட்டிய கணவனுக்கும் உரிமை கிடையாது" என்று வாதிட்டார்.


மருதப்பரின் வகையறாக்காரர்களோ, "விவாகரத்து ஓலையில் கட்டிய கணவர் கையொப்பம் இட்டு விட்டதால் இனி, இந்த ஊரில் உமக்கு வேலை இல்லை, அரண்மனைக்குச் சொந்தமான லெட்சுமி விலாஸ் என்ற வீட்டைக் காலிசெய்துவிட்டு, உம் சொந்த ஊருக்குச் சென்றால் உயிர் பிழைத்தீர், இல்லை என்றால் நடக்கிறதே வேறு!"என்று அழகப்பரை மிரட்டினார்கள்.


ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் மருதப்பரின் ஆட்களிடம் இனியும் மோதினால் நிலமை மோசமாகிவிடும் என்று நினைத்த அழகப்பத் தேவர். இரவோடு இரவாக, அரண்மனைக்குச் சொந்தமான லெட்சுமி விலாஸ் என்ற வீட்டைக் காலி செய்துவிட்டு மகளையும் அழைத்துக் கொண்டு, தன் சொந்த ஊரான குருக்கள் பட்டிக்கே வந்துவிடுகிறார்.


சிறுமியான அன்னபூரணத்திற்கு, திடீரென்று தன் வாழ்வில் எங்கிருந்தோ ஒரு பிரகாசம் வந்தது போலவும், அது இடையில் அணைந்து மீண்டும் இருள் வந்தது போலவும் இருந்தது.


சின்னஞ்சிறு கிராமத்தில் சிறிய ஓட்டு வீட்டில் வறுமையான சூழலில் வாழ்ந்து கொண்டிருந்த அனுபவமும், இடையில், படாடோபமான,அரண்மனை அந்தஸ்துடன் கூடிய வாழ்வனுபவமும், அன்னபூரணம் என்ற சிறுமியைத் திகைக்க வைத்தது.


பட்டுப்பாவாடையும் சட்டையும் உடுத்திக் கொண்டு, பஞ்சு மெத்தையில் படுத்து உறங்கியதும், பால் பழங்கள், நாவுக்கு ருசியான உணவு என்று சாப்பிட்டதும் தன்னைச் சுற்றிப் பணிப் பெண்கள் அமர்ந்து கொண்டு, மகாராணியாரே, நாச்சியாரே! என்று அழைத்து. ஏவிய வேலைகளைச் செய்ததும் அச்சிறுமிக்கு வியப்பைக் கொடுத்தது.


"இந்தப் பச்சமதலைக்கு (சின்னஞ்சிறு பெண்ணுக்கு) வந்த வாழ்வைப் பாரேன்!" என்று சுற்றி உள்ள பெண்கள் எல்லாம் மூக்கின் மேல் விரலை வைத்தார்கள்.


சும்மா இருந்த மரக்கிளையில் திடீரென்று தேனீக்கள் வந்து தேன்கூடு கட்டி, அதில் தேனைச் சேமித்தது போல அச்சிறுமியின் வாழ்வில் ஒளி வீசியது.


விதி வசத்தால் அந்த வாழ்வு வெகு நாட்களுக்கு நிலைக்கவில்லை. யார் கண்பட்டதோ, தேன்கூட்டில் உள்ள தேனை எல்லாம் யாரோ ஒருவன் வந்து எடுத்துச் சென்றுவிட்டான்.


சிறுமியின் கழுத்தில் கொடுத்தவாக்கைக் காப்பாற்றுவதற்காகத் தாலிகட்டிய மருதப்பர் அதன் பிறகு ஒரு நாள் ஒரு பொழுதுகூட அச்சிறுமியைப் பார்க்க வரவில்லை.


கல்யாணம் முடிந்த மகிழ்ச்சியும் விவாகரத்து செய்த துக்கமும் அன்னபூரணம் என்ற சிறுமியைப் பாதிக்கவில்லை. ஆனால் அழகப்பத் தேவர் மிகவும் மனம் நொந்து போனார்.


"பனை ஏறியும் பாளை தொடாமல் போனது போல, நம் நிலைமை ஆகிவிட்டதே!" என்று வருந்தினார். "தன் கைக்கு எட்டிய அரண்மனை வாழ்வும் சுக போகமும், ஆட்சி அதிகாரமும், தன் வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே!" என்று வருத்தப்பட்டார்.


அன்னபூரணம் என்ற சிறுமி மீண்டும் தன் சொந்தக் கிராமத்தில் உள்ள தன் சோட்டுப் பிள்ளைகளுடன் (சமவயதுப் பிள்ளைகளுடன்) சேர்ந்து,பாண்டி, நொண்டி, கிளித்தட்டு, கிச்சுக் கிச்சுத் தாம்பளம் என்று பலவிதமான விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்தாள்.


அழகப்பத் தேவரின் உறவினர்கள், "ஜமீன்தார், மேஜராகாத பிள்ளைக்கு ஓலை அனுப்பி விவாகரத்து செய்தது செல்லாது. எனவே நீ வெள்ளைக்கார துரைமார்களிடம் (அதிகாரிகளிடம்) மனுக்கொடுத்து மேல் நடவடிக்கை எடு!" என்று தூண்டினார்கள்.


பணத்தாசை பிடித்த அழகப்பத்தேவர் தன் உறவினர்கள் சொன்னபடி, திருநெல்வேலி சென்று, அப்போது அங்கு கலெக்டராக இருந்த வெள்ளைக்கார துரையிடம் ஜமீன்தார் மருதப்பரின் மேல் புகார் மனு கொடுத்தார்.


ஜமீன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடியிருந்து கொண்டு, ஜமீன்தாருக்கு எதிராக வெள்ளைக்கார துரையிடம் (கலெக்டரிடம்) புகார் மனு கொடுத்ததால், ஜமீன்தாரின் உறவினர்களும், அங்கு பணி செய்யும் அதிகாரிகளும், நேரடியாகவும், மறைமுகமாகவும், அழகப்ப தேவரை மிரட்டினார்கள். எனவே அழகப்பத்தேவர் தன்னைக் காத்துக் கொள்ள தன் உறவினர்களின் துணையை நாடினார்.


ஜமீன்தார் நேசமுடன் இருந்த காலத்தில், தனக்கு அன்பளிப்பாகக் கொடுத்த பொன், பொருள்களையும், நிலபுலன்களையும் அழகப்பத் தேவர் ஒவ்வொன்றாய் விற்றுத் தன் உறவினர்களின் உல்லாச வாழ்வுக்காகச் செலவு செய்தார்.


தன்னைச் சுற்றிச்சூழும் பகையைப் பற்றிக் கவலைப்படாமல் அன்னபூரணி என்ற சிறுமி தன் சோட்டுப்பிள்ளைகளுடன் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தாள்.


அரண்மனையில் உள்ள ஆட்களால் அன்னபூரணியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அச்சிறுமியை ஜமீன் எல்லை தாண்டிய வேறொரு கிராமத்தில் உள்ள தன் உறவினர் ஒருவரின் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டார் அழகப்பத் தேவர்.


அன்னபூரணம் என்ற சிறுமிக்கு. ஏன் நாம் இப்போது வேறொரு ஊருக்கு அழைத்துச் செல்லப்படுகிறோம் என்ற விபரமும் தெரியவில்லை.தாயில்லாப்பிள்ளையான அன்னபூரணம், அவளின் சிற்றன்னையி்ன் வீட்டில் தங்க ஆரம்பித்தாள். அந்தக் காலகட்டத்தில்தான், அன்னபூரணம் வயசுக்கு வந்தாள்.


அன்னபூரணத்தின் பூப்பு நீராட்டு யாருக்கும் தெரியாதபடி மிக ரகசியமாக வைக்கப்பட்டது. பருவம் வந்த தன் பெண்ணைப் பகடைக் காயாக வைத்து ஜமீன் சொத்துகளைப் பெற வேண்டும் என்று அழகப்பத் தேவர் கனவு கண்டார்.


கலெக்டரிடம் அழகப்பத்தேவர் கொடுத்த மனு விசாரணைக்கு வந்தது. அழகப்பத் தேவருக்கு ஆங்கிலம் தெரியாததால் தனக்கு என்று ஒரு வக்கீலை வைத்துக் கொண்டு வாதாடினார். மருதப்பரும் தனக்காக ஒரு வழக்கறிஞரை நியமித்தார்.


வெள்ளைக்கார கலெக்டருக்கு இந்த வழக்கே மிக விசித்திரமாகப்பட்டது. வயசுக்கு வராத சிறுமியைத் திருமணம் செய்து கொண்டதும், அதே சிறுமி வயசுக்கு வரும் முன்னரே, அவளை விவாகரத்து செய்ததும் சட்டப்படி குற்றம் என்று வெள்ளைக்கார கலெக்டர் நினைத்தார்.


ஆனால் வழக்கறிஞர்கள், பாலியமனம் என்பதும், சொத்துக்காக, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக, அல்லது தாத்தா, பாட்டி, போன்றோரின் விருப்பத்தை நிறைவேற்ற இது போன்ற திருமணங்களைச் செய்து கொள்வதும் தமிழர்களின் சம்பிரதாயம் என்றும் கலெக்டர் துரைக்கு எடுத்துரைத்தார்கள்.


எதிர் மனுதாரர், ஜமீன்தார் என்பதாலும், அவர், தன் ஆட்சி அதிகாரங்களுக்கு எல்லாவிதத்திலும் ஒத்துப் போகிறவர் என்பதாலும், கலெக்டர் துரை,இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு்க் கொண்டு செல்ல அறிவுறுத்தினார்.


கலெக்டரின் உத்தரவின் பேரில், வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது. அழகப்பத் தேவர் தன் சொத்துகளை ஒவ்வொன்றாய் விற்று வழக்கை நடத்தினார். நீதிமன்றம் வாய்தாக்களைப் போட்டுக் காலத்தைக் கடத்தியது.


நாளாக நாளாக, அன்ன பூரணம் கன்னிப் பெண்ணாக வளர்ந்து வந்தாள். இப்போது அவளை யாருக்கும் திருமணம் செய்து கொடுக்க அப்பெண்ணின் தந்தையான அழகப்பத் தேவர் விரும்பவில்லை. அவரைப் பொருத்தவரை அன்னபூரணம் ஊத்துமலை ஜமீனின் இளையராணிதான்.


ஜமீன்தார் மாலையிட்டு, பின் விவாகரத்தும் செய்துவிட்ட பெண்ணை, யாரும் திருமணம் செய்து கொள்ளவும் முன் வரவில்லை. செயற்கையாக ஒரு துறவு வாழ்க்கை அன்னபூரணியின் மேல் திணிக்கப்பட்டது.


ஒருபுறம் இளைய மகாராணி என்ற பிம்பம், மறுபுறம் சோத்துக்கே, அடுத்த வீட்டில் (சித்தியிடம்) கையேந்திக்கொண்டு தலைமறைவாக வாழும் அவல வாழ்க்கை. அன்ன பூரணியின் வாழ்க்கை, இருதலைக் கொள்ளி எறும்பாகிவிட்டது.


மருதப்பருக்கும், மீனாட்சி சுந்தர நாச்சியாருக்கும் பிள்ளைப்பேறுவேறு இல்லை. எனவே, மருதப்பர் யாராவது ஒரு சிறுவனைத் தனக்கு வாரிசாகத் தத்தெடுக்க நினைத்தார்.


ஏற்கனவே ரெண்டாந்தாரமாகக் கட்டிய மனைவி கன்னிப் பெண்ணாகக் கைநிமிர்ந்து நிற்கும்போது, அவளுடன் சேர்ந்து வாழாமல் சிறுவன் ஒருவனைத் தத்தெடுக்கக்கூடாது என்று அழகப்பத்தேவர் கோர்ட்டில் தடங்கல் மனு கொடுத்தார்.


மருதப்பர் எந்த நிலையிலும் அழகப்பத் தேவரின் எந்தக் கோரிக்கையையும் ஏற்க மறுத்தார். வாரிசு இல்லாத ஜமீன் சொத்துகளுக்கு தன் மகளே வாரிசு என்று அழகப்பத் தேவர் வாதாடினார்.


ஒரு புறம் தன்னைப் பெற்றெடுத்த தந்தை ஜமீன் சொத்துகளை அடைய வேண்டித் தன்னைப் பகடைக் காயாக வைத்து விளையாடுகிறார்;மறுபுறம் அறியாத வயதில் தான் கொடுத்த வாக்கிற்காகப் பேருக்குத் தாலி கட்டிவிட்டு, தன் கணவரான மருதப்பரும், பாராமுகமாக இருந்துகொண்டு தன்னை நிராகரிக்கிறார். எனவே நம் இல்லற வாழ்வு கேள்விக்குறியாகிவிட்டது என்பதை உணர்ந்து கொண்ட அன்னபூரணம் தனியே இருந்து அழுது தன் தலைவிதியை நினைத்துக் கண்ணீர் சிந்தினாள். பெற்றவர், கணவர் என்ற இரு ஆண்களின் ‘ஈகோ’வுக்குள் சிக்கி அப்பெண்ணின் வாழ்வு சிதைந்தது.


நீதி மன்றத்தில் சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் அடிக்கடி அன்னபூரணத்தம்மாளைச் சந்திக்கச் சென்றார்.


அவர்மூலம் கிறிஸ்தவ மதத்தைப் பற்றியும், பைபிளைப் பற்றியும் தெரிந்து கொண்டு, அன்னபூரணத்தம்மாள் ஒருநாள் கிறிஸ்தவ மதத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.


கிறித்தவ மதத்தில் சேர்ந்த அன்னபூரணத்தம்மாளின் பெயர் மேரி விக்டோரியாள் என்று மாற்றப்பட்டது. மன உளைச்சலின் உச்சக்கட்டத்தில் இருந்த அப்பெண், மதமாற்றத்திற்குப்பின், கன்னியாஸ்திரியாகித் துறவறம் பூண்டார்.


மகள் மதம் மாறியதால், மனம் உடைந்த அழகப்பத் தேவரும் சிறிது காலத்திற்குப் பிறகு இறந்து விடுகிறார்.

அன்னபூரணத்தம்மாளின் இந்த அவலக் கதையை எனக்கு வாய்மொழியாக வீரகேரளம்புதூரைச் சேர்ந்த இரா.உ.விநாயகம் பிள்ளை என்ற கதை சொல்லி கூறினார். தற்போது அவர் உயிரோடு இல்லை

பாணான் மரபு

பழங்காலத்தில் ஜாதியப் பிரிவுகள், அவரவர்கள் குழுவாகச் செய்யும் தொழிலின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. தச்சு வேலை, கொல்லு வேலை, தங்க வேலை, கல்வேலை – என்று தனித்தனித் தொழிலை மட்டும் செய்கிறவர்களை, ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குள்ளேயே தனித்தனி பிரிவுகளாக வகுத்திருந்தார்கள்.
சலவைத்தொழில் செய்கிறவர்களிலும், அந்தக் காலத்தில் ரெண்டு மூன்று வகையினர் இருந்தனர். உயர் ஜாதிக்காரர்களுக்குச் சலவை செய்து கொடுக்க என்று ஒரு பிரிவினரும் தாழ்ந்த ஜாதிக்காரர்களுக்கு சலவை செய்து கொடுக்க என்று ஒரு பிரிவினரும் இருந்தார்கள்.
இன்றைக்கு நவீன இயந்திரங்களின் பயன்பாடு வந்த்தால் குறிப்பிட்ட சில வேலைகளைக் குறிப்பிட்ட சில ஜாதிக்காரர்கள்தான் பார்க்க வேண்டும் என்ற நிலை மாறிவிட்டது. சான்றாக மரம் அறுக்க இயந்திரங்களும், மரத்தடிகளை இழைக்க இயந்திரங்களும் இன்று பயன்பாட்டிற்கு வந்துவிட்டதால், எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களிலும் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் தச்சுத் தொழிலைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
மரக் கட்டில்களையும், மேஜை, நாற்காலி போன்ற மரச் சாமான்களையும் விதவிதமாகத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் பலவும் நாட்டில் பெருகிவிட்டன. அத்தொழிற்சாலைகளில் தச்சுத்தொழில் செய்யும் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் பணி செய்வதில்லை. சகல ஜாதியைச் சேர்ந்தவர்களும், அத்தொழிற்சாலையில் பணி செய்கிறார்கள்.
இதே போல, இரும்பு சம்பந்தப்பட்ட வேலைகளும், இன்று இயந்திரமயமாகி விட்டன. செருப்புத் தைப்பது, சலவை செய்வது, சிகை அலங்காரம் செய்வது என்பது போன்ற பல தொழில்கள், இன்று ‘ஜாதி’ என்ற எல்லையைத் தாண்டிப் பொதுமைப்பட்டு விட்டன.
‘தையல் வேலை’. தையல்கலை சம்பந்தப்பட்ட வேலைகளையும் பழங்காலத்தில் குறிப்பிட்ட ஒரு ஜாதியைச் சேர்ந்த மக்கள் மட்டுமே செய்தார்கள். கையால் தையற் வேலை செய்து வாழ்ந்த அந்த மக்கள் ‘பாணான்’ என்ற குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். பாணான் என்பதின் பெண்பால் பெயர் பாணாத்தி என்பதாகும்.
இசை பாடி மக்களை மகிழ்வித்தவர்கள் ‘பாணன்’ என்று அழைக்கப்பட்டார்கள். தையல் கலையை மட்டும் செய்து வாழ்ந்த மக்களை ‘பாணான்’ என்று அழைத்தார்கள். ‘பாணன்’ என்பதையும் ‘பாணான்’ என்பதையும் பிரித்தறிந்து பொருள் புரிந்து கொள்ள வேண்டும்.
தையல் இயந்திரம் கண்டு பிடிக்கப்படும் முன்பு நம் நாட்டில் வாழ்ந்த மக்கள், கையால் தைக்கப்பட்ட ஆடைகளையே அணிந்திருக்கிறார்கள். தையல் வேலை செய்கிறவர்களிலேயே பல பிரிவினர் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறார்கள்.
கிழிந்த பழைய துணியை தைத்துக் கொடுத்து மட்டும் (இன்றைக்கு கிழிந்தா பழஞ்சாக்கைத் தைத்துக் கொடுப்பதைப்போல) தொழிலாகக் கொண்டு சில பாணான்களும், பாணாத்திகளும் வாழ்ந்திருக்கிறார்கள். பழைய கிழிந்த வேட்டிகளையும், பழைய கிழிந்த சேலைகளையும், சட்டைகளையும் மட்டும் கையில் ஊசி நூல் கொண்டு தைத்துக் கொடுத்து, அதற்குக் கூலியாகத் தானிய தவசங்களையும், சாப்பிட கஞ்சியும் வாங்கி இருக்கிறார்கள்.
கிழிந்த பழந்துணிகளைப் பொதுமக்களுக்குத் தைத்துக் கொடுத்து அதிலிருந்து வரும் எளிய வருவாயைக் கொண்டு தன் கால ஜீவனத்தைக் கழித்த பாணானும், பாணாத்தியும் அன்றையச் சமூக அமைப்பில் விளிம்புநிலை மக்களாகவே இருந்திருக்கிறார்கள்.
இன்னும் பேச்சுவழக்கில் ஒருவனை அல்லது ஒருத்தியைத் திட்டும்போது ‘போடா… பாணாத்தி…’ என்று சொல்லி வைகிறார்கள். (ஏசுகிறார்கள்) இந்த வசவில் பாணாத்தி என்ற சொல் இழிநிலையிலேயே கையாளப்படுகிறது.
பாணான்களிலும் அந்தக் காலத்தில் ரெண்டு மூணு வகையினர் இருந்திருக்கிறார்கள். அவர்களில் மிகவும் கடைநிலையில் உள்ளவர்கள்தான் கிழிந்த பழந்துணியைத் தைத்திருக்கிறார்கள். பாணான்களிலேயே நடுநிலையான அந்தஸ்தில் உள்ளவர்கள் புதிய துணிகளை அளவெடுத்து வெட்டிக் கையில் ஆடைகளாகத் தைத்து மக்களுக்குக் கொடுக்கும் ‘தையல்காரர்’களாக இருந்திருக்கிறார்கள். இத்தகைய தையல்காரர்களுக்கு கூலியும் அதிகமாகக் கிடைத்திருக்கிறது. பாணான்களிலேயே தலைநிலையில் உள்ள தையல்காரர்கள் தையல் கலைஞர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். இவர்கள், அரசர்கள், ஜமீன்தார்கள், பெருந்தனக்காரர்கள் போன்ற மேட்டுக்குடி மக்களுக்கும், தேரை அலங்கரிக்கவும், பவனி வரும் சாமியின் அலங்காரத்திற்கும், சாமியாடும் கோமரத்தான்களுக்கும் மட்டும் கலை அழகுடன் கூடிய ஆடை அணிகலன்களைத் தைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
தையல் கலை மூலம் கலையழகுடன் கூடிய ஆடைகளைத் தைத்துக் கொடுக்கும், பாணான் என்ற கலைஞர்களை அந்தக் காலத்தில் ஜமீன்தார்களும், குறுநில மன்னர்களும் ஆதரித்திருக்கின்றார்கள். சாமி அலங்காரத்திற்கும், சப்பர அலங்காரத்திற்கும், தேரின் அலங்காரத்திற்கும், கலையழகுள்ள, தையல் வேலைகளைச் செய்து கொடுக்க என்று சில பாணான்களை அரசர்கள் நியமித்து, அவர்களுக்குக் கூலிக்குப் பதில் சில மானியங்களை (முப்போகம் நெல் விளையும் நிலங்களை) வழங்கி இருக்கிறார்கள்.
திருநெல்வேலி டவுனில், கூழைக்கடை பஜாருக்கு அருகில் உள்ள ஒரு சந்திற்கு பாணான் முட்டுச்சந்து என்று பெயர் உள்ளது. நெல்லையப்பர் கோயில் சம்பந்தப்பட்ட தையல்கலை வேலைகளைச் செய்யும் சில தையல் கலைஞர்களின் குடும்பங்கள் மட்டும் அந்தக் காலத்தில் அந்தச் சந்தில் வாழ்ந்திருக்கிறார்கள். எனவே தான அந்தச் சந்திற்கு பாணான் முட்டுச்சந்து என்று பெயர் வந்தது என்று பெரியவர் ஒருவர் என்னிடம் நேர் பேச்சில் கூறினார்.
இன்றும் ‘பாணான்’ இனத்தைச் சேர்ந்த சில குடும்பத்தினர் திருநெல்வேலி டவுனில் வசிக்கிறார்கள். அவர்களில் சிலர், இன்றும் திருவிழாக் காலங்களில் நெல்லையப்பர் கோயில் தேரின் அலங்கார வேலைகளையும், சப்பர அலங்கார வேலைகளையும் பார்க்கிறார்கள்.
தாமிரபரணி ஆற்றின் கரையில் குறுக்குத் துறைக்குப் பக்கத்தில் உள்ள சில வயல்களை ‘பாணான் மானியப் பத்து (கழனி) என்று அழைக்கிறார்கள். வயல்களுக்கு இன்று ‘பாணான் மானியம்’ என்ற பெயர் இருக்கிறதே தவிர, தற்போது அந்த நிலங்கள் சம்சாரிகள் சிலருக்கு உரிமையானதாக உள்ளது. பாணான் வம்சத்தைச் சேர்ந்த முன்னோர்கள் அந்த மானிய நிலங்களை வறுமையின் காரணமாகப் பிறருக்கு விற்றிருக்க வேண்டும்.
எங்கள் வட்டாரத்தில், ஊத்துமலை ஜமீனின் தலைநகரமான வீரகேரளம் புதூரில், சில ‘பாணான்’ இனத்தைச் சேர்ந்த தையல் கலைஞர்கள் வாழ்கின்றனர். தையல் கலை என்பதும் இயந்திர மயமாகிவிட்டதால், இவ்வூரில் உள்ள பாணான் இனத்து ஆடவர்கள், தையல் கடை வைத்து, தையல் வேலை செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களில் ஒரே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பாடாலிமுத்து என்பவர் மட்டும் பாரம்பரியமான தன் தையல் கலையை இன்றும் விடாமல் செய்து கொண்டிருக்கிறார். எங்கள் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஜாதியைச் சேர்ந்த அனைத்துக் கோமரத்தான்களுக்கும் (சாமியாடிகளுக்கும்) தேவையான தலைக் குல்லாய்களையும், ‘சல்லையம்’ என்று சொல்கிற இடுப்பில் – அணியும் நீண்ட டவுசர் (சாட்ஸ்) போன்ற உடுப்பையும் தைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாமியாடிகள், தலையில் அணிந்துகொண்டு ஆடும் குல்லாய் (தொப்பி) பல வண்ணத்துணிகளால் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டதாக இருக்கும். சாமிகள் அணியும் குல்லாய் பெரும்பாலும் விதவிதமான, கைத் தையல்களால், வண்ணமயமாக உருவாக்கப்படுகிறது, இந்தக் குல்லாய்களின் இடை இடையே மின்னும் கண்ணாடித் துண்டுகளும் கைத் தையலால் பதிக்கப்பட்டிருக்கம்.
அதேபோல சாமியாடிகள் இடுப்பில் அணியும் ‘சல்லையம்’ என்ற உடையும், பல வண்ணத் துணிகளால், அழகிய கலைநயம் மிக்க வேலைப்பாடுகளுடன் கூடியதாகத திகழ்கிறது. காலங்காலமாக, சாமியாடிகளுக்கு, தலைக் குல்லாய்களையும், சல்லையங்களையும், பாணான் இனத்தைச் சேர்ந்த இந்த பாடாலிமுத்துவின் முன்னோர்தான் தைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாணான் மரபில் வந்த பாடாலிமுத்து இன்றும் தன் குலத்தொழிலை கலைநயத்துடன் செய்து வருகிறார்.
இவர், இத் தையல் கலையை குருகுலமாகத் தன் தந்தையாரிடம் இருந்து கற்றுக் கொண்டதாகக் கூறுகின்றார். வீரகேரளம்புதூரில் சாமியாடிகளுக்குத் தேவையான அழகிய வேலைப்பாடுகள் மிகுந்த உடுப்புகளையும், குல்லாய்களையும் தைத்து தன் தையல் கடையில் வரிசையாகத் தொங்கப் போட்டிருக்கின்றார். பொதுமக்களில் சிலர் நேர்த்திக் கடனாக இந்த உடுப்புகளை வாங்கி சாமிகளுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறார்கள் என்கிறார்.
சாமியாடிகளுக்குத் தேவையான உடுப்புகளுடன் சாமியாடிகள் கையில் பிடித்து ஆடும் வல்லயக் கம்புகளையும், சாமியாடிகள் கையில் வைத்து அடிக்கும் சாட்டைகளையும் சேர்த்துத் தன் தையல் கடையில் வைத்து விற்று வருகிறார். தையல் கலைஞரான பாடாலி முத்து.
ஆய்வாளர்களின் அதிகக் கவனத்தைப் பெறாத, பாணான் கலைஞர்களைப் பற்றி நாட்டுப்புறவியல் துறைசார்ந்த ஆய்வாளர் யாராவது முயன்று தேடினால் மேலும் அதிகமான தரவுகளை நாம் பெறலாம்.


நன்றி : திரு.கழனியூரன்

சேர்வைக்காரன்

திருநெல்வேலி மாவட்டத்திலும் ஒரு வீராணம் இருக்கிறது. ‘வீராணத்தில் உங்கள் வீடு எந்தப் பகுதியில் இருக்கிறது?’ என்று ஒரு பெரியவரைக் கேட்டேன். பெரியவர், ‘எங்கள் வீடு ‘சேரு‘க்குப் பக்கத்தில் இருக்கிறது’ என்று கூறினார்.
‘சேர்’ என்ற ஆங்கில வார்த்தைதான் எனக்குத் தெரியும். ‘சேரு’ என்ற தமிழ் வார்த்தையை அல்லது வட்டார வழக்குச் சொல்லை நான் கேள்விப்பட்டதில்லை. எனவே பெரியவரிடம் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ‘சேரை’ எனக்குக் காட்டுங்கள் எனறேன்.
பெரியவரும் ‘சேர்’ இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அது பெரிய பெரிய ரூம்களாக ‘ப’ என்ற எழுத்து வடிவில் இருந்தது. ‘இந்தக் கட்டிடங்களை ஏன் ‘சேர்’ என்று கூறுகின்றார்கள்?’ என்று பெரியவரிடம் கேட்டேன்.
தம்பி, இநதக் கட்டிடங்கள் எல்லாம் ஊத்துமலை ஜமீனுக்குச் சொந்தமானது. ஜமீன்தார் அந்தக் காலத்தில் அவர்களுக்குச் சொந்தமான நிலங்களை அந்தந்தப் பகுதி சம்சாரிகளுக்குப் பயிரிட பிரித்துக் கொடுத்து விடுவார். நெல் விளைந்தால் மட்டும் நெல் அறுவடையானதும், ஜமீன் நிலங்களைப் பயிரிட்ட சம்சாரிகளிடம் இருந்து கட்டுக் குத்தகை (பாட்டம்) நெல்லை வாங்குவார்கள்.
அப்படி வாங்கிய நெல்லை, உடனே ஜமீன் தலைநகருக்குக் கொண்டு செல்லமாட்டார்கள். அந்தந்த ஊர்களில் ஜமீன் கட்டி வைத்திருக்கும் இதுபோன்ற ‘சேர்’களில்தான் நெல்லை இருப்பு வைப்பார்கள்.
நெல்லை இப்படிச் சேர்த்து வைக்கும் இடத்தை ‘சேர்’ என்று கூறுகின்றார்கள். நெல்லை கட்டுக் குத்தகைக்காரர்களிடமும், நிலவரிக்காரர்களிடமும் வசூல் செய்வதற்கும் ஊர்தோரும் ஜமீன்தாரர் ஒரு அதிகாரியை நியமித்திருந்தார். அவருக்குச் சேர்வைக்காரன் என்று பெயர்.
அந்தக் காலத்தில் நிலங்களுக்கு ஜமீன்தார்கள் நிலவாரியாக, தானிய தவசங்களை வசூல் செய்தார்கள். நெல் விளையும் இடத்தில் நெல்லையும், சோளம் விளையும் இடத்தில் சோளத்தையும் வரியாக வசூல் செய்வார்கள். நெல், சோளம் தவிர மற்ற தானியங்களையும் வரியாக வசூல் செய்தார்கள். எந்தெந்தக் காலத்தில் என்னென்ன தானியம் விளைகிறதோ, அந்தந்தக் காலத்தில், அந்தந்த தானியத்தை வரியாக வசூல் செய்தார்கள்.
இந்தச் சேரில் அந்தக் காலத்தில் ஒவ்வொரு அறையிலும், ஒவ்வொரு தானியத்தைச் சேமித்து வைப்பார்கள். இப்படித் தானியங்களைச் சேர்த்து வைப்பதால், அந்த இடத்தைச் ‘சேர்’ என்று அழைத்தார்கள். ‘சேர்’ நிறைய தானியத்தைச் சேமிக்கும் அதிகாரியைச் சேர்வை அல்லது சேர்வைக்காரன் என்று சொன்னார்கள், என ‘சேர்’ என்ற வார்த்தை வந்த விபரத்தை விளக்கினார் பெரியவர்.
“சிறிய தானியக் களஞ்சியத்தைத்தான் வழக்கு மொழியில் ‘சேர்’ என்று கூறுகின்றார்கள் என்பதைப் புரிந்துகொண்டு மேலும், விபரங்களைச் சேகரிக்க நான் பெரியவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
“இந்தச் சேருக்கு அந்தக் காலத்தில் காவலர்கள் இருந்தார்களா?” என்று கேட்டேன். பெரியவர், “அம்புட்டுத் தானியத்தை அடைத்து வைத்துவிட்டுக் காவலுக்கு ஆள் வைக்காமல் இருப்பார்களா?”
ராவும் (இரவும்) பகலும், மாற்றி மாற்றி இந்தச் சேரை அரண்மனைக் காவலர்கள் காவல் காத்தார்கள். ஜமீனுக்குச் சொந்தமான சேர் என்பதால் இந்தப் பக்கம் வரவே எல்லோரும் பயப்படுவார்கள். ஆனால் யுத்த காலம் வந்துவிட்டால் எதிரி நாட்டு வீரர்கள் முதலில், சேரில் உள்ள தானியத்தைத்தான் சூரையாடுவார்கள்.
யுத்த காலத்தில் ‘சேர்’களுக்குக் கூடுதல் பாதுகாப்புப் போடுவார்கள். அதையும் மீறி எதிரி நாட்டுப் படைவீரர்கள் ராவோடு ராவாக வந்து சேர்க்குத் தீ வைத்து விடுவார்கள். தானியக் கிடங்கு தீப்பிடித்து எரிந்தால் என்னவாகும்? தானியங்கள், பொறிபொறியாகப் பொறிந்து பிறகு கருகிவிடும். தானியக் கிடங்குக்குத் தீ வைத்த எதிரி நாட்டு ராஜாவின் பூமியில் நாலைந்து வருசமாக மழையே பெய்யவில்லை! எந்தப் பத்தினியோ போட்ட சாபம் பலித்துவிட்டது என்று கூறினார்கள்.
சில ஜமீன்கள் சேரில் இருப்பு வைத்த தானியத்தை நாலைந்து வருசத்திற்கு ஏறிட்டுப் பார்க்க மாட்டார்கள். இப்படி அடைத்து வைப்பதால், ஈரத்தோடு இருப்பு வைத்த தானியங்கள் வருசக் கணக்கில் இருந்ததால் புழுத்து, உளுத்துக் கெட்டுவிடும்.
இருதாலய மருதப்ப பாண்டியன் ஆட்சிக் காலத்தில் மட்டும் முதல் வருசம் இருப்பில் வைத்த தானியத்தை, அந்த வருசம் ஆரம்பத்தில், மழை பெய்து செழித்த உடன் குளம் நிறைந்து, மறுகால் போன உடன் சம்சாரிகள் யாவரும் நெல் நடவு செய்த உடன், அந்த மகசூல் விளைந்துவிடும் என்ற நம்பிக்கை வந்தவுடன், இருப்பில் உள்ள தானிய தவசங்களை எல்லாம் குடி, படைகளுக்குத் தகுதி வாரியாக இனாமாக அளந்து கொடுத்துவிடச் சொல்லிவிடுவார்.
அதனால் மக்களும் மகிழ்ந்தார்கள். தானியங்கள் இருப்பில் வருசக்கணக்கில் இருந்து, உளுத்துப் புளுத்துக் கெட்டுப் போவதும் இல்லை.
ஊத்துமலை ஜமீன்தார் தன் ஆட்சிக்கு உட்பட்ட ஊர்களைப் பல பிர்க்காக் (பகுதி)களாகப் பிரித்து ஒவ்வொரு பிர்க்காவையும் பராமரிக்க ஒரு சேர்வைக்காரரை நியமித்து இருந்தார்.
அந்தந்த பிர்க்காக்களில் நடக்கும் களவு, திருடுகளைக் கண்டிப்பது, திருடர்களைத் தண்டிப்பது, களவு, திருடு நடக்காமல் காபந்து பண்ணுவது, வரிவசூல் பண்ணுவது, ‘சேர்’களுக்கு காவல்காரர்களை நியமிப்பது என்று அனைத்து வேலைகளையும் சேர்வைக்காரர்தான் செய்தார்.
கலங்கல் என்ற பிர்க்காவில் ஒருமுறை சேரில், பின்பக்கச் சுவரை இடித்து ஓட்டை போட்டு யாரோ ஒருவன் நாலைந்து கோட்டை நெல்லைத் திருடிவிட்டான்.
அது நடந்ததும் ஊத்துமலை ஜமீன்தார் மருதப்ப பாண்டியன் காலத்தில்தான். உடனே செய்தி ஜமீன்தார் காதிற்கு எட்டியது. ஜமீன்தார் திருடனை உடனே கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டார். எப்படியோ துப்பு வெட்டி திருடனைக் கண்டு பிடித்துவிட்டார்கள்.
திருடன் யார் என்றால், சேரைக் காவல்காத்த காவல்காரனோட மச்சினன்தான்.
திருடனைப் பிடித்து விசாரித்தால், அவன் ‘காவல்காரனான என் மச்சினன்தான் சேரின் பின்பக்கம் சுவரில் கன்னம் வைத்துத் (ஓட்டை போட்டு) திருடச் சொன்னான்” என்று காவல்காரனைக் கைகாட்டினான்.
“இது என்னடா வேலியே பயிரை மேய்ந்த கதையா இருக்கு” என்று நினைத்த மகாராஜா காவல்காரனைக் கூப்பிட்டு விசாரித்தார்.
காவல்காரன், ‘மகாராஜா! சேர்வைக்காரர் ஒரு வருசமா காவல் கூலி தரவே இல்லை. எனக்கு மட்டுமில்லை. எந்தக் காவல்காரனுக்கும் காவல் கூலி கொடுக்கவில்லை. என் வீட்டில் பல்லில் வைத்துக் கொரிக்கக்கூட ஒரு தானியம் இல்லை! ராவாப் பகலா சேரிலிருக்கும் தானியத்திற்கு காவல் காக்கிற எனக்கே கூலித் தானியத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறார் இந்த சேர்வைக்காரர். நானும் என் பிள்ளைகளும் எத்தனை நாளைக்குத்தான் பட்டினி கிடக்க முடியும்? இந்த அநியாயத்தை நான் யாரிடம் போய்ச் சொல்ல முடியும்? எனக்குக் கூலியாக வரவேண்டிய தானியத்தை, நான் தான் ‘கன்னம்’ வைத்து என் மச்சினனை எடுக்கச் சொன்னேன். நான் செஞ்சது தப்புதான் வயிற்றுப் பசி பொறுக்கமாட்டாமல் திருடச் சொல்லிவிட்டேன். எனக்கு மகாராஜா என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துகிறேன்” என்று பணிவாகக் கூறினான்.
மகாராஜா, மற்றக் காவல்காரர்களையும், சேர்வைக்காரரையும் தனித்தனியே கூப்பிட்டு விசாரித்தார்.
விசாரித்ததில் காவல்காரன் சொன்னது யாவும் உண்மை என்பது ருசுவானது (நிரூபணமானது). எனவே சேரின் சுவரைக் கன்னம் வைத்துத் திருடிய திருடனையும், காவல்காரனையும் விடுதலை செய்துவிட்டு, சேர்வைக்காரனைக் கூப்பிட்டுக் கண்டித்து, அவனைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அந்தப் பிர்க்காவுக்குப் புதிய சேர்வைக்காரனை நியமித்தார் மகாராஜா. ஆனால் காவல்காரனை பதவியிலிருந்து நீக்காமல் விட்டதோடு அவனுக்கு “அரண்மனைக் காவல்” என்ற உயர்ந்த பதவியைக் கொடுத்தார், மகாராஜா இருதாலய மருதப்ப பாண்டியன்.
ஜமீன்களிலேயே மதிநுட்பமும், ஈவு இரக்கமும், பக்தியும், நீதியும் உடையவராக திகழ்ந்தார் இருதாலய மருதப்ப பாண்டியன்” என்று கதையைக் கூறி முடித்தார் பெரியவர்.


நன்றி : கழனியூரன்

செவக்காட்டுச் சேதிகள்


கிராமத்து மக்களின் பேச்சு, நடை உடை, பாவனைகள் கூட சில நேரம் கவித்துவமாக அமைந்துவிடுகின்றன. ஒரு பெண் வயசுக்கு வந்துவிட்டால், அப்பெண்ணின் தந்தையைப் பார்த்து, மற்றவர்கள் ‘பேரன் பிறந்திருக்கிறானா?’ என்று சந்தோசமாக விசாரிப்பார்கள்.
‘மகள் வயசுக்கு வருவதற்கும், பேரன் பிறப்பதற்கும் என்ன சம்பந்தம்?’ என்ற குழப்பம் வெகுநாட்களாக இருந்தது எனக்கு. ஒருநாள் கிராமத்து பெரியவர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அது பற்றிக் கேட்டேன்.
அந்தப் பெரியவர், ‘ஒரு பெண் வயதிற்கு வந்து விட்டால் என்றால், அவளின் கர்ப்பப்பை கருவுறுவதற்குத் தயாராக இருக்கிறது’ என்று அர்த்தம். எனவே விரைவில் ‘உன் மகளுக்குத் திருமணமாகட்டும், அவள் வயிற்றில் தலைநாளில் ஒரு ஆம்பளப்பிள்ளை பிறக்கட்டும்’ என்ற வாழ்த்துக்களுடன் கூடிய தன் எண்ணத்தை அந்த வாசகம் வெளிப்படுத்துகிறது’ என்றார்.
அதுசரி, ‘ஏன் பேரன் பிறக்கட்டும்’ என்று வாழ்த்துகிறார்கள், ‘பேத்தி பிறக்கட்டும்’ என்று வாழ்த்தவில்லை? என்று அந்தப் பெரியவரிடம் மேலும் கேட்டேன்.
பெரியவர், “தலைப்பிள்ளை ஆம்பளப்பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என்று பொதுவா நாம நினைக்கிற நினைப்பைத்தான் அந்த வாசகம் பிரதிபலிக்கிறது”ன்னு சொன்னார். “அந்த வாசகத்திலும், ஒருவித ஆணாதிக்க மனோபாவம் இருக்கத்தான் செய்கிறது” என்று நினைத்துக் கொண்டேன்.
கிராமத்து மக்கள் எதேச்சையாகப் பேசுகிற பேச்சு மரபில்கூட நுட்பமான சில சேதிகள் இருக்கின்றன. அதேபோல கிராமத்து மக்களில் சில இனக்குழு மக்களுக்கு என்று சில அபூர்வமான நடை, உடை, பாவனைகள் இருக்கின்றன.
புகைப்படக் கருவி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இன்று கிடைத்தால், அப்புகைப்படத்தை வைத்து ஆய்வுகள் செய்து பலப்பல செய்திகளை நாம் அறிந்துகொள்ள முடியும்.
நடுத்தர வயதுடைய ஒரு குடும்பப் பெண்ணின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் என் பார்வைக்கு வந்தது. அந்தப் புகைப்படத்தை வைத்துக்கொண்டு பெரியவர் ஒருவர், “இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் இன்ன ஜாதியைச் சேர்ந்தவர்தான்” என்று அடித்துக் கூறினார் (உறுதியாகச் சொன்னார்).
“எப்படி அந்தப்பெண் இன்ன ஜாதியைச் சேர்ந்தவர்தான் என்று அடித்துக் கூறுகின்றீர்கள்?” என்று பெரியவரிடம் கேட்டேன்.
பெரியவர், ‘புகைப்படத்தில் இருக்கும் பெண் சேலை கட்டி இருக்கும் விதம், அவள் காதில் அணிந்திருக்கும் ‘பாம்படம்’ என்ற நகை, அவள் கால்களில் கிடக்கும் தண்டை, கழுத்தில் கிடக்கும் தாலியின் அமைப்பு எல்லாவற்றையும் பார்த்துக் கணித்துத்தான் கூறுகிறேன்’ என்றார்.
‘எனக்கொன்றும் புரியவில்லையே என்றேன்’ நான். “பழங்கால புகைப்படங்கள் கூட இன்றைய நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வுக்கு ஒரு சான்றாதாரம்தான். புகைப்படத்தில் இருக்கும் பெண் மேலுக்கு சட்டை போடவில்லை. நடுத்தரமான வயதில் மாராப்புச் சேலையுடன் ஒரு புகைப்படத்திற்கு ஒரு பெண் போஸ் கொடுத்திருக்கிறாள் என்றால், அவள் இன்ன ஜாதியைச் சேர்ந்த பெண் அல்ல என்று பட்டியலிட்டு விடலாம். அடுத்து அப்பெண் காதில் போட்டிருக்கும் பாம்படம்.
இந்தப் புகைப்படம் எடுத்து சுமார் இருநூறு வருசமாவது இருக்கவேண்டும். அன்றைய காலகட்டத்தில் ‘பாம்படம்’ என்ற இந்த ஆபரணத்தை இன்ன இன்ன ஜாதிக்காரர்கள் அணிந்தார்கள்’ என்று பட்டியலிட்டு விடலாம்.
எல்லாவற்றையும் விட அந்தப் பெண் கழுத்தில் அணிந்திருக்கும் தாலியைப் பார்க்க வேண்டும். ஒரு பெண் கழுத்தில் அணிந்திருக்கும் தாலியை வைத்து அந்தப் பெண் எந்த மதத்தைச் சேர்ந்தவள், என்ன ஜாதியைச் சேர்ந்தவள், அந்த ஜாதியிலும் எந்தப் பிரிவைச் சேர்ந்தவள் என்று துல்லியமாகக் கூறிவிடலாம்.
ஒவ்வொரு ஜாதிக்கென்று ஒவ்வொரு விதமான ‘தாலி’ இருக்கிறது. அதில் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் என்று ஒவ்வொருவிதமான தாலி அடையாளம் இருக்கிறது. தமிழ்ப் பெண்களின் தாலியைப் பற்றிப் பேசினால் அதுவே பெரியதொரு ஆராய்ச்சியாகப் போய்விடும்’ என்று விளக்கம் கூறினார்.
‘புகைப்படத்தில் இருக்கும் அந்தப்பெண் ஏன் மேலுக்குச் சட்டை அணிந்து கொள்ளவில்லை?’ என்று பெரியவரிடம் கேட்டேன்.
பெரியவர் “இன்றைக்கும் கிராமங்களில் மாராப்போடு வீட்டிற்குள்ளும், வீதியிலும் வலம் வரும் பெண்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் தான் உடம்பில் அணிந்திருக்கும் சட்டையைக் கழற்றிவிடுவார்கள். அதன் பிறகு மாராப்புச் சேலையுடன்தான் காட்சியளிப்பார்கள்.
சின்னப் பிள்ளைகளுக்குப் பாவாடை சட்டை போட்டு அழகு பார்க்கிறார்கள். அதே பெண் குழந்தையின் உடம்பில் பருவ மாற்றங்கள் வந்த பிறகு அக்குமரிப் பெண்ணுக்குப் பாவாடை சட்டையுடன் தாவணியும், சில உள்ளாடைகளும் அணிந்துகொள்ளச் சொல்கிறார்கள்.
அதே பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்போது சேலை, சட்டை அணிந்துகொள் என்கிறார்கள். சில குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்கள் – ஒரு காலகட்டத்தில் தன் உள்ளாடையையும் சட்டையையும் கழற்றி எறிந்துவிடுகிறார்கள்.
அப்படித் தன் சட்டையைத் துறக்கும் அந்தப் பெண்ணுக்குக் கணவர் இருப்பார். தலைக்கு மேல் வளர்ந்த ஆம்பளப் பிள்ளைகள், பொம்பளைப் பிள்ளைகள் இருப்பார்கள். ஆனால், அவர்கள் யாரும் அப்பெண் தன் சட்டையைத் துறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டார்கள். ஏனென்றால், அது அவர்களின் கலாச்சாரம் சார்ந்த விசயம் என்று விளக்கம் சொன்னார்.
நான் பெரியவரிடம், “எப்போதிருந்து அந்தப் பெண் தன் சட்டையைத் துறக்கிறார்?” என்று கேட்டேன்.
நண்பர், “குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த பெண் தன் தலைமகனின் மகள் (பேத்தி) வயசுக்கு வந்த நாளில் இருந்துதான் அணிந்திருக்கும் சட்டையைக் கழற்றி விடுகிறாள். பேத்தி வயதிற்கு வந்துவிட்டாள் என்றால், அவளின் கர்ப்பப்பை ஒரு கருவைத் தாங்கும் தகுதியை அடைந்துவிட்டது’ என்பது பொருள். எனவே பாட்டியான அந்தப் பெண் தன் சட்டையைக் கழற்றி ஊர் உலகத்திற்குத் தன் மூத்த மகன் வயிற்றில் பிறந்த பிள்ளை வயசுக்கு வந்துவிட்டாள் என்பதைக் குறிப்பாக அறிவிக்கிறாள்.

சட்டையைத் துறப்பது என்ற குறியீடு, ‘காமத்தைக் கடத்தல்’ என்பதையும் குறிக்கிறது. கணவன், மனைவி என்று தாத்தாவும், பாட்டியுமாக அவர்கள் வாழ்ந்தாலும், மனைவி தன் சட்டையைத் துறந்த பிறகு அப்பெண், தன் கணவருடன் தாம்பத்திய உறவை வைத்துக்கொள்வதில்லை. ‘சட்டை துறப்பு’ என்ற செயல், இதுவரை கணவன் – மனைவியாகச் சேர்ந்து வாழ்ந்து அவர்கள் பெற்ற இல்லற சுகத்திற்கு அதாவது காமத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது. இதற்கு அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ, ஊர்க்காரர்களோ எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. இதுபோன்ற பண்பாட்டுக் கூறுகள் காலங்காலமாகக் கிராமப்புறங்களில் சில இனக்குழு மக்களிடம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
நடுத்தர வயதாக இருந்தாலும், உடல் கட்டுடன் அத்தகைய பெண் இருந்தாலும், அவர்கள் குறிப்பிட்ட அந்த நாளிலிருந்து தானே முன்வந்து தன் சட்டையைத் துறந்துவிடுகிறாள். அல்லது சமூகம் சார்ந்த கலாச்சார அம்சம் அப்பெண்ணைச் சட்டையைத் துறக்கும்படி நிர்ப்பந்திக்கிறது.
இப்படிச் சில கிராமத்து மக்கள், ‘காமத்தைத் துறப்பது’ என்பதையும் ஒரு சடங்காக, வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலோட்டமாக இத்தகைய சேதிகளைப் பார்க்காமல் கூர்ந்து கவனித்து ஆராய்ந்தால் நம் பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த பல உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியும்” என்றார் பெரியவர்.

நன்றி : திரு.கழனியூரன்

பவுண்டுத் தொழு - மாடுகளின் சிறைச்சாலை



மனிதர்கள் தப்பு செய்தால் அவர்களைச் சிறையில் அடைத்து வைப்பதைப் போல் மாடுகள் தவறு செய்தால் அவைகளையும் அடைத்து வைக்கச்சிறைகள் இருந்தது உங்களுக்குத் தெரியுமா?” என்று ஒரு பெரியவர் என்னிடம் கேட்டனர்.
பெரியவர் சொன்ன ‘சேதி’ எனக்கு வியப்பாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருந்தது. எனவே, “தெரியாது சொல்லுங்கள் தாத்தா” என்றேன்.

பெரியவர் பேச ஆரம்பித்தார். அந்தக் காலத்தில் வீடு தவறாமல் சம்சாரிகளிடம் காளை மாடுகள் இருக்கும், அது தவிர பாலுக்காக எருமை மாட்டையோ, பசுமாட்டையோ வளர்ப்பார்கள். கிராமத்தில் சம்சாரி விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்ந்தால் அவன் பாடு தவிடு தாங்கிப் போகும் (மோசமாகி விடும்) எனவே விவசாயத்தோடு உபதொழிலாகக் கால் நடை வளர்ப்பையும் சேர்த்துச் செய்வார்கள். வீடுகளுடன் கன்று, காளைகளைக் கட்டிப் பேணி வளர்க்க என்று மாட்டுத் தொழுவத்தையும் சேர்த்துக் கட்டிக் கொள்வார்கள்.

ஒரு மனிதன் அடுத்தவன் தோட்டத்தில் புகுந்து, தேங்காயையோ, மாங்காயையோ பறித்தால், அவனைத் தோட்டத்தின் காவலாளி பிடித்து, தோட்டத்தின் உரிமையாளரிடம் ஒப்படைப்பார். தோட்டத்தின் உரிமையாளர் காவல்துறையினரிடம் ஒப்படைப்பார். காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் திருடனை நீதிமன்றத்தில் ஒப்படைப்பர். நீதிபதி தீர விசாரித்து திருட்டு ‘ருசுப்பட்டால்’ (நிரூபிக்கப்பட்டால்) திருடன் இத்தனை மாதம் சிறையில் இருக்க வேண்டும் என்று தண்டனை கொடுப்பார்.

இதேபோல் சில மாடுகள் அடுத்தவன் நஞ்சையில் அல்லது புஞ்செயில் மேய்ந்து மகசூலை அழித்து விட்டால் அந்த மாட்டைப் பிடித்து வந்து வயலின் உரிமையாளர் பவுண்டுத் தொழுவில் அடைத்து விடுவார். “அது என்ன பவுண்டுத் தொழு?” என்று நீங்கள் கேட்பது எனக்கும் புரிகிறது. மாடுகளை (பிற சம்சாரிகளின் பயிர்களில் மேய்ந்து அழிமதி செய்த மாடுகளை) பிடித்து வந்து ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு நேரே, கிராம முனிசிப் வீட்டிற்குப் போவார்கள். அவருக்கு வீடும் அதுதான் ஆபீசும் அதுதான். வீட்டின் ஒரு பகுதியையே ஆபீசாக வைத்திருப்பார். இன்னேரம் தான் ஆபீசில் இருக்க வேண்டும் என்ற கணக்கு வழக்கெல்லாம் அந்தக் காலத்து கிராம முனிசிப்களுக்கு கிடையாது. எப்போது வேண்டுமானாலும், பொது மக்கள் போய் கிராம முனிசிப்யைச் சந்தித்துப் பேசலாம்.

கிராமுனிசிப் அவசர வேலையாக எங்காவது வெளியூர் போனால் அவருக்குப் பதில் உள்ளூரிலேயே தலையாரி, இருப்பார். அவரைச் சந்தித்து விபரம் கூறலாம். போனவர் “இன்னமாதிரி என் மகசூலை, இன்னாருக்குச் சொந்தமான எருமை மாடு மேய்ந்து விட்டது” என்று பிராது (புகார்) சொல்வார். உடனே கிராம முனிசிப் பவுண்டுத் தொழுவின் சாவியை தலையாரியிடம் எடுத்துக் கொடுத்து அந்த எருமை மாட்டைப் பவுண்டில் அடைத்து விடும் என்பார்.

தலையாரி பவுண்டுத் தொழுவின் சாவியை வாங்கிக் கொண்டு, பவுண்டுத் தொழுவின் பக்கம் செல்வார். மகசூலை மேய்ந்த மாட்டைப் பத்திக் கொண்டு புஞ்சைக்காரர் சென்று பவுண்டுத் தொழுவிற்குள் பத்தி விட்டு வெளியே வந்து விடுவார். உடனே தலையாரி பவுண்டுத் தொழுவை பூட்டிச் சாவியை கிராம முன்சீப்பிடம் ஒப்படைத்து விடுவார். இதுதான் தப்பு செய்த மாடுகளைச் சிறையில் அடைக்கும் நடைமுறை. இந்தமாதிரி அடுத்தவர் மகசூலை மேய்ந்து விடும் மாடுகளை அடைக்க அந்தக் காலத்தில் ஊர்தோறும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு கட்டிடத்தைக் கட்டி இருந்தார்கள்.

இந்தக் கட்டிடம் சதுர வடிவமானதாக இருக்கும். சுமார் பத்தடி உயரமான சுற்றுச் சுவர் கொண்டதாக இருக்கும். இச்சுவர் சுண்ணாம்புக் காரை கொண்டும், கருங்கல் கொண்டும் கட்டப்பட்டிருக்கும் சதுர வடிவான கோட்டைச் சுவர் போன்ற இந்தக் கட்டிடத்தில் வடக்கு நோக்கி ஒருவாசல் மட்டும் இருக்கும். வாசலையும் இரும்புக் கம்பி போட்ட கதவால் மூடி இருப்பார்கள். இதுதான் பவுண்டுத் தொழு என்பது.

இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் சிறிய ஓட்டுச் சாய்ப்பு இருக்கும். அதில் மேலோரமாக நீண்ட கம்புகளை வைத்துக் கட்டி இருப்பார்கள். சுற்றுச் சுவருக்கும், கம்பு காதுக்கும் இடையில் இப்போது நீள வசத்தில் ஒரு பள்ளம் கிடைக்கும். இந்தப் பள்ளப்பகுதியைத்தான் ‘அழி’ என்று சொல்கிறார்கள். இந்த நீள்வச பள்ளத்தில் வைக்கோலைப் போட்டு வைத்திருப்பார்கள். அதே தொழுவின் மற்றோர் பகுதியில்ஒருகல் தொட்டி கிடக்கும். அதைத் தண்ணீரால் நிரப்பி இருப்பார்கள். பவுண்டுத் தொழுவில் அடைக்கப்பட்டாலும் மாடு பட்டினி கிடக்க வேண்டாம். அங்கு கிடக்கும் வைக்கோலைத் தின்று கொள்ளலாம். பவுண்டுத் தொழுவிற்குள் இருக்கும் கல் தொட்டியில் தண்ணீர் குடித்துக் கொள்ளலாம்.

மாடுகளுக்குத் தண்டனை கொடுத்து அதைச் சிறையில் அடைத்தாலும் அதற்குத் தீவனமும் கொடுத்து அம்மாட்டின் பசியைப் போக்க வேண்டும், தாகத்திற்கு தண்ணீர் குடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மழைக்கும், வெயிலுக்கும் அம்மாடுகள் ஒதுங்க ஒரு சாவடி (நிழல் தரும் கட்டிடம்) வேண்டும் என்று சிந்தித்து மாட்டின் ஜெயிலை வடிவமைத்திருந்த நம் முன்னோர்களைப் பாராட்ட வேண்டும்.

தலையாரி பவுண்டுத் தொழுவில் மாட்டை அடைத்த செய்தி உடனே ஊருக்குள் பரவி விடும். எனவே, மாட்டின் உரிமையாளர் செய்தி தெரிந்து தலையாரியைத் தேடிக்கொண்டு கிராம முனிசிப் அலுவலகத்திற்கு வந்து விடும். கிராம முனிசிப் தலையாரியை அனுப்பி ஊர் நாட்டாமையைக் கூட்டிக் கொண்டு வரச்சொல்வார். நாட்டாமை வந்ததும், கிராம முனிசிப், நாட்டாமையுடன் சென்று மாடு மேய்ந்து அழிமதி செய்திருக்கிற இடத்தைப் பார்வையிட்டு அழிமதியைப் பொருத்து பாதிக்கப்பட்ட சம்சாரிக்கு இவ்வளவு பணத்தை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று பேசி முடிவு செய்து மாட்டின் உரிமையாளரிடம் சொல்வார்கள்.

மாட்டின் உரிமையாளர், அத்தொகையை நாட்டாமையிடம் கொடுக்க, நாட்டாமை பாதிக்கப்பட்ட சம்சாரியை அழைத்து அந்த நஷ்ட ஈட்டுத்தொகையைக் கொடுத்து விடுவார். பின்னர் மாட்டைப் பவுண்டில் அடைத்ததால் ஏற்படும் பராமரிப்புச் செலவுக்கு என்று ஒரு தொகையை அரசாங்கத்திற்கு வாங்கிக் கொள்வார்கள். இப்படி பராமரிப்புச் செலவுக்கு என்று வாங்கும் அபராதத் தொகைக்குத் தனியாக ரசீது போட்டுக் கொடுத்து விடுவார், கிராம முனிசிப்.

அந்தக் காலத்தில், ஒரு நாளைக்கு ஒரு மாட்டிற்கு இவ்வளவு பராமரிப்பு செலவு என்று ஒரு கணக்கு இருந்தது. அந்தக்கணக்குப்படி பராமரிப்புச் செலவை மாட்டின் சொந்தக்காரரிடம் வாங்கி விடுவார். மாட்டை ஒருமுறை பவுண்டில் அடைத்தால், ஒருநாளைக்கு உரிய பராமரிப்புத் தொகையைக் கட்டிவிடவேண்டும், மாட்டின் உரிமையாளர் ரெண்டு, மூணு நாட்களாகத் தன் மாட்டை, மீட்க வரவில்லை என்றால் அதற்கு ஏற்ப பராமரிப்பு செலவைக் கூட்டிப் போட்டு அதை மாட்டின் உரிமையாளரிடம் வாங்கி விடுவார் கிராம முனிசீப்.

பவுண்டுத் தொழுவில் அடைபட்ட மாடுகள் போடும் சாணி சவதிகளை அள்ள என்று தனியே ஒரு சிப்பந்தியையும் (ஊழியரையும்) ஊரில் இருந்து நியமித்து இருப்பார்கள். காம்பவுண்டு போன்ற இந்த அமைப்பிற்கு ‘பவுண்டுத் தொழு’ என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியவில்லை! என்று சொல்லிவிட்டு ஒரு குறுஞ்சிரிப்பாணியைச் சிரித்தார். ஏன் சிரிக்கிறீர்கள் இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? என்று கேட்டேன்.

தாத்தா, தன் நரைத்த மீசையை ஒதுக்கிக் கொண்டு, ஒரு சம்பவத்தை நினைத்தேன்; சிரித்தேன் என்றார். “அது என்ன சம்பவம் சொல்லுங்கள்” என்று நான் ஆர்வத்துடன் கேட்டேன். தாத்தா அந்த சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார். ஒருநாள் நம்மூருக்கு ஒரு களைக் கூத்தாடிக் கூட்டம் வந்திருந்தது. அவர்கள் ஒரு இடத்தில் கூடாரம் போட்டுக் கொண்டு நம்ம ஊரிலும், பிறகு சுற்றுப்பட்டிகளுக்கும் சென்று களைக்கூத்து நடத்தி அதில் வசூலாகும் காசு, பணத்தைக் கொண்டு கஞ்சி காச்சிக் குடித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் நாடோடி மக்கள். ஒரு மாட்டு வண்டியில் தன் தட்டுமுட்டுச் சாமான்களை அள்ளிப் போட்டுக் கொண்டு ஊர், ஊராய் போய் முகாமிட்டு, வித்தை காட்டிப் பிழைக்கிறதுதான் அவர்கள் தொழில். அதுஒரு ஒத்தக்காளை வண்டி அந்த வண்டிதான் அவர்களுக்கு வீடு. வண்டிக்கு கீழே, ஒரு கூண்டு தொங்கும். அதற்குள், ‘காடை, கருவாலி’ என்று ஏதாவது சில பறவைகள் கிடக்கும். வண்டிக்குள் (கூண்டு வண்டிக்குள்) தொங்கும் கூண்டுக்குள் கிளி ஒன்று கிடந்தது. ‘கீக்கீ’ என்று கத்திக் கொண்டே இருக்கும். ஊர் ஊராய்ச் செல்கிற இந்த நாடோடிகள், கோழிகளும், ஆடுகளும் வேறு வளர்ப்பார்கள். மரத்தடியில் வெட்டவெளியில் தான் இவர்களின் சமையல் நடக்கும். சாப்பாடும் அதே மரத்தடியில்தான் நடக்கும்.

இந்த நாடோடிக் கூட்டத்தினரின் காளை ஒரு சம்சாரியின் வெள்ளாமையில் விழுந்து மேய்ந்து விட்டது. வயல்காரனும் தலையாரியிடம் சொல்ல, தலையாரி, பவுண்டுத் தொழுவின் சாவியை எடுத்து வந்து அந்த மாட்டைப் பவுண்டுத் தொழுவிற்குள் அடைத்து விட்டார். (அன்று பார்த்து கிராம முனிசீப் ஊரில் இல்லை. அத்தோடு தலையாரிக்கும் இது களைக் கூத்தாடியின் மாடுதான் என்பது தெரியாது).

தலையாரிக்கு பவுண்டில் அடைத்த பின்தான் அது களைக்கூத்தாடியின் மாடு என்று தெரிந்தது. களைக்கூத்தாடி, ‘ஐயா, சாமி, என் மாட்டைத் திறந்து விடுங்கள்’ என்று கெஞ்சினான். தலையாரி, எனக்கு பவுண்டில் அடைக்க மட்டும்தான் அதிகாரம் உண்டு. கிராம முன்சீப் வந்த பிறகு கட்டவேண்டிய தண்டத்தை (அபராதத்தை) கட்டிவிட்டு வா. அதன்பிறகு தான் பவுண்டில் அடைத்த மாட்டைத் திறந்து விட முடியும்’ என்று சொல்லி விட்டார்.

களைக்கூத்தாடி, அன்று இரவு புறப்பட்டு அடுத்த ஊருக்குப் போக வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தான். அதற்குள், அவன் வண்டி மாட்டைப் பிடித்து பவுண்டில் அடைத்து விட்டார்கள். களைக்கூத்தாடியும், கிராம முன்சீப்பின் வீட்டு வாசலில் ராத்திரி பத்துமணி வரை காத்துக் கிடந்து பார்த்தான். கிராம முனிசீப்பின் மனைவி, ‘ஏய் களைக்கூத்தாடி. இங்கே என் வீட்டு முன்னால் “வயனம் காக்காதே” (உண்ணா நோன்பிருக்காதே) அவர் வர ரெண்டு மூணு நாளாகும். போய் ஊர் மடத்தில் படுத்து உறங்கு என்று சொல்லி விரட்டி விட்டாள்.

மறுநாள் காலையில் தலையாரி விடிந்ததும் விடியாமலும் இருக்கிற நேரத்தில் பவுண்டுத் தொழுவிற்குப் போய் கம்பிக் கதவு வழியாக எட்டிப் பார்த்திருக்கிறார். உள்ளே களைக் கூத்தாடியின் காளை மாட்டைக் காணவில்லை. கதவின் பூட்டும், பூட்டிய படியே தொங்குகிறது. களைக்கூத்தாடி முகாமிட்டிருந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தால் அங்கே அவர்களின் வண்டியும் இல்லை; மாடும் இல்லை, அந்த நாடோடிக் கூட்டமும் இல்லை. பொழுது விடிந்ததும், ஊர் முழுவதும் இந்தச் செய்தி பரவி விட்டது. “பவுண்டுத் தொழுவின் பூட்டை உடைக்காமல், எப்படி மாடு வெளியே வந்தது?” என்பது யாருக்கும் புரியாத புதிராக இருந்தது.

அங்கு கூடி இருந்த கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெரியவர் “அவனோ, களைக்கூத்தாடி பாவப்பட்டவன் அவன் வளக்கிற காளையை எப்படிப் பழக்கி இருப்பான்னு உங்களுக்குத் தெரியுமா? ராத்திரி நடுச்சாமம் போல, ஒரு நீண்ட காளையை (மூங்கில் கம்பை) இந்த பவுண்டுக்குள் நீள வசத்தில் போட்டிருப்பான், உரிமையாளனே கயிற்றில் நடக்கும் போது அவன் வளர்க்கும் காளை கம்பில் நடக்காதா? வித்தை தெரிந்த அந்தக்காளை, அந்த மூங்கில் கம்பில் ஏறி நடந்து சுவர் மேல் ஏறி பின் கீழே குதித்திருக்கும். மாடு வெளியே குதித்தபின் களைக்கூத்தாடி பவுண்டுச் சுவரின் மேல் ஏறி மூங்கில் களையையும் எடுத்துக் கொண்டு ஊரை விட்டுப் போயிருப்பான். இதுதான் நடந்திருக்கும். என்று பக்கத்திலிருந்து பார்த்ததைப் போல நடந்த ‘நடப்பை’ விவரித்தார்.

ஊர்க்காரர்களும் ஆமா... இருக்கும் அப்படித்தான் நடந்திருக்கும் என்று பெரியவர் சொன்னதை ஆமோதித்தார்கள். என்று கதை போல் சொன்னவர், அந்தக் களைக்கூத்தாடி செய்த காரியத்தை நினைத்துத்தான் சிரித்தேன் என்ற பெரியவர், முக்கியமான ஒரு குறுந்தகவலையும் சொன்னார். அந்தத் தகவலையும் இங்கே பதிவு செய்கிறேன். “இந்த மாதிரியான பவுண்டு தொழுக்கள் எல்லாம் நவாப்புகள் நம் நாட்டை ஆண்டகாலத்தில் கட்டப்பட்டவை. நவாப்பின் ஆட்சிபோய், வெள்ளைக்காரர்களின் ஆட்சி நடந்த போது, அவர்கள், இந்த பவுண்டுத் தொழுக்களை எல்லாம் தன் கட்டுப்பாட்டில், வைத்திருந்தார்கள்.

வெள்ளைக்காரர்கள் நாட்டை விட்டுப் போகும்போது, இந்த பவுண்டுத் தொழுக்களை எல்லாம் மத்திய அரசின் பராமரிப்பில் கொடுத்து விட்டுச் சென்று விட்டார்கள். இன்று பயன்படாமல் பராமரிக்கப்படாமல் தமிழகம் எங்கும் உள்ள இந்த மாட்டு ஜெயில்களை மாநில அரசுகள் தன்தேவைக்குப் பயன்படுத்த முடியாது. சட்டத்திருத்தம், கொண்டு வந்து மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு பெற்றால்தான் உண்டு.

நன்றி : திரு.கழனியூரன்

Sunday, 24 March 2013

திரு.கழனியூரன்

திரு.கழனியூரன்



கழனியூரன் என்ற எம்.எஸ்.அப்துல் காதர் 1954இல் திரு நெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் என்ற கிராமத்தில் பிறந்தார். துவக்கப்பள்ளி ஆசிரியராக பணி புரிந்து வரும் இவர், நாட்டுப்புறவியலில் இளம் முனைவர் பட்டம் பெற்று தற்போது முனைவர் பட்ட ஆய்வை மேற் கொண்டுள்ளார். கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணனுடன் இணைந்து ஏராளமான நாட்டுப்புறக் கதைகளை இவர் தொகுத்திருக்கிறார். நாட்டுப்புறவியல் சார்ந்து இதுவரை 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கதை சொல்லி இதழையும் நடத்தி வருகிறார்.


கழனியூரன் படைப்புகள்

சமூக விழிப்புணர்வு

1.தொலைந்த கிராமியத் தடங்கள்: சூத்ராள் சொன்ன ராமாயணம்
2.தொலைந்த கிராமியத் தடங்கள் இது விளையாட்டு மட்டுமல்ல
3.மாடுகளின் சிறைச்சாலை
4.கண்ணே கண்ணுறங்கு
5.தி.க.சி.க்கு வல்லிக்கண்ணன் எழுதிய கடிதம்
6.அழிப்பாங் கதைகள்
7.பழங்கணக்கு
8.அவளும் இவளும்
9.கிராமிய குடும்பம்
10.பெயர் மாற்றம்
11.தொலைந்த கிராமியத் தடங்கள் அரைக்காசு

கதைசொல்லி

12.பொறுப்பாசிரியரின் கடிதம்
13.சேலை
14.மீண்டும் சங்குத் தேவன்

சமூகம் - இலக்கியம் - சிறுகதைகள்

15.இப்படியாகத்தான் இருக்கிறது எதார்த்தம்
16.சேலை

ஆசிரியர் பெயர்: கழனியூரன் (Kalaniyoran)
மின்-அஞ்சல் : kazhaneeyuran@yahoo.co.in
தொடர்பு எண் : 919443670820
முகவரி : கழுநீர்க்குளம் அஞ்சல்
திருநெல்வேலி - 627861
இந்தியா.

More Details

Saturday, 23 March 2013

ச.வே.சுப்பிரமணியன்

முனைவர் ச.வே.சுப்பிரமணியன்,
A Tamil Pillar Called Save Subramanian -முனைவர் மு.இளங்கோவன்



தமிழ் மொழிக்கு அறிஞர் பெருமக்கள் பல வகையில் தொண்டு செய்துள்ளனர்.அவ்வறிஞர் பெருமக்களுள் முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூரில் 31.12.1929 இல் பிறந்தவர். பெற்றோர் சு.சண்முக வேலாயுதம், இராமலக்குமி அம்மாள். தொடக்கக் கல்வியை விக்கிரம சிங்கபுரத்தில் உள்ள புனித இருதய மேல்நிலை தொடக்கப் பள்ளியில் பயின்றவர். உயர்நிலைப் பள்ளிக்கல்வியை அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர்.இடைநிலைக் கல்வியை ம.தி.தா.இந்துக் கல்லூரியில் பயின்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை(ஆனர்சு)1950-53 இல் பயின்றவர்.முனைவர் பட்டத்தைக் கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து பெற்றவர். தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் 1953-56 தமிழ் பயிற்றுநராகப் பணியைத் தொடங்கி,பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் விரிவுரையாளர் பணியாற்றினார். கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத்தலைவராக வீற்றிருந்து புகழ்பெற்ற பல மாணவர்களை உருவாக்கினார்.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்து அரிய ஆய்வு நூல்களை வெளியிட்டுத் தமிழன்னைக்கு அழகு பார்த்தவர். இவர் காலத்தில் வெளியிட்ட நூல்கள் இன்றளவும் அரிய பார்வை நூல்களாகவும் பாடநூல்களாகவும் உள்ளன. கடும் உழைப்பாளியான இவர் தன் மாணவர்களையும் இவ்வாறு வளர்த்தவர். இன்று புகழ்பெற்று விளங்கும் தமிழறிஞர்கள் பலர் இவர் மாணவர்களாக இருப்பர் அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் அவர்கள் இதுவரை எழுதப்பெற்ற நூல்காளகத் தமிழில் 54, ஆங்கிலத்தில் 5,மலையாளத்தில் 1 என்ற எண்ணிக்கையில் அமைகின்றன. தமிழகத்தின் எல்லாப் பல்கலைக் கழங்கங்களிலும் அறக்கட்டளைச் சொற்பொழிவாற்றியுள்ளார்.அவை பல நூல்வடிவம் பெற்றுள்ளன. தமிழகத்தில் பல கருத்தரங்குகளில் பங்கு பெற்றதுடன் இந்திய அளவிலும்,உலக அளவிலும் பல கருத்தரங்குளில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார். தமிழ்ப் பணிக்காக இவர் இலங்கை, மொரீசியசு, செர்மனி, போலந்து, செக்கோசுலேவியா, ஜப்பான், ஆங்க்காங்கு, தாய்லாந்து, மணிலா, சிங்கப்பூர், மலேசியா, பாரிசு, லண்டன், ஏதென்சு, கெய்ரோ போன்ற நாடுகளுக்குச் சென்று வந்த பெருமைக்கு உரியவர்.



இவர் மேற்பார்வையில் 44 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தமிழ்ப்பற்று மிக்குடைய பேராசிரியர் அவர்கள் 1985இல் தமிழூர் என்னும் ஊரை உருவாக்கி அங்கு வாழ்து வருகிறார் (நெல்லை மாவட்டம்). இவர் தம் வீட்டின் பெயர் தமிழகம். இடத்தின் பெயர் தமிழ்நகர். நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 1969 இல் திருவள்ளுவர் கல்லூரியை உருவாக்கியவர். இராசா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசில் ஓரிலக்கம் உரூவா உள்ளிட்ட பல பரிசில்களைப் பெற்றுள்ளார். தொல்காப்பியச் செம்மல்,கம்பன் விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது உள்ளிட்ட விருதுகளும் இவரால் பெருமை பெற்றன. தமிழ் நூல்களை ஆராய்ச்சி செய்வதிலும்,பாடம் சொல்வதிலும் ஒப்பாரின்றி உழைத்தவர். சிலப்பதிகாரம் பேராசிரியரின் உள்ளம் கவர்ந்த நூல் எனில் சாலப் பொருந்தும்.இசையுடன் பாடி விளக்கம் சொல்வதில் வல்லவர்.

முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் நூல்கள் :

1. இலக்கிய நினைவுகள் 1964
2.சிலம்பின் சில பரல்கள் 1972
3.இலக்கியக் கனவுகள் 1972
4.மாந்தர் சிறப்பு 1974
5.ஒன்று நன்று 1976
6.அடியார்க்கு நல்லார் உரைத்திறன் 1976
7.இலக்கிய உணர்வுகள் 1978
8.கம்பன் கற்பனை 1978
9.காப்பியப் புனைதிறன் 1979
10.கம்பனும் உலகியல் அறிவும் 1981
11.கம்பன் இலக்கிய உத்திகள் 1982
12.கம்பன் கவித்திறன் 2004
13.இளங்கோவின் இலக்கிய உத்திகள் 1984
14.இலக்கிய வகையும் வடிவும் 1984
15.தமிழ் இலக்கிய வரலாறு 1999
16.சிலப்பதிகாரம் மூலம் 2001
17.சிலப்பதிகாரம் இசைப்பாடல்கள் 2001
18.சிலம்பும் சிந்தாமணியும் 1977
19.திராவிட மொழி இலக்கியங்கள் 1984
20.இளங்கோவும் கம்பனும் 1986
21.தொல்காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் 1998
22.தமிழில் விடுகதைகள் 1975
23.தமிழில் விடுகதைக் களஞ்சியம் 2003
24. காந்தி கண்ட மனிதன் 1969
25.பாரதியார் வாழ்க்கைக் கொள்கைகள் 1982
26.நல்வாழ்க்கை 1992
27.மனிதம் 1995
28.மனமும் உயிரும் 1996
29.உடல் உள்ளம் உயிர் 2004
30.தமிழர் வாழ்வில் தாவரம் 1993
31.கூவநூல் 1980
32.சிலப்பதிகாரம் தெளிவுரை 1998
33.சிலப்பதிகாரம் மங்கலவாழ்த்துப் பாடல் 1993
34.தொல்காப்பியம் தெளிவுரை 1998
35.சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை 2001
36.திருக்குறள் நயவுரை 2001
37.திருமுருகாற்றுப்படை தெளிவுரை 2002
38.சிலபதிகாரம் குன்றக்குரவை உரை 2002
39.கானல்வரி உரை 2002
40.பத்துப்பாட்டு உரை 2002
41.இலக்கணத்தொகை எழுத்து 1967
42.இலக்கணத்தொகை சொல் 1970
43.இலக்கணத்தொகை யாப்பு,பாட்டியல் 1978
44.வீரசோழியம் குறிப்புரையுடன் 1977
45.தொன்னூல் விளக்கம் குறிப்புரையுடன் 1978
46.குவலயானந்தம் சந்திரலோகம் 1979
47.பிரபந்த தீபம் 1980
48.தொல்காப்பியப் பதிப்புகள் 1992
49.மொழிக்கட்டுரைகள் 1974
50.சங்க இலக்கியம் 2006
51.மெய்யப்பன் தமிழகராதி 2006
52.தமிழ் இலக்கண நூல்கள் 2007
53.பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 2007
54.பன்னிரு திருமுறைகள் 2007
55.Descriptive Grammar of Chilappathikaram 1975
56.Grammar of Akananuru 1972
57.Studies in Tamil Language and Literature 1973
58..Studies in Tamilology 1982
59.Tolkappiyam in English 2004
60.சிலப்பதிகாரம் வஞ்சிகாண்டம் மலையாளம் 1966

ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் வாழ்க்கை வரலாறு "தமிழ் ஞாயிறு" என்னும் பெயரிலும், "சாதனைச்செம்மல்.ச.வே.சு" என்னும் பெயரிலும் நூலாக வெளிவந்துள்ளது.

முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் தொடர்பு முகவரி :
முனைவர் ச.வே.சுப்பிரமணியன்,
தமிழூர்,
அடைக்கலப்பட்டணம் அஞ்சல்
திருநெல்வேலி மாவட்டம் 627 808
பேசி: 04633-270239 -முனைவர் மு.இளங்கோவன்

நானும் நண்பரான முத்துராமன் அண்ணனும் திரு ச.வே.சுப்பிரமணியன் அவர்களை கடந்த 13.07.2011 சந்தித்தோம். மிகவும் கனிவுடன் பேசிய அவர் இந்த புத்தகத்தினை அவர் கையெழுத்திட்டு எங்களுக்கு வழங்கி வாழ்த்து கூறி அனுப்பினார்.


Read more at: http://tamil.oneindia.in/art-culture/essays/2008/0716-a-tamil-pillar-called-save-subramanian.html

Sunday, 10 March 2013

ஊற்றுமலை வம்சாவளி

வம்சாவளி:
1850-ஆம் ஆண்டு ஆங்கில அரசு ஒவ்வொரு பளையங்ககளின் மரபு,உரிமை மற்று ஆதரத்தை சமர்பிக்குமறு ஆனயிட்டது முறையில்லாத,வம்சமழிந்த அரசுகளை தன் அரசாங்கத்தில் சேர்க்குமாரு ஆனையிட்டனர். எனவே அனைத்துப் பளையங்களும் தனித்தனியே வம்சாவளிகளை எழுதிக்கொண்டனர்.
இதில் புரானம்,இதிகாசம் முதலிய நிழ்வுகளை தம்முடன் இனைத்து எழுதினர் ராமயன,மஹாபாரத கதைகளை தம்முடன் இனைத்து எழுதினர்.
நாயக்க பளையங்களின் கதைகள் முகமதியருக்கு பெண்தர மறுத்து நாட்டை விட்டு புதிய நாட்டிற்கு இடம் பெயர்ந்ததை குறிப்பிட்டு இருந்ததன.
இதற்கு அடுத்து பெரும்பான்மையான் மறவர் பாளயபட்டுகள் அனைத்தும் திருவிளையாடற்புரானம் மற்றும் பெரியபுரான நிகழ்வுகளில் தம் வம்சாவளியில் இனைத்து எழுதின.

பளையங்களின் கதைகளும் சூரிய,சந்திர,அக்கினி குலங்கள் பற்றிய செய்திகள்:
உலக மற்றும் இந்திய அரசுகள் அனைத்தும் தம்மை சூரிய,சந்திர,அக்கினி குலங்களோடு இனைத்துக் கூறி கொள்வது இயல்பு. நாயக்க பாளயபட்டுகள் அனைத்தும் முகமதியருக்கு பெண்தர மறுத்து நாட்டை விட்டு புதிய நாட்டிற்கு இடம் பெயர்ந்ததை குறிப்பிட்டு இருந்ததன. மறவர் பாளயபட்டுகளுள் சேதுபதி தம்மை "நம்பி மார்பத நம்பிபுரானம் பாடிய ரவிகுல சேதுபதி ரகுனாதன்" -மருதூர் புரானம். என்று தம்மை ரவிகுலம் என கூறுகிறார்,உற்றுமலை,சேத்துர்,கொல்லம்கொண்டான்,செம்பி நாட்டு தலைவர்கள் தம்மை ரவிகுலமாகிய சூரிய குலம் என்று கூறுகின்றனர். தலைவனார் வம்சம்(இந்திரன்,நம்பி,தடிய,அனஞ்சா,குமார,சேதுராம,சிவராம,சொக்க) கொண்டயம் கோட்டை மறவர்கள் இதரமறவர்கள் தம்மை சந்திர வம்சம் என்று கூறிக்கொண்டன, வன்னிய மறவர் தலைவர்கள் தம்மை அக்னி வம்சம் என்று கூறிக்கொண்டன.இவர்கள் அனைவரும் ஓரே இனத்தை சார்ந்தவர்கள்.
ஓரே இனத்தை சார்ந்தவர்கள்சூரிய,சந்திர,அக்கினி குலங்களோடு இனைத்துக் கூறிவது சாத்தியமா என்றால் சாத்தியமே என்கின்றனர் பரதவர் இனத்தவர்கள்.பரதவர் இனத்தவர்களில் துத்துக்குடி பரதவர் தம்மை "நிலா பரவர் என்று சந்திர வம்சம்" என்று கூறிக்கொண்டனர், எதிர்கரை இலங்கைபரதவர் தம்மை சூரிய வம்சம் என சூரிய குலம் என்று கூறிக்கொண்டனர்(எ-டு ஸனத் ஜெயசூரிய கிரிக்கட் வீரர்), கன்னியாகுமரி பரதவர்களோ தம்மை அக்கினி வம்சம் என்று கூறிக்கொண்டனர்.

துத்துக்குடி - இலங்கை - கன்னியாகுமரி 60 மைல் தொலைவு தான் இருக்கும் இதற்குள் தம்மை பிரித்து காட்டுவத்ற்காக இவ்வாறு கூறுகின்றானர். இதுமூவேந்தருக்கும் பொருந்தும். சேர மன்னர்களில் வம்சத்தை எடுத்துக்கொண்டால் சேரர் அனைவரும் அக்கினி குலம் என்று கூருவர், ஆனால் இடைகால சேர மன்னன் ஒருவன் சந்திர வம்சத்தையே சார்ந்ததாக கல்வெட்டு ஆதரங்கல் கூறுகிறது.ஆனால் சேர மன்னனர்களுள் 12 ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர அழ்வார் ராமன் மீது கொண்ட பக்தியின் காரனமாக தம்மையும் "சூரிய வம்சம்" என்று கூறிக்கொண்டார் அதானாலே தன் அரியனைக்கு "பாஸ்கர(சூரிய) திருவடி" என்றே இன்றளவும் கூறுகின்றனர், இன்றய திருவிதாங்கூர் பென் வழி சேரனோ தம்மை "நாக சூரிய வம்சம் குலத்தவன்" என்று கூறுகிறார்.
சேரனின் முத்திரை "வில்" திருவிதாங்கூர் மன்னர் சின்னமோ "சங்கு" .

>பிற்கால பாண்டியன் ஒருவன் "வரகுன ராமன்" என தம்மை கூறுகிறார். ஆக மூவேந்தரே தம்மை பிரித்து காட்டுவத்ற்காக சூரிய,சந்திர,அக்கினி குலங்களோடு இனைத்துக் இவ்வாறு கூறுகின்றானர் ஒழிய இவர்களை ஆரிய வடமாநிலத்தவர்கள் என்றுமே சூரிய,சந்திர,அக்கினி அரசர்களாக ஏற்றுகொண்டதில்லை.அனைத்தும பாளயங்க்ளும் தம்மை சூரிய,சந்திர,அக்கினி குலங்களோடு இனைத்துக் கூறி கொண்டனரே தவிர இவர்கள் ஆரிய வழியினர் அல்ல என "நிகொலஸ் டிரிக்ஸ்" கூறுகிரார். மறவர் பாளயபட்டுகளுள் நடுவக்குறிச்சி திருவிளையாடற் புரானத்தில் வரும் "கால் மாறி ஆடிய படலத்தையும்" சிவகிரி,எழயிரம்பன்னை"பன்றிக்கு பால் ஊட்டிய படலத்தையும்" அளகாபுரி,குமாரகிரி "வலை வீசிய படலத்தையும்".
ஏனைய மறவர் பாளயபட்டுகளுள் திருவிளையாடற் புரானதில் வரும் ஒவ்வொரு படலத்தையும் கோறினர்.
இதில் ஓரளவு நம்பகத்தனமையான வரலாற்று சம்பவத்தை கொன்டா பாளயபட்டகளாக சிங்கம்பட்டி,உற்றுமலை இருந்ததாக டிரிக்ஸ் கூறுகிறார்.இவ்விருவரும 1100 வருட பாரம்பரியம் கொண்டதாக மிக மிக பழமையான பாளயபட்டக நெல்லை சீமையில் விளங்கியதாக கால்டுவேல் கூறுகிரார்(திருநெல்வேலி சரித்திரம்).

ஊற்றுமலை வம்சாவளி:
இது உக்கிரங்கோட்டை என்னும் பாண்டியன் இறுதியாக அரசான்ட பகுதியிலிருந்து 15 மைல் தொலைவில் அமைந்த ஆட்சி பகுதி இது பரப்பலவில்சிங்கம்பட்டியைவிட பெரிது. இதுவும்,நெற்கட்டும் செவல்,தலைவங்கோட்டை,சொக்கம்பட்டியும் உக்கிரங்கோட்டையை சுற்றியுள்ள மற்ற பகுதியாகும். இவர்கள் அனைவரும் பாண்டியனுக்கு உறவினர்கள் ஆவர். உற்றுமலை வம்சாவளி ஒரளவு நம்பகத்தன்மையாக இருந்த்தாக கூறும் புரான கலப்பில்லாமல் சரித்திர பின்னனி கூறுகிறது. இதன் தோற்றம் பற்றி கூறும் மறவர்கள்(தேவர்கள்) பிறாப்பை அரக்கர்கர்களின் இடையுறுகலால் மீனாட்சி த்ம் திக்விஜயம் தடை படுவதை தடுக்க தம் வலப்புறத்திலிருந்து தோன்றிய தேவர்களவர்(இம்மறவர்கள்).இவர்கள் சகல பாண்டியர்கலுக்கும் காவலராக நியமித்தாள். தேவியின் வலப்புறத்தில் தோன்றிய தேவர்களே இம்மறவர்கள் இது அந்த காலத்தில் நிலவிய வலங்கை-இடங்கை சங்கதியில் தம்மை இனைத்துள்ளனர் என கூறுகிறார்.. முதலில் வம்சாவளி கன்னப்பனாரின் கதையும் பின்பு திருமங்கை அழ்வாரின் கதையும் வருகிறது.பொதுவாக மறவர்கள் அனைவரும் சைவர்கள் ஆனால் ஏன் வைனவத்தை தழுவினர் என்னும் காரணத்தையும் கூறுகின்ற்னர். இவர்கள் ஜமீந்தார் பெயர் ஹிருதாலயா நவநீத கிருஷ்ன மருதப்ப தேவர் ஆகும். ஒருமுறை பிற்கால பண்டியன் மகளிர்கொடை கேட்ட்போது தரமறுத்துவிட்டனராம் காரணம் பாண்டியன்(சந்திரகுலம்) என்றும் இம்மன்னர்(சூரியகுலம்) எனவே பொருந்த்தாது என மறுத்துவிட்டனராம்.பாண்டியனுக்கு உட்பட்ட குறுனில மன்னனாக இருந்தும் தர மருத்துவிட்டார்.

பின்பு ஒருமமுறை குரும்பர்கள் தொல்லை அதிகரிக்கவே மறவர்கள் சென்று அடக்கி அவர்கள் காடுகலை அழித்து நாடுகளக்கினர்.பின்பு தம்மை எதிர்த்து தாக்க வந்த கொள்ளையர்களை அழித்து பாண்டியனை பல பிரச்சனைகளால் காத்ததால் இவர்கலள் தலைவனுக்கு புலிகொடி,மீனக்கொடி,வளரிக்கொடி(இந்திரகொடி) கொடுத்து சாமரம்,வென்கொற்ற கொடை,முத்துபள்ளாக்கு அளித்து " பாண்டியன்" என்றப் பட்ட்த்தையும் வழங்கினர்.திருமலை நாயக்கர்,பாண்டியர்,சேதுபதி மன்னர்கலுக்கு அடுத்து நவராத்திரி பண்டிகை கொண்டாடும் உரிமையை பெற்றிருந்தார்.ஒரு முறை இத்தலைவர் "வல்லப மகாராஜா" என்று பாண்டிய பட்ட பெய்ருடன் நவரத்திரி பண்டிகையை தலைமை தாங்கி பாண்டியனின் உக்கிரங்கோட்டையில் பாண்டியனுடன் கொண்டாடிய உற்ற தோழனாவர். பின்பு நாயக்கர்கள் ஆட்சியில் இவர்கள் பாளயம் ஆகிறது.ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் அவர்களால் அடக்கபட்டு ஜமீன் ஆகிறது. இவ்வாறு உற்றுமலை வம்சாவளி முடிவடைகிறது. இறுதியாக இவ்வம்சாவழியின் மூல்மாக மறவர்கள் வனவேட்டூவர்களாக ராஜா விசுவாசியாகவும்,முரட்டுபக்தர்களாகவும்,குறுனிலைமன்னர்களாகவும் தொன்றுதொட்டு பேரரசர்களுக்கு சேவகம் செய்து வந்துஇருக்கிறார்கள். எனினும் இவர்கள் மூதாதையர்கள் இம்மன்னை ஆண்ட பேரரச்ர்கள் வழிவந்தவ்ர்கள் என தெளிவாக தெரிவதாக கூறுகிறார்.

இராவ் சாகிப்" வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்

தாய்த் தமிழையும், அதன் செழுமைகளையும் மெல்ல மறந்துவரும் சூழ்நிலையில், தமிழ் இலக்கியதிற்கு வளமை சேர்த்த பல நல்லறிஞர்களுள் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார் குறிப்பிடத்தக்கவர். அவரைக் குறித்து இன்றைய சந்ததியினர் அறிந்து கொள்வதென்பது அவரை மட்டும் அறிந்துகொள்வது மட்டுமன்று; நம் தமிழ்த் தாய்மொழியின் சிறப்பை அறிந்து கொள்வதும் ஆகும். காஞ்சி அருகில் மெய்ப்பேடு என்னும் சிற்றூரில் வாழ்ந்த தொண்டை மண்டல வேளாளர் மரபைச் சார்ந்த அரியநாதர் என்பவர் விஜயநகரப் பேரரசில் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்தில் படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். பீஜப்பூர் சுல்தான் விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்து வந்தான். போர்க்களத்தில் சல்மத்கான் என்பவன் கிருஷ்ணதேவராயரை குறிவைத்து தாக்க அவரை நெருங்கியபோது, அரியநாதர் அந்த வீரனுடன் யுத்தம் செய்து அவனை அவனது படையோடு துரத்தி அடித்து, தம் மன்னர்தான் வெற்றிவாகை சூட பேருதவியாக விளங்கினார். அரியநாதரின் இத்தீரச் செயலை மன்னர் பாராட்டி, அவருக்கு "படைமுதலி" என்னும் பட்டத்தைத் தந்து, அவரைப் படைத் தளபதியாக்கி அமைச்சருக்கு உரிய தகுதியையும் வழங்கினார். அன்றைய நாள் முதலாக அரியநாதர் "தளவாய் அரியநாத முதலியார்" என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டதோடு, அவரது வழிவந்த மரபின் மக்களும் தம் இயற்பெயரோடு "முதலியார்" என்னும் அப் பட்டப்பெயரையும் இணைத்துக்கொள்ள, அந்த "விருதுப்பெயர்" காலப்போக்கில் இனப்பெயராக வழங்கப்பட்டு வருகிறது. அத்தகு அரியநாத முதலியார் வழிவந்த சுப்பிரமணிய முதலியார் திருநெல்வேலிச் சீமையை ஆண்டுவந்த மேடைதளவாய் திருமலையப்ப முதலியாரின் சகோதரி மகள் உலகண்ணியை திருமணம் செய்துகொண்டார்.

திருமலையப்ப முதலியார் ஆர்க்காடு நவாபு மன்னர்களின் பிரதிநிதியாக விளங்கியவர். அவர் ஒரு முறை தென்காசிக்கு அருகிலிருக்கும் வெள்ளக்கால் என்னும் சிற்றூருக்கு வந்து அங்கு ஓர் அழகான மாளிகை கட்டி குடியேறினார். சோழவந்தான் சுப்பிரமணிய முதலியார் - உலகண்ணி தம்பதியரின் குடும்பம் செழித்து தழைத்தது. அவர்களது புதல்வர் பழனியப்ப முதலியாருக்கு 1857ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 14ம் நாள் பிறந்த தலைமகனுக்கு தாத்தாவின் பெயரான சுப்பிரமணியம் என்ற பெயர் இடப்பட்டு அவர் அவ்வாறே அழைக்கப்பட்டார். தனது தாத்தாவின் பெயரைப்பெற்று விளங்கிய பெயரன்தான் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார். பிள்ளைப் பருவத்தை வெள்ளக்காலில் கழித்தபிறகு சிறந்ததொரு கல்வி கற்றுத்தேற தனது அத்தையின் கணவர் திருநெல்வேலி மேடை தளவாய் குமாரசாமி முதலியாரின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். தெற்குப் புதுத்தெருவில் அமைந்திருந்த கணபதி வாத்தியாரின் திண்ணைப் பள்ளியில் தொடக்க கல்வி தொடங்கியது. பின்னர் வெ.ப.சு திருநெல்வேலி அரசடிப் பாலத்தில் இருந்த மிஷன் பள்ளியில் தமிழோடு ஆங்கிலமும் கசடறக் கற்றுத் தேர்ந்தார்.

அரண்மனையில் முத்துசாமிப்பிள்ளை என்னும் அந்தகர் (பார்வையற்றவர்) பணிபுரிந்து வந்தார். அவரிடமிருந்து பாரதம் இராமாயணம் திருவிளையாடற்புராணம் முதலிய இதிகாசங்களையும் மற்றும் பல புராணங்களையும் வெ.ப.சு வாய்வழியாக கற்றறிந்தார். மேலும் அந்த அரண்மனையிலேயே, பாரத அம்மானை வைகுண்ட அம்மானை பவளக்கொடி மாலை அல்லி அரசாணி மாலை ஆகியவற்றை இளம்பருவத்திலேயே தினந்தோறும் கேட்டறிந்து வளர்ந்ததால் வெ.ப.சு இலக்கிய விருப்பத்திற்கு அவை பேருதவி புரிந்தன. அவர் தம் பதினான்கு வயதிற்குள்ளாகவே, திருக்குற்றாலத் தலபுராணம் வரகுணாதித்தன் மடல் விறலிவிடு தூது கூளப்ப நாயக்கன் காதல் ஆகிய சிற்றிலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார். வேம்பத்தூர் பிச்சு ஐயர், கல்போது புன்னைவனக் கவிராயர், அருணாசலக் கவிராயர், சுப்பிரமணியக் கவிராயர் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் ஆகிய பெரும்புலவர்கள் கூடும் சங்கங்களிலும் வெ.ப.சு பங்கேற்று அவர்களிடமிருந்து இலக்கிய அறிவை வளப்படுத்திக்கொண்டார்.

இப்படியாக இருபது வயதிற்குள்ளாக சிற்றிலக்கியங்களை கற்றுத் தெளிந்தார். பிறகு அவர், நன்னூல் இலக்கணக்கொத்து இலக்கண விளக்கச் சூறாவளி தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தி பிரயோக விவேகம் ஆகிய இலக்கண நூல்களைக் கசடறக் கற்றுத்தேர்ந்தார். பின்னர் திருநெல்வேலி சந்திப்பில் அமைந்த இந்துக் கலாசாலைப் பள்ளியில் மெட்ரிகுலேசன் வகுப்பில் சேர்ந்தார். டி.என்.சிவஞானம் பிள்ளை இவரின் உற்ற தோழராக இருந்தார். தம் தோழரின் வற்புறுத்தலினால் சென்னை கிறித்துவக் கல்லூரியில் மேற்படிப்புக்காக சென்றார். அங்கு படிக்கும் மாணவர்கள் தமிழ்ப்பாடத்தில் ஏற்படும் ஐயங்களைப் போக்க வெ.ப.சு விடம் வந்து தெளிந்து செல்வார்களாம். அத்தகைய சூழலில் அவர்களுக்காகவே கம்பராமாயணத்தை வெ.ப.சு ஊன்றிப்படித்தாராம். அக்கல்லூரியில்தான், டாக்டர் மில்லர், கூப்பர், அலெக்ஸாண்டர், பேட்டர்சன், மெக்டனால்டு ஆகிய வெளிநாட்டு பேராசிரியர்கள் மற்றும், சுப்பராமையர், ரெங்கையச்செட்டி, சின்னச்சாமி பிள்ளை, ரெங்கசாமிராசா ஆகிய ஆசிரியப் பெருந்தகையாளர்களிடம் மிகச்சிறந்த கல்வியையும் மேலான ஒழுக்கத்தையும் கற்றுக்கொண்டு அத்தகைய வாழ்நெறிகளைத் தவறாமல் கடைபிடித்து வந்திருக்கிறார். ஆங்கிலம், தமிழ் இருமொழிப் புலமையையும் கிறித்துவக் கல்லூரியிலேயே கற்றுத் தெளிந்திருக்கிறார் வெ.ப.சு சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கப்பட்ட அரசு வேளாண்மைக் கல்லூரியில் சேர்ந்து 1884ம் ஆண்டில் ஜி.எம்.ஏ.சி என்னும் வேளாண்மை பட்டம் பெற்றார். 1895ம் ஆண்டு கால்நடை மருத்துவத் துறையில் "முதுநிலை கால்நடை மருத்துவ உதவியாளராக" பதவி உயர்வு பெற்று, ஆறாண்டுகள் கழிந்த பின்னர் 1911ம் ஆண்டில் துணைக் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். கால்நடை அறிவியல் துறை வாயிலாக வெ.ப.சு தமிழ்மொழிக்கு ஆற்றியிருக்கும் தொண்டுக்கு தாய் தமிழ்மேல் பற்றுகொண்ட யாவரும் வெ.ப.சு வுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

இந்திய கால்நடைக்காரர் புத்தகம் மற்றும் இந்தியாவில் கால்நடைகளுக்குக் காணுகின்ற அதிக பிராணாபாயமான வியாதிகளைப் பற்றிய நூல் என்னும் இரு நூல்களும் வெ.ப.சு சீரிய தமிழ் மொழியாக்கத்தில் அரசு உதவியுடன் வெளியிடப்பட்டது. மேல்நாட்டு கால்நடை மருத்துவம் பற்றி தமிழ்மொழியில் வெளிவந்த முதல் நூல்கள் இவை. மேலும் அறிவியல் நூல்களை இனிய தமிழில் ஆக்கிக்காட்டியவர்களில் வெ.ப.சுவும் ஒருவர். 1916ம் ஆண்டு வெ.ப.சு திருநெல்வேலி தாலுகா போர்டு உறுப்பினராகி, 1919ல் பதவி உயர்வு பெற்று, அதன் துணைத் தலைவரானார். அதற்கு அடுத்த ஆண்டில் தலைவராகவும் உயர்ந்தார். அவரின் நிர்வாகத் திறமையைக் கண்ட அன்றைய அரசாங்கம், அவரை 1922ம் ஆண்டு தென்காசி பெஞ்ச் கோர்ட்டின் தலைவராக நியமித்தது. இவரது அரும்பணிகளைக் கண்டு வியந்து, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் அவருக்கு 1926ம் ஆண்டு "இராவ் சாகிப்" பட்டம் வழங்கிச் சிறப்பித்தார். சென்னை மாகாண தமிழ்ச்சங்கம் உருவாக்கிய "கலைச்சொற்கள்" அகராதி நூல் தயாரிப்புக் குழுவிலும் உறுப்பினராக இருந்து திறம்பட செயல்பட்டார். அதுபோல வேளாண்மைத் துறைக்கான கலைச் சொல்லாக்கம் இவரின் பெரு முயற்சியாலே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உ.வே.சாமிநாதய்யர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை "பத்மாவதி சரித்திரம்" நாவலை எழுதிய மாதவையா மு.ரா. அருணாசலக் கவிராயர் இரசிகமணி டி.கே.சி ஹிருதாலய மருதப்ப தேவர் கவிராஜர் நெல்லையப்ப பிள்ளை போன்றோருடன் வெ.ப.சு நட்பு கொண்டிருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக 25 ஆண்டுகள் அரும்பணியாற்றி தமிழ்த்துறையை மேன்மை அடையச்செய்தார். வெ.ப.சு வாழ்நாள் முழுவதும் சேர்த்த நூல்கள் யாவும் தொகுக்கப்பட்டு "வெ.ப.சுப்பிரமணிய முதலியார் நூல் நிலையம்" என்னும் பெயர்பெற்று திருநெல்வேலி ம.தி.தா இந்துக்கல்லூரி ஆட்சிமன்றக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு இன்றும் செயல்பட்டு வருகிறது. உலகத்தின் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட "சுவர்க்க நீக்கம்" (Paradise Lost) என்ற மில்டன் எழுதிய உன்னத காவியத்தை தமிழில் அழகுற செய்யுளில் படைத்தவர் வெ.ப.சு. இவர் படைத்திருக்கும், இலக்கிய நூல்கள் அகலிகை வெண்பா கம்பராமாயண சாரம் (7 காண்டங்கள்) கல்வி விளக்கம் கோம்பி விருத்தம் சருவசன செபம் தனிக்கவித் திரட்டு நெல்லைச்சிலேடை வெண்பா இராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் ஆகியவை. கல்வியிலும், ஒழுக்கத்திலும் மேன்மைகொண்டு விளங்கிய ஆயிரம் பிறைகண்ட செந்தமிழ் தொண்டர் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார் 12.10.1946ல் இவ்வுலகை விட்டு நீங்கினாலும் அவர் திருப்பெயர் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும். வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

அண்ணாமலை ரெட்டியார்





















"காவடிச்சிந்து புகழ்" அண்ணாமலை ரெட்டியார்
முனைவர் சி.சேதுராமன்
இசைத் தமிழ், மாந்தர் நெஞ்சங்களை இசையவைக்கும் திறன் கொண்டது. மக்கள் விரும்பும் பலவகை இசைகளில் "சிந்து இசை" என்பதும் ஒன்று. சிந்து இசை செவியைக் குளிரச் செய்யும். சிந்தையைச் சிலிர்க்கச் செய்து, நாடி, நரம்புகளைத் தூண்டித் துள்ளச் செய்யும். சிறுவர் முதல் பெரியோர் வரையிலும் கற்றோர் முதல் கல்லாதார் வரையிலும் ஏற்கச் செய்யும் ஒப்பற்ற இசை வடிவானது காவடிச் சிந்து.
இது புதியதொரு இலக்கிய விருந்தாகும். இப்புதிய விருந்தை உருவாக்கி வழங்கியவர் ஓர் இளைஞர். அவர் வயது இருபத்தைந்துக்குள் இருக்கும். அவர் தான் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்.
தென்பாண்டிச் சீமையில் உள்ள நெல்லை மாவட்டத்தில் இருக்கும் சென்னிக்குளம் என்ற சிற்றூரில் 1860ஆம் ஆண்டு சென்னவ ரெட்டியார் - ஓவு அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அக்கால முறைப்படி திண்ணைப் பள்ளியில் படிக்கும் வாய்ப்புத்தான் அண்ணாமலை ரெட்டியாருக்குக் கிட்டியது. அவருக்கு, சிவகிரி முத்துசாமிப் பிள்ளை என்பவர் ஆசிரியராக அமைந்தார். அவ்வாசிரியர் பல்வேறு நூல்களையும் அண்ணாமலையாருக்குக் கற்றுக் கொடுத்தார். ஒருநாள், அண்ணாமலையார் பாடத்தைக் கவனிக்காமல் விளையாடிக் கொண்டிருக்கிறார் எனக் கருதிய ஆசிரியர், அவரைக் கண்டிக்கக் கருதினார். தாம் நடத்திய பாடத்தைத் திருப்பிக் கூறுமாறு ஆசிரியர் கேட்டார். விளையாடிக் கொண்டிருந்த அண்ணாமலையார், தங்கு தடையின்றி ஒப்பித்துவிட்டார். அதைக்கண்டு வியந்த ஆசிரியர் அவரைப் பாராட்டினாராம்.
ஒரு முறை அண்ணாமலையார், வீட்டுப்பாடம் எழுதி, அதன் கீழ் "தமைய பருவதம்" என்று கையெழுத்திட்டு ஆசிரியரிடம் தந்தார். தமைய பருவதம் என்பதன் பொருள் ஆசிரியருக்குப் புரியவில்லை. ஆசிரியர் அண்ணாமலையை அழைத்து, "அண்ணாமலை! தமைய பருவதம் என்று இதன் கீழே கையெழுத்திட்டுள்ளாயே! அதன் பொருள் என்ன?" என்று வினவினார். அதற்கு அண்ணாமலையார், "தமையன் என்றால் அண்ணா; பருவதம் என்றால் மலை. அண்ணாமலை என்ற பெயரைத்தான் அவ்வாறு எழுதியுள்ளேன் ஐயா" என்று பணிவுடன் கூறினார். அதைக் கேட்ட ஆசிரியர், "அப்பா அண்ணாமலை! உன் புலமைப் பசிக்கு நான் தீனிபோட முடியாது. நீ வேறு எங்கேனும் சென்று பயில்க" என்று ஊக்கப்படுத்தி, அவருக்கு விடைகொடுத்து அனுப்பினாராம். சென்னிக்குளத்தில் உள்ள மடத்திற்குச் சென்று அங்கு மேற்பார்வைப் பணியைச் செய்து கொண்டிருந்த சுந்தர அடிகளுடன் தொடர்பு கொண்டு, அவரிடமிருந்து பல்வேறு நூல்களை வாங்கிப் படித்தார். அண்ணாமலையின் தமிழ் ஆர்வத்தைக் கண்ட அடிகளார், தாம் கற்றிருந்த நூல்களை எல்லாம் அவருக்குக் கற்பித்தார். விவசாயத்தில் விருப்பமில்லாத அண்ணாமலையார், தந்தையின் வற்புறுத்தலால் தோட்டத்திற்குச் சென்று தண்ணீர் பாய்ச்சினார். கவிதைக் கன்னி அவரைக் கட்டித் தழுவலானாள். கடமையை மறந்தார். ஒரு மர நிழலில் கற்பனையில் ஆழ்ந்தார். வாய்க்காலில் வந்த தண்ணீர் தோட்டப் பாத்திகளில் பாயவில்லை. தரிசில் பாய்ந்தது. அதைக் கண்டு சீற்றம் கொண்ட அவரது தந்தை, அவரைக் கடிந்து கொண்டு, வீட்டுக்கு அவர் வந்தால் சாப்பாடு கிடையாது என்று கூறிவிட்டார். தந்தையாரின் சினத்துக்கு ஆளான அண்ணாமலை, சுந்தர அடிகளின் மடத்திற்கு வந்தார். அவரைக் கண்ட அடிகளார், அவருக்கு இரங்கி உணவும் தந்தார்.
தம் மகன் பிச்சைக்காரனைப் போல மடத்தில் சாப்பிடுவதா? எனக் கோபமுற்று அங்கு வந்து அண்ணாமலையை அடித்தார் தந்தை. இதனைக் கண்ட சுந்தர அடிகளார், "இவனை ஒன்றுக்கும் உதவாதவன் என்று கருதாதீர்கள். இவன் புகழின் உச்சியைத் தொடப்போகிறான். நான் இவனை அறிஞனாக்கிக் காட்டுகிறேன்" என்று கூறி அண்ணாமலையின் தந்தையைச் சமாதானப்படுத்தினார்.அண்ணாமலையை சேற்றூர் அரசர் வடமலைத் திருவநாத சுந்தரதாசுத்துரையிடம் அழைத்துச் சென்று அவரைப் பற்றி பாடல்கள் பாடுமாறு அண்ணாமலையைப் பணித்தார். அண்ணாமலையார் பாடிய பாடல்களைக் கேட்ட அரசர், "இந்தச் சிறுவன் இவ்வளவு சிறந்த பாடல்களை எங்ஙனம் இயற்ற இயலும்! இவன் பாடிய பாடல்கள் இவனுடையது அல்ல என்று கருதுகிறேன்" என்றார். அரசரின் உரையைக் கேட்ட அடிகள் மனம் வருந்தினார். எவ்வாறேனும் அண்ணாமலையின் திறமையை அரசர் உணரும் வண்ணம் செய்ய வேண்டும் என்று கருதினார்.
அரசரைப் பார்த்து, "இவன் செய்யுள் இயற்ற வல்லவனா? ஆற்றல் இல்லாதவனா என்பதைத் தாங்கள் பரிசோதித்து உணரலாமே" என்றார். அரசரும் அண்ணாமலையைப் பார்த்து, "காரிகை என்னும் சொல் ஒரே செய்யுளில் ஏழு இடங்களில் வெவ்வேறு பொருள்பட வருமாறு அகப்பொருள் துறை அமைய ஒரு கட்டளைக் கலிப்பா இயற்றுக" என்றார். அண்ணாமலை உடனே பாடினார். பாடலைக் கேட்டு மன்னர் அயர்ந்து போனார். அண்ணாமலையின் திறமை கண்டு வியந்தார். அவரது கவித்திறமை கண்ட அரசர், அவரை முகவூர் இராமசாமிப் புலவரிடம் இலக்கணம் கற்பதற்கு அனுப்பினார். அண்ணாமலையும் நாள்தோறும் அரண்மனையில் உணவருந்தி முகவூர் சென்று இலக்கணம் கற்று வந்தார். பல்வேறு இலக்கண, இலக்கிய அறிவும், இசைப் பயிற்சியும் பெறவேண்டும் என்று கருதிய அண்ணாமலையார், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சென்று, அதன் தலைவராயிருந்த சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கேட்டார். மேலும், அப்போது ஆதீனத்தில் இருந்த உ.வே.சாமிநாதய்யரிடம் நன்னூலும், மாயூர புராணமும் பாடம் கேட்டார். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வருகை புரிந்த பல கலைஞர்களிடம் இருந்து பல இசை நுட்பங்களையும் அறிந்து கொண்டார். அத்துடன் இசையுடன் பாடல்களைப் பாடும் பழக்கமும் அண்ணாமலையாருக்குக் கைவரப் பெற்றது. ஆதீனத்தில் இருந்தபோது அண்ணாமலையார் சுப்பிரமணிய தேசிகர் மீது நூற்றுக்கணக்கான பாடல்கள் புனைந்தார்.திருவாவடுதுறையிலிருந்து சென்னிக்குளம் வந்து சேர்ந்த அண்ணாமலை, மீண்டும் சுந்தர அடிகளின் உதவியினால் ஊற்றுமலைக்குச் சென்று அங்கு அரசராக இருந்த இருதயாலய மருதப்பத் தேவரின் அரசவைப் புலவராக அமர்ந்தார்.
ஊற்றுமலையரசரின் குலதெய்வமாகிய வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணர் மீது வீரையந்தாதி, வீரைப்பிள்ளைத் தமிழ் முதலிய சில பிரபந்தங்களைப் பாடினார்.மேலும், சங்கரன்கோவில் கோமதியம்மன் மீது சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களையும் அண்ணாமலையார் படைத்தளித்தார்.வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார், வீரகேரளம்புதூர் சுப்பிரமணிய சாஸ்திரியார், கரிவலம் வந்த நல்லூர் உத்தண்டம்பிள்ளை, பாண்டித்துரைத்தேவர் முதலியோர் அண்ணாமலையாருடன் பழகிய சம காலத்தவர் ஆவர்.
"சீர்வளர் பசுந்தோகை மயிலான் - வள்ளி
செவ்விதழ்அல் லாதினிய
தெள்ளமுதும் அயிலான்
போர்வளர் தடங்கையுறும் அயிலான் - அவன்
பொன்னடியை இன்னலற
உன்னுதல்செய் வாமே."
என்று தொடங்கிய பாடலை, ஒரு முறை கழுகுமலைக்குக் காவடி எடுத்தபோது வழிநெடுகத் தொடர்ந்து பாடிக்கொண்டே சென்றார்.
பாடல் கேட்ட அனைவரும் "முருகா முருகா" என்று கூறி மெய் மறந்தனர்.
த்தனையோ பாடல்கள்! ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு சந்தம்! வெவ்வேறு மெட்டு, வெவ்வேறு துறை. எல்லாம் புதுமை, எதுகை, மோனைகள் வந்து ஏவல் கேட்டன.இயைபுத்தொடை அடிதோறும் அணி வகுத்து நின்றது. அன்றிலிருந்து, "வாக்கிற்கு அருணகிரி" என்ற வாசகம், "வாக்கிற்கு அண்ணாமலை" என்று விரிந்தது. பழைய பாடல்களின் சாயல் அறவே இல்லாத புதுவகை நாட்டுப் பாடலாகக் காவடிச்சிந்து மலர்ந்தது. அண்ணாமலையார் பல்வேறு நூல்களை இயற்றி இருப்பினும் அவருக்குப் புகழ் சேர்த்தது காவடிச்சிந்துப் பாடல்களே ஆகும். காவடிச்சிந்து மட்டும் அவர் காலத்திலேயே அச்சாகிவிட்டது.வழிநடையில் பாடப்பட்ட காவடிச்சிந்துப் பாடல்களை எல்லாம் ஊற்றுமலையரசர் திரட்ட முயன்றார். இருபத்து நான்கு பாடல்களே முழுமையாகக் கிடைத்தன. மற்றவை ஆசுகவியாகப் பாடப்பட்டமையால் காற்றோடு கலந்து மறைந்து போயின. ஊற்றுமலையரசர் கிடைத்தவற்றை மட்டும் காவடிச்சிந்து எனப்பெயரிட்டு, ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு நாடெங்கும் இலவசமாக வழங்கினார். காவடிச்சிந்து நூல் அச்சானதற்கு மகிழ்ந்த அண்ணாமலையார், ஊற்றுமலையரசரையும், அச்சிட்ட நெல்லையப்பக் கவிராயரையும் பாராட்டி, ஐந்து கவிகள் பாடியுள்ளார். காவடிச்சிந்தின் இனிமையும் பெருமையும் நாடெங்கும் பரவின. அண்ணாமலையார் நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.
அண்ணாமலையாருக்கு அவரது தந்தையார், காலம் தாழ்த்தாது அவரது இருபத்து நான்காம் வயதில், குருவம்மா என்ற பெண்ணை மணம் முடித்து வைத்தார். புதுமனைவியுடன் ஊற்றுமலைக்கு வந்த அண்ணாமலை, நெடுநாள் இன்பமாக வாழ இயலவில்லை. அருந்தமிழ் பாடிய பெருந்தகையாளரை தீராத நோய் கவ்வியது. அப்போது அவருக்கு வயது இருபத்து ஆறு. தம் அவைக்கவிஞர் பிணியுற்றதறிந்த ஊற்றுமலையரசர், பலவித மருத்துவங்கள் செய்தும் நோய் நீங்கவில்லை.1891ஆம் ஆண்டு தை மாதம் அமாவாசையன்று தமது 29வது வயதில் கழுகுமலைக் கந்தனைக் கருத்தில் கொண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார். பொன்னுடம்பு நீங்கிப் புகழுடம்பு எய்தினார். காவடிச்சிந்து புகழ் அண்ணாமலையார் மறைந்தாலும், கழுகுமலைக் கந்தன் மீது அவர் பாடிய காவடிச்சிந்து என்றும் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
வீரை தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், கோமதி அந்தாதி ஆகியவற்றை இயற்றினார்.

பூசைத் தாயார்























எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர்
ஊற்றுமலையென்பது திருநெல்வேலி ஜில்லாவில் இருந்து வரும் ஒரு பழைய ஜமீன். அதில் ஜமீன்தார்களாக இருந்தவர்கள் வீரத்திலும் கல்வியிலும் சிறந்தவர்கள். வடகரையென்னும் சொக்கம்பட்டியில் பெரியசாமிச் சின்னணைஞ்சாத் தேவர் தலைமை வகித்து வந்த காலத்தில் ஊற்றுமலையில் இருந்த ஜமீன்தார் தென்மலையென்னும் சிவகிரியிலிருந்து ஜமீன்தாருக்கு உதவி புரிந்து வந்தனர். வடகரையாருக்கு நண்பராகிய சேற்றூர் ஜமீன்தாருக்குப் பல இடையூறுகளை விளைவித்தனர் தென்மலையார். வடகரை ஸ்தானாதிபதியாக இருந்த பொன்னம்பலம் பிள்ளை பல படையுடன் சேற்றூராருக்கு உதவியாக நின்று தென்மலையாரை வென்றனர். அதன்பின் தென்மலையும் அதற்கு உதவியாக நின்ற ஊற்றுமலை ஜமீனும் தம்முடைய நிலையிற் குலைந்தன. ஊற்றுமலை ஜமீன்தார் அப்பகைவர் கையில் அகப்பட்டார்: அவர் தம்முடைய மனைவியாரையும் இரண்டு சிறு பிள்ளைகளையும் விட்டு இறந்தனர்.
அவர் மனைவியாரின் பெயர் பூசைத்தாயாரென்பது. அவர் தம் குழந்தைகளுக்காகவே உயிர் வைத்திருந்தனர். குழந்தைகளில் மூத்தவர் மருதப்பத் தேவர்; இளையவர் சீவலவ தேவர் என்பார். பூசைத்தாயார் தெய்வ பக்தியும் தைரியமும் தமிழிற் சிறந்த பயிற்சியும் உடையவர். ஊற்றுமலை ஜமீன் அரண்மனையில் அடிக்கடி வித்துவான்களுடைய பேச்சுக்கள் நடந்து வருகையில் அவ்வம்மையார் ஜமீன்தார் அருகிலிருந்து அவற்றைக் கவனிப்பது வழக்கம்; ஆதலின் செய்யுட்களின் சுவை தெரிந்து அனுபவிக்கவும் புதிய செய்யுட்களை இயற்றவும் ஆற்றலுடையவராக ஆனார்.தம்முடைய கணவர் இறந்தபோது,"மிகவும் இளைஞர்களாக இருக்கும் குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவது!" என்று அவர் மனம் ஏங்கினார். ஊற்றுமலையில் தனியே இருப்பின் தம் குலக்கொழுந்துகளாகிய அவ்விருவருக்கும் ஆபத்து வருமென்று பயந்து தென்காசிக்குச் சென்று அங்கே அடக்கமான வாழ்க்கையை நடத்தி வருவாராயினர். புலமை நிரம்பிய பெண்மணியாராதலின் கல்வியினால் உண்டாகும் பெருமையே பெருமை என்றுணர்ந்து எவ்வாறேனும் தம் மக்களுக்குக் கல்வியறிவூட்டவேண்டு மென்னும் ஊக்கமுடையவராக இருந்தார். தென்காசியில் இருந்த பள்ளிக்கூடமொன்றில் தம் குமாரர் இருவரையும் சேர்ப்பித்துப் படிக்கச் செய்தார்.
அவ்விருவருள் இளையவராகிய சீவலவ தேவர் நல்ல லக்ஷணமும், வசீகரமான தோற்றமும் உடையவர். தைரியமும், சோம்பலின்றி உழைக்கும் ஊக்கமும் அவருக்குப் பிறவியிலே அமைந்திருந்தன. பிறர் உள்ளக் கருத்தைக் குறிப்பாக அறியும் நுண்ணறிவும் அவர் பால் இருந்தது. அவருடைய முகத்தைப் பார்த்துப் பூசைத்தாயார், "இவனால் நாம் ஈடேறலாம்" என்று எண்ணி மகிழ்ந்து வந்தார்.ஒரு நாள் சகோதரர் இருவரும் பள்ளிக்கூடம் செல்லும்போது அத்தலத்தில் உள்ள தேரடியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டபோது இளங்குழந்தையாகிய சீவலவதேவருக்குத் தாமும் விளையாடவேண்டுமென்னும் ஆசை உண்டாயிற்று. சிறிது நேரம் அவர்களோடு சேர்ந்து விளையாடத் தொடங்கினார். அவருடைய தமையனாராகிய மருதப்பத் தேவர் பள்ளிக்கூடத்துக்கு நேரமாகிவிட்டதென்று கூறினார். அதனைக் காதில் வாங்காமல் சீவலவதேவர் விளையாடிக் கொண்டே இருந்ததனால், மூத்தவருக்குக் கோபம் மூண்டது; உடனே தம்பியை அடித்துப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துப் போனார்.
சீவலவதேவர் மானமுள்ளவராதலின் பள்ளிக்கூடத்திலிருந்து வந்து தாயாரைக்கண்டவுடன் கோவென்று அழத் தொடங்கினார். தம்முடைய கண்மணியைப் போன்ற குழந்தை அங்ஙனம் எதிர்பாராதவிதமாக அழுவதைக் கண்ட பூசைத்தாயாருக்கு ஒன்றும் விளங்கவில்லை. விசாரித்தபோது விஷயம் தெரிந்தது. குற்றம் இருவரிடமும் இருப்பதாக அவர் எண்ணினார். கல்வியே செல்வமென்று எண்ணி அவர்களைப் படிக்கவைத்தவராதலின் இளையபிள்ளை விளையாட்டிற் போதைக் கழித்தது குற்றமென்பதும், இருப்பினும் நல்லுரை கூறாது இளங்குழந்தையை அடித்தது மூத்தவரது குற்றமென்பதும் அவர் கருத்து. யாரை நோவது?? "எல்லாம் நம்முடைய பழைய நிலையிலிருந்து மாறியதனால் உண்டாகியவையே" என்று எண்ணும்போது பூசைத்தாயாருக்குத் துக்கம் பொங்கி வந்தது. தம்முடைய உள்ளுணர்ச்சியை வெளிப்படையாக அந்தக் குழந்தைகளுக்கு உணர்த்தத் துணியவில்லை. ஆயினும் தமிழ்க் கல்வியறிவுடைய அப்பெண்மணியார் ஒரு செய்யுளால் அதை வெளியிட்டார். அது வருமாறு:
"தேரோடு நின்று தெருவோ டலைகிற செய்திதனை
ஆரோடு சொல்லி முறையிடு வோமிந்த அம்புவியில்
சீரோடு நாமும் நடந்துகொண் டாலிந்தத் தீவினைகள்
வாராவ டாதம்பி சீவல ராய மருதப்பனே."
இச்செய்யுளைச் சொல்லும்போதே அவர் கண்களில் நீர் துளித்தது.
அடிபட்ட சீவலவ தேவர் தம்முடைய துக்கத்தை மறந்தார். தம் தாயார் அவ்வாறு வருந்துவதற்குக் காரணமென்ன என்பதில் அவர் மனம் சென்றது. தங்களை அன்போடு பாதுகாத்துவரும் அன்னையார் வருந்துவதைக் கண்டபோது அவர் மனம் உருகியது. துணையற்ற நிலையில் இருந்தாலும் தம் உள்ளத்துள் இருந்த துயரத்தை அதுகாறும் அவ்வம்மையார் வெளியிட்டதேயில்லை; தைரியமாகவே இருந்து வந்தார். தம்முடைய பழைய நிலையையும் குழந்தைகளுக்குச் சொல்லவில்லை. அன்றைத்தினமோ வருத்தம் அடக்குவதற்கு அரிதாகிவிட்டமையால் அந்தச் செய்யுளைக் கூற நேர்ந்தது.ஒருநாளும் வருந்தாத தாயார் அங்ஙனம் வருந்துவதைக் கண்டு பொறாத இளையவர், "நம்மால் அல்லவா இந்த வருத்தம் தாய்க்கு வந்தது!" என்று எண்ணி அதிகமாக அழுதார். " நீ என்னம்மா இப்படி வருத்தமடைகிறாய்? இதற்குக் காரணம் என்ன? சொல்லத் தான்வேண்டும்" என்று பிடிவாதம் செய்தார். தாயார் வேறு வழியில்லாமல் எல்லாச் செய்திகளையும் குழந்தைகளிடம் சொல்லி வருந்தினார்.
"இனிமேல் எப்படி அம்மா நாம் பழைய நிலைக்கு வரமுடியும்?" என்று சீவலவதேவர் கேட்டார்."ஆண்டவன் அருள் செய்யவேண்டும். இப்போது வடகரையார் மிக்க பராக்கிரமம் கொண்டு விளங்குகிறார்கள். அவர்கள் மனம் வைத்தால் நம்மைப் பழையபடியே நிலைநாட்டலாம்." என்றார் பூசைத்தாயார்."வடகரை யரசரை நான் போய்ப் பார்த்து வரட்டுமா, அம்மா?" என்று தைரியத்துடன் சீவலவ தேவர் கேட்டார்."உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கிறதா? வடகரை சமஸ்தானாதிபதியைப் பார்ப்பது அவ்வளவு சுலபமான காரியமல்லவே!"."பின் என்ன செய்வதம்மா?"."பார்க்க முடியாது. ஆனால் ......"தாயார் சிறிது யோசித்தார். அவர் மனத்தில் ஏதோ ஒரு புதிய கருத்து உதித்தது."பொன்னம்பலம் பிள்ளையென்பவர் அந்த சமஸ்தானத்தில் ஸ்தானாதிபதியாக இருக்கிறார்; அவர் மிகவும் நல்லவர்: தமிழில் சிறந்த புலமையுடையவர். அவர் மனம் வைத்து நமக்கு உதவி செய்ய இசைந்தாரானால் ஸமஸ்தானாதிபதியும் இணங்குவார்." என்று தயார் கூறினார்.
"அவரையே போய்ப் பார்த்து வருகிறேன், உன்னுடைய அன்பையும் ஆண்டவன் கிருபையையும் துணையாகக் கொண்டு நான் போய்வருகிறேன்." என்று சீவலவதேவர் முன் வந்தார்.வீரக்குடியிற் பிறந்த பெண்மணியாராகிய பூசைத்தாயாருக்குத் தம் மகனிடத்தில் அளவற்ற நம்பிக்கை இருந்தது. "போய் வா" என்று வாழ்த்தி அனுப்பினார்.சீவலவதேவர் தென்காசியிலிருந்து புறப்பட்டுச் சொக்கம்பட்டிக்கு வந்து பொன்னம்பலம் பிள்ளையின் வீட்டை விசாரித்துக் கொண்டு சென்று அங்கே திண்ணையில் உட்கார்ந்திருந்தார். நடுப்பகலாதலின் உள்ளே பொன்னம்பலம் பிள்ளை நீராடிப் பூஜை பண்ணி விட்டு ஆகாரம் செய்து கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் அரண்மனையிலிருந்து, "மகாராஜா உடனே வரச் சொன்னார்" என்று ஒரு சேவகன் வந்து அழைக்கவே விரைவாக ஆகாரம் அருந்தி எழுந்தார். கரசுத்தி செய்துகொண்டவுடன் அரண்மனைக்குச் செல்லும்பொருட்டு வெளியே வருகையில் அங்கே திண்ணையில் உட்கார்ந்திருந்த இளைஞராகிய சீவலவ தேவர்மேல் அவர் பார்வை சென்றது. அவருடைய அழகிய முகத்தின் வசீகர சக்தி பிள்ளையின் உள்ளத்திற் பதிந்தது."நீ யாரப்பா?" என்று ஸ்தானாதிபதி வினவினார்.
சீவலவ தேவர் தாம் இன்னாரென்பதை அறிவித்தார். ஊற்றுமலை ஜமீன்தாரிணி நன்றாகப் படித்தவரென்பதை முன்னரே பொன்னம்பலம் பிள்ளை அறிந்திருந்தார். அவ்வம்மையாருக்கு இரண்டு இளங்குழந்தைகள் இருப்பதையும் கேள்வியுற்றிருந்தார். ஆதலின் சீவலவதேவர் இன்னரென்று தெரிந்தவுடன் அவருக்குத் திடுக்கிட்டது. அவர், "இங்கே யாரேனும் உம்மை இன்னாரென்று தெரிந்து கொண்டால் உம்முடைய தலை தப்பாதே!" என்று அஞ்சினார்."ஆண்டவன் திருவருளின்படியே எல்லாம் நடைபெறும்" என்றார் இளைஞர். அவ்விளைஞர் காட்டிய பணிவு பொன்னம்பலம் பிள்ளைக்கு மனக்கசிவை உண்டாக்கியது. அப்பொழுதே, "இவர்களைப் பழைய நிலையில் வைத்துப் பார்க்கவேண்டும்," என்ற சங்கற்பத்தைச் செய்து கொண்டார். பிறகு மிக்க களைப்புடன் இருந்த சீவலவதேவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்று உணவு செய்யச் சொல்லிவிட்டு, "இங்கே படுத்து இளைப்பாறிக்கொண்டிரு; நான் அரசரிடம் சென்று வருகிறேன். ஒருவரிடமும் தாம் இன்னாரென்று தெரிவிக்கவேண்டாம்" என்று சொல்லி அரண்மனைக்குச் சென்றார்.பொன்னம்பலம் பிள்ளை தம்முடைய தலைவராகிய சின்னணைஞ்சாத்தேவரிடம் அவர் அழைத்த விஷயமாகப் பேசிக்கொண்டிருக்கையில், "நம்மால் அழிக்கப்பட்ட ஊற்றுமலையார் வேறு சிலருடைய உதவியை நாடிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இப்போது அந்த ஜமீன் பரம்பரையில் இரண்டு இளைஞர்களே இருக்கிறார்கள். நமக்கும் அவர்களுக்கும் நேரே பகைமையில்லை. சமூகத்துக்குப் பரம்பரையாக அவர்கள் உறவினர்களல்லவா? சேற்றூராருக்கும் தென்மலையாருக்குமே பகை. சேற்றூராருக்கு நாம் உதவி செய்தோம்; தென்மலையாருக்கு அவர்கள் உதவி செய்தார்கள். அங்ஙனம் உதவி செய்த ஜமீன்தாரும் இப்போது இல்லை. ஊற்றுமலை ஜமீன் தமிழ்ப்புலவர்களை ஆதரித்துக் காப்பாற்றும் புகழையுடையது. அதன் அழிவுக்கு நாமே காரணமாக இருந்தோம். இப்போது மீட்டும் அந்த ஜமீனை நாமே நிலை நிறுத்தினால் நமக்கு அளவற்ற புகழ் உண்டாகும்; அநாவசியமான பகையுணர்ச்சியும் இல்லாமற்போம்! என்றார்.'நீர் எப்படி செய்தாலும் நமக்குச் சம்மதமே! என்று கூறினார் ஸமஸ்தானாதிபதி.
பொன்னம்பலம் பிள்ளை உடனே தென்காசிக்குப் பல்லக்கு அனுப்பிப் பூசைத்தாரையும் மருதப்பத் தேவரையும் வருவித்தார். அவர் பூசைத்தாயாரைப் பற்றி முன்பே கேள்விப்பட்டிருந்தார். தமிழ்ப்புலமையையுடைய அவரைச் சந்தித்தபோது பொன்னம்பலம் பிள்ளைக்கு அளவற்ற வருத்தம் உண்டாயிற்று; "இவ்வளவு சிறந்த அறிவுடைய இவரை இந்நிலைக்கு உள்ளாக்கியதற்கு நாமல்லவோ காரணம்!' என்று இரங்கினார்.அப்பால் பூசைத்தாயாருக்கும் அவர் குமாரர்களுக்கும் தக்க வசதி அமைக்கப் பட்டது.பொன்னம்பலம்பிள்ளை ஏவலாளர்களுடன் ஊற்றுமலை சென்று அங்கே பழுதுபட்டிருந்த கோட்டை, அரண்மனை முதலியவற்றைச் செப்பஞ் செய்வித்தார். பிறகு நல்ல லக்கினத்தில் கிருகப்பிரவேசம் நடத்த ஏற்பாடு செய்து, வடகரையிலிருந்து பல்லக்கில் ஊற்றுமலை ஜமீன்தாரிணியையும் இரண்டு குமாரர்களையும் வருவித்தார். கிரகப்பிரவேசம் மிகவும் விமரிசையாக நடந்தது. நல்லவேளையில் தமக்குரிய நிலையைப் பெற்று அவர்கள் மகிழ்ந்தார்கள்.ஊற்றுமலையில் மீட்டும் வாழ்வோமென்று நம்பிக்கையை முழுதும் இழந்திருந்த பூசைத்தாயாருக்கு அந்நிகழ்ச்சி அளவிறந்த விம்மிதத்தை உண்டாக்கியது. பொன்னம்பலம் பிள்ளையே அதற்குக் காரணமென்பதை அவர் அறிந்தார். தம்முடைய நன்றியறிவை அவர் ஒரு பாடலால் தெரிவித்துக் கொண்டார். அது வருமாறு:
"கூட்டினான் மிகுந்த பா ளையக்காரர் சேகரத்தைக் குறைவ ராமல்
சூட்டினான் மணிமகுடந் துரைபெரிய சாமிசெய்யுஞ் சுகிர்தத்தாலே
*தீட்டினா னம்பலம்பொன் னம்பலத்தான் றிரிகூடவரையிற் கீர்த்தி
நாட்டினா னூற்றுமலை நாட்டரசு தழைக்கநி லை நாட்டினானே."
பூசைத்தாயாரின் பொறுமையும் புலமையும் அவர்களுடைய நன்மைக்குக் காரணமாயின; தம்முடைய அரசை நிலைநாட்டித் தழைக்கவைத்த அமைச்சர் பிரானாகிய பொன்னம்பலம் பிள்ளையை அவர்கள் தம் குலதெய்வமாகவே போற்றிவந்தனர்.
அடிக்குறிப்பு:
அம்பலமென்றது திருக்குற்றாலத்துள்ள சித்திர சபையை: அதனைப் பொன்னம்பலம் பிள்ளை புதுப்பித்தாரென்று தெரிகிறது.

உ.வே.சாமிநாதையர் -லட்டுச் சுமை


























இராமநாதபுரம் ஜில்லா வேம்பத்தூர் வாசியான சிலேடைப்புலி பிச்சுவையரைப் பற்றிப் பலர் கேட்டிருப்பார்கள். அவர் வியக்கத்தக்க வண்ணம் அதிவிரைவில் கவிபாடும் ஆற்றலையுடையவர். திருவாவடுதுறையில் சின்னப்பட்டத்திலிருந்த ஸ்ரீ நமச்சிவாய தேசிகரவர்களிடம் பாடம் கேட்டவர். இராமநாதபுரம் ராஜா ஸ்ரீ பாஸ்கர ஸேதுபதி அவர்களால் மிகவும் ஆதரிக்கப்பெற்றவர். அவரிடம் சுப்பையரென்னும் ஓரிளைஞர் அடிக்கடி வந்து பாடங்கேட்டு வந்தார். பிச்சுவையர் வெளியூருக்குப் போகையில் சுப்பையரையும் அழைத்துச் செல்வதுண்டு.

அக்காலத்தில் ஊற்றுமலையில் ஜமீன்தாராக இருந்தவர் ஹ்ருதயாலய மருதப்பத்தேவர் என்பவர். அவருடைய கல்வியறிவும் ஆற்றலும் நற்குணங்களும் மிக உயர்ந்தவை. தமிழ் வித்துவான்களிடத்தும் ஸங்கீத வித்துவான்களிடத்திலும் அவருக்கிருந்த அன்பு யாவராலும் மறக்க இயலாதது. வீண்காலம் போக்காமல் காலவரையறைப்படி ஒழுங்காக எல்லா வேலைகளையும் திருத்தமுறச் செய்வார். தம்முடைய ஜமீன் ஸம்பந்தமான வேலைகளையும் மற்ற காரியங்களையும் அவ்வப்போது செய்வதால் உண்டாகும் அயர்ச்சியை அவர் தமிழ் நூலாராய்ச்சியால் ஆற்றிக் கொள்வார். தினந்தோறும் கலையில் 8-மணி முதல் 10- மணி வரையிலும், மாலையில் 2-மணி முதல் 4-மணி வரையிலும் புலவர்களைக் கொண்டு நல்ல தமிழ் நூல்களை வாசிக்கச் செய்து கேட்பதும் அப்புலவர்கள் அங்கங்கே கூறும் நயமான பொருள்களையறிந்து உவப்பதும் தாமே எடுத்துக் கூறுவதும் அவருக்கு இயல்பு. இதற்கென்றே தம்முடன் சில புலவர்களை வைத்து ஆதரித்து வந்தார்.

ஊற்றுமலை ஜமீன்தார்களுக்குக் குலதெய்வமாகிய நவநீத கிருஷ்ண ஸ்வாமியின் ஆலயம் அவ்வூரில் இருக்கிறது. அங்கே நித்திய நைமித்திகங்கள் சிறப்பாக நடைபெறும். பெரிய கோயில்களுக்கு நடைபெறுவனபோன்ற சிறப்புக்களை அங்கே பார்க்கலாம். அதற்குரிய நித்தியப் படித்தரம் பத்து வராகனென்று கேள்வி. அந்தக் கோயிலின் நைவேத்தியங்களுக்கு ஒரு தனிச் சிறப்புண்டு. பல வர்க்கான்னங்களும், லாடு, லட்டு, ஜிலேபி, தேங்குழல் முதலிய பக்ஷியவகைகளும் கண்ணபிரானுக்கு நிவேதனம் செய்யப்படும். எல்லாம் புத்துருக்கு நெய்யிற் செய்யப்படுவன. ஒரு லாடு உரித்த தேங்காயளவு இருக்கும். தேங்குழல் பெரிய சந்தனக் கல்லளவு இருக்கும். இவ்வளவு விசேஷமான நைவேத்தியங்களை ஒவ்வொரு நாளும் அங்கே காணலாம். உத்ஸவ காலங்களில் இவை பன்மடங்கு சிறப்பாக இருக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா?

ஹ்ருதயாலய மருதப்பத்தேவர் புலவர்களிடம் காட்டும் அன்பைப் பலவகைகளில் அறியலாம். அவர்களுக்கு உரிய சம்மானங்களை அளிப்பதோடு நவநீத கிருஷ்ணனுடைய பிரசாதத்தையும் ஒவ்வொரு நாளும் அவர்கள் வெறுக்கும் வரையில் அளிக்கச் செய்வார். சில சமயங்களில் புலவர்களுக்குப் பக்ஷியங்களைக் கொடுத்தனுப்புவதும் உண்டு.

நவநீதகிருஷ்ண ஸ்வாமியின் உத்ஸவத்துக்கு ஒரு சமயம் பிச்சுவையர் சுப்பையரையும் உடன் அழைத்துக்கொண்டு ஊற்றுமலை போயிருந்தார். அவரிடம் ஜமீன்தாருக்கு மிக்க அன்பு உண்டு. அவருடைய சாதுரியமான செய்யுட்களைக் கேட்டுப் பொழுது போக்குவதில் ஜமீன்தார் சலிப்படைவதில்லை. உத்ஸவம் நடந்த பிறகு பிச்சுவையர் தம் ஊருக்குப் புறப்பட்டார். வழக்கப்படி அவருக்கு அளிக்கவேண்டிய சம்மனங்களை அளித்த ஜமீன்தார், "உங்களுக்கென்று இரண்டு மூன்று நாள் பிரசாதங்களை எடுத்து வைக்கச் சொல்லியிருக்கிறேன். அவற்றைக் கொண்டுபோய் உங்கள் குழந்தைகளிடம் கொடுக்கவேண்டும்" என்றார். பிச்சுவையரிடம் அவை கொடுக்கப்பட்டன. அவற்றை ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொள்ளுகையில் உடன் வந்த இளைஞராகிய சுப்பையர், "நான் எடுத்து வருகிறேன்" என்று சொல்லி வாங்கிக்கொண்டார். சுமை சிறிது பெரிதாகவே இருந்ததால் சுப்பையர் அதைத் தம் தலையில் வைத்துத் தூக்கி வந்தார்.

வழியில், பிச்சுவையர் சிறிது தங்கிச் செல்ல நேர்ந்தது; "நீ முன்னே போ; நான் சற்று நேரத்தில் வந்துவிடுகிறேன்" என்று சொல்லி இவரை முன்னே அனுப்பினார். இவர் சிறிது தூரம் சென்றார். நடந்து வந்ததனாலே களைப்பு ஏற்பட்டது; பசியும் உண்டாயிற்று. இவர் உடனே பக்ஷிய மூட்டையைக் கீழே வைத்தார். அதன் மணம் இவர் மூக்கைத் துளைத்தது; நாவில் நீர் ஊறிற்று. அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டே மூட்டையை அவிழ்த்துச் சிறிது சிறிதாகப் பக்ஷியத்தைச் சுவை பார்க்கலானார். அதன் சுவை இவரைத் தன் வசப்படுத்திவிட்டது. பின்னால் பிச்சுவையர் வருவாரென்ற நினைவில்லாமல் ஒரே ஞாபகத்தோடு அந்த வேலையில் அவர் ஈடுபட்டிருந்தார்.

சிறிது நேரம் சென்றது. "என்னடா பண்ணுகிறாய்?" என்ற குரலைக் கேட்டவுடன் சுப்பையர் திடுக்கிட்டார். இவர் பக்ஷியங்களை ஊக்கத்தோடு தின்றுகொண்டிருக்கும் காட்சியைப் பிச்சுவையர் பார்த்து வியந்தார்; "என்னிடம் சொன்னால் நான் வேண்டாமென்றா சொல்லுவேன்?" என்று கேட்டார் அவர்.

சுப்பையர்:- நான் என்ன செய்வேன்! கால் வலித்தது; பசியும் உண்டாயிற்று. இப்படிச் செய்வதைவிட வேறு வழியேது?

பிச்சுவையர், "அதற்காக இப்படி வழியிலே மூட்டையைப் போட்டுக்கொண்டா தின்னவேண்டும்? சரி, மூட்டையைத் தூக்கு" என்று சொல்லிக் கொண்டே அதனைக் கட்டிச் சுப்பையரிடம் கொடுக்கலானார்.

உடனே சுப்பையர் தம் கையிலிருந்த பக்ஷியங்களைத் தின்று கொண்டே, "இச்சுமையைப் பிச்சுவையா வென்றலையி லேற்றுவது மியல்பு தானோ?" என்றார். ஒரு பாட்டின் ஓரடியாக இருந்தது அது.

உடனே சுப்பையர் தம் கையிலிருந்த பக்ஷியங்களைத் தின்று கொண்டே, "இச்சுமையைப் பிச்சுவையா வென்றலையி லேற்றுவது மியல்பு தானோ?" என்றார். ஒரு பாட்டின் ஓரடியாக இருந்தது அது.

பிச்சுவையர், "நீ செய்யுள் கூடச் செய்வாய் போலிருக்கிறதே!" என்று பின்னும் வியப்புடன் கூறினார்.

சுப்பையர்:- எல்லாம் உங்களுடைய ஆசீர்வாதந்தான்.

பிச்சுவையர்:- சரி, அப்படியானால் உன் கையிலுள்ள பக்ஷியத்தைத் தின்று பூர்த்தி செய்து விட்டு அந்தச் செய்யுளையும் பூர்த்தி செய்.

சுப்பையர் அங்ஙனமே பூர்த்தி செய்தார். அந்தச் செய்யுள் வருமாறு:-

(அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்)

எச்சகமும் புகழ்படைத்த தொன்னூற்று மலைமருதப்

...பேந்த்ரன் போற்றும்

நச்சரவி னடிப்பவர்க்கு நைவேதித் திட்டதிவ்ய

...லாடு லட்டு

வச்சுவச்சுத் தின்றுதின்று வயிறுகுறை யாமன்மிக

...வருந்தும் வேளை

இச்சுமையைப் பிச்சுவையா வென்றலையி லேற்றுவதும்

...இயல்பு தானோ.

Posted by இளைய நிலா