Wednesday, 27 March 2013

செவக்காட்டுச் சேதிகள்


கிராமத்து மக்களின் பேச்சு, நடை உடை, பாவனைகள் கூட சில நேரம் கவித்துவமாக அமைந்துவிடுகின்றன. ஒரு பெண் வயசுக்கு வந்துவிட்டால், அப்பெண்ணின் தந்தையைப் பார்த்து, மற்றவர்கள் ‘பேரன் பிறந்திருக்கிறானா?’ என்று சந்தோசமாக விசாரிப்பார்கள்.
‘மகள் வயசுக்கு வருவதற்கும், பேரன் பிறப்பதற்கும் என்ன சம்பந்தம்?’ என்ற குழப்பம் வெகுநாட்களாக இருந்தது எனக்கு. ஒருநாள் கிராமத்து பெரியவர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அது பற்றிக் கேட்டேன்.
அந்தப் பெரியவர், ‘ஒரு பெண் வயதிற்கு வந்து விட்டால் என்றால், அவளின் கர்ப்பப்பை கருவுறுவதற்குத் தயாராக இருக்கிறது’ என்று அர்த்தம். எனவே விரைவில் ‘உன் மகளுக்குத் திருமணமாகட்டும், அவள் வயிற்றில் தலைநாளில் ஒரு ஆம்பளப்பிள்ளை பிறக்கட்டும்’ என்ற வாழ்த்துக்களுடன் கூடிய தன் எண்ணத்தை அந்த வாசகம் வெளிப்படுத்துகிறது’ என்றார்.
அதுசரி, ‘ஏன் பேரன் பிறக்கட்டும்’ என்று வாழ்த்துகிறார்கள், ‘பேத்தி பிறக்கட்டும்’ என்று வாழ்த்தவில்லை? என்று அந்தப் பெரியவரிடம் மேலும் கேட்டேன்.
பெரியவர், “தலைப்பிள்ளை ஆம்பளப்பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என்று பொதுவா நாம நினைக்கிற நினைப்பைத்தான் அந்த வாசகம் பிரதிபலிக்கிறது”ன்னு சொன்னார். “அந்த வாசகத்திலும், ஒருவித ஆணாதிக்க மனோபாவம் இருக்கத்தான் செய்கிறது” என்று நினைத்துக் கொண்டேன்.
கிராமத்து மக்கள் எதேச்சையாகப் பேசுகிற பேச்சு மரபில்கூட நுட்பமான சில சேதிகள் இருக்கின்றன. அதேபோல கிராமத்து மக்களில் சில இனக்குழு மக்களுக்கு என்று சில அபூர்வமான நடை, உடை, பாவனைகள் இருக்கின்றன.
புகைப்படக் கருவி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இன்று கிடைத்தால், அப்புகைப்படத்தை வைத்து ஆய்வுகள் செய்து பலப்பல செய்திகளை நாம் அறிந்துகொள்ள முடியும்.
நடுத்தர வயதுடைய ஒரு குடும்பப் பெண்ணின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் என் பார்வைக்கு வந்தது. அந்தப் புகைப்படத்தை வைத்துக்கொண்டு பெரியவர் ஒருவர், “இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் இன்ன ஜாதியைச் சேர்ந்தவர்தான்” என்று அடித்துக் கூறினார் (உறுதியாகச் சொன்னார்).
“எப்படி அந்தப்பெண் இன்ன ஜாதியைச் சேர்ந்தவர்தான் என்று அடித்துக் கூறுகின்றீர்கள்?” என்று பெரியவரிடம் கேட்டேன்.
பெரியவர், ‘புகைப்படத்தில் இருக்கும் பெண் சேலை கட்டி இருக்கும் விதம், அவள் காதில் அணிந்திருக்கும் ‘பாம்படம்’ என்ற நகை, அவள் கால்களில் கிடக்கும் தண்டை, கழுத்தில் கிடக்கும் தாலியின் அமைப்பு எல்லாவற்றையும் பார்த்துக் கணித்துத்தான் கூறுகிறேன்’ என்றார்.
‘எனக்கொன்றும் புரியவில்லையே என்றேன்’ நான். “பழங்கால புகைப்படங்கள் கூட இன்றைய நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வுக்கு ஒரு சான்றாதாரம்தான். புகைப்படத்தில் இருக்கும் பெண் மேலுக்கு சட்டை போடவில்லை. நடுத்தரமான வயதில் மாராப்புச் சேலையுடன் ஒரு புகைப்படத்திற்கு ஒரு பெண் போஸ் கொடுத்திருக்கிறாள் என்றால், அவள் இன்ன ஜாதியைச் சேர்ந்த பெண் அல்ல என்று பட்டியலிட்டு விடலாம். அடுத்து அப்பெண் காதில் போட்டிருக்கும் பாம்படம்.
இந்தப் புகைப்படம் எடுத்து சுமார் இருநூறு வருசமாவது இருக்கவேண்டும். அன்றைய காலகட்டத்தில் ‘பாம்படம்’ என்ற இந்த ஆபரணத்தை இன்ன இன்ன ஜாதிக்காரர்கள் அணிந்தார்கள்’ என்று பட்டியலிட்டு விடலாம்.
எல்லாவற்றையும் விட அந்தப் பெண் கழுத்தில் அணிந்திருக்கும் தாலியைப் பார்க்க வேண்டும். ஒரு பெண் கழுத்தில் அணிந்திருக்கும் தாலியை வைத்து அந்தப் பெண் எந்த மதத்தைச் சேர்ந்தவள், என்ன ஜாதியைச் சேர்ந்தவள், அந்த ஜாதியிலும் எந்தப் பிரிவைச் சேர்ந்தவள் என்று துல்லியமாகக் கூறிவிடலாம்.
ஒவ்வொரு ஜாதிக்கென்று ஒவ்வொரு விதமான ‘தாலி’ இருக்கிறது. அதில் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் என்று ஒவ்வொருவிதமான தாலி அடையாளம் இருக்கிறது. தமிழ்ப் பெண்களின் தாலியைப் பற்றிப் பேசினால் அதுவே பெரியதொரு ஆராய்ச்சியாகப் போய்விடும்’ என்று விளக்கம் கூறினார்.
‘புகைப்படத்தில் இருக்கும் அந்தப்பெண் ஏன் மேலுக்குச் சட்டை அணிந்து கொள்ளவில்லை?’ என்று பெரியவரிடம் கேட்டேன்.
பெரியவர் “இன்றைக்கும் கிராமங்களில் மாராப்போடு வீட்டிற்குள்ளும், வீதியிலும் வலம் வரும் பெண்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் தான் உடம்பில் அணிந்திருக்கும் சட்டையைக் கழற்றிவிடுவார்கள். அதன் பிறகு மாராப்புச் சேலையுடன்தான் காட்சியளிப்பார்கள்.
சின்னப் பிள்ளைகளுக்குப் பாவாடை சட்டை போட்டு அழகு பார்க்கிறார்கள். அதே பெண் குழந்தையின் உடம்பில் பருவ மாற்றங்கள் வந்த பிறகு அக்குமரிப் பெண்ணுக்குப் பாவாடை சட்டையுடன் தாவணியும், சில உள்ளாடைகளும் அணிந்துகொள்ளச் சொல்கிறார்கள்.
அதே பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்போது சேலை, சட்டை அணிந்துகொள் என்கிறார்கள். சில குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்கள் – ஒரு காலகட்டத்தில் தன் உள்ளாடையையும் சட்டையையும் கழற்றி எறிந்துவிடுகிறார்கள்.
அப்படித் தன் சட்டையைத் துறக்கும் அந்தப் பெண்ணுக்குக் கணவர் இருப்பார். தலைக்கு மேல் வளர்ந்த ஆம்பளப் பிள்ளைகள், பொம்பளைப் பிள்ளைகள் இருப்பார்கள். ஆனால், அவர்கள் யாரும் அப்பெண் தன் சட்டையைத் துறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டார்கள். ஏனென்றால், அது அவர்களின் கலாச்சாரம் சார்ந்த விசயம் என்று விளக்கம் சொன்னார்.
நான் பெரியவரிடம், “எப்போதிருந்து அந்தப் பெண் தன் சட்டையைத் துறக்கிறார்?” என்று கேட்டேன்.
நண்பர், “குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த பெண் தன் தலைமகனின் மகள் (பேத்தி) வயசுக்கு வந்த நாளில் இருந்துதான் அணிந்திருக்கும் சட்டையைக் கழற்றி விடுகிறாள். பேத்தி வயதிற்கு வந்துவிட்டாள் என்றால், அவளின் கர்ப்பப்பை ஒரு கருவைத் தாங்கும் தகுதியை அடைந்துவிட்டது’ என்பது பொருள். எனவே பாட்டியான அந்தப் பெண் தன் சட்டையைக் கழற்றி ஊர் உலகத்திற்குத் தன் மூத்த மகன் வயிற்றில் பிறந்த பிள்ளை வயசுக்கு வந்துவிட்டாள் என்பதைக் குறிப்பாக அறிவிக்கிறாள்.

சட்டையைத் துறப்பது என்ற குறியீடு, ‘காமத்தைக் கடத்தல்’ என்பதையும் குறிக்கிறது. கணவன், மனைவி என்று தாத்தாவும், பாட்டியுமாக அவர்கள் வாழ்ந்தாலும், மனைவி தன் சட்டையைத் துறந்த பிறகு அப்பெண், தன் கணவருடன் தாம்பத்திய உறவை வைத்துக்கொள்வதில்லை. ‘சட்டை துறப்பு’ என்ற செயல், இதுவரை கணவன் – மனைவியாகச் சேர்ந்து வாழ்ந்து அவர்கள் பெற்ற இல்லற சுகத்திற்கு அதாவது காமத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது. இதற்கு அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ, ஊர்க்காரர்களோ எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. இதுபோன்ற பண்பாட்டுக் கூறுகள் காலங்காலமாகக் கிராமப்புறங்களில் சில இனக்குழு மக்களிடம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
நடுத்தர வயதாக இருந்தாலும், உடல் கட்டுடன் அத்தகைய பெண் இருந்தாலும், அவர்கள் குறிப்பிட்ட அந்த நாளிலிருந்து தானே முன்வந்து தன் சட்டையைத் துறந்துவிடுகிறாள். அல்லது சமூகம் சார்ந்த கலாச்சார அம்சம் அப்பெண்ணைச் சட்டையைத் துறக்கும்படி நிர்ப்பந்திக்கிறது.
இப்படிச் சில கிராமத்து மக்கள், ‘காமத்தைத் துறப்பது’ என்பதையும் ஒரு சடங்காக, வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலோட்டமாக இத்தகைய சேதிகளைப் பார்க்காமல் கூர்ந்து கவனித்து ஆராய்ந்தால் நம் பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த பல உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியும்” என்றார் பெரியவர்.

நன்றி : திரு.கழனியூரன்

No comments:

Post a Comment