Sunday, 31 March 2013

திருடன் பெற்ற பதவி

திருநெல்வேலிக்கு அருகில் 18-ஆம் நூற்றாண்டில் ஊத்துமலை ஜமீன் என்ற சமஸ்தானம் இருந்தது.

ஊத்துமலை சமஸ்தானத்தை ஆண்ட ஜமீன்தார்களில் இருதாலய மருதப்ப பாண்டியன் மிகவும் பேசப்படுகிறார். அவரைப் பற்றியும் அவரின் ஆட்சிக்காலச் சிறப்புகளைப் பற்றியும் இன்றும் மக்கள் கதைகதையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஊத்துமலை என்ற கிராமத்தைச் சேர்ந்த வித்வான் தங்கப் பாண்டியன் என்ற தகவலாளர் கூறிய ஒரு சேதியை மட்டும் இங்கே, பதிவு செய்ய விரும்புகிறேன்.

‘சேதி’க்குள் செல்லும் முன் தகவலாளரைப் பற்றிய சில சுவாரஸ்யமான செய்திகளைக் கூறி விடுகிறேன். இன்றைக்கு இவருக்கு சுமார் 75 வயதாகிறது. செக்கச் செவேல் என்று பழுத்த பழமாகக் காட்சியளிக்கிறார்.

தங்கப் பாண்டியனார், எந்தக் கல்விக் கூடத்திற்கும் சென்று பெரிய படிப்பு எதையும் படித்தவரல்ல. குரு குலத்திற்குச் சென்று அடிப்படையான கல்வி அறிவை ஏட்டுப்படிப்பின் மூலம் பெற்றிருக்கின்றார்.

அதன் பின் தானே முயன்று பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்திருக்கிறார். இன்று தொல்காப்பியம் நன்னூல் போன்ற இலக்கண நூல்களுக்கும், பன்னிரு திருமுறைகள் போன்ற இலக்கிய நூல்களுக்கும் உரை எழுதும் அளவிற்குப் புலமை பெற்றுள்ளார்.

சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின் நூல்களை, குறிப்பாக, ரெட்டியார் எழுதிய காவடிச் சிந்து என்ற நூலின் பெருமைகளை இப்பகுதி மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அந்நூலை மக்கள் மன்றத்தில் புகழ் பெறச் செய்துள்ளார்.

இடுப்பில் ஒரு நாலு முழ வேட்டி. மேலுக்கு ஒரு துண்டு. இவை மட்டுமே இவரின் ஆடைகள், கழுத்தில் ஒரு உத்திராட்சை மாலையும் அணிந்துள்ளார். காலுக்குச் செருப்பும் போட்டுக் கொள்வதில்லை. ஆடைக்கும் கோடைக்கும், பனிக்கும், குளிருக்கும் மேலுக்குச் சட்டை அணிந்து கொள்வதில்லை.

சிவப்பழமாக நெற்றி நிறைய திருநீறும் பூசி இருக்கும் தங்கப்பாண்டியனார் எந்தப் பல்கலைக் கழகத்திலும் படித்துப் பட்டம் வாங்கிவரல்ல. ‘வித்வான்’ என்ற அடை மொழி மக்கள் கொடுத்ததுதான்.

இனி, தகவலாளர், சிவப்பழம் தங்கப்பாண்டியனார் சொன்ன சேதியைப் பார்ப்போம்.

இருதாலய மருதப்ப பாண்டியன் ஆட்சிக் காலத்தில் நடந்த சம்பவம் இது. ஜமீன்தாருக்குச் சொந்தமாக ஏகப்பட்ட மாந்தோப்புகள் ‘தாயார் தோப்பு’ என்ற ஊரில் இருந்தது.

தோப்புக் காவலுக்கு என்று நாலைந்து காவல்காரர்களை ஜமீன்தார் நியமித்து இருந்தார். தோப்பு என்றால் ஏக்கர் கணக்கில் அல்ல. மைல் கணக்கில் இருந்தது.

குற்றாலத்தில் சீசன் ஆரம்பிக்கும் சமயத்தில் மாந்தோப்புகளில் மரம் கொள்ளாமல் காய்கள் காய்த்துத் தொங்கும். ஜமீனுக்குச் சொந்தமான மாந்தோப்புகளில், பொது மக்கள் யாரும் சென்று மாங்காய்களைப் பறிக்க மாட்டார்கள். ஜமீன்தார் மீது அந்த அளவுக்கு மரியாதை கலந்த பயம் மக்களுக்கு இருந்தது.

இந்த ஆண்டு மாங்காய் சீசன் ஆரம்பித்த போது தாயார் தோப்பில் உள்ள மாமரங்களில் தினமும் இரவில் குறிப்பிட்ட அளவில் மாங்காய்கள் களவு போய்க் கொண்டே இருந்தது.


காவல்காரர்கள் பகலில் பார்க்கும் போது சில மாமரங்களில் மாங்காய்கள் பறிக்கப் பட்டிருப்பது தெரிகிறது. ஆனால் இரவில் மாங்காய் திருடும் திருடனைப் பிடிக்க முடியவில்லை.

தோப்போ, விரிந்து பரந்து கிடந்தது. காவல்காரர்களோ. நான்கு பேர் மட்டும் தான் இருந்தார்கள். எனவே ஒருபக்கம் இல்லை என்றால் இன்னொரு பக்கம் திருடன் எப்படியோ, காவல் காரர்களின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டுத் தன் ‘கைவரிசை’யைக் காட்டிக் கொண்டிருந்தான்.

மாந்தோப்பில் மாங்காய்களைத் தினமும் திருடும் திருடனை எவ்வளவோ முயன்றும் காவல்காரர்களால் பிடிக்க முடியவில்லை.

கடைசியில் காவல் காரர்கள் நால்வரும் ஜமீன்தாரிடம் வந்து, மகாராஜா நம் மாந்தோப்பில் தினப்படி யாரோ ஒரு திருடன். தான் சுமக்கும் பாரம் (ஒரு ஆள் சுமக்கும் அளவுக்கு) மட்டும் மாங்காய்களைத் திருடிக் கொண்டிருக்கிறான். காவல்காரர்களாகிய நாங்கள் நால்வர் மட்டும் இருப்பதால் சுமார் ஒரு மாத காலம் ஆகியும் அந்தத் திருடனை எங்களால் பிடிக்க முடியவில்லை. அரண்மனையில் இருந்து கூடுதலாகச் சில காவல்காரர்களையோ, வீரர்களையோ, எங்களுக்குத் துணையாக அனுப்பினால் தான் அந்தத் திருடனைப் பிடிக்க முடியும்’ என்றார்கள்.

காவல்காரர்கள் சொன்னதைக் கேட்ட மகாராஜா, அன்று இரவே ரகசியமாக, கூடுதலாக நாற்பது காவல்காரர்களை மாந்தோப்பின் காவலுக்கு அனுப்பினார்.

அரண்மனையில் இருந்து கூடுதல் காவல்காரர்கள், மாந்தோப்பின் காவலுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை அறியாத திருடன் வழக்கம் போல் மாந் தோப்பிற்குத் திருடச் சென்றான். எனவே இருட்டில் மறைந்திருந்த அரண்மனைக் காவல் வீரர்கள் திருடனைக் கையும்களவுமாகப் பிடித்து விட்டார்கள்.

மறுநாள் காலையில், மாங்காய் திருடிய திருடனையும் அவன் பறித்துச் சாக்கில் வைத்திருந்த மாங்காய்களையும் மகாராஜாவின் முன்னால் ஆஜர்படுத்தினார்கள்.

மாங்காய் திருடிய திருடனைப் பார்த்ததும், அவனை ஏற்கனவே எங்கோ பார்த்த ஞாபகம் இருக்கிறதே என்று மகாராஜா யோசித்தார்.

சுமார் இரண்டுமாதங்களுக்கு முன்னால் இதே ஆசாமி அரண்மனைக்கு வந்து காவல்காரன் வேலை வேண்டும் என்று கேட்டதும் இப்போதைக்குக் காவலுக்கு ஆள் தேவை இல்லை. தேவைப்படும் போது சொல்லி அனுப்புகிறேன் என்று பதில் சொல்லி அனுப்பியதும் மகாராஜாவின் நினைவுக்கு வந்தது. என்றாலும் அதை வெளியே சொல்லாமல், திருடனைப் பார்த்து யப்பா, உன் பெயரென்ன..? நீ என்ன வண்ணம் (ஜாதி), ஏன் என் தோப்பில் மாங்காய்களைத் திருடினாய்? என்று கேட்டார்.

திருடன் மிகத் தைரியமாக "மகாராஜா, நான் சிங்கம் பட்டி ஜமீனைச் சேர்ந்தவன். எனக்கு ஒத்தக்கு ஒரு பொட்ட புள்ளை மட்டும் தான். என் பொண்டாட்டியும் செத்துட்டா. நான்தான் என் மகிளை வளர்த்து ஆளாகக் கினேன். என் மகளை இங்கே ஊத்துமலையில் தான் கட்டிக் கொடுத்திருக்கு. நானும் என் மகளுடன்தான் குடியிருக்கிறேன். என் மகளுக்கு ஒரு கால் ஊனம் அவளால் காடு, கரைகளுக்குச் சென்று வேலை, ஜோலி பார்க்க முடியாது. சமீபத்தில் மூணு மாசத்துக்கு முன்னால என் மருமகனும் காலமாயிட்டார். என் மகளுக்கு, ரெண்டு பிள்ளைகள் இருக்கு. எனக்கும் வயசாயிட்டு, அங்க சிங்கம் பட்டி ஜமீன்ல நான் காவல் வேலைதான் பார்த்துகிட்டு இருந்தேன். எனக்கு வேற விவசாய வேலைகள் ஒண்ணும் பார்க்கத் தெரியாது.

கால் நடக்க முடியாத சித்தனுதலி (இளம் விதவை) யான பொட்டப்பிள்ளையையும், அவள், வயிற்றில் பிறந்த ரெண்டு பச்சை மதலைகளையும்(குழந்தைகளையும்) காப்பாத்தத்தான். நான் ரெண்டு மாதங்களுக்கு முன்னால் உங்களிடம் வந்து காவல் வேலை கேட்டேன். நீங்கள், "இப்போதைக்குக் காவல் வேலைக்கு ஆள் தேவை இல்லை!" என்று சொல்லி விட்டீர்கள்.

எத்தனை நாள்தான். நானும், என் மகனும், பேரன், பேத்தியும் பட்டினி கிடக்க முடியும்? எனவேதான் எங்கள் வயிற்றுப் பாட்டிற்காக (சாப்பாட்டிற்காக) நான், உங்கள் மாந்தோப்பிற்குச் சென்று ஒராளம் சுமைக்கு மட்டும் மாங்காய்களைப் பறித்து அதை வெளியூருக்குக் கொண்டு சென்று விற்று என் கால ஜீவனைக் கழித்தேன். நேற்று அரண்மனைக் காவலர்களிடம் கையும் மெய்யுமாக மாட்டிக் கொண்டேன் மகாராஜா, நான் செய்திருப்பது தப்புதான் தாங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்" என்றான்.

மகாராஜா திருடனைப் பார்த்து "எப்பா, என் குடும்ப நிலை இப்படி, என்று முதலில் நீ காவல் வேலை கேட்டு வரும் போதே, என்னிடம், விளக்கமாகச் சொல்லி இருந்தால் அன்றே உனக்கு ஏதாவது ஒரு வேலையை அரண்மனையிலேயே போட்டுக் கொடுத்திருப்பேன். நீ, திருடியதில் எந்தத் தப்பும் இல்லை. உன் வயிற்றுப் பாட்டிற்காக, உன் தேவைக்கு மட்டும், தினமும் திருடி இருக்கிறாய். தொடர்ந்து தினமும் திருடினாலும், காவலர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் மிகத் திறமையாகத் திருடி இருக்கிறாய். உனக்கு வேலை கொடுக்காதது என் தப்புதான். உன் மேல் எந்தத் தப்பும் இல்லை. உடல் ஊனமுற்ற மகளுக்காகவும் பசியோடு இருக்கும் குழந்தைகளுக்காகவும் அரண்மனைக்குச் சொந்தமான தோப்பில் திருடி இருக்கிறாய். அது ஒரு பெரிய குற்றம் இல்லை. இன்று முதல் – நீ தினமும் மாங்காய் திருடிய மாந்தோப்புகளுக்கு, உம்மையே தலைமைக் காவலனாக நியமிக்கிறேன். உம் மகளின், பேரக் குழந்தைகளின் பசியைப் போக்க, ஒரு மாதச் சம்பளத்தை முன் பணமாகக் கொடுக்கச் சொல்கிறேன். அதைப் பெற்றுக் கொண்டு, உம் குடும்பத்தின் பசியைப் போக்கிக் கொண்டு, நாளை முதல் தோப்புக் காவலை ஏற்றுக் கொள்ளும் என்றார்.

திருடனைப் பிடித்து வந்த காவலர்களுக்கு மகாராஜாவின் தீர்ப்பு வியப்பைக் கொடுத்தது. தீர்ப்பின் மகத்துவம் அங்கு கூடி இருந்த பெரியவர்களுக்கும், புலவர்களுக்கும், திருடனுக்கும் மட்டும் புரிந்தது.

சுமார், இருநூறு வருசங்களுக்கு முன்பு, ஊத்துமலை ஜமீன்தார், இப்படி மனித நேயத்தோடு ஏழை, எளிய மக்களின் பால் அன்பு கொண்டு ஆட்சி செய்தார். அன்று இருதாலய மருதப்ப பாண்டியர் காட்டிய அணுகுமுறை இன்றைய ஆட்சியாளர்களும் சிந்திக்கும் வண்ணம் உள்ளது என்று சேதியைச் சொல்லி முடித்தார் வித்வான் தங்கப் பாண்டியனார்.

No comments:

Post a Comment