Wednesday, 27 March 2013

கிராமத்து மக்கள்


கிராமத்து மக்கள் எதையும் மங்களமாகச் சொல்லவேண்டும் என்றே நினைக்கிறார்கள். சொற்களில் சில சுடும். ‘அறம்’ பாடி அழித்த புலவர்களை நாம் அறிவோம். அமங்கலமான ஒரு நிகழ்வைக் குறித்துச் சொல்லும்போதுகூட கிராமத்து மக்கள் அதை மங்களமான சொற்களில்தான் கூறுகிறார்கள்.
ஒரு பெண்ணின் கணவர் இறந்து விட்டார். இப்போது அந்தப் பெண்ணின் கழுத்தில் கிடக்கும் தாலியை அறுக்க வேண்டும். அல்லது நீக்க வேண்டும். கணவனை இழந்த பெண்ணின் கழுத்தில் கிடக்கும் தாலியை அகற்றியாகிவிட்டதா? என்பதை ஒரு மூதாட்டி, ‘தாலியைப் பெருக்கியாச்சா? என்று கேட்டார்.
‘தாலியை அப்ற்றியாச்சா?’ என்று அமங்கலமாகக் கேட்காமல், ‘தாலியைப் பெருக்கியாச்சா?’என்று மங்களமாக அந்த மூதாட்டி கேட்ட மொழி நுட்பத்தைக் கண்டு நான் வியந்தேன். கிராமத்து சம்சாரிகளின் இத்தகைய சில அமங்கலம் நீக்கிய மங்களகரமான பிரயோகங்களை இக்கட்டுரையில் பதிவு செய்யலாம் என்று கருதுகிறேன்.
இனி வீரசேரளம்பதூர் இரா.உ. விநாயம் பிள்ளை என்ற கதை சொல்லி கூறியதைக் கேளுங்கள்.
அது ஐப்பசி மாதம், கழனியில் நடவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். சேர்ந்தாற்போல ஒரு கோட்டை விதப்பாடு, கரையடியோரம், தொழி உழவு உழுது மரம் அடிச்சி, நாற்றுப் பிடுங்கி, நாற்றங்காலில் இருந்து, நாற்றைச் சுமந்து நாற்று முடிகளை விதைத்து இருந்தார்கள் நடுகைத் தொழியில் (வயலில்).
அன்று நான் நடுகை. நான்தான் ஈசான மூலையில் மூன்று இடத்தில் நாற்றுகளை நட்டு நடுகையை ஆரம்பித்து வைத்தேன். நான் நட ஆரம்பித்ததும், அருகில் நின்ற ஒரு பெரிய மனுஷி, என் வெள்ளை வேட்டி சட்டை மீது, சகதியில் தெளிந்த தண்ணீரை எடுத்து என்மீது தெளிக்க, மற்றப் பெண்கள் எல்லாம் ஒருசேர குலவைச் சத்தம் எழுப்பினார்கள்.
எப்போதும் அப்பாதான் ‘நாள் நடுகை’யை ஆரம்பித்து வைப்பது வழக்கம். இன்று அப்பா வராததால் நான் நாள் நடுகையை ஆரம்பித்து வைத்தது எனக்குப் புது அனுபவமாக இருந்தது. சேற்றுத் தண்ணீர் என் வெள்ளை வேட்டி சட்டையை அழுக்காக்கினாலும், அந்த நிகழ்வு எனக்குச் சந்தோசமாக இருந்தது.
ஒருபுறம் நடுகை நடந்து கொண்டிருந்தது. மறுபுறம் நாற்றங்காலிலும் உழவு நடந்து கொண்டிருந்தது. நாற்றங்காலை உழும் உழவனைப் பார்த்து நடவு செய்து கொண்டிருந்த ஒரு பெரிய மனுஷி சொன்னாள். ‘அது புள்ளைப் பெத்த வயல்’ அதை நன்றாக உழு என்று. ‘புள்ளை பெத்த வயல்’ என்ற சொற்பிரயோகம் எனக்குப் புதிதாக இருந்தது. ஏன் இந்த வயலை மட்டும் அப்படிச் சொல்கிறார்கள் என்று உழவனிடம் கேட்டேன்.
தம்பி, “அது நாற்றங்கால். அந்த நாற்றங்கால் ‘நாற்று’ என்ற பிள்ளையை இப்போதுதான் பெற்றிருக்கிறது. நாற்றங்கால் கெட்டிப்பட்டுப் போய் இருக்கும். எனவே நாற்றங்காலை நன்றாக உழவேண்டும் என்பதைத்தான் ‘புள்ளைப் பெத்த வயலை நன்றாக உழு’ என்று அந்தப் பெண் கூறுகிறாள். நெல் விதையை கருவாகவும், நாற்றை வயிற்றில் வளரும் பிள்ளையாகவும், பெண்கள் பாவிப்பதால் நாற்றங்காலைப் பிள்ளைப் பெத்த வயல் என்று கூறுகின்றார்கள் என்று விளக்கம் கூறினார். உழவர் கூறிய விளக்கம் எனக்குப் பிரமிப்பை ஏற்படுத்தியது.
நாற்றங்காலில் இரண்டு ஏர்கள் உழுது கொண்டிருந்தது. முன்னால் போன உழவு மாடுகள் ரொம்ப சூட்டிகையாக (சுறுசுறுப்பாக) இருந்தன. வேகமாக நடந்தன. பின்னால் சென்ற மாடுகள் மெதுவாக நடந்தன. “முன்னேர் போன வழியே பின் ஏர் போகும்’ என்பது பழமொழி. பின்னேர்க்காரன் அடிக்கடி, முன்னேர்க்காரனைப் பார்த்து ‘கண்டோட்டு’ என்று சொல்லிக்கொண்டே இருந்தான். பின்னேர்க்காரன் சொல்வதின் பொருள் எனக்குத் தெரியவில்லை. எனவே, எங்கள் உழவனிடம் ஏன் பின்னேர்க்காரன் அடிக்கடி ‘கண்டோட்டு’ என்று கூறுகிறான்? என்று கேட்டேன்.
உழவன், முன்னேர்க்காரன் வேகமாகச் செல்கிறான். எனவே அவனை, ‘நின்று போ, அல்லது மெதுவாகப் போ….’ என்று கூறவேண்டும். ‘ஏரை நிறுத்து’ என்பது அமங்கலச் சொல். ஏர் என்பது உழவைக் குறிக்கும். ‘ஏரை நிறுத்து என்றால், விவசாயம் செய்வதையே நிறுத்து’ என்று பொருள்பட்டுவிடும். எனவேதான் ‘கண்டோட்டு’ என்று வேறு ஒரு சொல்லைச் சொல்கிறான். பின்னேர்க்காரன் ‘ஏரை எடுத்து வச்சிட்டான்’ என்றால், சம்சாரித்தனம் செய்வதையே நிறுத்திவிட்டான் என்று அர்த்தம். ஏர்தான் உழவனின் சின்னம். எனவே ஏர் சம்பந்தப்பட்ட விசயங்களில் அமங்கலச் சொல் வராமல்தான் சம்சாரிகள் பேசுவார்கள்.
ஏர்க்கால், ஒடிந்துவிட்டது என்றால், ‘ஏர்க்கால் வளைந்து விட்டது’ என்றுதான் கூறுவார்கள். ஏர்க்கால் ஒடிந்துவிட்டது என்று அமங்கலமாகக் கூறாமல், ‘ஏர்க்கால் வளைந்துவிட்டது’ என்று மங்களமாக, குறிப்பாகக் கூறுவார்கள் என்று உழவன் மேலும் விளக்கம் கூறினான்.
நடுகை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது சுமார் மத்தியானம் பன்னிரண்டு மணி இருக்கும். உழவன், வரப்பின்மேல் நின்றுகொண்டு இருந்தான். உழவன் பெண்டாட்டி உழவன் அருகில் சென்று அவன் காதோரமாய் ஏதோ ‘குசுகுசு’ என்று கூறினாள். உடனே உழவன் வயலில், நாற்று எடுத்துப் போட்டுக் கொண்டிருந்த பையன், உழவுக்காரர்கள், மற்றும் என்னையும் பார்த்து ஆம்பளைகள் எல்லாம் கரை ஏறி அந்தப் பக்கமா போங்க. பெண்கள் ‘கழனி பார்க்கணுமாம்’ என்று கூறிக்கொண்டே உழவன் குளத்தின் கரையைப் பார்க்க நடக்கத் தொடங்கினான். ஆண்கள் அனைவரும், அவரவர் வேலையை அப்படி, அப்படியே போட்டுவிட்டு உழவன் பின் சென்றார்கள். நானும் உழவன் பின்னால் சென்றேன்.
எல்லோரும் குளத்தின் கரையைக் கடந்து கீழே இறங்கி, ஒரு கருவை மரத்தில் நிழலில் அமர்ந்தோம். அப்போது நான் உழவனைப் பார்த்து, “கழனி பார்க்கணும்னா என்ன அர்த்தம்? பெண்கள் கழனி பார்க்க, நாம் ஏன் இங்கு வரவேண்டும்?’’ என்று கேட்டேன்.
உழவன் என்னைப் பார்த்து ஒரு ஏளனச் சிரிப்பை உதிர்த்துவிட்டு, “பெண்கள் நடுகை நட ஆரம்பித்ததில் இருந்து எங்கும் போகாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஆம்பிளைகளாகச் சுற்றி நின்று கொண்டிருக்கும்போது எப்படி அவர்கள் ‘ஒதுங்க’ முடியும்? அதனால், நடுகையின்போது நடுவேளையில், ‘கழனி பார்க்கணும்’ என்று பெண்கள் கூறினால், நாம்தான் அதைப் புரிந்துகொண்டு ஒதுங்கிக் கொள்ளணும். சில விசயங்களை நேரடியாகக் கூற முடியாது. இப்படித்தான் ஜாடைமாடையாக சொல்லுவார்கள். நாம்தான் அதை அனுபவத்தில் புரிந்து கொள்ளணும்” என்று விளக்கம் கூறினான்.
சம்சாரிகள் மத்தியில் நிலவும் இத்தகைய குழுவுக் குறிகள் கேட்க சுவாரசியமாக இருந்தன என்று கூறினார் தகவலாளர்.


நன்றி : திரு.கழனியூரன்

No comments:

Post a Comment