Saturday, 9 March 2013

ஊற்றுமலை ஜமீன் தார்:

திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயிலுக்கு அருகில் உள்ளது ஊற்றுமலை. வீரகேரளம்புதூர் என்னும் ஊர்தான் அந்த ஜமீனின் தலைநகர். வீரை என்றும் அதனைச்சொல்வர். அங்கு நவநீதகிருஷ்ணன் கோயில் ஒன்றுஉண்டு. அதுதான் ஊற்றுமலை ஜமீன்தார்களுக்கு குலதெய்வம்.அன்றாடப்பூசைகளும் விழாக்களும் விமரிசையாக நடக்கும் கோயில் அது.ஒருநாளைக்கு ஆகும் படிதரம் பத்து வராகன்!
வராகன் என்பது ஒரு பொன்நாணயம். அதுவிஜயநகரப் பேரரசின் செலாவணியில் விளங்கியது. ஒருபுறத்தில் பன்றியின் உரு இருக்கும். சாளுக்கியர்களின் முத்திரையும் வராகம்தான். அவர்களின் வழியில் வந்ததாகக் கருதிக்கொண்ட விஜயநகர அரசும் அதேமுத்திரையைக் கைக்கொண்டுவிட்டது. இன்னொரு பக்கத்தில் கோபுர உரு பொறிக்கப்பட்டு விளங்கியது. ஆகையால் ஆங்கிலேயர்கள் அதனை pagoda என்று அழைத்தனர். இது சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர்வரையில்செலாவணியில் இருந்தது. பின்னரே ரூபாய்க்கு வழிகொடுத்து அடியோடு ஒதுங்கிக்கொண்டுவிட்டது. அக்காலத்தில் ஒரு வராகன் என்பது மூன்றரை வெள்ளி ரூபாய்களுக்குச் சமம். 54 கிராம் எடையுடையது. அதாவதுஆறேமுக்கால் பவுன் எடை கொண்டது. வராகன் என்னும் நாணயம் மறைந்துவிட்டாலும்கூட ஏட்டளவில் வழக்கத்தில் அது மிக அண்மைக்காலம்வரை இருந்துவந்தது. நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் வாணிபத்தின் பேரில் கடல்கடந்துசெல்லலானார்கள். அவர்கள் லேவாதேவி நிறுவனங்கள் பலவற்றை நிறுவினார்கள். ஒரே செட்டியாருக்கு பல இடங்களில் நிறுவனங்கள் இருக்கும். ஒரு லேவாதேவி நிறுவனம் ஒரு மார்க்காஎனப்படும். ஓரிடத்திலேயே ஒன்றுக்கு மேற்பட்ட மார்க்காவை ஒரே ஆள் வைத்துக்கொள்ளலாம். அதுபோல ஒரே மார்க்கா பல இடங்களில் இருக்கும். இந்த நெட்வர்க்கிற்கு பல ஊழியர்கள்தேவைப்பட்டனர். ஒரு மார்க்காவின் முதலாளி 'பெரியசெட்டியார்' எனப்பட்டார். மேலாள், அடுத்தாள், பெட்டியடிப்பையன், ஓடும்பிள்ளை, சமையற்காரன் என்று பல ஊழியர்கள் இருப்பார்கள். செட்டிநாட்டின் பல ஊர்களிலிருந்து அவர்கள் திரட்டப்பட்டார்கள். ஒரு மார்க்காவில் வேலைக்குச் சேருமுன்னர் ஒப்பந்தம் ஒன்று செய்யப்படும். இதனை 'இசை வருத்தமான சீட்டு' என்றுசொல்வார்கள். அதில் கப்பலேறும் டிக்கெட், முன்செலவுத் தொகை, கைச்செலவுத்தொகை, சம்பளம்சாடிக்கை, சலவைக்கூலி, வெற்றிலைச்செலவு, சாப்பாடு, வேட்டிதுணிமணி, போன்றவை 'கண்டிருக்க' ப்பட்டிருக்கும். சம்பளம் குறைவாக இருந்து கட்டிப்படியாகாமல் போய்,மார்க்கா நட்டத்தில் ஓடி கவிழ்ந்து போய், சம்பளமே கொடுபாடாமல் போய், அல்லது இந்தமாதிரி ஏதாவது நடந்துவிட்டால் அந்தப் பத்திரம் உண்மையிலேயே இசைகேடான மிக 'வருத்தமான' பத்திரமாகப்போய்விடும். இதில் சம்பளம் வராகன் கணக்கில்எழுதப்பட்டிருக்கும். ஆனால் அதற்கு இணையான ரூபாய், டாலர், கில்டர்,ரூப்யா போன்ற நாணயங்களிலேயேதான் கொடுக்கப்படும். So much so for வராகன். (இதையெல்லாம் இடம் கண்ட இடத்தில் எழுதி விடவேண்டும் என்றுதான் எழுதுகிறேன். இனிமேலா யாராவது இதையெல்லாம் எழுதப்போகிறார்கள்?[sigh]) இது ஒரு ஹோலிஸ்ட்டிக் அப்ரோச்தான்.என்னுடைய பல நீள்தொடர் கட்டுரைகளில் இதே உத்தியைத்தான்கையாண்டிருக்கிறேன். புராணங்கள், இதிகாசங்களில் இதே மாதிரிதான் -கதைக்குள் கதை, அதற்குள் கதை, என்று வந்துகொண்டேயிருக்கும்.
சரி. மீண்டும் ஊற்றுமலைக்குச் செல்வோமே.
அந்த நவநீதக்கிருஷ்ணன் கோயிலில்பலவித சித்திரான்னங்கள், தேன்குழல், ஜிலேபி, லாடுலட்டு,போன்றவை நைவேத்தியமாகப் படைப்பார்கள். ஒரு லாடு ஒரு தேங்காயளவும், தேன்குழல் ஒரு பெரிய சந்தனக்கல் அளவும் பெரிதாக இருக்கும் என்று உ.வே.சாமிநாதய்யர் சொல்லியிருக்கிறார். சித்திரான்னம் என்பது புளியோதரை,தயிர்ச்சாதம், வெண்பொங்கல், சக்கரைப்பொங்கல், அக்காரவடிசில்(இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான்) தேங்காய்ச்சாதம், எலுமிச்சஞ்சாதம் போன்ற ஒன்பதுவகைச்சாதங்கள்.
ஒருமுறை வேம்பத்தூர் பிச்சுவையர் என்னும்புலவர் சுப்பையா பண்டாரம் என்பவருடன் ஊற்றுமலைக்குச் சென்றார். அவருக்கு பரிசுகளுடன் நிறைய நைவேத்தியத்தையும் கொடுத்திருக்கிறார்கள். அங்கு தனக்குக்கிடைத்த நைவேத்தியத்தை, தின்றதுபோக மீதியை மூட்டையாகக்கட்டி சுப்பையா பண்டாரத்தின் தலையில் ஏற்றி, சுமந்துவரச் செய்தாராம்.
அந்த நிகழ்ச்சியை சுப்பையா பண்டாரம்பாடியுள்ளார்;
எச்சகமும் புகழ்படைத்த தென்னூற்று
மலை மருதப் பேந்த்ரன் போற்றும்
நச்சரவின் நடிப்பார்க்கு நைவேதித்
திட்டதிவ்ய லாடு லட்டு
வச்சுவச்சுத் தின்றுதின்று வயிறுகுறை
யாமல்மிக வருந்தும் வேளை
இச்சுமையை பிச்சுவையா என் தலையில்
ஏற்றுவதும் இயல்பு தானோ!
'நச்சரவின் நடிப்பார்க்கு' என்பது காளிங்க நர்த்தனம் செய்த கண்ணனை.
மருதப்ப பாண்டியர் என்பது ஊற்றுமலைஜமீன்தார்களில் பரம்பரைப் பட்டப்பெயர். இப்போதுகூட எஸ். மருதப்பபாண்டியன் என்ற ஊற்றுமலை ஜமீன் வாரிசு ஒருவர் இருக்கிறார்.
நன்னூலுக்கு சங்கர நமசிவாயப்புலவர் எழுதிய உரை மிகச்சிறந்தது என்று போற்றப்படுவது. அதனை அவர்ஊற்றுமலையரசரின் ஆதரவோடுதான் எழுதியிருக்கிறார். அவர் அதனை எழுதும்போது மாதம் ஒன்றுக்கு நான்கு கோட்டை நெல்லும் தினம் ஒருபடிபாலும் கொடுக்கப்பட்டனவாம். பின்னர் பல பரிசில்கள் வழங்கப்பெற்றார்.
பொன்மலை எனஇப் புவியில் பெருமை மன்னிய ஊற்றுமலை மருதப்பன்......
'நன்னூற்கு உரைநீ நவையுறச் செய்து
பன்னூற் புலவர்முன் பகர்தி'என்று இயம்பலின்
நன்னா வலர்முக நகைநா ணாமே
என்னால் இயன்றவை இயற்றும்இந் நூலுள்.
என்று அந்தப்புலவர் பெருமானார்எழுதிவைத்துச்சென்றுவிட்டார்.
Thanks ஜெயபாரதி

No comments:

Post a Comment