Saturday, 9 March 2013

வீரவாஞ்சிநாதன்

ஒரு பெரிய அலங்கார வளைவு. சில வருடங்களுக்கு முன் அந்த வளைவில் ஒரு கல்வெட்டைப் படித்தது நினைவில் வந்தது.

"ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் சக்ரவர்த்தியாக முடிசூடுவதை வரவேற்று ஜமீனின் ராஜவிசுவாசத்தை வெளிப்படுத்தும் வண்ணம் கட்டப்பட்ட வரவேற்பு வளைவு' என்று அந்தக் கல்வெட்டு செய்தி தரும். அதை தற்போது பார்க்க ஆவலோடு அருகில் போனால். கல்வெட்டிலும் ஊர் வழிகாட்டும் பலகையிலுமா சுவரொட்டிகளை ஒட்டுவது? இந்த வரலாற்றுச் சின்னங்களெல்லாம் நாம் அடிமைப்பட்ட வரலாற்றைக் காட்டுவன அல்லவா? நாம் மீண்டும் அடிமைப்படாதிருக்க நம் சந்ததிக்கு உத்வேகமும் சுயமரியாதையையும் தருவன அல்லவா? இதே போன்ற வளைவுகளை தென்காசி, நெல்லைநகரம் (டவுன்) போன்ற இடங்களிலும் பார்த்திருக்கிறேன். இவை ஒரே காலத்தில் கட்டப்பட்டவை என்பதை அறிந்துகொண்டேன்.
இதன் வரலாற்று முக்கியத்துவத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட போது, அவன் சட்டைப் பையிஹருந்து கண்டெடுத்த கடிதத்தை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
வீரவாஞ்சியின் அந்தக் கடிதம்... மிலேச்ச இங்கிலீஷ்காரர்கள் நம் பாரதநாட்டைக் கைப்பற்றியதோடு நம் இந்துக்களின் சநாதன தர்மத்தை அழிக்கின்றனர். ஒவ்வொரு இந்தியனும் வெள்ளையனை வெளியேற்றி ஸ்வராஜ்யத்தையும், சநாதன தர்மத்தையும் நிலை நாட்ட முயன்று வருகிறான். ராமன், கிருஷ்ணன், சிவாஜி, அர்ஜுனன் முதலியோர் முன்பு தர்மம் வழுவாது எல்லா மதத்தினரும் போற்றும்படி இந்த நாட்டை ஆண்டார்கள். ஆனால் இப்போது பசுமாட்டை அடித்து அதன் இறைச்சியைத் தின்னும் ஐந்தாம் ஜார்ஜ் என்ற மிலேச்சரை இந்தியாவின் சக்ரவர்த்தியாக முடி சூட்டப் போகிறார்களாம். 3000 சென்னை ராஜதானியர்களை சேர்த்திருக்கிறோம். ஐந்தாம் ஜார்ஜ் இந்தியாவில் காலடி எடுத்து வைத்ததும் அவரைக் கொல்ல சபதம் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணத்தைத் தெரிவிக்கும் வகையில் அவர்களின் கடையனாகிய நான் இன்று இந்தச் செயலைத் துணிந்து செய்து முடித்தேன். இதுவேதான் இந்துஸ்தானத்திலிருக்கும் ஒவ்வொருடைய கடமையாகக் கருதவேண்டும். இப்படிக்கு ஆர். வாஞ்சிஐயர், செங்கோட்டை.
- இந்தக் கடிதத்தையும், அந்தக் கல்வெட்டின் நோக்கத்தையும் ஒப்புநோக்கினால் அந்தக்கால அரசியல் சூழலும் நிர்பந்தங்களும் நமக்குப் புரியும். ஒவ்வொரு வருடமும், வாஞ்சிநாதன் தாய்நாட்டிற்காகத் தன் இன்னுயிரை அர்ப்பணித்த ஜூன் 17 ஆம் தேதியன்று காலை 10.50 க்கு செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் நடுகல்லுக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செய்கிறார்கள்... "வாஞ்சி இயக்கம்' நடத்திவரும் பி. ராமநாதன் என்பவர், பள்ளி மாணவர்களை ஊக்குவித்து, செங்கோட்டை பேருந்துநிலையம் முன்னுள்ள வாஞ்சி சிலைக்கு மாலை அணிவிக்கச் செய்து, வரலாற்று நிகழ்வினை எடுத்துச் சொல்கிறார்.

No comments:

Post a Comment