Wednesday, 27 March 2013

சேர்வைக்காரன்

திருநெல்வேலி மாவட்டத்திலும் ஒரு வீராணம் இருக்கிறது. ‘வீராணத்தில் உங்கள் வீடு எந்தப் பகுதியில் இருக்கிறது?’ என்று ஒரு பெரியவரைக் கேட்டேன். பெரியவர், ‘எங்கள் வீடு ‘சேரு‘க்குப் பக்கத்தில் இருக்கிறது’ என்று கூறினார்.
‘சேர்’ என்ற ஆங்கில வார்த்தைதான் எனக்குத் தெரியும். ‘சேரு’ என்ற தமிழ் வார்த்தையை அல்லது வட்டார வழக்குச் சொல்லை நான் கேள்விப்பட்டதில்லை. எனவே பெரியவரிடம் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ‘சேரை’ எனக்குக் காட்டுங்கள் எனறேன்.
பெரியவரும் ‘சேர்’ இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அது பெரிய பெரிய ரூம்களாக ‘ப’ என்ற எழுத்து வடிவில் இருந்தது. ‘இந்தக் கட்டிடங்களை ஏன் ‘சேர்’ என்று கூறுகின்றார்கள்?’ என்று பெரியவரிடம் கேட்டேன்.
தம்பி, இநதக் கட்டிடங்கள் எல்லாம் ஊத்துமலை ஜமீனுக்குச் சொந்தமானது. ஜமீன்தார் அந்தக் காலத்தில் அவர்களுக்குச் சொந்தமான நிலங்களை அந்தந்தப் பகுதி சம்சாரிகளுக்குப் பயிரிட பிரித்துக் கொடுத்து விடுவார். நெல் விளைந்தால் மட்டும் நெல் அறுவடையானதும், ஜமீன் நிலங்களைப் பயிரிட்ட சம்சாரிகளிடம் இருந்து கட்டுக் குத்தகை (பாட்டம்) நெல்லை வாங்குவார்கள்.
அப்படி வாங்கிய நெல்லை, உடனே ஜமீன் தலைநகருக்குக் கொண்டு செல்லமாட்டார்கள். அந்தந்த ஊர்களில் ஜமீன் கட்டி வைத்திருக்கும் இதுபோன்ற ‘சேர்’களில்தான் நெல்லை இருப்பு வைப்பார்கள்.
நெல்லை இப்படிச் சேர்த்து வைக்கும் இடத்தை ‘சேர்’ என்று கூறுகின்றார்கள். நெல்லை கட்டுக் குத்தகைக்காரர்களிடமும், நிலவரிக்காரர்களிடமும் வசூல் செய்வதற்கும் ஊர்தோரும் ஜமீன்தாரர் ஒரு அதிகாரியை நியமித்திருந்தார். அவருக்குச் சேர்வைக்காரன் என்று பெயர்.
அந்தக் காலத்தில் நிலங்களுக்கு ஜமீன்தார்கள் நிலவாரியாக, தானிய தவசங்களை வசூல் செய்தார்கள். நெல் விளையும் இடத்தில் நெல்லையும், சோளம் விளையும் இடத்தில் சோளத்தையும் வரியாக வசூல் செய்வார்கள். நெல், சோளம் தவிர மற்ற தானியங்களையும் வரியாக வசூல் செய்தார்கள். எந்தெந்தக் காலத்தில் என்னென்ன தானியம் விளைகிறதோ, அந்தந்தக் காலத்தில், அந்தந்த தானியத்தை வரியாக வசூல் செய்தார்கள்.
இந்தச் சேரில் அந்தக் காலத்தில் ஒவ்வொரு அறையிலும், ஒவ்வொரு தானியத்தைச் சேமித்து வைப்பார்கள். இப்படித் தானியங்களைச் சேர்த்து வைப்பதால், அந்த இடத்தைச் ‘சேர்’ என்று அழைத்தார்கள். ‘சேர்’ நிறைய தானியத்தைச் சேமிக்கும் அதிகாரியைச் சேர்வை அல்லது சேர்வைக்காரன் என்று சொன்னார்கள், என ‘சேர்’ என்ற வார்த்தை வந்த விபரத்தை விளக்கினார் பெரியவர்.
“சிறிய தானியக் களஞ்சியத்தைத்தான் வழக்கு மொழியில் ‘சேர்’ என்று கூறுகின்றார்கள் என்பதைப் புரிந்துகொண்டு மேலும், விபரங்களைச் சேகரிக்க நான் பெரியவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
“இந்தச் சேருக்கு அந்தக் காலத்தில் காவலர்கள் இருந்தார்களா?” என்று கேட்டேன். பெரியவர், “அம்புட்டுத் தானியத்தை அடைத்து வைத்துவிட்டுக் காவலுக்கு ஆள் வைக்காமல் இருப்பார்களா?”
ராவும் (இரவும்) பகலும், மாற்றி மாற்றி இந்தச் சேரை அரண்மனைக் காவலர்கள் காவல் காத்தார்கள். ஜமீனுக்குச் சொந்தமான சேர் என்பதால் இந்தப் பக்கம் வரவே எல்லோரும் பயப்படுவார்கள். ஆனால் யுத்த காலம் வந்துவிட்டால் எதிரி நாட்டு வீரர்கள் முதலில், சேரில் உள்ள தானியத்தைத்தான் சூரையாடுவார்கள்.
யுத்த காலத்தில் ‘சேர்’களுக்குக் கூடுதல் பாதுகாப்புப் போடுவார்கள். அதையும் மீறி எதிரி நாட்டுப் படைவீரர்கள் ராவோடு ராவாக வந்து சேர்க்குத் தீ வைத்து விடுவார்கள். தானியக் கிடங்கு தீப்பிடித்து எரிந்தால் என்னவாகும்? தானியங்கள், பொறிபொறியாகப் பொறிந்து பிறகு கருகிவிடும். தானியக் கிடங்குக்குத் தீ வைத்த எதிரி நாட்டு ராஜாவின் பூமியில் நாலைந்து வருசமாக மழையே பெய்யவில்லை! எந்தப் பத்தினியோ போட்ட சாபம் பலித்துவிட்டது என்று கூறினார்கள்.
சில ஜமீன்கள் சேரில் இருப்பு வைத்த தானியத்தை நாலைந்து வருசத்திற்கு ஏறிட்டுப் பார்க்க மாட்டார்கள். இப்படி அடைத்து வைப்பதால், ஈரத்தோடு இருப்பு வைத்த தானியங்கள் வருசக் கணக்கில் இருந்ததால் புழுத்து, உளுத்துக் கெட்டுவிடும்.
இருதாலய மருதப்ப பாண்டியன் ஆட்சிக் காலத்தில் மட்டும் முதல் வருசம் இருப்பில் வைத்த தானியத்தை, அந்த வருசம் ஆரம்பத்தில், மழை பெய்து செழித்த உடன் குளம் நிறைந்து, மறுகால் போன உடன் சம்சாரிகள் யாவரும் நெல் நடவு செய்த உடன், அந்த மகசூல் விளைந்துவிடும் என்ற நம்பிக்கை வந்தவுடன், இருப்பில் உள்ள தானிய தவசங்களை எல்லாம் குடி, படைகளுக்குத் தகுதி வாரியாக இனாமாக அளந்து கொடுத்துவிடச் சொல்லிவிடுவார்.
அதனால் மக்களும் மகிழ்ந்தார்கள். தானியங்கள் இருப்பில் வருசக்கணக்கில் இருந்து, உளுத்துப் புளுத்துக் கெட்டுப் போவதும் இல்லை.
ஊத்துமலை ஜமீன்தார் தன் ஆட்சிக்கு உட்பட்ட ஊர்களைப் பல பிர்க்காக் (பகுதி)களாகப் பிரித்து ஒவ்வொரு பிர்க்காவையும் பராமரிக்க ஒரு சேர்வைக்காரரை நியமித்து இருந்தார்.
அந்தந்த பிர்க்காக்களில் நடக்கும் களவு, திருடுகளைக் கண்டிப்பது, திருடர்களைத் தண்டிப்பது, களவு, திருடு நடக்காமல் காபந்து பண்ணுவது, வரிவசூல் பண்ணுவது, ‘சேர்’களுக்கு காவல்காரர்களை நியமிப்பது என்று அனைத்து வேலைகளையும் சேர்வைக்காரர்தான் செய்தார்.
கலங்கல் என்ற பிர்க்காவில் ஒருமுறை சேரில், பின்பக்கச் சுவரை இடித்து ஓட்டை போட்டு யாரோ ஒருவன் நாலைந்து கோட்டை நெல்லைத் திருடிவிட்டான்.
அது நடந்ததும் ஊத்துமலை ஜமீன்தார் மருதப்ப பாண்டியன் காலத்தில்தான். உடனே செய்தி ஜமீன்தார் காதிற்கு எட்டியது. ஜமீன்தார் திருடனை உடனே கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டார். எப்படியோ துப்பு வெட்டி திருடனைக் கண்டு பிடித்துவிட்டார்கள்.
திருடன் யார் என்றால், சேரைக் காவல்காத்த காவல்காரனோட மச்சினன்தான்.
திருடனைப் பிடித்து விசாரித்தால், அவன் ‘காவல்காரனான என் மச்சினன்தான் சேரின் பின்பக்கம் சுவரில் கன்னம் வைத்துத் (ஓட்டை போட்டு) திருடச் சொன்னான்” என்று காவல்காரனைக் கைகாட்டினான்.
“இது என்னடா வேலியே பயிரை மேய்ந்த கதையா இருக்கு” என்று நினைத்த மகாராஜா காவல்காரனைக் கூப்பிட்டு விசாரித்தார்.
காவல்காரன், ‘மகாராஜா! சேர்வைக்காரர் ஒரு வருசமா காவல் கூலி தரவே இல்லை. எனக்கு மட்டுமில்லை. எந்தக் காவல்காரனுக்கும் காவல் கூலி கொடுக்கவில்லை. என் வீட்டில் பல்லில் வைத்துக் கொரிக்கக்கூட ஒரு தானியம் இல்லை! ராவாப் பகலா சேரிலிருக்கும் தானியத்திற்கு காவல் காக்கிற எனக்கே கூலித் தானியத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறார் இந்த சேர்வைக்காரர். நானும் என் பிள்ளைகளும் எத்தனை நாளைக்குத்தான் பட்டினி கிடக்க முடியும்? இந்த அநியாயத்தை நான் யாரிடம் போய்ச் சொல்ல முடியும்? எனக்குக் கூலியாக வரவேண்டிய தானியத்தை, நான் தான் ‘கன்னம்’ வைத்து என் மச்சினனை எடுக்கச் சொன்னேன். நான் செஞ்சது தப்புதான் வயிற்றுப் பசி பொறுக்கமாட்டாமல் திருடச் சொல்லிவிட்டேன். எனக்கு மகாராஜா என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துகிறேன்” என்று பணிவாகக் கூறினான்.
மகாராஜா, மற்றக் காவல்காரர்களையும், சேர்வைக்காரரையும் தனித்தனியே கூப்பிட்டு விசாரித்தார்.
விசாரித்ததில் காவல்காரன் சொன்னது யாவும் உண்மை என்பது ருசுவானது (நிரூபணமானது). எனவே சேரின் சுவரைக் கன்னம் வைத்துத் திருடிய திருடனையும், காவல்காரனையும் விடுதலை செய்துவிட்டு, சேர்வைக்காரனைக் கூப்பிட்டுக் கண்டித்து, அவனைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அந்தப் பிர்க்காவுக்குப் புதிய சேர்வைக்காரனை நியமித்தார் மகாராஜா. ஆனால் காவல்காரனை பதவியிலிருந்து நீக்காமல் விட்டதோடு அவனுக்கு “அரண்மனைக் காவல்” என்ற உயர்ந்த பதவியைக் கொடுத்தார், மகாராஜா இருதாலய மருதப்ப பாண்டியன்.
ஜமீன்களிலேயே மதிநுட்பமும், ஈவு இரக்கமும், பக்தியும், நீதியும் உடையவராக திகழ்ந்தார் இருதாலய மருதப்ப பாண்டியன்” என்று கதையைக் கூறி முடித்தார் பெரியவர்.


நன்றி : கழனியூரன்

No comments:

Post a Comment