Sunday, 3 November 2013

10. சந்திரசேகர மூர்த்தி

நான் முகனின் மகன் தட்சன். அவனுக்கு நட்சத்திரங்களே இருபத்தியேழுப் பெண்களாகப் பிறந்தது. அவர்கள் அனைவரையும் சந்திரனுக்கு திருமணம் செய்வித்தார். சந்திரன் திருமணம் நடைப்பெற்ற சிறிது காலம் வரை அனைத்து மனைவியரிடத்தும் அன்போடு இருந்தார். நாட்கள் செல்ல அவரது அன்பு கார்த்திகை, ரோகிணி இடத்தில் மட்டும் மிகுந்தது. இதனால் மற்றப் பெண்கள் மனம் சகியாது தந்தையாகிய தட்சனிடத்தில் கூறினர். தட்சனும் மருமகனை அழைத்து தம் அனைத்து மகள்களையும் சமமாக நடத்தும் படி, அவர்களுடன் அன்புடன் இருக்கும் படியும் புத்திமதிகள் கூறி அனுப்பி வைத்தார். சிறிது காலத்திற்குப் பின் சந்திரனின் நடவடிக்கையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் இருந்தது.எனவே மறுபடியும் பெண்கள் தன் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். பெண்களின் துன்பம் சகியாது தட்சன் நாளுக்கொரு கலையாக குறைந்து இறப்பாய் என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.
சாபத்தின் வீரியத்தால் நாளொரு கலையாக சந்திரன் தேய்ந்து கொண்டே வந்து இறுதியாக ஒரு கலை மட்டுமே இருக்கும் நிலையில் இந்திரனின் ஆலோசனைப்படி நான்முகனை சந்தித்து தன் குறைகளைச் சொன்னான். நான்முகனோ தன் வேலையில் மகனும் மகன் வேலையில் தானும் தலையிடுவதில்லை என்று உறுதிகொண்டுள்ளோம். எனவே இக் குறைகளை சிவபெருமானால் மட்டுமே தீர்க்க முடியும் எனவே அவரை சரணடையிமாறு சொன்னார். அதன்படி சந்திரன் சிவபெருமானிடம் சரணடைய சிவனும் சந்திரனின் ஒரு கலையை எடுத்து தன் சடையில் வைத்து இனி உன் ஒருக்கலைக்கு அழிவில்லை ஆனாலும் தட்சனின் சாபத்தால் தினமொரு கலையாக அழிந்தும், என்னிடம் உள்ளதால் தினமொரு கலையாக வளர்ந்தும் காணப்படுவாய் என அருளாசி கூறினார். சந்திரனைத் தன் சடையில் தரித்ததால் சந்திர சேகரன் ஆனார். அவரது தலம் திருவாரூர்(புகலூர்) நாகபட்டிணம் அருகே உள்ளது. இங்கு
கோயில் கொண்டுள்ள இறைவனின் திருநாமம் கோணபிரான் மற்றும் அக்னிபுரீஸ்வரர். இறைவி கருந்தாழ்குழலி யாகும். நல்லவனவற்றை மட்டுமேக் கொடுக்க கூடியவர் இங்குள்ள சந்திர சேகர மூர்த்தி. இவரை வழிபட பித்தளையும் வைரமாகும். மேலும் வெண்தாமரை அர்ச்சனையும், நெய்யன்ன நைவேத்தியமும் சோமவாரம், பௌர்ணமி தினங்களில் கொடுக்க அறிவு வளர்ச்சி மிகுவதோடு நினைவாற்றல் பெருகும். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு குளிர்ந்த சந்தனத்தால் அபிசேகம் செய்தால் நற்புகழ் அடையலாம்.

9. சோமாஸ் கந்த மூர்த்தி

சூரபத்மனின் கொடுமைகள் எல்லைக்கடந்து போயின. அவனது கொடுமைகளைத் தாள முடியாத விண்ணோர்கள் அனைவரும் ஈசனிடம் சென்று முறையிட்டனர். வல்லமைபெற்ற தங்கள் மகனால் அவனது வாழ்வு முடிய வேண்டுமென அவர்கள் விரும்பினர். சிவபெருமானும் அவர்களுக்காக மனமிரங்கி தம்முடைய ஆறு திருமுகத்திலுமுள்ள நெற்றிக் கண்ணிலிருந்து ஜோதிமயமான ஆறு நெருப்புப் பொறிகளை வெளிக்கொண்டு வந்தார். அப்பொறிகள் அகிலமெல்லாம் பரவின. உடன் பார்வதி தேவியார் அவ்வெப்பம் தாளாமல் தம் கொலுசு மணிகள் ஒன்றோடொன்று மோதி சிதறும் படி அந்தப்புரம் நடந்தார். இதனால் தேவர்கள் சித்தம் கலங்கி, மனம் வருந்தினர். மகனைக் கேட்டால் இவர் நெருப்பு பொறிகளை கொடுக்கின்றாரென கலங்கினர். உடன் வாயு தேவனையும், அக்னிதேவனையும் அழைத்து அப்பொறிகளைக் கொடுத்து கங்கையில் விடச் சொன்னார். கங்கையோ அப்பொறிகளை சரவணப்பொய்கையில் சேர்த்தது.
ஆறுமுகங்களும், பன்னிரு கரங்களுடனும் பிறந்த இக்குழந்தையை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தனர். பார்வதி தேவியின் கொலுசுமணியில் இருந்து சிதறிய நவரத்தினங்கள் நவ வீரர்களாயின. இதற்கிடையே சரவணப்பொய்கையில் வளரும் தங்கள் குமாரனைக் காண சிவனும், பார்வதியும் இடப வாகனத்தில் முன் செல்ல தேவர்கள் பின் தொடர்ந்தன. அங்கு ஆறு குழந்தைகளை பார்வதி ஒன்றாக தூக்குகையில் அவை ஒரேக் குழந்தையாயிற்று. அந்த ஒரேக் குழந்தை ஆறு முகத்துடனும், பன்னிரு கரங்கள் கொண்டதாகவும் விளங்கியது. ஆறு முகங்களைக் கொண்டதால் ஆறுமுகன் என்றும், கந்தன் என்றும் அழைத்தனர். பின்னர் மூவரும் வெள்ளிமலையை அடைந்தனர். அங்கே சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையே கந்தன் வீற்றிருந்தார். அந்த தோற்றத்தையே நாம் சோமாஸ் கந்த மூர்த்தி என்கிறோம்.
சோமாஸ் கந்த மூர்த்தியை தரிசிக்க திருவாரூர் செல்ல வேண்டும். அங்குள்ள ஆயிரம் கால் மண்டபம் அருகே சுரக்கும் அமுத தீர்த்தத்தினால் சோமாஸ் கந்தரை அபிசேகம் செய்ய உடல் வலிமை, அறிவு விரத்தி, தந்தைக்கே உபதேசிக்கும் அளவு புத்தி வலுவடையும். மேலும் திங்கள், வியாழக்கிழமைகளில் வில்வார்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் கொடுக்க குரு ஸ்தானம் விரைவில் கைகூடும். எழுத்தாளர்களுக்கு திறமை வளரும். எனவே எழுத்தாளர்கள் தொழ வேண்டியவர் இவர்.

8.உமேச மூர்த்தி

முன்பொருமுறை நான்முகன் படைத்தல் தொழிலுக்கு நான்கு புதல்வர்களை தன்னுடைய தவ சக்தியால் உண்டாக்கினார். அந்த நால்வரும் படைத்தல் தொழிலை மேற்க்கொள்ளாமல் தவச்சாலையை நோக்கிச் சென்றுவிட்டனர். பின்னர் நான்முகன் விஷ்ணுவை கானச்சென்றார். அவர்தம் குறைகளைச் சொன்னார். இக் குறைகளைப் போக்குபவர் சிவபெருமான் ஒருவரே, எனவே அவரைச் சென்று பார்ப்பதே உசிதமென நான்முகன், விஷ்ணு, நான்கு புதல்வர்கள் சகிதம் வெள்ளிமலையை அடைந்தனர்.

அவர்களை நெற்றிக்கண்ணால் சிவபெருமான் நோக்க, அவர்களனைவரும் எரிந்து சாம்பலானார்கள். அப்பொழுது தனிமையில் இருந்த சிவபெருமான் தன் தோளைப்பார்க்க அவரது சக்தியே உமாதேவியாக வடிவம் கொண்டு வெளிவந்தது. உடன் உமாதேவியை தன் இடபுறமாக இருக்க செய்தார். பின்னர் எரிந்து சாம்பலானவர்களை முன் போலவே படைத்தார். அவர்கள் அனைவரும் இவர்கள் இருவரையும் வணங்கி நின்றனர். இருவரது அகமும் மகிழ்ந்ததால் அவர்கள் அனைவரும் கேட்ட வரத்தினைக் கொடுத்தார். உலகமே செழித்தது. உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் படைத்து, காத்து, துயர்துடைத்து அனைத்தையும் வாழவைக்கும் சக்தியை உமையவளாக இடது பாகத்தில் வீற்றிருந்தக் கோலத்தைக் கண்டவர்கள் ஆனந்தப்பட்டனர். ஆகவே சிவபெருமானது பெயர்களில் உமேச மூர்த்தியும் சேர்ந்துக் கொண்டது.
பொதுவாக சிவபெருமான் உமாதேவியோடு கூடியிருக்கும் திருக்கோலமே உமேசமூர்த்தி யானது என்றும் சொல்லலாம். இத்தகைய சிறப்பு பெற்ற உமேசமூர்த்தியை தரிசிக்க நாம் செல்ல வேண்டியத் தலம் திருஇடைமருதூர் ஆகும். கும்பகோணம் அருகே அமைந்துள்ள இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள உமேசமூர்த்தியை காவிரி நீரால் அபிசேகம் செய்தால் குடும்ப வாழ்வு இன்பமயமானதாக அமைய அருள்புரிவார்.

7. சுகாசன மூர்த்தி

வெள்ளிமலையின் மீது கண்களைக் கூசச் செய்யும் ஒளி கொண்ட நவரத்தினங்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அதில் ஜோதி மயமான சிவபெருமான் நடுவே நாயகனாக வீற்றிருக்க, அவரைச் சுற்றிலும் மும்மூர்த்திகளும் தேவகணங்களும், தேவலோக வாழ் அனைத்துமே அங்கே கூடியிருக்கின்றன. சிவபெருமானிடம் வேண்டிய வரங்களைக் கேட்க அவரும் வேண்டும் வரங்களை தந்தபடியே இருக்கிறார். நேரம் கடந்தது. அனைவரும் தங்களது பணிக்கு, இருப்பிடத்திற்கு திரும்பி விட்டனர்.
சற்றைக்கேல்லாம் உமாதேவியார் அங்கே பிரசன்னமாகி இறைவனின் தால் பணிந்து எம்பெருமானே சிவாகமங்களின் உண்மைகளை, விளக்கங்களையும் எனக்கு புரியும் படி தாங்கள் கூற வேண்டும் என்று கேட்கிறார். உடன் சிவபெருமான் சிவாகமங்களின் உண்மைகளையும் , விளக்கங்களையும், ஐவகை பந்த பாசங்களின் நிலையையும், அவற்றை நீக்கினால் கிடைக்கும் நன்மைகளையும், சிவாகமங்கள் பற்றிய அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கின்றார். அச்சமயம் அவர் சுகாசன நிலையில் அமர்ந்த படி உறைக்கிறார். அருகே உமாதேவியார் நின்று கொண்டுள்ளார். சுகாசன நிலையில் சிவகாமங்களைப் பற்றி உறைத்த காரணத்தால் இவரை நாம் சுகாசன மூர்த்தி என்கிறோம். இவரது கரங்களில் மான், மழு உள்ளது. தேவியார் அருகே இல்லை.

இத்தகைய சுகாசன மூர்த்தியை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் சீர்காழியாகும். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனது திருநாமம் பிரம்மபூரிஸ்வரர், சட்டைநாதர், தோணியப்பர் என்று மூன்று திருநாமங்களை உடையவர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி யாகும். இங்கு அருள்பாலிக்கும் சுகாசன மூர்த்தியை மனமுருக வேண்டி அர்ச்சிக்க வியாழன் சார்ந்த அனைத்து குறைகளும் தீரும். மேலும் தொழில் துறை நிர்வாகம் நல்ல முறையில் நடைபெற இவர் நமக்கு அருள்புரிவார். வில்வ அர்ச்சனையும், கற்கண்டு நைவேத்தியமும் சோமவாரங்களில் செய்தோமானால் நிர்வாகம் செழிப்பாகும். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு உகந்த அபிசேகம் பலாப்பழத்தால் செய்யப்படுகிறது. இதனால் யோக சித்திகள் கைகூடும் என்பது ஐதீகம்.

சுகாசன மூர்த்தியார் தோணியப்பர் கோயில்
சகதொழிலும் ஓங்கும் அருளும்-சிகரமாய்
திருஞான சம்பந்தர் சீழ்காழி மண்ணின்
பெரும்ஞானம் பெற்ற இடம்!

சிவபெருமான் ஆறு திருக்கரங்களோடு பார்வதி தேவியைத் தன் இடப் பக்கத்தில் இருத்திக் காட்சி தரும் கோலம்- சகஜ சுகாசனம். சீர்காழியில் உள்ள பிரம்ம பூரிஸ்வரர் ஆலயத்தில் சுகாசன மூர்த்தியை தரிசிக்கலாம்.

இவரை வழிபட்டால் குருகிரக பிரச்சினைகள் தீரும். சோமவாரத்தில் கல்கண்டு அபிஷேகம் செய்தால் நிர்வாகம் சிறக்கும். பலாப்பழ அபிஷேகம் செய்தால் யோக சித்திகள் கை கூடும்.


Read more: http://www.penmai.com/forums/temples-gods-goddess/51202-64-forms-lord-shiva-64-a.html#ixzz2jaxeouQJ

6. உமா மகேச மூர்த்தி

திருக்கைலையில் பொன்னும் மணியும் சேர்ந்து அமைந்த ஆசனத்தில் சிவபெருமான் தமது தேவியுடன் எழுந்தருளியுள்ளார். சிவபெருமானே உலக உயிர்கள் அனைத்திற்கும் தந்தையாவார். அதுபோல உமாதேவியே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்குமே அன்னையாக விளங்குபவள். அவர் தன்னுடைய இறைவனாகிய சிவபெருமானின் என்னப்படியே அனைத்துச் செயல்களையும் செய்து வருகின்றார். பூவிலிருந்து மணத்தையும், நெருப்பிலிருந்து புகையையும் எப்படி பிரிக்க முடியாதோ அதுபோல் இவர் சிவத்திடம் ஐக்கியமானவராவர். கருணையே வடிவான இவர் ஐவகை செயல்களுக்காய் ஐவகை பேதங்களாக மாறியுள்ளார். முறையே
1. பராசக்தி- இவர் பரமசிவத்திலிருந்து 1001 கூறு கொண்டவர்.
2. ஆதிசக்தி - பராசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
3. இச்சா சக்தி - ஆதிசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
4. ஞானசக்தி - இச்சா சக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
5. கிரியாசக்தி - ஞானசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.

இதில் பராசக்தி பக்குவமடைந்த ஆன்மாக்களை அனுக்கிரகிக்கிறவள். ஆதிசக்தி நம்மிடமுள்ள ஆணவங்களைப் போக்கி பக்குவ நிலையைக் கொசடுப்பவர். ஞானசக்தி ஞானத்தை ஊட்டி நம்மிடம் ஞானத்தை ஒளிரும் படி செய்பவர். இச்சா சக்தி திருஷ்டித் தொழில் செய்து நம்மை சிருஷ்டிப்பவர். கிரியாசக்தி உலகப் படைப்பை செய்பவர். மேற்க்கண்ட இந்த ஐந்து சக்திகளும் ஒன்றினைந்து ஒரு செயல் செய்யும் போது ஒன்றாகி சதாசிவமூர்த்தியாகி விடுகின்றது. எனவே சிவன் - சக்தி பிரிக்க முடியாத ஒன்று. இத்தகைய சிறப்பு வாய்ந்த உமா மகேஸ்வர மூர்த்தியை நாம் தரிசிக்க வேண்டிய தலம் கும்பகோணம் அருகேயுள்ள கோனேரி ராஜபுரம் தான் செல்ல வேண்டும். இங்கு கோயில் கொண்ட மூர்த்தியே உமாமகேஸ்வரர் ஆவார். இறைவி பெயர் தேகசௌந்தரி என்பதாகும். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவி, இறைவனுக்கு இளநீர், பால், தேன் அபிசேகம் செய்ய கடுமையான குஷ்ட நோயும் தீரும். இத்தல இறைவனின் மற்றொரு திருநாமம் பூமிநாதர் என்பதாகும். பெயர்க்கேற்றார் போல் எந்த ஒரு தொழில் செய்யும் முன்பும் இந்த பூமிநாதரை வணங்கி இங்கிருந்து ஒரு பிடி மண் கொண்டு வந்து தொழில் செய்யும் இடத்தில் வைத்தால் தொழில் சிறப்படையும். புதன் தோறும் சிவப்பு அல்லிப்பூவால் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் செய்து வழிபட்டால் குடும்ப வாழ்வில் எந்தவொரு பிரச்சனையும் வராது. இருந்தாலும் விலகும்.இங்குள்ள மண்ணால் வினாயகர் செய்து நம் வீட்டில் வைத்து வழிபட எந்தவொரு காரியத்தடையும் அகலும்.


Read more: http://www.penmai.com/forums/temples-gods-goddess/51202-64-forms-lord-shiva-64-a.html#ixzz2javeizMm

5. மகா சதாசிவ மூர்த்தி

இவர் கைலாயத்தில் இருப்பவர். இவர் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்டவர். எனவே இவரை நாம் மகா சதாசிவ மூர்த்தி என்கிறோம். அந்த கைலையில் இவரைச் சூழ்ந்தவாறே இருபத்தி ஐந்து மூர்த்திகளும் உள்ளனர். மேலும் இவரைச் சூழ்ந்தவாறு ருத்ரர்களும், சித்தர்களும், முனிவர்களும் உள்ளனர். அனைவருமே மகாசதாசிவ மூர்த்தியை வணங்குகின்றனர். இவரை புராணங்கள் கைலாயத்தில் உள்ளவராகச் சொல்கின்றன. மேலும் மகா கைலாயத்தில் இருந்து கொண்டு அனைத்து உயிர்களுக்கும் அருள் பாலித்து அனுக்கிரகம் செய்வதால் இவரை அனுக்கிரக மூர்த்தி என்றேக் கொள்ளுதல் வேண்டும். மேலும் இவரை இன்ன உருவம் தான் எனக் கூற முடியாது. அனைத்தும் கலந்த திருமேனியுடையவர் என புராணங்கள் கூறுகின்றன. இவரை நாம் தரிசிக்க செல்ல வேண்டிய தலம் காஞ்சிபுரமாகும். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இவரை கோயிலுள் காண முடியாது. சுரகரேஸ்வரர் கோயில் விமானத்தில் சுதை சிற்பமாகத்தான் காண முடியும். மேலும் பல கோயில் விமானங்களில் தான் தரிசிக்க முடியும்.
இவரை வணங்கினால் சிவ தரிசனம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம். மேலும் கடுமையான காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் கருப்பஞ்சாறால் இவரை அபிசேகம் செய்தால் கடும் காய்ச்சல் நீங்கி தேகம் ஆரோக்கியம் பெறும் என்றும் கூறப்படுகிறது.


4. சதாசிவ மூர்த்தி

சடாமுடியிடன் காட்சியளிக்கும் இவர் ஐந்து திருமுகங்களைக் கொண்டவர் ஆவார். தலைக்கு இரண்டாக பத்துக் கைகளைக் கொண்டவர். இவறுடைய வலக்கையில் சூலமும், மழுவும், கட்வங்கமும், வாளும், பீஜா பூரகமும், வச்சிரமும், அபயமுத்திரையும் கொண்டு காட்சியளிக்கும். இடக்கையில் நாகம், பாசம், நீலோற்பலம், அங்குசம், டமருகம், வரதம், மணிமாலை, பரிவட்டம் எனக்காணப்படும். இவர் ஸ்படிக நிறத்துடன் காட்சிக்கொடுப்பவர். மேலும் தியான பூஜைக்காக சகளத்திருவுருவத்துடன் காட்சியளிப்பவர். இவரது இடைப்பாகத்தில் சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரமனும், தெற்கே திருமாலும், கிழக்கே ஈசனும் அடங்கியுள்ளனர். இம் முர்த்திகள் ஐவரும் அடங்கியள்ள நிலையை நாம் கன்மசா தாக்கியம் என்போம். இத்தகைய பெருமைகளைக் கொண்டவர் சதாசிவ மூர்த்தியாவார். சாந்த சொருபீயான இவரே அனைத்திற்கும் காரணகர்த்தாவாவார். இந்த மூர்த்தி ஈசானம், தத்புருடம், வாமம், அகோரம், சத்யோஜாதம் முதலான ஐந்து திருமுகங்களுடன் எழுந்தருளியிருப்பவர். முனிவர் கௌசிகரின் பொருட்டு இவரது சத்யோகஜாத முகத்திலிருந்து காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம் என்னும் ஐந்து ஆகமங்களை அருளினார்.

காசிபமுனிவருக்காக வாமதேவ முகத்திலிருந்து தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம் என்ற ஆதமங்களை அருளினார். பரத்வாஜருக்காக அகோரமுகத்திலிருந்து விசயம், நீச்சுவாசம், சுவயம்புவம், ஆக்நேயம், வீரம் ஐந்து ஆகமங்களையும் அருளினார். கௌதம முனிவரின் பொருட்டு தத் புருட முகத்தினின்று ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிஷ்பம் என்ற ஐந்து ஆகமங்களையும் அருளினார். முடிவில் அகத்தியருக்காக ஈசான முகத்திலிருந்து புரோத்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பரமேச்சுவரம், கிரணம், வாதுளம் எனும் எட்டு ஆகமங்களையும் அருளினார். இவரை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் சிதம்பரமாகும். இங்குள்ள கோயில் பிரகாரத்தில் ஐந்து பீடங்கள் உள்ளன. இங்கே சதாசிவமூர்த்தி அருளிபாலிக்கிறார். இங்குள்ள சிவகங்கைத் தீர்த்தத்தால் அபிசேகம் செய்து வில்வ இலை அர்ச்சிக்க அனைத்து மூர்த்திகளையும் வணங்கிய, அர்ச்சித்த பலன் கிடைக்கும். மேலும் சோமவாரத்தில் மிளகு சீரக சாதத்தால் நைவேத்தியம் செய்ய மறுபிறவியில்லை எனும் நிலையை அடையலாம். இங்குள்ள சிவபெருமானை திருநீரால் அபிசேகம் செய்ய சகல நன்மையும் உண்டாகும்

3. முகலிங்க மூர்த்தி

சிவலிங்கத்திற்கென தனியானதொரு கீர்த்தி உண்டு எனலாம். சிவலிங்கத்தில் முகம் இருந்தால் நாம் அதை முகலிங்கம் என்போம். அத்தகைய முகலிங்கம் நான்கு வகைப்படும். அவை ஆட்யம், அநாட்யம், சுரேட்டியம், சர்வசமம் என்பனவையாகும். இதில் ஆடயம் என்பது 1001 லிங்கமுடையது. சுரேட்டியம் என்பது 108 லிங்கமுடையது. அநாட்டிய , சுரேட்டிய லிங்கங்கள் திருமுகங்களைப் பெறாதவையாகும்.சர்வசமம் என்பது ஐந்து முக வேதங்களைப் பெறும். ஈசானம், தத்புருடம், அகோரகம், சத்யோஜாதம், வாமம் என ஐந்தும் அடங்கும். முகலிங்கம் எதை விளக்குகிறது எனில் விளக்கும் ஒளியும் போல பிரிக்க முடியாத இறைவன் உள்ளார் என்று விளக்குகிறது. பிரம்ம, விஷ்ணு, ருத்ர, மகேஸ்வர, சதாசிவமே முகலிங்கம் எனப்படுகிறது. இந்த ஐவரும் ஐந்தொழில்களை நடத்துகின்றவர். இவற்றிற்கு ஆதார சக்தியாக உள்ளவன் இறைவன் அவனையே நாம் முகலிங்கத்தின் மூலமாக தரிசிக்க முடியும்.
முகலிங்க மூர்த்தியை தரிசிக்க நமக்கு மூன்று இடங்கள் அமைந்துள்ளது.
1. திருவக்கரை
2. கச்சபேஸ்வரர்
3. கொட்டையூர்
இதில் திருவக்கரையில் அமைந்துள்ள சங்கரமௌலீஸ்வரர் கோயிலில் முகலிங்கமூர்த்தி சிறப்பு பெற்றது. எப்படியெனில் சதுரமான அடி பாகத்தின் மீது அமைந்துள்ள வட்ட வடிவமான ஆவுடையாரின் மேல் மும்முகத்துடன் மூலவர் காட்சிக்கொடுக்கிறார். இங்குள்ள கோயில் தீர்த்தத்தில் நீராடி வில்வத்தால் அர்ச்சிக்க விரோதிகள் ஒழிந்து நட்பு பாராட்டுவர், இல்லையெனில் சிவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் வக்கிர காளியம்மன் அவர்களை கண்டிப்பாள். என்று நம்பிக்கை நிலவுகிறது. மேலும் பிரதோஷ காலங்களில் தும்பைப் பூ அர்ச்சனையும், சுத்த அன்னம் நைவேத்தியமும் செய்ய நல்வாழ்வு கிட்டும் என்பது உறுதி. மேலும் காஞ்சியிலுள்ள கச்சபேஸ்வரர் கோயிலிலும் முகலிங்கம் உள்ளது. மற்றொன்று கும்பகோணம் அருகே அமைந்துள்ள கொட்டையூரில் உள்ளது. இங்குள்ள முகலிங்க மூர்த்தி மிகுந்த சக்தி வாய்ந்தவர். அவரை சக்கரையால் அபிஷேகம் செய்தால் அனைத்திலும் ஜெயம் உண்டாகும் என்பது ஐதீகம்.


2. இலிங்கோற்பவ மூர்த்தி

நான்முகனுக்கு இரண்டாயிரம் சதுர்யுகம் ஒரு நாளாக உள்ளது. ஒருமுறை நாள் கணக்கு முடிந்து உறங்க சென்றார். உடன் தேவலோகத்தினரும் மகலோகம் சென்றனர். அப்பொழுது பெரும் கடற்பெருக்குத் தோன்றி உலக உயிர்கள் அனைத்தையும் அழித்தது. அதனால் உலகம் மறைந்து விட்டது. திருமால் ஒரு ஆலிலைமேல் சின்னஞ் சிறிய குழந்தை வடிவத்துடன் உறங்கினார். இதனை கண்ணுற்ற அனைவரும் குழந்தையை ஆராதித்தனர். ஆராதனையைக்கேட்டு எழுந்த திருமால் பழைய உலகைத் தேடினார். அது பாதாளத்தில் இருப்பதைக் கண்டார். உடன் வராக அவதாரம் எடுத்து தனது கொம்பினால் குத்திக்கொண்டு வந்து முறைப்படி நிறுத்தினார். பின் பாற்கடலில் நித்திரையில் ஆழ்ந்தார். இதனிடையே நான்முகனுக்கு இரவு நீங்கி பகல் ஆரம்பமானது. அனைத்து தேவ மாந்தர்களையும் ஈரேழுலகங்களையும் திரட்டி இந்திரனையும் சபை நிறுத்தி அரசாள செய்தார். இடையில் ஏற்பட்ட சம்பவம் தெரியாததால் , இந்த உலக இயக்கம் தன்னாலே எனக் கர்வம் கொண்டார். தானே முழுமுதற்கடவுள் என்ற எண்ணத்துடன் உலகை வலம் வரும் போது பாற்கடலில் யோக நித்திரையில் திருமால் இருப்பதைக் கண்டு அவரிடம் சென்று நீ யார்? என வினவினார். அவரோ நான் உனது தந்தை என்றார், இதனால் பெரும் வாக்குவாதம் இருவருக்கும் ஏற்பட்டது. அது யார் பெரியவர் என்றளவில் பெரும் போரானது. இப் போரினால் உலக உயிர்கள் அனைத்தும் வாடின. உடன் நாரதர் தோன்றி நீங்களிருவருமே பெரியவர் கிடையாது. சிவபெருமானே அனைவருக்கும் பெரியவர் என்றுரைத்தார். மேலும் இனியும் போர் தொடர்ந்தால் ஜோதிரூபமாக சிவபெருமான் தோன்றுவார் என்று கூறி மறைந்தார். இருப்பினும் விடாமல் போர் தொடர்ந்தது. சிறிது நேரத்திற்குப் பின் பெரும் ஜோதி தோன்றியது, அதிலிருந்து அசரீரீ கேட்டது. உங்கள் இருவரில் எவர் எனது அடியையும், முடியையும் கண்டு வருகிறிர்களோ அவர்களே பெரியவர் என்று அசரீரீ கூறியது. உடன் நான்முகன் அன்னமாக மாறி முடியைத் தேட, திருமால் வராகமாக மாறி அடியைத் தேட இரண்டுமேக் கிடைக்கவில்லை. இருவரும் சிவனே சரணம் என்று சிவனை அடைந்தனர். மனம் வருந்தினர். உடன் இருவரும் ஒன்றாக அங்கே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தனர். உடனே சிவபெருமான் தோன்றி இருவரிடத்திலும், நான்முகன் என் வலதுபுறத்திலும், திருமால் என் இடதுபுறத்திலும் தோன்றியவர்கள் எவனே எனக்கு இருவரும் ஒன்றே என்றுக்கூறி மறைந்தார். வானுக்கும் பூமிக்குமாக நின்ற ஜோதி வடிவம் சிறிது சிறிதாக குறைந்து மலையாக மாறியது. அதுவே திருவண்ணாமலையாகும். அவர்கள் இருவரும் வணங்கிய சிவலிங்கமே லிங்கோர்பவர் ஆகும்.
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் லிங்கோத்பவரை வணங்கினால் நாம் செய்த அனைத்துக் குற்றங்களும் மறைந்து விடும். இனி குற்றம் செய்யும் எண்ணம் வராது. நமக்கு வேண்டிய அனைத்தையும் அளிக்க வல்லவர். இங்கு பௌர்ணமி கிரிவலம் மிக விசேஷமானது. மேலும் இவரை வணங்க சூரியகிரகணத்தால் உண்டாகும் அனைத்து பிரச்சினைகளும் விலகும். மேலும் வென்னிற நந்தியாவர்த்தம் மலரால் அர்ச்சனையும், சாதம் அல்லது பால் நைவேத்தியமும் பௌர்ணமி அன்று கொடுக்க சித்தம் தெளிவடையும் . மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு குளிர்ச்சியான நல்லெண்ணையில் அபிசேகம் செய்தால் வெப்பநோய்கள் நீங்கும்

1.லிங்கமூர்த்தி

லிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது. மனம்,சொல்,செயல் இவற்றிற்க்கு மேல் வேறொரு உயர்வான நிலை இல்லை எனுமளவிற்கு உயர்ந்தது. உருவமற்றது. ஆகவே இன்னதென நம்மால் சுட்டிக்காட்ட இயலாதது. அதுவே அனைத்துமானது, பற்பல குணாதிசயங்களைக் கொண்டது. நிறமில்லாதது, அழிவென்பதே இல்லாதது, ஈரேழு உலகங்களும் தோன்ற, அழிய காரணமாயிருப்பது, இது தான் எனக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையை நமக்கு கொடுக்காதது. இத்தகைய நம் அனைவரையும் இயக்க வைக்கும் சக்தியை நாம் பரமசிவம் என்றால் எல்லோரும் அறிந்தது என பொருள் படும்.
மேற் சொன்னவாறு ஐம்புலனில்லாத எட்டாத நிலையைக் கொண்ட, இதற்கு மேல் வேறொரு உயர்ந்த நிலையினை சுட்டிக்காட்ட முடியாத, உலகம் தோன்ற, அழிய காரணமான இதனை உருவம் உள்ளது, அதாவது சகளம் என்றும், உருவமற்றது அதாவது நிட்களம் என்றும் பிரிக்கலாம். மேற்ச்சொன்ன சகலநிட்கள நிலையையே நாம் லிங்கம் என்போம். லிங்கம் சிவரூபம் அதாவது மேலேயுள்ளது. அது பொருந்தியிருக்கும் பீடம் சக்தி வடிவமாகும். பொதுவாக லிங்கத்தை ஞான சக்தியின் மறுவடிவமாக கொள்ளலாம். இத்தகைய ஞான சக்தியின் மறுவடிவமான லிங்க உருவமே சிவபெருமானின் உடலாகும். லிங்கம் மூவகைப்படும் . அவ்வியக்தம், வியக்தம், வியக்தாவியக்கம். இதில் கை, முகம் வெளிப்படாமல் இருப்பது அவ்வியக்தம், வெளிப்படுவது வியக்தம். அருவுருவத் திருமேனியுடையது வியக்தாவியக்தம். சிவலிங்கத்தின் உருண்டையாக இருக்கும் பகுதி ருத்ரபாகம் என்றழைக்கப்படும். பீடத்தின் கீழாக உள்ள நான்கு மூலையும் பிரம்ம பாகம் என்றழைக்கப்படும். பீடத்தில் லிங்கம் பொருந்தியுள்ள எட்டு மூலையும் திருமால் பாகம் என்றழைக்கப்படும். ருத்ரபாகம் ஆணாகவும், திருமால் பாகம் பெண்ணாகவும் பிரமபாகம் பேடு எனவும் குறிக்கப்படும்.

கன்ம சாதாக்கியம் என்பதற்கேற்ப லிங்கத்தின் நடுவே சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரம்மனும், தெற்கே திருமாலும், கிழக்கே ஈசனும் அமைந்திருக்கின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற லிங்கத்தைப் பற்றி மகாலிங்க தலம் எனும் சிறப்புப் பெற்ற ஊர் மயிலாடுதுறை அருகே உள்ள இடைமருதூர் ஆகும். இங்கு சிவபெருமான் தானே லிங்கம் அமைத்து, தானே பூஜித்து, பூஜைக்குறிய வழிமுறைகளை வகுத்தும் தந்துள்ளார். இங்கு காவிரி நதி வில்வத்தால் சிவனைப் பூஜித்தாள். நம்மிடமுள்ள மும்மலங்களை அகற்றும் வல்லமையுடையவர் இவர். பிரமஹத்தி தோஷ பரிகார தலமாகும். வில்வார்ச்சனையும், தயிர் அன்ன நைவேத்தியமும் செய்தால் மூளை, மனம் சம்மந்தப்பட்டவை தீரும். அக உடல் தூய்மையடையும்.

இறைவன் பெயர் மகாலிங்கேஸ்வரர் -இறைவி பெயர் பெருநலமுலையம்மையார் என்பதாகும்.

அறுபத்து நான்கு சிவ ரூபங்கள் .....

சிவபெருமான் சைவர்களின் தலைவராக வழிபடக்கூடிய கடவுள் ஆவார். இவர் மும்மூர்த்திகளுள் ஒருவர். முதல்வன் என்றும், மூவரும் அவனே என்றும், மூவரும் அறியாதவர் என்னும் தத்துவத்தை சைவ சித்தாந்தம் கூறுகிறது. சிவனை சிவம் என்றும், சிவப்பரம்பொருள் என்றும் சைவர்கள் அழைக்கின்றார்கள்.

சிவன்முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார். அருவத் திருமேனியுடைய சிவம் `சத்தர்' என்றும், அருவுருவத் திரு மேனியுடைய சிவம் "பரம்பொருள்' என்றும், உருவத் திருமேனியுடைய சிவம் `பிரவிருத்தர்' என்றும் சைவர்களால் அழைக்கப்படுகிறது.

சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை'' (பூரணத்துவம்), "மங்களமானது'' என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம். சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இந்து சமயக் கருத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவை:- காலையில் தரிசிக்க நோய்கள் நீங்கும்.
நண்பகலில் தரிசிக்க தனம் பெருகும்.
மாலையில் தரிசிக்க பாவம் அகலும்
அர்த்த சாமத்தில் தரிசிக்க வீடுபேறு கிடைக்கும்.

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தும் சிவனின் தொழில் எனப்படுகிறது. சிவனின் ஐந்து முகங்கள் சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம். இம்முகத்தின் மூலம் ஆகம ரகசியப்பொருளினைக் கேட்டு அறிந்தனர் அறுபத்தாறு முனிவர்கள்.

அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்றுவகையான சிவ வழிபாட்டு முறையில் உருவ வழிபாடும் சைவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. உருவ வழிபாட்டில் சிவனை, லிங்கம், மகேசுவர மூர்த்தங்கள், சிவ உருவத்திருமேனிகள் ஆகிய சிவ வடிவங்களாக சைவர்களால் வணங்குகிறார்கள். இந்த வடிவங்களை சிவ ரூபங்கள் என்றும், சிவ சொருபங்கள் என்றும் குறிப்பிடலாம்.

மகேசுவ மூர்த்தங்கள் என்று இருபத்து ஐந்து வடிவங்களும், உருவத்திருமேனிகள் என்று அறுபத்து நான்கு வடிவங்களும் குறிப்பிடப்படுகின்றன. சிவபெருமானை உருவ வழிபாடு செய்வதைவிட லிங்க வழிபாடு செய்வதே சிறந்தது என வியாசர் மகாபாரதத்தில் கூறி இருக்கிறார்.

`லிங்கம்' என்னும் சொல்லுக்கு எல்லாம் தோன்றி மறையும் மூலம் எனவும் `மங்கலத்தைத் தரும் பரம்பொருள்' எனவும், `அண்ட சராசரங்கள் யாவும் ஒடுங்குவதும் மீண்டும் உற்பத்தியாகி வெளிப்படும் தன்மை கொண்டது' என்றும் சிவாகமங்கள் விளக்குகின்றன. ஆலயங்களில் ஸ்தாபித்த லிங்கம் அசலம், இல்லங்களில் வைத்துப் பூஜிக்கும் லிங்கம் சலம்.

ஈசன் கருணைப் பெருக்கால் தோன்றியது சுயம்புலிங்கம். சிவ வடிவங்கள் மொத்தம் 64 ஆகும். அவை போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் என மூன்று வகைக்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. போக வடிவம் என்பது உமாமகேஸ்வரர், சந்திரசேகரர், ரிஷபாரூடர் முதலானவற்றை குறிக்கும்.

யோக வடிவம் என்பது தட்சிணாமூர்த்தி சுகாசனர் முதலானவற்றை குறிக்கும். வேக வடிவம் என்பது கங்காளர், வீரபத்திரர் முதலானவற்றை குறிக்கும். இவை முறையே உயிர்களுக்கு போகத்தை அருளுவதற்கும், யோகத்தை அருள்வதற்கும், வினைகளை நீக்கி அருள்வதற்கும் ஏற்பட்டவை.

இனி இந்த அறுபத்து நான்கு சிவ ரூபங்களை சற்று விரிவாக காண்போம்