Monday 29 July 2013

வீரகேரளம்புதூரில் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி

வீரகேரளம்புதூரில் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது.கீழப்பாவூர் வட்டாரத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றுத்திறனுடைய மாணவர்களின் உள்ளடங்கிய கல்வித்திட்டத்தின் சார்பாக மாற்றுத்திறனுடைய மாணவர்களைப் பள்ளியில் சேர்த்தல் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாற்றுத்திறனுடைய மாணவர்களை பள்ளியில் சேர்த்தல், சமஉரிமை அளித்தல் உள்ளடங்கிய கல்வி அளித்தல், சமுதாயத்தோடு இணைத்தல், பல வாசங்கள் உள்ள அட்டைகளைப் கையில் பிடித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணி மேற்பார்வையாளர் ரோஸ்வனஜா செல்வி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
தலைமை ஆசிரியர் கோஸ்முகைதீன் முன்னிலை வகித்தார். கீழப்பாவூர் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், பேரணியை வழிநடத்தி சென்றனர். ரமேஷ் நன்றி கூறினார்.


Thursday 25 July 2013

அண்ணாமலை ரெட்டியார் ஒரு சிலேடைப் புலி.

லட்சுமியின் விருப்பத்துக்குரிய மலர்களில் சாமந்தியும்
ஒன்று.
செவ்வந்தி என்றும் சிவந்தி என்றும் செவந்தி என்றும்
இதனை அழைப்பார்கள்.
மஞ்சள் நிறமான சாமந்தி மிகவும் விசேஷமானது.
இதிலேயே பொன்னிறமான வகையும் உண்டு. அதைத்
தங்கச் சிவந்தி என்பார்கள். 'துலுக்கஞ் செவந்தி' என்றும் அதற்குப்
பெயருண்டு. ஏன் அந்தப் பெயர் என்பது சரியாகத் தெரியவில்லை.

இந்த இடத்தில் ஒரு கதையை உங்களுக்கு
சொல்லாவிடில் ஜென்ம சாபல்யம் ஏற்படாது.
காவடிச் சிந்து பாடல்களை முதன்முதலில் இயற்றியவர்
சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார்.
ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர் என்னும்
குறுநில மன்னர் அவரை ஆதரித்து வந்தார்.
மன்னரின் மனைவியை ரெட்டியார் 'தங்கச்சி' என்றே
உரிமையுடன் அழைப்பது வழக்கம்.
ஒரு முறை அரசவையில் புலவர் கூட்டத்தின் மத்தியில்
தமிழாராய்ந்து கொண்டிருந்த வேளையில் அரசி அங்கு வந்தார்.
ரெட்டியார் மிகவும் பாசத்துடன், "தங்கச்சி வந்தியா"
என்று வரவேற்றார்.
தென்பாண்டி நாட்டில் வருகிறவர்களை "வாருங்கள்"
என்று வரவேற்பதை விட "வந்தியளா" என்று சொல்லி
வரவேற்பதுதான் பெரும்பாலும் வழக்கம். சிவகங்கைச் சீமையில்
"வந்தீஹளா?" என்று சற்று நீட்டி முழக்கிச் சொல்வார்கள்.
அதே மரபுப்படி ரெட்டியாரும் அரசியை வரவேற்றார்.
ஆனால் அவையில் இவ்வாறு ராணியுடன் உறவு முறை
கொண்டாடியது அரசருக்குப் பிடிக்கவில்லை.
அவருடைய அதிருப்தி அவருடைய முகத்தில் தெரிந்தது.
உடனே அண்ணாமலை ரெட்டியார், "அரசியார் கூந்தலில்
சூடியிருப்பது தங்கச் சிவந்தியா?" என்று கேட்டேன்.
வேறொன்றுமில்லை" என்று சமாளித்தார்.
அண்ணாமலை ரெட்டியார் ஒரு சிலேடைப் புலி.

வீடுகளில் தங்கச் சிவந்தியை வைத்திருப்பதும் அதைக்
கொண்டு லட்சுமியைப் பூஜிப்பதும் மிகவும் நல்லது.
அரச குலத்தினர் மிகவும் விருப்பமுடன் சூடும் மலராக
இது விளங்கியது.

Wednesday 24 July 2013

வாடா அப்பா!

முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழில், இறவாத புகழுடைய காவடிச் சிந்தில் நூல் தந்தவர் அண்ணாமலையார். 31வது வயதிலேயே வாழ்க்கையைத் துறந்துவிட்டாலும், அதற்குள்ளேயே கவியரசர் என்று பெயரெடுத்தவர். அரசவைக் கவிஞர். மண் ஆண்ட மன்னனே மரியாதையுடன் பெருமை அளிக்கப் பெற்றவர் சென்னிகுளம் அண்ணாமலையார். பலே பேர்வழியும் கூட.

பால் ஒளி படர்ந்த நேரம், பாலகன் அண்ணாமலை சாலை வழியே பசுமையை பரவசமாய்க் கண்டு களித்துச் செல்கிறான், எதிரில் மன்னன் மருதப்பர். மாசறு மாணிக்கமே மன்னனாய் எதிரில் கண்டதும் பாலகன் அண்ணாமலை,

“வாடா மன்னா!”

அண்ணாமலை இவ்வாறு விளித்தது கண்ட மன்னருடன் வந்த மந்திரிகள் பதை பதைக்க, மன்னன் திடுக்கிட, பாலகன் தொடர்கிறான்,

“வாடா(த) மன்னா, பரம்பொருளே வணக்கம்!”

நிம்மதிப் பெருமூச்சுடன் மன்னனின் புடை சூழ்ந்தோரும், பெருமூச்சுடன் மன்னர்,

“வணக்கம் பிள்ளாய், எங்கு சென்று கொண்டிருக்கிறாயப்பா?”

“இன்று சனிக் கிழமையாதலால் வீட்டிற்கு எண்ணெய்க் குளியல் காணச் சென்று கொண்டிருக்கிறேன் மன்னா!”

“ஆகட்டும், நல்லதொரு குளியல் கொள்வாயாகட்டும்!”

பரபரவென வீட்டை அடைகிறார். வீட்டில் இருந்த ஏவலர் புறக்கொல்லையில் இருக்கும் அண்ணாமலையாரை அடைகிறார். ஏனோ அண்ணாமலையார் சற்றுக் கடுகடுப்புடன் இருப்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை போலும். எண்ணெய்க் கோப்பையுடன் பாலகனைச் சென்றடைகிறார்.

“என்ன ஏவலரே, இரு கைகளுடன் எண்ணெயுடன் வந்து விட்டீரோ? இரு கைகள் மட்டும் போதாது எனக்கு, பல கை வேணுமெனக்கு!”

“பல கை எதற்கு பிள்ளாய்? இரு கைகளால் தேய்த்துக் குளித்தால் போதாதா?”
”வெறும் தரையில் நான் ஏன் அமர வேண்டும். ஆகவே பலகை கேட்டேன் ஏவலரே! பல கைகள் அல்ல!!” என்று புன்முறுவலுடன் சொல்கிறான் பாலகன் அண்ணாமலை.

பின்னர் பலகையில் அமர்ந்து குளித்துச் சிற்றுண்டி உண்டு விட்டு கோயிலடி செல்கிறான் அண்ணாமலை. அங்கே தன் தந்தையிடம் அலுவல் பார்க்கும் வேலையாள்,

“தம்பீ, காளி கோயிலுக்கு படையல் வைக்க வேண்டும். ஆகவே உம்வீட்டில் சொல்லி ஆடும், அரிசியும் வாங்கித் தருவீராக!”

சற்று யோசித்த பின், “ம்ம், அதில் ஒன்று நடக்கும், ஒன்று நடக்காது!”

“தம்பீ, எது ஒன்று இல்லாவிட்டாலும் படையல் நடக்காதல்லவா? ஆகவே இரண்டையும் பெற்றுத் தாருங்கள் தம்பீ!”

“யாராலும் அது முடியாது பெரியவரே!”

“என்ன தம்பீ இப்படி விதண்டாவாதம் செய்யலாமா நீங்கள்?”

“பெரியவரே, கோபப்படாதீரும்! ஆடு நடக்கும், அரிசி நடக்காது!! அதைத்தான் நான் சொன்னேன்!” என்று பெரியவரை ஆசுவாசப்படுத்தி விட்டு, வீட்டிற்குச் சென்று ஆடும் அரிசியும் பெற்றுத் தந்தான் அண்ணாமலை.

அப்போது அந்த ஆட்டைக் கண்டதும், “பெரியவரே உமக்குக் கிடைத்த இந்த ஆட்டின் கொம்பில் முத்திருக்கு கண்டீரோ?”

“இல்லையே தம்பி, ஆட்டின் கொம்பில் ஏது முத்து? அப்படி ஒன்றும் இல்லையே?”

“என்ன பெரியவரே?! இதோ இந்த கொம்பில் மூன்று திருக்கு(வளைவு) இருக்கிறது பாரும், அதைத்தான் முத்திருக்கு என்றேன் நான்!”

“தம்பீ, உங்களிடம் இருந்தால் என்னைக் கிறுக்கன் ஆக்கிவிடுவீர் போல் இருக்கிறது. நான் காளி கோயிலுக்குச் செல்ல வேண்டும்!” என்று கூறிய பெரியவர் கோயிலுக்குச் செல்ல, அண்ணாமலையார் சிந்துப் பாட்டுடன் ஊருக்குள் தன் வேலையைக் காண்பிக்கப் புறப்படுகிறார்.

கலம்பகத்தில் "களி'

தமிழ்ச் சிற்றிலக்கிய வகையில் கலம்பகமும் ஒன்று. பல்வகைப் பாக்களால் ஆன கலவை என்பதால் கலம்பகம் எனப்பட்டது. இதில் ஓர் உறுப்பாக அமைவதே "களி'. கள்ளை விரும்பிக் குடிப்பவர் அதனை சிறப்பித்துக் கூறுவதாகவோ அல்லது குடி மயக்கத்தில் தாறுமாறாகப் பேசுவதாகவோ செய்யுளைப் பாடுவது "களி' என்னும் உறுப்புக்கு இலக்கணமாம். பின்வரும் இந்தப் பாடலில் மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், இது பொருந்தாதது போல் தோன்றும், ஆயினும் இதன் உறுப்பு சிலேடை வகையைச் சார்ந்ததால், சரியான பொருளையே காட்டுவதாம்.



""புண்ணருந்தச் சம்மதியோம் போதப் புதுமலர்த்தீம்

கண்ணசையுள் ளோம்பொய் கழிறிடோம் - விண்ணவரில்

சூரனிடம் வீரையில்மால் தொட்டவளை விட்டதன்றோ

பாரதம்நன் றாயுணர்ந்து பார்''



இது, நவநீதகிருட்டிணன் கலம்பகத்தில் வரும் 37-ஆவது பாடல். இதன் கருத்தாவது: "பிற உடல்களின் புண் ஆகிய புலாலை உண்ண ஒப்பமாட்டோம். அன்றலர்ந்த பூக்களில் உள்ள இனிய தேனின் மேல் விருப்பம் அதிகம் இல்லை. நாங்கள் இல்லாத ஒன்றை, அதாவது, பொய்யைக் கூறமாட்டோம். தேவருள் ஒருவனாகிய சூரியனின் மீது, வீரையில் எழுந்தருளும் நவநீதகிருட்டிணப் பெருமாள் தான் ஏந்தியுள்ள சக்ராயுதத்தை செலுத்திய வரலாறு பாரதம் அல்லவா?

அதாவது, ஜயத்ரதனை அர்ஜுனன் கொல்லும் முகமாக, சக்ராயுதப் படையை வீசி, சூரியனை மறைத்து இரவு எனக் காட்டும் வண்ணம் நவநீதகிருட்டிணனாகிய கண்ணன் ஆடிய நாடகம் இதுவெனக் காட்டுகிறார் புலவர். எனவே, சொல்லையும் பொருளையும் நன்றாகச் சிந்தித்துப் பார்ப்பாயாக - என்று கூறுவதாய் இப் பா உள்ளது. இங்கே சூரன் என்றது, சூரியனை. பொதுவாக சூரன் எனில் சூரபதுமனைக் காட்டுதல் வழக்கம். சுரராகிய தேவருள் சிறப்பிடம் பெற்றவன் ஆதலின் விண்ணவரில் சூரன் என்றார். சூரனிடம் தொட்ட வளை என்றதால், சூரியன் மீது செலுத்தப்படாமல், அவனை மறைக்குமாறு இடையே செலுத்தப்பட்டது என்பது புலனாகிறது.

நவநீதகிருட்டிணன் கலம்பகத்தின் இந்தப் பாடல், தனிப்பாடல் திரட்டில் உள்ள ஒட்டக்கூத்தரின் பாடலை நினைவூட்டும். அரசனின் அவைக்கு வந்த ஒட்டக்கூத்தரை நோக்கி, சோழன் "களி என்னும் கலம்பக உறுப்பினால் ஒரு பாட்டுப் பாடுக' என்றபோது, இதைப் பாடினாராம்.



""புள்ளிருக்குந் தார்மார்பன் பூம்புகார் வாழ்களியேம்

சுள்ளிருக்குங் கள்ளையுண்டு சோர்விலேம் - உள்ளபடி

சொல்லவா வாலிது ரோபதையை மூக்கரிந்த

தல்லவா மாபா ரதம்''



"வண்டுகள் தங்கும் மாலையை அணிந்த மார்பினனான சோழனது பூம்புகார்ப் பட்டனத்தில் குடியிருக்கும் மகிழ்ச்சியை உடையவர்கள் நாங்கள். மகிழ்ச்சியாகிய கள்ளை உண்பதே அன்றி, மயக்கம் தரும் கள்ளைக் குடித்து நாங்கள் மறதி அடைவதில்லை. உண்மையான விவரத்தைக் கூறலாமா என்றால், மகாபாரதக் கதை யாதெனின், வாலுடைய பாம்பினை வரைந்த கொடியினைக் கொண்ட துரியோதனன், துரோபதையை அவமானம் செய்யக் கருதிய வரலாறு அல்லவா?' என்கிறார் ஒட்டக்கூத்தர். வாலி என்றதும் இராமாயணக் கதாபாத்திரம் மனதில் தோன்றினும், இங்கே துரியோதனனைக் குறித்தது. மூக்கரிதல் என்பது பொதுவான மானக்கேட்டை உணர்த்திற்று. "சுள்' என்றது கடுப்பை உணர்த்தும். முதிர்ந்த கள்ளுக்கு "கடுப்பு' உண்டு என்பதால்! இவ்விரண்டு பாடலுள் முதலில் கூறிய பாடலைப் பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.

திருநெல்வேலி மாவட்டத்தின் தென்காசிக்கு அருகிலுள்ளது வீரகேரளம்புதுர். ஊத்துமலை ஜமீன் பகுதி. இவர்களின் குலதெய்வம்தான் அங்கே கோயிலில் வீற்றிருக்கும் நவநீதகிருட்டிணப் பெருமாள். ஊத்துமலை ஜமீனினில் மிகப் புகழ் பெற்றவராக விளங்கியவர் இருதயாலய மருதப்ப தேவர். இவர் காலத்தில்தான் காவடிச் சிந்து பாடிய சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியாரும், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் மிக்க புகழ்பெற்று விளங்கினர். இருதயாலய மருதப்பர் காரணத்தால் வண்ணச்சரபம் எழுதியதே இந்த நவநீதகிருட்டிணன் கலம்பகம். இவர் ஆறு கலம்பக நூல்களை இயற்றியுள்ளார். அதிக அளவில் கலம்பகம் பாடியவர் இவர் ஒருவரே! அவற்றில் கண்ணன் என்னும் கருந்தெய்வத்தின் மீதுற்ற காதலால் வண்ணச்சரபம் இயற்றிய நூலே இக் கலம்பகம்!

உ.வே.சா.,வின், "என் சரித்திரம்' நூலை, ஆடியோ புத்தகமாக மாற்றும் பணி

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2013,23:55 IST

தமிழ் நூல்களை ஆடியோ புத்தகமாக்கும் அமெரிக்க தமிழர்

கல்கி, உ.வே.சுவாமிநாதையர் ஆகியோரின் நூல்களை, முதியோரும், மாற்றுத்திறனாளிகளும் சிரமமின்றி கேட்கும் வண்ணம், அமெரிக்க வாழ் தமிழர், ஸ்ரீகாந்த், ஆடியோ புத்தகங்களை உருவாக்கி வருகிறார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த, ஸ்ரீகாந்த், 20 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் குடியேறினார். அங்கு, மென்பொருள் துறையில், திட்ட மேலாளராக வேலை பார்த்தபடி, தமிழ் மன்றத்தை நிறுவிய ஸ்ரீகாந்த், அதன் மூலம், தமிழ் தொடர்பான, பணிகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, குழந்தைகளுக்கான இசை, கவிதை, பேச்சு, நாடகங்கள் போன்றவற்றை அரங்கேற்றி வருகிறார்.தற்போது, சான்பிரான்சிஸ்கோ பாரதி தமிழ் மன்றத்தின் தலைவராக பணிபுரிந்து வருகிறார். அங்கு உள்ள, ஸ்டான் போர்டு பல்கலை கழக வானொலியில், மூன்று மணி நேரம், தமிழ் சேவைக்காக ஒதுக்கப்படுகிறது. அதில், பாடல், நேர்காணல், நாடகம் என, பலவற்றை ஒலிபரப்பி வருகிறார். அவருடைய பணிகளில் முக்கியமானது, நாவல்களை, ஆடியோ புத்தகமாக தயாரிப்பது.கல்கியின், "பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு' ஆகிய நாவல்களை, ஆடியோ புத்தகமாக வெளியிட்டுள்ளார். மேலும், உ.வே.சா.,வின், "என் சரித்திரம்' நூலை, ஆடியோ புத்தகமாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்."ஆடியோ புத்தகம் எனில், செய்தி வாசிப்பது போல் இருக்கும்' என்ற, பொதுவான விமர்சனங்களை தாண்டி, தனித்துவத்துடன் உருவாக்கி இருக்கிறார்.நாவலின் நடையில், காட்சி விவரிப்புக்கு ஒரு குரலையும், கதாபாத்திரங்கள் பேசுவதற்கு ஒரு குரலையும் பயன்படுத்தி உள்ளார். கல்கியின், "பொன்னியின் செல்வன்' நூலில் வரும், 40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை, தானே பேசி அசத்தியுள்ளார். இது, 75 மணி நேரமாக ஓடும் ஆடியோ புத்தகமாக உள்ளது.

இதுகுறித்து, ஸ்ரீகாந்த் கூறியதாவது: துவக்கத்தில் துபாயில், மென்பொருள் துறையில் வேலை பார்த்த நான், அடுத்த, மூன்று ஆண்டுகளில், அமெரிக்கா சென்றேன். அங்கு, ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள் இருந்தன. அவர்கள், பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது; குறிப்பாக, மொழி பிரச்னை அதிகமாக இருந்தது. அடுத்த தலைமுறையினர், ஆங்கிலத்திலேயே எழுதி, பேசுவதால், தமிழ் மொழி மறந்தே போகும் அபாயம் இருந்தது.எனவே, இங்குள்ளவர்கள் தமிழை மறக்காமல் இருக்க, என்னால் இயன்ற வகையில், பணியாற்றி வருகிறேன்.என் வேலை, மிகவும் பரபரப்பானது; மனதளவில் அழுத்தம் கொடுக்க கூடியது. இதில், போதுமான ஓய்வு கிடைப்பது, சாத்தியமில்லாதது. இருந்தாலும், எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில், அடுத்த தலைமுறையினருக்கு சென்று சேரும் வகையில், தமிழ் சேவை செய்வது, சுகமானது.இவ்வாறு, அவர் கூறினார்.

இவருடைய ஆடியோவை கேட்ட, மாற்றுத் திறனாளிகளும், முதியோரும், இவருடைய சேவையை பாராட்டி, நேரிலும், மின்னஞ்சல் மூலமாகவும், பாராட்டி வருகின்றனர். அவருடைய இணைய முகவரி: www.tamilaudiobooks.com

வீரகேரளம்புதூர் என்ற இந்த ஊருக்கு ஒரு சிறப்பு உண்டு. அது தமிழ்காத்த, புலவர்களைப் புரந்த ஊற்றுமலை ஜமீன் ஊர் என்பதே! இந்த இருதாலய மருதப்பத்தேவர் ஜமீனைப் பற்றி தமிழ் தாத்தா – உ. வே. சாமிநாதையர். தமது நினைவு மஞ்சரியான என் சரித்திரம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.இனி அந்த தகவல்களை ஆடியோ புத்தகமாக கேக்கலாம்.

Sunday 21 July 2013

அருள்மிகு ஸ்ரீ இசக்கி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு ஸ்ரீ இசக்கி அம்மன் திருக்கோவில், வீரகேரளம்புதூர்


மூலவர் : ஸ்ரீ இசக்கி அம்மன்
உற்சவர் :
அம்மன்/தாயார் :
தல விருட்சம் : ஆலமரம்
தீர்த்தம் : சிற்றாறு
ஆகமம்/பூஜை :
பழமை : 500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வீரகேரளம்புதூர்
ஊர் : வீரகேரளம்புதூர்
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு

ஊர்ச்சிறப்பு
தென்தமிழகத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் தென்றல் தவழும் தென்காசி நகருக்கு கிழக்கில் 20 கி.மீ.தொலைவில் நீர்வளமும் , நிலவளமும் நிறைந்த குற்றாலச் சாரலின் குளுமையுடன் சிற்றாற்றின் வடபுரம் அமைதியும் இயற்கை அழகும் கொண்ட பேரூராக “வீரகேரளம்புதூர்” அமைந்துள்ளது.


வரலாறு

இசக்கி அம்மன் என்பவள் ஒரு கிராம தேவதை. சாதாரணமாக கிராம தேவதைகளை கிராமத்தில் உள்ளவர்கள் பெரிய அளவில் போற்றிவணங்குகிறார்கள். அவர்கள் தம்மையும் தமது கிராமத்தையும் காப்பதாக நம்புகிறார்கள். அது போல சில கிராம தேவதைகளை ஆராதிப்பத்தின் மூலம் தாமும் தமது குடும்பமும் நலமாக இருப்பார்கள், வேண்டியது கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள்.
முதலில் கிராம தேவதைகள் தம்மையும் தமது சக்தியையும் வெளிக் காட்ட கிராமமக்களை ஏதாவது ஒரு விதத்தில் பயமுறுத்துவார்களாம். பின்னர் அந்த கிராமமக்கள் யாராவது ஒருவரின் கனவில் அவர்கள் தோன்றி தான் இன்ன இடத்தில்புதைந்து உள்ளதாகவும், தன்னை வெளியில் எடுத்து வழிபட்டால் அந்த ஊரைக் காத்தபடி இருப்பேன் எனவும் கூறுவார்களாம். அதன்படி அந்த கிராம மக்கள் கனவில் வந்தபடியே அந்த தேவதைகளைக் கண்டறிந்து சிறு ஆலயம் எழுப்பி வழிபடுவார்கள். அந்த தேவதையும் அந்த ஊரைக் காத்தபடி ஊர் எல்லைகளில் அமர்ந்து இருப்பார்களாம்.
அப்படிப்பட்ட கதையின்படியே மாரியம்மனும் தன்னை வெளிக்காட்ட அம்மை நோயை உண்டாக்கி அதை குணப்படுத்த தன்னை வழிபட வைத்ததாககிராமியக் கதைகள் உண்டு. அதைப் பற்றிய கதைகளை தனியாக மாரியம்மன்ஆலயங்கள் என்பதில் விவரித்து உள்ளேன். அப்படிப்பட்ட மாரியம்மன் அம்சத்தைசேர்ந்தவள் இசக்கி அம்மன்என்றாலும்ஒருவரதுகுடும்பத்தையும் குழந்தைகளையும் காத்தருளும் தெய்வமாக அவதரித்தவளே இசக்கி அம்மன் என்பார்கள். இப்படியாகஉருவான கிராம தேவதைகள், தெய்வங்களில் ஒருவளான இசக்கி அம்மன் என்றஅம்மன் பெரும்பாலும் கன்யாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகாசி, சேலம் மற்றும் நாகர்கோவில் போன்ற தென் பகுதிகளில் அதிகம் ஆராதிக்கப்படுபவள்.அவளுக்கு தனி ஆலயங்களும் உள்ளன.

இசக்கி அம்மனை மாரியம்மனின் ஒரு அம்சமாகவே கருதுகிறார்கள்.மேலும் அந்த இரண்டு அம்மன்களும் பார்வதியின் ஒரு ரூபமே என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இசக்கியம்மன் பொதுவாக சிவப்பு உடை உடுத்தி,கையில் ஒரு குழந்தையை ஏந்தியபடியே காட்சி தருகிறாள். அவள் கருணைஉள்ளம் கொண்டவள். அவள் ஆலயத்தை சுற்றி உள்ள பால்கள்ளு என்ற பெயரில்உள்ள சில செடிகளைக் கிள்ளினால் வெள்ளை நிறத்தில் பால் போன்ற திரவம்வடியும். அதுவே அந்த இடங்களில் இசக்கி அம்மன் உள்ளாள் என்பதின் அடையாளம்என்று கூறுவார்கள். காரணம் குழந்தைகளுக்கு பால் ஊட்டி வளர்க்கும் ஒருதாயைப் போன்றவள் இசக்கி அம்மன் என்பதை அந்த சிறு செடி காட்டுகிறதாம்.

இசக்கி அம்மனை ரத்தத்தைக் குடிக்கும் நீலி என்ற யட்ஷினியின் சகோதரிஎன்றும் கூறுகிறார்கள். அந்த நீலி என்பவள் காளியின் யுத்த தேவதைகளில்ஒருவள். காளியும் பார்வதியின் அவதாரமே என்பதினால் இசக்கியம்மனும்பார்வதியை சேர்ந்த ஒரு தேவதையே எனக் கருதுவதில் தவறில்லை.

இசக்கி அம்மன் மானிட உருவு எடுத்து பூமிக்கு வந்தபோதுஅவளை வஞ்சித்து கொன்று விட்ட ஒரு செட்டியாரை பழி வாங்கும் விதத்தில் ஏழுஜென்மத்திலும் பிறப்பு எடுத்து தானே அவனை அழிக்க வேண்டும் எனசிவபெருமானிடம் வரம் கேட்டாள். அவள் கேட்ட வரத்தை தந்தாலும் ஒருநிபந்தனைப் போட்டார் சிவபெருமான். ஒவ்வொரு ஜென்மத்திலும் அவள் தன்னைசந்தித்து தனது ஆசிகளைப் பெற்றுக் கொண்டப் பின்னர்தான் அவனை அழிக்கவேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அதை அவள் ஏற்றுக் கொண்டாள். அடுத்த ஆறுஜென்மங்களிலும் அவளும் செட்டியாரும் பிறப்பு எடுத்தார்கள். அந்த ஆறுஜென்மத்திலும் அவளே அவரை பல வழிகளில் கொன்று பழி தீர்த்தாள்.
இனி மிஞ்சி இருந்தது கடைசி ஏழாவது ஜென்மம். மீண்டும்இருவரும் பிறப்பு எடுத்தார்கள். இசக்கி அம்மன் சிவபெருமானை தேடியவண்ணம்காட்டில் அலைந்து கொண்டு இருந்தாள். அப்போது ஒருநாள் அவள் காட்டு வழியேசென்று கொண்டு இருந்தபோது அவள் ஒரு சித்தரைக் கண்டாள். அந்த சித்தருக்குஅவள் மனிதப் பிறப்பு எடுத்து வந்துள்ளதின் காரணம் தெரியும் என்பதினால் அவளைசந்தித்தவர் அவளுக்கு சிவபெருமானும் பார்வதியும் இருந்த இடத்தைக் காட்டினார்.அதன்படி இசக்கியம்மன் சிவசக்தியை அவர்கள் உட்கார்ந்து இடத்துக்குச் சென்றுபார்த்து தனக்கு வேண்டிய வரத்தைப் பெற்றுக் கொண்டாள். அப்போது பார்வதிஅவளுக்கு துணையாக இருக்க நாகராஜரையும் அனுப்பி வைத்தாள்.

நாகராஜரும் இசக்கியம்மனும் காடு வழியே சென்று கொண்டுஇருந்தபோது அந்த வழியே ஒருவன் சென்று கொண்டு இருந்ததைக் கண்டார்கள்.அவனைப் பார்த்த நாகராஜர் இசக்கியம்மனிடம் அவன்தான் அந்த செட்டியார் எனஅடையாளம் காட்டினார். ஆகவே இசக்கியம்மன் அந்த வழிப்போக்கரிடம் சென்றுதான் ஒரு வேலை தேடுவதாகவும் அவர் வீட்டு வேலை செய்ய தன்னை வைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டாள். அந்த வழிப்போக்கனும் தனது மனைவிநிறைமாத கர்பிணியாக இருப்பதினால் அவளுக்கு உதவி செய்ய ஒரு பெண் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணியவாறு அவளை தன வீட்டில்வேலைக்கு அமர்த்திக் கொண்டான். அவன் வீட்டில் வேலை செய்யத் துவங்கினாள்இசக்கியம்மன். ஒரு நாள் அவன் வெளியில் சென்றபோது அவனை நாகராஜரைஅனுப்பி கொன்று விட்டாள்.

அந்த செட்டியாரின் மனைவிக்கு வந்துள்ள இசக்கியம்மன் ஒருபெண்ணாக இருக்காது, எதோ தெய்வமாகவே இருக்க வேண்டும் எனத் தோன்றியது.தன் கணவன் இறந்தப் பின் தானும் உயிர் வாழக் கூடாது என எண்ணியவள்இசக்கியம்மனிடம் தன் வயிற்றில் ஒரு குழந்தை வளர்கின்றது என்றும் அதைவெளியில் எடுத்துவிட்டு தன் குடலையும் வெளியில் எடுத்து விட்டு தனக்கு மரணம்கிடைக்க அருளுமாறு கேட்டுக் கொண்டப் பின் மயங்கி விழுந்து விட்டாள். அவள்வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம் இசக்கியம்மன் அவள் வயிற்றில்இருந்தக் குழந்தையை வெளியில் எடுத்து தன்னிடம் வைத்துக் கொண்டு அவள்குடலை மாலையாக்கி தன் கழுத்தில் அணிந்து கொண்டாள்.

அவளே இசக்கியம்மன் என்ற பெயருடன் ஊரின் மானுர் கால்வாயின் வடக்கில் ஒரு ஆலமரத்தடியில் எழுந்தருளி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றாள்.


திருக்கோவில் அமைப்பு

இத்திருக்கோயிலின் ஆலமரத்தடியில் ஸ்ரீ இசக்கி அம்மன் திருக்கரத்தில் கத்தி ஏந்தியவாறு சிவப்பு உடை உடுத்தி,கையில் ஒரு குழந்தையை ஏந்தியபடியே புன்முறுவலுடன் நின்ற திருக்கோலத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாள் .கற்பூர ஆரத்தியின்போது அவளது திருமுகத்தில் தவழும் புன்னகை அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும்.

இதர தெய்வங்கள்

பணையடியானும், புற்று வடிவில் நாகராஜரும் ஆலமரத்தடியில் எழுந்தருளி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார் .

திருவிழா
கோவில் கொடையிள். செவ்வாயன்று மதியம் வரை தொடர் அபிஷேகம் நடக்கும். செவ்வாய் அன்று இரவு தொடங்கி அதிகாலை வரை 'சாமக் கொடை' நடக்கிறது. இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சந்தன அலங்காரம் செய்வர்.
சாமக் கொடையின்போது 'ஆடு பலியிடுதலும்', 'அசைவப் படையலும்' நடைமுறையில் இக்கோவில்களிலும் உள்ளது. இந்த வழிபாடு, அம்மனுக்கு அல்ல; அம்மனின் காலடியில் கிடக்கும் அரக்கனுக்கு என்று சொல்லப்படுகிறது.
தீப்பந்தம் ஏந்தி, சாமி 'வேட்டைக்குப் போகுதல்', சாமி 'குறி சொல்லுதல்' போன்ற நம்பிக்கைச் செயல்பாடுகளும் இக்கோவில்களில் நடைமுறையில் உள்ளது. பொங்கல் வைத்தல், மாவிளக்கு வழிபாடு போன்றவையும் நடைமுறையில் உள்ளது.
புதனன்று காலை தொடங்கி மதியம் வரை 'பகல் கொடை' நடக்கிறது. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மாவிளக்கு, உருவம் செலுத்துவது போன்ற நேர்ச்சைகளைச் செலுத்துவர்.

திறக்கும் நேரம்:
காலை 9- 11 மணி வரை, மாலை 4-7 மணி வரையிலும் இசக்கி அம்மனை தரிசனம் செய்யலாம்.

முகவரி:
அருள்மிகு ஸ்ரீ இசக்கி அம்மன் திருக்கோவில், வீரகேரளம்புதூர்,- 627 861 திருநெல்வேலி மாவட்டம்.

அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் திருக்கோவில்


அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் திருக்கோவில், வீரகேரளம்புதூர்

மூலவர் : ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன்
உற்சவர் :
அம்மன்/தாயார் :
தல விருட்சம் : வேப்பமரம்
தீர்த்தம் : சிற்றாறு
ஆகமம்/பூஜை :
பழமை : 500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வீரகேரளம்புதூர்
ஊர் : வீரகேரளம்புதூர்
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு

ஊர்ச்சிறப்பு

தென்தமிழகத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் தென்றல் தவழும் தென்காசி நகருக்கு கிழக்கில் 20 கி.மீ.தொலைவில் நீர்வளமும் , நிலவளமும் நிறைந்த குற்றாலச் சாரலின் குளுமையுடன் சிற்றாற்றின் வடபுரம் அமைதியும் இயற்கை அழகும் கொண்ட பேரூராக “வீரகேரளம்புதூர்” அமைந்துள்ளது.


வடக்கு வாசல் செல்வி அம்மன் கதை

வடக்கு வாசல் செல்வி அம்மன் ஒரு நாட்டுப்புற காவல் தெய்வம்.
அம்பிகை, காவல் தெய்வமான காளி அம்சத்தோடு வடக்குவாசல் செல்வியம்மன், என்னும் கோலங்களில் அருள்பாலிக்கிறாள்.
தேவர் தலைவனான இந்திரன், கவுதமரின் மனைவியான அகலிகை மீது ஆசை கொண்டான். ஒருநாள், நள்ளிரவில் சேவல் வடிவெடுத்து கூவினான். பொழுது புலர்ந்தது என எண்ணிய முனிவர், காலைநேர அனுஷ்டானத்திற்காக கிளம்பினார். இதைப் பயன்படுத்திக் கொண்ட இந்திரன், கவுதமரின் வடிவில் சென்று அகலிகையை ஏமாற்றினான். விஷயமறிந்த முனிவர், இந்திரன் உடம்பெங்கும் கண்ணாகும்படி சபித்தார். சாபம் தீர இந்திரன் யாத்திரை புறப்பட்டான். பூலோகத்தில் அர்ஜுனபுரி என்னும் (கடையநல்லூர்) தலத்தை அடைந்தான். அங்கு நீலமணிநாதர், அருணாசலேஸ்வரர் என்னும் இரு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அப்பகுதியின் ஈசானபாகமான வடகிழக்கில் குளம் ஒன்றை வெட்டினான்.
நீலமணிநாதரின் வடபுறத்தில், அம்பாளை வடக்குவாசல் செல்வி என்னும் பெயரில் நிர்மாணித்து பூஜித்தான். இவர்களை வணங்கி சாப விமோசனம் பெற்றான்.
வடக்குவாசல் செல்வியம்மன் பெயருக்கேற்றாற் போல் ஊரின் வடபுறத்தில், அமைந்துள்ளது. பத்ரகாளி அம்சத்தோடு செல்வியம்மனும், சக்தி அம்சத்தோடு நீலகண்டேஸ்வரி அம்மனும் வீற்றிருக்கின்றனர். செல்வியம்மனுக்கு "உத்ரதுவார பாலினி' என்ற பெயரும் உண்டு. எதிரெதிர் சந்நிதிகளில் இரு அம்மன்களும் இருக்கின்றனர். செல்வியம்மன் அசுர சக்தியை அழித்து பக்தர்களைக் காக்கும் விதத்தில் வலக்கையில் திரிசூலம் ஏந்தியிருக்கிறாள். இடக்கரத்தில் விபூதி கொப்பரை உள்ளது. தீராத பழிபாவத்தில் இருந்து பக்தர்களைக்காப்பதில்நிகரற்றவளாகத் திகழ்கிறாள்.


திருக்கோவில் அமைப்பு
இத்திருக்கோயிலின் கர்ப்பகிரஹத்தில் “ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் திருக்கரத்தில் சூலம் ஏந்தியவாறு புன்முறுவலுடன் நின்ற திருக்கோலத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாள் .கற்பூர ஆரத்தியின்போது அவளது திருமுகத்தில் தவழும் புன்னகை அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும்..

இதர தெய்வங்கள்
கணபதி இருபுறங்களிலும் நாகங்களுடன் அருள் தருகிறார் .பைரவர் ,கருப்பசுவாமி முதலிய பரிவாரதேவதைகளுடன் வடக்கு வாசல் செல்வி அம்மன் அருள்பாலித்து வருகிறாள்.

திருவிழா
தை மாதம் மூன்றாம் செவ்வாய் அன்றும் அதற்கு அடுத்த தினமும் (புதன்கிழமை) 'கோயில் கொடை' நடத்தப்படும். விழாவிற்கு முதல்நாள் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், குங்கும அபிஷேகமும் நடத்துவர். செவ்வாயன்று மதியம் வரை தொடர் அபிஷேகம் நடக்கும். செவ்வாய் அன்று இரவு தொடங்கி அதிகாலை வரை 'சாமக் கொடை' நடக்கிறது. இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சந்தன அலங்காரம் செய்வர்.
சாமக் கொடையின்போது 'ஆடு பலியிடுதலும்', 'அசைவப் படையலும்' நடைமுறையில் இக்கோவில்களிலும் உள்ளது. இந்த வழிபாடு, அம்மனுக்கு அல்ல; அம்மனின் காலடியில் கிடக்கும் அரக்கனுக்கு என்று சொல்லப்படுகிறது.
தீப்பந்தம் ஏந்தி, சாமி 'வேட்டைக்குப் போகுதல்', சாமி 'குறி சொல்லுதல்' போன்ற நம்பிக்கைச் செயல்பாடுகளும் இக்கோவில்களில் நடைமுறையில் உள்ளது. பொங்கல் வைத்தல், மாவிளக்கு வழிபாடு போன்றவையும் நடைமுறையில் உள்ளது.
புதனன்று காலை தொடங்கி மதியம் வரை 'பகல் கொடை' நடக்கிறது. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மாவிளக்கு, உருவம் செலுத்துவது போன்ற நேர்ச்சைகளைச் செலுத்துவர்.

திறக்கும் நேரம்:
காலை 9- 11 மணி வரை, மாலை 4-7 மணி வரையிலும் வடக்கு வாசல் செல்வி அம்மனை தரிசனம் செய்யலாம்.

முகவரி:
அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் திருக்கோவில், வீரகேரளம்புதூர்,- 627 861 திருநெல்வேலி மாவட்டம்.


வீ.கே.புதூர் பகுதியில் புதிய தமிழகம் சார்பில் கோரிக்கை மனு பெறுதல்

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2013,05:59 IST

வீரகேரளம்புதூர்:புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வீரகேரளம்புதூர் தாலுகா பகுதியில் கட்சிக் கொடியேற்றி கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ.,யும் புதிய தமிழகம் கட்சித் தலைவருமான கிருஷ்ணசாமி, வீரகேரளம்புதூர் தாலுகாவில் சுற்றுப்பயணம் செய்து கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். மாவலியூத்து, கீழக்கலங்கல், மேலக்கலங்கல், கருப்பினான்குளம், குறிச்சாம்பட்டி, ஊத்துமலை, ருக்மணியாபுரம், தட்டப்பாறை, கண்ணாடிகுளம், முத்தம்மாள்புரம், வீராணம் ஆகிய கிராமங்களில் கொடியேற்றி வைத்தார். கண்ணாடிக்குளம் கிராமத்திற்கு சாலை வசதி வேண்டியும், நிறுத்தப்பட்ட 45டி பஸ்ஸை மீண்டும் இயக்கக் கோரியும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார்.அவருடன் மாவட்டச் செயலாளர் அரவிந்த், மாநில இளைஞரணி செயலாளர் வக்கீல் பாஸ்கர், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், ஆலங்குளம் நகர செயலாளர் வெட்டும் பெருமாள், தென்காசி தொகுதி செயலாளர் மூர்த்தி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுரேஷ், கிளைச் செயலாளர் வீராணம் பால்பாண்டி, கணேசன், கண்ணாடிகுளம் மாடசாமி, ஊத்துமலை கோபால் கலந்து கொண்டனர்.

Friday 19 July 2013

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

திரி சூலத்தின் மூன்று கூர் முனைகளைப் போல், 19-ஆம் நூற்றாண்டில், மூன்று மாபெரும் துறவிகள் தமிழ் மண்ணில் திகழ்ந்தார்கள். அவர்கள் ராமலிங்க வள்ளலார் (1823-1874), தண்டபாணி சுவாமிகள் (1839-1898), பாம்பன் சுவாமிகள் (1850-1929). ராமலிங்க வள்ளலாரைப் பற்றித் தமிழகம் பரவலாக உணர்ந்திருந்தது. மற்ற இருவரும் அந்த அளவுக்குப் போற்றப்படவில்லை. தண்டபாணி சுவாமிகளும் வள்ளலாரைப் போன்ற தெள்ளுதமிழ்ப் புலவர். பலவிதச் சிறப்புகளுக்கு உரியவர்.

வாழ்க்கைச் சுருக்கம்:

திருநெல்வேலியில் செந்தில்நாயகம் பிள்ளை-பேச்சிமுத்து தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த மாதமும் தேதியும் அறியமுடியவில்லை. இவரது இயற்பெயர் சங்கரலிங்கம். தந்தையின் நண்பரான சீதாராம நாயுடு என்பவரால் இவருக்கு முருகன் மீது பக்தி உருவாயிற்று. ஆரம்பக் கல்வியை முடித்த இவர், இளம் வயதிலேயே தமிழில் மிகுந்த புலமைப் பெற்றார். எட்டு வயதிலேயே கவிதை எழுதும் விழுமிய ஆற்றல் கைவரப் பெற்றார்.

அந்த வயதில், "பூமி காத்தாள்' என்ற அம்மனுக்கு அப்பெயர் எப்படி அமைந்தது என்ற காரணத்தைக் கூறி, பாடுதற்கு அரிய வெண்பாவில் அதைப் பாடினார். கவிதை பொழியும் இவருடைய ஆற்றலைக் கண்டு வியந்த சீதாராம நாயுடு இவருக்கு "ஓயா மாரி' என்ற சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.

சங்கரலிங்கம், முருகனின் திருவடி தொழும் அடியவர் ஆனார். மனம் உருகிப் பாடினார். ஆகவே இவர் முருகதாசர் என்று அழைக்கப்பட்டார். இவர் முருகனின் திருப்புகழை விரும்பிப் பாடிக்கொண்டே இருந்ததால் திருப்புகழ்ச் சுவாமிகள் என்றும் சிறப்பிக்கப்பட்டார்.
உச்சிமுதல் உள்ளங்கால் வரை திருநீறு பூசிக்கொண்டார். இடுப்பில் கல்லாடை அணிந்துகொண்டார். கையில் தண்டாயுதம் ஏந்திக் கொண்டார். இந்தக் கோலத்தில் விளங்கிய இவரை மக்கள் "தண்டபாணி சுவாமிகள்' என்று போற்றினார்கள். பாடுதற்கு அரிய வண்ணம் பாடும் ஆற்றல் பெற்ற சரபம் (சிம்புள் பறவை) போன்று விளங்கியதால், இவர் "வண்ணச்சரபம் தண்டபாணி' சுவாமிகள் எனப்பட்டார். அப்பெயரே அவருக்கு நிலைத்து நின்றது.

சில துறவிகள் ஒரே தலத்தில் நிலைத்திருந்து, ஆலமரம் போல நலம் புரிவார்கள். ஒரு சில துறவிகள் பல ஊர்களுக்கும் சென்று வான்பறவை போல் உலவி, அருள் புரிவார்கள். இந்த வகையில் தண்டபாணி சுவாமிகள் தமிழ் நாடெங்கும் வலம்வந்தார். அவிநாசி முதல் வேளூர் வரையிலான 218 ஊர்களிலும் கேளர மாநிலம் மற்றும் இலங்கையிலும் அவரது பாதம் பதிந்தது.

துறவிகள் பற்றற்றவர்கள். முற்றிலும் இறைவழிபாட்டிலேயே பொழுதைக் கழிப்பவர்கள். ராமலிங்க சுவாமிகளும் தண்டபாணி சுவாமிகளும் சற்று மாறுபட்ட நிலையில் வாழ்ந்து, வழிகாட்டியவர்கள். சமுதாய நலனிலும் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர்கள்.


தமிழ் பற்று:

தாய்மொழித் தமிழ் மேல் தண்டபாணி சுவாமிகள் மிகுந்தப் பற்று கொண்டிருந்தார்.

""இளநகைச் சிறுமியர் சொல்மொழியினும் தித்தித்திருக்கின்ற தமிழ்'' என்றும், ""செந்தமிழே உயர்வென்று முன்னாள் சீட்டு எனக்குத் தந்தனன் கந்தன்'' என்றும், ""தமிழ்மொழிக்கு உயர்மொழி தரணியில் உளதெனில் வெகுளியற்றிருப்பவன் வெறும் புலவோனே'' என்றும் தண்டபாணி சுவாமிகள் பாடினார்.

தாய்மொழியின் பெருமையைத் தரணிக்கு அறிவிக்கும் முறையில் முத்தமிழ்ப் பாமாலை, தமிழ்த் துதிப் பதிகம், தமிழலங்காரம் ஆகிய நூல்களை இயற்றினார். முத்தமிழையும் வளர்த்தார். இயற்றமிழோடு முசுகுந்த நாடகம், இசைக் கீர்த்தனைகளையும் படைத்தார். சொல்லாய்வும் செய்தார்.

தமிழ்ச்சொல் "புகல்' என்பது இந்தியில் "போல்' என்று மருவிவிட்டது என்றார். அதை, ""புகல் எனும் சொல்லினைப் போல் எனச் சொல்லுதல் போல்

இகல் இந்துத்தானியும் பலசொல செந்தமிழிற் கொண்டு இயம்புகின்றார்'' என்று பாடினார். (இந்தியில் ஆயிரம் தமிழ் வேர்ச்சொற்கள் உள்ளன என்று அண்மையில் ஆய்வறிஞர் ஒருவர் கூறியுள்ளார்).

மேலும் ஒரு புதுமையை இவர் பதிவு செய்துள்ளார். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவை பற்றிய ஐந்திலக்கணமே தமிழில் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், புலமைக்கு இலக்கணம் கூறும் ஆறாம் இலக்கணத்தை இவர் கற்பித்தார். பின்பு ஏழாம் இலக்கணத்தையும் தந்தார். சிற்றிலக்கியங்களிலும் புதுமையைக் கையாண்டார். முன்னிலை நாட்டம், மஞ்சரி, ஆயிரம், முறைமை, விஜயம், நூல், சூத்திரம் என்ற புதுமை இலக்கிய வகைகளை வழங்கி, வழிகாட்டினார்.

திருக்குறளின் அடியொற்றி வருக்கக் குறள் என்ற நூலை உருவாக்கினார். சத்தியவாசகம் என்ற உரைநடைச் சுவடியையும் அருளினார். இவர் லட்சம் பாடல்களைப் பாடியுள்ளார். "குருபர தத்துவம்' என்ற பெயர் கொண்ட தன் வரலாற்று நூலை எழுதினார். இது 1240 விருத்தப்பாக்களால் ஆனது.

72 புலவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் "புலவர் புராணம்' என்ற நூலில் நிலைபெறச்செய்துள்ளார். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டதாகும். அருணகிரிநாதர் வரலாற்றை, "அருணகிரிநாதர் புராணம்' என்ற பெயரில் நூலாக்கியுள்ளார்.

முருகனின் அடிமையாக ஒளிர்ந்த இவர், மற்ற கடவுளர்களையும் போற்றினார். வைணவப் பெரியார்களான பெரியாழ்வார், குலசேகராழ்வார், ஆண்டாள் முதலியவர்களை உயர்வாகப் பாடியுள்ளார். பழந்தமிழ்ப் புலவர்கள் மற்றும் ஒüவையாரையும் திருவள்ளுவரையும் பலவாறு போற்றியுள்ளார்.

""ஒüவையொடு வள்ளுவனும் ஆராய்ந்துரைத்த நெறி
செவ்வை யெனத் தேர்ந்தார் சிலர்''

என்று கூறிப் பாராட்டினார்.

தண்டபாணி சுவாமிகள் தம்காலத்துப் பெருமக்களாகிய ஆறுமுகநாவலர், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சபாபதி முதலியார், பூண்டி அரங்கநாத முதலியார் போன்றவர்களுடன் பழகியவர். தனக்கு மூத்தவராகிய ராமலிங்க வள்ளலாரை மூன்று முறை சந்தித்துள்ளார்.

""அருமைத் தமிழ்த் தாயுமான பிள்ளை தாமே
பெருமை இராமலிங்கம் பிள்ளை''

என்று பாடி, தாயுமானவரின் மறுபிறவியே ராமலிங்க வள்ளல் என்று புலப்படுத்தினார்.

இல்லறத்தை மேன்மையுடையது என்றார். பெண்மையை உயர்த்திக் கூறி, பெண் உரிமைக்குக் குரல் கொடுத்த இவர், பெண்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பெண் கல்வி மறுப்பவர்களை,

""நாரியரும் கற்கை நலம் என்று உரைக்குநரைப் பாரில் இகழ்வார் பலர்'' என்று கூறி மனம் வருந்தினார். கணவனை இழந்த பெண் மறுமணம் புரிந்து கொள்ளலாம் என்ற புரட்சிகரமான கருத்தை அன்றே கூறியுள்ளார் தண்டபாணி சுவாமிகள்.

துறவிகள் அரசியலின் அருகில் வருவதில்லை. ஆனால் தண்டபாணி சுவாமிகள், இம்மண்ணை ஆங்கிலேயர் ஆண்டு வருவதைக் கண்டு, அந்நியர் ஆட்சியை எதிர்த்துக் குரல் கொடுத்து,

""நிரைபடப் பசு அனந்தம் கொன்று தினும்
நீசர் குடை நிழலில் வெம்பித்
தரைமகள் அழும் துயர் சகிக்கிலேன்''

என்று பாடினார். தனிப்பட "ஆங்கிலியர் அந்தாதி' என்ற நூலைப் பாடி அதன்மூலம் ஆங்கிலேயரைப் பலவாறு சாடினார்.

இறுதிக் காலத்தில் அரிசி உணவைத் தவிர்த்து பயறு உணவுகளை உட்கொண்டதாலும், கடும் தவத்தாலும் இவரது உடலில் வெப்பம் மிகுதியாகி, உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் 1898-ஆம் ஆண்டு சிவபதவி அடைந்தார். அவர் படைத்தளித்த லட்சம் பாடல்களும் இன்றளவும் அவரது புகழைப் பாடிய வண்ணம் உள்ளன.

இயற்றிய நூல்கள்:

* தமிழைத் துதிக்கும் பின்வரும் நூல்கள் இயற்றினார்:
* முத்தமிழ்ப் பாமாலை
* தமிழ்த் துதிப் பதிகம்
* தமிழலங்காரம்
* வீரகேரளம்புதூர் நவநீதக்கிருஷ்ண கலம்பகத்தையும் படைத்தவர் இவரே.

இருதலாய மருதப்ப தேவர் வீரகேரளம்புதூர் நவநீதக்கிருஷ்ணன் மீது கொண்டிருந்த பக்தியும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் திருமால் மீது கொண்டிருந்த பக்தியும் ஒருசேர இணைந்ததன் விளைவாகவே உருவனதே வீரகேரளம்புதூர் நவநீதக்கிருஷ்ண கலம்பகம்.

இயற்றமிழோடு முசுகுந்த நாடகம், இசைக் கீர்த்தனைகளையும் படைத்தார்.
திருக்குறளின் அடியொற்றி வருக்கக் குறள் என்ற நூலை உருவாக்கினார்.
சத்தியவாசகம் என்ற உரைநடைச் சுவடியை எழுதினார்.
ஆங்கிலியர் அந்தாதி என்ற நூலைப் பாடி அதன்மூலம் ஆங்கிலேயரைப் பலவாறு சாடினார்.

இறுதிக் காலம்

இறுதிக் காலத்தில் அரிசி உணவைத் தவிர்த்து பயறு உணவுகளை உட்கொண்டதாலும், கடும் தவத்தாலும் இவரது உடலில் வெப்பம் மிகுதியாகி, உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு 1898 ஆம் ஆண்டு சிவபதவி அடைந்தார். அவர் படைத்தளித்த லட்சம் பாடல்களும் இன்றளவும் அவரது புகழைப் பாடிய வண்ணம் உள்ளன.



வீரகேரளம்புதூர் தாலுகா மேலமருதப்பபுரத்தில் மனுநீதி நாள் முகாம்

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2013,06:02 IST

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் தாலுகா மேலமருதப்பபுரத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.

முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, சமூகப்பாதுகாப்புத் திட்ட தனிதுணை ஆட்சியர் தியாகராஜன், மேலமருதப்பபுரம் பஞ்., தலைவர் ராமலிங்கத்தாய் பரமையாமுன்னிலை வகித்தனர். வீரகேரளம்புதூர் தாசில்தார் குருச்சந்திரன் வரவேற்றார். முகாமில் கடந்த மாதம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்கப்பட்டது. 147 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களும் பெற்றக்கொள்ளப்பட்டன.

முகாமில் ஊத்துமலை நீர்வடி பகுதி சங்கத்தலைவர் பரமையா, மண்டல துணை தாசில்தார் செல்வக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், பலபத்திரராமபுரம் பஞ்., தலைவர் வள்ளி, ஆலங்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமிசுந்தரி மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். சமூக பாதுகாப்பத் திட்ட தாசில்தார் சுப்பிரமணியன் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை வருவாய் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சிவசங்கரன், மணிகண்டன் உதவியாளர்கள் தங்கம், மங்களம் செய்தனர்.

Sunday 7 July 2013

ஜோதி லிங்கத் தலங்கள்

இந்துக் கடவுளான சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருவது. இந்தியாவில் 12 சோதிலிங்கத் திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் திருவாதிரை நாள் சோதிலிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது.

சோம்நாத் கோயில், பிரபாஸ் பட்டன், சௌராஷ்டிரா, குஜராத்.
மல்லிகார்ஜுனா கோயில், குர்நூல், ஆந்திரப் பிரதேசம்.
மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம்
ஓங்காரேஸ்வரர் கோயில், மத்தியப் பிரதேசம்.
கேதார்நாத் கோயில், உத்தரகாண்டம்
பீமாசங்கர் கோயில், சகியாத்திரி, மகாராஷ்டிரா.
காசி விஸ்வநாதர் கோயில், வாரணாசி, உத்தரப் பிரதேசம்.
திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக், மகாராஷ்டிரா.
வைத்தியநாதர் கோயில், தேவ்கர், ஜார்க்கண்ட்.
நாகேஸ்வரர் கோயில், துவாரகை, குஜராத்.
இராமேஸ்வரம், தமிழ் நாடு
கிரிஸ்னேஸ்வரர் கோயில், ஔரங்கபாத், மகாராஷ்டிரா.

வீ.கே.புதூரில் கிளை நூலக புதிய கட்டடம் திறப்பு விழா

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2013
வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் கிளை நூலகத்தில் புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது.

முழுநேர நூலகமான வீரகேரளம்புதூர் கிளை நூலகம் 600 சதுர அடி கொண்ட சிறிய கட்டடத்தில் இயங்கி வந்தது. வாசகர்கள் அமர்ந்து படிக்க இடம் இல்லாமல் நின்று கொண்டே படிக்க வேண்டிய ‹ழ்நிலை இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து, இந்நூலகம் புதிய கட்டடத்திற்கு மாற்றும் பணி துவங்கி அதன் திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு வீரகேரளம்புதூர் பஞ்., தலைவர் மருதப்பாண்டியன் (எ) பாபுராஜா தலைமை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, மாவட்ட காங்., செயலாளர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட தலைவர் வக்கீல் சுப்பையா வரவேற்றார். வீரகேரளம்புதூர் தாசில்தார் குருச்சந்திரன் புதிய கட்டடத்தை திறந்துவைத்தார். ராஜகோபாலப்பேரி பஞ்., தலைவர் ஜாண், வியாபாரிகள் சங்க தலைவர் அருணாசலம் யோகீஸ்வரர், சேசுராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஏசுப்பாண்டி, ஆண்டபெருமாள், ஐயம்மாள், தொடக்க வேளாண்மை கடன் சங்கத் தலைவர் வேலுச்சாமிபாண்டியன், முத்துராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிளை நூலகர் வெற்றிவேலன் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை கிளை நூலகர் திருமலை நம்பி தலைமையில் உதவியாளர்கள் கைலாசம், சங்கீதா செய்திருந்தனர்.




வீரகேரளம்புதூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2013
வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூரில் தமிழ்நாடு வி.ஏ.ஓ.,க்கள் சங்கம் மற்றும் கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழக முதல்வரின் கவனத்திற்கு தங்கள் கோரிக்கைகளைக் கொண்டு செல்லும் விதமாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வி.ஏ.ஓ., சங்க தாலுகா தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். சங்கத்தலைவர் வேல்ச்சாமி முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். வங்கிகள் மூலம் சம்பளம் வழங்கும் முறையால் காலதாமதம் ஏற்படுவதால் அம்முறையை ரத்துசெய்யவேண்டும். வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளர்களுக்கு நியாயமான பணி உயர்வு வழங்கிட வேண்டும். அங்கீகாரம் பெற்ற சங்கங்களுக்கு கூட்டுக்கலந்தாய்வுக்கு நாள் ஒதுக்க வேண்டும். உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்து அலுவலர்களும், உதவியாளர்களும் கலந்து கொண்டனர். கிராம உதவியாளர் பரமசிவன் நன்றி கூறினார்.

ஆலங்குளம், வீ.கே.புதூர், சுரண்டை வழியாக நெல்லை- சங்கரன்கோவில் இடையே புதிய ரெயில் பாதை ஆய்வுக்கு டெண்டர்

நெல்லை,மே.4-2013

நெல்லையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஆலங்குளம், வீ.கே.புதூர், சுரண்டை, சேர்ந்தமரம், வீரசிகாமணி வழியாக புதிய ரெயில்பாதை அமைக்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு ஆலங்குளம், சுரண்டை சுற்றுப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து ரெயில் பாதை அமைப்பதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளை தொடங்கியுள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் வரை 160 கி.மீ. தூரத்திற்கு புதிய ரெயில் பாதை அமைப்பதற்கான ஆய்வு பணிகளுக்கு ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரெயில்வே அதிகாரிகள் இந்த பகுதியை எங்கெங்கு ரெயில் நிலையம் அமைக்கலாம், பாலங்கள் அமைக்க வேண்டிய இடங்கள், கேட் அமைக்ககூடிய பகுதிகள் இவற்றுக்கான செலவு தொகை எவ்வளவு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவில் அறிக்கை தயாரித்து ரெயில்வே துறைக்கு அனுப்பப்படும். இதன்பிறகு ரெயில் பாதை அமைப்பது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கட்டுமான செலவினங்கள் குறித்து இந்த அறிக்கையின் அடிப்படையில் பல கோடி மதிப்பில் ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரெயில்வே வாரியம் மற்றும் ரெயில்வே திட்டக்குழு இதுபற்றிய இறுதி முடிவை அறிவிக்கும்.

இதே போல் செட்டிகுளத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக ஆளூர் வரை செல்லும் புதிய ரெயில் பாதை திட்டத்திற்கும் ஆய்வு நடத்தப்பட உள்ளது. 24 கி.மீ. தூரம் அமையவுள்ள இந்த ரெயில் பாதை ஆய்வுக்கு ரூ.37 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இரு பகுதிகளிலும் ஆய்வு பணியை ரெயில்வே அதிகாரிகள் விரைவில் தொடங்க உள்ளனர்.

ரயில்வே வாரியம் மற்றும் திட்டக்குழு ஒரு புதிய ரயில் பாதை திட்டத்தை பல கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தும்போது, அதன் மூலம் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை மையமாக கொண்டு திட்டத்தை அறிவிப்பர். குறைவான வருமானம் வரும் திட்டங்களை கைவிட்டுவிடுவர்‘‘ என்றனர்.நெல்லை& தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் கிழக்கு கடற்கரை ரயில்பாதை திட்டத்துக்காக கடந்த 2007&08ம் ஆண்டுகளில் சர்வே செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அத்திட்டத்திற்கு இன்று வரை ரயில்வே துறை அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday 2 July 2013

வீ.கே.புதூரில் காங்.,நிர்வாகிகள் கூட்டம்

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூரில் காங்., கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட காங்., பொதுச்செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் நயினார், கவுரவத்தலைவர் துரைராஜ்தேவர் முன்னிலை வகித்தனர். செயலாளர் அண்ணாமலை செட்டியார் வரவேற்றார். அகில இந்திய தேசிய காங்., துணைத்தலைவர் ராகுலின் பிறந்த நாளை விழாவாகக் கொண்டாடவும், மத்திய அரசின் சாதனைகளை விளக்க பொதுக்கூட்டம் நடத்திடவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பொருளாளர் முருகன், துணைச் செயலாளர் நவநீதன், வெள்ளத்துரை, மெக்கேல்தேவர் உட்பட காங்., செயல் வீரர்கள் கலந்து கொண்டனர். குரு நன்றி கூறினார்.