Sunday, 26 March 2017

ஆடித்தபசும் ஊத்துமலை ஜமீனும்!

ஊத்து மலை ஜமீன்தாரின் ஆன்மிக திருப்பணிக்கு மற்றொரு சான்று, சங்கரன் கோயில் ஆடிதபசு திருவிழா. ஜமீன்தார்கள் இந்த திருவிழாவின்போது கோமதி அம்மனை தங்கள் வீட்டில் பிறந்த மகள் போலவே எண்ணி, சீதனபொருட்களுடன் மாப்பிள்ளை சிவனை நோக்கி காத்து இருப்பார்கள். பரம்பரை பரம்பரையாக ஊத்துமலை ஜமீன்தார் இதற்கான மண்டகப்படி நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி காசி விஸ்வநாதர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு இணையான பெரிய கோயில்களில் சங்கரன் நயினார் கோயிலும் ஒன்றாகும். இந்த தலத்துக்கு பூகைலாயம், புன்னைவனம், சீராசபுரம், சீராசை, வாராசைபுரம், கூழைநகர் என்ற பெயர்களும் உண்டு. சங்கரன் கோயில் ஐம்பூதத் தலங்களில் ஒன்றான மண்தலம் ஆகும். இந்தக் கோயில் தலபுராணம் சீவல மாறபாண்டிய மன்னரால் எழுதப்பட்டது. முதல் ஆறு சருக்கங்கள் ஊத்து மலைச் சமஸ்தான வித்துவான் புளியங்குடி முத்துவீரப்பக் கவிராயரால் 1913ம் ஆண்டு இயற்றப்பட்டது. இப்புராண சுருக்கத்தினை சேத்தூர் மு.ரா.அருணாசலக் கவிராயர் எழுதியுள்ளார்.

“முத்து வீரப்பக்கவிராயர் பிள்ளைத்தமிழ்” இத்தலத்திற்காக இயற்றப்பட்ட அற்புதமான நூலாகும். இவர் ஊத்துமலை சமஸ்தான வித்துவானாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கரனார் கோயில் முகப்பில் 124 உயரமுள்ள ஒன்பது நிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுரத்தின் உச்சி தெற்கு வடக்காக 56 அடி நீளம். கீழ்மேல் அகலம் 15 அடி. உச்சியிலுள்ள கலசம் ஏழடி நான்கு அங்குலம். நகரில் எங்கிருந்து பார்த்தாலும் இந்த கோபுரம் தெரியும். சங்கர லிங்கப் பெருமானுக்கு வன்மீக நாதர், சங்கரமூர்த்தி, வாராசைநாதன், வைத்தியநாதன், சீராசைநாதன், புன்னைவனநாதன், கூழையாண்டி என்று பல திருநாமங்கள். கோமதியம்மன், ஆவுடையம்மாள் என்றழைக்கப்படுகிறாள். ஆ என்றால் பசு. உலக ஜீவராசிகளை பசுக்கள் என்று சொல்வார்கள். அந்த ஜீவன்கள் அனைத்தையும் அரவணைத்துக் காக்கும் அன்னை இவர். இந்த அம்மனைக் கொண்டாடும் ஆடித்தபசு திருநாளில் கோமதியம்மாளின் தாய் வீட்டு சீதனத்தினை கொண்டு வரும் பெரும் பாக்கியத்தினை ஊத்துமலை ஜமீன் குடும்பத்தார் பெற்றுள்ளார்கள்.

இதற்காக ராஜ அலங்காரத்தில் வீரகேரளம் புதூர் நவநீத கிருஷ்ணன் கோயிலிலிருந்து கிளம்புவார்கள். நவநீத கிருஷ்ணன் யார்? கோமதியம்மாளின் தமயன்தானே! இந்த ஆடித்தபசு திருவிழா எப்படி உருவானது? ஒரு காலத்தில் சங்கரன்கோயிலில் புதர்கள் மண்டியிருந்தன. காடுகளாக இருந்தது. இப்பகுதியில் வாழ்ந்துவந்த காப் பரையன், கோயிலில் மண் தோண்டியபோது புற்று ஒன்றில் மண்வெட்டி பட்டு ரத்தம் பீறிட்டது. அப்போதைய தென்பாண்டி சீமையின் அரசன் உக்கிர பாண்டியன், தன் ஆட்சி எல்கைக்குள் இருந்த புன்னைவனக் காட்டில் ரகசிய சுரங்கப்பாதை அமைத்து, அதன்வழியாக மதுரை சென்று சிவனை வணங்கி வந்தார். ஒருநாள் அவரது கனவில் சிவன் தோன்றி, “இனி நீ என்னைத் தேடி மதுரை வரவேண்டாம். புன்னை வனத்திலுள்ள புற்றுகளை அகற்றி விட்டு அங்கு ஆலயம் அமைத்து வணங்கு,” என்று அறிவுறுத்தினார். மறுநாள் காவற் பறையன் அரசனிடம் புற்றில் இருந்து ரத்தம் பீறிட்ட சம்பவத்தினைக் கூறினான்.

தன் கனவுக்கு ஏதோ சங்கேத அறிகுறி அமைவது கண்டு, ரத்தம் பீறிட்ட இடத்துக்கு வந்தார். அங்கிருந்த பாம்புப் புற்றுகளை அகற்றி மண்ணைத் தோண்டச் செய்தார். அப்போது பூமிக்குள்ளிருந்து இரு நாகங்கள் (சங்கன், பதுமன்) குடைபிடிக்க அங்கே சங்கரலிங்கம் பிரசன்னமானார். ஆண்டவன் கட்டளைப்படி அங்கே மன்னன் எழுப்பிய ஆலயம்தான் சங்கரநாராயணன் ஆலயம். நாகங்களில் ஒருவரான சங்கன் சிவபக்தர்; பதுமன் விஷ்ணு பக்தர். இருவருக்குமிடையே சிவன் பெரியவரா, விஷ்ணு பெரியவரா என்று எப்போதும் விவாதம் நடக்கும். சிவபெருமான் அவர்களின் சந்தேகம் தீர்க்க இருவரையும் பூலோகத்துக்கு அனுப்பி வைத்தார். இதே சந்தேகம் உமையாளுக்கும் ஏற்படவே, அவளையும் பூலேகத்தில் அவதரிக்கச் செய்தார். பூமியில் கோமதியாகப் பிறந்த அம்பிகை, சிவனை எண்ணிப் பல ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அம்மையின் தவத்திற்கு இரங்கி சிவபெருமான் ஆடித்திங்கள், பௌர்ணமி, உத்திராட நட்சத்திரமும் கூடிய நன்னாளில் நாராயணமூர்த்தியுடன் இணைந்து சங்கரநாராயணராகக் காட்சி தந்தார்.

இந்நாளே ஆடித்தபசு திருநாள். “சிவனும் நானே, விஷ்ணுவும் நானே” என்று ஈஸ்வரன் உரைத்த நாள். சங்கன், பதுமன் இருவரும் சமரசமாகி முக்தியடைந்தனர். இந்த தபசுத் திருநாளில் லட்சக்கணக்கான மக்கள் பக்திப் பரவசத்துடன் கூடுகிறார்கள். விவசாயிகள் தங்கள் விளைச்சல் பெருக வேண்டி, விளைபொருட்களை சப்பரம் மீது தூவி வேண்டிக் கொள்கின்றனர். அன்றைய தினம் கோமதி அம்மைக்கும், சங்கரனாருக்கும் திருமணம் நடைபெறுவது காண்கொள்ளா காட்சியாகும். பரிவாரங்களுடன் சங்கரன் கோயிலுக்கு வரும் ஜமீன்தார் அம்பாளை வணங்கி நிற்பார்கள். அதன்பின் அம்பாளை தங்க சப்பரத்தில் அழைத்து வருவார்கள். அப்போது அவருக்கு பிறந்த வீட்டு சீதனமாய் அழைப்புச்சுருள் வைக்கப்படும். அலங்கார சாமான்களுடன் ஜவ்வாது, சந்தனம், விபூதி பைகள், எலுமிச்சை பழமாலை, பட்டு பரிவட்டம், சவுரிமுடி, புஷ்பவகை மற்றும் இதர பொருள்களுடன் கோயிலுக்குள் ஜமீன்தார் பரிவாரங்கள் புடைசூழ செல்வார். பிறகு அம்மனுக்கு தபசு அலங்காரம் செய்து, ஜமீன்தார் முன்செல்ல கோமதியம்மன் வீதிஉலா வருவார்.

“ஊத்துமலை ஜமீன் தபசு மண்டபத்தில் தங்க சப்பரத்தில் ஆவுடையம்மை, உமையம்மையாக தவம் இயற்றுவார். மாலையில் அம்பாள் தங்கச்சப்பரத்தில் சுவாமியை வலம் வந்து தவப்பயன் அடைவார். அதன்பின் மாலை மாற்றுதல், பரிவட்டம் கட்டுதல், திருக்கண் அலங்கரித்தல் போன்றன நடைபெறும். இவற்றை ஊத்துமலை ஜமீன் வாரிசுகள் முன்னின்று நடத்துகிறார்கள். தபசு காட்சியின்போது பரிவட்டம் கட்டி ராஜதோரணையில் ஊத்துமலை ஜமீன்தார் நிற்க ஒருபுறம் அம்பாள் சப்பரமும், மறுபுறம் சுவாமியின் சப்பரமும் நிற்கும். ஜமீன்தார் பரிவட்டம் கட்டிக்கொண்டு கோமதியம்மாளின் தாய் வீட்டு சீதனத்தோடு அந்த இடத்தில் எளிமையாகக் காத்திருக்கிறார். தற்போது ஜமீன்வாரிசு பாபுராஜ் என்ற மருதுபாண்டியர் இந்த மண்டகப்படியை முன்நின்று நடத்துகிறார். மறுநாள் கோமதி அம்பாள் சப்பரத்தில் பட்டிணப் பிரவேசம் செல்வார். இதற்குத் தேவையான புஷ்ப அலங்காரம் செய்து வீதி உலா வந்து அம்பாளை கோயிலில் கொண்டு சேர்க்கிறார் ஜமீன்தார். மூன்று நாட்களும் எண்ணெய்க் காப்பு நிகழ்ச்சிக்குப்பின் பள்ளியறைச் சிறப்பு மண்டகப்படியையும் இவரே செய்கிறார்.
இதற்காக நிறைக்குடமாக பசும்பால், தேங்காய் பருமன் உள்ள லட்டு, தோசைக்கல் அளவு தேன்குழல், அதிரசம் மற்றும் கனி வர்க்கங்கள், புஷ்பங்கள் வைத்து பூஜிப்பார்கள். அம்பாள் தவப்பயன் அடைந்து தபசு மண்டபத்துக்கு வந்ததும் ஊத்துமலை ஜமீன்தார் அனைவருக்கும் பாகுபாடு இன்றி சுருள் பிரசாதம் வழங்குவார். மதியம் அன்னதானம் நடைபெறும். கோயிலில் சங்கரநயினார், கோமதியம்மாள், சங்கரநாராயணர் ஆகியோர் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கிறார்கள். பிரசாதமாக வழங்கப்படும் புற்றுமண் தேள், பாம்பு போன்ற விஷக்கடிகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சிரங்கு போன்ற சரும நோய்களுக்கு புற்றுமண்ணை நீரில் கரைத்துத் தடவுகிறார்கள். உடனே நோய் தீருகிறது. வயிற்றுவலி, சீதபேதி போன்ற நோய்களுக்குப் புற்றுமண் கரைத்த நீரை அருந்தி குணமடைகிறார்கள். உடலில் கட்டி உபாதை கொண்டவர்கள் மாவிளக்கு எடுத்து கோமதியம்மாளை வணங்கி நோய் நீங்கிச் செல்கிறார்கள். இக்கோயில் நாகதோஷம் நீக்கும் தலமுமாகும்.

இங்குள்ள திருக்குளம் “நாகசுனை” என்று அழைக்கப்படுகிறது. குளத்தின் நீர் எப்போதுமே பச்சை நிறமாகக் காணப்படுகிறது. இதில் நாக பாஷாணம் கலந்துள்ளதால்தான் இந்த நிறம் என்கிறார்கள். விஷக்கடிக்கு ஆளானவர்கள் இக்குளத்தில் நீராடி தோஷம் நீங்கி நலம் பெறுகிறார்கள். இத்திருக்குளத்தை எத்தனை முறை தூர்வாரிச் சுத்தப்படுத்தினாலும் நீரின் நிறம் மட்டும் மாறுவதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது, தவம் மேற்கொண்ட அம்பிகையின் வண்ணமே என்றும் கருதுகிறார்கள். மார்ச், செப்டம்பர் மாதங்களில் 21, 22, 23 தேதிகளில் அதிகாலை 6 மணிக்கு சூரிய ஒளி லிங்கத்தின் மீது பாய்கிறது. இந்த கோயிலில் பிரதான வாசல் வழியாக நேரடியாக லிங்கத்தின் மீது இவ்வாறு ஒளி படர்வது சூரியனே சிவனை வழிபடுவதுபோல அமைகிறது. கோயிலின் உள்ளே புலித்தேவன் குகை உள்ளது. இந்த புலித்தேவனுக்கும் ஊத்துமலை ஜமீனுக்கும் நிறைய தொடர்பு உண்டு. புலித்தேவன் நெல்கட்டும் செவல் ஜமீன்தார்.
இவர் தமிழகத்தில் வெள்ளையர் ஆதிக்கத்துக்கு எதிராக தென்தமிழகத்தில் முதல் குரல் கொடுத்தவர். கடும்போரில் இவரை வென்ற வெள்ளையர்கள் இக்கோயில் வழியாக இவரை அழைத்துவந்தனர். அப்போது கடைசி ஆசையாக ஆலய தரிசனம் செய்ய விரும்பியதாகப் புலித்தேவன் கூறினாராம். இதையொட்டி கோயிலுக்குள் சென்ற பூலித்தேவன் கண் இமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டாராம். இங்குள்ள ரகசிய குகை வழியாக அவர் தப்பித்துச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. அந்த இடம் தற்போது பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்திய விடுதலைப்போருக்கு முதல் வித்தை ஊன்றிய மாவீரன் புலித்தேவன் மீது அதிக பற்றும், பாசமும் கொண்டவர் ஊத்துமலை ஜமீன்தார் எஸ்.எம். பாண்டியன். மாவீரனின் மறைந்த வரலாற்றை வெளியே கொண்டுவர பல முயற்சி செய்தவர். மன்னன் புலித்தேவன் பற்றி ஏராளமானோர் புத்தகம் எழுதியுள்ளனர். ஆனாலும் நெல்கட்டும் செவலில் கோட்டையும், சிலையும் உருவாக இவர்தான் மூலகாரணமாக செயல்பட்டவர்.

ஊத்துமலை ஜமீன்

ஊத்துமலை ஜமீன்தார்கள் கோயில்களை பராமரிப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக திகழ்ந்தனர். தமிழுக்கும் சிறந்த தொண்டாற்றிய அவர்கள் தாங்கள் வழிபடும் ஆலயத்தில் தங்கக் கொடிமரத்தை நிறுவி வணங்கி வருகின்றனர். கோயில்களை புனரமைப்பதிலும் திருவிழா நடத்துவதிலும் முன்னணியில் நிற்பர். கோமதி அம்மனை தங்களது வீட்டில் பிறந்த மகளாக எண்ணி அவரது திருமணத்தை தங்கள் இல்லத் திருமணம்போல் விமர்சையாக நடத்தி வருகின்றனர். ஜமீன்தார்கள் தென்பகுதிகளில் ஒரு குறுநில மன்னர்கள்போல ஆண்டு வந்தனர். அவர்கள் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் மறவர் பாளையமும், கிழக்குப் பகுதியில் நாயக்கர் பாளையமும் சிறப்புற்று விளங்கின. திருநெல்வேலி சீமையில் ஆட்சி செய்த மறவர் இனத்தைச் சேர்ந்த பாளையக்காரர்கள் அனைவரும் ராமநாதபுரம் பகுதியில் உள்ள “கிலுவை” நாட்டிலிருந்து வந்தவர்கள். மறவர் இனத்தில் கொண்டயங்கோட்டைப் பிரிவை சேர்ந்தவர்கள்தான் ஊத்துமலை ஜமீன்தார்கள்.

மதுரை மன்னன் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் பிரிக்கப்பட்ட 72 பாளையங்களில், ஊத்துமலை மிகப்பெரிதாக திகழ்ந்துள்ளது. இதன் ஆளுகைக்குள் 148 கிராமங்கள் இருந்தன. ஒரு காலக் கட்டத்தில் சுரண்டை ஜமீனையும் ஊத்துமலை ஜமீன்தார் ஏலம் எடுத்து தனது ஆளுகைக்கு கொண்டுவந்தார். ஊத்துமலை ஜமீன்தாருக்கு விஜயகுணராம பாண்டியன் என்ற பட்டம் உண்டு. இவர் உபய சாமரம், புலிக்கொடி, மகரக்கொடி, இந்திரனின் கொடியான வலரிக் கொடி ஆகியவற்றைப் பெற்றவர். பாண்டிய மன்னன் பல்வேறு காலகட்டங்களில் இவரது செயல்திறனுக்கு ஏற்ப இவற்றை வழங்கியுள்ளார். ஊத்துமலை பாளையம் எப்படி உருவாயிற்று? பாண்டிய மன்னன் மதுரையிலிருந்து தெற்கே திருநெல்வேலிச் சீமையிலுள்ள உக்கிரன் கோட்டைவரை ஆட்சி புரிந்து வந்தான். உக்கிரன் கோட்டையைச் சுற்றி வாழ்ந்த குறும்பர்கள் பாண்டிய மன்னனுக்கு பல தொல்லைகளைக் கொடுத்தனர். இவர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று மன்னன் முயற்சி செய்தான். அப்போது ஊத்துமலை ஜமீன்தார்களின் முன்னோர்கள் பெரும் படையெடுத்து வந்து குறும்பர்களின் தொல்லைகளை அடக்கினர்.

இதனால் ஊத்துமலைப் பாளையம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்தச் சமயத்தில் ஊத்துமலை பெருங்காடாக இருந்தது. ஜமீன்தார் தங்களது உறவுக் கூட்டத்தை அழைத்து வந்து காடுகளை அழித்து சீரமைத்து ஊரை உருவாக்கினார். அதன் பின் கோட்டை கட்டி வாழ்ந்து வந்தார். ஊத்துமலை ஜமீன்தார் சேரநாட்டிலிருந்து வந்ததாகவும் இதனாலேயே இவர் வம்சா வழியினர் வைணவ மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. வல்லப மகாராஜா (1534-1543) தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். இவர் நடத்திய நவராத்திரி விழாவிற்கு ஊத்துமலை மன்னர் வந்து சிறப்பு செய்தார். (தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தெப்பத்திருவிழாவை ஊத்துமலை ஜமீன்தார் வாரிசுகள் இப்போது நடத்தி வருகின்றனர்.) பாண்டியன் அரண்மனையில் தசரா விழா நடந்து கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் வீரதீர செயல்கள் நடைபெறும். இதன் பொருட்டு சண்டையிடுவதற்காக இரண்டு யானைகள் கூட்டி வரப்பட்டன.

அதில் ஒரு யானை தப்பிச் சென்று வீதியில் தென்படும் மக்களை எல்லாம் தூக்கி வீசி காலால் மிதித்துக் கொல்ல முயன்றது. அந்த சமயத்தில் ஊத்துமலை மன்னர் அங்கு வந்து தைரியமாக யானையை அடக்கினார். இதை அறிந்த பாண்டிய மன்னன் அந்த யானையின் மீது ஜமீன்தாரை ஏற்றி மேளதாளத்துடன் வீதிஉலா வரச் செய்தார். அவருக்கு ஏராளமான பரிசுகளையும் வழங்கி வழியனுப்பி வைத்தார். தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டிய மன்னன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியனுக்கும் ஊத்துமலை பாளையக்காரர்கள் உதவியுள்ளனர். மதுரையில் நாயக்கர் ஆட்சியை ஒழித்து விட்டு பாண்டியர் ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்த மாவீரன் பூலித்தேவன் தலைமையில் ஐந்து கோட்டைகள் அமைக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானது ஊத்துமலை கோட்டை. ஊத்துமலையில் கட்டப்பட்ட கோட்டைக்கு பஞ்ச பாண்டியர்களில் ஒருவரான மாறவர்மன் பெயர் சூட்டப்பட்டது.

‘ஊற்று’ உள்ள மலை ‘ஊற்றுமலை’ என்றழைக்கப்பட்டு நாளடைவில் ஊத்துமலை என்று வழங்கலாயிற்று. ஊத்துமலை ஜமீன்தார்கள் ஆட்சி துவங்கிய காலம் அறியப் போதிய ஆதாரம் இல்லை. ஊத்துமலை ஜமீன்தார்கள் காட்டுக்குள் “டானா” என்ற இடத்தின் வடக்குப் பகுதியில் முதல் கோட்டையையும், ஊத்துமலை நகருக்கு வடக்கே உள்ள “வையம் தொழுவான்பாறை” என்ற இடத்தில் இரண்டாவது கோட்டையையும் அமைத்துள்ளனர். நாளடைவில் ஆட்சிப்பரப்பு விரிந்ததால் அரண்மனையை இடம் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் மூன்றாவதாக ஊத்து மலையில் தற்போது ஆர்.சி. பள்ளி இருந்த இடத்துக்கு அரண்மனையை மாற்றினார்கள். இங்குதான் தமிழ்ச் சங்கம் நடத்தப்பட்டது. அரசவைக்கு பல கவிஞர்களை வரச்செய்து ஜமீன்தார்கள் தமிழ் வளர்த்தனர். இருதாலய மருதப்பதேவர் தனது காதல் மனைவிக்காக வீரகேரளம்புதூரை தலைநகராக மாற்றி அரண்மனையைக் கட்டினார். ராணி மீனாட்சி சுந்தர நாச்சியார் அருகிலுள்ள குருந்தன்மொழி கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.


ஊத்துமலையில் அரண்மனை இருந்தபோது இருதாலய மருதப்பதேவர் பரிவாரங்களுடன் தனது குதிரையில் குருந்தன்மொழி சென்றார். அந்த சமயத்தில் மீனாட்சி சுந்தர நாச்சியாரை பார்த்து அவரது அழகில் மயங்கினார். தனது உடைவாளை அனுப்பி அவரிடம் மணம் முடிக்க சம்மதம் கேட்டார். ‘‘ஜமீன்தாரை மணக்க நான் சம்மதிக்கிறேன். ஆனால், வானம் பார்த்த பூமியான ஊத்துமலைக்கு நான் வாழ்க்கைப் படமாட்டேன். குளிர்ச்சியான இடத்தில் ஒரு அரண்மனை கட்டினால் நான் அவரோடு வாழ்கிறேன்” என்றார் மீனாட்சி சுந்தர நாச்சியார். உடனே ஜமீன்தார் சிற்றாற்றின் குறுக்கே “தாயார் தோப்பு” என்னும் இடத்தில் தடுப்பணை கட்டினார். அந்த அணையிலிருந்து வீராணம் கால்வாய் வெட்டினார். வீரகேரளம்புதூர் என்ற இடத்தில் கால்வாயின் இருபுறங்களிலும் அரண்மனையைக் கட்டினார். அந்தக் காலத்திலேயே நீர்வழிப்பாதையை கட்டுப்படுத்தி மதிநுட்பத்துடன் தடுப்பணையை அவர் கட்டினார். ஆற்றில் வெள்ளம் வந்தால் அரண்மனை அழிந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு பர்லாங் தூரத்தில் ஒரு வடிகாலையும் அமைத்தார். அருகிலேயே நவநீத கிருஷ்ண சுவாமி கோயிலை கட்டினார்.தொடர்ந்து அரண்மனையை வீரகேரளம் புதூருக்கு மாற்றினார். 25.5.1864 அன்று இருதாலய மருத்தப்ப தேவருக்கும் மீனாட்சி சுந்தர நாச்சியாருக்கும் திருமணம் நடந்தது. அரண்மனையின் ஒருபுறம் இருவரும் வாழ்ந்தனர். மறுபுறம் ராஜதர்பார் நடந்தது. அதில், புலவர்களை அழைத்து வந்து தமிழ் வளர்க்கும் பணியும் தொய்வில்லாமல் நடந்தது. இரவு பகலாக ஓலைச் சுவடியில் புலவர் பெருமக்கள் கவிதைகளை வடித்தனர். காதல் மனைவிக்காக ஊத்துமலை ஜமீன்தார் கட்டிய அரண்மனை வீரகேரளம் புதூரில் இப்போதும் சிறப்புடன் காணப்படுகிறது. ஊத்துமலையை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் வீரகேரளகுலவர்மன் (1021-1028) பெயரால் இந்த ஊர் உருவாகியிருக்கலாம். வீரகேரளம்புதூர் நகரை நிர்மாணித்த பிறகு திறப்பு விழாவிற்கு அப்போதைய சேர மன்னனை அழைத்து சிறப்பித்துள்ளனர். விழாவுக்கு வந்த சேரமன்னன் இங்குள்ள மக்கள் வீரமாக இருப்பதையும் இப்பகுதி கேரளம்போல் செழிப்புடன் இருப்பதையும் பார்த்து இதற்கு “வீரகேரளம்புதூர்” என்று பெயர் சூட்டியதாகவும் கூறப்படுகிறது.


விழா, முடிந்து சேர மன்னன் தனது நாட்டிற்கு திரும்பும் வேளையில் ஊத்துமலை ஜமீன்தார் அவருக்கு ஒரு விநாயகர் சிலையை பரிசாக கொடுத்தார். அந்த சிலையை செங்கோட்டையில் பிரதிஷ்டை செய்தனர். அந்த கோயில் அமைந்துள்ள தெருவுக்கு “வீரகேரள விநாயகர் தெரு” என்று பெயரிட்டனர். தற்போதும் இந்த பெயர் விளங்கி வருகிறது. கேரளம் என்னும் பெயருக்கு ஏற்ப இந்த ஊர் கேரள நாட்டின் சாயலைக் கொண்டுள்ளது. தென்னை, மா, பலா, வாழை ஆகிய மரங்கள் செழிப்பாக காணப்படுகின்றன. இவ்வூர் தெப்பத்தில் உள்ள மண்டபம் கேரள கட்டிடக் கலையை ஒத்துள்ளது. மன்னர் மருதப்பபூபதி காலத்தில் வீரகேரளம்புதூர் “மருதபூபதி” என்னும் பெயருடன் விளங்கியதாக குறிப்பு உள்ளது. ஊத்துமலை ஜமீன்தார்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், திருக்குற்றாலம் குற்றால நாதர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களின் நித்திய பூஜைக்கு நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர். மன்னார்கோயிலில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலில் கொடிமரம் நிறுவினார்கள். நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்துக்கும் ஊத்துமலை மன்னருக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.


ஊத்துமலை ஜமீன்தார்களின் குலதெய்வம் நவநீதகிருஷ்ணசாமி. வைணவ மதத்தைச் சேர்ந்தவர்களாக அவர்கள் விளங்கியதால் அங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் ஜீயர் சுவாமிகள் பங்கேற்று சிறப்பித்துள்ளார். நவநீதகிருஷ்ண சுவாமிக்கு மன்னர் தேரோட்டத் திருவிழா நடத்தினர். இறைவனுக்கு ஏராளமான அணிகலன்களையும் நிலங்களையும் வழங்கினர். வீரகேரளம்புதூரில் அரண்மனையின் தென்புறத்தில் ஸ்ரீ நவநீதகிருஷ்ணசாமி கோயில் உள்ளது. அங்கே நித்திய நைவேத்தியங்கள் சிறப்பாக நடைபெறுகிறது. அதற்குரிய நித்திய படித்தரம் பத்து வராகன், லாடு, லட்டு, ஜிலேபி, தேன்குழல் முதலியவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும். ஒரு லாடு என்பது உரித்த தேங்காய் அளவுக்கு இருக்கும். தேன்குழல் பெரிய சந்தனக்கல் அளவுக்கு காணப்படும். தினந்தோறும் காலையில் விஸ்வரூபம், திருமஞ்சனம், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம் ஆகிய நான்குகால பூஜைகள் இங்கு சிறப்பாக நடக்கின்றன.இந்தக் கோயிலில் முன்பு ரதவீதியில் தேர் உள்ளது. தேரைக் கடந்து உள்ளே நுழைந்தால் பிரமாண்ட வளைவு வரவேற்கிறது. “1911ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதியாகிய இன்றைய தினம் டெல்லி மாநகரில் நடக்கும் மாட்சிமை தாங்கிய இந்திய சக்கரவர்த்தி 5வது ஜார்ஜ், சக்கரவர்த்தினி மேரி இவர்களுடைய மகுடாபிஷேக மகோத்சவம் குறிப்பாக திருநெல்வேலி ஜில்லா, ஊத்துமலை ஜமீன் ராஜா பத்தியுள்ள பிரஜைகளால் இயற்றப்பட்டது” என்று அதில் தமிழில் கல்வெட்டு காணப்படுகிறது. எதிரே ஆங்கிலத்திலும் இதே தகவல் கல்வெட்டில் உள்ளது. இருபுறமும் உள்ள வீடுகள். தொடர்ந்து நடந்தால் தொன்மையான சிறப்புமிக்க நவநீத கிருஷ்ண சுவாமி கோயிலை அடையலாம். கோயிலின் முன்பக்கம் இரும்பாலான தீபஸ்தம்பம் உள்ளது. அந்தக் காலத்தில் இரவு முழுவதும் அணையாமல் தீபம் எரிய காவலர்கள் எண்ணெய் ஊற்றிக்கொண்டே இருப்பார்கள். கோயிலின் முன்புள்ள கல் மண்டபத்தில் உபரியான தேர்ச் சக்கரங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

கோயில் கதவு அருகே மியூரல்வகை ஓவியங்கள் பிரமிக்க வைக்கின்றன. நெடிய கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால் வலதுபுறம் திருவிழாக் காலங்களில் அரண்மனைப் பெண்கள் அமர்ந்து பூஜை செய்யும் காட்சி மண்டபம் உள்ளது. இங்கு தங்கக் கொடிமரம் கம்பீரமாக நிற்கிறது. இந்தக் கொடிமரத்தைச் சுற்றிவந்து வழிபடுகிறவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும், திருமணம் கைகூடும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

நவநீத கிருஷ்ணன் கோயில் கொடிமரத்தைக் கடந்ததும், ஊத்துமலை ஜமீன்தார் இருதாலய மருதப்ப தேவரின் சிலை கம்பீரமாக காட்சியளிக்கிறது. தமிழையும், ஆன்மிகத்தையும் இரண்டு கண்களாக போற்றி பாதுகாத்த இவரது தோற்றம் பார்ப்பவர்களை வணங்கத் தூண்டுகிறது. இவரது தமிழ் பற்றுக்கு உதாரணமாக கோயில் வளாகத்தில் ஏராளமான ஓலைச்சுவடிகள் தற்போதும் காணப்படுகின்றன. எழுதி முடித்தும் முடிக்காமலும், பதம் செய்யப்பட்டும் நேர்த்தி செய்யப்படாமலும் உள்ள அந்த ஓலைச்சுவடிகள் உள்ளன. இங்குதான் இருதாலய மருதப்ப தேவர் தமிழ் அறிஞர்களைக் கொண்டு ஓலைச்சுவடிகளை எழுதியுள்ளார். ஆலயத்தின் வெளிப்பிராகாரத்தில் நூற்றுக்கணக்கானோர் அமர்ந்து பணி மேற்கொண்டிருந்திருக்கின்றனர். அந்தச் சுவடிகள்தாம் இவை.

மருதப்பரின் உறவினர்கள் சிலரும் பெருங்கவிஞர்களாக, இறையருள் பெற்ற புலவர்களாகத் திகழ்ந்துள்ளனர். இருதாலய மருதப்பத்தேவர் கல்வி ஞானம் மிகுந்தவர். தமிழறிஞர்களிடம் அவர் மிகுந்த நேசம் கொண்டிருந்தார்; அவர்களை அரவணைத்து உதவுவார். டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் எழுதிய “நான் கண்டதும், கேட்டதும்” என்னும் நூலில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஓலைச் சுவடிகளை, புத்தகங்களாகப் பதிப்பித்த அண்ணல் அவர். அவர் பணி சிறக்க, இரண்டு வில் வண்டிகள் நிறைய ஓலைச் சுவடிகளை இருதாலய மருதப்பதேவர் வழங்கியுள்ளார். “ஊத்துமலை ஜமீன்தார்கள் கலைகளை மட்டுமன்றி, தமிழ் அறிஞர்களையும் போற்றி வந்தனர்.

இவர்களது அரண்மனையில் அதிகமான ஓலைச்சுவடிகள் உள்ளன. நான் முதல் முதலில் இருதாலய மருதப்ப தேவரை அரண்மனையில் சந்தித்தபோது அவர் வேட்டைக்காரர் கோலத்தில் இருந்தார்’’ என்றும் “மன்னர் மருதப்பர், தினமும் காலையில் நான்கு மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடிப்பார். பாலை பருகி 6 மணிக்கெல்லாம் பரிவாரங்களுடன் நகர் உலா செல்வார். யானை, குதிரை, காளை கட்டுமிடங்களை நேரடியாக பார்வையிடுவார். அவரால் அமைக்கப்பட்ட இருபுறமும் மரங்கள் சூழ்ந்த சாலையைப் பார்வையிட்டுக் கொண்டே உலாவுவார். காலை 8 மணி முதல் 10 மணி வரை தமிழ்ப் புலவர்களுடன் கலந்துரையாடுவார். காலை 10 மணிக்கு மேல் அரண்மனை கச்சேரிக்கு சென்று சமஸ்தான பணிகளை கவனிப்பார். மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் 2 மணிக்கு தமிழ் நூல்களைப் படிக்க உட்காருவார். தொடர்ந்து மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை சமஸ்தான வேலைகளில் ஈடுபடுவார். பின்னர் தன்னை பார்க்க வந்தவர்களை உபசரித்து பேசுவார். ஓலைகளில் எழுதியுள்ளதை அவர்கள் நீட்டுவார்கள். அவற்றை படித்து பார்த்து மறுநாள் தனது கருத்தை சொல்வார். மாலையில் நல்ல பாடல்களை இசைக்கச் செய்து ஆலய வழிபாடு மேற்கொள்வார். வெளியூரில் இருந்து வந்த விருந்தினர்களை அவரே கோயிலுக்கு அழைத்து சென்று மரியாதை செய்து பிரசாதம் வழங்கி கவுரவிப்பார்” என்றும் தனது நூலில் உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார்.

கோயில்களில் கவி பாடவும், ஓலைச்சுவடிகளை எழுதவும் கவிராயர்களை இருதாலய மருதப்பர் பணியமர்த்தினார். சங்கர நமச்சிவாயர் என்னும் புலவரை நன்னூலுக்கு உரை எழுதச்செய்தார். மாதம் ஒன்றுக்கு நான்கு கோட்டை நெல்லும், தினந்தோறும் ஒருபடி பாலும் அவருக்கு சன்மானமாக வழங்கப்பட்டது. இவரைக்கொண்டே தொல்காப்பியத்துக்கும் ஊத்துமலை ஜமீன்தார் உரை எழுதவைத்தார். அந்த உரை திருவனந்தபுரம் அரசு காப்பகத்தில் தற்போதும் பாதுகாக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. சைவத்தையும் வைணவத்தையும் ஒருங்கே கருதிய மருதப்பர், அகரம் என்ற நகரில் மனக்காவல் ஈஸ்வரர், சிவகாமியம்மைக்கு பெருங்கோயிலை கட்டியுள்ளார் என்கிறார் டாக்டர் ராஜையா.

ஊத்துமலை ஜமீன் வருவாய் தரக்கூடிய 52 கிராமங்களை உள்ளடக்கியது. அதில் கீழப்பாவூர், மேலப்பாவூர் கிராமங்களில் 272 ஏக்கர் நிலம் ஜமீன்தாருக்கு சொந்தமாக இருந்தது. இந்த இடங்களை வீரகேரளம்புதூர் நவநீத கிருஷ்ணசாமி கோயிலுக்கு எழுதி வைத்தார். அப்போதைய நிலவரப்படி ரூ 60 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், வெள்ளிப் பொருட்களையும் கோயிலுக்கு அளித்தார். இவரைப் போற்றி 344 பாடல்களை அண்ணாமலை ரெட்டியார் பாடியுள்ளார். ஒரு சமயம் மருதப்பத்தேவர் கழுகுமலை முருகனை தரிசிக்க நடந்து சென்றார். அப்போது பயணம் எளிமையாக அமைய காவடிச்சிந்து பாடல்களை அண்ணாமலை ரெட்டியார் பாடியவாறு கூடவே சென்றார். இப்பாடல்களை புலமை படைத்த ஊத்துமலை மன்னரே இயற்றியதாக ஒரு கருத்து உள்ளது என்கிறார் எழுத்தாளரும், தென்காசி அரசு வக்கீலுமான மருது பாண்டியர். இப்பாடல்களை நூலாக வெளியிட்டார் மருதப்ப மன்னர். இந்த காவடிசிந்து ஐ.நா சபையில் இசைப் பேரரசி எம்.எஸ். சுப்புலெட்சுமியால் பாடி கூடுதல் பெருமை பெற்றது. இந்நூலில் அரண்மனையின் அலங்காரத்தைப் பற்றியும், மருதப்பரின் செல்வச் செழிப்பான வாழ்க்கை மற்றும் இறைபக்தி பற்றியும் வர்ணித்து எழுதப்பட்டுள்ளது.

ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியை அடுத்து கோயிலைச் சுற்றி வரும்போது சுவாமி வாகனங்களைக் காணலாம். பொதுவாக கோயில்களில் காணப்படும் மரத்தால் செய்யப்பட்ட வாகனங்கள்போல் இல்லாமல், இங்கு செப்பு உலோகத்தால் செய்யப்பட்ட தேர், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்கள் உள்ளன. இவை ஜமீன்தார்கள் கோயிலுக்கு தானமாக அளித்தவை. கோயில் வெளிபிராகாரத்தில் தற்போது ஆஞ்சநேயர், நவகிரக சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.12.09.1891 அன்று மருதப்பர் இப்பூவுலகை நீத்தார். மனம் கலங்கிய ராணியார் செய்வதறியாமல் தவித்தார். கணவரின் நோக்கத்தை ஈடேற்றவேண்டும் என்று உறுதி பூண்டார். நவநீத கிருஷ்ண சுவாமியின் அருளோடு அவர் ஆட்சி பொறுப்பை ஏற்க முன்வந்தார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் கணவனை இழந்தவர் அரசாட்சி செய்ய முடியாது என்று ஒரு சட்டம் இருந்தது. மகாராணி, கணவர் இருதாலய மருதப்ப தேவர் போல மாவு பொம்மை ஒன்றைத் தயார் செய்தார். அவர் உயிரோடு இருந்தபோது மேற்கொண்டிருந்த அலங்காரங்களை தினமும் அந்தச் சிலைக்குச் செய்தார். ராஜதர்பாரில் அந்த பொம்மையை ராஜாவாக நிறுவி அதன் காலை தொட்டு வணங்கிய பின்னரே தனது அன்றாட செயல்களைத் தொடங்கினார். மருதப்பர் விட்டுச்சென்ற பணிகளை எல்லாம் சிரமேற்கொண்டு செய்தார். கோயிலுக்கு அருகே பொதுமக்களுக்காக கிணறு ஒன்றை வெட்டினார். அன்ன சத்திரம் அமைத்தார். கோயில் வளர்ச்சிக்காக, வீரகேரளம்புதூர், கலிங்கம்பட்டி, வடக்கு கிருஷ்ணபேரி (ம) ராமனூர், ராஜகோபாலபேரி, அச்சங்குன்றம், மேலகிருஷ்ணபேரி, முத்துகிருஷ்ணபேரி ஆகிய ஏழு கிராமங்களை இணைத்தார். (இதுகுறித்த கல்வெட்டு கோயில் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது.)


மருதப்பர் உயிரோடு இருப்பதாகவே பாவித்து அந்த மாவு பொம்மையுடன் அரசாட்சி செய்தார் ராணி. தற்போது 150 வருடங்களை தாண்டியும் அந்த மாவு பொம்மை ஜமீன்தாரின் வாரிசான பாபுராஜ் என்ற மருதுபாண்டியரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்படி, இருதாலய மருதப்ப தேவர் இன்றும் தம்முடன் வாழ்வதாகவே ஜமீன் வாரிசுகள் நம்புகின்றனர்.

நவநீத கிருஷ்ணன் கோயில் ஜமீன் நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் அனைத்து சமுதாயத்துக்கும் மண்டகப்படி உண்டு. கோயிலில் பங்குனி உத்திர திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். முதல்நாள் திருவிழாவை பிராமண சமூகத்தினரும், இரண்டாம் நாள் யாதவர் சமூகத்தினரும், 3வது நாள் பிள்ளைமாரும், 4வது நாள் கர்ணம் வகையாறாக்களும், 5வது நாள் நாச்சியார் என்னும் அரண்மனை பெண்களும், 6வது நாள் வீராணம் தேவர் இனத்தவர்களும், 7வது நாள் சின்ன புலியப்ப தேவர் வகையறாக்களும், 8வது நாள் ஜமீன் உறவினர்களும், 9வது நாள் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களும், 10வது நாள் சேனை தலைவர் சமுதாயத்தினரும் நடத்தி வருகின்றனர். தேர்த்திருவிழா மிக விமர்சையாக நடக்கும். முதலில் ஜமீன்தார் வடம் பிடித்து இழுத்த பின்னரே தேரோட்டம் நடக்கும். வானில் கருடன் வட்டமிட்ட பிறகே தேரை வடம் பிடித்துக்கொடுப்பார் ஜமீன்தார். தேரடி முக்கில் ஒரு காவல் தெய்வம் உள்ளது. இந்த தெய்வத்துக்கு அசைவப் படையலும் உண்டு. மழை பொய்த்தால் ஜமீன்தார் தலைமையில் இந்த தெய்வத்துக்கு பூஜை நடக்கும். உடனடியாக மழைபொழியும் அதிசயமும் நடந்துள்ளது.

நவநீத கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடைபெறும். அதுசமயம் ஆலயத்தில் வேலை செய்யும் அனைவரும் கோயில் நிர்வாக அதிகாரி தலைமையில் அரண்மனைக்கு சென்று மேளதாளத்துடன் ஜமீன்தாரை அழைத்து வருவர். சரியாக நள்ளிரவு 12 மணிக்கு கிருஷ்ணர் அவதரித்த நேரத்தில் முதல் தரிசனம் ஜமீன்தாருக்குத்தான். அவருக்கு பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து, சீடை, அப்பம், வெண்ணெய், அவல், பொரி ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும். அதன் பிறகே மற்றவர்கள் தரிசனம் செய்வர். அன்றைய தினம், குருவாயூரில் இருப்பது போலவே சிறப்பு அலங்காரத்தில் குழந்தையாக நவநீத கிருஷ்ணன் காட்சியளிப்பார். இங்குள்ள உற்சவர் ராஜகோபாலன், ருக்மணி, சத்யபாமா சிலைகள் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டவை. சரஸ்வதி பூஜையின்போது வீரகேரளம்புதூரில் உள்ள முப்பிடாதி அம்மன், உஜ்ஜயினி மாகாளி அம்மன், கருமேனி அம்மன் கோயில்களில் கொலு வைப்பார்கள். மூன்று அம்மன்களும் சப்பரத்தில் பவனி வருவர். அன்று ராஜகோபால சுவாமி பரிவேட்டைக்கு சப்பரத்தில் புறப்படுவார். அன்றும் ஜமீன்தார் வந்து துவக்கி வைத்த பின்னரே சப்பரம் புறப்படும்.
இருதாலய மருதப்ப தேவரையும், அவருக்கு பிறகு அரியணை ஏறிய ராணி மீனாட்சி சுந்தர நாச்சியாரையும் ஜமீன் சுப்பையா தேவர் கடவுளாகவே கருதினார். சிற்றாற்றின் கரையில் இருதாலய ஈஸ்வரர் என்ற பெயரில் ஒரு சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிவனுக்கு இருதாலய மருதப்பர் என்றே பெயர்! கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள சிவபெருமான் மருதப்ப தேவராகவே வணங்கப்பட்டு வருகிறார். தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் சந்நதி கருவறையில் ராணி மீனாட்சி சுந்தர நாச்சியாரின் சிலை உள்ளது. இருவரையும் வணங்குவது போல எதிரே உள்ள தூணில் சுப்பையா தேவர் சிலை காணப்படுகிறது.

இந்தச் சிறிய கோயிலில் நவகன்னிகள், நந்தியம்பெருமான் உள்ளிட்ட தெய்வங்களும் உள்ளன. இக்கோயிலில் பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடந்து வருகின்றன.ஜமீன்களின் சீரிய ஆன்மிகப் பணியைப் பறைசாற்றும் வகையில் கோமதி அம்மனை ஜமீன்தார் தனது மகளாக பாவித்து வழிபடும் திருவிழா நடைபெறுகிறது. பொதுவாக ஒரு பெண் தெய்வத்தை அன்னையாக பாவிப்பது வழக்கம்; ஆனால், மகளாக பாவித்து நடத்தப்படும் இந்த அதிசய வழிபாடு நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கர நாராயண சுவாமி கோயிலில் நடக்கிறது.

நம் ஊர்களின் பெயர்களும் அதற்கான காரணங்களும்.

நம் ஊர்களின் பெயர்களும் அதற்கான காரணங்களும்.

இப்படியும் இருக்கலாம் என்று என் சிந்தனையில் உதித்தவை.

வீரகேரளம்புதூர்- வீரகேரளனின் புதிய ஊர் அல்லது வீரமாய் கேரளாவைப் போல செழிப்பான புதிய ஊர்.

கழனீர்குளம்- வயல்வெளிகள் சூழ்ந்த்க் குளம் அல்லது செங்குவலைப் பூக்கள் நிறைந்த குளம்.

அத்தியூத்து- அத்தி மரத்தில் நீர் ஊற்று வந்த இடம்.

ஊற்றுமலை- ஊற்று நீர் மலை உள்ள இடம் அல்லது நீர் ஊற்று உள்ள மலை.

வீராணம்- வீர ஆண் இனம் அல்லது வீர ஆ இனம்.

திருநெல்வேலி-நெல்வயல்களை வேலியாக உடைய ஊர்.

அம்பாசமுத்திரம் -மரகதவல்லி அம்பாள் பெயரால் அம்மை மற்றும் பெரிய ஏரிகள் சமுத்திரம் என்றும் சேர்த்து அம்பாசமுத்திரம்.

பாபநாசம்-பாபம் நாசம் ஆகும் இடம்.

விக்கிரமசிங்கபுரம் -விக்கிரமசிங்கன் இடம்.

சுரண்டை- சுரர் அண்டிய இடம்.- அசுரர்களுக்குப் பயந்து தேவர்கள் தஞ்சமடைந்த இடம்.

சாம்பவர்வடகரை-அகத்திஷ்வரர்சாம்பவமுர்த்தி- சாம்பவமுர்த்தி கோவிலுக்கும் அனுமன் நதிக்கும் வடகரையில் அமைந்த இடம்.

சுந்தரபாண்டியபுரம்-சுந்தரபாண்டியன் இடம்.

வேலாயுதபுரம்- வேல் ஆயுத இடம்- வேல் ஆயுதம் கொண்டவர்களின் இடம்.

ஊர்மேனிஅழகியான்- அழகிய உருவம் உடைய ஊர்.

கடையநல்லூர்- கடையன்+ நல்லூர் -இளையவனின் நல்ல ஊர்.

வாசுதேவநல்லூர்-வாசுதேவனின் நல்ல ஊர்.

சிவகிரி- சிவன் மலை.

ஆய்க்குடி- ஆயர்கள் குடும்பம் அல்லது ஆயர்கள் வாழிடம்.

தென்காசி-தென் திசையில் உள்ள காசி அல்லது தெற்கே உள்ள காசி.

செங்கோட்டை- செங்கற்களால் கட்டப்பட்ட கோட்டை.

திருமலைக்கோவில்- சிறப்பு மிகுந்த மலைக் கோவில் அல்லது மரியாதைக்குரிய மலை கோவில்.
அழகனின்(முருகன்) மலை கோவில்.

பண்பொழி -பைம்பொழில்-பசுமையான சோலைகள் நிறைந்த இடம்.

வடகரை- அனுமன் நதிக்கு வடகரையில் அமைந்த இடம்.