Sunday, 14 February 2016

காவடிச்சிந்து

சிந்து...

சிந்து என்பது ஒரு வகை இசைப்பாட்டு.

இசையின்பமும், சொல்லழகும், தாளக்கட்டும், எளிய நடையுமே சிந்துக்கு அழகும் உயிரும் கொடுப்பவை.

இசைக்கு உயிர் கொடுக்கும் இந்தப்பாட்டு, ஓர் இசைக்கலைஞனின் உயிரைக் காத்திருக்கிறது என்றால் வியப்புதானே.

வியப்புக்குக் காரணம் இதுவரை தமிழுக்காக, தமிழ்ப்பாடலுக்காக தன் இன்னுயிரை நீத்தவர்களைப் படித்திருக்கின்றோம். ஒரு பாடல் உயிரைக் காத்திருக்கிறது என்றால் வியப்புத்தானே. உயிர்காத்த அந்த வியப்பில் தமிழின்பமும் இணைந்திருக்கின்றது. இவ்விரண்டையும் இப்போது இனிதே சுவைப்போம்.

சிந்து இலக்கியம்

சிந்து இலக்கியம் பெரும்பாலும் மூன்று சீர்களைப்பெற்ற அடிகளால் ஆனது. அதனால் ‘சிந்து’ என அழைத்தனர் நம் முன்னோர்கள். பிறகு பல்லவி, அனுபல்லவி, சரணம் என்பவற்றையும் அளவொத்து வரும் அடிகளையும் உடைய இசைப்பாடல்களைச் சிந்து என்று வழங்கினர்.

சிந்துப்பாடல்கள் நாட்டுப்புறப்பாடல்களை அடிப்படையாகக் கொண்டது. இது வழிநடைச்சிந்து, நொண்டிச்சிந்து, காவடிச்சிந்து என மூன்று வகைகளை உடையது.

இவற்றுள் வழிநடைச்சிந்து என்பது நடந்து பயணம் செய்வோர் களைப்புத் தோன்றாமல் இருப்பதற்காகப் பாடும் பாட்டாகும்.

பாரதியார் பாடியுள்ள ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்’ என்ற பாடல் நொண்டிச்சிந்தாகும்.

பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை போன்ற முருகன் திருத்தலங்களுக்கு வேண்டுதலை நிறைவேற்றிச் செல்பவர்கள் காவடி சுமப்பர். அப்போது பாடும் பாட்டே காவடிச்சிந்தாகும். இந்தக் காவடிச்சிந்தை தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன்முதலில் அறிமுகம் செய்தவர் அண்ணாமலை ரெட்டியாராவார்.

கவிராயரின் இலக்கியக்குறும்புகள்

ஒவ்வொருவருக்கும் குறும்புத்தனங்கள் குதூகலிக்கும் பருவம் மாணவப்பருவம். அண்ணாமலைக்கோ இலக்கியக் குறும்புத்தனங்கள் இயல்பாக நீரூற்றாய் பீறிட்டுக்கிளம்பின.

ஒரு சம்பவம்

ஒரு நாள் அவர் வீட்டுப்பாடம் எழுதி அதன்கீழ் ‘தமையபருவதம்’ என்று கையெழுத்திட்டு ஆசிரியரிடம் தந்தார். ‘தமையபருவதம்’ என்பதன் பொருள் ஆசிரியருக்குப் புரியவில்லை.

அண்ணாமலையை அழைத்து ‘தமையபருவதம்’ என்று இதன்கீழ் கையெழுத்திட்டுள்ளாயே அதன் பொருள் என்ன என்று கேட்டார். ‘தமையன்’ என்றால் ‘அண்ணன்’. ‘பருவதம்’ என்றால் ‘மலை’. அண்ணாமலையைத்தான் அவ்வாறு எழுதியுள்ளேன் ஐயா, என்று பணிவுடன் கூறினார்.

மாணவரின் சொற்சாதுரியம் கண்டு வியந்த ஆசிரியர் ‘அப்பா! அண்ணாமலை உன் புலமைக்கு நான் தீனிபோட முடியாது. நீ வேறு எங்கேனும் சென்று படி’ என்று உற்சாகமூட்டி அனுப்பி வைத்தார்.

மற்றொரு சம்பவம்

ஊற்றுமலையரசர் கவிராயரைக்காண வந்தார். அரசரைக் கண்ட அவர் ‘‘வாடா மருதப்பா! வாடிவிட்டேன் பார்த்தாயா!’’ என்று வரவேற்றார்.

அங்கிருந்தவர்கள் திகைப்புற்றனர். அரசரை மரியாதை இல்லாமல் ‘வாடா’ என்று அழைக்கின்றாரே என்று எண்ணினர்.

அவர்களின் திகைப்பையறிந்த கவிராயர் ‘நான் அரசரை மரியாதையில்லாமல் ‘வாடா’ என்று அழைப்பேனா?, ‘வாடா மருதப்பா’ என்றால் ‘வாடாத மருதப்பா’ என்ற பொருள்படவல்லவா அழைத்தேன். இன்பம் துன்பம் எதுவந்தாலும் வாடாமல் காப்பவர் நம் அரசரல்லவா’ என்று விளக்கம் தந்தார்.

இப்படி அவர் சொன்னபோது அவருடைய வயது 26. மரணத்தைத் தழுவிய வயது. இந்த மரண வேளையின்போதும் நகைச்சுவையும், கற்பனையும் அவரிடம் களிநடனம் புரிந்தன. யமகம் திரிபுகள் அணிவகுத்து நின்றன. கவிமலர்கள் மலர்ந்துகொண்டுதான் இருந்தன.

சிந்தையைக் கவர்ந்த காவடிச்சிந்து

இலக்கிய உலகில் காவடிச்சிந்துக்குத் தனியான இடமுண்டு. கவிச்சக்கரவர்த்தி கம்பருக்குப்பின்னும், பாரதியாருக்கு முன்னும் தமிழ்ப்பாட்டு நடைக்குப் புத்துணர்ச்சியை ஊட்டி தமிழை பழகு தமிழாக்கி தமிழ்க்கவிதையுலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் அண்ணாமலை ரெட்டியார். 1865–ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் சென்னிகுளம் என்ற ஊரில் பிறந்தவர். இவரது காவடிச்சிந்து கேட்பவர் எவரையும் ஈர்க்கும் ஆற்றல் பெற்றவை. காவடிச்சிந்து பாடும்பொழுது காவடியாட்டமும் நிகழும்.

அதனால் இவற்றில் தாளச்சிறப்பு மிகுதியாக உண்டு. இதோ ஒரு கழுகுமலை வளத்தைச் சொல்லும் காவடிச்சிந்துப்பாடல்.

பொன்னுலவு சென்னிகுள நன்னகர்
அண்ணாமலைதன்
புந்தியில் மகிழ்ந்து நித்தம் நின்றவன்
– முந்தி
வெந்திறல் அரக்கர்களை வென்றவன் – மயில்
போல ஏனலின் மீது உலாவும் கிராத மாது முன் ஏகியே – அடி
பூவையே உனது தஞ்சம் என்றவன் – அவள்
ஈயும், மாவினையும் மென்று தின்றவன்
மின்னலடி சொன்னமுடி சென்னியணி விண்ணவர்தே
வேந்திரனும் சித்தர்களும் துன்னியே – கதி
வேண்டியே அகத்தில் அன்பு மன்னியே – பணி
வேலவன் கிருபாகரன் குகன் மேவிடும் கழுகாசலம்தனில்
மிஞ்சிய வளங்களை நான் உன்னியே – சொல்ல
ரஞ்சிதமாய்க் கேளடி விற்பன்னியே

என்று தொடங்குகிறது.

‘சென்னிகுளத்து வாழ்பவனும் தமிழறிஞனுமான அண்ணாமலை புனையும் கவிதைகளை மாலையெனத் தோளில் அணிபவரும், வேல் ஏந்தி அரக்கர்களை வென்றவனும், மயில்வாகனனும், வள்ளி மணாளன் முருகன் வாழும் கழுகுமலையின் வளத்தைச் சொல்லுகின்றேன்’ என்று பாடலைத் தொடங்குகின்றார்.

யானைக்கூட்டங்கள் துதிக்கையை நீட்டி இந்திரன் தங்கியிருக்கும் தேவலோகத்தின் தேவதாரு மரங்களைப்பற்றி ஒடிக்கும். பலா மரத்திலுள்ள இனிய கனிகள் சந்திரனில் உராய்ந்து அதனைப் பெருகவிடும். அடுத்து வானளாவிய சந்தன மரம் ஆறுமுகநாதனுக்கு வந்தனம் செய்வது போலத்தன்கிளைகளைச் சாய்த்து வணங்கும்.

கூரிய கண்களைக் கொண்ட வேடுவ மகளிர் தினைப்புனம் காக்கும்போது பறவைகளை விரட்டக் கவணில் ரத்தினக் கற்களை வைத்து வீசி எறிய அவற்றின் ஒளியைக்கண்டு சூரியன் தன் முகத்தைச் சுருக்கிக் கொண்டான். அவன்தேரிலுள்ள குதிரைகள் கண்களை இடுக்கி விழிக்கின்றன.

வான மண்டலம் வரை ஓங்கி உயர்ந்திருக்கும் பல வகை மரங்கள் மண்ணுலகிலிருந்து விண்ணுலகிற்கு ஏறிச்செல்ல அமைக்கப்பட்ட படிக்கட்டுகளைப்போல உள்ளன என்று கமுகு மலையின் வளத்தைக் கற்பனைச் சுவையோடு பாடியுள்ள திறம் இலக்கிய இன்பம் தருவதாகும்.

ஒருமுறை இசைப்பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி ஐ.நா.சபையின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தார். பல நாட்டுத் தலைவர்கள் கூடியிருந்தனர். அவர்கள் முன்னிலையில் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்துப் பாடல்களைப் பாடுகின்றார்.

முடுகு வண்ணத்தில் அமைந்த அந்தப் பாடலைக்கேட்டு அதன் மெட்டில் மயங்கியவர்கள் ‘மீண்டும் பாடுக’ என்று விரும்பிக்கேட்டனராம்.

இதுபோல் ஒருசமயம் தமிழகம் வந்த அமெரிக்கர்கள் காவடிச்சிந்து இசைகேட்டு வியந்து சங்கீதபூஷணம் பேராசிரியர் ராமநாதனை தங்கள் நாட்டுக்கு அழைத்து, அங்கு காவடிச்சிந்து பாடவைத்து இசையின்பத்தை அனைவரும் சுவைத்துள்ளனர்.

இப்படி சிந்தையைக் கவர்ந்த நம் காவடிச்சிந்தை நாமும் சிந்தையில் போற்றுவோம். உயிர்காத்த தமிழ்ப்பாட்டை தரணியெங்கும் பரப்புவோம்.


காவடிச்சிந்து

‘காவடி’ என்ற சொல் ‘காவுதடி’ என்பதன் சுருக்கமாகும். ‘காவுதடி’ என்பதற்குச் ‘சுமக்கும் தடி’ என்று பொருள்.

ஒரு தடியின் இரு நுனிகளிலும் பொருள்களைக் கட்டித் தோளில் தூக்கிச் செல்லும் பழக்கம் மிகப்பழங்காலத்திலேயே உண்டு. இவ்வாறு எடுத்துச்செல்லுதலைக் ‘காவுதல்’ என்பர்.

புறநானூற்றில் உள்ள அவ்வையார் பாடல் ஒன்றில் ‘காவினம் கலனே, சுருக்கினும் கலப்பை’ என இடம் பெற்றுள்ளது.

சிலப்பதிகாரத்தில் இடையர்கள் பொருள்களைத் தூக்கிக்கொண்டு செல்வதைக்குறிக்குமிடத்தில் ‘மறித்தோன் நவியத்து உறிக்கா வாளரொடு’ என அடைக்கலக்காதையில் கூறுவது கவனிக்கத்தக்கது.

இப்படித்தான் தமிழிலக்கிய வரலாற்றில் காவடி இடம்பெற்றுள்ளது. இந்தக் காவடியை மையமாகக் கொண்டு காவடிச்சிந்தை முதலில் இயற்றியவர் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார்.

டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் ‘என் சரிதம்’ என்ற நூலில் அண்ணாமலை ரெட்டியார் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

‘அவருக்கு இலக்கிய இலக்கணங்களில் அதிகம் புத்தி செல்லவில்லை. புதிய செய்யுள் இயற்றுவதிலேயே போய்க்கொண்டிருந்தது. காவடிச்சிந்தின் முறை ஏற்பட்டது இவராலேதான்’.

இக்காவடிச்சிந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுகுமலையில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது.

ஊற்றுமலை ஜமீன்தாராகிய இருதாலய மருதப்பத்தேவர் கழுகுமலை முருகப்பெருமானுக்குப் பிரார்த்தனை செய்து காவடி எடுத்தபோது வழியில் பாடுவதற்காக அண்ணாமலையார் பாடியதே இந்தக்காவடிச்சிந்து.

இதில் 22 பாடல்கள் உள்ளன. விநாயகர் துதி, முருகன் துதி என்பவற்றை முதலில் பெற்று, பின்னர் கழுகுமலை வளம், கோவில் வளம், நகர் வளம், வாவிவளம் என்னும் வருணனைகள் பெற்று, முருகன் துதிகளாகச் சில பாடல்களையும், நற்றாய், பாங்கன், தலைவன், தலைவி கூற்று என்ற அகப்பொருள்பாடல்களையும் பெற்றுள்ளது.

அண்ணாமலையார் ஊற்றுமலை ஜமீன்தாரின் அரசவைப் புலவராக விளங்கியவர். அப்போது ஜமீன்தாரின் குலதெய்வமாகிய வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணன் மீது வீரையந்தாதி, வீரைப்பிள்ளைத்தமிழ் முதலிய சிற்றிலக்கியங்களையும், சங்கரன்கோவில் கோமதியம்மாள் மீது சங்கரன்கோவில் திரிபந்தாதிகளையும் படைத்தளித்தார். எனினும் அவரை கவிராயர் என்ற புகழ் மகுடத்தைச் சூட்டியது காவடிச்சிந்துப்பாடல்களேயாகும்.

உயிர்காத்த தமிழ் மெட்டு

19–ம் நூற்றாண்டில் மிகச்சிறப்பான நாடக இசைக்கலைஞர்களுள் ஒருவர் அவர். நாடகங்களில் ஆர்மோனியம் வாசித்து பின்பாட்டுப்பாடியும் மக்களை இசையால் ஈர்த்தவர். பிறப்பால் மாற்று மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கழுகுமலை முருகனிடம் ஈடுபாடு கொண்டவர். அவர் பாடிய முருகனைப் பற்றிய பக்திப்பாடல்களைக் கேட்டு உருகாதவர் இல்லை. ஒரு வழக்கில் அவர் மரண தண்டனை பெறுகிறார். சிறை அதிகாரி ‘உன் கடைசி விருப்பம் என்ன?’ என்று கேட்டார்.

‘நான் என் ஆர்மோனியத்தில் சற்றுநேரம் முருகப் பெருமானைப் பற்றிய காவடிச்சிந்து பாடவேண்டும்’ என்றார்.

அவர் விரும்பியபடியே அனுமதி கிடைத்தது.

சுருளி மலை மீதில் மேவும் சீலா – உனைத்
தோத்திரத்தேன் சுப்ரமண்ய வேலா – பசுந்
தோகைமயில் மீதில் ஏறி
வாருடனே காத்தருளும் அய்யா – முருகைய்யா

என்று தொடங்கும் பாடலை ஊணுருகப் பாடிக்கொண்டே இருந்தார்.

சிந்தையைக் கவர்ந்த சிந்து இசையில் சிறை அதிகாரிகள் அனைவரும் மெய் மறந்தனர். பின்னர் அவரைத் தூக்குமேடைக்கு அழைத்துச்செல்ல முயன்றனர். உடனிருந்த வழக்கறிஞர், ‘அவரை தூக்கிலிடுவதற்கான காலம் கடந்து விட்டது. சட்டப்படி இனி அவரைத்தூக்கிலிட முடியாது’ என்று கூறி அவரை விடுதலைபெறச் செய்தார்.

அப்படி அவரின் உயிர்காத்த தமிழ்மெட்டு தான் ‘‘தெள்ளு தமிழுக்கு உதவும் சீலன்’’ என்று தொடங்கும் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து மெட்டில் அமைந்தது.

‘உயிர்காத்த மெட்டு’ என்று இன்றளவும் அவர் சார்ந்து வாழும் மக்கள் போற்றுகின்றனர். சிந்துவையும் பாடி மகிழ்கின்றனர்.

தினத்தந்தி.