Wednesday 1 May 2013

கோட்டாறு பஃறுளியாறான கதை

By ம. எட்வின் பிரகாசு

″சங்க இலக்கியங்களில் பஃறுளி என்ற ஆறு பற்றிய குறிப்புகளில் முக்கியமானவை இரண்டு.


செந்நீர்ப் பசும்பொன் உயிரியர்க் கீந்த

முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர் பஃறுளி மணலினும் பலவே

(புறநூனூறு 9 : 9 - 11)


பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள

(சிலப்பதிகாரம் 11 : 19 - 20)

இந்தப் பஃறுளி ஆறு எதுவாக இருந்திருக்க முடியும்? கடல் கொண்ட நிலப்பரப்பின் மூழ்கிப் போனதாகக் கருதப்படும் இந்த ஆற்றின் தொடர்ச்சி இன்றும் தலைநிலத்தில் இருக்க வாய்ப்புகள் உண்டா? உண்டு என்றே கூறலாம்.″ [1]

கடற்கோளால் அழிந்துவிட்டதாக இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறிய பஃறுளி ஆறு இன்றும் தலைநிலத்தில் அதாவது தமிழகத்தில் இருக்கிறாதா?! பஃறுளி ஆறும் குமரிக் கோடும் கடல்கோளால் அழிந்தது என்ற செய்தி இளங்கோவின் கற்பனையாம். ஆய்வாளர்கள்(?) பஃறுளி ஆறு இன்றும் அழியாமல் இருப்பதாகக் கூறுகிறார்களாம். ஆய்வாளர்கள் அழியாமல் இன்றும் இருப்பதாக கருதும் பஃறுளி ஆறு தற்போது தலைநிலத்தில் (அதாவது தமிழகத்தில்) எங்கு ஓடுகிறது?

சு.கி. செயகரன் தனது குமரி நில நீட்சி என்னும் நூலில் பஃறுளி ஆறு எங்கு பாய்கிறது; அதன் தற்போதைய பெயர் என்ன என்பதை விவரிக்கிறார். இவரது ஆய்வின்படி குமரி மாவட்டத்தில்தான் பஃறுளி ஆறு தற்போது பாய்ந்தோடுகிறது. பஃறுளியாற்றின் தற்போதைய பெயர் பழையாறு. பஃறுளி என்பது திரிந்து பறளி என்றாகி பின்பு பழையாறு என்றாகியிருக்கலாமோ?

இளங்கோவின் கருத்தை மறுத்து தற்போது பஃறுளி ஆறு இருப்பதாகக் கூறும் செயகரன் இளங்கோவடிகள் கூறுவதைப் போன்று சான்றுகள் இல்லாமல் எழுதிவிடவில்லை. தனது கருத்தை வலுப்படுத்த மூன்று நூல்களை சான்று காட்டுகிறார். வித்துவான் செ. சதாசிவம் எழுதிய சேரநாடும் செந்தமிழும், எசு. கண்மணி எழுதிய சிலப்பதிகாரம் காட்டும் நாடும் நகரமும், அ.கா.பெருமாள் எழுதிய குமரி மாவட்ட வரலாறு என்னும் இம்மூன்று நூல்களிலும் பஃறுளி ஆறு தற்போது இருப்பதாக சொல்லப்பட்டுள்ளதாக செயகரன் குறிப்பிடுகிறார்.

பஃறுளி என்பது திரிந்து பறுளி என்றாகியது; பின் அது பறளி என மாறி வழங்குகிறது. சிலப்பதிகாரம் காட்டும் நாடும் நகரமும் என்ற நூலில் இக்கருத்து இருப்பதாக செயகரன் மேற்கோள்காட்டுகிறார். பறளி என்ற பெயர் எப்போது பழையாறு ஆயிற்று? வித்துவான் செ.சதாசிவம் தனது சேரநாடும் செந்தமிழும் என்ற நூலில் கூறியுள்ள செய்திகள் செயகரனுக்கு சிறப்பாகப் பயன்பட்டிருக்கின்றன. குமரி மாவட்டத்தில் உள்ள பழையாற்றை சிலர் பறளியாறு என்று குறிப்பிடுவதால், இது கடல் கொண்ட குமரிக் கண்டத்து பஃறுளி ஆறுதான் என்பது வித்துவான் செ.சதாசிவம் அவர்களின் கருத்து. இப்போது செயகரனுக்கு ஒரு கேள்வி எழுகிறது. ″பழையாறே பஃறுளி என்றும் அறியப்பட்டிருந்திருக்கலாமா?″ (பஃறுளி திரிந்து பறுளி என்றாகி பின் பறளி என வழங்கப்படும்போது பறளியாறு என்பது மருவி பழையாறு ஆவது இயல்புதானே!)

இந்நிலையில் முனைவர் அ.கா. பெருமாள் எழுதிய குமரி மாவட்ட வரலாறு என்ற நூலில் உள்ள செய்தி செயகரனின் கருத்துக்கு வலு சேர்ப்பதாக அமைகிறது. கி.பி.1745-ஆம் ஆண்டைச் சார்ந்த திருவிதாங்கூர் வருவாய்த்துறை ஆவணம் ஒன்று பழையாற்றை பறளியாறு என்றே கூறுவதாகவும் பழைய கல்வெட்டொன்று ′பூதப்பாண்டியின் வடக்கே பறளியாற்றில் அணைகட்டி அவிட நின்றும் புத்தனாக ஆறு வெட்டி கன்னியாகுமரி வரைக்கும் ஆற்று வெள்ளம் கொண்டு விட்டு′ என்று கூறவதாகவும் குமரி மாவட்ட வரலாறு என்ற நூலை சான்று காட்டுகிறார்.

இறுதியாக கடல்மட்டம் தாழ்ந்திருந்த காலத்தில் கடல் இன்றைய குமரி மாவட்டத்தின் கடற்கரையிலிருந்து 25-30 கி.மீட்டர் தெற்காக தள்ளி இருந்ததாம். பழையாறு (அதாவது பஃறுளி ஆறு) தெற்கே 25-30 கி.மீட்டர் தொலைவு வரை ஓடி கடலில் கலந்த்தாம். கடல் மட்டம் உயர உயர ஆற்றின் தென்பகுதி (சு.கி.செயகரனின் கருத்துப்படி 25-30 கி.மீ. ஆற்றுப்பகுதி மட்டும்!) கடலில் மூழ்கிப் போயிருக்கலாமாம்.


வான்கோழி மயிலாக முடியுமா?

பஃறுளியாறு பழையாறு என்று மாற இயலுமா? பஃறுளியாற்றை பழையாறாக மாற்றும் துணிவு செயகரனுக்கு எப்படி வந்தது? மெத்தப் படித்தவர்கள் என்று தங்களை எண்ணிக் கொள்பவர்கள் தாங்கள் எதைக் கூறினாலும் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளும் என்று நினைக்கிறார்கள் போலும். பாடினவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்பது போல உள்ளது செயகரனின் ஆய்வு. குமரி நில நீட்சி என்ற நூல் முழுவதும் இதுபோன்ற பல்வேறு கோணல்களைக் கூறமுடியும். முதற்கோணல் முற்றும் கோணல் என்பது இதுதானோ! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலத்தான் பஃறுளியாறு பழையாறு ஆன கதை இங்கே விவரிக்கப்படுகிறது.

பஃறுளியாறு பழையாறாக திரிவாக்கம்(பரிணாமம்) பெறுவதற்கு செயகரனுக்கு மூவர் உதவி தேவைப்பட்டிருக்கிறது. இவர்களில் வித்துவான் செ. சதாசிவம், முனைவர் அ.கா.பெருமாள் ஆகிய இருவரும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மூன்றாமவர் எசு.கண்மணி என்பவர் பற்றிய செய்தி தெரியவில்லை. குமரி மாவட்டத்து நூலாசிரியர்களின் நூல்களை மேற்கோள் காட்டினால் தன் கருத்துக்கு வலுவான சான்றாக அவை அமையும் என்று செயகரன் கருதியிருக்கலாம் என்று ஐயுறவும் இது இடம் தருகிறது. செயகரன் குறிப்பிடும் மூவரில் வித்துவான் செ.சதாசிவம் எழுதிய சேரநாடும் செந்தமிழும் என்ற நூலே முதன்மையானதும் முகாமையானதுமாகும். ஏனைய இருவரும் புலவரின் நூலை அடியொற்றியே பறளியாறு பற்றிய செய்திகளை தங்கள் நூல்களில் எழுதியுள்ளனர் என்பது தெளிவு.


சேரநாடும் செந்தமிழும்

வித்துவான் செ.சதாசிவம் தனது சேரநாடும் செந்தமிழும் என்ற நூலில் பழையாறு பற்றி விரிவாகவே செய்திகளைத் தருகிறார். குமரி மாவட்டத்தின் தொன்மையை நிலைநாட்டுவதற்காக பஃறுளியாறு பழையாறுதான் என்ற கருத்தை வித்துவான் வலிந்து மேற்கொள்கிறார் என்று கருத இடமிருக்கிறது. பழையாறுதான் பஃறுளி ஆறு என்பதாக அறிஞர்கள் பலரும் கருதுவதாக கூறும் வித்துவான் செ.சதாசிவம், தெற்கே நிலப்பரப்பிருந்த காலத்தில் பழையாறு அந்நிலத்தினூடு பாய்ந்து சென்றிருக்க வேண்டுமல்லவா என்ற வினாவினை எழுப்புகிறார். வித்துவான் அவர்களின் இந்த வரிகள் ஜெயகரனின் குமரி நில நீட்சியிலும் எதிரொலிப்பதைக் காணலாம்.

பஃறுளி ஆறு → பழையாறு எவ்வாறு?

வித்துவான் செ.சதாசிவம் தனது நூலில் சில சான்றுகளைத் தருகிறார். பழையாறு ″உற்பத்தியிடத்திலிருந்து சில மைல்களுக்கப்பால் இதில் ஓர் அணை கட்டப்பட்டிருக்கிறது. அவ்வணை ′தலையணை′ என்றும், ′பாண்டியன் அணை′ என்றும் அழைக்கப்பெறும். அப்பக்கங்களில் இவ்வாற்றைப் பறளியாறு என்று அழைக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. இப்பெயர் பஃறுளி என்பதன் திரிபாகவே இருக்க வேண்டும். அது பறுளி என்றும் பறளி என்றும் திரிந்து வழங்குதல் இயல்புதானே? இவ்வணையில் கீழ்வரும் பாடலொன்று செதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறுவர்.

′எத்திசையும் புகழ்படைத்த கொல்லம் தோன்றி

இருநூற்றுத் தொண்ணூற்று இரண்டா மாண்டு

வெற்றிசெயும் கும்பத்தில் வியாழன் நிற்க

விளங்குபுகழ் ஆவணிபன் னிரண்டாந் தேதி

தத்திவிழும் பறளியாற் றணையும் தள்ளி

தமிழ்ப் பாண்டி ராஜசிங்கம் தனையும் வென்று

கொத்தலரும் பூஞ்சோலை நாஞ்சி நாடும்

கோட்டாறும் கூபகர்கோன் கொண்ட நாளே′

என்பது அது.″ [2]

மேலும் பழையாறுதான் பறளியாறு என்று அழைக்கப்பட்டு வந்ததென்பதற்கு கி.பி.1745 (கொல்லம் ஆண்டு 920) இல் எழுந்த ஆவணம்[3] ஒன்றை சான்றுகாட்டுகிறார். அந்த ஆவணத்தில் காணப்படும் செய்தி:

″920-மாண்டு சுசீந்திரத்து ஆற்றின் கிழக்குள்ள நிலங்ஙளும் கரக்காடும் சுசீந்திரத்துல் போற்றி மாரோடும் சோரா ஒற்றி எழுதி வேண்டிச்சு அகஸ்தீஸ்வரத்து பட்டரப்பற்று நிலவும் கரக்காடும் குலசேகரபுரத்து கிராமத்தாரோடு சோரா ஒற்றி எழுதி வேண்டிச்சு புத்தனாயிட்டு குளவும் வெட்டிச்சு நிலம் திருத்துன்னதின் பூதப்பாண்டி வடக்கே பறளியாற்றில் சாரக்காலணயில் நின்னும் உயர்த்தி அண கெட்டி அவிடே நின்னும் புத்தனாயிட்டு ஆறு வெட்டி கன்னிமாகுமரி வரேக்கும் ஆற்றும் வெள்ளம் கொண்டுவிட்டு...″ [4]

என்பதாகும்.

இருவேறு ஆறுகள்<./b>


வித்துவான் அவர்கள் சான்றுகளில் குறிப்பிடப்படும் ஆறு அவர் கருதுவது போல பழையாறு மட்டுமல்ல. இங்கு சுட்டப்படும் பறளியாறு குமரி மாவட்டத்தின் கல்குளம் விளவங்கோடு வட்டங்களில் பாய்ந்து தாமிரபரணியில் இணையும் மற்றொரு ஆறாகும். பழையாறு, பறளியாறு என்ற பெயர்கள் இருவேறு ஆறுகளைக் குறிக்கும் பெயர்களாகும். வித்துவான் செ. சதாசிவத்திற்கு ஏற்பட்ட மயக்கம் பழையாற்றை பஃறுளியாறாக மாற்றியுள்ளது. இந்த மயக்கம் எசு.கண்மணிக்கும் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து புகழ் பெற்ற புவியியங்கியலார் என்று கூறிக்கொள்ளும் செயகரனுக்கும் ஏற்பட்டிருப்பது வியப்பாக உள்ளது. இந்த மயக்கத்திலிருந்து செயகரன் தெளிவுபெற வேண்டுமெனில் பழையாற்றைப் பற்றியும் குமரி மாவட்ட பாசன அமைப்பு பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது இன்றியமையாதது ஆகின்றது.


தாமிரபரணி


குமரி மாவட்டத்தின் முகாமையானதும் மிகப் பெரியதுமான ஆறு தாமிரபரணி என்று அழைக்கப்படும் குழித்துறை ஆறு ஆகும். இது இரு ஆறுகளின் இணைவால் உருவான பெரிய ஆறாகும். மேற்குத் தொடர்ச்சி மலைச் சாரலில் உருவாகும் கோதையாறு, பறளியாறு(பறளையாறு) ஆகியன இணைவதால் தாமிரபரணி உருவாகிறது. இந்த ஆறு தேங்காய்ப்பட்டினம் என்னுமிடத்தில் அரபிக்கடலில் கலக்கிறது. கோதையாற்றின் குறுக்கே பேச்சிப்பாறை அணையும் பறளியாற்றின் குறுக்கே பெருஞ்சாணி அணையும் கட்டப்பட்டுள்ளன.


வள்ளியாறு


குமரி மாவட்டத்தில் பாயும் மற்றொரு சிறிய ஆறு இது. வேளிமலையில் தோன்றும் இந்த ஆறு மணவாளக்குறிச்சிக்கு அருகிலுள்ள கடிகைப்பட்டினம்(கடியப்பட்டினம்) என்னுமிடத்தில் அரபிக் கடலில் கலக்கின்றது.


பழையாறு


குமரி மாவட்டத்தில் பாயும் இன்னொரு சிறிய ஆறு இது. நாகர்கோவிலிருந்து ஏறக்குறைய 17கி.மீ. தொலைவில் சுருளகோடு என்னுமிடத்தில் தோன்றும் இந்த ஆறு மணக்குடி என்னுமிடத்தில் அரபிக்கடலில் கலக்கிறது. இதனை ′வடிகால் ஆறு′ என பொதுப்பணித் துறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பழந்தமிழ் இலக்கியங்கள் இந்த ஆற்றை ′கோட்டாறு′ என்றே குறிப்பிடும்.


″இந்த ஆறு கல்வெட்டுகளில் ′கோட்டாறு′ என்று குறிப்பிடப்படுகின்றது. அது:-


′எல்கையாவது:- நாஞ்சில் நாட்டு தேரான் அழகிய சோழநல்லூர் தேரான் குளத்தில் கீழ் முட்டைக் குமிழிமடை கீழ் கால் போக்கில் நிலத்துக்கு எல்கை; கீழெல்லை கன்னடியான் குலகாலன் மடை மேல்ப் பெருங்காலுக்கு மேற்கு, தென் எல்லை உதிரப்பட்டியைச் சுற்றியோடும் கோட்டாற்றுக்கு வடக்கு...′


எனவரும் அகஸ்தீசுவரம் பாறைக் கல்வெட்டுத் தொடரினாலும் அறியப்படும்″.[5]


கெளதமரால் சபிக்கப்பட்ட இந்திரன் சாபம் போக்க சுசீந்திரம் மகாதேவனை வணங்க எண்ணியபோது, பூசைக்கான புனித நீருக்காக ஐராவதம் யானையால் தோண்டப்பட்ட ஆறு இது. யானை தன் கோட்டினால் தோண்டிய ஆறு ′கோட்டாறு′ என்றாயிற்று. இது புராண விளக்கம். கோடு என்பதற்கு யானைக்கொம்பு எனப் பொருள் கொண்டு உருவாக்கப்பட்ட கதை இது என புலவர் செ.சதாசிவம் குறிப்பிடுகிறார்.[6]


′கோடு′ என்பதற்கு மலை என்ற பொருளே மிகச் சரியானதாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் மகேந்திரகிரியின் அடியில் உருவாகும் இந்த ஆறு மலையில் இருந்து வடியும் மழைநீருக்கு வடிகாலாக அமைந்துள்ளது. தோவாளை வாய்க்கால், அனந்தனாறு மற்றும் நாஞ்சில் நாடு புத்தனாறு ஆகிய மூன்றுக்கும் வடிகாலாக இந்த ஆறு அமைந்திருப்பதாக பொதுப்பணித்துறை ஆவணங்களில்[7] குறிப்பிடப்படுகிறது. எனவே கோட்டாறு என்பது மலையிலிருந்து உருவாகும் ஆறு, மலையாறு என்ற பொருளையே தருகிறது என்பதில் ஐயமில்லை.


பாண்டியன் அணை


1000 ஆண்டுகளுக்கும் முன்பே, எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு என்று தெரியவில்லை, பறளியாற்றின் குறுக்காக பாண்டியன் ஒருவனால் கட்டப்பட்ட அணை இது. நாஞ்சில் நாட்டுப் பாசனத்திற்காக மேற்கொள்ளப்பட்ட துவக்ககால முயற்சியாக இதனைக் கொள்ள இடமுண்டு. குமரி மாவட்ட பாசன வரலாற்றின் துவக்கமாகவும் இந்த அணை கட்டப்பட்டிருப்பதைக் கருதலாம். (இப்பொருள் பற்றி விரிவான ஆய்வுக்கு வாய்ப்புள்ளது.) இந்த அணையின் மூலம் பறளியாற்று நீர் திருப்பப்பட்டு பழையாற்றுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த அணையிலிருந்து பழையாற்றிற்கு தண்ணீர் கொண்டு செல்ல வெட்டப்பட்ட வாய்க்கால் பாண்டியன் கால் என்று அழைக்கப்படுகிறது. அந்தத் தொல்பழங்காலத்திலேயே பாண்டியன் ஆறுகளை இணைக்க மேற்கொண்ட முயற்சியாக இதனைக் கருதலாம். இந்த அணையில் காணப்படும் கல்வெட்டு இவ்வணையை பறளியாற்றிணை என்றே குறிப்பிடுகிறது. முனைவர் அ.கா. பெருமாள் தனது தென் குமரியின் கதை என்னும் நூலில் ″பறளியாறு சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கல்குளம் வட்டம் வழியாக வந்து நாஞ்சில் நாட்டில் ஓடியது. இந்த ஆற்றின் குறுக்கே பாண்டியன் ஒருவன் அணை கட்டிய பிறகு அது கோதையாற்றுடன் கலந்துது”[8] என்ற செய்தியைக் குறிப்பிடுகிறார். பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள பாசன அமைப்பு பற்றிய விளக்கப் படத்தை[9] பார்த்தாலே அ.கா.பெருமாள் தரும் செய்தி முற்றிலும் தவறானது என்பது விளங்கும். பாண்டியன் அணை கட்டப்பட்ட பின்புதான் பறளியாறு கல்குளம் வட்டம் வழியாக வந்து பழையாற்றில் இணைந்து நாஞ்சில் நாட்டை வளப்படுத்துகிறது.


புத்தன் அணை:


இது பறளியாற்றின் குறுக்காகக் கட்டப்பட்டுள்ளது. தலையணை[10] என்று அழைக்கப்படும் இவ்வணை பறளியாற்று நீரை பத்மநாபபுரம் பகுதிகளுக்கு திருப்புவதற்காக மார்த்தாண்ட வர்மா என்ற திருவிதாங்கூர் மன்னரால் 1750-களில் கட்டப்பட்டது. இவ்வணையிலிருந்து திருப்பப்படும் தண்ணீர் பத்மநாபபுரம் புத்தனாறு வாய்க்கால் மூலம் பாசனத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது.


சாட்டுப்புதூர் அணை (சாரக்காலணை)


இது பழையாற்றின் குறுக்காகக் கட்டப்பட்டுள்ளது. பூதப்பாண்டிக்கு அருகிலுள்ள சாட்டுப்புதூர் என்னுமிடத்தில் பழையாற்றின் குறுக்காகக் கட்டப்பட்டுள்ள இவ்வணையிலிருந்து பிரியும் வாய்க்கால் நாஞ்சில் நாட்டு புத்தனாறு என்று அழைக்கப்படுகிறது. கோட்டாற்றிலிருந்து பிரிந்த புதிய வாய்க்கால் புத்தனாறு என அழைக்கப்பட்டதால் தாய் நதியாகிய கோட்டாறு பழையாறு என்ற பெயரைத் தாங்க வேண்டியதாயிற்று. வித்துவான் செ.சதாசிவம் தரும் சான்றுகளின் அடிப்படையில் நோக்கும்போது இவ்வணை 1745-இல் உயர்த்திக் கட்டப்பட்டிருக்க வேண்டும்.


பழையாறு பற்றிய தவறான புரிதல்கள்


வித்துவான் செ. சதாசிவம் பழையாறு தோன்றும் இடத்தைப்பற்றித் தவறாகக் கருதுகிறார். பறளியாறு மற்றும் பழையாறு பற்றிய தெளிந்த சிந்தனை இன்மையால் ஏற்பட்ட தவறு இது. பழையாறு சுருளகோடு என்னுமிடத்திலிருந்து துவங்குகிறது. பாண்டியன் அணை கட்டப்பட்டதால் பறளியாற்றிலிருந்து பிரிந்து பழையாற்றோடு இணையும் ′பாண்டியன் கால்′-ஐயும் பழையாறாகவே கருதியதால், பறளியாறு தோன்றுமிடத்தை பழையாற்றின் தோன்றுமிடமாக வித்துவான் செ.சதாசிவம் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார். இதனால் பாண்டியன் அணை பழையாற்றின் குறுக்காக கட்டப்பட்டது என்ற நிலை உருவாகியது. இதில் இன்னொரு வேடிக்கை புத்தன் அணை (தலையணை)யும் பாண்டியன் அணையும் இருவேறு அணைகள் என்பது தெரியாமல் ஒன்றாகவே கருதியது. வித்துவான் செ.சதாசிவம் அவர்களுக்கு ஏற்பட்ட இந்த மயக்கம் பழையாற்றை பறளியாறாக மாற்றியுள்ளது.


பழையாற்றைப் பறளியாறாக கருத காரணமாக இருக்கும் மற்றொரு சான்று கி.பி.1745ஆம் ஆண்டைச் சார்ந்த திருவிதாங்கூர் வருவாய்த்துறை ஆவணம். அதில் ″பூதப்பாண்டி வடக்கே பறளியாற்றில் சாரக்காலணயில் நின்னும் உயர்த்தி அண கெட்டி அவிடே நின்னும் புத்தனாயிட்டு ஆறுவெட்டி கன்னிமாகுமரி வரேக்கும் ஆற்றும் வெள்ளம் கொண்டுவிட்டு...”[11] என்ற வரிகள் உள்ளன. அதில் குறிப்பிடப்படும் பறளியாறு என்ற சொல் பழையாற்றையே குறிப்பிடுவதாக வித்துவான் செ.சதாசிவம் கூறுகிறார். பாண்டியன் அணை கட்டப்பட்டு பாண்டியன் கால் வெட்டப்பட்டதினால் பறளியாறு பழையாற்றுடன் இணைகிறது. பாண்டியன் கால் செல்லும் பகுதிகளில் இக்கால்வாய் தாய் ஆற்றின் பெயரால் பறளியாறு என அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.[12] நாளடைவில் பழையாற்றையும் பறளியாறு என்று சொல்லும் மரபு உருவாகியிருக்கலாம். மக்கள் வழக்காக இருந்த பறளியாறு என்ற சொல் ஆவணங்களிலும் பழையாற்றை பறளியாறு என குறிப்பிடக் காரணமாகியிருக்கலாம். அல்லது ஆவணம் எழுதியவர்களே இவ்வாறு தவறாகக் கருதியிருக்கலாம்.


இரு ஆறுகள் ஒரு கால்வாய் மூலம் இணைக்கப்பட்டதின் காரணமாக ஒரு ஆற்றின் பெயர் மற்றொரு ஆற்றிற்கு மயங்கி வந்துள்ளது தெளிவு. கோட்டாறு என்று பழந்தமிழ் இலக்கியங்களில் கல்வெட்டுகளில் குறிக்கப்பெறும் பழையாறு, கி.பி. 1745-ஆம் ஆண்டுகளில் நாஞ்சில் நாட்டு புத்தனாறு வெட்டப்பட்ட பிறகே இப்பெயர் பெற்றது. இதில் பஃறுளி ஆறு எங்கிருக்கிறது? பஃறுளி → பறுளி எனத் திரிந்து பறளியாகி பின் பழையாறாக பரிணாம மாற்றம் பெற வாய்ப்பிருக்கிறதா?


பாண்டியன் அணை கல்வெட்டு - சில கேள்விகள்


பாண்டியன் அணையில் காணப்படும் கல்வெட்டு என்பதாக வித்துவான் செ.சதாசிவம் குறிப்பிடுவதை, தென்பாண்டி நாட்டில் எழுந்த கல்வெட்டு என்பதாக எசு.கண்மணியின் சிலப்பதிகாரம் காட்டும் நாடும் நகரமும் நூலை சான்று காட்டுகிறார் செயகரன். இந்த கல்வெட்டில் காணப்படும் ′பறளியாற்றிணை′ என்ற சொல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. பறளியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை பறளியாற்றணை எனப்பட்டது. (பாண்டியனால் இவ்வணை கட்டப்பட்டதினால் பாண்டியன் அணை எனவும் அழைக்கப்படுகிறது.) பஃறுளியாறு பறுளியாறாகி பறளியாறாகி பழையாறாவதற்கான மொழியியல் வாய்ப்பு இருப்பது உண்மைதான். ஆனால் புத்தனாறு வெட்டப்பட்டதினால் கோட்டாறு பழையாறானது என்பது ஐயத்திற்கிடமில்லாத உண்மையாதலால் இந்த முடிவு இங்கு பொருந்தாமல் போகிறது.


பாண்டியன் அணை கல்வெட்டில் இரண்டு அரசர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டின் வழி கூபர்கோன் என்ற அரசன் நாஞ்சில் நாட்டையும் கோட்டாற்று ஊரையும் பாண்டியனிடமிருந்து கைப்பற்றினான் என்று தெரிகிறது. இங்கு நமக்கு எழும் வினா இவ்விரு அரசர்களும் யார் என்பதே. “கூபர்கோன் என்பவன் வேணாட்டு மன்னன் என்று பாண்டியன் அணை கல்வெட்டு கூறும் செய்தியைப் பத்மநாபபுரம் சுவாமி கோயில் ஆவணமும் உறுதிப்படுத்தவதாக நாகம் அய்யா கூறுகிறார். இங்கு குறிப்பிடப்படும் பாண்டியன் ராஜசிம்மன் என்றும் கூபர்கோன் வேணாட்டை ஆண்ட வீரகேரளன் என்றும் கூறுகின்றனர்.”[13] கூபக தேசத்து அரசன் ஒருவன் சடையவர்மன் பாரந்தக பாண்டினை கி.பி. 1117-ம் ஆண்டு[14] ஆவணி 12ம் நாள் வெற்றி கொண்டதாக பாண்டியர் அணை கல்வெட்டுப் பாடலை சான்றுகாட்டி எசு. கண்மணி சிலப்பதிகாரம் காட்டும் நாடும் நகரமும் நூலில் கூறியுள்ளதாக செயகரன் தனது குமரி நில நீட்சி நூலில் குறிப்பிட்டுள்ளார். இங்கு நமக்கு எழும் ஐயம் ″தமிழ்ப் பாண்டி ராஜசிங்கம் தனையும் வென்று″ என்ற கல்வெட்டு வரிகள் சடையரவர்மன் பராந்தக பாண்டியனை குறிக்கிறதா என்பதுதான்.


கி.பி. 1117-ல் நாஞ்சில் குறவன் என்பவனது ஆட்சி கூபக மன்னனால் நிறைவுக்கு வந்ததாக சங்குண்ணி மேனன் என்ற திருவிதாங்கூர் வரலாற்றாசிரியர் குறிப்பிட்டுள்ளதை முனைவர் அ.கா.பெருமாள் தென்குமரியின் கதை நூலில் கூறியுள்ளார். இந்த நாஞ்சில் குறவன் பாண்டிய மன்னன் மகனின் நோயை குணமாக்கியதால் மகிழ்ந்த பாண்டியன் அவனுக்கு நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியை கொடுத்தான் என்று கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையை மேற்கோள்காட்டி அ.கா.பெருமாள் கூறுகிறார். நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியை பாண்டியனின் படிநிகராளியாக நாஞ்சில் குறவன் ஆட்சி செய்திருந்திருக்கலாமோ? அவ்வாறு நாஞ்சில் குறவன் ஆட்சி செய்திருந்தால் நாஞ்சில் குறவனை கூபக மன்னன் வெற்றி கொண்ட நிகழ்வு பாண்டியனையே வெற்றி கொண்டதாக பதிவு செய்யப்பட்டிருக்கலாமோ?


இறுதியாக


பொதுவாக செயகரனுக்கு ஒரு மனக்குறை உண்டு. அவரது கருத்துகள் அறிவியல் முறையில் எதிர்கொள்ளப்படவில்லை என்று அவர் புலம்புவதுண்டு. எதிர்வினையாற்றுவோர் ″என் நூலிலுள்ள அறிவியல் சார்ந்த வாதங்களை எதிர்கொள்ளவில்லை″ [15] என்று புலம்புவார். பழையாறு பஃறுளி ஆறாக திரிவாக்கம் பெற்ற நிகழ்முறையில் எந்த அறிவியல் அல்லது புவியியல் கோட்பாடு புதைந்து கிடக்கிறது என்பதை விளக்குவாரா? பஃறுளி ஆறு இன்னும் அழியாமல் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனராம். இந்த ′ஆய்வாளர்கள்′ யார் யார் என செயகரன் அறிவாரா? இந்த ஆய்வாளர்கள் பற்றி செயகரனுக்கு கூறிய எசு. கண்மணி, வித்வான் செ. சதாசிவம் போன்றவர்களாவது அறிவார்களா? இவ்வாறு பொத்தம் பொதுவாக பெயர் குறிப்பிடாமல் ஆய்வாளர்கள் என்று கூறுவதும் அதை அப்படியே தனது நூலில் எடுத்தாளுவதும் தான் சிறந்த அறிவியல் சார்ந்த ஆய்வு நெறியோ? அல்லது “கருத்துகளை உள்வாங்காமல், அவற்றிற்கு எதிர்வினைகள் எழுதுவது ஆகாயத்துடன் சிலம்பம் செய்வது போலாகும்’’[16] என குறைபட்டுக்கொள்ளும் செயகரன், கோட்டாற்றையும் பஃறுளி ஆற்றையும் பொருத்திப் பார்ப்பது கருத்துகளை உள்வாங்கியதன் விளைவா உள்வாங்காததின் விளைவா என்பதைப் படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆகாய சிலப்பம் செய்வதில் செயகரனே சிறந்தவர் என்பதற்கு பழையாறு திரிவாக்கம் பெற்று பஃறுளி ஆறாகிய கதை ஒன்று போதுமே. சேக்சுப்பியர் வரலாறு எழுதினால்[17] தவறாகப் போய்விடும் என்று செயகரன் கூறுகிறார். அவரது வரலாற்று ஆய்வு அவரை சேக்சுபியரைவிடப் பன்மடங்கு திறன்பெற்ற நாடகாசிரியராக உயர்த்தியுள்ளது.


உண்மையில் நெல்லையில் ஓடும் ஆற்றுக்கு பொருனை, சோழனாறு, தாமிரபரணி போன்ற பெயர்களும் குமரி மாவட்டத்தில் குழித்துறையாற்றுக்கு தாமிரபரணி, கோதையாறு, பறளியாறு போன்ற பெயர்களும் வெவ்வேறிடங்களில் வழங்குவது மக்களின் இடப்பெயர்ச்சிகளின்போது அவர்கள் புதிதாகக் குடியேறிய இடங்களில் தாங்கள் முன்பு வாழ்ந்த இடத்திலுள்ள ஊர்ப் பெயர்களையும் ஆறுகளின் பெயர்ககளையும் சூட்டும் மரபின் விளைவுதான். அவ்வாறு தான் அப்பகுதி மக்கள் தாங்கள் புதிதாகக் குடியேறிய பகுதியில் ஓடும் ஓர் ஆற்றுக்குத் தம் முன்னோர் வாழ்ந்த குமரிக் கண்டத்தில் ஓடிய பஃறுளியாற்றின் நினைவாக பஃறுளியாறு என்ற பெயரை இட்டிருக்கிறார்கள் என்பதே சரியான முடிவாகும்.


குமரிக்கண்டத்தை மறுக்க வேண்டுமென்ற கட்டாயத்தில் வகைதொகை இன்றி யார்யாரையோ மேற்கோள் காட்டி இப்பொருள் பற்றித் தப்பும் தவறுமாக நடைபெற்றிருக்கும் ஆய்வுகளின்பால் நம் கவனத்தைத் திருப்பிய திருவாளர் செயகரன் நம் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்.



********


அடிக்குறிப்புகள்:


[1] சு.கி.ஜெயகரன், குமரி நில நீட்சி, காலச்சுவடு பதிப்பகம், அக்டோபர் 2004, ப.30.

வயிரியர்க் கீத்த என்று புறனானூற்றில் உள்ளது உயிரியர்க் கீந்த என்று இந்நூலில் தவறாகத் தரப்பட்டுள்ளது.


[2] வித்துவான் செ.சதாசிவம், சேரநாடும் செந்தமிழும், பாரிநிலையம், 59 பிராட்வே, சென்னை, நான்காம் பதிப்பு, சனவரி 1964, பக். 89,90


[3] கி.பி. 1745 - ஆம் ஆண்டைச் சார்ந்த திருவிதாங்கூர் வருவாய்த்துறை ஆவணம். (Land Revenue Manual vol. IV, P. 98-99, T.S. Manual Appendix P.127) மேற்கோள் மேலது.

ஆவணத்தில் காணப்படும் செய்தியாக வித்துவான் செ.சதாசிவம் குறிப்பிடுவதை, செயகரன் தனது குமரி நில நீட்சி நூலில் (ப.31) பழைய கல்வெட்டில் காணப்படும் செய்தி என்பதாக முனைவர் அ.கா. பெருமாளின் குமரி மாவட்ட வரலாறு நூலில் உள்ளதாக மேற்கோள் காட்டுகிறார்.


[4] சேரநாடும் செந்தமிழும் நூலில் (ப.92) மலையாள எழுத்தில் உள்ள வரிகள் தமிழ் எழுத்தில் தரப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி என்று இன்று வழக்கில் உள்ளதற்கு மாறாக இந்த ஆவணத்தில் கன்னிமாகுமரி என்று உள்ளது. ஆய்வாளர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேறு ஆவணங்களிலும் கன்னிமாகுமரி என்றே குறிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்.


[5] வித்துவான் செ.சதாசிவம், சேரநாடும் செந்தமிழும், பக்.90, 91


[6] வித்துவான் செ.சதாசிவம், சேரநாடும் செந்தமிழும், ப.91


[7] 'Irrigation', http://kanyakumari.nic.in/irrig.htm


[8] அ.கா.பெருமாள், தென்குமரியின் கதை, யுனைடெட் ரைட்டர்சு, சென்னை-86, திசம்பர்-2003, ப.27


[9] 'Flow diagram of Kodayar Irrigation system', http://kanyakumari.nic.in/irr2.htm


[10] தலையணையையும் பாண்டியன் அணையையும் ஒன்றென்று தவறாக வித்துவான் கூறுகிறார்.


[11] பழைய கல்வெட்டுச் செய்தி என்பதாக முனைவர் அ.கா. பெருமாள் எழுதிய குமரி மாவட்ட வரலாறு நூலில் உள்ளதாக செயகரன் தனது குமரி நீல நீட்சி நூலில் (ப.31) மேற்கொண்டுள்ள இந்த வரிகளில் ′சாரக்காலணயில் நின்னும் உயர்த்தி′ என்ற பகுதி இடம்பெறவில்லை.


[12] மிகச் சிறிய பாசன வாய்க்கால்களையும் ″ஆறு″ என்ற பெயரிட்டு அழைக்கும் வழக்கம் குமரி மாவட்ட மக்களிடம் இன்றும் உள்ளது.


[13] அ.கா.பெருமாள், தென்குமரியின் கதை, ப.61


[14] கொல்லம் ஆண்டு 292

[15] ″எதிர்வினைகளும் எதிர்கொள்ளப்படாதவைகளும்″, சு.கி.செயகரன், காலச் சுவடு இதழ்78, ஜீன் 2006, ப. 72


[16] ″எதிர்வினைகளும் எதிர்கொள்ளப்படாதவைகளும்″, சு.கி.செயகரன், காலச்சுவடு, இதழ் 78, சூன் 2006, ப.72


[17] காலச்சுவடு, இதழ் 75ல் செயகரன் எழுதிய கட்டுரையின் தலைப்பு.


…………………


[இக்கட்டுரை புதிய பார்வை நவம்பர் 16 – 30, 2007 இதழில் வெளிவந்துள்ளது.]



No comments:

Post a Comment