Wednesday 30 October 2013

தஞ்சைக் கோயிலைப் பற்றியும் பொதுவாகவே கோயில் விமானங்கள் பற்றியும் குடவாயில் ஆய்வு

பெரிய கோயிலைப் பற்றி டாக்டர் குடவாயில் பாலசுப்பிரமணியன் போன்ற ஆய்வறிஞர்களிடம் பேசப் பேச நமக்கெழும் முதல் நினைவு அது ஒரு மாபெரும் கலைக் களஞ்சியம் (Encyclopiedia) என்பதே.

கவிஞர் மு மேத்தா இவ்வாறு எழுதுவார் -

"இதனை குளமென்று எண்ணி குளிக்கப் புறப்படுங்கள் -
கால் வைத்தவுடன் இது கடலாக மாறுவதை கண்டு கொள்ளலாம்"

பெரியகோயிலும் அப்படிப் பட்டதொரு கடல்தான்.

ஒரு காலகட்டத்தின் ஒட்டுமொத்த பொறியியல் அறிவு, கலாச்சார அறிவு, சமய அறிவு முதலியவற்றை தாங்கி காலகாலத்தைக் கடந்து நிற்கும் காவியமாகத்தான் நாம் பெரிய கோயிலை அணுக வேண்டும். நாமும் சரி நம்முடன் வந்த நண்பர்களும் சரி - பெரிய கோயிலை பலமுறை பார்த்தவர்கள்தான். என்றாலும் அது தன்னுள் மறைபொருளாக அடக்கி வைத்திருக்கும் விஷயங்களை அறிஞர்கள் சிறிதளவு வெளிச்சம்போட்டுக் காட்டியதுமே - குவிந்து கிடக்கும் பொக்கிஷங்களின் அளவைக் கண்டு பிரமித்துப் போகிறோம் !

"The true knowledge is knowing the extent of your ignorance" என்பதுபோல் அதனைப் பற்றி விஷயங்களை அறிந்துகொள்ள அறிந்துகொள்ள அறிந்ததன் அளவைவிட அறியாததன் அளவு பிரமிப்பூட்டுகிறது. கடல் வரை வந்தாலும் கையளவு நீர்தான் அள்ளிச் செல்ல முடியும் - ஆக குடவாயில் அவர்கள் அன்று பகிர்ந்துகொண்ட செய்திகளில் எங்கள் சிற்றறிவில் தங்கியதை மட்டும் முடிந்தவரை பகிர்ந்து கொள்கிறோம்.

29 சைவ ஆகமங்களில் சிவபெருமான் திருக்கோயில்களுக்கான அமைப்பு விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் பெரிய கோயில் மகுடாகமம் என்ற ஆகம வகையை சார்ந்து அமைக்கப்பட்ட கோயிலாகும். ஆகமங்களில் மகுடாகமம் திருமூலர் காலத்திலேயே பிரபலமாக இருந்ததென்பது திருமந்திரப் பாடலால் தெரிகிறது.

மகுடாமத்தின் சிறப்பு என்னவெனில் மூலமூர்த்தத்தை முதலில் பிரதிஷ்டை செய்துவிட்டு பிறகுதான் அதனைச்சுற்றி கோயிலே எழுப்பப்படும். ஆக வழிபாடுகள் முதல் நாளிலிருந்தே உண்டு. இதனால்தான் அத்தனை பெரிய இராஜராஜேசுவரமுடையார் எனும் லிங்கத்தை குறுக்களவில் சிறிய நுழைவாயிலைக்கொண்ட கருவரைக்குள் இருத்த முடிந்தது. இதே காரணத்தினால்தான் கோயில் முழுமையாய் பூர்த்தி பெறாத நிலையிலேயே கும்பாபிஷேகம் செய்வதும் சாத்தியமாயிற்று என்றார். (டாக்டர் கலைக்கோவன் 52 இடங்களில் கோயில் நிறைவடையவில்லை என்று தெரிவித்ததை நினைவு கூர்கிறோம்). இந்த மகுடாகமத்தை பற்றி மேலும் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நமது To Do லிஸ்டில் எழுதிவைத்துக் கொண்டோம்.

அக்காலத்தில் ஒரு திருக்கோயிலைக் கட்டுவதற்கு முன்னும் அது கட்டப்படும் போதும் கடைபிடிக்கப்பட்ட சமய நெறிமுறைகளை ஏறக்குறைய திரைப்படம் காட்டுவதுபோல் மிக pictorial ஆக விளக்கினார் குடவாயில். திசை, வாஸ்து என்று எல்லாம் பார்த்து திருக்கோயில் எழும்ப வேணடிய இடத்தை தெரிவு செய்தல், தேர்ந்தெடுத்த இடத்தை மயிர் முதலான அசுத்தங்கள் இல்லாமல் சுத்தமாக சலித்தல், யானைகளை கொண்டு நடக்கச் செய்து மண்ணை கெட்டிப் படுத்துதல், கோயில் உருப்பெரும் காலத்தில் பசுக்களை பல காலத்திற்கு கட்டிவைத்து அந்தப் பசுக்களின் கோமியம் மற்றும் சாணம் திருக்கோயில் கட்டப்படும் இடத்தின் பல பகுதிகளிலும் விழுமாறு செய்து அந்த இடத்தைப் பவித்திரமாக்கி தோஷங்களை நீக்குதல் என்று ஒரு கோயிலைக் கட்டத் துவங்குவதற்கு முன்பாகவே ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன.

இதில் பெரிய கோயில் போன்ற மெகா ப்ராஜக்டுகளில் இந்த நெறிமுறைகளெல்லாம் எத்தனை கவனத்துடன் நடந்தேறியிருக்கும் என்று சொல்லத் தேவையேயில்லை.

இந்த நெறிமுறைகளில் நம்மைக் கவர்ந்த அம்சம் ஒன்று இருந்தது.

அதாவது கோயில் கட்டப்போகும் முழு இடத்தையும் குறிப்பிட்ட அளவுடைய கட்டங்களாகப் பிரித்து (மொத்தம் 21 கட்டங்கள் என்று நினைவு) அதில் ஒவ்வொரு கட்டத்தையும் காப்பதற்கு ஒரு தேவதையை வழிபட்டு வேண்டுவார்களாம். இதற்கு பதவிந்யாசம் என்று பெயர். இந்த தேவதைகளில் அஷ்டதிக் பாலகர்கள் (எண்திசைக் காவலர்) முக்கியமானவர்கள். ஆக பெரிய கோயிலின் ஒவ்வொரு குறிப்பிட்ட கட்டத்தையும் ஒரு தேவதை ஆட்சி செய்து காத்து வருகிறது.

இதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே - அட, அத்தனை பெரிய வளாகத்தை கட்டம் கட்டமாய் கோடுகட்டிப் பிரித்து பூஜை செய்து முடிப்பதற்கு மிகுந்த சிரமமாயிருந்திருக்குமே என்றோம்.

அது அப்படி இல்லையாம் !

வளாகத்தின் அருகில் தரையில் நெல்லைப் பரப்பி அதில்தான் கட்டங்களைப் போடுவார்களாம் ! அதாவது மொத்த கோயில் வளாகத்தையும் இப்போது அந்த நெல் பரப்பில் நினைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்தப் பரப்பிலேயே உரிய கட்டங்களைப் போட்டு பூஜையெல்லாம் அதற்கு அருகிலேயே முடித்து விடுவார்களாம் ! அதாவது அந்தப் பூஜையை பொறுத்தவதை நெற்பரப்பே அந்தக் கோயில் வளாகம் என்றாகிறது. எத்தனை எளிமையான / அர்த்தம் மிக்க முறை என்று வியந்தோம். இந்துமதச் சடங்குகளில் இந்தத் தத்துவம் முக்கியமானது. அதாவது ஒன்றை மற்றொன்றாய் நினைத்து அதன்படியே நடந்து வழிபாடு செய்தல். உருவம் முக்கியமில்லை, நமது நினைப்புத்தான் முக்கியம் என்கிற விஷயம் அது. "நினைத்தலும் செயலும் ஒக்கும்" என்பது வள்ளுவர் வாக்கு. சடங்குகளின்போது பிடிக்கப்படும் மஞ்சள் பிள்ளையாரும் சரி, கருவறையில் இறைவடிவமாய் வீற்றிருக்கும் கற்சிற்பமும் சரி - இந்தத் தத்துவத்திற்குள் அடங்குபவையே. வடமொழியில் இதற்கு ஆவாகனம் என்று பெயர்.

இந்த எண்திசைக் காவலர்களின் சன்னிதிகள் பெரிய கோயில் வளாகத்தில் மூலைக்கொன்றாக அமைக்கப்பட்டிருந்தனவாம். காலப் போக்கில்அனைத்தும் அழிந்தொழிய இன்றைக்கு மிஞ்சுவது அக்கினி தேவன் சிலை, மூர்த்தம் இல்லாத இந்திரன் சன்னிதி என்று ஒரு சில மட்டுமே.




எண்திசைக் காவலர் சன்னிதிகளின் அமைப்பு


இந்த எண்திசைக் காவலர் அமைப்பு கோயில்களுக்கு மட்டுமல்ல - யாகங்களுக்கும் பொருந்தும். யாகத்தீ மூட்டப்படும் முன் எண்திசைக் காவலர்களையும் படத்தில் காண்பித்துள்ள திசைகளிலேயே எழுந்தருளுவிப்பது மரபாம்.

அடுத்து இராஜராஜேச்சுர விமானம் பற்றிய பேச்சு ஆரம்பித்தது.

விமானத்தின் உள்கூடு அமைப்பே பரசிவம் என்கிற எங்கும் நீக்கமற நிறைகின்ற பரம்பொருளை ஒரு கட்டுக்குள் அடக்கி வழிபடும் விதமாகும் என்கிற தனது முக்கியமான கருத்தை வலியுறுத்திச் சொன்னார். இதே கருத்து அவரது இரு புத்தகங்களிலும் ("தஞ்சாவூர்" மற்றும் "தஞ்சை இராஜராஜேஸ்வரம்") மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

இதனைப் புரிந்துகொள்ள குடவாயிலின் புத்தகத்திலிருந்தே சில படங்களை பயன்படுத்திக் கொள்கிறோம்.




விமான உள்கூடு / சிவ லிங்க வடிவம் - பரசிவம்


அதாவது முதலில் தூலவடிவமான பெருவுடையாரிலிருந்து நாம் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த லிங்க வடிவில் படத்தில் காட்டியிருப்பதுபோல் பல்வேறு ரூபங்களும் அடங்கும். பிரம்மா, விஷ்ணு, பரசிவம், பரபிந்து, பரநாதம்...என்று ஒவ்வொன்றாக வழிபட்டுக்கொண்டு வரும்போது ஒரு கட்டத்தில் லிங்கத்தின் வடிவம் முடிந்து அதற்கு மேலெழும்பும் ஆகாசமே பரசிவமாக விரியும். அதாவது இந்த உலகை படைத்து காத்து அழித்து மீண்டும் படைக்க வைக்கும் கண்ணுக்குப் புலனாகாத அந்த ஒப்பற்ற ஆற்றலே சிவம் ! கண்ணுக்குத் தெரியும் தூலப்பொருளாக அந்தச் சிவத்தை வழிபடத்துவங்கி மனம் அமைதியுற்றதும் உருவமற்ற பரம்பொருளை வணங்க வேண்டும்.

இந்த பரசிவமும் பெரிய கோயிலைப் பொருந்த அளவில் கிட்டத்தட்ட லிங்க வடிவத்திற்குள் அடைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் கவனிக்கவேண்டிய விஷயம் ! சிதம்பரம் கோயிலில் எந்த பரவெளி இரகசியமாக காட்டப்படுகிறதோ அதே பரவெளி இங்கு பெருவுடையார் லிங்கத்தின்மேல் பரசிவமாக விரிகிறது - முப்பரிமாணத்தில் !

இராஜராஜர் காலத்தில் லிங்கவடிவத்துக்கு மேல் நேராக விமானம் மேலெழும்படிதான் அமைப்பிருந்தது. சமீப காலத்தில் (அதாவது கிட்டத்தட்ட சரபோஜி ராஜா காலத்தில்) பெருவுடையாருக்குமேல் ஒரு மரப்பலகையை போட்டு இந்த லிங்கம் - பரசிவமாக விரியும் அற்புதக் கோலத்தை தடுத்தாட்கொண்டு விட்டார்கள் சில புண்ணியவான்கள் ! உண்மையில் பெருவுடையாருக்கும் விமானத்தின் கலசத்திற்கும் நடுவில் எந்த தடுப்பும் இல்லை ! மேலே அமைக்கப்பட்டுள்ள தளங்களும் கவனமாக இந்த விஷயத்தை கருத்தில் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன.

தன் கருத்துக்கு வலிவூட்ட வேறொரு விஷயத்தையும் சொன்னார் குடவாயில். அதாவது தனது போர் வெற்றக்குப் பிறகு பொற் பூக்களை பெருவுடையாருக்கு அர்பணித்த இராஜராஜர் எட்டு பூக்களை பெருவுடையாருக்கு செலுத்திவிட்டு ஒன்பதாம் மலரை பரசிவத்திற்கு அர்பணிப்பாராம் ! இந்த ஒப்பற்ற ஆற்றலை ஒரு குறியீடு மூலமும் உணர்த்த நினைத்தார்கள் நமது முன்னோர்கள். அந்த குறியூட்டு வடிவம்தான் நடராஜ தாண்டவம். இந்த ஆனந்த தாண்டவ தத்துவத்தை மிக மிக அழகாக வேறொரு சமயத்தில் விளக்கினார் குடவாயில்.

கோயிலின் உள்கூடைப் போன்று வெளி விமான அமைப்பும் கவனிக்கப்பட வேண்டியதே.

விமானத்தின் ஒரு தளம் விட்டு ஒரு தளம் பற்பல சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கிறன்றன. இவை அனைத்துமே சிவபெருமானின் பல்வேறு வடிவங்களாகும். மேல் தளத்தில் ருத்ரேச்வரர், மூர்த்தேச்வரர், இராஜராஜேஸ்வரர் முதலான மூர்த்தங்கள் வடிக்கப்பட்டிருக்க கருவறையின் நாற்புற வாயில்களையும் சிவபெருமானின் தசாயுத பேரர் காவல் காக்கின்றனர்.

மழை நீர் ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்குச் செல்லும் வழியில் கும்ப பஞ்சரங்கள் அமைக்கப்பட்டு அவை மழை பெய்யும்போது கையிலயங்கிரியின் துரோணிகளை ஒத்துள்ளன என்கிறார் குடவாயில். சான்றாக ஞானசம்மந்தரின் பதிகம் ஒன்றையும் குறிப்பிட்டார்.

பேச்சு இந்தக் கட்டத்தில் சற்று விறுவிறுப்படைந்து விட்டது....

அதாவது அத்தனை பெரிய விமானத்தின் மூலம் மன்னர் இராஜராஜர் குறிப்பிட நினைத்தது என்ன ? அந்தக் கோயில் அமைப்பின் அடிப்படைத் தத்துவம் என்ன ? What was the fundamental concept behind rajarajeswaram ? என்று ஆவேசமாக கேட்டுவிட்டு எங்களைப் பார்த்தார்.

எங்களுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை - குடித்த டீ வெளியில் வந்துவிடும்போலிருந்தது ! கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்காக ஒருவாறு சமாளித்துக் கொண்டோம்.

ரொம்ப முக்கியமான கேள்வி. இப்படி வேலை மெனக்கெட்டு பிரம்மாண்டமான கற்றளியும் விமானமும் குறிப்பிட்ட விதத்தில் கட்டி குறிப்பிட்ட மூர்த்தங்களை எழுந்தருளுவித்து பெரிய லிங்கப் பிரதிஷ்டை செய்து..... இதற்கெல்லாம் அடிப்படையாக இராஜராஜர் சொல்ல நினைத்த ஒரு தத்துவம் - ஒரு கருத்து - ஒரு செய்தி இருந்திருக்கவேண்டும் அல்லவா ? அது என்ன ?

அந்த மாமன்னர்தான் எல்லா விதத்திலும் அதிபுத்திசாலியாயிற்றே ? இந்த அடிப்படைக்குப் பின்னால்தானே அந்த மாபெரும் கற்றளி அவரது மனதில் உதயமாகியிருக்க வேண்டும் ? What was his vision behind such a massive project ?

குடவாயில் அவர்களை பொறுத்தவரை இந்த அடிப்படைத் தத்துவமாக ஒன்றே ஒன்றுதான் மீண்டும் மீண்டும் எழுகிறது. இந்தத் தத்துவம்தான் அந்தக் கோயிலின் மூலை முடுக்குகளெல்லாம் பரந்து விரிந்துள்ளது. இதே தத்துவம்தான் அந்த மகத்தான விமானத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.

அந்தத் தத்துவம் இதுதான்.

அதாவது அந்த ஒட்டுமொத்த விமானமும் தூலக் கண்களால் காணமுடியாத - இறைவன் கொலுவீற்றிருக்கும் கையிலங்கிரியையே குறிப்பதாகும். அந்த விமானத்தின் அமைப்பு, அதற்கு பொற் தகடுகள் போர்த்தியமை* விமானத்தின் முன்புறம் அமைக்கப்பட்டிருக்கும் மகாமேரு விடங்க மூர்த்தி, உள்ளே அமைந்த பரசிவம் - எல்லாமே ஞானிகள் தமது ஞானக் கண்களால் கண்டு வர்ணித்த கையிலங்கிரியை தூலக் கண்களாலும் அனைவரும் காணவேண்டும் என்பதற்கான மன்னரின் முயற்சியே இது !

* இது குடவாயில் அவர்களின் மற்றொரு செய்தி - அதாவது மொத்த விமானமும் இராஜராஜர் காலத்தில் பொன் வேயப்பட்டிருந்ததாம் ! இதற்குச் சான்றாக துண்டுக் கல்வெட்டொன்றையும் தனது புத்தகத்தில் பதிப்பித்துள்ளார் அவர்.

தேவாரத்தில் - ஆளுடையப் பிள்ளையான சம்மந்தர் உட்பட பலரும் கயிலயங்கிரி பற்றிய விளக்கமான செய்திகளைத் தருகிறார்கள். அந்த செய்திகள் அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு அமைக்கப்பட்டதே பெரியகோயிலான இராஜராஜேஸ்வரம் என்பது குடவாயில் அவர்களின் கருத்து.

மேற்கொண்டு பருத்தியூர் இராமர் திருடர்களிடம் பறிபோய் மீண்ட அனுபவம், உடையார்குடி அனந்தீசுவரம் கல்வெட்டு, நந்திபுரம், பஞ்சவன் மாதேவீச்சுரம், ஆடவல்லான் தத்துவம் என்று நாள் முழுவதும் தொடர்ந்த அவரது ஆய்வு மழையை நமது சிற்றறிவுக்குள் தேக்கி வாசகர்களுக்கு வழங்க மேலும் பலப்பல கட்டுரைகள் தேவைப்படும் என்பதால் இந்தக் கட்டுரையை இத்துடன் நிறுத்திக்கொள்கிறோம்.

பெரிய கோயில் ஒரு கலைக் களஞ்சியமெனில் அதனை குடவாயில் போன்ற அறிஞர்கள் விவரிக்கக் கேட்பது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சுகானுபவம்.

No comments:

Post a Comment