Saturday 14 September 2013

'நீர் எவ்வகையில் அரசர் ஆவீர்?'

ஜேபீ எழுதியது:

"தாமே ஒரு பெரும்புலவராகவும் ஆசிரியராகவும் விளங்கிவந்த சுப்பிரமணிய

தேசிகருக்கு பாடல் முழுவதும் புரிந்தது.ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை.

அண்ணாமலை ஏன் தன்னை ஓர் அரசன் என்றுகூறிக்கொள்கிறார் என்பதுமட்டும்

விளங்கவில்லை. அதை அண்ணாமலையிடமே கேட்டுவிட்டார்.

'நீர் எவ்வகையில் அரசர் ஆவீர்?' என்றுகேட்டார்."

---------------------------------------------------------------

அண்ணாமலை இரெட்டியாரின் இலக்கணப்பயிற்சி பற்றி நான் முன்பு வெளியிடமுயன்று எழுத்துருத்
தகராறினால் தோல்வியடைந்த இடுகையில் ஜேபீ அவர்கள் சுட்டும் மேற்சொன்னநிகழ்ச்சி பற்றிக்
குறிப்பிட்டிருந்தேன். நான் பயன்படுத்தியது சு.அ. இராமசாமிப் புலவர் எழுதிய அ.இரெட்டியார்
வரலாற்றுக் கட்டுரையாகும். அதில் காணும்தகவல்கள் நீங்கள் எழுதியதிலிருந்து சற்று மாறுபட்டதாகத்
தெரிகிறது. அதன்படி இரெட்டியார் இருமுறை திருவாவடுதுறை ஆதீனத்திற்குச்சென்றதாகத் தோன்றுகிறது.
அதுபற்றிய தகவலைச் சுருக்கமாகச் சொன்னால்:



அண்ணாமலை இரெட்டியார் (சுருக்கி, அ.ரெ.) சேற்றுருக்குச் சென்று இலக்கணங் கற்கத் தொடங்கியதற்குமுன்பு
திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சென்றால் இலக்கண இலக்கியங் கற்கலாம் என்றுசிலர் மூலமாக உணர்ந்து
அங்கு சென்றார். ஆதீனத் தலைவராயிருந்த சுப்பிரமணிய தேசிகர் (சு.தே.) 'இங்குள்ள அறிஞர்களிடம்
படித்துக்கொள்' என்று சொன்னார். சைவசமயத்திற் சிறந்த பெரியவர்கட்கே நல்ல உணவுஞ் சிறப்பும்
கிடைப்பதைப் பார்த்த அ.ரெ. தம் குலத்தைக் கூறினால் சாப்பாடு கூடப் போட மாட்டார்கள் என்று கருதி
குலத்தை மறைத்துக் கல்வி கற்றுவந்தார்.பின்னர் உண்மை வெளிவரின் உயிர்க்குஇறுதி நேரிடுமென்று
(-என்ன கொடுமையான சமூகம்!) சிலர் சொல்ல ஒருவருக்குந்தெரியாமல் ஊர்ப் போய்ச் சேர்ந்தார்.

பிறகு சேற்றூரில் இலக்கணங் கற்று ஊற்றுமலை இருதயாலய மருதப்பத் தேவரின் அவைப் புலவரான பின் அவர்
புகழ் திருவாவடுதுறைக்கும் எட்டியது. அப்போது ஆங்கிருந்த உ.வே. சாமிநாதையர்அவர்கள் (பின்னர்
'தமிழ்த் தாத்தா') சு.தே.யிடம், "சிலஆண்டுகட்குமுன்பு நம் ஆதீனத்திற்குக் கல்வி கற்க வந்து சிறிது
நாள் இருந்து சொல்லாமலே சென்றுவிட்டஅண்ணாமைலை இரெட்டியார் வகுப்பைச்சேர்ந்தவர். அவர் பிறகு
சேற்றூர் மன்னர் உதவியால் முகவூர் இராமசாமிக் கவிராயரிடம் இலக்கணங்கற்றுச் சிறந்த புலவராகி
இப்போது ஊற்றுமலையில் அவைப் புலவராகச் சிறந்து விளங்குகிறார். அவர் புகழ்எல்லாவிடங்களிலும் மண்டி
நிற்கிறது" என்று செய்தி கூறினார். இவ்வாறிருக்கும் நாளில் ஊற்றுமலை மன்னர் (மருதப்பர்)
தேசிகரைப் பார்க்கத் திருவாவடுதுறைக்குச் சென்றபோது அ.ரெ.வையும் அழைத்துச் சென்றார். மன்னர் கண்டு
மீண்ட பின் அ.ரெ. தேசிகரைக் காணச்சென்றார். அப்போது (ஜேபீயின் இடுகையில் தந்திருந்த)
'அரசனகர்' யமகப் பாடலைப் பாடினார்.எத்தகைய பாடலின் பொருளையும் தாமேஉணர்ந்துகொள்ளவல்ல
தேசிகருக்கும் உ.வே.சா. போன்ற பிறபுலவர்கட்கும் அந்தப் பாட்டின் நான்காவதுஅடியிலிருந்த அரசன்
என்னுஞ் சொல்லுக்கு மீண்டும் மீண்டும் படித்துச் சொல்லக் கேட்டும் பொருள் கண்டுபிடிக்க இயலவில்லை. பிறகு
தேசிகர் அ.ரெ.யைப் பாடலுக்குப் பொருள் விளக்குமாறு கட்டளையிட்டார். இரெட்டியார், முதல் அடியில்,
அர! சனகர் ஆதியர்=அரனே! சனகர் முதலான முனிவர்கள் எனவும், இரண்டாவது அடியில், தென்பால் அரசு
அன கராவை வென்ற விடை= தென்திசைஅரசனாகிய நமன் போன்ற முதலையைக்கொன்ற திருமாலாகிய
ஏற்றினை (காளையை) எனவும், மூன்றாவதுஅடியில் அரச நகர் ஆர்ந்து ஒளிர் - திருவாவடுதுறை எனும்
பதியில் அமர்ந்து விளங்கும் எனவும் நான்காவது அடியில், நான் அரசன் அகராகம் அகல = நான்
சுவையில்லாதவன் மனதிலுள்ள அவா நீங்குமாறு எனவும் பொருள் விரித்தார். அதுகேட்டு மகிழ்ந்த
தேசிகர் "நீர் சாதியிலும் இரட்டி, அறிவிலும் இரட்டி" என்று சொல்லிப் போற்றிப் புகழ்ந்து
அ.ரெ.க்குத் தக்கவாறு சிறப்புகள் செய்துஅனுப்பினார்.



நான் முன்பு சொன்ன வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடான "தமிழ்ப் புலவர் வரிசை"
என்னும் தொடர் நூலின் 19-ஆம் புத்தகத்தில்மேற்சொன்னவாறு காண்கிறது. ஜேபீ அவர்கள் அளிக்கும்
சுவையான வரலாறும் மிக நன்றாகவும் பொருள் படும்படியும் உள்ளது (எடுத்துக்காட்டாக ஏழு கவிராயர்
குடும்பம் பற்றின தகவல்). ஆகவே, பழையவரலாறுகள் எழுதுபவர்களுக்கிடையே சற்று கருத்து வேற்றுமைகள்
இருக்கத்தான் இருக்கும் என்று விட்டுவிடலாம் என்று தோன்றுகிறது. ஜேபீ என்னநினைக்கிறீர்கள்?


கருத்துவேற்றுமைகள் நமக்குள் இல்லை:-)

ஏனெனில் நாம் இருவருமே வேற்றார்களால் எழுதப்பட்ட வரலாற்றின்

அடிப்படையில் அல்லவா எழுதுகிறோம்.

ஆகவே உண்மையான கருத்து வேற்றுமை இருப்பின், அது அந்த

மூல வரலாற்று ஆசிரியர்களுக்கிடையில்தான். நமக்குள் இல்லை.

ஒரு விஷயம் புரியவில்லை.

ஏனெனில் அது பொருந்தி வரவில்லை.


அண்ணாமலையார் ரெட்டியார் சமூகத்தைச்சேர்ந்தவர். ரெட்டியார்கள்

மேல்மட்ட சமூகத்தினராகக் கருதப்பட்டுவந்தவர்கள். பெருநிலக்கிழார்களாக

அவர்களில் பலர் இருந்திருக்கின்றனர்.

14ஆம் நூற்றாண்டில் காகதீயப் பேரரசுதுருக்கியரிடம் வீழ்ச்சியடைந்த

பிறகு அழிந்துவிட்டது. அந்த இடத்தில்இரண்டு அரசுகள் ஏற்பட்டன. அவற்றில்

ஒன்று கொண்டவீடு அரசு. அதனை ஆண்டவர்கள் ரெட்டியார்கள்.

நம் தமிழகத்தில் படையாச்சிகள், தேவர்கள் எப்படியோ அப்படித்தான்

ஆந்திரத்தில் ரெட்டியார்கள். க்ஷத்திரியர்களாகத் தங்களைக் கருதிக்கொள்பவர்கள்.


உ.வே.சாமிநாதய்யரைத் தன்னிடம் வைத்து, அவருக்கும் அவருடைய தாய்

தந்தையருக்கும் உறைவிடம், உணவு ஆகியவற்றைத் தந்து ஆதரித்து, அத்துடன்

சாமிநாதய்யருக்குத் தமிழும் கற்றுக்கொடுத்து வந்தவர், செங்கணம் விருத்தாசல

ரெட்டியார்.

அப்படியிருக்கும்போது திருவாவடுதுறைஆதீனத்தில் சாதியைச்சொன்னால்

சோறு கிடைக்காது என்பது பொருந்திவரவில்லை.


ஆதீனத்தின் மேலாண்மை சைவப்பிள்ளைமார்களிடம் இருந்தது

உண்மைதான். சுப்பிரமணிய தேசிகர்கூடதிருநெல்வேலி சைவப்பிள்ளைமார்தான்.

ஆனால் மற்றவர்களும் அங்கு மற்ற பதவிகளில் இருந்திருக்கின்றனர். வரப்போகவும்

இருந்திருக்கின்றனர். கோவிந்த பிள்ளை என்னும் வைஷ்ணவர் அங்கு சில காலம்

ராமாயணப்பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அவர் வேறு இடத்தில் சாப்பிட்டிருக்கலாம்.

உ.வே.சா. தன்னுடைய நூலில் வெள்ளைவேட்டிக்காரர்களுக்கு இன்னொரு

பந்தி போடப்பட்டதாகச்சொல்கிறார். அந்த வெள்ளைவேட்டிக்காரர்கள் சன்னியாசம்

வாங்காதவர்கள்.

எங்கள் வட்டாரத்திலிருந்து தட்டார்வகுப்பைச்சேர்ந்த ஒருவர்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவாவடுதுறை ஆதீனத்தில் தங்கி தமிழ்க்கல்வி

கற்றிருக்கிறார்.



ஆகையால்தான் இப்படியும் இருக்குமா என்ற ஐயம் தோன்றுகிறது.

நீங்கள் படித்த அந்த வரலாற்றை எழுதியவரும் சைவர்; வெளியிட்டவர்களும்

சைவர்கள்; ஆதீனமும் சைவ ஆதீனம்; அதன்தலைவர்களும் சைவர்கள். அப்படி

இருக்கும்போது தங்களின் ஆதீனத்தைப்பற்றி குறைவாகக் கருதப்படும்படி

எழுதுவார்களா என்ற எண்ணத்தையும்ஒதுக்கமுடியவில்லை.


ஐயா, தெரியாதைய்யா!


பாடபேதம், சம்பவ வேற்றுமைகள் போன்றவை இருந்தால் உடனடியாக

சுட்டிக்காட்டிவிடுங்கள். அது நல்லதல்லவா.


அன்புடன்


ஜெயபாரதி

No comments:

Post a Comment