Monday 12 August 2013

தமிழ் தோன்றிய இடம்

தமிழ் வரலாறு:1:மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் :பதிப்பாசிரியர் :புலவர் அ.நக்கீரன்

தமிழ் தோன்றிய இடம்:

தமிழன் பிறந்தகம் முழுகிப்போன குமரிக்கண்டம் என்பது, முக்கழக (முச்சங்க) வரலாற்றாலும். சிலப்பதிகார அடியார்க்குநல்லாருரையாலும், (P.T.) சீநிவாசையங்கார், சேசையங்கார், இராமச்சந்திர தீட்சிதர் முதலியோர் எழுதிய வரலாற்று நூல்க ளாலும், என் ‘முதற்றாய் மொழி‘ முன்னுரையாலும் தெள்ளத் தெளியத் தெரிந்திருந்தும், சில தமிழ்ப் பகைவரும் கொண்டான் மாரும், தமிழை வடமொழி வழிய தெனக் காட்டல் வேண்டித் தமிழர் வடக்கேயிருந்து வந்தனரென்று பிதற்றி வருகின்றனர்.

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டமே என்பதற்குச் சான்றுகளாவன:

(1) தமிழும் அதனொடு தொடர்புள்ள திரவிட மொழிகளும் நாவலந் தேயத்திற்குள்ளேயே வழங்குதலும்; தென் மொழி வடக்கே செல்லச் செல்லத் திரிந்தும் ஒடுங்கியும் இலக்கியமற்றும் இடையீடு பட்டும், தெற்கே வரவரத் திருந்தியும் விரிந்தும் இலக்கியமுற்றும் செறிந்தும் இருத்தலும்.

(2) நாவலந் தேயத்திற்கு வெளியே திரவிட மொழியின்மையும், மேலை மொழிகளிலுள்ள தென் சொற்கட்கெல்லாம் தமிழிலேயே வேரிருத்தலும்.

(3) முழுத்தூய்மையுள்ள தமிழ் தென்னாட்டில் தென் கோடியில் வழங்குதல்.

(4) தமிழ்நாட்டுள்ளும் தமிழ் தெற்கே செல்லச் செல்லத் திருந்தியும் சிறந்தும் இருத்தல்.

("திருத்தக் கல்லிற்குத் தெற்கிட்டுப் பிறந்தவன்" என்னும் வழக்கும் இதை உணர்த்தும்.)

(5) வடநாட்டு மொழிகளிலும் தெலுங்கு முதலிய திரவிட மொழிகளிலுமுள்ள வல்லொலிகள் தமிழிலின்மையும், எட்டும் பத்தும் பன்னிரண்டுமாக மெய்யொலிகள் கொண்ட மொழிகள் ஆத்திரேலியாவிலும் அதனையடுத்த தீவுகளிலும் வழங்குதலும்.

(6) தமிழ் முழுவளர்ச்சியடைந்து முத்தமிழானபின் ஏற்பட்ட தலைக்கழகம், குமரிக்கண்டத்தின் தென் கோடிப் பஃறுளி யாற்றங்கரை மதுரையில் இருந்தமையும், குமரிக்கண்டத் தோற்றத்தின் எண்ணிற்கு மெட்டாத் தொன்மையும்.

(7) தென்னைமரம் ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிற தென்கிழக்குத் தீவுகட்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப் படுவதும், குமரிக் கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந் தமையும், தென் என்னுஞ் சொல் தென்னை மரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தலும்.

(8) பண்டைத் தமிழ்ச் செய்யுள்களிற் கூறப்பட்டுள்ள நீர்நாயும், உரையாசிரியராற் குறிக்கப்பட்டுள்ள காரோதிம மும் (காரன்னம்) ஆத்திரேலியாவிற்குத் தெற்கிலுள்ள தாசுமேனியத்(Tasmania) தீவில் இன்றுமிருத்தல்.

(9) வணிகத்தால் வந்த இரண்டோர் அயல்நாட்டு விலங்கு களும் நிலைத்திணை (தாவர) உயிர்களுந் தவிர, மற்றல்லாக் கருப் பொருள்களும், காலவகைகளும் நிலவகைகளு மாகிய முதற் பொருளும், தென்னாட்டிற்குச் சிறப்பாக உரியவையே பண்டைத் தமிழிலக்கியத்திற் கூறப்பட்டிருத்தல்.

(10) மக்களின் நாகரிகத் தொடக்கத்தையுணர்த்தும் ஐந்திணை மக்கட் பாகுபாடும், குறிஞ்சி மகளிர் தழையுடையும், நாட்டாட்சிக்கு முற்பட்ட ஊராட்சியும், அகப்பொருட் செய்யுள்களிற் புலனெறி வழக்கமாகக் கூறப்பட்டிருத் தலும், ஐந்திணை நிலப் பாகுபாடு தமிழ் நாட்டிற்போல் வேறெங்கும் அடுத்தடுத்து அமைந் திராமையும்.

(11) தமிழ்மக்கள் பழங்கற்காலத்திலிருந்து தென்னாட்டி லேயே தொடர்ந்து வாழ்ந்து வந்திருத்தலும், அவர்க்கு வந்தேறிக் கருத்தின்மையும்.

(12) தமிழர் பிற நாட்டிலிருந்து வந்தாரென்பதற்குப் பண்டைத் தமிழிலக்கியத்தில் ஒருசான்று மின்மை.

(13) தென்னாடு, தென்னர்(தென்னாட்டார்), தென் மொழி, தென்றமிழ். தென்னவன் (பாண்டியன்), தென்கலை என்னும் பெயர்கள் தொன்றுதொட்டு வழங்கி வந்துள்ளமை.

(14) பண்டைத் தமிழர் தம் முன்னோரைத் தென்புலத்தார் என்றழைத்தமையும்; இறந்த முன்னோரிடம் தென் புலம், தென்னுலகு என்றும், கூற்றுவன் தென்றிசைக் கிழவன், தென்றிசை முதல்வன், தென்புலக்கோன் என்றும் பெயர் பெற்றிருத்தலும்.

(15) தெற்கு வடக்குத் தெரியாதவன், தெற்கும் வடக்குமாய்த் திரிகின்றவன், தென்வடல், தென்பல்லி, வடபல்லி (அணிகள்) முதலிய வழக்குகளில், தென்றிசை முற்குறிக்கப் பெறுதல்.

இவற்றை இன்னும் விளக்கமாக அறிய விரும்புவார் Stone Age in India, Pre-Aryan Tamil Culture, History of the Tamils, Dravidian India, Pre-Historic South India, Origin and Spread of the Tamils, Tamil Indiaமுதலிய ஆங்கில நூல்களைப் பார்க்க.

பாண்டிநாட்டுத் தமிழ்ச் சிறப்பு

கடைக்கழகம் கலைந்து பல நூற்றண்டு கடந்த பின்பும், பாண்டியவரசின் தலைமைபோய்ப் பன்னூற்றாண்டு சென்ற பின்பும். பாண்டியனைத் தமிழ்நாடனென்று திவாகரம் சிறப்பித்ததற்கும்,

"நல்லம்பர் நல்ல குடியுடைத்து சித்தன்வாழ்(வு)
இல்லந் தொறுமூன் றெரியுடைத்து - நல்லரவப்
பாட்டுடைத்து சோமன் வழிவந்த பாண்டியநின்
நாட்டுடைத்து நல்ல தமிழ்"

என்னும் பழஞ் செய்யுட்கும் ஏற்ப, பாண்டிநாட்டுத் தமிழ் இன்னும் கீழ்க்காணும் பலவகையிலுஞ் சிறந்துள்ளது.

1. பாண்டிநாட்டுப் பழங்குடி மக்கள், சிறப்பாக நாட்டுப் புறத்திலுள்ளவர், தமிழ் வல்லின மெய்யொலிகளைத் திரவிட ஆரிய மொழிகளிற்போல் மிக வலித்தும் எடுத்தும் ஒலிக்காது, பழைய முறைப்படியே பலுக்கி(உச்சரித்து) வருகின்றனர். வடசொற்களி லுள்ள வல்லொலிகளும் பொலிவொலிகளும் அவர் வாயில் நுழைவதில்லை.

எ-டு: சாக்ஷி- சாக்கி, ஜாதி - சாதி

2. சொற்றூய்மை பாண்டிநாட்டுத் தமிழ்ச் சிறப்புகளுள் ஒன்றாகும்.

எ-டு: சிகிச்சை (வ.) - பண்டுவம் (த.)

சுத்தம் (வ.) - துப்புரவு (த.)

பாண்டிநாட்டார் சைக்கிள் (Cycle) என்பதை மிதிவண்டி என்றும், நாஞ்சில்நாட்டார் புனல் (funnel)என்பதை வைத்தூற்றி என்றும், தூய தமிழ்ச்சொல்லால் வழங்குகின்றனர்.

3. நீ, நீர் என்னும் முன்னிலைப் பெயர்களின் முந்திய வடிவான நீன், நீம் என்பவை, தென்பாண்டி நாட்டிலேயே வழங்கு கின்றன. நாமம் என்னும் திருமாலிய(வைணவ)க் குறிப்பெயரின் மூலமான இராமம் என்பதும், அங்குத்தான் வழங்குகின்றது. திருமண் காப்பு இராமவணக்கம் பற்றி இராமம் என்றும், கோபால வணக்கம்பற்றிக் கோபாலம் என்றும் பெயர் பெற்றுள்ளது. கோபாலம் என்பது கோப்பாளம் எனச் சிதைந்து வழங்குகின்றது. இதுவும் தென்பாண்டி வழக்கே.

4. தொல்காப்பியத்திற் குறிப்பிட்டுள்ளபடி, படியை நாழி என்பதும், அரைப்படியை உரி என்பதும், காளையையும் ஆவையும்விரவுப்பெயரால் சாத்தன் சாத்தி யென்றழைப்பதும், இன்றும் தென்பாண்டி வழக்காம்.

5. பாண்டிநாட் டுலகவழக்கில் வேறெங்கும் வழங்காத தூய தென்சொற்களும், மரபுகளும் (Idioms), வழக்காறுகளும் (Usages), இணைமொழிகளும் (Words in Pairs), தொடர் மொழிகளும் (Phrases), பழமொழிகளும் (Proverbs) ஏராளமாய் வழங்குகின்றன.

காடைக்கண்ணி குதிரைவாலி முதலிய தவசங்களும் கரம்பைப் பயறு, கற்பயறு முதலிய பயறுவகைகளும், அங்குத்தான் விளைக்கப் பெறுகின்றன.

இளத்தல், உணத்துதல், இளவட்டம், ஏத்தாப்பு, கரட்டை, காணம், காயல், காம்புதல், கிண்ணுதல், கிளியஞ் சிட்டி, குடிமகன், குண்டடியன், குணட்டுதல், குதாவடை, குந்தக்கம், கெந்தளிப்பு, சவங்கல், சவுத்தல், சில்லான், சிலையோடுதல், சீயான், சேடா, தக்கனை, தடையம், தவ்வல், தவத்துதல், தாயமாட்டம், திகைதல், துப்புரவு, தேரி, நலவு சொல்லுதல், நோங்குதல், பண்ணையார், பத்தநடை, பதவல், பரிதல்(ஓடுதல்), பரும்பு பறம்புதல், பாடுபடுதல் (பயிரிடுதல்), புதுநிறம், புல்லை, பூட்டன், பொண்டான், மயிலை, மானை, மெத்துதல், வடலி, வதியழிதல், வள்ளிதாய்(முழுதும்), வாழ்க்கைப்படுதல், வாழ்வரசி என்பன போன்ற நூற்றுக் கணக்கான சொற்கள் நெல்லை வழக்கிற்குச் சிறப்பாகும். ஆதலால், தமிழைச் செவ்வையாய் அறியவேண்டின் பாண்டி நாட்டுலகவழக்கை ஆராய்தல் வேண்டும். இற்றைத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் சென்னைத் தமிழையும் சோழ கொங்கு நாட்டுத் தமிழையுமே அறிந்ததினால், செந் தமிழைப் பிறழவுணர்ந்துள்ளனர்.

தமிழர் குமரிக்கண்டப் பழங்குடி மக்கள் என்பதற்குப் பண்டைத் தமிழிலக்கியச் சான்றுகள்:

(1) (தென்)மதுரை

தலைக்கழகம் இருந்த இடம் தென்மதுரை யென்னும் தொன் மதுரையாகும்.

"தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கமென மூவகைப் பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள். அவருள் தலைச் சங்க மிருந்தார் ........தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்ப" என்பது இறையனாரகப்பொருளுரை (ப.6).

இதில் ‘தமிழ்வளர்த்தது‘ என்றிராது ‘தமிழாராய்ந்தது’ என்றிருப்பது ஊன்றிக் கவனிக்கத்தக்கது. "இடைச்சங்கமிருந்தார்....... தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப "கடைச் சங்கமிருந்து தமிழா ராய்ந்தார்.... நாற்பத்தொன்பதின்மர் என்ப... அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரையென்ப" என்று, இடை கடைக் கழகங்கள் போன்றே தலைக்கழகமும் தமிழாராய்ந்ததாகச் சொல்லப்பட்டிருப்பதால், தலைக் கழகத்திற்கு முன்பே தமிழிலக்கிய விலக்கணங்கள் பேரளவு தோன்றி யிருந்தமை பெறப்படும்.

(2) பஃறுளியாறு

பனிமலை (இமயம்) போலும் குமரி மாமலைத்தொடரில் தோன்றித் தலைக்கழகப் பாண்டியர் தலைநகராகிய (தென்) மதுரையைத் தன் கரையிற்கொண்டு, குமரிக்கண்டத் தென் கோடியடுத்த பழந்தென்பாண்டி நாட்டை வளம்படுத்திய, கங்கைபோலும் பேரியாறு பஃறுளியாம்.

"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம். 9)

என்பது புறப்பாட்டு.

(3) குமரிமலை

"அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி" (சிலப். 11:17-22)

என்பது சிலப்பதிகாரம்.

"அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி" என்பதால், தலைக் கழகக் காலத்திலேயே ஒரு பாண்டியன் சாவம் (Java) என்னும் சாலித்தீவைத் தன்னடிப்படுத்தி, அவன் கடற்கரையில் கடலலை கழுவுமாறு தன் பாதத்தைப் பொறித்துவைத்தான் என்பதும்; "பஃறுளி யாற்றுடன் .....இமயமுங் கொண்டு" என்பதால் குமரிமலை பனிமலையும் பஃறுளியாறு கங்கையாறும் போன்றன என்பதும்; "வடதிசைக் கங்கையும் ... தென்னவன் வாழி" என்பதால் பிற்காலத் துப் பனிமலை கொண்ட கரிகாலச் சோழனும் கங்கைகொண்ட இராசேந்திரச் சோழனும் போன்று, முற்காலத்துப் பாண்டிய னொருவன் பனிமலையைக் குமரிமலைக் கீடாகக் கொண்டு நாவலந்தேய முழுதும் தன் ஆட்சியை நாட்டினான் என்பதும்அறியப்படும். கடைக்கழகக் காலத்தில், "குமரியோடு வடவிமயத் தொருமொழிவைத் துலகாண்ட சேரலாதன்"1 ஆட்சியும், "ஆரிய நாட்டரசோட்டி அவர் முடித்தலை யணங்காகிய பேரிமயக் கற்சுமத்திப் பெயர்ந்து போந்து நயந்தகொள்கையிற் கங்கைப்பேர் யாற்றிருந்து நங்கை தன்னை நீர்ப்படுத்தி"1 வந்த செங்குட்டுவன் செயலும், தலைக்கழக இடைக்கழகப் பாண்டியரின் பேரரைய வாற்றலைப் பெரிதும் வலியுறுத்தும்.

(4) குமரிக்கண்டத் தமிழ்நாடுகள்

"தொடியோள் பௌவம்"2 என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்குநல்லார் உரைத்துள்ள விரிவுரையாவது:

"தொடியோள்"2 பெண்பாற்பெயராற் குமரியென்பதாயிற்று, ஆகவே, தென்பாற்கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம்.... முதலூழி யிறுதிக்கண், தென்மதுரையகத்துத் தலைச்சங்கத்து.... நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து, நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீஇயினார், காய்சினவழுதி முதற் கடுங்கோன் ஈறாயுள்ளார் எண்பத் தொன்பதின்மர்....அக்காலத்து, அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத் தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின் காறும், கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்று ணர்க..." என்பது.

பண்டைத் தமிழிலக்கியத்திற் சொல்லப்பட்டுள்ள கடல் கோள்கள் மொத்தம் நான்கு. அவற்றுள், முதலது தலைக்கழக இருக்கையாகிய தென்மதுரையைக் கொண்டது; இரண்டாவது "நாகநன்னாடு நானூறியோசனை" கொண்டது(மணிமே. 9:21); மூன்றாவது இடைக்கழக இருக்கையாகிய கபாட புரத்தைக் கொண்டது; நான்காவது காவிரிப்பூம்பட்டினத்தையும் குமரியாற் றையுங் கொண்டது. குமரி என்பது, குமரிக் கண்டத்தின் தென் கோடியடுத்திருந்த ஒரு பெருமலைத் தொடர்க்கும், அதன்

1. சிலப்: வாழ்த்துக்காதை, உரைப்பாட்டுமடை
2. சிலப். 8: 1
வடகோடியடுத்துக் குமரிமுனைக்குச் சற்றுத்தெற்கிலிருந்த ஒரு காவிரிபோலும் பேராற்றிற்கும், பொதுப்பெயராம். காவிரிப் பூம்பட்டினம் முழுகியபின்பும் காவிரியாறிருப்பதுபோல், கபாட புரம் முழுகியபின்பும் குமரியாறிருந்தமை "வடவேங்கடந் தென் குமரி" என்னும் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரஅடியாலும்,

"தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"

"குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி" (புறம். 6 : 67)

என்னும் புறப்பாட்டடிகளாலும் அறியப்படும். அடியார்க்கு நல்லார் உரையில் "தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின் காறும்" என்பது, அகன்ற நீர்ப்பரப்பையுடைய குமரியாற்றின் வடபெருங் கரைவரை, என்று பொருள்படுவது. ஆகவே, முக்கடல்கோளாலும் முழுக்கப்பட்ட தமிழ் நிலப்பரப்பை யெல்லாம் தொகுத்துக் கூறுவது அவருரையென்றறிக.

இங்ஙனம், மறுக்கவொண்ணாத தெளிவான பண்டைத் தமிழிலக்கியச் சான்றுண்மையால், குமரிக்கண்டத்தில் தமிழ ரிருந்த தில்லையென்றும் அவர் வடக்கிருந்து வந்தவ ரென்றும், சில தமிழ்ப் பகைவரும் போலித்தமிழருங் கூறுவதைப் பொருட்படுத்தற்க.

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்"(கலித். 104)

என்னும் கலித்தொகை அடிகளும் குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழம் பாண்டிய நாட்டைக் கடல் கொண்டதையும்; இடைக் கழக விருக்கையாகிய அலைவாயையும்(கபாடபுரத்தையும்) கடல் கொண்ட பின், அதற்குத் தப்பிய பாண்டியன் நெல்லை மதுரை முகவை மாவட்டங்களாகிய பிற்காலப் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி யாண்டதையும் உணர்த்தும்.

மேற்காட்டிய இலக்கியச் சான்றுகளால், முதற்காலத்தில் நாவலந்தேயம் முழுவதையும் பாண்டியன் ஒருவனே ஆண்டான் என்பதும் குமரிக்கண்டம் முழுகாத பிற்காலத்தில், பாண்டியன் குமரிக் கண்டத் தமிழ் நிலத்தையும் சேர சோழர் அதற்கு வடக் கிலுள்ள நாவலந்தேயப் பகுதியின் மேல்பாகங்களையும் ஆண்டார் என்பதும் உணரப்படும்.

தமிழனின் பிறந்தகம் குமரிநாடென்பதை அறியாத மேலை யறிஞர், ஆரியத்தையும் அதன் முதிர்ச்சியான சமற்கிருதத்தையும்
அடிப்படையாக வைத்தாராய்ந்து, தமிழர் நண்ணிலக் கடற்கரை யினின்று வந்தவர் என்னும் தவறான முடிவு கொண்டுள்ளமையால் இற்றை யிந்தியாவிலுள்ள மலைவாணரெல்லாம் திரவிடப் பழங்குடி மக்களென்று மயங்கிக் கூறுகின்றனர். திரவிடரைத் தோற்றுவித்த தமிழரின் முன்னோர் குறிஞ்சிநிலத்தில் வாழ்ந்த நாகரிகத் தொடக்கநிலை முழுகிப் போன குமரிக்கண்டத்தின் தென் கோடியிலேயே கழிந்துவிட்டது. இன்று மலைவாணராயுள்ள தமிழரும் திரவிடரும் சிலபல நூற்றாண்டிற்குமுன் போர், கொள்ளை, கொள்ளைநோய், பஞ்சம், கொலைப்பழி மதத் துன்புறுத்தம் முதலியவற்றிற்குத் தப்பி மலையேறிப் பிழைத்த மக்களின் வழியினரே.

தமிழ்நாட்டில் இன்றுள்ள மலைவாழ் குலத்தாருள் மிகப் பழமையானவர், நீலமலை உச்சியிலுள்ள துடவரே. அவரும், அவர்தம் முன்னோர் அங்கு முதன்முதற் குடியேறியவர் என்றே கூறுகின்றனர். அவர் மொழியும் செந்தமிழின் சிதைவான ஒருவகைக் கொடுந்தமிழே என்பது வெள்ளிடைமலை. அவர் எருமை மந்தையை வைத்துப் பிழைப்பதனால், அவரது ஒவ்வொரு குடியிருப்பும் மந்து எனப்படுகின்றது. அவர் குடும்பத்தை மன் (மனை) என்றும், தெய்வத்தைக் கடவுள் என்றும், வழிபாட்டு மனையைக் கோயில் என்றும், சொல்கின்றனர். அவர் மொழியின் கொடுந்தன்மையையும் கொச்சைத் தன்மையையும் கீழ்வரும் சொல் வரிசைகளாற் கண்டுகொள்க.

சோழ பாண்டி நாட்டின் நிலமட்டம் நோக்கி, பள்ளமான திசை கிழக்கு(கீழ்-கீழ்க்கு-கிழக்கு) என்றும், மேடான திசை மேற்கு (மேல்-மேற்கு) என்றும் பெயர் பெற்றன. நீலமலை யுச்சியில் வாழும் துடவரும் மேற்றிசையை மேக்(மேற்கு) என்கின்றனர். இத்தகைய சொல் ஒன்றிரண்டே, அவரின் முன்னோர் கீழிருந்து சென்றனர் என்று காட்டவும் நாட்டவும் போதுமாயினும், எவரும் எளிதில் ஐயந்திரிபற அறிதற்பொருட்டுப் பல்வேறு சொல்வரிசை கள் கீழ்க் காட்டப் படுகின்றன. எட்கார் தரசத்தன், ஐயப்பன் முதலியோர் தென்னாட்டு மலைவாழ் வகுப்பாரைப் பற்றி எழுதியிருப்பதையும் காண்க.

துடவச் சொற்கள்

முறைப்பெயர்

தமிழ் :துடவம்

தாய்:தோய்
அவ்வை(தாய்) :அவ்

No comments:

Post a Comment